https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, November 9, 2021

விக்ரம் சம்பத்தின் சாவர்க்கர் பகுதி 3

 

3

1942 ஆகஸ்ட் பிரிட்டிஷாரே வெளியேறு போராட்டத்தை குவிட் இந்தியாவா ஸ்பிளிட் இந்தியா போராட்டமா எனக் கேலி பேசியது சாவர்க்கர் தலைமை. அப்போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை இந்து மகாசபா எடுத்தது. காந்தி, நேரு உள்ளிட்ட பலதலைவர்கள் கைது செய்யப்பட்டதை சாவர்க்கர் ஏற்காமல் விடுவிக்கவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

குவிட் இந்தியா போராட்டம் எவருக்கும் என்ன என்ற தெளிவின்றி அறிவிக்கப்போராட்டமாக முன்நிறுத்த விக்ரம் சம்பத் முயற்சிக்கிறார். இதற்கு மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் காந்தி குறித்த விமர்சனத்தை துணைக்கு வைத்துக்கொள்கிறார். இது தேசவிரோத போராட்டம் என அம்பேத்கார் வைத்த விமர்சனத்தை எடுத்துக்காட்டுகிறார்.அதேநேரத்தில் இந்து மகாசபாவில் சில பிரிவினருக்கு சாவர்க்கர் மீது கடுமையான விமர்சனம் எழுந்ததையும் விக்ரம் காட்டுகிறார். இந்துக்கள் முழுமையாக காந்தி பக்கம் போய்விட்டனர்- இந்து மகாசபா அந்நியமாகியுள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. ஷியாமா பிரசாத் போன்றவர்கள் இந்து மகாசபா தனது தனித்த போராட்டத்தை அறிவிக்கும் என்று சொல்லும் அளவு நிர்ப்பந்தம் உருவானது. பம்பாய் இந்து மகாசபா சார்பில் நிலைப்பாடு சரியானதே- இந்துக்கள் எவரும் பங்கேற்காதீர் என்று சாவர்க்கர் அணி ஒன்று பேசியது. இந்த அணியில் முக்கிய செயல்பாட்டாளராக கோட்சே முன்நின்றுள்ளார்.

அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் களத்தில் இல்லாது சிறையில் இருந்த சூழலில் முகர்ஜி- ஜின்னா சந்திப்பு நடந்தது. உடன்பாடு ஏதும் அவர்களால் எட்டமுடியவில்லை என்பதை விக்ரம் கொணர்ந்துள்ளார். அதேபோல் சாவர்க்கர்- ஜின்னா சந்திப்பிற்காக நாள் குறிக்கப்பட்டு அது நடைபெறாமல் போனது. எவர் எவரைப்போய் பார்ப்பது என்கிற ஈகோ பிரச்சனையும் இருந்தது. சாவர்க்கர் ஜின்னாவை போய் பார்க்க இறுதியில் சம்மதித்தார். இந்த செய்தியும் விக்ரமால் சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு சாவர்க்கர் சேலம், மதுரை கூட்டங்களுக்கு வந்துள்ளார். மதுரை அவர்களின் இந்து மகாசபை மாநாடு. டிசம்பர் 1940ல் நடந்துள்ளது. இம்மாநாடு குறித்த குறிப்பை வைஸ்ராய் லண்டனுக்கு அனுப்பியுள்ளார். டொமீனியன் அந்தஸ்து ஏற்பு, மைனாராட்டிகளுக்கு சட்டப்படியான உரிமை, பாகிஸ்தான் பிரிவினை எதிர்ப்பு, இந்திய இளைஞர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி, போர்க்கருவிகள் உற்பத்தி தொழில்கள், கோரிக்கைகள் தீர்வில்லை எனில் போராட்டம் போன்ற அம்சங்கள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சாவர்க்கர் 1941 மே 28ல் முழக்கம் ஒன்றை அழுத்தமாக தனது 59 வயதிற்கான செய்தியாக தருகிறார். Hinduise all politics and militarise Hindu Kingdom. அனைத்து அரசியலையும் இந்துமயப்படுத்து- இந்து ராஜ்யத்தை இராணுவமயமாக்கு. இதை செய்தால் இருள் விலகும் எனப்பேசியதை விக்ரம் தந்துள்ளார். முஸ்லீம்களை பிரித்தாண்டும் இதை செய்யவேண்டும் என மூஞ்சேவுடன் சாவர்க்கர் பேசுகிறார்.

அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்தது போல சாவர்க்கரையும் கிரிப்ஸ் குழு சந்திக்கிறது. இதையொட்டி 1942 மார்ச்சில் தங்களது கோரிக்கைகளை இந்து மகாசபா வடித்தெடுக்கிறது. ஆயுத சட்டத்தை தளர்த்து- துப்பாக்கி ஏந்த அனுமதி, தேசிய இராணுவம் அமைந்திட நிதி வழங்குதல், போர்விமானம், போர்க்கப்பல், ஆயுத தளவாட பாக்டரிகளை உருவாக்குதல் போன்றவை கோரிக்கைகள்.

கிரிப்ஸ் உடன் இந்தியா யூனிட்டரி ஸ்டேட்- ஸ்டேட் வித்தின் ஸ்டேட் கூடாது என்ற விவாதத்தை சாவர்க்கர் மேற்கொள்கிறார். இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருக்கவில்லை என்ற மாற்றுக் கருத்தை கிரிப்ஸ் வெளியிட்டார். சாவர்க்கர் அதை ஏற்கமுடியாதென்றார். பலமொழிகள், பல மதங்கள் இருப்பது உண்மை என்றாலும் கலாச்சாரரீதியாக, நிர்வாகரீதியாக இந்தியா மத்திய ஆட்சியை- மாகாணங்களைக்கொண்டிருக்கிறது. சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பொருந்தாது. அப்படியே பேசப்பட்டாலும் அதை முஸ்லீம்களுக்கு மட்டும் என பேசுவதை ஏற்க முடியாது என தன் வாதத்தை கிரிப்ஸிடம் முன்நிறுத்தியதாக விக்ரம் சம்பத் காட்டுகிறார்.

லூயிபிஷருக்கு கொடுத்த பேட்டியில் அமெரிக்காவில் சிறுபான்மையினரான நீக்ரோக்களுக்கு தனி நாடு சாத்தியமா என்ற எதிர்கேள்வியை சாவர்க்கர் முன்வைத்தார்.  ட்ரெனர் எனும் பத்திரிகையாளர் முஸ்லீம்களை எப்படி நடத்துவீர்கள் எனக் கேட்டதற்கு நீக்ரோக்கள் போல நடத்துவோம் என சாவர்க்கர் பதில் சொன்னதை விக்ரம் தந்துள்ளார். உலகம் தன்னலம் என்பதில்தான் செயல்படுகிறதே தவிர பைபிள் வாசகங்களால் அல்ல எனவும் சாவர்க்கர் பதில் தருவதைப் பார்க்கிறோம். காந்தியின் உண்ணாநோன்பு பற்றிய கேள்விக்கு அது சரி என ஏற்றால் ஹிட்லர் எதிர்த்து சர்ச்சில் உண்ணாநோன்பிருக்கலாமே ஏன் இல்லை என பதில் தருகிறார்.

சாவர்க்கர் குறித்து இக்காலத்தில் பம்பாய் கவர்னர் ரோஜர் லும்லே இரகசிய குறிப்பு ஒன்றை அனுப்புகிறார்.

“ நமது தற்காலிக கூட்டாளி ஆனால் ஆபத்தான நண்பன். முஸ்லீம்களின் எதிரி, அதே நேரத்தில் பிரிட்டிஷ் எதிரியும் கூட. உள்நாட்டு அரசியலில் காந்தி எதிர்ப்பாளர். காந்தியின் அகிம்சையை எதிர்ப்பவர். தனிநபர்கொலை மற்றும் கொரில்லாமுறைகளில் நம்பிக்கையுடையவர். வைஸ்ராய் கவுன்சிலில் காங்கிரஸ் இல்லாமல் முஸ்லீம்லீக்- இந்து மகாசபா மட்டும் இருந்தால் நாய்சண்டை நடக்கும். இன்று பஞ்சாப் பகுதியினர் இராணுவத்தில் அதிகமாக இருக்கும் நிலையில் இராணுவத்தை இந்தியமாக்குவது எனப்போனால் ஜின்னா எதிர்ப்பார். சாவர்க்கருக்கோ இந்து இராணுவம் வேண்டும். பிறகேள்விகளிலும் வேறுபாடுகள்தான்

மேற்குறித்த இரகசிய குறிப்பு அவரைக்குறித்த சரியாக அனுப்பப்பட்ட சித்திரம் என்றே கருதலாம்.

