பாவேந்தம் மடல் இலக்கியம்
பாவேந்தர் மடல் இலக்கியம் எனும் தொகுப்பை காணநேர்ந்தது. இளங்கணி பதிப்பகத்தார் பாவேந்தம் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகயிருக்கிறது.
பாவேந்தம் மடல் இலக்கியம் என்னும் இத்தொகுப்பில் 89 கடிதங்கள் உள்ளன. இவை 1933 முதல் 1964வரை உள்ள காலங்களில் பாவேந்தரால் எழுதப்பட்டவை. நண்பர்கள், தலைவர்கள், மாணவர்கள், உறவினர் எனும் நால் வகையினர்க்கு எழுதப்பட்ட மடல்கள் இவை. அவர் கையெழுத்தை அறியவைக்கும் முகத்தான் 4 கடிதங்களை அப்படியே நகலெடுத்து தந்துள்ளனர். ஆரம்பத்தில் கனக சுப்புரத்தினம் பின்னர் பாரதிதாஸன், பாரதிதாசன் என ஒப்பமிட்டுள்ளார். பா எனக் கூட ஒப்பம் இருக்கிறது.
கடிதங்களில் செளபாக்கியவதி, ஷேமம், நமஸ்காரம் போன்ற சொற்களையும் பிளே, பப்ளிசிட்டி, லீவு , டிக்கட் போன்ற ஆங்கில சொற்களை அப்படியேயும் பயன்படுத்தியிருக்கிறார். தனது பிறந்த நாள் குழப்பத்தை தீர்க்கும் வகையில் கர ஆண்டு சித்திரைத் திங்கள் 17 ஆம் நாள் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் என நினைவு படுத்தியுள்ளார்.
பாவேந்தர் வ. ரா அவர்களுக்கு எழுதிய இரு கடிதங்களும் சுவையானவை. முதல் கடிதம் 11-11-1933ல் எழுதப்பட்டுள்ளது. ”தோழர் வ.ரா அவர்கட்கு நமஸ்காரம் என விளித்து நான், மனைவி, 4 பிள்ளை 50 ரூபாய் சம்பளம் பழைய குள்ள வேலை ஆக ஷேமந்தான். ஆதி முதல் பெரிய மேடையில் ஆட்டம். சம்ஸாரத்தில் மாட்டிக்கொண்டதுண்டா தாங்கள்” என எழுதிச் செல்கிறார். இக்கடிதம் கனக. சுப்புரத்தினம் 12, செங்குந்தர் தென்னண்டை வீதி, புதுச்சேரி விலாசத்திலிருந்து போயுள்ளது.
அடுத்தக் கடிதம் ஸ்ரீ வ.ரா அவர்கட்கு நமஸ்காரம் என துவங்குகிறது. ஜனவரி 15, 1938ல் எழுதப்பட்டுள்ளது. இதில் தோழர் என விளித்தல் இல்லை. ராமாநுஜர் கம்பெனி குறித்த விசனமாக கடிதம் செல்கிறது. கோபம் வெளிப்படுகிறது. ”நான் சென்னையில் உங்களை நம்பி கால்வைத்த தேதியிலிருந்து கடைசிவரை எங்குச் சாப்பிடுகிறாய்- வசதி எப்படி என்று நீங்கள் விசாரித்ததே கிடையாது.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தர்மங்களில் சில தங்களிடமிருந்து நீங்கி வருவதை, நான் கண்டு வருந்துகிறேன்.”
வ ரா கொடுக்கவேண்டிய பணத்தை வாங்கித்தான் அட்டிகை அடகு ரூ 75, மவுண்ட்ரோட் மார்வாரியிடம் காப்பு அடகு ரூ25யை மீட்கவேண்டும் என குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
ஜனவரி 1ல் ரூ 40- 20 ஆம் தேதி 100 தருவதாக வ ரா சொன்னதை நம்பியதை பெருங்குற்றம் எனச் சொல்லி அதனால் இம்சைகள் அவமானங்கள் நேர்ந்தது எனக் குறிப்பிடுகிறார்.
