Skip to main content

பெதிக் லாரன்சும் பெரியாரும்

 

                    பெதிக் லாரன்சும் பெரியாரும்

விடுதலைக்கு முன்பாக பெதிக் லாரன்ஸ் கமிட்டி எனும் தூதுக்குழு அதிகார மாற்றம் பற்றி கருத்தறியவும் தன் மொழிவுகளை வெளியிடவும் இந்தியா வந்தது. பெதிக்லாரன்ஸ்- கிரிப்ஸ்- அலெக்சாண்டர் என்கிற மூவரும் அதில் இடம் பெற்றனர். மூன்று மாதங்கள் அக்குழு இந்தியாவில் இருந்தது . இந்தியா வந்து இறங்கியவுடன் தங்கள் objects of cabinet Mission குறித்து அக்குழுவினர் பேசினர் .

அந்த தூதுக்குழு மார்ச் 23 1946 முதல் ஏப்ரல் 17 1946 வரை பல கட்சித்தலைவர்களை சந்தித்தது.. தூதுக்குழுவை சந்தித்து காங்கிரஸ், முஸ்லீம்லீக், சீக்கிய, இந்து மகாசபா பிரதிநிதிகள் தங்களது வாதங்களை வைத்து மெமோவைத் தந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் மெமொரண்டம் தரப்பட்டுள்ளது.



திராவிடர் கழகம் சார்பில் பெரியார் மற்றும் பிரதிநிதிகள் சந்தித்து கொடுத்தனரா- அக்குறிப்பின் நகல் என்ன என்பதை அறியத் தேடினேன். நகல் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. அது குறித்து குடிஅரசில் அவர் எழுதிய சில தலையங்கங்கங்கள் இருக்கின்றன. இந்தியன் ரிஜிஸ்டர் 1946 வால்யூம் 1லும் திராவிடர் கழகம்/ ஜஸ்டிஸ் சார்பில் ஏதும் காணப்படவில்லை. முன்னர் ஜஸ்டிஸ் கட்சித் தலைமையில் பெரியார் இருந்தபோது கிரிப்ஸ் தூதுக்குழுவை 1942ல் சந்தித்துள்ளார். அச்சந்திப்பும் அதிகாரபூர்வமாக அக்கட்சியினரால் ஆவணப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.

குடிஅரசு தொகுப்பு 1946ல் (திவிக-  DVK  கட்சி பதிப்பில்) பாராளுமன்ற தூதுக்கோஷ்டி என்கிற துணை தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. நாம் ஒரு கட்சி கூட்டம் இருக்கிறோம் என அதற்குத் தெரியுமா என்கிற வகையில் பெரியார் கேள்வி எழுப்பியதை (19-1-1946) பார்க்கமுடிகிறது. அதில் பயன் ஏதுமில்லை- அவர்கள் போடும் பிச்சை நமக்கு அவமானம் என பெரியார் அதில் எழுதியதுடன் ஜஸ்டிஸ் பார்ட்டி என்ற பெயரில் கம்பெனி ஒன்று (பி டி ராஜன் - சண்முகம் செட்டியார்) துரோகம் செய்வதை விமர்சித்தும் இருப்பதைக் காண்கிறோம்.

13-4-1946 தலையங்கம் தூதுக்குழு பற்றி பேசுகிறது. அது நீண்டதோர் தலையங்கம். தூதுக்குழு 20 நாட்களாக பேசிக்கொண்டிருப்பதை சொல்லிவிட்டு கீழ்கண்ட வரிகளை பெரியார் தருகிறார்.

திராவிட இந்தியா, முஸ்லீம் இந்தியா, ஆரிய இந்தியா என்று பிரித்துத்தான் தீரவேண்டும். இந்தப்படி பிரிக்காதவரை இந்தியாவின் சுதந்திர விஷயம் ஒரு  முடிவுக்கு வரப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. ”

பாகிஸ்தான் இனி தடுக்கமுடியாது என்ற சூழலில் எல்லைப்புற காந்தியை பாதுகாப்பிற்காக காந்தியும் காங்கிரசும் பயன்படுத்துவதை அவர் விமர்சிக்கிறார்.  ஒரு பைத்தியக்கார முஸ்லீமை எல்லைப்புற காந்தி என்று அழைத்து சங்கராச்சாரிக்கு மேற்பட்ட மரியாதை என அவரது விமர்சனம் சென்றது.

முஸ்லீம்களை மிலேச்சர் என்றும் திராவிடர்களை சூத்திரர் சண்டாளர் என்றும் இழிவு படுத்திய ஆர்யர்களுக்கு நாம் துணைபோக முடியாது என்பதை பெரியார் விளங்க சொல்லிவிட்டு இதையும் எழுதுகிறார்.

திராவிடர்கள் நிலை இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது.. வெள்ளையன் நிஜமாக போனாலும் சரி பொய்யாகவே போனாலும் சரி முஸ்லீம் ராஜ்யம் ஏற்பட்டாலும் சரி, பாக்கிஸ்தான் ஏற்பட்டு அதில் திராவிட நாடும் சேர்க்கப்பட்டுவிட்டாலும் சரி எப்படியாவது ஆரிய அட்டூழியம் திராவிட நாட்டை விட்டு முதலில் அகலவேண்டும்...

அகம்பாவம் ஆணவம் பிடித்த ஆரியத்தின் அட்டூழியத்தை அழிக்க திராவிடன் ஏதாவது செய்ய வேண்டியதும் என்ன ஆனாலும் சரி எப்படியாவது ஆரியம் ஒழிந்தால் போதும் என்று நினைத்து அதற்கேற்ற தொண்டாற்ற வேண்டியதுமே தன்மான திராவிடனின் கடமையாகும்.”