1942 ஜூலையில் அவரது ஜம்மு காஷ்மீர் சொற்பொழிவுகளில் அப்பகுதியை “Hindudom’s Northern Watchman”- இந்துராஜ்யத்தின் வடக்கு காவற்காரன்  எனக் குறிப்பிட்டு அவர் பேசுவதைப் பார்க்கிறோம்.

ராஜாஜியோ அல்லது வ வே சு வோ சித்திரகுப்தன் பெயரில் சாவர்க்கர் சரிதம் எழுதியிருக்கலாம். சாவர்க்கரே தன்னைப்பற்றி சித்திரகுப்தன் பெயரில் எழுதிக்கொண்டவர் என்ற குற்றச்சாட்டு நிலவும் சூழலில் விக்ரம் இதைச் சொல்லியிருக்கிறார். ஊடக பேட்டிகளில் ராஜாஜிதான் நிச்சயமாக எழுதினார் என சொல்லவில்லை என தற்காத்துக்கொள்ளும் சம்பத் ராஜாஜி எழுதினார் என்பதை மீண்டும் இப்புத்தகத்தில் வ வே சு பற்றி சொல்லாமல் ( பக் 333 Leaning on a broken reed chapter) தருவதை பார்க்கமுடிகிறது.

குவிட் இந்தியா பற்றி பேசுபவர்கள் கம்யூனிஸ்ட்கள் துரோகம் என்பதை பேசாமல் போவதில்லை. விக்ரமும் இதை சற்று சாமர்த்தியமாக செய்துள்ளதைப்போல் தெரிகிறது. பிரிட்டிஷ் உள்துறை சர் ரெஜினால்டிற்கு சி பி அய் பொதுச்செயலர் பி சி ஜோஷி எழுதிய கடிதம் சுட்டிக்காட்டப்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் பிரிட்டிஷ் ஏஜெண்ட்களாக- சொந்த நாட்டுப் போராளிகளுக்கு எதிராக நின்றதை அக்கடிதம் பறைசாற்றுகிறது என்பதை மேற்கோள்கள் மூலம் சம்பத் காட்ட விழைகிறார். இதற்கு எம் ஆர் மசானி, ஓவர் ஸ்டீரிட்-விண்ட்மில்லர், மஜூம்தார்களை விக்ரம் துணைக்கு வைத்துக்கொள்கிறார்.

இதை சி பி அய் மறுத்துள்ளது- ஆதாரம் ஏதும் கிட்டவில்லை என மஜூம்தார் சொன்னதை புத்தக பிரதியில் சொல்லாமல் விக்ரம் நோட்ஸ் பின்னிணைப்பில் தருவதைக் காண்கிறோம். பிரதியில் மறுப்பும் இடம்பெற்றிருந்தால் வரலாற்றாசிரியர் சாய்வு சற்று மட்டுப்பட்டிருக்கும்.

இந்து மகாசபா தலைவராக சாவர்க்கர் செயல்பட்ட காலத்தில் குழு கருத்துவேறுபாடுகள் விமர்சனங்கள் எழுந்தன.  ஷியாமாபிரசாத்துடனும் வேறுபாடு ஏற்பட்டது. ஹெட்கேவர் காலத்திலேயே ஆர் எஸ் எஸ் மேடையை காங்கிரஸ் எதிர்ப்பிற்கு பயன்படுத்தவேண்டாம் என்று சொல்லப்பட்டதில் இந்து மகாசபா எரிச்சல் அடைந்தது. கோல்வால்கர் பொறுப்பிற்கு வந்தவுடன் மிலிட்டரி டிபார்ட்மெண்ட் இனி இல்லை. அரசாங்க உத்தரவுபடி அது கலைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

ராஜினாமா செய்துவிடுவதாக அடிக்கடி சாவர்க்கர் சொன்னாலும் கான்பூர் மாநாட்டில் போட்டியிடுவேன் என்கிற நிலைப்பாட்டால் தொடர்ந்தார். ஆர் எஸ் எஸ் குறித்த விமர்சனம் சாவர்க்கரிடம் இருந்தது. அவர்கள் பிறப்பார்கள்- ஆர் எஸ் எஸ்ஸில் சேர்வார்கள் பின் மரிப்பார்கள் என்கிற அவர்கள் அரசியல் வெளிக்கு வரத்தயங்குவது குறித்த விமர்சனத்தை சாவர்க்கர் வைத்தார். ஆனால் பலமேடைகளில் இரு இயக்கத்தலைவர்களும் ஒன்றாக பயணித்த விவரங்களை சம்பத் நிறையவே தருகிறார். இரு இயக்க உறவுகள் குறித்து பிரிட்டிஷ் நிர்வாகம் அனுப்பிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

சாவர்க்கருக்கு அவரது 61வது பிறந்தநாள் விழாவில் புனா விழாக்குழுவினர் சார்பில் 28 மே 1943ல் ரூ 1,22,912 பணமுடிப்பு தரப்படுகிறது. இதைத்தவிர பிறகமிட்டிகள் சார்பில் ரூ 71500 கொடுக்கிறார்கள். பெருந்தொகை கிடைத்ததால் இனி தனிப்பட்டவர்கள் தனக்கு செய்துவந்த உதவி போதும் என சாவர்க்கர் சொல்லிவிடுகிறார். ஆனால் தன்னிடம் மிகவும் விசுவாசமாக வேலைபார்த்து உழைத்தவர்களுக்கு ஊதியத்தை கூட்டித்தராமல் இருந்தார். அவரின் மெய்க்காப்பாளர் அப்பா காசர், தனிச்செயலர் கஜன்ராவ் டாம்லே, செயலர் பிதே குருஜி ஆகியோர்க்கு கொடுக்கப்பட்ட ஊதியம் போதவில்லை என்ற கோரிக்கையையும் அவர் பொருட்படுத்தவில்லை. பிதே வெளியேறிவிட்டார் என்ற செய்தியையும் தனஞ்செய் புத்தகத்தை சுட்டிக்காட்டி விக்ரம் தந்துள்ளார்.

கஸ்தூர்பா மறைவின்போது ஆறுதல் தெரிவித்து காந்திக்கு சாவர்க்கர் தந்தி அனுப்பினார். ஆனால் கஸ்தூர்பா நிதி என்பதை கடுமையாக விமர்சித்தார். கஸ்தூர்பா நாட்டிற்காகபட்ட துன்பங்கள் அவ்வளவு குறிப்பிடத்தகுந்ததா என்கிற கேள்வி அவரிடமிருந்து வந்தது. பெயர் தெரியாத தியாகம் நிறைந்த ஏராள பெண்மணிகள் இருக்கின்றனர். அவர்களை அறிந்து அவர்களுக்கு உதவுவோம் என்ற பொருளில் அவர் பேசிவந்ததை சம்பத் சுட்டிக்காட்டுகிறார்.

1944 பிப்ரவரியில் அமெரிக்கர் தர்ஸ்டன், ஹோவர்ட் டினோவன் சந்திப்பு உரையாடல்களில் நாட்டுப்பிரிவினையை ஏற்கவே முடியாது. காந்திய அரசியல் என்பது   dreamy nonsense , அவரது அகிம்சை stupid என்கிற கடுஞ்சொற்களை வீசுகிறார். ராஜாஜி பார்முலா என்பது பெரிதாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது. ஜின்னா அதை நிராகரித்துவிட்டார். இருந்தாலும் சாவர்க்கர் ராஜாஜியை பாகிஸ்தானிய காங்கிரஸ்காரர் எனக் கேலி பேசியதைக் காண்கிறோம்.

காந்திய அரசமைப்புத் திட்டம். சோசலிஸ்ட்களின் திட்டம். எம் என் ராயின் திட்டம் என்று வெளியிடப்பட்டது போலவே இந்து மகாசபா சார்பில் சுதந்திர ஹிந்துஸ்தான் அரசியலமைப்பு திட்டம் ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கென கமிட்டி  மே 1944ல் அமைக்கப்பட்டு விவாதித்து தங்கள் திட்டத்தை அவர்கள் வெளியிட்டனர். அதன் சில முக்கிய அடிப்படைகள் தரப்படுகிறது.