”… உங்கள் பெரிய பீடம் என் நிலையை நான் இரண்டு வார்த்தையில் சொல்லிக்காட்டுவதைக் கூடக் கேட்கக் காது கொடுப்பதில்லை. ஆனால் உங்களுடைய இந்தக் கொடூரமான செய்கைகள் என்னிடமுள்ள எனது சினேக தர்மத்தை ஓர் அணுக்கூட மாற்றிவிட மாட்டா.. பணம் தயாரித்து வைக்கவும். நீங்கள் தவறினால் எனக்குக் கஷ்டம்” என அக்கடிதத்தை பாவேந்தர் முடித்துள்ளார்.
இக்கடிதம் பாரதிதாஸன், 28 அம்பலதாடு, ஐயர்மடம் வீதி, புதுச்சேரி என்கிற விலாசத்திலிருந்து சென்றுள்ளது.
செளபாக்கியவதி பழநி அம்மாளுக்கு, ஆசிர்வாதம் செய்து எழுதும் சேதியாவது என தன் துணைவியாருக்கு பெங்களூரிலிருந்து 3-4-1936ல் கடிதம் எழுதியுள்ளார்.
” இன்னும் நாலு நாளில் , வந்த காரியம் முடிந்துவிடும்..பத்திரமாக இருங்கள். சிப்பாயிடம் ரூ 10 கொடுத்தனுப்பினேன். வந்து சேர்ந்ததா? உன் தகப்பனார் வந்து விட்டாரா? திரேக்தேர் சம்பளம் கொடுத்தாரா? தெரிவிக்கவும்…. நான் பெங்களூரில் இருப்பதை யாரிடமும் சொல்லவேண்டாம்” என எழுதி தங்கியிருக்கும் விலாசத்தை தந்துள்ளார். பெங்களூர் அல்சூர் பஜார் ரோடில் யாசின் என்பவர் மே/பாவில் அவர் தங்கியிருந்துள்ளார்.
குருசாமி ( குஞ்சிதம்) அவர்களை அத்தான் என அழைப்பது பாரதிதாசன் பழக்கம். அப்படி விளித்து எழுதிய கடிதம் 24-5-1939 தேதியிட்ட ஒன்று. அதில் பெரியார் விடுதலைக்கு எனது மகிழ்ச்சி என்பதை தெரிவித்து புத்தகங்களை கொடுத்து அனுப்ப வேண்டியுள்ளார். இதிலும் பாரதிதாஸன் என ஒப்பமிட்டுள்ளார்.
திரைப்பாடல் செளமியன் என்கிற படத்திற்கு எழுதுவது குறித்து ’தோழர் நடேச சுவாமிகளுக்கு’ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ’படம் அரிசிப்பானைக்கு அடிப்பானையிலா’ என வினவி விட்டு ’பிச்சைக்காரன் பாட்டு கம்பெனி கேட்கவேண்டுமே தவிர ஆக்டர்கள் கேட்டதற்கு எழுதுவது பிழையல்லவா’ எனவும் கேட்டுள்ளார். டைலாக் இருந்தால் தெரியவேண்டும் எனவும் சொல்கிறார். இக்கடிதம் 23-8-1939ல் எழுதப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் பாரதி எனப்போட்டு பிராக்கட்டில் தாசன் என ஆங்கிலத்தில் போட்டு 18-8-1942ல் சங்கீத டைரக்டர் தோழர் ஞானமணியை விளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
16-1-1943ல் கோவிந்தன் அவர்கட்கு என எழுதியுள்ள கடிதத்தில் ’குடியானவன்’ வந்தது. ”ரஷ்யாவையும், அங்குள்ள குடியானவர்களின் நிலையையும் கேட்ட இங்குள்ள குடியானவன் நிலை இப்படித்தான் இருக்கும் என்று கருதுகிறேன்... அறம் என்பது தற்காலிகம் முதலிய தார்க்கிகத்துக்கு உட்பட்டதன்று- ஒரு நன்மையை எதிர்பார்த்ததும் அன்று” என அற்புத தெறிப்பொன்றை அதில் தந்துள்ளார். 1943 கடிதங்களிலேயே பாரதிதாசன் எனப் போடத்துவங்கிவிடுகிறார். ’ஸ’ எனப் போடுவதில்லை.
