Skip to main content

கம்யூனிச இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள்

 

புதுவரவு                       கம்யூனிச இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள்

இந்திய கம்யூனிச இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள் நூல் மார்ச் இரண்டாவது வாரத்தில் எனக்கு வந்து சேர்ந்தது.  ஆசிரியர் கோவை வழக்கறிஞர், மார்க்சிய ஆய்வாளர் தோழர் கே. சுப்ரமணியன்  (கே எஸ்) அவர்கள்.  மார்க்சிய தமிழ் கிடங்கிற்கு அவ்வப்போது நூல்களை தந்துகொண்டிருப்பவர். AITUC, ISCUF,  கலைஇலக்கிய பெருமன்றம் என தனது வெகுஜன பணிகளை வழக்கறிஞர் தொழிலுடன் கவனத்துடனும் ஆளுமையுடனும் செய்து வரக்கூடிய தோழர்.

அவரின் அடுத்த அரும்படைப்பாக மேற்கூறிய புதிய புத்தகம் வெளிவந்துள்ளது. முதுபெருந்தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு (RNK) சென்னையில் வெளியிட நூலிற்கான முன்னுரையை பழங்குடி மக்கள் இயக்க தோழர் வி பி குணசேகரன் எழுதியிருக்கிறார்.



தோழர் குணசேகரன் பெருமிதத்துடன் தன் முன்னுரையை இவ்வாறு முடித்துள்ளார்

“ இந்த புத்தகத்தில் முதல் மூன்று பொதுச்செயலர்களைப் பற்றி படிக்கும்போது நாம் எவ்வளவு புகழ்மிக்க பரம்பரையின் வாரிசுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் இருக்கிறோம் என்று தலைநிமிர்ந்து பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்”

 250 பக்கங்கள் கொண்ட இந்நூலை வாசிக்கும் எவராலும் மேற்கூறிய பெருமிதத்தை உணரமுடியும். அதை உணர்த்தும் வகையில் கடுமையான உழைப்பை நல்கி தோழர் கே எஸ் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்நூல் தோழர்கள் காட்டே, அதிகாரி, பி சி ஜோஷி என்கிற முதல் மூன்று பொதுச்செயலர்களின் மகத்தான  இயக்க கட்டுமான பங்களிப்பை விவரிக்கிறது.

பொதுவாக கம்யூனிச இயக்கத்தில் இரவு பகலாக உழைத்தவர்களின் வாழ்க்கை சித்திரம் முழுமையாக கிடைக்காது. அது குறித்த பதிவுகள் பெரிதாக அங்கு கருதப்படாத காலம் ஒன்று இருந்தது. நூற்றாண்டு பாரம்பரியத்தை தொட்டு நிற்கும் இயக்கத்தின் ஆரம்ப முன்னோடிகள் அவர்களது தியாக வாழ்க்கை- அவர்களின் சிந்தனா சக்தி- அவர்கள் சந்தித்த ஏற்படுத்திக்கொண்ட முரண்கள் என ஏதும் விரிவான பதிவாக இராது. இயக்க முடிவுகள், தீர்மானங்கள், நடந்த போராட்டங்கள்- அதில் பெற்ற வதைகள் என அவை பொதுவாக முடிந்துவிடும். எல்லாமே இயக்கம் சார்ந்த பதிவிடலாகவே இருக்கும். அங்கு தனிமனிதர்களாக வந்தவர்கள் இயக்க மனிதர்களாக- தலைமைக்குழுவிற்கு பயணித்த கதைகள் குறைவாகவே எழுதப்படும் நிலையில் தோழர் கே.எஸ் அவர்களின் இந்த முயற்சி நல் தொடக்கமாக அமையும் என்றே தோன்றுகிறது.

கம்யூனிச இயக்கம் குறித்த விரிவான பாரபட்சமற்ற ஆய்வுலகிற்கு இந்த மாதிரியான புத்தகங்கள் பெரிதும் உதவும். மார்க்ஸ்- எங்கெல்ஸ்- லெனின் – டிராட்ஸ்கி- ஸ்டாலின் – மாவோ- ஹோசிமின் – காஸ்ட்ரோ- செகுவாரா என ஏராள புத்தகங்கள் இன்று ஆய்வுலகில் கொட்டிக்கிடக்கின்றன.  ரோசா லக்சம்பர்க், கிராம்சி என அவை விரிகின்றன. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் டாங்கே, இ எம் எஸ், ஜோஷி, ரணதிவே, அஜாய்கோஷ், ஜோதிபாசு, அச்சுதமேனன், கே. தாமோதரன், அதிகாரி, காட்டே, சுந்தரைய்யா, ராஜேஸ்வர ராவ், புபேஷ், பவானி சென், ஏ கே கோபாலன் , மொகித்சென், சாரு, கனுசன்யால், நாகிரெட்டி என தேடிப்போனால் அவர்கள் வாழ்வும் பணியும் பற்றிய விரிவான பதிவுகள் மிக அபூர்வமாகவே கிடைப்பதைப் பார்க்கலாம்.

இந்தக் குறையை போக்கும் திசையை கே.எஸ்  அவர்கள் உருவாக்கியுள்ளார் எனலாம். தமிழ்நாட்டில் கூட சிங்காரவேலருக்கும், ஜீவாவிற்கும் உருவாக்கப்பட்ட ஆய்வடங்கல் போல சில தொகுதிகள் கூட மேற்கூறிய பலருக்கும் இல்லாமை பெருங்குறையான ஒன்றாகவே படுகிறது. வருங்கால இளைய தலைமுறை இதைக் கவனத்தில் எடுத்து நேர் செய்யலாம்.

இந்த புத்தகம் நான்கு தூண்களில் நகர்கிறது எனலாம். மூன்று ஆளுமைகளின் அரசியல் வரலாறு (political bio sketch), விடுதலை இயக்க நகர்வில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கான ஆரம்ப கட்டுமானங்கள் (  Building communist political space in the freedom movement and beyond),  இந்த ஆளுமைகள் செய்த பணிகளை தியாக வாழ்வைப் பற்றி தொடர்ந்து வந்த பொதுச்செயலர்களும்  மற்ற தலைவர்களும் மதிப்பிடல் (  Assessing the great sacrifices ),  இறுதியாக இந்த மூன்று தலைவர்களின் சிறந்த சில எழுத்தாக்கங்கள் (  some Best Writings).

 நூல் மதிப்புரையின் விரிவஞ்சி நூலுக்குள் காணப்படும் பல தெறிப்புகளை, தோழர் தன் ஆய்வினூடாக வந்தடைந்த புள்ளிகள் பலவற்றை அடுக்கமுடியவில்லை. மீரத் சதி வழக்கு சிறந்த வகையில் ஆதார அடிப்படையில் எடுத்துரைக்கபட்டுள்ளது. காட்டேயும், அதிகாரியும், ஜோஷியும் வெவ்வேறு  பின்னணியில் பிறந்து வளர்ந்து மார்க்சியத்தின்பால், சோவியத் கட்டுமானத்தின்பாற் ஈர்க்கப்பட்டு இந்திய விடுதலை- இந்தியாவில் சோசலிசம் எனும் திசைக்கான போராட்டத்தில் எவ்வாறு சக தோழர்களுடன் ஒன்றாகவும் சில நேரங்களில் முரண்பட்டும் பயணித்தார்கள் என்கிற அருமையான பிரதியை மிகைப்படுத்தல் ஏதுமில்லாது தோழர் கே எஸ் தந்துள்ளார். வெறும் ஆவணம் என்றாக்காமல் உயிர்ப்புள்ள சிந்தனாவாதிகளின் களப்போராளிகளின் உரையாடலாக நூலாக்கத்தை அமைத்துள்ளது பாராட்டிற்குரிய ஒன்று.

தோழர் கே எஸ் முன்னுரையை இப்படித்தான் முடித்துள்ளார்.

”இந்திய பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்துள்ள இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள அரசியல் பாதையில் உற்சாகத்துடன் பயணம் செய்ய இந்தப் புத்தகம் ஓரளவுக்குத் தூண்டுமானால், அதுவே எனது உழைப்பிற்கு கிடைத்த பாராட்டு என்பதுடன், நாம் நமது மூத்த பரம்பரைக்குச் செய்யும் நன்றியுமாகும். ”

ஆசிரியர் உழைப்பால் வெளிவரும் ஒவ்வொரு புத்தகமும் தனக்கான வாசர்களுக்காக திறந்தேயிருக்கிறது. தோழர் கே எஸ் விழைவு நினைவாகட்டும். நல்வாழ்த்துகள்!

 எதிர் வெளியீடு  ரூ 275    தொலைபேசி  9942511302

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு