https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, March 10, 2017

In the Life of Rajaji ராஜாஜி வாழ்வினிலே 4

IV  ராஜாஜி வாழ்வினிலே

 1952 பொதுதேர்தலில் சென்னை மாகாணத்தில் 375 இடங்களுக்கு காங்கிரசால் 152 மட்டுமே பெறமுடிந்தது. பிரகாசம்  முதல்வராக விரும்பினார். கம்யூனிஸ்ட்கள் 62 எனும் அளவில் இருந்தனர். இந்நிலையில் சி சுப்பிரமண்யம் ராஜாஜி தலைமையேற்கவேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரசில் கொணர்ந்து நிறைவேற்றினார்.  1952 மார்ச்சில் காமராஜர் ராஜாஜியை  சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைக்கு முன்மொழிந்தார். ராஜாஜி தயங்கி பின்னர் ஏற்றுக்கொண்டு சென்னை முதல்வரானார். கித்வாய் உதவியுடன் உணவு கட்டுப்பாடு சட்டத்தை விலக்கினார். கட்டுப்பாடு நீக்கம் எதிர்மறை விளவுகளை தரும் என சில அதிகாரிகள் தெரிவித்ததை அவர் கேட்கவில்லை. ராஜாஜி திட்டத்தை கித்வாய் நாடுமுழுவதும் விஸ்தரித்தார். அப்போதிருந்த 50 லட்சம் கைநெசவாளர்களை காப்பதற்காக மில்கள் வேட்டி, புடவை  நெய்யக்கூடாது என்றார்.
போலீஸ்காரர்கள் போராடத்தை ராஜாஜி சந்திக்க வேண்டியிருந்தது. அதை கடுமையாக நசுக்கினார் . ரயில்வே தொழிலாளர் போராட்டதிற்கு நேரு பணியக்கூடாது. துணை ராணுவம் கொண்டு இயக்கவேண்டும் என்றார். அரசாங்கம் என்பது நிர்பந்தங்களுக்கு பணியக்கூடாது என்ற நிலையை எடுப்பவராக இருந்தார். அரசாங்க உத்தரவுகளை அமுலாக்குவதில் அதிகாரிகள் எம் எல் ஏ க்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணியக்கூடாதென்றார். மொழிவாரி மாநில கோரிக்கை வைத்து ஆந்திராவில் கிளர்ச்சிகள் எழுந்தபோது அதை எதிர்த்தார். மொழிவாரி மாநில பிரிப்பு நாட்டு நலனுக்கு விரோதமானது என்பது அவரின் கருத்தாக இருந்தது. பொட்டி ஸ்ரீராமுலு தியாகம் கொந்தளிப்பை தீவிரமாக்கியது. மத்திய சர்க்கார் பணிந்தது. அவரின் குலக்கல்வி திட்டமும் எதிர்ப்பை கண்டது. காமராஜர் தலைமையிலேயே எதிர்ப்பு பலப்பட்டது.  இனி காங்கிரசிற்கு அவர் தேவைப்படமாட்டார் என்கிற அளவிற்கு அவரது செல்வாக்கு குறைந்தது.
பொறுப்பை துறந்த அவர் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம் எழுத துவங்கினார். வானொலியில்  நெறி உணர்த்தும் உரைகளை ஆற்றத் துவங்கினார்.  ஆவடி காங்கிரசில் நேரு  நிறைவேற்றிய  சோசலிச மாதிரி சமுகம் தீர்மானம் மீண்டும் கருத்து வேறுபாடுகளை ராஜாஜியுடன் ஏற்படுத்தியது. பொதுத்துறை சார்ந்த தொழில் வளர்ச்சி என்பதில் ராஜாஜி சந்தேகங்களை எழுப்பினார்.  நேரு அரசாங்கத்தின் கொள்கைகளை தனது சுயராஜ்யா இதழ் மூலம்  சாடத்துவங்கினார். தனக்கு நேருவுடன் கருத்துவேறுபாடுகள் இருக்கிறது என்றாலும் அவர் இடத்தை எவராலும் நிரப்பமுடியாது என தெரிவித்து வந்தார். தனது மகளின் கணவர் தேவதஸ் காந்தி மரணம் 1957ல் அவரை மேலும் பலவீனப்படுத்தியது. மகள் லஷ்மிக்கு ஆறுதலாக இந்திராவை தோழமை கொள்ள செய்தார் நேரு. இதில் ராஜாஜி நெகிழ்ந்து போனார் என அறிகிறோம்.

