https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, March 10, 2017

In the Life of Rajaji ராஜாஜி வாழ்வினிலே 2

II ராஜாஜி வாழ்வினிலே

மகாத்மாவின் எடிட்டோரியல் கொள்கைவழி நின்று செயல்படுவதில் தேர்ச்சியை காட்டினார். காந்தி சிறையில் இருந்தபோது கயாவில் காங்கிரஸ் கூடியது. மூத்தவர்களான சி ஆர் தாஸ், மோதிலால் போன்றவர்களுக்கு போராட்ட திட்டங்களில் மாற்றம் தேவை என்ற கருத்து செளரி செளராவிற்கு பின் ஏற்பட்டது. வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் போராட்டங்கள் என்ற கருத்து எழுந்தது. காந்தி முன்னெடுத்த போராட்டம் குறித்து தொகுத்து பேசவேண்டிய நிலையில் ராஜாஜி இருந்தார். நீ என்ன டெபுடி மகாத்மாவா என்ற கேலிக்கு உள்ளாக்கப்பட்டார். சிவில் ஓத்துழையாமை குறித்து தனது வாதத்தை அருமையாக வைத்ததாகவும் சிலரால் அவர் பாரட்டப்பட்டார், சட்டமன்றம் பகிஷ்கரிப்பு என்பது தீர்மானமானது. காந்தியின் அகிம்சை, சட்டமறுப்பு இயக்கம், காதி, அந்நியதுணிகள் பகிஷ்கரிப்பு ஆகியவற்றை நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து எடுத்து சொல்லும் கடமையை ராஜாஜி மேற்கொண்டார்.  காந்தியின் வழியிலா அன்றேல் பிரிட்டிஷ் சட்டங்களுக்கு உட்பட்ட வழியிலா என்ற விவாதத்தை எடுத்து சென்றார்.
தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் நுழைவு- வைக்கம் போராட்டத்தில் ஆதரவு நிலை எடுத்தார் ராஜாஜி. ஒரு பகுதி மக்களை அசமத்துவமுறையில் நடத்தி சொர்க்கத்திற்கும் முக்தி என்ற விடுதலைக்கும் வழிதருவோம் என எம் மதம்  பேசினாலும் அதை முற்போக்கென கொள்ள இயலாது என்றார். கிராம முன்னேற்றம்  என்பதற்காக திருசெங்கோட்டில் ஆசிரமம் ஒன்றை பிப்ரவரி 1925ல் நிறுவினார். ராட்டை.நூல் நூற்றல், மருந்தகம், மதுஒழிப்பு, அரிஜனங்கள் முன்னேற்றம் என்பன நடவடிக்கைகளாக இருந்தன. சந்தானம், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ராமதுரை, வரதாச்சாரி போன்றவர்கள் துணை நின்றனர். தமிழில் விமோசனம், ஆங்கிலத்தில் புரொகிபிஷன் என இரு பத்ரிக்கைகள் வெளியிடப்பட்டன. மாலையில் முதியோர் கல்வி நடந்தது. கைத்தொழில்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறு குடில் ஒன்றில் ராஜாஜி தங்கி ஆசிரம பணிகளை கவனித்து வந்தார்.
சைமன் கமிஷன் 1928 பிப்ரவரியில் வந்தது.  திரும்பிபோ எதிர்ப்பு இயக்கங்கள் பலமாக நடந்தன. லாகூர் போராட்டத்தில் லஜ்பத்ராய் தாக்கப்பட்டார். உடல்நிலை சீர்கெட்டு சில நாட்களில் அவர் மறைந்தார். இதற்கு  பதிலடியாக போலீஸ் அதிகாரி சாண்டர்ஸ் பகத்சிங் மற்றும் தோழர்களால் சுடப்பட்டார். தான் முன்வைக்கும் போராட்ட முறைகள் விலகிப்போவதை குறித்த வருத்தம் காந்திக்கு இருந்தது. இளம் புரட்சியாளர்கள் வழி தவறி போகிறார்கள் என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தினார். பகத்சிங் சட்டமன்றத்தில் 1929 ஏப்ரல் 8 அன்று குண்டெறிந்து  போலீசார் முன் கைதிற்கு துணிச்சலாக நின்றது நாட்டில் பல இடங்களில் விதந்து பேசப்பட்டது. ராஜாஜி காந்தியின் அகிம்சை வழிதான் என்பதில் அழுத்தமான கருத்தை வெளிப்படுத்தினார். படேல் தலைமையில் பர்தோலி வரிகொடா இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. படேலின் செயல்பாடு காந்தியால் பாரட்டப்பட்டு சர்தார் என அழைக்கலானார். 1929ல் பட்டேலின் சென்னை வருகை ராஜாஜி படேல் உறவை பலப்படுத்தியது, ஒத்த கருத்துடன் காங்கிரசில் இணைந்து பணியாற்ற துவங்கினர். இந்த நாட்டு பிராமணர்களை நாம் விமர்சித்து வருகிறோம்.. உணமையில் பிரிட்டிஷ்காரர்கள்தான் சூப்பர் பிராமணர்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து போராட வாருங்கள் என படேல் பேசிவந்தார்.
