https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, March 17, 2022

விவசாயிகள் போராட்டமும் பஞ்சாப் தேர்தலும்

 

           விவசாயிகள் போராட்டமும் பஞ்சாப் தேர்தலும்

டில்லி பகுதிகளில் விவசாய சட்டங்களை திரும்ப பெற வைப்பதற்காக நடந்த விவசாயிகளின் போராட்டம்  இந்தியப்போராளிகளுக்கு பெரும் நம்பிக்கையைத் தந்து முடிவடைந்தது.  Masculine Govt   என்கிற திருவாளர் மோடி அரசு தன் பிடிவாதத்தை தளர்த்தி கொணர்ந்த சட்டங்களை விலக்கியும் கொண்டது. பஞ்சாப் தேர்தலை மட்டுமின்றி சமீபத்தில் முடிந்த உபி உட்பட மாநிலத்தேர்தல்களை மனதில் கொண்டு அக்காரியம் நிகழ்ந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் பேசிக்கொண்டன.

விவசாயிகள் போராட்டம் பணக்கார விவசாயிகள்- middle men welfare  சார்ந்த போராட்டம் என்ற விமர்சனத்தில் உண்மையிருந்தாலும் அப்போராட்டம் இந்தியாவின் - பல்வேறு மாநிலங்களின் அரசியல் திசையை விவசாயிகள் பக்கம் திருப்பியதில் பெறும் வெற்றியைக் கண்டது. மானிபெஸ்டோக்களில் பிரத்யேக வாக்குறுதிகள் வந்தன. அப்போராட்டத்திற்கு உலக கவனமும் கூடுதலாகவே கிடைத்தது. வெளிநாடுவாழ் சீக்கியர் தங்களின் இனப்போராட்டமாகவே அதைப் புரிந்து அனைத்துவகை உதவிகளையும் செய்தனர். விவசாயிகளின் போராட்டமாகவும் சீக்கியர் எழுச்சியாகவும் அது இரண்டறக் கலந்திருந்தது.

இப்போராட்டம் பஞ்சாப் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? இல்லை எனச் சொல்லமுடியாது. முழுமையாக தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லமுடியவில்லை. பிஜேபி நிராகரிப்பு என்ற வகையில் அது முழுமையான தாக்கத்தைக்கொண்டுள்ளது. அகாலி கட்சி தான் கூட்டணியிலிருந்து வந்தபோதிலும்- மந்திரி பதவியை ராஜினாமா செய்த போதிலும் அதனால் அறுவடை செய்யமுடியவில்லை.  மத்திய காங்கிரஸ் தலைமை விவசாய போராட்டங்களுக்கு ஆதரவாக பேசிய போதும் தலித் முதல்வர்- சமூக நீதி என்று பேசியும் அதனால் இருந்த ஆட்சியை தக்கவைக்க முடியாமல் போனது

டில்லி மாடல் எனச் சொல்லி பஞ்சாப் மாடல் பேசி கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாப் அரசியலில் மெதுவாக நுழைந்த ஆம் ஆத்மி கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் அது போராட்டத்தை நடத்திய கட்சியல்ல- இயக்கமல்ல. பஞ்சாபியர்கள் அக்கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றியுள்ளனர். மேற்கூறிய அம்சங்களில் விவசாயிகள் போராட்டத்தின் தாக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தேர்தல் காலத்தில் கட்டுரைகள் எழுதிய பலர் (நியூஸ்கிளிக்கில் உட்பட) விவசாயிகள் போராட்டம் தேர்தலில் மய்ய பிரச்னையாக அரசியல் கட்சிகளால் எழுப்பப்படாதது குறித்து எழுதி வந்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தை  பலம் வாய்ந்த 32 அமைப்புகளின் கூட்டமைப்பான எஸ்கேஎம் என்கிற சம்யுக்த கிசான் மோர்ச்சா நடத்தியதை அனைவரும் அறிவோம். அதில் இடம்பெற்ற 22 அமைப்புகள் (Sayunkt Samaj Morcha) SSM சம்யுக்த சமாஜ் மோர்ச்சா என்கிற அரசியல் கட்சியை 2021 டிசம்பரில்  துவங்கினர். அதன் முதல்வர் முகமாக விவசாயிகள் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த பல்பீர்சிங் ரஜேவால் நிறுத்தப்பட்டார். 117 தொகுதிகளிலும் அக்கட்சி தன் வேட்பாளர்களை நிறுத்தியது. ரஜேவால் உட்பட பலர் டெபாசிட் இழக்கும் அளவிற்கான தோல்வியை சந்தித்துள்ளனர்.



மூன்று மாதங்களுக்கு முன்பாக உலகின் முன்னர்- இந்தியாவின் முன் பெரும் வீரர்களாக திரள் அமைப்பின் மூலம் நீண்ட நிறுத்தாத போராட்டத்தை களத்தில் நின்று 700 விவசாயிகளை பலிகொடுத்து பல தியாகங்களைச் செய்த இவர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் போயுள்ளது. 60 சதம்வரை இன்றும் கிராமப்புற வாக்காளர்களைக்கொண்ட விவசாயத்தை தங்கள் இனப் பெருமையுடன் இணைத்துப் பார்க்கும்  சீக்கியர்கள் - போராட்டக்காலத்தில் முழுமையாக இந்த அமைப்புகளுடன் நின்றவர்கள்- தேர்தல் என வந்தவுடன் வேறு நிலையை எடுத்துள்ளதைக் காண்கிறோம்.

உபி தேர்தலில் விவசாயிகள் போராட்டம் நடந்த பகுதியில் லக்கிம்பூரில் பிஜேபி வெற்றி குறித்து விவாதம் நடந்த  அளவு சம்யுக்த சமாஜ் மோர்ச்சா விவசாயிகளின் அரசியல் கட்சி தோல்வி குறித்து விவாதங்கள் நடைபெறாமல் போயுள்ளது. வர்க்க ஸ்தாபனங்கள் உள் விவாதங்களில் இதை கட்டமைத்து பேசிக்கொள்வார்களா எனத் தெரியவில்லை. பேசிக்கொண்டோம்- பாடமிது என ஏதாவது வெளித்தெரியும்படி வந்தால் நல்லது. மோர்ச்சா ஆரம்பிக்கும்போது சிலர் வேண்டாம் என தடுக்கவும் செய்தனர் என்பதையும் சேர்த்து பார்க்கவேண்டியுள்ளது. கட்சி ஆரம்பிக்காவிடில் தான் கடுமையான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக நேர்ந்திருக்கும்- என் ஆர் அய் கெரோ எனக்கூட மிரட்டல் விடுத்தனர் என ரஜேவால் பேட்டி ஒன்றில் பதிவிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி 91 , காங்கிரஸ் 18 , அகாலி 3, பிஜேபி 2, பகுஜன் 1, சுயேட்சை 1 என வெற்றியை பங்கிட்டுக்கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி 42 சத வாக்குகளையும், காங்கிரஸ் 23 சதம், அகாலி 18 சதம், பகுஜன் 1.77, பிஜேபி 6.6 % பெற்றனர். சிபி அய் 0.05 சதம், சிபி எம் 0.06 எம் எல் 0.03 பெற்றன. இதில் நோடா 0.7 என்பது சில கட்சிகளைவிட கூடுதலாக இருப்பதைக் காணலாம். சிபிஅய், சிபிஎம் போராட்டக் களத்தில் முழுமையாக இருந்தனர் என்பதை நாடறியும். பஞ்சாபியரும் அறிவர்.

மோர்ச்சாவின் தலைவரான பல்பீர்சிங் ரஜேவால் வருகிற ஆகஸ்டில் 80 வயதை தொடப்போகிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் அவர் தன் வாழ்க்கையை டெலிகிராபிஸ்ட்டாக P&Tல் துவங்கி பின்னர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய இயக்கங்களில் செயலாற்றி வருபவர் ரஜேவால்.

சம்யுக்த மோர்ச்சா தோல்வியால் விவசாயிகளின் கூட்டு இயக்கம் பாதிக்கப்படாமல் தனது கோரிக்கைகளில் பயணிக்கவேண்டிய சவால் வந்துள்ளது.

17-3-2022

No comments:

Post a Comment