பாவேந்தர்
பெரியார் அவர்களுக்கு 26-6-1944ல் அஞ்சல் ஒன்றை
எழுதியுள்ளார். அதில் எழுதியிருப்பதாவது
“ கடந்த 27-5-1944ல் திருவாரூர் சுயமரியாதை சங்க இரண்டாவது ஆண்டு விழாவில் நான் தலைமை வகித்தேன். அந்த நிகழ்ச்சியைக் குடிஅரசு போட மறுத்தது. அன்றிரவு திருவாரூரிலேயே பேசினேன். அதன் நிலையும் அவ்வாறே. சேலத்தில் 19-6-1944ல் நடைபெற்ற திராவிடர் மாநாட்டில் பாவலர் பாலசுந்தரம், பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு பற்றிச் சுமார் இரண்டுமணிநேரம் பேசியுள்ளார். அதை மட்டும் மறைத்துப் பாவலர் பெரியார் வாழ்க்கையைப்பற்றிப் பேசியதாகத் திரித்து வெளியிட்டுள்ளது.
24-6-44ல் வெளிவந்த குடிஅரசில் திருச்சி மாவட்ட மாநாட்டிற்குப் பெரியார் தலைமை வகிப்பார் என்று இருக்கிறது. ஆனால் 17-6-1944ல் பாரதிதாசன் தலைமை வகிப்பார் என்று வெளியிட்டிருந்தது. இதன் மூலம் குடிஅரசு என்னை அவமானப்படுத்துகின்றது. இரண்டு தடவை திருச்சி வேதாசலம் இரண்டு கடிதம் எழுதித் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டதாலும் அந்த முடிவு தங்கட்கும் சம்மதம் என்று எழுதியதாலும்தான் ஒப்புக்கொண்டேன். மற்றபடி நானே ஓரிடம் சென்று பேசவேண்டும் என்றோ தலைமை வகிக்க வேண்டும் என்றோ எப்போதும் நினைப்பது கிடையாது..
நான் தங்கள் பத்திரிகைக்கு எழுதிய பாட்டு ஒன்றைப் புதுவையில் ஒரு கெட்ட நடத்தை உள்ளவரிடம் படித்துக்காட்டி, நான் இந்தப் பாட்டை விடுதலையில் போடாமல் செய்தேன் என்றான் உங்கள் ஆதரவு அயோக்கியன் ஒருவன்....
சுயமரியாதை இயக்கத்தில் என்பேர் முன்னுக்கு வருவதில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதை மீறி நடக்க நான் எண்ணவே மாட்டேன். ஏனென்றால் , நீங்கள் பல அயோக்கியர்களை முன்னே தள்ளி, அவர்களாலேயே இப்போது எதிர்க்கப்பட்டு வருகிறீர்கள் உள்ளுக்குள்ளே.
என் குறைகட்குத் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்பால் கெட்ட எண்ணமுடிய கூட்டத்தின் நண்பர்கள் உங்கள் ஆபீஸில் இருப்பதும் எனக்குத் தெரியும்.” என அக்கடிதத்தை வருத்தம் தோய பாவேந்தர் முடித்துள்ளார்.
தோழர் சி.பா ஆதித்தன் அவர்கட்கு என 18-8-1944ல் எழுதியுள்ளார். அதில் ”தமிழச்சியின் கத்தி திருத்தமாகப் பெயர்த்தெழுதுவித்துத் தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். ஓய்விருக்குமோ என்னமோ தங்கட்கு... நன்று என்று தோன்றினால், கொள்கை பிடித்தால், பதில் எழுத வேண்டுகிறேன். இல்லையானால் திருப்பி அனுப்பிவிடவேண்டுகிறேன். அனுப்பும் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன். நிற்க” எனக் கடிதம் செல்கிறது.