குடியரசு 20-4-1946ல் எழுதிய தலையங்கங்கத்தில் காங்கிரசுடன் பிரிட்டிஷார் அதிகாரத்தை ஒப்புவிக்க ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டார்கள் என்பதை தெரிவித்து கீழ்கண்ட வரிகளை எழுதுகிறார் பெரியார்.

உண்மையில் திராவிட நாடும் பாக்கிஸ்தானமும் இந்தியாவை விட்டு பிரிக்கப்பட்ட தனி நாடுகளாக ஏற்படாதவரை பிரிட்டிஷார் வெளியேறிவிட்டார்கள் என்பதோ வெளியேறத் தயாராய் இருக்கிறார்கள் என்பதோ வெறும் வேஷப் பேச்சாகுமே தவிர உண்மை பேச்சாக ஆகவே ஆகாது...

இந்த சந்தர்ப்பத்தில்தான் திராவிட மக்களும் முஸ்லீம் மக்களும் விழிப்புடன் இருந்து இந்த ஆரிய- ஆங்கில ஒப்பந்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதோடு எந்தக் காரியம் செய்தாவது அதை தடுத்தாக வேண்டியது திராவிட மக்கள் கடமையாகும்.”

அடுத்து ஒரு தலையங்கம் பார்லிமெண்டரி மந்திரிகள் திட்டம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. காந்தியை இந்து தலைவராகவும், ஜின்னாவை முஸ்லீம் தலைவராகவும் தூது கோஷ்டியார் கருதிவிட்டதை எழுதிவிட்டு பெரியார் சொல்கிறார்.

ஜின்னா சாயபு கேட்கும் மாகாணங்கள் முஸ்லீம் பெடரேஷனாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. மற்றவைகள் முஸ்லீம் அல்லாதவர் மாகாணங்களாக சேர்க்கப்பட்டிருக்கிறது. முஸ்லீம் அல்லாதார் மாகாணங்கள் தனியாக ஆனவுடன் திராவிடர் மாகாணம், மராட்டி மாகாணம் முதலாகிய மாகாண பெடரேஷன்கள் பிரிய வேண்டியதே-பிரிந்து தான் தீரும்...

மத்திய அரசாங்கம் என்றோ கன்பெடெரேஷன் என்றோ ஒன்று ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு சரியான காரணம் ஒருவரும் சொல்லவில்லை. இந்தியா துண்டாடப்படக்கூடாது என்பது எந்தவிதத்திலாவது முஸ்லீம்களை திராவிடர்களை ஆர்யர் பனியாக்கள் ஏமாற்ற வேண்டுமென்பதல்லாமல் வேறு அறிவுடைமையோ தேவையோ இத்திட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.  இத்தலையங்கம் 4-5-1946 தேதியிலானது.

திராவிட பெடரேஷன், பாக்கிஸ்தான் பெடரேஷன், மராத்தி பெடெரேஷன், ஆர்யர் பெடெரேஷன் என்றெல்லாம் பெரியார் பேசியிருப்பதைப் பார்க்கலாம்.  அப்படி ஏற்பட்டிருக்குமெனில் இந்த ஃபெடெரேஷன்களில் மத்திய அரசு என ஒன்று இருக்காதா? பிரிந்து போன பாக்கிஸ்தானில் மத்திய அரசு என ஏதுமில்லையா- அங்கு இந்தியா மாநிலங்களை விட கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றன.

அடுத்து வந்த தலையங்கம் மும்மூர்த்திகள் ஒப்பந்தம் முறிவு என்பதாக இருக்கிறது. வெள்ளையர் ஆரியர் முஸ்லீம்களை மும்மூர்த்திகள் என இதில் பெரியார் குறிப்பிடுகிறார். அவர்களின் குணங்களை சொல்கிறார். ”வெள்ளையர் முதிர்ந்த புத்திசாலிகள். ஆரியர் ஊரார் உழைப்பில் வாழும் பேராசை சூழ்ச்சிக்காரர்கள், முஸ்லீம்கள் ஒரே போக்கான முரட்டு பிடிவாதக்காரர்கள். இந்த மூவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது என்றால் அது சாதாரண காரியமல்ல என்பதையும் அவர் கவனப்படுத்துகிறார்.

மேலும் எழுதுகையில் வெள்ளையர் ஆர்யர் உள் உளவு ஒப்பந்த சூழ்ச்சி ஆட்சி மாறியே ஆகவேண்டும்..இதை வலியுறுத்த நாட்டில் கட்சி இல்லை. திராவிட கழகத்தவர்கள் இருக்கிறார்கள்- ஆனால் கட்டுப்பாடு வலிவு இல்லைஎன்பதை சுட்டிக்காட்டுகிறார் ...

மடத்தை விட்டுப் போகும் ஆண்டிக்கு நந்தவனத்தைப்பற்றிய கவலை இல்லாததுபோல் பிரிட்டிஷார் எனும் அய்ரோப்பிய ஆர்யர் நடந்துகொள்கின்றனர். திராவிடர்கள் வெள்ளையர் சம்பந்தமும் ஆரிய சூழ்ச்சி ஆதிக்கமும் இல்லாத இந்தியா - அது வேறு எப்படிப்பட்ட இந்தியாவானாலும் அதைக் காண வேண்டியது தங்கள் கடமை என்று நினைக்க வேண்டியவர்களாவார்கள். ஆதலால் மும்மூர்த்தி ஒப்பந்த மந்திரிசபை முறிவைப்பற்றியோ முறியாமை பற்றியோ நமக்குக் கவலை இல்லை என்றெழுதுகிறார் பெரியார். இது 11-5-1946 குடிஅரசில் போடப்பட்டுள்ளது.

அடுத்து தூதுக்குழு பற்றி எழுதியதில்முரட்டு பெண்டாட்டியும் சுருட்டுப்பாயும் என்கிற உதாரணத்தைச் சொல்லி விளக்குவார். காங்கிரசும் முஸ்லீம் லீகும் தூது கோஷ்டிக்கு முரட்டுப்பெண்டாட்டியும் சுருட்டைபாயுமாக இருந்து உருப்படியான விஷயம் நடைபெறாமல் போனதாக பெரியார் இதில் சொல்கிறார். இப்படி பெரிய விஷயங்களை எளிய உதாரணம் மூலம் சொல்வதில் பெரியார் நிகரற்றவர் .

தூதுகோஷ்டி தங்களிடம் பேசாததில் வருத்தமில்லை என்ற பெரியார்தூதுகோஷ்டியார் மாறுதல் கொள்கைக்காரர்களாகிய திராவிட கழகத்தாரையும் தாழ்த்தப்பட்ட வகுப்பாரையும் கூப்பிடாததால்- மரியாதை செய்யாததால் இவர்களுக்கு நட்டமோ மோசமோ அவமானமோ சிறிதும் ஏற்படவில்லை...லீக் தோல்வி பெற்றிருந்தால் இந்த இருவர் கொள்கையும் தோல்வி அடைந்தது என்பதுதான் அர்த்தமாகும்.” எனவும் எழுதுகிறார்.

 ஆகவே திராவிட கழகமும் செட்யூல் வகுப்பும் தூது கோஷ்டியார் காரியம் பற்றி சங்கடப்படாமல், ஏமாற்றம் அடைந்துவிட்டதாகக் கருதாமல், இன்றைய நிலையில் நட்டம் ஏற்பட்டதாகக் கருதாமல் ஆச்சாரியார்( ராஜாஜி) சொன்னபடி ஓரளவாவது நம் கொள்கைகாரர்களாகிய முஸ்லீம்களுடன் கூட இருந்து தோளோடு தோள் கொடுத்து நின்று வர்ணாச்சிரம காந்திய கோஷ்டி வெற்றிபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் கடமையாகும் என்பதை உணரவேண்டும்.” என அவர் எழுதுவதைப் பார்க்கலாம்.

 இக்கட்டுரையில் அரசியல் நிர்ணயசபைக்கு வென்றோர் தோற்றவர் பற்றி பேசிவிட்டு அம்பேத்கர் செய்யவேண்டியதைச் சொல்கிறார் பெரியார்.

 அம்பேத்கர்  தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு உண்மையான பிரதிநிதியாய் காப்பாளராய் இருப்பாரானால், துணிவும் வீரமும் உடையவராயிருப்பாரானால் இந்தியாவை ஆரிய பிரிட்டிஷ் சூழ்ச்சியிலிருந்தும் கொடுங்கோன்மை ஆட்சி முறையிலிருந்தும் மீட்க அவர் 1930ல் செய்துகொண்ட முடிவை அதாவது தீண்டப்படாதவர்களாய் கொடுமை செய்யப்பட்டிருக்கும் மக்களும் , தானும் இந்து மதத்தைவிட்டு முஸ்லீம் சமயத்தைத் தழுவுவது என்கின்ற காரியத்தை உடனே துவக்க வேண்டியவராவார். அதைத்தவிர பிரிட்டிஷ் ஆதிக்கம் சுரண்டல்- ஆரிய ஆதிக்கம் கொடுமை அட்டூழியம் அழிக்க வேறு மார்க்கம் இல்லை என்றே சொல்லுவோம்.” இந்த ஆலோசனை குடிஅரசு 27-7-1946 தலையங்கத்தில் காணப்படுகிறது.

 இந்த ஆலோசனையை அவர் தாழ்த்தப்பட்டவர் அல்லாத திராவிடர் 4 கோடியிடம் ஏன் அழுத்தமாக தெரிவிக்கவில்லை. அதற்கான முயற்சிகள் எதுவும் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

குடியரசு 27-7-1946ல் அம்பேத்கர் போராட்ட அழைப்பிற்கு ஆதரவு என பெரியார் தெரிவிக்கிறார். ”காங்கிரஸ் பிரிட்டிஷ் ஒப்பந்தம் எதிர்த்து பம்பாய் மாகாணத்தில் அம்பேத்கர் அழைத்த கிளர்ச்சியில் 500 பேர்களுக்கு மேல் சிறை சென்று இருக்கிறார்கள்.. இந்த மதராஸ் மாகாண ஷெட்யூல் வகுப்புத் தலைவர்கள் என்பவர்கள் நடத்தை எப்படி இருந்தாலும் பற்றுள்ள பொதுமக்கள் யாவரும் கிளர்ச்சியை ஆதரிக்கவேண்டும் என்பதாக விரும்புகிறோம் என குடிஅரசு அறிக்கை செல்கிறது.

3-8-1946 குடியரசில் முஸ்லீம் லீக் முடிவான நேரடி நடவடிக்கைப்பற்றி பெரியார் விளக்குகிறார். “காங்கிரசாரும் ஆங்கிலேயர்களும் சேர்த்து நடித்த கபட நாடகத்தின் விளைவது. லீக் முடிவை பெரிதும் பாராட்டுவதாக பெரியார் தெரிவித்தார்.  பெரியாரின் திராவிட நாடு திராவிடர்களுக்காக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை கேட்ட பின்னர்தான் ஜனாப் ஜின்னா அவர்கள் முஸ்லீம்களின் நலம் காப்பாற்றப்படுவதற்கு பாக்கிஸ்தான் தேவை என்ற பிரச்சனையை எழுப்பினார். ஆனால் திராவிடர்களிடையே ஒற்றுமை, ஊக்கம், மானம் இனவுணர்ச்சி முதலியன இல்லாத காரணத்தால் பெரியார் இராமசாமி அவர்களின் வேண்டுகோள் இன்னும் தக்க உருவாகவில்லை.”

திராவிடர் கழகத்தில் சுமார் 50 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தபோதிலும் அவர்களிடத்தில் ஓர் கட்டுப்பாடான உணர்ச்சி, இல்லையென்பதையும் தன் நலம் விடுத்து இயக்கதிற்காக வாழ்பவர் இன்னார்தான் என்று சொல்லப்படுவதற்கு ஒருவர் கூட இல்லை என்பதையும் மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். ” என அத்தலையங்கம் பேசுகிறது.

பெரியாரின் உரிமைக்கோரலை ஜனாப் ஜின்னாவோ முஸ்லீம் லீகோ ஏற்று பெரியாரைப் பார்த்துதான் தாங்கள் பாகிஸ்தான் கோரிக்கையை வைத்ததாக ஏதாவது சொல்லியிருக்கிறார்களா? அப்படி சொல்லியிருந்தால் அதை திக நண்பர்கள் பலமுறை வெளிப்படுத்தியிருக்கக்கூடும். அதேபோல் இயக்கத்திற்காக வாழ்பவர் இன்னார்தான் என ஒருவர் கூட இல்லை என்பது சொந்த தொண்டர்கள் அண்ணா உட்பட பலர் மீதான விமர்சனமாக ஏன் எவரும் எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரியவில்லை. இந்த அவநம்பிக்கையை ஏன் பெரியார் அவர்தம் தொண்டர்களிடம் வைத்திருந்தார். தனது தனிநாடு அடைய முடியாத தோல்வியை இப்படி இடம் மாற்றி அவர் சாட்டுதல் குறித்து ஏதாவது அங்கு பரிசீலனை நடந்திருக்கிறதா? கோரிக்கையை முன்வைத்த தலைவருக்கு அதன் தோல்விக்கான பொறுப்பேற்பு என ஏதும் இல்லையா? அடையமுடியாத ஒன்றை தொண்டர்களிடம் சொல்லி சொல்லி அதை அடையமுடியாமல் போனபின்னர் அவர்களுக்கு உணர்வில்லை - ஆகையால் அடையமுடியவில்லை என்று சொல்வது என்னவகை வாதம் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இந்தக் கேள்விகள் கேட்கப்படாத கூடாதவை என்கிற சூழல்தான் இன்று தமிழக ஜனநாயக வெளியில் பெரிதாக இருப்பதையும் காணமுடிகிறது.

சோசலிசம் குறித்து இந்தியாவில் பேசுபவர்களுக்கும் இக்கேள்வி பொருந்தாதா என மறுகேள்வி எழுப்பப்படலாம். பொருந்தும் என்பதே சரியான பதிலாக தோன்றுகிறது. ஆனால் அக்கட்சிகளில் தங்கள் தவறு குறித்த பரிசீலனைகளாவது இருக்கும்.

பெரியார் ஜின்னா தொடர்புகள் குறித்து புரிதலை செய்துகொண்டு அடுத்து செல்லலாம்.

இந்து ஆங்கில இதழ் மார்ச் 19, 2018ல் பெரியாரின் ஜின்னா தொடர்பு குறித்து சிறிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் பாகிஸ்தான் கோரிக்கை எழுந்தவுடன் அதைப் பார்த்து பெரியாரும் திராவிடஸ்தான் எழுப்பினார் என சொல்லப்பட்டுள்ளது. திரு கண்ணன் எழுதிய புத்தகத்திலிருந்து கீழ்கண்ட வரிகளை அந்த நிருபர் எடுத்தாண்டுள்ளார். அவ்வரிகள்

He had gone to Bombay on an invitation from the non-Brahmins there and was accompanied by his lieutenants P. Balasubramaniam, T.A.V. Nathan, Thiruvasagamani K.M. Balasubramaniam, T.P.S. Ponnappa, C. Panjatcharam and C.N. Annadurai.

On 7 January 1940, at a public meeting in Dharavi, Bombay, Periyar maintained that Tamil Nadu was as populous as England and as large as Germany, and that with Jinnah’s and Ambedkar’s help, he would establish its freedom, Mr. Kannan said in his book.

ஆய்வாளர் ராமகிருஷ்ணா ஜின்னா- அம்பேத்கர்-பெரியார் வரலாற்று சந்திப்பு எனும் கட்டுரையில் எழுதுகிறார்

EVR made the demand for Dravidanadu in his presidential address at the 14th Confederation of S.I.L.F on December 1938. He met Sir Stafford Cripps and put forward the demand of Dravidanad in 1939. The persons met Cripps included Sir Muthaiah Chettiar, N. S. Samiappa Mudaliar and W. P. A. Soundara Nadar. Resolution was passed to that effect in 1940. Ironically, Muslim League refused the Cripps offer in 1942.