இருகட்சி ஆட்சிமுறைதான் இந்தியாவிற்கு நல்லது எனபதை ராஜாஜி சொல்லி வந்தார். மினுமாசானி உறவு 1950ன் இறுதியில் பலப்பட்டது. மசானி நேருவை நாடாளுமன்றத்தில் கடுமையாக தாகிவந்தார். இருவரும் கலந்துபேசி  1958 ஜூனில் சுதந்திரா கட்சியை உருவாக்கினர். சோசலிச கொள்கைகளை கடுமையாக அவர்கள் தாக்கினர். நேரு தவறாக நாட்டிற்கு பாதகமான கொள்கைகளை அமுலாக்கும்போது அதை எதிர்த்து அறிவுரை சொல்வது தனது கடமை என்றார் ராஜாஜி. 1962 தேர்தலில் சுதந்திரா கட்சியை மக்களுக்கு தெரியும் அளவிற்கு கொணர்ந்தனர். 1967ல் தமிழகத்தில் காங்கிரசை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்திட உதவினார். ஆனால் சுதந்திரா தேர்தலில் சோபிக்கவில்லை.
அணுஆயுத சோதனைகளுக்கு எதிராக அவர் பிரச்சாரங்களை செய்தார். அமெரிக்கா, சோவியத் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். அமெரிக்க அதிபரை சந்திக்கும் காந்தி சமாதான தூதுக்குழுவிற்கு தலைமை ஏற்று சென்றார். இளைஞராக இருந்த கென்னடி எவ்வித புரொட்டோகாலும் பார்க்காமல்  ராஜாஜி அவர்களை வரவேற்ற நிகழ்வை  பி கே நேரு பதிவு செய்துள்ளார். முதலில் 20 நிமிடம் என ஒதுக்கப்பட்ட சந்திப்பு 75 நிமிட உரையாடலாக மாறியது. அய்நா பொதுச்செயலர் ஊதாண்ட் அவர்களுடனும் சந்திப்பு நிகழ்ந்தது. இந்தியாவிற்கு வந்த குருஷேவ் அவர்களை சந்தித்து  நியுக்ளியர் சோதனை தடை குறித்து ராஜாஜி விவாதித்தார்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து கவலையுற்றார் ராஜாஜி. ஷேக் அப்துல்லா சிறைக்காவல் குறித்து விமர்சித்தார். அவர் பள்ளிகளில் இந்தியை அறிமுகப்படுத்தியவராக இருந்தாலும் இந்தி பேசாத மாநிலங்களில் கட்டாய இந்தி திணிப்பு என்பதற்கு எதிராக குரல் கொடுத்தார். உலக ஆட்சிமுறை, உலக அரசாங்கம் என்பது குறித்து அவர் பேசிவந்தார். நாடுபிடிக்கும் எண்ணத்தில் இல்லாமல் உடன்பாட்டின் அடிப்படையில் நாடுகள் போர் எண்ணங்களிலிருந்து வெளியேற வற்புறுத்தி வந்தார்.
பொறுமை கொண்ட வாழ்விற்கும் புரிவுணர்வு மேம்படுவதற்கும் மதம் அவசியம் என கருதியவர் ராஜாஜி. சமுக சேர்ந்திசைக்கு மத நெறிகள் அவசியம் என்றார். மதம் அபின் அல்ல - சமுகத்தின் சக்திக்கான அஸ்திவாரம் என மார்க்சிய கருத்திற்கு பதில் வைத்திருந்தார். அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு ஆதரவாக இயங்கக் கூடாது என்றாலும் மதங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கருதினார். இந்திய சமூகம் ஒருபோதும் மதமற்ற சமுகமாக மாறிவிடாது என்பதில் தனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். கல்வியில் வளர்ச்சி பெற்ற பின்பும் சமூகம் அவ்வாறுதான் இருக்கும் என்றார். இது இந்து மதத்திற்கு மட்டுமல்ல, சீக்கிய, இஸ்லாமிய சமுகத்திற்கும் பொருந்தும் என்றார். Get rid of superfluous forms and superstitions and back to basic religion என்பது அவரது முழக்கமாக இருந்த்து. ஒழுக்கநெறியில்லா மதம் கலோரி தராத வைட்டமின் போலத்தான் என்பார்
 அலிகார் முஸ்லீம் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றியபோது இஸ்லாமோ, வேதாந்தமோ அவை ஒன்றின் புகழுக்கு மற்றது என துணை நிற்கவேண்டும். ஒன்றின் அழகை மற்றது வியக்கவேண்டும் என பேசினார். Love thy neighbour and do unto others as you என்பதில் பைபிளும் கீதையும் ஒன்றாகவே பேசுகின்றன என்றார். அனைத்து வழிபாடுகளையும் ஒன்றிணைப்பதிலும் அதில் இணக்கம் கொணர்வதிலும் கீதை பங்காற்றுகிறது என்றார். அவர் பகவத்கீதை குறித்து தனியாக விளக்கம் எழுதியுள்ளார். தன்னை பொறுத்தவரை விஞ்ஞானத்தை மதத்திற்கு எதிராக நிறுத்தவேண்டிய அவசியமில்லை. மூடதனத்திற்கு எதிராக வேண்டுமானால் நிறுத்தலாம் என்கிறார்.  மதப்பற்று இருப்பதால் ஒருவர் மதசார்பின்மைக்கு எதிரானவரல்ல. மதம் மக்களை பிரித்துவிடக்கூடாது என்பதில்தான் மதசார்பின்மை இருக்கிறதே தவிர மதம் கூடாது என்பதில் அல்ல என்ற  புரிதல் அவரிடம் இருந்தது.
அதிகம் கற்க கற்க பெரும் வார்த்தைகள் புலமையல்ல என அவர் புரிந்து கொள்ளத்துவங்கினார். சில நேரங்களில் அவை குழப்பத்தை தருவதாகவும் உணர்ந்தார். அவர் பெரும் உரையாடல்காரராக இருந்ததால் அவரது  திறம் பலராலும் உணரப்பட்டது. திருக்குறளும், ரூசோவும், சாக்ரடிஸ், பிளாட்டோவும் உரையாடலில் கூட வருவர். நகைச்சுவை உணர்வுகளை அவர் வெளியிட தவற மாட்டார் என அவரைப் பற்றி அறிந்த விஜயராகவாச்சாரி குறிப்பிடுகின்றார். இடையிடையே தன்னைத்தானே கேலியும் செய்து கொள்வார். எந்தப் பொருள் குறித்த விவாதமாக இருந்தாலும் அதில் நடைமுறை ஞானம்கொண்ட ரிஷி போலவே அவர் இருப்பார் என்ற பதிவையும் அவரது நண்பர்கள் தருகின்றனர். இரு விஷயங்களை கற்று தெளிவோம் என்பார். நம்மை மற்றவர் எப்படி பார்க்கின்றனர் என்பதை நாமும் பார்க்க கற்போம். மற்றவர்களின் கருத்திற்கு பயந்தால் நம்மால் ஏதும் செய்யமுடியது என்பதை அறிவோம். சரி என நாம் உணர்வதை செய்யத் துவங்கினால் எல்லாம் சரியாகும் என்பது அவரது துணிபு.
