My Book Fair
பதிப்பாளர்கள் குறித்து எனக்கு எந்த அனுபவமும் இல்லை. பதிப்பாளர்கள் பற்றி சில எழுத்தாளர்கள் வருத்தப்பட்டவைகள் காதில் விழுந்துள்ளன. எழுத்தாளர்- பதிப்பாளர் உறவில் நேர்மை கண்ணியம் பேராசையின்மை சுரண்டலின்மை என்பதெல்லாம் காரணிகளாக அமைந்து உறவை பலப்படுத்தும் அல்லது பலவீனப்படுத்தும். 1990களில் மறைந்த தோழர் தேவபேரின்பன் போன்றவர்கள் ஊக்கப்படுத்தியதில் NCBH சார்பில் ரோசாலக்சம்பர்க் , மார்க்சிய தடங்கள் வெளிவந்தன. சிறு பிரசுரங்கங்கள் டெலிகாம் மற்றும் குப்தா குறித்த புத்தகங்கள் பதிப்பகம் எவரையும் நாடாமல் வந்தன.
பதிப்பகத்தார் படிகளை அதிகம் ஏறிய அனுபவமில்லை. ஓரிருவரை ஒருமுறை சந்தித்திருப்பேன். தொடர் முயற்சி என ஏதுமிருந்திருக்காது. தேடவேண்டும் என்ற தவிப்பால் அதில் கண்டடையும் புள்ளிகளை எழுத முயற்சிப்பது- இவர் இப்படி இதில் கருத்து வைத்திருந்தார் என்பதை பலமுனைகளில் தேடிக்கொணர்வது என்பது நடைபெறலானது. எதிலும் absoulte பக்தி- அதுதான் இறுதியானது என்பது என்னிடம் மெதுவாக கழன்று போகத்துவங்கியது. எனது எழுத்துக்கள் பக்திமார்க்கம் சார்ந்தவையல்ல. கொண்டாடவும் விமர்சித்து உள்வாங்கவும் உரியவர்களாகவே எவரும் இருக்கின்றனர் என்ற பாடம் என்னிடம் படியத்துவங்கியது.
நாம்
கொண்டாடக்கூடியவர்களில் பார்த்த அளவு நேர்மையாக
இரட்டை நிலையில்லாமல் இருக்கும் சிந்தனை- செயல்பாடுகள் எவரிடத்திலிருந்து என்பதை நோக்கி மனம்
அலைபாய்தல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அவற்றை மெதுவாகவாவது உள்வாங்கி என்னிடம்
குடிக்கொண்டிருக்கும் bias- double standard லிருந்து விடுபடமுடியுமா என்கிற போராட்டமாகவும்
அவை நடைபெறவேண்டியுள்ளது. மீண்டேன் பாடில்லை.
அப்படிப்பட்ட போக்கினூடாக எழுதியவகையில் சில புத்தகங்கள் என்னால் அமைக்கப்பட்டன. மின்னூல் வடிவம் என் இயல்பிற்கு வசதியானது. ஓரிரு ஆரம்ப நூல்களை மகன் உதவியுடன் அமேசானில் செய்யமுடிந்தது. ஆனால் அதைத் தொடரமுடியாமல் போனது. அப்போது ஃப்ரிதமிழ் நண்பர் லெனின்குரு தொலைபேசி வழியாக ஓரளவிற்கு பழக்கமானார். முன்னதாக அதன் பொறுப்பாளரை தோழர் ரவியுடன் சென்று தாம்பரம் அருகே சந்தித்தேன். ஆனால் அதுவும் பெரிதாக எனக்கு துணையாகவில்லை. லெனின்குரு இதுவரை அனுப்பியவற்றை செய்துகொடுத்து வருகிறார்.
சில
நண்பர்கள் எனது எழுத்திற்குள் செல்லமுடியவில்லை
எனச்சொல்லி அவற்றை மூடிவைத்தனர். தோழர்கள்
ரகுபதி, பால்சாமி, எஸ் எஸ் ஜி (கோபாலகிருஷ்ணன்),
தோழர் கவிஞர் யுகபாரதி படித்துவிட்டு உடன் கருத்து கூறுபவர்களாக இருந்து வருகின்றனர்.
எஸ் எஸ் ஜி, ரகு, யுகபாரதி செலவை பொருட்படுத்தாமல் பல பிரதிகளை வாங்கி தங்கள் நண்பர்களுக்கு வழங்கி
பெரும் உதவியை செய்துள்ளனர். தோழர் யுகபாரதி கட்டுரைகளை தொகுத்து மேம்ப்பட்ட பதிப்பைக்
கொணரவேண்டும் என பேசும்போதெல்லாம் சொல்லி உற்சாகப்படுத்திவருகிறார்.
காந்தி
குறித்த புத்தகங்களை பெருமளவு கவனித்து பேசுபொருளாக மாற்றிய தோழர்களாக திருமதி சித்ராபாலசுப்பிரமணியன்,
காந்தி கல்வி நிலைய சரவணன், கணேசன், மோகன் , திரு அண்ணாமலை ஆகியவர்கள் இருக்கின்றனர்.
தொழிற்சங்க தலைவர் பன்முக ஆளுமைகள் நிறைந்த பீட்டரும் தன் மதிப்புரையை தந்துள்ளார்.
சாவித்ரிகண்ணன் வெளியிட்டுள்ளார். தோழர் ரதன் சில நண்பர்களை வாங்க வேண்டியுள்ளார்.
ஹெகல்துவங்கி
என்கிற புத்தகம் ஹெகல், மார்க்ஸ், எங்கெல்ஸ், பகுனின் என அனைவரையும் ஒருசேர பேசிய புத்தகம்.
நவீன இந்தியாவின் பன்முக சிந்தனைகள் பல ஆளுமைகளை சுருக்கமாக அறிமுகப்படுத்தியுள்ள புத்தகம்.
பகவத்கீதை பன்முகக்குரல்கள் எதிரும் புதிருமான விளக்கங்களை மிகச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும்
புத்தகம். போராளிகளின் குரல் இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி தலைவர்களைப் பற்றி
பேசிய புத்தகம். நான் இலக்கியம் அறியாதவன். ஆனாலும் கார்க்கி குறித்த புத்தகம் அவரின்
அரசியல் பயணம் பற்றியதானது.
காந்தி
குறித்த புத்தகங்கள் அவர் பலருடன் , பலரும் குறிப்பாக கம்யூனிஸ்ட்கள்- சோசலிஸ்ட்கள்
அவருடன் மேற்கொண்ட அவரைப்பற்றிய மதிப்பீடுகளை அவரவர் மொழியில் தருகின்ற புத்தகங்கள்.
நேரு குறித்த புத்தகம் அவரை அவரது அரசியல் நெறிகளை பருந்துப்பார்வையில் முன்வைக்கும்
புத்தகம். அம்பேத்கர் குறித்த புத்தகங்கள் அவரின் கம்யூனிசம் பற்றிய பார்வை மற்றும்
என் வாசிப்பில் அவர் குறித்து அறிந்த அம்சங்களை
பேசக்கூடியன. பெரியாரின் பொதுவுடைமை புரிதல் அவரின் கருத்துக்கள் பற்றியும் அவர் மீதான
விமர்சனக் கருத்துக்களையும் பேசக்கூடிய ஒன்று. இவை தவிர சில சிறு வெளியீடுகள் மின்
புத்தகங்களாக வந்துள்ளன.
விலையில்லாமல் என்பது பொதுபுத்தியில் ’விலைபோகாமால் இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனாலும் வாசிக்க வாய்ப்புள்ள- உள் நுழைய முடிந்தவர்களுக்கு ஏதாவது செய்தியை இந்த புத்தகங்கள் தரும் என்கிற நம்பிக்கையில்தான் பெரும் உழைப்பை செலுத்தி அவை ஆக்கப்பட்டுள்ளன. இந்த செய்திதான் எனது book fair போலும்… உற்சாகப்படுத்தியுள்ள அனைத்து தோழர்களுக்கும் எனது நன்றி.
Comments
Post a Comment