அள. லட்சுமணனுக்கு எழுதிய கடிதம் 4-10-1944 தேதியிட்ட ஒன்று. அதில் ”சாதி மதம் சடங்குகள் கடவுள் நம்பிக்கை, சாதிகள் இல்லை. மதம் மக்கட்கு அபின். கடவுள் நம்பிக்கை, தன்னம்பிக்கை எதிர்ப்பு. சாதிப் பற்று, சமயப் பற்று, கடவுள் நம்பிக்கை இவை ஒழிதல் வேண்டும். ஒழியாதவரை, மக்கள் முன்னேற்றமில்லை. நீ புரட்சியைத் தூண்டு- புரட்சி செய்” என எழுதியுள்ளார்.
1-4-1946ல் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) எனப்போட்டுக்கொண்டு மூவருக்கு அதாவது தோழர் கருப்பண்ணக் கவுண்டர், கிருஷ்ணராஜ் ரெட்டியார், செல்லப்ப ரெட்டியார் ஆகியவர்களுக்கு எழுதியுள்ளார். ”மூவரில் ஒருவர் போய் தங்கள் வசமுள்ள நிதி முழுவதையும் CNA அவர்களிடம் ஒப்படைத்துவிடக்கோருகிறேன். மற்றும் நம் தோழர் முதலியார்களுக்கு என் வாழ்த்து” என எழுதியுள்ளார். அண்ணாவிடம் நிதியை கொடுக்கச் சொல்வதைப் பார்க்கிறோம்.
ம
பொ சிக்கு எழுதிய இரு
கடிதங்கள் இத்தொகுப்பில் காணப்படுகின்றன. காந்தி நாள் விழாவில்
பாண்டிச்சேரி வந்து உரையாற்ற ம
பொ சியை பாவேந்தர் இக்கடிதங்களில்
வேண்டியுள்ளதைக் காண்கிறோம். இக்கடிதங்கள் 16-9-1946 மற்றும், 21-9-1946ல் எழுதப்பட்டுள்ளன. புதுவை
பாரத சர்க்கா சங்கம் சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஜனவரி 2, 1948ல் அருச்சுனன் வாழ்க எனத்துவங்கும் கடிதத்தில் ”சென்னையிலிருந்த அச்சகத்தை என் இல்லத்திலேயே போட்டுக்கொண்டதில், பிறர் தங்க வசதி இல்லாது போயிற்று. என் துணைவியார்,பிறர்க்கும் உணவு நேர்செய்ய இயலாதவர்” எனத் தெரிவித்துள்ளார்.
தோழர் தனுஷ்கோடிராஜாவிற்கு 31-5-1950ல் அவரது மணிவிழா பற்றிய செய்தியை குறிப்பிட்டுவிட்டு பசுமலை ச சோமசுந்தர பாரதியார் இல்லத்தில் முத்தமிழ்ப் பெருமன்றத் திட்ட அமைப்புக்குழுவினர் கூடுவதாக தெரிவித்துள்ளார். ”அதற்கு நானும், கா அப்பாத்துரை, கோவை செங்கோட்டையார், ஐயாமுத்து, எஸ் ஆர் சுப்பிரமணியம், எட்டயபுரம் ஆர். அமிர்தசாமி பெத்தாம்பாளையம் பழநிசாமி ஆகியோரும் வரக்கூடும். 26 அல்லது 27ல் திருக்குறள் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யுங்கள்” என எழுதியுள்ளார்.
ஒரு
கடிதம் பாதியாக தரப்பட்டுள்ளது 1950 ஆகஸ்ட்டில்
எழுதப்பட்டிருக்கலாம் என தொகுத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் அண்ணாதுரை என செய்தி வருகிறது.
“ நீங்களும் முருகும் கோயில்பட்டியில் அண்ணாத்துரையை மணிவிழா விஷயமாக பார்க்கப்
போவதாகக் கேள்விப்படுகிறேன். பயன்படாதென்று எண்ணுகிறேன்...ஓர் ஐயாயிரம் ரூபாயையாவது
தண்டிக்கொண்டபின் அண்ணாத்துரை நான் நான் என்று
ஓடிவருவார் என்பது திண்ணம். அண்ணாத்துரை
எனக்காக முன்வருபவர்களைத் தடுக்கமுடியாது. அவரைக்கொண்டே தொடங்குவதென்று நீங்கள் நினைப்பதில் பெருந்தோல்வி
ஏற்படும். இப்போதே அவர் இப்படிப்பட்டவர்
என்பதை நாடு அறிந்து கொண்டது.
மாலைமணியைக் கொன்றது தன் திராவிட
நாட்டைச் சொந்தப் பொறுப்பில் தினசரியாக
நடத்திப் பணம் சம்பாதிப்பதற்குத்தான்.. கழகத்திற்குக் கட்டிடம்
வாங்குவதாகச் கூறிச் சொந்தப் பேருக்கு
ஆக்கிக்கொள்ள முயன்றதும் பலிக்கவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கிறோம்.
31-1-1951ல்
தோழர் தனுஷ்கோடி ராஜாவிற்கு கடுமையான தன் கோபத்தை வெளிப்படுத்தி பாவேந்தர் கடிதம் ஒன்றை
எழுதியிருக்கிறார். அவரது மணிவிழாவிற்கு முதல்வரை வரவழைக்க தவறியதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“ என் மானத்தைக் காக்க மணிவிழாத் தொடங்கினீர்கள்.இடையில்
இந்த மணிவிழாவைக்கொண்டே என்னை அவமானப் படுத்தி விட்டீர்கள். என் விருப்பத்திற்கு விரோதமாக
திமுககாரர்களை நெருங்கினீர்கள். அவர்கள் என்னைக் குறைவாகப் பேசியதைக்கேட்டு வந்து என்னிடம்
கூறி என் மனத்தைப் புண்படுத்தினீர்கள். முதல்வரை நம்பச்சொன்னீர்கள். நம்பி அவமானத்தை
அடைந்துவிட்டோம். நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துகொண்டு வீட்டில் இருக்கிறீர்கள்.
நீங்களும் உங்கள் துணைவியாரும் நேரே முதல்வரிடம் சென்று ஏனையா மறுத்தீர்கள் என்று கேட்கவேண்டாமா?
என் மணிவிழாவில் தலைமை வகிப்பதால் முதல்வருக்குத்
தலைபோய்விடுமா? அவன் இப்படி நினைப்பான் இவன் இப்படி நினைப்பான் என்று எண்ணி, அக்ரமத்தைச்
செய்வாருண்டா? மந்திரி ராஜனைத் தண்டிக்க வேண்டியதிருக்க அவனைத் தட்டிக் கொடுத்துத்தான்
பதவி வகிக்க வேண்டுமா? அதைவிடக் குறைவான காரியமா என் மணிவிழாவுக்குத் தலைமை வகிப்பது?
உடனே பதில் எழுதவும்....” இந்தக் கடிதத்தில் நெருப்பு பொறிகள் விழுவதைக்
காண்கிறோம்.
11-10-1956
கடிதம் முக்கிய செய்தி ஒன்றை சொல்கிறது. சென்ற வாரம் என் தலைமையில் நடைபெற்ற குழித்தலைத்
தமிழ் ஆட்சிமொழி மாநாட்டில் திரு அ. சிவலிங்கம் தமிழ்த்தந்தி நிகழ்ச்சி நடத்திக் காட்டினார்...அவர்
வெளியிட்ட தமிழ்த்தந்தி நூலையும் படித்துப் பார்த்தேன். தமிழ்த் தந்தி கண்டுபிடிப்புக்கு
உரியவர் அ. சிவலிங்கம் ஒருவரே என பாவேந்தர் பாராட்டியுள்ளார். சிவலிங்கம்
அவர்கள் தபால் தந்தி தலைவர் தோழர் ஞானையா உட்பட
பலருடன் நெருக்கமானவராக இருந்தவர்.