விமோசனா, பவான்ஸ்ஜேர்னல், சுயராஜ்யா, கல்கி, கோகுலம் ஆகியவற்றில் அவர் எழுதிவந்தார்.  Chemistry on the Front Verandah, The domestic life of Plants, Raman Effect போன்ற அறிவியல் செய்திகள் குறித்தும் அவர் எழுதினார். ராஜாஜியின் இந்தி திணிப்பு எதிர்ப்பை ராஜேந்திரபிரசாத் விமர்சித்தார். வடக்கு தெற்கு என பேதம் வளர்க்கிறார் என குற்றம் சாட்டினார். இதற்கு ராஜாஜி ஏதோ நாட்டில் இப்போது ஒற்றுமை இல்லாதது போலும் இந்தி ஏற்கப்பட்டால் மட்டுமே ஒற்றுமை வரும் என பேசுவது அபத்தம் என பதில் அளித்தார். நாட்டின் ஒற்றுமை குறித்த அக்கறையில் தான் யாருக்கும் குறைவானவன் அல்ல என்றார். 1937ல் கட்டாய பாடமாக இந்தியை அவர் கொணர்ந்தபோது எதிர்ப்பை அவர் உணர்ந்தவர். தென்னிந்தியர் சுயவிருப்பத்தில் இந்தி கற்றுக்கொள்வது அவசியம் என்ற கருத்தும் அவரிடம் இருந்தது.
I Meet Rajaji என்கிற புத்தகத்தை மோனிகா ஃபெல்டன் எழுதினார். அவர் ராஜாஜியிடம் உங்களை நவீன சக்ரடீஸ் என்கிறார்களே என கேட்டபோது  சாக்ரடீஸ் கேள்விகளாக கேட்டவர்- நான் பதில்களை சொல்லிக்கொண்டிருப்பவன் என்றார். அதே நேரத்தில் தன்னை தாழ்த்திக்கொண்டு விண்மீன் ஒன்றுடன்  தீக்குச்சியை ஒப்பிட வேண்டாம் என்றார். அவரது ஹாஷ்ய உணர்வு குறித்து பலரும் பேசியுள்ளனர். கஸ்தூரிபாய் திருசெங்கோட்டில் பேசிய ஆங்கிலம் குறித்து ராஜாஜி கிண்டல் செய்கிறாரோ என்ற உணர்வில் கஸ்தூரிபாய் எனது இங்கிலீஷ் தப்பா என கேட்டபோது , இல்லை அது  Ba  இங்கிலிஷ் என்று சமாதானப்படுத்தினார் ராஜாஜி.. மொரார்ஜி அவர்களின் பட்ஜெட் குறித்து வலது பட்ஜெட்டா- இடது பட்ஜெட்டா என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. ராஜாஜி தனது பதிலாக Morarji's budget is neither right nor left but wrong என பதிலளித்தார்.
1937ல் ராஜாஜி கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்து சாதாரண மக்களை மீட்க சட்டம் என சொன்னபோது, டி டி கே அவர்கள் கடன் புள்ளிவிவரம் இருக்கிறதா என்றார். கொசு கடித்தால் வலை வாங்கவேண்டும், கொசு ஜார்ஜ் டவுனில் எவ்வளவு என  டி டி கே கணக்கு எடுத்துக்கொண்டிருக்க கூடாது என்றார். ஒருமுறை நேருவுடன் விவாதம் வந்தபோது, நேரு என்னிடம்தான் பெரும்பான்மை இருக்கிறது என்றார். அதற்கு ராஜாஜி ‘yes, Jawahar, the majority is with you, but logic is with me ' என்றார். ஒருமுறை பயணம் ஒன்றில் கூட பயணித்த ஆங்கிலேயர் ராஜாஜியுடம் வெப்பம்  மிக அதிகமாக இருக்கிறதே என்றார். ராஜாஜி சூடு போதாது. இன்னும் அதிகமானால்தான் உங்களை வெளியேற்ற முடியும் என்று இரட்டை தொனியில் பதில் தந்தார். சமரசம் கூடாது என கருதியவர் ராஜாஜி. அது ஒருவகை ஏமாற்று என்பார்.