இர்வின் பிரபு வட்டமேசை மாநாட்டிற்கு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் வாருங்கள் என்ற அழைப்பை தந்தார். காந்தி உப்பு சத்தியாக்கிரகம் என்ற போராட்ட ஆயுதத்தை எடுத்தார். 1930 மார்ச்சில் சபர்மதியிலிருந்து தண்டி யாத்திரை நடத்தினார், மக்கள் பெரும் எழுச்சியுடன் திரண்டனர். ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யம் என்ற யாத்திரையை ஏபரல் 13, 1930ல் துவங்கினார்.  தஞ்சாவூர், கும்பகோணம், திருத்துறைப்போண்டி என வழிநகர்களில் மக்கள் பெரும் வரவேற்பை நல்கினர். மாவட்ட ஆட்சியாளர் எச்சரிப்புகள் பல இடங்களில் புறந்தள்ளப்பட்டன. ராஜாஜி கைது செய்யப்பட்டார்.  இருநூறு அபராதத்துடன் ஆறுமாத சிறை இல்லையேல் 9 மாத சிறை என தண்டனை விதிக்கப்படுகிறது. ராஜாஜி சென்ற வேலூர் சிறையில் பட்டாபிசீதாராமையா, பிரகாசம், சாம்பமூர்த்தி, சந்தானம் என விடுதலை இயக்க போராளிகள் பலரும் இருந்தனர். ராஜாஜி குறித்து அவரது சிறை நண்பர்கள் பதிவில் அவரது உடல் நரம்புபோல் காணப்பட்டாலும் மூளை அனைவரையும் வசீகரித்தது. தனி உரையாடலில் அவரது ஆழம் புரிந்தது. அவர் மரபுரீதியான உடைபழக்கம், உணவுபழக்கம் வைத்திருந்தாலும் சிந்திப்பதில் புரட்சிகரமாகவே இருந்தார் என்ற பதிவை தருகின்றனர்.
ராஜாஜி சிறையில் படிப்பு வட்டம் ஒன்றை உருவாக்கினார். எமர்சென், தோரோ, டால்ஸ்டாய், ரஸ்கின், ஷேக்ஸ்பியர், சாக்ரடிஸ், பிளாட்டோ, காந்தி என சிந்தனைகள் அங்கு அலசப்பட்டன. இவை அனைத்திலும் முதன்மையான பங்கினை ராஜாஜி செலுத்தினார். பகவத்கீதையை எளிமைப்படுத்தி விளக்கி வந்தார். சாக்ரடிசின் உள்ளழகு என்பதை விவரித்தார். மதம், தத்துவம், அறிவியல், பொருளாதாரம், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் என விவாதம் விரிந்தது.
காந்தி- இர்வின் பேச்சுவார்த்தை 1931 பிரவரி- மார்ச்சில் நடந்து உடன்பாடு ஏற்பட்டது. சிவில் ஒத்துழையாமை விலக்கிக் கொள்ளப்பட்டது. வட்டமேசை மாநாடுகளில் காங்கிரஸ் பங்கேற்பிற்கு உடன்பட்டது. அதே நேரத்தில் டொமினியன் அந்தஸ்து உட்பட எதற்கும் உத்தரவாதம் தரப்படவில்லை. பல்தரப்பிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் தரப்பு கோரிக்கைகளில் அழுத்தம் கொடுத்ததால் இரண்டாவது வட்ட மேசை மாநாடு வெற்றிபெற முடியவில்லை. காந்தியுடன் ராஜாஜி தொடர்பில் இருந்தார். காந்தி 1932 ஜனவரியில் மீண்டும் கைது செய்யப்பட்டு எரவாடாவில் அடைக்கப்பட்டார்.

அரிசனங்களுக்கு தனித்தொகுதி என்ற அரசாங்க முடிவை காந்தி கடுமையாக எதிர்த்தார். இந்துமத ஒற்றுமை பாதிக்கும், இந்து மக்கள் தங்கள் பாரபட்ச மனோபாவத்திலிருந்து வெளியேறுவதையும் தடுத்துவிடும் என காந்தி வலுவாக கருதினார். செப்டம்பர் 1932ல் உண்ணாநோன்பை அறிவித்தார். ராஜாஜி நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ராஜேந்திர பிரசாத், சாப்ரு, ஜெயகர் போன்றவர்களை சந்தித்து தீர்விற்காக விவாதித்தார். டாக்டர் அம்பேத்காருடன் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அம்பேத்காருக்கு கடுமையான விமர்சனம் இருந்தது. காந்தி கோமா நிலைக்கு சென்றார். அம்பேத்காருடன் ஏற்பட்ட எரவாடா அவார்ட் பிரிட்டிஷ் சர்க்காரால் ஏற்கப்பட்டால்தான் உண்ணாநோன்பை கைவிடுவேன் என்றார் காந்தி. காபினட் அவசரமாக கூடி  ஏற்றுக் கொண்டவுடன் உண்ணாநோன்பு கைவிடப்பட்டது. ராஜாஜி இதில் பெரும் பங்காற்றினார்.
தாழ்த்தப்பட்டவர்கள் உரிமையுடன் கோயில் நுழைவிற்கு உத்தரவாதமளிக்கும் வகையில் சட்டம் வேண்டும் என ராஜாஜி பேசிவந்தார். தாங்களும் இந்துக்கள்தான் என்கிற அய்க்கிய உணர்வு அவர்களிடம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். தனது மகள் லஷ்மியை காந்தியின் மகன் தேவதாஸ் மணமுடிக்க செய்தார். அதே 1932 ஆம் ஆண்டில் தனது மற்றொரு மகள் நாமகிரி தனது கணவனை இழந்து ராஜாஜியுடன் சேர்ந்தார். அவருக்கு பணிவிடை செய்யும் பொறுப்பு நாமகிரிக்கு தொடர்ந்தது.
பிறப்பு அடிப்படையில் வேறுபாடுகள் இந்துமத சகோதரர்களால் தொடரப்படுவது வேதனையளிக்கிறது என சுய சுத்திகரண உண்ணாவிரதம் ஒன்றை மே 1933ல் காந்தி மேற்கொண்டார். மெலிந்த தேகம் இதை தாங்காது என கருதி தனது கவலையை ராஜாஜி கடிதம் மூலம் தெரிவித்தார். மருத்துவ சோதனைக்கு மட்டும் காந்தி இசைந்தார். பின்னர் 1934 பீகார் நிலநடுக்கத்தின்போது சேவைகளில் காந்தி ஈடுபட்டார். 1935 இந்திய அரசாங்க சட்டம் ஒன்றை மத்திய , மாநில சட்டமன்ற அதிகாரங்களுடன் பிரிட்டிஷ் கொணர்ந்தது. பட்டேல், ராஜாஜி போன்றவர்கள் ஏற்கலாம் என்றனர். மதன் மாளவியா எதிர்த்தார். நேருவும்  பயன்படுத்தி சோதிக்கலாம் என கருதினார். தேர்தல்கள் நடந்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. மெட்ராஸ் மாநில பிரதம அமைச்சராகிட சத்தியமூர்த்தி விரும்பவில்லை. மத்திய சட்டமன்றம் செல்ல விரும்பினார். பட்டேல் ராஜாஜியை அணுகினார். ராஜாஜி அப்பதவியை ஏற்க மறுத்தார். பதவி ஏற்கவில்லையெனில் இமயமலை சென்று தவம் செய் என கடுமையாக பட்டேல் பேசியதால் ராஜாஜி சென்னை ராஜதானி பிரதமர் பொறுப்பை ஜூலை 14, 1937ல் ஏற்றார்.
கவர்னராக  லார்ட் எர்ஸ்கைன் என்பவர் இருந்தார். பொதுவாக நல்லுறவை காக்க விரும்பினார். ஆனால் பிரிட்டிஷ் உயர் சிவில் அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளாக வந்த அமைச்சர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. அமைச்சரவை முடிவெடுத்துவிட்டால் அதை அமுல்படுத்துவதற்கு சிவில் அதிகாரிகள் தலைப்படவேண்டும் என்பதை ராஜாஜி உணர்த்தினார். சேலத்தில் மதுவிலக்கு என்றார். பின்னர் கடப்பா, சித்தூர் மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். முதலில் எதிர்ப்பு இருந்தது. சேலம் கலெக்டர்  டிக்‌ஷன் போன்றவர்கள் ஏழைகள் குடும்பத்தில் உருவான நல்ல மாறுதலை தெரிவித்தனர். லேவாதேவிகாரர்கள் பிடி தளர்வதாகவும் அறிக்கை வந்தது, ஜமீன்தாரி ஒழிப்பில்தான் விவாசாய தொழிலாளர் நலன் என ராஜாஜி குரல் கொடுத்தார். கோயில் நுழைவில் ஹரிஜன மக்களுடன் பங்கேற்றார்.  ஏழைகளை காத்திட கடன் நிவாரண சட்டம் என அறிவித்தார். காதி, கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களை ஊக்குவித்தார்.  கல்விக்கூடங்களில் அவர் கட்டாயப்படுத்திய இந்தி என்பது எதிர்ப்பிற்கு உள்ளானது.
இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை பிரிட்டிஷ் இணைத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதை கண்டித்து சென்னை சட்டமன்றத்தில் ராஜாஜி அக்டோபர் 26, 1939ல் தீர்மானம் கொணர்கிறார். காங்கிரஸ் அரசாங்கங்கள் வெளியேறவேண்டும் என முடிவெடுக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகிறது. காங்கிரசில் சுபாஷ், பட்டாபி சீதாராமையா போட்டி பிரச்சனைகளை உருவாக்குகிறது. காந்தியை கலந்தாலோசித்து செயல்கமிட்டி என்பதை சுபாஷ் ஏற்க மறுத்துவிட்டார். வழக்கத்திற்கு மாறான ஆலோசனையை ராஜாஜி பரிந்துரைத்தார். போஸ் அழைத்தாலும் காங்கிரஸ் செயற்குழுவிற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் போகக்கூடாது என்றார் காந்தியை உதாசீனப்படுத்திவிட்டு காங்கிரஸ் செயல் என ஏதுமில்லை என்றார். சுபாஷின் ஓட்டைப்படகில் ஏறவேண்டாம் என ராஜாஜி பேசியதாக ஹிரன்முகர்ஜி பதிவு செய்கிறார்.  காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகம் அறிவித்தார். ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, பக்தவச்சலம் ஆகியோர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி சிறைவாழ்க்கையில் ராஜாஜி வால்மீகி ராமாயணம் குறித்த ஆய்வை மேற்கொண்டார். வேதம்- உபநிடதம், பைபிள், குரான் ஒப்பீட்டு அம்சங்களை சக நண்பர்களிடம் எடுத்துரைத்து வந்தார். தனது காஸ்மோ பார்வை விரிவாக்கத்திற்கு அவை உதவியதாகவும் தனது சம்ஸ்கிருத அறிவையும் சற்று மேம்படுத்திக் கொள்ளமுடிந்ததாகவும் ராஜாஜி தெரிவித்தார்.  கீதை- திருக்குறள் விவாதங்களையும் நண்பர்கள் நடத்தினர்.
1941ன் மத்தியில் காந்தி நிலைபாட்டிற்கு சற்று மாறுபட்ட நிலைப்பாட்டை ராஜாஜியும் படேலும் எடுத்தனர். காங்கிரஸ் செயற்குழு விவாதம் முடிந்து முழு சுதந்திரம் எனில்  யுத்தத்தில் ஆதரவு என்கிற தீர்மானத்தை காங்கிரசில் எடுத்தனர். ஜின்னா தனது பாகிஸ்தான் கோரிக்கையில் அழுத்தமாக நின்றார். கிரிப்ஸ் தூது விவாதம் 1942ல் தோல்வியுற்றது.  1942 ஏப்ரலில் சென்னை ராஜதானி உறுப்பினர்களை ஏற்கவைத்து முஸ்லீம் லீக் கோரிக்கையான பாகிஸ்தானை ஏற்பது என்ற நிலைப்பாட்டை ராஜாஜி எடுத்தார். ராஜாஜியின் இந்நிலைப்பாட்டை படேல் கடுமையாக ஆட்சேபித்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல் என விமர்சித்தார். ஏப்ரல் இறுதியில் அகமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் ராஜாஜி நிலைப்பாட்டை நிராகரித்தது. காந்திஜி ராஜாஜியை காங்கிரசிலிருந்து விலகிவிடுமாறு அறிவுறுத்தினார். மதரீதியாக நாடு பிளவுபடுவதை காந்தி ஏற்கவில்லை. அதே நேரத்தில் ராஜாஜி வெளியிலிருந்து தனது சுதந்திர கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என காந்தி கருதினார்.

ஆகஸ்ட் 1942ல் ’இந்தியாவிட்டு வெளியேறு’ இயக்கம்  காந்தியடிகளால் அறிவிக்கப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ராஜாஜி தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. முஸ்லீம் லீகின் கோரிக்கை என்கிற யாதார்த்தம் காங்கிரஸ் தலைமையால் உணரப்படாமல் விடுதலை தள்ளிப்போகிறது  என்கிற வருத்தம் ராஜாஜியிடம் இருந்தது. முஸ்லிம் லீகிடம் விலைபோய்விட்டார் என்று ராஜாஜி மீது விமர்சனம்- அவரது கூட்டங்களில் கல்வீச்சு, தக்காளி வீச்சு நடந்தன. 1943 மார்ச்சில் அகாகான் மாளிகை புனேவில் காந்தி உண்ணானோன்பு மேற்கொண்டார். காந்தியை விடுவிக்கவேண்டும் என்ற பிரச்சாரத்தை ராஜாஜி தீவிரப்படுத்தினார். வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர் சிலரை ராஜினாமா செய்யவைத்தார்.
காந்தியை சந்தித்து இந்து- முஸ்லீம் இணக்க திட்டம் ஒன்றை காந்தியை ராஜாஜி ஏற்க செய்தார். தேசிய அரசாங்கம் எனில் இணக்கம் முன்நிபந்தனை என பிரிட்டிஷ் அறிவித்தது. திட்டம் ஜூலை10, 1944ல் வெளியானது. முஸ்லீம் லீக் முழு சுதந்திரம் என்பதை பேசவேண்டும்- முஸ்லீம்கள் பெரும்பான்மை உள்ள இன்றைய பாகிஸ்தான் பகுதியில் பிரிந்து செல்ல வேண்டுமா என்பதற்கு வெகுஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்- பிரிட்டிஷ் முழு அதிகாரத்தையும் பொறுப்பையும் இந்திய அரசாங்கத்திடம் விட்டு செல்ல வேண்டும் என்பதாக திட்டம் பேசியது. ஆனால் ஜின்னா பாகிஸ்தான் பிரித்து தருவது என்பதில்லாத திட்டம் எதையும் ஏற்பதற்கில்லை என தெரிவித்துவிட்டார். காந்தி- ஜின்னா வேறுபாடுகளை நீக்க முடியாமல் போனது.

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த நிலையில் லேபர் கட்சி ஜூலை 1945ல் அட்லி தலைமையில் பதவியேற்றது. இந்தியாவிற்கு விரைவில் சுய அரசாங்கம் உருவாகும் என்றார் அவர். காந்தி மட்டும் பாகிஸ்தான் என்பதை ஏற்றுவிட்டால் பத்து நிமிடஙளில் சுய ஆட்சி பிரச்ச்னையை தீர்த்துவிடலாம் என  ஜின்னா நிலைமைகளை எளிமைப்படுத்தினார். சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், வடமேற்கு மாநிலம், வங்கம், அஸ்ஸாம் என்கிற பகுதிகள் பாகிஸ்தான் என ஆகவேண்டும் என்றார் ஜின்னா.

ராஜாஜி காங்கிரசிற்கு திரும்பவேண்டும் என வேண்டுகோள் வைத்தார் காந்தி. இயக்கத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. ராஜாஜி என்னை மிக சரியாக புரிந்து கொண்டவர்.  1942ல் என்னை எதிர்த்தபோதும் மிக நேர்மையாகவே செய்தவர். அவர் சிறந்த சமுக சீர்திருத்தவாதி. அவரின் அரசியல் ஞானமும் நேர்மையும் கேள்விக்கு அப்பாற்பட்டவை என எதிர்ப்பிற்கு முற்றுப்புள்ளீ வைத்தார் காந்தி. ஆகஸ்ட் 1945ல் மீண்டும் ராஜாஜி காங்கிரசில் இணைந்தார். காந்தியின் சுற்றுப்பயணத்தில் ராஜாஜி உடன் இருந்தார். தேவையான உதவிகளை செய்து வந்தார். பத்ரிக்கை சந்திப்புகளில் மிளிர்ந்தார். சென்னை ராஜதானியில் அரசாங்கம் அமைந்தால் பொறுப்பேற்கவேண்டும் என காந்தி ராஜாஜிக்கு அறிவுரை தந்தார். படேல் உலகளாவிய விஷய ஞானம் நிரம்பிய ராஜாஜியை காங்கிரசார் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment