ராஜாஜி வாழ்வினிலே
ராஜாஜி டிசம்பர் 10 1878ல் தொரப்பள்ளி எனும் கிராமத்தில் சக்கரவர்த்தி அய்யங்கார் குடும்பத்தில் மூன்றாவது மகனாக பிறக்கிறார். சக்கரவர்த்தி ஓசூரில் கிராம முன்சீப் ஆக வேலை பார்த்து வந்தார். வாரிசுகளே பிறக்காதா என கவலைப்பட்ட குடும்பத்தில் வரிசையாக மூன்று ஆண்மகவுகள் பிறந்தன. பிறக்கும்போது நோஞ்சானாக எடை குறைவாக இருந்தார் ராஜாஜி. அவரது ஜாதகம்
ராமர், கிருஷ்ணர், சங்கரர், ராமானுஜர் போன்றவர்களை ஒத்து இருக்கிறது என வீட்டில் பேச்சு இருந்தது..
ஒன்று ஆள்வான் இல்லையேல் தோல்வியுற்று சாதிபிரஷ்டம் செய்யப்படும் அளவிற்கு வெளியேற்றப்படுவான்.. ஆயுள் கெட்டியானவன் 80யை தாண்டும் என சோதிடர் தனது கணிப்பை தந்திருந்தார்..
ராஜகோபாலா என தந்தை மகனுக்கு அவன் காதில் பெயரை உச்சரித்தார். பள்ளி படிப்பிற்காக குடும்பம் ஓசூரில் குடியேறியது. அங்கு நெசவாளர்கள் நூல் நூற்பதையும் வண்ணங்கள் செய்து துணி உருவாக்குவதையும் குழந்தை ராஜா குதுகுலமாக பார்த்து ஆச்சரியப்பட்டது. குத்தகைக்கு விவசாயியிடம் நிலம் விடப்பட்டிருந்தது. பெயர் குலுக்கிப்போட்டு எந்த நிலம் யாருக்கு என முடிவு எடுக்கும் பழக்கம் இருந்தது.
பார்ப்பவை அனைத்தும் குழந்தைகளுக்கு ஆச்சர்யமாக இருந்தன. பெரியவர்கள் கதை சொல்லி குழந்தைகளை தூங்க செய்வர். பெரும்பாலும் அவை ராமயண, மகாபாரத கதைகளாக இருக்கும். இல்லத்தில் மனித நற்பண்புகள், அன்பு , காருண்யம் போதிக்கப்பட்டன. அநியாயத்தை எதிர்த்தல், நியாயம் போற்றுதல், துணிவு, நேர்மை பற்றி குழந்தைகளுக்கு பெரியவர்கள் சொல்லி வந்தனர்.
உயர்நிலைகல்விக்கு மாணவன் ராஜா பெங்களூர் அனுப்பப்படுகிறான். அங்கு கரும்பலகை எழுத்துக்களை அவனால் காண முடியாத பார்வை தொந்திரவு ஏற்படுகிறது. கண்ணாடியா மூச் என தந்தை புரிந்து கொள்ளாமல் நவீனத்திற்கு பையன் ஆசைபடுகிறான் என நினைத்து மறுக்கிறார். தாய் கணவனை எதிர்த்து பேசாதவர். அப்பா சொல்படி கேள், அவருக்கு எல்லாம் தெரியும் என சொல்லிவிட்டர். மெட்ரிக் தேர்வு நெருங்கியது. மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது பார்வை பிரச்சனை குறித்து சக்கரவர்த்தியிடம் ராஜா தெரிவிக்கிறார். மருத்துவர் சோதித்து கண்ணாடி கிட்டுகிறது. ஆங்கில இலக்கியத்தை தேர்ந்த முறையில் கற்பித்த ஆசிரியரிடமிருந்து அதன் மீதான ஆர்வம் பற்றுகிறது. ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின், ஸ்காட் அறிமுகமாகின்றனர். அய்ரோப்பிய நாடுகளின் வளர்ச்சி, மக்கள் போராட்டங்கள், ஜனநாயகம், தேசபக்த வீர சாகசங்கள் குறித்த பார்வை கிடைக்கிறது.