·         நாட்டின் பெயர் இந்தியா அல்ல ஹிந்துஸ்தான்

·         இருபக்க நலன் சார்ந்த உறவு அடிப்படையில் பிரிட்டன் உறவு இருக்கும்

·         பாகிஸ்தான் எனக்கோரப்பட்டுவரும் பகுதி உட்பட அனைத்துப்பகுதிக்கும் இவ்வரசமைப்பு பொருந்தும். பிளவுபடுத்த முடியாத ஒரே ஹிந்துஸ்தான்

·         அரசாங்கம் ஜனநாயக, குடியரசாக ஃபெடெரல் தன்மையுடன் இருக்கும். எஞ்சிய அதிகாரம் மய்ய அரசிடம் இருக்கும். இரு அவை முறை இருக்கும்

·         பொதுஜனவாக்கெடுப்பு, மக்கள் முன்முயற்சியில் சட்டமியற்றல்- திருத்தம், தேர்ந்தெடுக்கப்பட்டவரை திரும்ப அழைக்கும் உரிமை இருக்கும்

·         அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கும்- இரண்டும் மக்களுக்கு கடப்பாடனதாக இருக்கும்

·         அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள்

·         இராணுவத்தில் பயிற்சி வாய்ப்பு

·         21வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை- இதில் ரிசர்வேஷன் வைட்டேஜ் என்பதில்லை

முகப்புரையில் ஹிந்துஸ்தான் மக்களாகிய நாங்கள் சுதந்திர பிரிக்கமுடியாத அரசை உருவாக்குகிறோம். இறையாண்மை மக்களிடத்தில் இருக்கும். மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் வளர்ச்சிக்கும் முழு வாய்ப்புகள் சொல்லப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகள் என 16 அம்சங்களை தந்துள்ளனர்.

·         குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமைகள்

·         சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டங்கள் பாரபட்சமாக இருக்காது

·         அனைவருக்கும் இலவச அடிப்படைக்கல்வி. சாதி, நிறம், கொள்கை அப்பாற்பட்டு கல்விக்கூடங்களில் சேர உரிமை

·         உரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமை

·         உடல் ஆரோக்கிய காப்பிற்கான சட்டங்கள்

·         உயிர்வாழ, சுதந்திரமாக இருக்கும் உரிமைகள்

·         சொத்துரிமை- சுரண்டல் இல்லாமல் செல்வம் தேடுதல்

·         உழைப்பவர்க்கு வாழ்வூதியம்- தாய் சேய் நலம்- வயது மூப்பு பாதுகாப்பு சட்டங்கள்

·         அமைதியாக ஆயுதங்கள் இன்றி பொது அமைதிக்கு குந்தகம் இல்லாமல் கூடும் உரிமை- சங்கம் சேரும் உரிமை

·         பொதுஒழுங்கிற்கு உகந்து மதவழிபாட்டுரிமைகள். எந்த மதத்திற்கு ஆதரவாகவோ கட்டுப்படுத்தக்கூடிய வகையிலோ சட்டங்கள் இயற்றப்படமாட்டாது

·         ஹிந்துஸ்தானில் அரசு மதம் என ஏதுமிருக்காது

·         அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் செல்லும் உரிமை

போன்ற சில அம்சங்களை சம்பத் புத்தகத்தில் நாம் பார்க்கலாம்.

முஸ்லீம் லீக் பாகிஸ்தான் நாள் என அனுசரித்தால் அகண்ட ஹிந்துஸ்தான் – பாக் விரோதநாள் என இந்து மகாசபா அனுசரித்தது. அக்டோபர் 1944ல் இதற்கான மாநாட்டையும் நடத்தியது

தமிழ்நாட்டில் புகழ்வாய்ந்த பி வரதராஜூலு நாயுடு சாவர்க்கர் இந்து மகாசபா தலைவராக இருந்த காலத்தில் அவரது அணியிலிருந்து அவருடன்  பயணித்தவராக இருந்துள்ளார் என்பதை சம்பத் புத்தகத்தில் பல இடங்களில் பார்க்கலாம். 1945ல் வைஸ்ராய் வேவல் அனுப்பிய குறிப்பொன்றில் இந்து மகாசபா நூதனமான ஒன்று. அதில் உள்ள பல உறுப்பினர்கள் சாவர்க்கர், முகர்ஜியைவிட  காந்தியை பின்பற்ற விழைபவர்கள் என எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment