இந்திய கப்பற்படை எழுச்சி (பெருமிதமும் சோகமும்) RIN Upraisings 1946 குறித்த சிறிய மின் புத்தகத்திற்கான இணைப்பு தரப்பட்டுள்ளது. முன்னுரையை இங்கு தந்துள்ளேன். புத்தகம் வாசிக்க வாய்ப்புள்ளவர்கள் இணைப்பை சொடுக்க வேண்டுகிறேன்.
https://ia801500.us.archive.org/8/items/rin-book-pdf/RIN%20book%20pdf.pdf
முன்னீடு
வரலாறு பல தரப்புகளையும் திறப்புகளையும்
கொண்டதாகவே இருக்கிறது. வரலாற்றை ஒரு பக்கமாகவே தெரிந்துகொண்டு அது மட்டுமே மிகச்சரி எனப் பழக்கமாக்கிக் கொண்ட ஆண்டுகள் பல என் வாழ்வில்
கடந்து போயுள்ளன. வரலாற்றின் ஒவ்வொரு புள்ளிக்கும் பல பக்கங்கள்- பன்முக விவாதங்கள் இருக்கின்றன- ஏன் நிகழ்கால event ஒவ்வொன்றிற்கும் கூட பலமுனை வாதங்கள் புழக்கத்தில் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளத் துவங்கியதும்
என்னிடம் இதுவே மிகச்சரி- இதற்கு இதுதான் இறுதி வாக்கியம் என்கிற
absoulteness மெதுவாக கழன்று போகத்துவங்கியது.
வரலாற்றின் ஒரு புள்ளியை தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும்போது முடிந்தவரை - என் தேடல் எல்லைவரை கிடைப்பனவற்றை அவரவர் மொழியில் பதிவிட வேண்டும் என்ற உணர்வு என்னிடம் வேர்கொள்ளத்துவங்கியது. என் எழுத்துக்களை இந்த வகையில் அமைத்துக்கொள்ளத்துவங்கினேன். அப்படி ஒரு முயற்சியாக இந்த சிறிய ஆக்கத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.
1946 பிப்ரவரியில் நடந்த கப்பற்படை புரட்சியை எழுச்சி என்றும், கலகம் என்றும், வேலைநிறுத்தம் என்றும் பலவகை மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதை அவ்வாறு அழைத்தல் கூடாது -ஒழுங்கீனம் அவ்வளவே, வீரர்கள் என கதாநாயகத்தன்மை ஏற்றுவது ஆபத்தானது என ஆளும் பிரிட்டிஷ் மதிப்பிட்டதும் நடந்தேறியது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இறுதி ஆணி அறைந்த போராட்டம் என்றும், விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய அத்தியாயம் என்கிற மதிப்பிடும் இருக்கிறது. இந்தியாவில் புரட்சிகர சூழல் உருவாக்கத்திற்கு முக்கிய பங்காற்றிய போராட்டம்
என்கிற மதிப்பீட்டையும் பார்க்கிறோம்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள்
பலர் மிக இளைய வயதினர். அவர்கள் தங்கள் அனுபவங்களை- போராட்டத்திற்கு பின்னரான அவலங்களை
சொல்லியுள்ளனர். அவை பெருமிதமும் சோகமுமான
பதிவுகளாக இருப்பதை உணரமுடிந்தது.
அரசியல் கட்சிகளாக காங்கிரஸ்,
முஸ்லீம்லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டக்களத்தில் எப்படி நின்றனர்- போராட்டத்தை
எப்படி அணுகினர் என்கிற பதிவுகள் ஏராளம் கிடைக்கின்றன. முக்கிய தலைவர்கள் என்ன பேசினர்-
வாக்குறுதிகள் தந்தனர் என்பதைக் காண்கிறோம். காந்தி, நேரு, ஜின்னா, படேல், ஆசாத், அருணா
ஆசப் , லியாகத் அலி எனப் பலரும் இப்போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். மதராஸ்
மாகாணத்தில் காமராஜர், ஜீவா, பாலதண்டாயுதம், எம் ஆர் வெங்கட்ராமன் பேசியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
1947ல் போராளிகளிடமிருந்து பெறப்பட்ட பல செய்திகளை தொகுத்து ஆவணபப்டுத்தியுள்ளனர்.
அதை 1954ல் தான் வெளியிட்டுள்ளனர். இதில்தான் இ எம் எஸ் தன் கருத்தை முன்னுரையில் எழுதியுள்ளார்.
CPI சார்பில் தோழர் பி சி ஜோஷி கடிதத்துடன்
ரின் விசாரணைக்குழுவிற்கு மெமோ அனுப்பியது. அதில் போராட்டத்தை தாங்கள் தூண்டவில்லை
ஆனால் முழுமையாக ஆதரித்து நின்றோம் என அறிவித்துள்ளதைக் காண்கிறோம்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் இந்தியாவில் மத்திய சட்டமன்றமும்
இந்தப் பிரச்னையை எப்படி விவாதித்துக்கொண்டன என்பதை அறியமுடிகிறது. ஆசப் அலி, எம் ஆர்
மசானி, லியாகத் அலி, அனந்தசயன அய்யங்கார், ரங்கா போன்றவர்கள் வாதங்கள் தீவிரமாக இருந்ததைக்
காண்கிறோம். டாக்டர் அம்பேத்கர் அப்போது வைஸ்ராய் கவுன்சில் லேபர் துறை பொறுப்பில்
இருந்தார். மத்திய சட்டமன்ற விவாதங்களில் அவர்
ஏதாவது பேசியிருக்கிறாரா என அந்தநாட்களின் சட்டமன்ற குறிப்புகளைப் பார்த்தபோது அவர்
அரசாங்க பக்கம் நின்று ஆசப் அலி தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த பதிவை பார்க்கமுடிந்தது.
பம்பாயில் போராட்டத்தின் வீச்சும்
பல்வேறு நகர்களுக்கு அப்போராட்டம் பரவியதையும் இந்தியன் ரிஜிஸ்டர் பதிவு நமக்கு எடுத்துச்
சொல்கிறது. மதராஸ் போராட்ட பதிவுகளையும் அது தருகிறது.
பெர்சி அவர்களின் புத்தகம் அவர்
உள்ளிட்ட ஆங்கில அதிகாரிகளுக்கும் போராட்டக்கமிட்டி தலைவர் கான் அவர்களுக்குமான அருமையான
உரையாடல் ஒன்றை பதிவு செய்துள்ளது. காந்தியடிகள் இதை அறிந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால்
அவரது அறிக்கையில் இந்தப் போராட்டத்தை அகிம்சைவழி
என உரிமை பாராட்டுவதை நிராகரித்திருந்தார்.
இந்த சிறு புத்தகம் 8 தலைப்புகளில்
தன் விவாத பரப்பை எடுத்துக்கொண்டுள்ளது. எட்டாவது தலைப்பு போராட்டத்திற்கு பின்னர்
என்பதாக அமைந்துள்ளது. புத்தகத்தை முடிக்கும்போது
இப்படித்தான் இறுதி செய்துள்ளேன்.
தன்னெழுச்சியோ- அரசியல் விழிப்புணர்வுடன்
எழுந்தார்களோ எது எப்படியாயினும் போராளிகள் பிரிட்டிஷ் அடக்குமுறை அவமானங்களுக்கு எதிராக
எழுந்து நின்றார்கள். ஆயுதங்களுடன் வாழப் பயிற்சி எடுத்தவர்கள் என்ற வகையில் அதை அவர்கள்
கையில் எடுத்தனர். வெற்றி பெறமுடியாமல் போயிருக்கலாம். 20 வயது இளைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்
இந்த சுயமரியாதைப்போரில் தங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக தொலைத்தனர். போராடிய அவர்களின்
பெருமிதத்தை அனைவரும் பகிர்ந்துகொண்டாலும்
அவர்கள் சோகத்தை அவர்கள் மட்டுமே அனுபவிக்க
நேர்ந்தது. எவராலும் அவர்கள் வாழ்க்கையை மீட்டுத்தரமுடியவில்லை. அவர்களில் பலர் எங்கோ
மறைந்தனர். ஊரில் ஏதாவது மரியாதை இருந்ததோ தெரியவில்லை.
தத், சிங், போஸ் என சில குரல்கள்
மட்டும் தங்கள் நினைவுகளை உரக்கச் சொல்லி சென்றுள்ளனர்.
கான் குறித்து வேறு பதிவுகள் இருக்கலாம். வரலாறு அவர்களை பெருமிதமும் சோகமுமாக பல திசைக்கொண்டு
பதிவிட்டுக்கொண்டுவிட்டது. தேடிப்போனால் அவர்கள் நம் நினைவுகளின் ஊடே நீந்திக்கொண்டிருப்பர்.
கைக்கு எட்டிய பதிவுகளின் ஊடாக
இந்த எழுச்சி குறித்த சிறிய புத்தகம் இனி வாசகர்களை தேடிக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன்
வழக்கம்போல் மின்புத்தகமாக வெளியிடுகிறேன்.
19-1-2022 ஆர்.
பட்டாபிராமன்
துணை நின்ற ஆதாரங்கள் References
Rin Mutiny 1946 by Biswanath Bose
The Indian Naval Revolt 1946 Percy s Gourgey
Contribution of Armed Forces to the Freedom Movement by
Maj Gen VK Singh
The Indian annual register 1946 Vol 1
Gadhar party Article on RIN 1946
Frontier
Article தமிழில் நடேசன்
Mainstream weekly
Oct 2008 Ajeet Jawed Article
Amitabha
RoyChowdhury Article
Pramod Kapoor Article
CPI CC Resoultion Feb 1946
CPI Memo submitted to RIN Enquiry Commission May 1946
The Rin Strike PPH ( EMS Preface)
Communists and the Rin Mutiny PD Article April 2020
CLAD ( Central Legislative Assembly Debate) Feb 22, 23
1946
Comments
Post a Comment