அய்ரோப்பாவில் சிவில் சமூகம் உருவான வரலாறு அவரை கவர்கிறது. ஆங்கில அரசு முறைகள் பற்றி தெரிந்து கொள்ள துவங்குகிறார். அதே நேரத்தில் பாரம்பரியம் என்ற வகையில் இந்து புராணங்கள், வேத உபநிடதங்கள் அவர் மீது தாக்கம் செலுத்தின. மேற்கித்திய சிந்தனாமுறைகளுடன் நமது நாட்டின் மரபார்ந்த சிந்தனைகளையும் அவர் தன்னிடம் உறவாட அனுமதித்தார்.
1885 டிசம்பரில் இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கப்பட்டதை ராஜா அறிய
வந்தார். ஆலன் ஆக்டோவியன் ஹூயும் எவ்வாறு தனது உரையால் கவர்ந்திழுக்கிறார் என்பதும்
அவருக்கு தெரியவந்தது. மனிதர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவர்- தன்னலமறுப்பும்
சுயத்தியாகமும் நாட்டின் விடுதலைக்கும் மகிழ்ச்சிக்கும் துணைநிற்கும் என்ற உரை அவரையும்
ஈர்த்தது. இந்தியா என்ற ஒற்றை தேசிய சிந்தனை கருக்கொள்ள பிரிட்டிஷார் உதவியிருந்தாலும்
அவர்கள் இந்தியாவின் வளங்களை கொள்ளையடிக்கின்றனர். எப்போது இந்தியாவிற்கு விடுதலை என்ற
எண்ணம் வலுப்பட துவங்கியது. 1857 போராட்டம், தலைவர்களது எழுத்துக்களை அவர் படிக்கத்
துவங்கினார். சாக்ரடிஸ். ரூசோ, தோரோ, வாஷிங்டன்,
கரிபால்டி, மாஜினி எழுத்துக்களை தேடிப்படித்தார். தனது சிந்தனையும் நோக்கும் விரிவடைவதை
அவரால் உணரமுடிந்தது.
பட்டபடிப்பு தேர்வில் தமிழில் அவர் தேறவில்லை. தந்தை சட்டப்படிப்பு
என பேசிவந்தார். பின்னாட்களில் ஏராள நூல்களை
படித்து அவரின் தமிழறிவை மேம்படுத்திக்கொண்டார். தனது 17ஆம் வயதில் சட்டப்படிப்பிற்காக
சென்னை வருகிறார். கடற்கரை உலாவல் போதெல்லாம் மீனவ நண்பர்களுடன் உரையாட விரும்பினார்.
அவர்களின் மீன்பிடி சாகசங்கள் அவரை கடலில் செல்ல தூண்டியது. துடுப்பு போட மீனவர் உதவியுடன்
நண்பர்கள் கடலில் சென்றனர். அலைசீற்றம் தோணியை அலைக்கழித்தது. ஓடக்காரர் உதவியுடன்
உப்புமேலிட கரை திரும்பினர் நண்பர்கள். இயற்கையை மனிதன் கையாளும் திறன் குறித்து ராஜாவிற்கு
இந்த அனுபவம் பெருமிதம் தந்தது. சென்னையின் பிரம்மாண்டம் ஆரம்பத்தில் மலைக்க வைத்தாலும்
பெருநகரம் பழகியது. கோயில்கள், பக்தி சொற்பொழிவுகள் என ராஜா ஆரம்பத்தில் போய்க்கொண்டிருந்தார்
சில பொதுக்கூட்டங்களுக்கும் செல்ல வாய்ப்பு வந்தது. தனது சூழலில் பொது அறிவு ஏன் பொதுவாக
இல்லை என ஆச்சரியமடைந்தார்
சட்டநடைமுறைகளுக்கும் மத அனுஷ்டானங்களுக்கும் இடையில் இருவேறு
நிலைகள் இருப்பதை அவரால் உணரமுடிந்தது. தனது சட்ட அறிவால் ஏழைகளுக்கும் சுரண்டப்படுவோர்க்கும்
பயனளிக்கும் வண்ணம் நடக்கவேண்டும். காரணகாரிய குரலாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்
அவரிடம் கருக்கொள்ளத் துவங்கியது. 1897ல் சுவாமி விவேகானந்தர் சென்னை வருகிறார்.. அவரை
காணப்போகிறோம் என்ற எண்ணம் ஏராள இளைஞர்களுக்கும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. விவேகானந்தர்
வெறும் மத உரையாடலை மட்டும் நடத்தவில்லை. தேசத்தின் எதிர்காலம் விடுதலை கட்டுமானம்
குறித்தும் உரையாடி வந்தார். இந்தியா விடுதலையின் மூலம் தனது ஆன்மாவை மீட்டெடுக்கமுடியும்
என தெரிவித்து வந்தார். அதன் ஆன்மா என்னவென விளக்கி பேசிவந்தார். உயர்கல்வி பெற்றவர்கள்
சுயமுன்னேற்றம் என்பதில் தோய்ந்துவிடாது மனிதகுல மேன்மைக்காக தங்களை அர்ப்பணித்துக்
கொள்ளவேண்டும் என்றார் . சுவாமியிடமிருந்து
வெளிவந்த ஞானத்தெளிவு நிறைந்த உரையை ராஜா உள்வாங்கிக்கொண்டார். தேசபக்தி எனும் பொறி தன்னிடம் பற்றியதாக அவர் உணர்ந்தார்.
1890களின் இறுதியில் திலகரின் போராட்டங்கள் நாடுதழுவிய இளைஞர்களை தட்டி எழுப்பியது.
அவர்களின் ஆதர்சநாயகனாக திலகர் இருந்தார். ராஜாவும் திலகர்பாற் ஈர்க்கப்பட்டார்.
சேலத்தில் ராஜகோபாலன் தனது வழக்கறிஞ்ர் தொழிலை துவங்கினார்.
1900ல் அலமேலு மங்கம்மாளுடன் திருமணம் நடந்தது. 10 ஆண்டுகளுக்குள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
என பெயர் பெறலானார். ரோட்டரி உறுப்பினரானார். சீட்டாட்ட கிளப் உறுப்பினர், டென்னிஸ்
விளையாட்டு ஆர்வம் என உயர்தட்டு வாழ்க்கை அமைந்தது. அதேநேரத்தில் அரசியல் எழுத்துக்களுடன்
அவருக்கு தொடர்பு இருந்தது. காந்தியின் எழுத்துக்களும் அவரிடம் வந்து சேர்ந்தன. அதில்
உள்ள மானுட நியாயங்கள் சரியாகவும் உணமைக்கு நெருக்கமாக உள்ளதாகவும் ராஜகோபாலாச்சாரி
கருதினார். வழக்கு ஒன்றை சாதித்து தனது தரப்பு குற்றவாளியை விடுவித்த பெருமையில் ராஜகோபாலாச்சாரி
தனது தந்தை, நண்பர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். நண்பர் ஒருவர் உனது வாதத்திறமையால்
நீ காப்பாற்றியது ஒரு கொலைகாரன் என அறிந்திடு என்றார். ராஜகோபாலாச்சாரி தன்னை தற்காக்கும்
வாதங்களை அப்போது வைத்தாலும், மனசாட்சியின் உறுத்தலை உடனடியாக உணர்ந்தார். உடலை வறுமை காரணமாக விற்க
நேரிடும் வேசியைக்கூட மன்னிக்கலாம்- ஆனால் அறிவு வேசித்தனத்தை மன்னிக்கக்கூடாது என
அவர் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டார். இனி வேண்டாம் இந்த தொழில் என எழுந்தார். அவர்
மனக்காயத்தை அந்நேரத்தில் எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது வீடு மனிதர்களால்
சூழப்பட்டிருக்கும். குழந்தைகளின் குதுகூலம் நிறைந்திருக்கும்.
1905 கர்சான் செய்த வங்கப்பிரிவினை ராஜகோபாலாச்சாரியிடத்தும்
பாதிப்புக்களை உருவாக்கியது. இந்து - முஸ்லீம்
மத மோதலுக்கான சதி என நண்பர்கள் பேசிக்கொண்டனர்.
ஆனால் தேசிய புரட்சிகரவாதிகளின் வன்முறை நடவடிக்கைகளில் ராஜகோபாலாச்சாரி அதிருப்தியுற்றார்.
வன்முறை வழியாகாது என கருதினார். வ உ சியின் சுதேசி கப்பல் முயற்சி அவரை கவர்ந்தது.
அதற்கு துணை நிற்கவேண்டும் என்ற எண்ணத்தில் ரூபாய் ஆயிரத்தை அவருக்கு அனுப்பினார்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை எனும் திலகரின் முழக்கம் அனைத்து நகர்களுக்கும் பரவியது.
ராஜகோபாலாச்சரியார் திலகருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் உறுப்பினராக
ஆனார். 1885 காங்கிரஸ் துவக்கத்திலேயே பங்கேற்ற விஜயராகவாச்சாரியாரும் ராஜாஜியை ஈர்த்தார்.
1906 கல்கத்தா மாநாட்டில் விவாதங்களை கவனித்தார் ராஜாஜி. திலகர் வாதங்களால் அவர் ஈர்க்கப்பட்டார்.
1907ல் சூரத் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் வேறுபாடுகள் முற்றியது. திலகரின்
ஆவேச உரையின்போது அமளி ஏற்பட்டது. சார்பாளர்கள் மத்தியில் மோதல் தாக்குதல் நடைபெற்றது.
பெரொஷா மேத்தா மீது செருப்பு வீசப்பட்டது.
திலகர் அனல்பறக்கும்
கேசரி எழுத்துக்களால் கைது செய்யப்பட்டு மாண்டலே சிறையில் வைக்கப்பட்டார். 1908 மெட்ராஸ்
மாநாட்டில் பிரதிநிதிகள் அனுமதியில் சாத்வீகவாதிகள் என அறியப்பட்ட மாடரேட்கள் ஜனநாயக
விரோதமாக நடக்கிறார்கள் என ராஜாஜிக்கு தோன்றியது. ராஜாஜி தனது நண்பர்களுடன் ஆலோசித்து
அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தீவிரவாதிகள்- திலகர் ஆதரவாளர்கள் பலருக்கு சார்பாளர்
அனுமதிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டதை ராஜாஜி எதிர்த்தார். அவரால் பார்வையாளராக மட்டுமே
பங்கேற்க முடிந்தது. விவாதங்களில் பங்கேற்க முடியவில்லை. குதிராம் போஸ் குண்டெறிந்தது
குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் விவாதம் நடந்தது. காந்தி குறித்து பலரும் கேள்விப்பட்டிராத
நிலையில் அகிம்சை முறையில் தென்னாப்பிரிக்காவில் அவர் போராடி வருவதை ராஜாஜி மற்றவர்களிடம்
பகிர்ந்து கொண்டார். மெட்ராஸ் மாநாடு ராஜாஜிக்கு சோர்வை ஏற்படுத்தியது.
ராஜாஜி தனது வக்கீல் தொழிலில் கவனம் செலுத்தினார். ஒருநாள்
இரவுபணிமுடிந்து திரும்பும்போது கொள்ளைக்காரர்கள்
மறிக்கிறார்கள் என எண்ணி தனது ரிவால்வாரால் ஒருவரை சுட்டுவிடுகிறார். பின்னால் அவர்கள்
டோல்கேட் பணியாளர்கள் என தெரியவருகிறது. தனது தவறுக்கு வருந்தி உடன் அப்பணியாளரை மருத்துவமனைக்கு
எடுத்துச்சென்று காப்பாற்ற முயற்சிகள் எடுக்கிறார். உயிர்பிழைத்த அவருக்கு நட்ட ஈடும்
தருகிறார்.
சேலத்தை சுற்றி சமுக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடவேண்டும்
என செயல்பட துவங்கினார் ராஜாஜி. விதவை திருமணம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்கிறார். அவரின்
இச்செயலால் அவரது சாதிக்காரர்கள் கடும் எரிச்சல் அடைகின்றனர். அவரை சாதிநீக்கம் செய்யவேண்டும்
என்கின்றனர். அவர் வீட்டு நிகழ்வுகளுக்கு செல்லக்கூடாது என முடிவெடுக்கின்றனர். அவரது
தந்தையுடனும் வாக்குவாதம் வருகிறது. தங்கள் சாதி பெரியவர்களை பகைத்துக் கொள்ளவேண்டாம்
என்ற அறிவுரை தரப்படுகிறது. அனைவரும் கடவுளின் குழந்தைகள்தான் - சமமானவர்கள்தான் என்கிறார்
ராஜாஜி. சம்பிரதாயம்- சமுக பழக்கம் என்ற பெயரில்
அந்த சிறுவயது பெண் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது சரியல்ல என்கிறார். கலப்பு மணங்கள்
தவறல்ல என்றார். சேரிப்பகுதிவாழ் தீண்டப்படாதவர் என வைக்கப்பட்டிருக்கும் மக்களை உயர்த்திடவேண்டும்
என பேச துவங்கினார்.
கர்நூல் மாநாட்டுநேரத்தில் காந்தியின் ஹோம்ரூல் – ஹிந்த்
சுயராஜ் புத்தகம் அவருக்கு கிடைத்தது. காந்தியடிகள் மீதான மரியாதை கூடியது. பிரிட்டிஷார்
தலைநகரை டெல்லிக்கு மாற்றுவது என்ற பெயரில் டெல்லி தர்பார் என அதீதமாக வீண் செலவு செய்வதை
கண்டு ராஜாஜி நொந்துபோனார். பிரிட்டிஷாரை விரட்ட வழி ஏதுமில்லையா என்ற கவலை அவரிடம்
தொற்றியது. இதற்கிடையில் வைஸ்ராய் ஹார்டிங்
மீது குண்டுவீசப்பட்டது என்ற செய்தி பரவியது. புரட்சியாளர்களின் தைர்யம் என்பதை பாராட்டலாமே
ஒழிய இதன் மூலம் பலன் ஏதும் ஏற்படாது என கருத்து தெரிவித்தார் ராஜாஜி.
1913ல் மாடர்ன்ரிவ்யூ பத்திரிக்கை காந்தியின் சிறை அனுபவங்களை
வெளியிட்டிருந்தது. அதனை தனது முன்னுரையுடன் புத்தகவடிவில் ராஜாஜி கொணர்ந்தார். விற்றுவந்த
பணத்தையும் கோகலே மூலம் காந்திக்கு அனுப்பினார். 1915ல் காந்தி இந்தியா வந்திருந்தார்.
காந்தி நாட்டின் பல்வேறுபகுதிக்கு சென்று வரவேண்டும் என கோகலே அறிவுறுத்தினார். பிரிட்டிஷார்
யுத்தத்திற்கு ஆளெடுப்பு செய்வதை நியாயப்படுத்தியும், தான் பிரிட்டிஷ் விசுவாசி எனவும்
காந்தி உரையாற்றினார். முரண்பாடாக காந்தி பேசுவதில் சிலர் அதிருப்தி அடைந்தனர். ராஜாஜி
காந்தியை புரிந்துகொள்ள முயல்வோம் என்றார்.
ராஜாஜி தனது 37ஆம் வயதிலேயே மலேரியா காய்ச்சல், ஆஸ்த்மா நோய்
அவதிக்கு உள்ளானார். அவரது துணைவியாரும் படுக்கையில் கிடந்து ஆகஸ்ட் 1915ல் மறைந்தார்.
மறுமண கோரிக்கையை அவர் நிராகரித்தார். தனது குழந்தைகளை காப்பது, தேசம் காப்பது என்ற
பணிகளை எடுத்துக்கொண்டார். 1916 லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சி கோரிக்கை வலுப்பெற்றது.
சம்பரான் விவசாயிகள் போராட்டத்திற்கு காந்தி உத்வேகம் கொடுத்தார். அன்னிபெசண்ட் அம்மையார்
ஹோம்ரூல் இயக்கத்தை வலுப்படுத்திக் கொண்டிருந்தார். ராஜாஜிக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது.
அன்னிபெசண்ட் , அருண்டேல் கைது செய்யப்பட்டனர். மெட்ராஸ் கவர்னரின் நடவடிக்கையை கண்டித்து
ராஜாஜி பத்ரிக்கைளில் எழுதினார். கண்டன கூட்டங்களை நடத்தினார். இந்த சூழலிலும் அரசாங்கம்
அவரை சேலம் முனிசிபாலிட்டிக்கு தலைவராக்கியது. இப்பதவி மூலம் சேரிப்பகுதிகளுக்கு தண்ணீர்
வசதி, பள்ளிக்கூடம் ஆகியவற்றை கொணர்ந்தார்.
பிராமணர் எதிர்ப்பு, பிற சாதிகளின் நலன்களைமுன்னிறுத்தி நீதிகட்சி
1917ல் மெட்ராஸில் உருவாகிறது. பெசண்ட் அம்மையார் இவ்வமைப்பை விமர்சிக்கிறார்கள். அவருக்கு
’ஐரிஷ் பாப்பாத்தி’ என்ற பதிலடியை நீதிகட்சியினர் தருகின்றனர். கல்வி, வேலை என்பதற்கு
போராடுவது அவசியம்- ஆனால் பிரிவினை அரசியல் ஆபத்தானது என்ற கருத்து ராஜாஜியிடம் இருந்தது.
காங்கிரஸ் தலைமையின்கீழ் விடுதலைக்கு போராடுவது என்ற லட்சியத்திலிருந்து விலகல் கூடாது
என பேசிவந்தார். 1918ல் சி ஆர் தாஸ் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிட்டியது.
1919ல் ராஜாஜி மெட்ராஸில் குடியேறினார்.
1919ல் ஜனநாயகவிரோத அடக்குமுறை ரெளலட் பரிந்துரைகள் அடங்கிய மசோதா தாக்கல் நடைபெற்றது.
காந்தியும் பார்வையாளர் வரிசையில் இருந்தார். இந்தியர் உணர்வுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை.
காந்தி மார்ச்சில் சென்னை வந்து ராஜாஜியுடன் தங்குகிறார். அப்போழுதுதான் ராஜகோபாலாச்சாரி என்பதை ராஜாஜி என சுருக்கி காந்தி
அழைக்கத் துவங்கினார். தாகூர் வைத்த மகாத்மா என்ற பெயரிலேயே ராஜாஜி காந்தியை அழைக்க
துவங்கினார். ஏப்ரலில் ஹர்த்தால் என்ற முடிவை ராஜாஜியை கலந்தாலோசித்து மெட்ராஸில்தான்
காந்தி அறிவிக்கிறார். அமிர்தசரசில் பிரிட்டிஷ் மாது ஒருவர் தாக்கப்பட்டர் என்பதற்காக
அடக்குமுறை நிகழ்கிறது. இதை கண்டித்து ஜாலியன்வாலாபாக்கில் ஏப்ரல் 13, 1919ல் கூட்டம்
ஏற்பாடு செய்யப்படுகிறது. மக்கள் திரளக்கூடாது என்கிற அறிவிப்போ தடுப்போ ஏதுமில்லை.
இரண்டு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் ஜெனரல் டயர் அங்கு முகாமிட்டு அப்பாவி
மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிசூடு நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கானவர்
சுடப்பட்டு மரணித்தனர். சாவு எண்ணிக்கை குறித்து பல்வேறு கணக்கீடுகள் வெளிவந்தன. ஆயிரக்கணக்கானோர்
படுகாயமுற்றனர்.
1920ல் காந்தி சென்னை வந்தார். ராஜாஜியுடன் தங்கினார். திலகர்
மறைந்திருந்த நேரமது. கிலாபத் இயக்கம் சூடுபிடித்தது. 1920 டிசம்பரில் நாக்பூரில் காங்கிரஸ்
கூடியது. காந்தி விடுதலை இயக்கத்தின் ஏகோபித்த தலைவராக ஏற்கப்பட்டார். ராஜாஜி தனது
வக்கீல் தொழிலைவிட்டார். முழுநேர தேசப்பணி என்றார். தந்தைக்கு காந்திமீது பெரும் சீற்றம்..
தனது மகனின் வாழ்வை கெடுத்துவிட்டார் என்றும் அவரை நான் கேட்கப்போகிறேன் எனவும் திட்டி
வந்தார். காந்தியை கண்டவுடன் தன் மகன் அவருடன் மக்கள் சேவையில் ஈடுபட்டதில் மிகவும்
சந்தோஷம் என்றார். காந்தி அப்பெரியவரையும் ஈர்த்துவிட்டார். காதி இயக்கம், அந்நிய துணிகள்
பகிஷ்கரிப்பு போன்ற இயக்கங்களில் மக்களோடு மேலும் நெருக்கமானார் காந்தி. காந்தியுடன்
விவாதிப்பதில் முடிவெடுப்பதில் ராஜாஜி பக்கபலமாக நின்றார். காந்தியின் மனசாட்சி என
அவர் கருதப்படலானார். சிவில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது ராஜாஜி கைது செய்யப்பட்டு
சிறைக்கு அனுப்பப்பட்டார். வசதியாக வாழ்ந்தவர்க்கு புதிய அனுபவம். ஜனநாயகம், அதிகாரம்,
லஞ்ச ஊழல் ஆகியவை குறித்து சிறைகுறிப்புகள் எழுதினார். 1922 பிப்ரவரி செளரி செளரா நிகழ்வு
காந்திக்கு துயரை தந்தது.
காந்தி மிக சாதரண சிறை அறை ஒன்றில் தலையணை கூட இல்லாமல் வைக்கப்பட்டிருந்ததை
ராஜாஜியும், தேவதாஸும் கண்டனர். யங் இந்தியாவின் பொறுப்பை ராஜாஜி ஏற்றுக்கொண்டார்.
Comments
Post a Comment