...After the passing of Lahore resolution, the relationship between the Justice Party and Muslim League became more intimate. At a joint meeting of Justice Party and Muslim League at Madurai in March 1940, a proposal was made to seek the help of Jinnah for the creation of Dravidastan and Jinnah assured EVR to that effect. In fact, both continued to have good relations.

ராவ் இங்கு ஜின்னா- அம்பேத்கர் சந்திப்பில் இடம் பெற்றவர்கள், லாகூர் பாகிஸ்தான் தீர்மானத்திற்கு பின்னர் லீகுடன் பெரியார் உறவு பலமானதையும், திராவிடஸ்தான் கோரிக்கைக்கும் ஜின்னாவின் உதவியை நாடுவது என்பதைப் பற்றியும் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

1942ல் கிரிப்ஸ் தூதுக்குழுசந்திப்பு குறித்து விஸ்வநாதன் (The political Career of E V Ramasami Naicker  by Dr. E.Sa. Visswanathan)  அவர்கள் எழுதியதும் இங்கு கணக்கில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

கிரிப்ஸ் தூதுக்குழு வரப்போகிறது என அறிந்தவுடன் பெரியார் தன் நண்பர்களுடன் திராவிட நாடு அரசியல் அமைப்பு வரையறை செய்தல்- கிரிப்ஸை சந்தித்தல் போன்ற முடிவுகளை எடுக்கிறார். பெரியார், செளந்திரபாண்டியன், சாமியப்பா, முத்தையா ஆகியவர்கள் மார்ச் 30 1942ல் கிரிப்ஸை சந்தித்து திராவிடநாடு கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். 

கிரிப்ஸ் குறிப்பிடுவதாக விஸ்வநாதன் கீழ்கண்ட அம்சங்களை எழுதியுள்ளார்.

ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதிகள் மதராஸ் மாகாணம் இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்படுவது குறித்து impress  செய்தார்கள். இதன் மூலம் சிறுபான்மை பணக்கார பிராம்மணர்களின் ஆதிக்கத்திலிருந்து பெரும்பான்மை பிராமணர் அல்லாதவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்றனர். ஆனால் இந்த மொழிவை பொதுவாக்கெடுப்பு மூலமாகவோ அல்லது அசெம்பிளி தீர்மானம் வழியாகவோ கொணரமுடியும் என்கிற நம்பிக்கை அவர்களிடத்தில் இல்லை. மாற்றாக தங்களுக்கு  separate electorates  முறையை தரவேண்டினார்கள். தீர்வு தனி வாக்காளர் என்பதில் இல்லை- மாற்றாக அமைப்பு தலைமை சார்ந்த விஷயமாக இருக்கிறதென்றார் கிரிப்ஸ். persuade the people of Madras to vote for seceding from the Indian Union  எனவும் ஆலோசனையயும் அவர்களுக்கான வேலையையும் நல்கினார் கிரிப்ஸ்.

 விஸ்வநாதன் எழுதுகையில் கிரிப்ஸ் சந்திப்பு குறித்து கட்சி ஆவணங்கள் ஏதுமில்லை என்கிறார். கட்சிக்குள் கிரிப்ஸ் சந்திப்பு குறித்தோ- ஜின்னா, அம்பேத்கர், பெரியார் முத்தரப்பு உடன்பாடு பற்றியோ ஏதும் பேசப்படவில்லை- தெரிவிக்கப்படவில்லை. நீதிகட்சியின் கடலூர்மாவட்ட மாநாட்டில் செளந்திரபாண்டியனார் அவர்கள் தூதுக்குழு தங்கள் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பதாக சொல்லியுள்ளனர் என்பதை குறிப்பிட்டு உரையாற்றியுள்ளார். தனி வாக்காளர் தொகுதி சாத்தியமில்லை என கிரிப்ஸ் சொல்லியதை விஸ்வநாதன் எழுதுகிறார்.

But on the question of separate electorates for non Brahmans Sir Stafford Cripps seemed to have expressed the view that it was not easy of realisation.

ஆகஸ்ட் 4, 1944ல் பெரியார் ஈரோட்டிலிருந்து ஜின்னாவிற்கு தங்கள் பேச்சுவார்த்தைதனை நினைவுகூர்ந்து கடிதம் எழுதியுள்ளார். கிரிப்ஸ் மொழிவுகள், ஜின்னா காந்தி சந்திப்பு- காங்கிரசின் குணம் ஆகியவற்றில் கவனமாக இருக்கவேண்டியது பற்றி தெரிவிக்கிறார். பாகிஸ்தான் திராவிடஸ்தான் ஆதரவு பற்றியும் குறிப்பிடுகிறார். அக்கடிதத்தில் இறுதி வரிகள் இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது.

Yourself know very well that there could be no Pakistan and independence of Muslims in India and until and unless independence was achieved for the rest of the nations. அதாவது மற்ற தேச விடுதலையில்லாமல் பாகிஸ்தானோ முஸ்லீம்களுக்கான சுதந்திரமோ இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள் என பெரியார் எழுதியுள்ளதைக் காண்கிறோம்.

ஆனால் ஆகஸ்ட் 17,1944ல் ஜின்னா தனது நிலையை தெளிவு படுத்திவிடுகிறார். Dear Mr Ramasamy  என்ற அழைப்புடன் அக்கடிதம் ஜின்னாவால் எழுதப்பட்டுள்ளது.

