https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, November 23, 2021

தலைமறைவு வாழ்க்கையில் எனது அனுபவம் தோழர் பி சீனிவாசராவ் (BSR)

 

தலைமறைவு வாழ்க்கையில் எனது அனுபவம் என்கிற தோழர் பி. சீனிவாசராவ் அவர்களின் கடித இலக்கியத்திற்கு தற்போது வயது 75 ஆண்டுகள். 1947 ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் வரையிலான காலகட்டப் பதிவு அவரின் படைப்பு.


திருச்சி, மதுரை, கடலூர் பகுதிகளில் பல மைல்கள் அலைந்து திரிந்து தோழர்கள், அனுதாபிகள், மில் தொழிலாளர், நெசவாளிகள், விவசாயிகள் என பலரின் வீடுகளிலும் , பல பதுங்குமிடங்களிலும் தங்கி போலீஸ் கண்காணிப்பு தொல்லைகளிலிருந்து ஒவ்வொரு நொடியும் தப்பி அந்த சோகத்தை துயரை பொறுத்துக்கொண்டு துன்பகரமான  வாழ்க்கையை இலட்சிய தாகம் துரத்த பயணித்த அனுபவங்களை தோழர் பி எஸ் ஆர் இதில் கொட்டித்தீர்ப்பதை பார்க்கமுடியும்.

கிடைத்த இடத்தில் சக ஜீவராசிகளுடன் படுத்துறங்கி கொடுத்த உணவில் சுவை கண்டு வாழ்ந்த அனுபவங்கள் இதில் தரப்பட்டிருக்கும். இளம் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும் அனுபவ படைப்பாக இந்த சிறு புத்தகம் இன்றும் விளங்கும் என்றே மனதில் படுகிறது.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி என்ற வகையில் எழுதப்பட்ட அனுபவம் என்பதால் இடதுசாரிகள் அனைவருக்குமான பொது படைப்பாக இதை அணுகி எடுத்துக்கொள்ளமுடியும். தோழர் எம் ஆர் வெங்கட்ராமன் அன்று ’பொதுக்காரியதரிசி’ என்ற வகையில் அக்டோபர் 29, 1947 தேதியிட்டு முகவுரை எழுதியிருப்பார்.

 இந்த மாதிரியான காலத்தை வென்று அனுபவங்களை உரக்கப்பேசும் படைப்புகளையும் மீள் அச்சிற்கு கொணர்ந்து தோழர்கள் அறியச் செய்தல் நலம் பயக்கும் என்று தோன்றுகிறது. தங்குமிடங்களில் மத்தியதர வர்க்கம் சார்ந்தவர்களுடன் அவர் நடத்திய உரையாடல்கள் சுவைபட  தோழர் பி எஸ் ஆரால் தரப்பட்டிருக்கும்.

 

அப்போது பிரதம அமைச்சராக இருந்த  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவரைத்தேடி வந்ததால் கட்சியிடம்  முன் அனுமதி பெறாமல் சந்தித்து தோழர்களின் வழக்குகள் குறித்து பேசிய தவறை செய்துவிட்டதாக பி எஸ் ஆர் விளக்குவார். ஆனாலும் சிலராவது விடுதலை பெறுவார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் தொழிற்பட்டதை நாம் காணமுடியும்.  சில இடங்களில் பட்ட அவதியில் மனம்வாடி கட்சியில் சில தோழர்கள் உருவாக்கும்சம்பாஷனைகள்குறித்து விமர்சனக் கண்கொண்டு அவர் எழுதியதையும் இக்கடிதங்களில் ஒருவர் உணரமுடியும். சுந்தரராஜ் என்ற புனைப்பெயரிதான் அவர் கடிதங்களை எழுதியுள்ளார்.

அவரின் 18ஆவது கடிதம்  3-7-1947 தேதியிடப்பட்ட ஒன்று. அதில் தோழர்  ஆர் என் கே (நல்லகண்ணு) பற்றி இப்படியொரு பதிவை அன்று பி எஸ் ஆர்  செய்துள்ளார்

இந்தப் பிரதேசத்தில் ( இராமனாதபுரம் பகுதிகளை பற்றிப் பேசும்போது) வேலை செய்யும் நம் கிசான் தலைவர் தோழர் நல்லகண்ணுவைப்பற்றி ஒரு வார்த்தை. இவரைப்பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம். இண்டர்மிடியட்வரை படித்திருக்கிறார். ஆனால் அவர் உண்மையில் ஒரு நல்ல குடியான வாலிபன். பார்வையிலும் பழக்க வழக்கங்களிலும் கள்ளங்கபடமற்ற எளிய கிராம வாலிபனாகவே இருக்கிறார். கிராமம், கிராமமாக சளைப்பின்றி நடந்து வேலைகளை கவனிப்பார். எவ்வளவு வேலையிருந்தாலும் கொஞ்சங்கூட சளைப்பதில்லை. இவர் மாத்திரம் இன்னும் முன்கை எடுத்து தனது வேலைகளைச் செய்வாரானால், அந்த ஜில்லாவில் ஒரு சிறந்த, கிசான் கட்சித் தலைவராக விளங்க முடியும்

இருபதாம் கடிதம் 16-8-1947 தேதியிடப்பட்ட ஒன்று. மதராசில் சுதந்திர தினம்  பதிவுகள் பற்றிய விரிவான கடிதமிது.

“ (ஆகஸ்ட்) 14 ஆம் தேதி இரவு நான் என் பதுங்குமிடத்தைவிட்டு வெளியேறி சரியாக 9.15க்கு சென்னைக்குள் நுழைந்தேன். எங்கே பார்த்தாலும் ஒரே குதூகுலம். ஜனங்கள் ஆயிரக்கணக்கில் எங்கு பார்த்தாலும் போய்க்கொண்டிருந்தார்கள். நான் 10 மணிக்கு கட்சி ஆபீசை அடைந்தேன். அங்கு சிறிதுநேரம் இருந்தபின்னர் கிசான் சபா ஆபிசிற்குச் சென்று படுத்துத் தூங்க முயற்சி செய்தேன். ஆனால் நடு நிசியிலும் ரேடியோ சப்தம் கேட்டது. அரசியல் நிர்ணயசபையின் நிகழ்ச்சிகளை ரேடியோ ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. நான் ரேடியோவின் அருகில் விரைந்து நிகழ்ச்சிகளைக் கவனித்தேன். இடிமுழக்கம்போல் பண்டிதநேருவின் பிரசங்கத்தையும், இறுதியில் மதராஸ் நிலையத்தாரால் அஞ்சல் செய்யப்பட்ட நம் தேசிய மகாகவி பாரதியின் விடுதலை கீதமும் கேட்டேன். ஆம் சுதந்திரம் வந்துவிட்டது. விடுதலை கிடைத்துவிட்டது. ஆனால் பாரதி கனவில் கண்ட விடுதலை அல்ல; பூர்ஷ்வா வர்க்கத்தின் கொடுமைகளை வன்மையாக கண்டித்த பாரதிமாத்திரம் இன்று உயிருடன் இருந்திருப்பாரேயானால் அவரும் வேலூர் சிறைக்குள் தள்ளப்பட்டிருப்பார் என்றெல்லாம் மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்

“…3 மணிக்கு தூங்க முயற்சித்தேன். ஆனால் அடுத்த வீட்டில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருப்பவர்கள் நிகழ்த்திய பிரசங்கங்களும் கூச்சல்களும் என் காதைத்துளைத்தன. ஒரு வினாடி கூட தூக்கமில்லாத சிவராத்திரியாக முடிந்தது.”

ஆகஸ்ட் 15 அன்று அவர் எம் ஆர் வி மற்றும் ஜீவாவுடன் சென்ற இடங்கள் எல்லாம் மக்கள் திரள் பற்றியும் அவர்கள் அறியாமை குறித்த செய்திதனையும் , மாஸ்கோ மேதின எழுச்சியில் காணப்படும் கட்டுபாடு ஏதும் இங்கு இல்லாமை பற்றியும் பி எஸ் ஆர் பதிவிட்டுள்ளார்.  அந்த ஆகஸ்ட் 15ன் மக்கள் உற்சாகம் மிக எமோஷனலானது என இன்று நாம் சற்று நிதானமாக புரிந்து கொள்ள முடியும்.

இருபது கடிதங்களும் இலக்கிய சுவையுடன் அன்று புரட்சிகரபோராளியின் பாட்டைப் பேசுவதை படிக்கும் எவரும் உணரமுடியும்.

23-11-2021

No comments:

Post a Comment