ஈரோடு கவிஞர் தமிழன்பன் அவர்களுக்கு பாவேந்தர் கடிதம்
எழுதியுள்ளார். ”இராசீபுரம் வரும்போது ஈரோடு வர ஒப்புகின்றேன்.
அதன் பொருட்டு எனக்கு 50 ரூபாய் முன்னதாக அனுப்பிவைக்கக் கோருகின்றேன். புலவர் ந. இராமநாதனை
அங்கு நான் சந்திக்க நேர்ந்தால் மிக மகிழ்ச்சியடைவேன். ஈரோட்டில் என் சொற்பொழிவுக்கு
நீங்கள் தலைமை வகிக்க நான் ஒப்புவேன். பிறராயின் முன்னே எனக்குத் தெரிவிக்க.”
இக்கடிதம் தமிழன்பன் அவர்களுக்கு ந செகதீசன் என்ற அவர் பெயருக்கு 26-10-1963ல் எழுதப்பட்டுள்ளது.
1964ல்
கவிஞர் முருகுசுந்தரம், சேலம் அவர்களுக்கு தனது 75 ஆண்டு பிறந்தநாள் விழா குறித்து
கடிதம் எழுதியுள்ளார். நாராண துரைக்கண்ணர் ஏற்பாடு செய்ய முன்வந்ததை சொல்கிறார். முருகரத்தினம்
நாராண துரைக்கண்ணரிடம் கலந்து ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.
”நெடுஞ்செழியன் சிற்றரசு முதலியவர்களைப் மத்திய
கமிட்டியில் போடலாமல்லவா என்றார் முருக ரத்தினம். கடுமையாக மறுத்தேன். பிறகு வீரமணியைப்
போடலாமா என்றார். மறுத்தேன். எஸ். இராமநாதன்,
மணவாள ராமானுஜம், வி பி இராமன், அகிலன் முதலியவர்களைச் சொன்னேன். அவர் அவர்களை மறுத்தார்.
இன்று அதாவது பதினைந்து நாட்களுக்குப்பின் ஆர்ட் டைரக்டர் அம்மைஅப்பன் வாயிலாகச் சேதி
அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு யாரையாவது கொண்டு
விழாவை நடத்திக்கொள்ளச் சொல்லுங்கள் என்று- நான் இவர்களைக் கேட்டதுண்டா விழா நடத்தச்
சொல்லி?. இதை உங்களிடம் சொல்லிவைத்தேன்.” என்று தன் வருத்தத்தை பாவேந்தர் பதிவிட்டுள்ளதைக்
காண்கிறோம்.
மேலும் 15-4-1964ல் இது குறித்து கவிஞர் செகதீசன்
(தமிழன்பன்) அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்... “ இங்கு நாராண துரைக்கண்ணன் என் பிறந்த
நாளைக் கொண்டாடுவதாகக் கூறி கடைசியில் கைவிட்டார் என் எதிரிகளின் வசப்பட்டு...
என்
பிறந்த நாள் விழாவில் நான் எடுக்கமுயலும் பாரதி படத்திற்கு நன்கொடை கொடுப்பவர் தேவை.
இதை நீங்களே கோவைக்கு ஒருமுறை சென்று காரியத்தை உருவாக்கினால் நலமாயிருக்கும்..
இதுதான் பாரதிதாசன் அவர்கள் எழுதிய இறுதிக் கடிதமாக
கருதுகிறார்கள். ஏப்ரல் 21ல் அவர் மறைந்துவிட்டார் என்பதை அறிவோம்.
24-3-2022
No comments:
Post a Comment