I have always had much sympathy for the people of Madras, 90 percent of whom are non-Brahmans and if they desire to establish their Dravidastan, it is entirely for your people to decide on the matter. I can say no more. I cannot speak on your behalf. I have made my position clear to you when I was in Madras more than once, but hitherto I have noticed that in your activities you have been undecisive. If the people of your province really desire Dravidasthan, then it is for them to assert themselves

I hope you understand my position that I can only speak for Muslim India butyou have my assurance and whenever I have a say in the matter, you will find me supporting any just and fair claim or demand of any section of the peoples of India and particularly the non Brahmins of south India  என்று ஜின்னா தெரிவிப்பதைக் காண்கிறோம். இதில் பெரியாரின் கடிதத்தில் கோரப்படும் பிற தேச விடுதலையில்லாமல் பாகிஸ்தான் இல்லை என்பது குறித்து ஜின்னா ஏதும் பதில் பேசாமல் கடந்து போய்விடுவதுடன்  திராவிடஸ்தான் வேண்டுமெனில் அதற்காக நீங்கள்தான் உறுதியாக நிற்கவேண்டும். நான் முஸ்லீம்களுக்காகத்தான் பேசமுடியும். உங்களுக்கானதை நீங்கள்தான் பேசவேண்டும் என ஜின்னா அவர்கள் தெளிவுபடுத்தியதைக் காண்கிறோம்.

அவ்வாண்டு செப்டம்பரில் மதராசில் அம்பேத்கரும் திராவிட இயக்கம் குறித்த விமர்சனப்பார்வையை வெளிப்படுத்தி பேசியிருப்பதைக் காண்கிறோம். அம்பேத்கர் ஆரியன் திராவிடன் கோட்பாட்டில் நின்று தனது எழுத்துக்களை அமைத்துக்கொள்ளவில்லை என்பதும் அவரைப் படிப்பவர்களால் உணரமுடியும்.

ஜின்னா- அம்பேத்கர்- பெரியார் சந்திப்பின்படி தொடர்ந்து அவர்களால் சேர்ந்திசை செய்ய இயலாமல் போனது. அவரவர் தம் மக்கள் எவர் என உணர்ந்தாரோ அதற்கான தனித்த நடவடிக்கைகள் என அவர்களின் அரசியல் பயணத்தை நாம் காண்கிறோம். ஒருவருக்கு துணை என பயன்படுத்திக்கொள்ள நினைத்திருந்தாலும் பிரிட்டிஷாருடன் காங்கிரசுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற ஜின்னாவால் தனது பாகிஸ்தான் கோரிக்கையை வெல்ல முடிந்தது. அம்பேத்கரும் வைஸ்ராய் கவுன்சில், அரசியல் நிர்ணயசபை (காங் ஆதரவுடன் ஆரம்பத்தில் இல்லாவிட்டாலும்) , அரசியல் அமைப்பு உருவாக்கம் என பயணித்து தீண்டாமை , இட ஒதுக்கீடு அம்சங்களில் சட்டப்பாதுகாப்பை உருவாக்கிய நிலையை பார்த்தோம்.

காங்கிரசும் பொதுமக்கள் கடமையும் எனும் தலையங்கத்தில் பெரியார் சட்டசபைத் தேர்தலில் முஸ்லீம் தொகுதி, கிருஸ்துவர் தொகுதி, திராவிடர் தொகுதி என்று தனித்தனியே  இருக்குமானால் அதில் காங்கிரஸ் தொகுதியிலும் மற்ற தொகுதிகள் போல் பெரும்பான்மையினர் தோல்வி அடைந்தே தீருவார்கள் என எழுதினார்.

சமீபத்தில் நடந்த அரசியல் நிர்ணயசபை எவ்வளவு பித்தலாட்டமான முறையில் செய்யப்பட்டது என்பதைப் பார்த்தால் நாகரீக மக்கள் காரி உமிழ்வார்கள். காங்கிரசைத் தவிர மற்றவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வழி இல்லாமலே செய்துவிட்டார்கள்... 40 கோடி மக்களில் சிறு கூட்டமான 4 அல்லது 5 கோடி மக்களுக்குக்கூட யோக்கியமும் உண்மையுமான சரியானபடி பிரநிதித்துவம் இல்லாத  காங்கிரசுக்கே தவிர வேறு யாருக்கும் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கச் செய்திருக்கிறது என்றால் இது பிரிட்டிஷாரின் எவ்வளவு பெரிய பித்தலாட்டமான காரியம் என பெரியார் எழுதியதை வாசிக்கலாம். இந்த தலையங்கள் 3-8-1946 குடிஅரசில் காணப்படுகிறது.

 வங்கத்தில் ஏற்பட்ட வகுப்புக் கலவரம் கொலை சொத்து நாசம் பற்றி விளக்கிய பெரியார் ஒன்றை தெளிவுப்படுத்துகிறார். ”முஸ்லீம்களோ திராவிடக் கழகத்தார்களோ வெள்ளையனை வினாடி நேரம் கூட இங்கு இருக்க விரும்புகிறவர்கள் அல்ல. நம்மை பொறுத்தவரையில் வெள்ளையன் இருந்த இடத்தில் திராவிடர்கள் தான் அமரவேண்டும். ஆரியர்கள் ஆத்மார்த்தத்தில் இருந்துகொண்டு மோட்சத்திற்கு வழிகாட்டட்டும் என எழுதினார். இதில் கம்யூனிஸ்களை பட்சியுமில்லாதா மிருகமுமில்லாத வெளவால் என குறிப்பிட்டு அவர்களும் சிந்திப்பார்களாக என அத்தலையங்கத்தை முடிக்கிறார். குடியரசு 24-8-1946ல் இது இடம் பெற்றுள்ளது.

கும்பகோணத்தில் சொற்பொழிவாற்றிய பெரியாரிடம் சில கேள்விகள் கேட்கப்படுகிறது.  வடநாட்டு ஜின்னா ஆதரவு ஏன்? பெரியார் தனது பதிலாக அவருக்கு நாடு பிரிந்தால் நமக்கும் நாடு பிரியும் . அவருடைய வழியை பின்பற்றுங்கள் என்றுதான் சொல்வதாக கூறினார். அவர் நமக்கு தலைவரல்ல- மகாத்மா ஆக்கவேண்டாம். ஆதரவாளர் என்றார் பெரியார்.

அடுத்து முஸ்லீம் மதத்தை ஆதரிப்பதேன் என்பதற்கு பதில் தருகிறார். ஜாதிபேதம் பார்க்கும்- மக்களை இழிவு படுத்தும் மூடநம்பிக்கை நிறைந்த மதம் ஒழியவேண்டும். இத்தகைய கொடுமைகள் இல்லாத மதம் ஒழியவேண்டும் என திக சொல்லவில்லை என்கிறார். இப்பதில்கள் குடிஅரசு 19-10-1946ல் வெளியாகியுள்ளன.

 இடைக்கால சர்க்கார் அதில் முஸ்லீம் லீக் பங்கேற்பு குறித்து பெரியார் எழுதுகிறார். வேவல் துரை பேச்சுவார்த்தைக்கு பின்னர் லீக் சார்பில் தலித் பிரதிநிதி இடம் பெறுதல் பற்றி விளக்குகிறார். லீக் செய்தது சரியானதே என ஆதரிக்கிறார். அதேநேரத்தில் காங்கிரசில் செயல்படும் தேசிய முஸ்லீம்களைகுலத்தைக் கெடுக்கவந்த கோடாலிக் காம்புகள் என விமர்சிக்கிறார்.

பாகிஸ்தானைப் பெறுவதற்கு வெள்ளையனிடத்தில் நேரடி நடவடிக்கை என லீகர் கூறியதை காங்கிரஸ்காரர்கள் இந்துக்களிடம் போர் தொடுக்கத்தான் என தப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். அதனால் வங்காளத்தில் பெருங்குழப்பம் ஏற்பட்டதாக பெரியார் எழுதுகிறார்.

தாழ்த்தப்பட்டவர்களை லீக் ஆதரிப்பதால் அவர்கள் நன்மை பெறுவர் என்பது திண்ணம். ஒருவேளை 6 கோடி தாழ்த்தப்பட்டவர்களும் கூட முஸ்லீம்களாக மாறிவிடுவார்களோ என்று நினைக்கவேண்டியிருக்கிறது. மாறிவிட்டால் ஒன்றும் குடிமுழுகிவிடாது. கருப்ப சாம்பான் காதர்வுசேன் ஆக மாறினால்டேய் கருப்பா எட்டி நில் என்று கூறுவதை விடுத்துவாங்க சாகிப் செளக்கியமா என கனக சுப்பிரமணிய அய்யர் கேட்பார் என அதை புரிய வைக்க பெரியார் முயற்சித்தார். இந்த செய்தியை 26-10-1946 குடிஅரசில் காணலாம்.

பெரியார் எதிர்பார்த்தது போல் அல்லது விழைந்தது போல் மதமாற்றத்தை தலித்கள் செய்துவிடவில்லை. இது ஏன் என்ற கேள்வியை விசாரித்து பெரியார் முடிவிற்கு வந்ததாகவும் தெரியவில்லை.

அந்தந்த ஜாதி வகுப்புக்கு எண்ணிக்கைக்கு தகுந்தபடி அதிகாரம் பதவி, உத்தியோகம் கல்வி வருவாய் முதலியவைகளைப் பிரித்து விடுவதால் எப்படி தேசியம் கெட்டுப்போகும் என்ற கேள்வியை பெரியார் எழுப்பினார். இக்கேள்வி நவம்பர் 30, 1946 குடிஅரசில் இடம் பெற்றது.

 ஆரியர் தங்கள் கையில் ஏகபோக ஆதிக்கம் இருப்பதைத்தான் சுதந்திரம் எனக் கருதுகிறார்களே ஒழிய பொதுமக்கள் கையில் சுதந்திரம் இருப்பதைச் சுதந்திரமாக கருதுவதில்லை. காங்கிரஸ் சிறு சுயநல கோஷ்டியாரின் ஸ்தாபனமாகும். அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுத்ததில் அவர்களின் உண்மையான நிலைமை நன்கு தெரிகிறது. காங்கிரசால் 4 கோடி திராவிடர்களையும் 6 கோடி ஷெட்யூல்டு வகுப்பாரையும் அலட்சியம் செய்ததுபோல் 9 கோடி முஸ்லீம்களை அலட்சியம் செய்ய முடியவில்லை. அதாவது குறைந்த அளவாவது முஸ்லீம்களைச் சரிப்படுத்திக்கொண்டுதான் சுதந்திரம் அளிக்கப்பட்டதாகச் சொல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது.” இதை டிசம்பர் 7, 1946 தலையங்கத்தில் பெரியார் எழுதியுள்ளார்.