1966 அக்டோபரில் அய்நா சபையில் திருமதி எம் எஸ் சுப்புலஷ்மி அவர்கள் ராஜாஜி கம்போஸ் செய்த பாடல் ஒன்றை பாடினார். எல்லா நாடுகளும் இக்கூரையின் கீழ் புரிதலுடன் ஒன்றாகட்டும் வெறுப்பும் பயமும் தொலையட்டும்  என்கிற பொருள்தரும் பாட்டு அது. ஜேன் ஆஸ்டன் எழுத்தின் வலிமையை பெண்கள் குறித்த் சிக்கலான உணர்த்தலை அவர் பாராட்டி பேசுவார். பிரிட்டிஷ் பெண் எழுத்தில் அந்த அளவிற்கு வேறு யாரிடமும் வலிமை இல்லை என்பார்.ஆர். கே நாரயண் எழுத்தை ரசித்துவிட்டு கடவுள் அருள் புரியட்டும் என்று  வாழ்த்து அனுப்பினார். பாரதி பாடல்கள் பதிப்பிக்கப்பட உதவினார். சர் சி ராமனுக்கும் உதவியிருக்கிறார் என அறிகிறோம். நமக்கு உதவும் அனைத்து கருவிகளையும் சரியாக பாராமரிக்கவேண்டும் என்பார். அதைக்கூட அடிமை போல் நடத்திக்கொண்டிருக்கக்கூடாது என சொல்வார்.

புகையிலை தீங்கை அவர் எடுத்துரைத்தவர். Don't make your mouth a poison factory என்பார். அதே போல் பி சி ஜி யை கடுமையாக அவர் எதிர்த்தவர். ராஜாஜி- காமராஜ் இடையில் கசப்புகள் இருந்தன. காமராஜருக்கு 61ஆம் பிறந்தநாள் அன்று அவர் ஊர்வலமாக சத்தியமூர்த்திபவனுக்கு அழைத்துவரப்படுகிறார். அங்கு வாழ்த்த காத்திருந்தவர்களில் ஒருவராக ராஜாஜி இருந்தார். என்னைவிட அதிக ஆண்டுகள் வாழ்வீர் என வாழ்த்தினார். 1948ல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அய் நா சபை நிகழ்வொன்றில் நூலக தந்தை ரங்கநாதனை பார்க்கிறார். அவரை அருகில் அழைத்து தமிழில் கவர்னர் ஜெனரல் போலவே  பேராசிரியரும் நூலகரும்  நல்லதுதான் முன்னால் வந்து அமர்க என்றார்.
ராஜாஜி தன் வாழ்நாளில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானவர். மனுதர்மவாதி, குலத்தொழில் செய்ய சொல்லியவர், இந்திக்கு ஆதரவாக இருந்தவர், சோசலிச கருத்துக்களுக்கு விரோதமாக  பேசியவர், மொழிவாரி மாநிலங்களை எதிர்த்தவர் என ஏராள விமர்சனங்களுக்கு ஆளானவர்.
"ஶ்ரீ இராஜகோபாலாச்சாரியார் என்கிற ஓர் அய்யங்கார் பார்ப்பனர், தமிழ்நாடு முழுவதும் பெரிய சீர்திருத்தக்காரர் என்று பெயர் வாங்கியவர். தமிழ் மக்களையெல்லாம் அடியோடு ஏய்த்தவர். தனக்கு சாதி வித்தியாசம் இல்லை என்பதாகச் சொல்லிக் கொண்டும், தன்னிடம் பார்ப்பனத்தன்மை இல்லை என்று சொல்லிக் கொண்டும், பார்ப்பனீயத்தை விட்டு வெகுகாலமாகிற்று என்று சொல்லிக் கொண்டும், சில பார்ப்பனரல்லாத வாலிபர்களை ஏமாற்றிக் கொண்டும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழித்து, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் இந்தியாவில் உள்ள பார்ப்பனரெல்லோரையும் விட அதிகமான கவலையும், அதற்கேற்ற சூழ்ச்சியும் கொண்டவர்." என குடியரசு (25.3.1928) விமர்சன பதிவு உள்ளது.

ராஜாஜி பெரியார் நட்பு பற்றி அனைவரும் அறிவர். பெரியார் ஒருமுறை அவரை சந்தித்துவிட்டு 1936ல் எழுதிய பதிவின் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.
“ஆச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. ஆச்சாரியாரைப் பற்றி அரசியல், பொதுநலத்தில் மாறுபட்ட அபிப்ராயம் கொண்டிருந்தாலும், கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தாலும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டு. நான் அவரது அன்புக்குப் பாத்திரமானவன். ..ஒத்துழையாமை ஆரம்பமானவுடன் நான் அவருடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்ட காதலி போலவே இருந்துவந்தேன். எங்களுக்குள் வெகுநாள் ஒத்துழையாமையிலே அபிப்ராய பேதமே இல்லா திருந்தது. அவர் இஷ்டத்தை அறிந்து, அதுவே என் அபிப்ராயம்போலக் காட்டி இணங்கச் செய்வதுபோல ஒவ்வொரு விஷயத்திலும் நடந்துகொள்வேன். அதனாலேயே அனேகர் என்னைக் கண்டுவிட்டே அவரைக் காணுவார்கள், அப்படிப்பட்ட நிலை.
வகுப்புணர்ச்சி காரணமாகவே இருவருக்கும் மாற்றம் அடைய நேரிட்டது. அதன் பிறகு பல சம்பவங்கள் ஏற்பட்டுவிட்டன என்றாலும், அவரைக் காணும் போது என்னை அறியாமலே அவரிடத்தில் ஒரு மரியாதையும் பணிவும் ஏற்பட்டுவிடுகின்றன. அவரைக் காணும்போது எப்படி மரியாதையும் பணிவும் ஏற்படுகிறதோ, அதுபோல ஒரு பரிதாபமும் ஏற்படாமல் இருப்பதில்லை. காரணம், அவ்வளவு பெரிய தியாகம் செய்தவர். அவ்வளவு தியாகமும் ஒரு பயனும் இல்லாமல் போகும்படியாய்விட்டதே பாவம் என்று பரிதாபப்படுவதுண்டு என்றாலும், அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு மூன்று அர்த்தம் செய்துபார்க்காமல் நான் ஒரு முடிவுக்கும் வருவதில்லை
சேலத்தில் ராஜாஜிக்கு கெட்டிக்கார வக்கீல் என்ற பெயரோடு, புத்திசாலி என்ற பெயரும் யோக்கியர் என்ற பெயரும் ஏற்பட்டுவிட்டது. அவரை எனக்கு 1910-ம் ஆண்டு வாக்கிலிருந்து தெரியும். ராஜாஜி 1912 வாக்கில் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிடுவார். இதனால் அவரிடம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது அவர் ஒரு பகுத்தறிவாதியாகவே நடந்துகொண்டார்.
வ.வே.சு. அய்யரை எனக்கும் பிடிக்காது. ராஜாஜிக்கும் பிடிக்காது. அவர் சீனிவாச அய்யங்கார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, என்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். ராஜாஜி ஓட்டு சேகரம் செய்து அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். எனக்கும் ஆச்சாரியாருக்கும் இடையே உள்ள நட்பு கணவன் - மனைவிக்கும் உள்ளது போன்றது. உற்சாகம் காரணமாக, தனிப்பட்ட முறையில் சமுதாயத் தொண்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த என்னை முழுக்க முழுக்கச் சமுதாயத் தொண்டனாக ஆக்கிய பெருமை ராஜாஜிக்கே உரியதாகும்.” (குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்தது குறித்து  பெரியார் அவர்கள் 1936 ஜூலை 14-ம் தேதி ‘குடிஅரசு இதழில் )
The Nation’s Voice  என காந்தியின் இங்கிலாந்து உரைகளை ராஜாஜி, குமரப்பாவுடன் தொகுத்து வெளியிட்டார். 1956-61 வரை அவர் சுயராஜ்யாவில் எழுதிய கட்டுரைகள் 1000 பக்கங்களுக்கு மேல் சத்யமேவ ஜெயதே என்ற  இரண்டு நூல் தொகுப்பாக வெளிவந்தது. மதம், உபநிடதம், மொழி, நீதி, விமர்சனம், தேர்தல் வாக்கு, வெளிநாட்டு உறவுகள், காஷ்மீர்- பாகிஸ்தான் பிரச்சனைகள், அரசியல் மதிப்பீடுகள், மத்திய மாநில உறவுகள்- சுயாட்சி, நிலப்பிரச்சனை, கீதை-குறள், நம்மாழ்வார் பாசுரம், உணவு பற்றாக்குறை, காங்கிரஸ் இயக்கம், சோசலிசத்தில் சுதந்திரம், நல் இலக்கியம், இராணுவ செலவு மற்றும் அன்றாடம் மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள்-அரசியல் குறித்து எழுதினார். அவரது ஆங்கில கட்டுரைகள்  நீளமாக இருக்காது. மிக சிறிய அளவு கட்டுரைகளாகவே இருந்தன.
ராஜாஜி இலக்கிய ஆளுமை என ஏற்கப்பட்டு இலக்கிய உலகில் கொண்டாடபடாவிட்டாலும் அவர் ஏராளம் எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக ஆத்திசூடி விளக்கம், நல்வழிபடுத்தும் உபதேச கதைகள், சமுக விழிப்புணர்வு கதைகள் என 60க்கும் மேற்பட்டு எழுதியிருப்பதாக தெரிகிறது. கண்ணன் காட்டிய வழி என கீதை விளக்கமளித்தவர். ஆங்கிலத்திலும் கீதை குறித்து எழுதியுள்ளார். உபநிடத பலகணி என 25 கட்டுரைகள் எழுதினார். திருக்குறள் குறித்து அவர் 90க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியதாக தெரிகிறது. பஜகோவிந்த விளக்கம், ராமகிருஷ்ணர் உபநிடதம், திருமுலர் தவமொழி, ராமாயணம், மகாபாரதம் எழுதியவர். மனதிற்கு அமைதியில்லாத காலங்களில் மகாபாரதம் படிப்பது வழக்கம் என்பார். ராஜாஜியின் சிறுகதைகளை parables- குறிப்பிட்ட உண்மையை கதை மூலம் எடுத்து சொல்லும் உவமை கதைகள் என சிவத்தம்பி கூறுகிறார். ராஜாஜி கவிதை, பாடல் ,நாடகம் குறித்து கல்கி வெங்கடேஷ் தனது நூலில் விவரிக்கிறார்.
நாவிலெழுந்ததை எழுந்தபடி நவில்கிறேன்-பாவிலக்கணம் பயிலாதவன் என நேர்மையாக ராஜாஜி பதிவு செய்கிறார். சத்திய நெறியில் நின்று அச்சம் என்பது சிறிதும் இல்லாமல் அதர்மத்தை கண்டவிடத்து அதனுடன் போர்புரிந்து நிற்பவனே சத்தியாக்கிரகி என்கிறார் ராஜாஜி. அவர் சாக்ரடிஸ், மார்க் அரேலியர் ஆகியோர் ஆக்கங்களையும் தமிழர் அறிய தந்தவர் அவர். Rescue Democracy from Money Power என்ற ஆக்கத்தை எம் சி சாக்லா அறிமுகத்துடன், ஜெயபிரகாஷ் நாராயண் முன்னுரையுடன் ராஜாஜி எழுதினார். கல்கி இதழ் அவரில்லாமல் இல்லை என்ற அளவிற்கு அவருடன் இரண்டற கலந்த இதழ். கல்கி- டி கே சி ராஜாஜி உறவு பெருமளவு பேசப்பட்ட ஒன்று. ராஜாஜியின் ஆளுமை குறித்து இலக்கியகர்த்தா மஸ்தி வெங்கடேச அய்யங்கார் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். Rajaji Story- A warrior from South என்பதை ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ளார்.
1972ல் டிசம்பர் 25ம் தேதி அவர் மறைந்தார்.   எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வது கழுதையின் குணம் என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார். அவரின் ஏராள எழுத்துக்கள் மீதான விவாதம்- விமர்சனம்- மறுவாசிப்பு தற்போது பெருமளவில் நடைபெறுவதில்லை.

Ref:
Rajaji: Life nad Work  R K Murthi
The Political Career of C RajaGopalachari- A R H Copley
Satyameva Jayate

இந்திய இலக்கிய சிற்பிகள்- ராஜாஜி  ஆர். வெங்கடேஷ்

1 comment: