Skip to main content

விக்ரம் சம்பத்தின் சாவர்க்கர் பகுதி 2

 

2

சாதி குறித்த சாவர்க்கர் பார்வை விவாதகளத்தில் போதுமான கவனத்தைப் பெறவில்லை என்பது உண்மைதான். இந்து மதம் என்றாலே அது சாதிகளின் தொகுப்புதான். இந்து என்று சொல்லிவிட்டாலேபோதும் சாதி தானாக ஒட்டிக்கொள்ளும். இந்து என்பவன் சாதி இல்லாமல் இருக்கமுடியாது. எனவே சாதி இல்லாமல் போகவேண்டுமெனில் இந்து என எவரும் இருக்கமுடியாது என்கிற வாதிடல் ஆழமாக தமிழ் சமூகம் உள்ளிட்டு இருப்பதை நாம் காணமுடியும்.



சாவர்க்கர் உரையாடல்களில் சாதிக்கு அப்பாற்பட்டு அனைத்து சாதியினரும் உட்காரவேண்டிய ஒன்றுபட்ட மேடையாக இந்துத்துவா  அமைகிறது. தீண்டாமை அகற்றப்படுதல், சேர்ந்து உணவு உண்ணல், விருப்பப்பட்டு சாதி- வர்ணம் தாண்டிய திருமணம், அனைவரும் கோயிலுக்குள் நுழைதல் போன்ற அம்சங்கள் சாவர்க்கர் உரையாடலிலும் வரும். தீண்டாமை எதிர்ப்பிற்கான வலுவான வாதங்கள் முஸ்லீம்களை முன்னிறுத்தியும் அவரிடம் இருக்கும். இதையெல்லாம் விக்ரம் சம்பத் வெகுவாக கொணர்ந்திருக்கிறார்.

காந்திக்கு சாதிகுறித்து பழமையான வர்ணாஸ்ரம  ஆதரவு பார்வை- அதற்காகவே நிற்கும் பார்வை இருந்ததாக விக்ரம் சம்பத் நிறுவ முற்படும் இடங்களில் அவர் வரலாற்றாசிரியன் என்பதிலிருந்து தடுமாறுவதாகவே தெரிகிறது.  சாதி புரிதலில் சாவர்க்கர் காந்தியைவிட சிந்தனையில் நடைமுறையில் எப்படி மேலான பார்வை கொண்டார் என விவாதித்து இருந்தால் கூட அதை நாம் பேசமுடியும். ஆனால் அம்பேத்கரை காந்தி எதிர்ப்பிற்கு முற்றிலுமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். 1920-30களை மேற்கோள்காட்டி பேசமுடிந்த விக்ரம் சம்பத்தால் 1935ல் caste must go  எனப்பேசி அதில் தொடர்ந்து  பலபடிகளை ஏறிய காந்தியை காணமுடியவில்லை. சமீபத்தில் வெளிவந்த நிஷிகாந்த் கோல்கேவின்  Gandhi against caste  யை பார்த்த எவருக்கும் இந்த விவாதங்களில் விக்ரம் சம்பத்தின் நேர்மை குறித்து சந்தேக நிழல் படியும் என்றே தோன்றுகிறது.

சாவர்க்கர் சாதி குறித்து பார்வை விவாதத்தில் 1932 புனே உடன்பாடு குறித்தும் பேசப்படுகிறது. அந்த உடன்பாட்டை நேதாஜியின் வாதங்களை முன்வைத்து  விமர்சனத்தை விக்ரம் சம்பத்  புத்திசாலித்தனமாக நகர்த்தியிருப்பதுபோல் தோன்றுகிறது. நேருஜியின் அதிருப்தி வாசகங்களும் துணைக்கு அழைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. புனே உடன்பாடு எட்டப்பட்டது குறித்த சாவர்க்கருக்கு கருத்து ஏதாவது இருந்ததா என்பதோ- அப்படி இல்லையென்றால் சாவர்க்கர் இது குறித்து மெளனம் சாதித்தார் என்பதோ விகரம் சம்பத்தால் செளகரியமாக பார்க்கப்படாமல் போகிறது. புரட்சியாளர்கள் குறித்து காந்தியின் மெளனத்தை விமர்சிக்கும் விக்ரம் சம்பத் இங்கு சாவர்க்கரின் மெளனம் குறித்து ஏதும் குறிப்பிடாமல் செல்வது இரட்டை நிலைபாடாக தெரிகிறது.

சாவர்க்கரின் இந்து தேச கட்டுமானம் மிக முக்கிய விவாதப்பொருளுக்குரியது. இந்தியர் என்ற பெயரில் ஒரு மனிதன் ஒரு வாக்கு என்றால் தனக்கு பிரச்சனையில்லை. தனித்த மதம் ஒன்றிற்கு அதன் பெயரில் இடஒதுக்கீடு என்பதை அவர் ஏற்கவில்லை. இந்துக்கள் எவரையும் துன்புறுத்துவதற்கோ வெறுப்பதற்கோ தங்களை திரட்டிக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் இந்துக்கள் மீதான வெறுப்பை அனுமதிக்கமுடியாது. ஒரே மதிப்பு வேண்டும். சிறுபான்மை என்று சொல்லியோ- தாங்கள் ஆண்ட ஆட்சியாளர்கள் என்ற பெருமித உரிமையுடனோ எதையும் கோரமுடியாது என்பதை அவரின் சிந்தனை சாரமாக விக்ரம் சுட்டிக்காட்டுகிறார் .

இந்து மகாசபாவின் பிரச்சார நோக்கங்களில் சாவர்க்கர் மூன்று அம்சங்களை பிரதானப்படுத்தினார் என்று பார்க்கமுடிகிறது.

·         தீண்டாமை ஒழிப்புடன் அனைத்து இந்துக்களையும் இந்து என்ற ஒற்றை அடையாளத்துடன் திரட்டி ஒன்றுபடுத்துவது

·         பள்ளி கல்லூரி மாணவப்பருவத்திலிருந்தே கட்டாய இராணுவப்பயிற்சி- நாட்டை முழுமையாக ஆயுதபயிற்சிகொண்ட தேசமாக்குதல்

·         இந்து ஒற்றுமை என்று நிற்போர்க்கு மட்டுமே இந்துக்கள் வாக்களிக்கவேண்டும்.

மைனாரிட்டிக்கு என்னவெல்லாம் உரிமையோ அல்லது சலுகையோ அது தனித்து இருக்கமுடியாது. அது மெஜாரிட்டிக்குமானதாகவேண்டும் என்ற அவரின் குரலை நூல் நீள நாம் பார்க்கமுடியும்.

அலி சகோதர்களில் ஒருவரான சவுகத்அலியுடன் அவர் நடத்திய உரையாடலில் இந்த அடிப்படைகளை நாம் காணலாம். இந்த உரையாடல் குறித்த சந்தேகங்கள் எழுப்புவர்களை விக்ரம் சம்பத் தனது ஊடக விவாதங்களில் மறுத்துவருகிறார். சவுகத் அலி இது குறித்து எதுவும் பேசவில்லை என்பதை விக்ரம் ஏற்றாலும் சாவர்க்கரின் உதவியாளர் குறிப்புகளில் அந்த உரையாடல் இடம்பெற்றுள்ளதாக விக்ரம் பேசிவருகிறார்.

அம்பேத்கரின் பாகிஸ்தான் ஆக்கத்தை விக்ரம் மிக தாராளமாக பயன்படுத்தியுள்ளார். வலது சிந்தனையாளர்கள் தங்கள் பேட்டிகளில் இளைஞர்கள் அதைக் கட்டாயம் படிக்கவேண்டும் எனத் தொடர்ந்து சொல்லிவருவதையும் இணைத்துப்பார்க்கும்போது விக்ரமின் இந்த தாராளம் நமக்கு புரிபடும்.

1939ல் காங்கிரசில் காணப்பட்ட மூன்று நீரோட்டங்கள் குறித்து சாவர்க்கர் பேசியதை விக்ரம் தந்துள்ளார்.  எடுத்த எடுப்பிலேயே காந்திய அகிம்சை இந்துத்துவாவிற்கு பகைமையானது என்ற சாவர்க்கரின் கருத்தைப் பார்க்கிறோம். Gandhian non-violence is inimical to Hindutva என அவர் பேசியுள்ளார். வன்முறைக்காக வன்முறை என்பதை இந்து தத்துவம் ஏற்காவிட்டாலும், தீயவை அழித்து நல்லவை நாட்டிட வன்முறை தேவை. காந்திய சிந்தனை இதை பிரித்துப்பார்ப்பதில்லை என்பது சாவர்க்கரின் விமர்சனம்.

 காங்கிரசில் அடுத்தப்போக்கு சுபாஷ் காட்டும் பார்வார்ட் பிளாக் திசை. அவருடன் சில அம்சங்களில் நாம் (இந்து மகாசபா) உடன்பட்டு இணைந்து பணியாற்றமுடியும். ஆனால் அவரிடத்திலும் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்ற கானல் நீர் இருக்கிறது. இங்கு என்ன வித்தியாசம் என்பது வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது.

எங்கே இணைந்து என்பதை நாம் ஊகித்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஆயுதம் தாங்கிய இராணுவ வலிமையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற துணையுடன்  காங்கிரசை நம்பாமல் பிரிட்டிஷ் எதிர்ப்பு விடுதலைப்போரை நடத்துவது என்கிற பொருளை நூலை வாசிக்கும்போது நாம் புரிந்துகொண்டுவிடமுடியும். இங்குதான் மூஞ்சே- முசோலினி சந்திப்பு, பின்னர் இந்தியா திரும்பி அது குறித்த புகழ்பாடல்கள், ஆரியர் பெருமை உலகளாவிய மீட்பு, இட்லர் ஜெர்மானிய பாசிச வழிமுறைகள் குறித்த உரையாடல்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகவுள்ளன.

ராஷ்பிகாரி- சாவர்க்கர் உறவுகளும் அதன் வழிப்பட்டு நேதாஜி தப்பிச் சென்று அவர் உருவாக்கிக்கொண்ட ஜெர்மானிய- ஜப்பான் உறவுகளும் சாவர்க்கர் கனெக்‌ஷனுடன்விக்ரம் சம்பத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன. காந்திய அகிம்சை நிராகரிப்பு என்ற புள்ளியில் சாவர்க்கரை நோக்கி பல்வேறு புரட்சிகர இயக்கங்கள்- பகத்சிங் ராஜகுரு ஆசாத் உட்பட ஈர்க்கப்பட்ட கதையாடலாக விக்ரம் சம்பத் இப்புத்தகத்தை நகர்த்தியிருப்பதாக என் வாசிப்பு மனம் திறக்கிறது.

சாவர்க்கரின் மொழிக்கொள்கையில் விதந்து பேசப்படுவது அவரின் மராத்திய மொழித்தூய்மை முன்னெடுப்புகள். தாய்மொழி பற்று என்பதிருந்தாலும் இந்தியாவிற்கு பொதுமொழி என்பது தேவநாகரியில் உருது கலப்பில்லாத சமஸ்கிருத இந்தி என்றே சாவர்க்கர் பேசுகிறார். அவரே இலக்கிய புலமைக்கொண்ட மராத்திய கவிஞர் என்றாலும் கலை கலைக்காக என்பது வரையறைக்கு உட்பட்டது எனக்கருதியுள்ளார். நாடு பற்றி எரியும்போது அதை அணைக்கும் வேலைதான் தலையாயது- நாட்டின் நன்மையை கருதாத இலக்கியப் போக்கை அவர் நிராகரிப்பதையும் காணமுடிகிறது. அவசியமெனில் இலக்கியகர்த்தாக்களும் பேனாவை முறித்தெறிந்துவிட்டு துப்பாக்கியைத் தூக்கவேண்டும் என இலக்கிய அமர்வில் அவர் பேசியதைப் பார்க்கிறோம்.

தனது எந்த உரையாடலிலும் துப்பாக்கியை அழைத்துக்கொள்ளும் உளவியல் அவரிடம் தொழிற்பட்டுள்ளதையே ஊகிக்கமுடிகிறது. அகிம்சை நிராகரிப்பும் வன்முறை ஆராதனையும் சாவர்க்கருக்கு மட்டுமல்லாமல் விக்ரம் சம்பத்திற்கும் மிக உகந்ததாகவே நூலைப் படிக்கும் என்னால் கருதமுடிகிறது.

சாவர்க்கரின் பொருளாதார கருத்துக்கள் இந்து மகாசபா ஆண்டுகள் என்ற அத்தியாயத்தில் சிலவரிகளில் காணக்கிடைக்கிறது. மூலதனமாக இருந்தாலும் உழைப்பாக இருந்தாலும் அனைத்தும் தேசநலனுக்கு தன்னை கீழ்ப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற பொதுவிவரணை இருக்கிறது. எப்படி- எவ்வாறு என்ற விளக்கங்கள் இல்லை. சுயநலத்திற்கு இடங்கொடாமல், இலாபம் என்றால் பங்கிட்டுக்கொள்ளவும், நட்டம் என்றால் அதனையும் பங்கிட்டு ஏற்கவும் வேண்டும். தனியார் நிறுவனங்களவிட அவசியமானது சிறப்பானது எனக் கருதக்கூடிய சில கேந்திர தொழில்களை தேசியமயமாக்கும் இசைவு அவரிடம் வெளிப்பட்டுள்ளது.

விவசாயத்திலும் நிலப்பிரபுக்கள்- விவசாயிகள் இணக்கத்தை சாவர்க்கர் பேசினார் என விக்ரம் சம்பத் காட்டுகிறார். State cultivation with trained peasants  என்பதும் அவரால் ஆலோசனையாக தரப்பட்டுள்ளது. தேசத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வேலைநிறுத்தங்களையும் கதவடைப்புகளையும் அனுமதிக்கக்கூடாது என்பது அவரது கருத்து.

தனியார்சொத்து என்பது சட்டவிரோதமானதல்ல. எந்தவித ஈடும் கொடுக்காமல் சொத்துபறிப்பு அரசாங்கத்தால் செய்யப்படவே கூடாது. அந்நிய மூலதனம் மற்றும் தொழில்களுக்கு ஈடுகொடுக்க வளரும் இந்திய தொழில்களை பாதுகாக்கும்தொழிற்கொள்கை வேண்டும். இந்துக்களின் பொருளாதார நலன்களை புறக்கணித்தால் தேசவளர்ச்சி பாதிக்கும். இந்துக்கள் மத்தியில் நிலவும் வர்க்கவேறுபாடுகளை தீர்த்து முஸ்லீம் சமஸ்தானங்களில் அரசு உதவியுடன் நடைபெறும் வர்த்தக போட்டியை எதிர்கொள்ளவேண்டும் போன்ற சில கருத்துக்களை நாம் பார்க்கிறோம்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...