 பெதிக் லாரன்ஸ் குழு காலம்- வேவல் சமரசம்- இடைக்கால அரசாங்கம்- அரசியல் நிர்ணயசபை தேர்வு என அனைத்து பிரச்னைகளையும் 1946ஆம் ஆண்டு பெரியார் அவரது சிந்தைப்படி அலசியுள்ளார். தமிழ்நாடுதான் தனது களம் என்றாலும்  அனைத்திந்திய அரசியல் போக்குகள் பற்றி அவர் தொடர்ந்து தன் கருத்துக்களை வெளிப்படுத்திவந்தார். பிரிட்டிஷ் போகும்போது அதிகார மாற்றத்தை தருவதற்கு இரு பெரும் சக்திகளான காங்கிரஸ்- லீக் உடன் மட்டும் விவாதிக்கத்துவங்கியதைப்  பற்றி பெரியார் விரிவாகவே அலசியுள்ளார்.

பெரியார் முழுமையாக காங்கிரஸ்- காந்தி என்ன நிலை எடுத்தாலும் காலிகள், அறிவற்றவர் என்கிற வசைகளை தாராளமாக பயன்படுத்தியுள்ளார். ஆங்காங்கே  காங்கிரஸ் திராவிடர் கம்யூனிஸ்ட்களுக்கு அறிவுரையை விமர்சனத்துடன் நல்கியுள்ளார்.

முஸ்லீம் லீக் எதை செய்தாலும் அதை விமர்சனம் ஏதுமில்லாமல் ஆதரிக்கிறார். காங்கிரஸ் காலித்தனத்திற்கான எதிர்வினை என்ற அளவிலேயே அவர்களின் அனைத்து செயல்களையும் பார்த்துள்ளார்.

பாகிஸ்தான் கோரிக்கையுடன் திராவிடஸ்தான் நகர்ந்துவிடும் என்று ஜின்னாவிடம் வைத்த எதிர்பார்ப்பில் அவர் ஏமாற்றம் அடைந்தாலும் லீக் மீது வசையேதுமில்லாமல் அவர்களைப் பார்த்து இனவுணர்ச்சி கொள்ளவேண்டும் என்ற நிலையையே எடுக்கிறார்.

தான் வைத்த திராவிடநாடு கோரிக்கையை அடைய முடியாமல் போனதற்கோ- பிரிட்டிஷார் காங்கிரஸ் லீக் போன்றவர்களுடன் பேச்சு வார்த்தை மேஜைக்கு செல்லமுடியாமை குறித்தோ அவரிடம் எந்த சுயவிமர்சனமும் இல்லை. தொண்டர்கள், திராவிடர்களையே அதற்கு குறை சொல்கிறார். அக்கோரிக்கையை முன்னெடுத்தவர் என்ற வகையில் அதை அடைவதற்கான எத்தனிப்புகள் எவை- அவை போதுமானதாக இருந்ததா என்ற எந்த பரிசீலனையும் வேறு ஜனநாயக இயக்கமாக இருந்தால் நடந்திருக்கும்.  பெரியார் அப்படி எதையும் செய்துகொள்ளவில்லை.

எப்போதுமே அவரது உரையாடலில் எல்லா குறைகளும் பிறர் மீதானதாக இருக்கிறது. தவறே செய்யாத ஆக உயர்ந்த விழிப்புணர்வின் அடையாளமாக அவர் தன்னை முன்னிறுத்திக்கொள்வதை பார்க்கமுடிகிறது. கிரிப்ஸ், பெதிக், வேவல், மெளண்ட்பாட்டன், காந்தி, காங்கிரஸ் அனைவருமே ஏதோவொருவகையில் ஜின்னாவிற்கு இணங்கியுள்ளார்கள் என எடுத்துக்கொண்டால் அவர்கள் ஏன் பெரியாருக்கு இணங்கவில்லை. பெரியாரிடம் இருக்கும் ஒரே பதில் ஆங்கில ஆர்யர்களும் இந்திய ஆர்யர்களும் செய்த கூட்டுகளவாணித்தன ஒப்பந்தம்தான் என்பதாகவே இருக்கிறது. அவரின் கோரிக்கை தோல்விக்கு பெரியார் எள்ளவு கூட தான் காரணமில்லை என்பதையே அவர் எழுத்துக்கள் பேச்சுக்கள் மூலம்  நிறுவ விரும்புவதையும் பார்க்க முடிகிறது.

 

20-3-2022

Comments

  1. Pl change the back ground . This red is a big hindrance to the eyes.

    ReplyDelete
  2. பெரியார் இன்றைக்கும் தேவைதான்.ஆனால் அவர் ஊறுகாயைப் போல்தொட்டுக்
    கொள்ள வேண்டுமே தவிர,உணவாக உண்ணமுடியாது..பிராமணிய எதிர்ப்பை பிராமண எதிர்ப்பாக கொண்டு சென்றவர் அவர்.பிராமணர் அல்லாத இடைநிலை வருணத்தாரை,
    அவர்களின் அடக்கு முறைகளை,ஆதிக்கத்தை  எல்லாம் ஏறெடுத்தும் பாராதவர்.கடைநிலை தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் நலனில் அவர் பிள்ளையார் உடைப்பில் காட்டிய தீவிரத்தில் ஒரு பங்கை மேலும் காட்டியிருந்தால்  அவர்களின் நிலை சற்று மேம்பாட்டிற்கும்.
    பெரியாரையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தந்தையாகக் கொண்டாடும் மனநிலை முதலில் மாற வேண்டும் எனக் கருதுகிறேன்.
    உடனே ஆரிய அடிவருடி என லேபில் ஒட்டி விடுவார்கள் ‌.
    எந்த  ஒரு இனத்தையும் அதன் கடந்த கால வரலாற்றுப் பிழையுடன் தற்காலத் தலைமுறையை அணுகுவது தவறு என்பதே என் வாதம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு