III ராஜாஜி வாழ்வினிலே
தென்னிந்தியாவில், சென்னையில் அவருக்கு எதிர்ப்பு இருந்ததால்
அவரை தேசிய அளவில் பயன்படுத்துவது என முடிவெடுத்தனர். பிரிட்டிஷாரின் மிஷன் திட்டம்
குறித்து இருந்த தயக்கங்களை போக்கிட காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்களிடம் ராஜாஜி
முயற்சித்தார். வேவல் நேரு அவர்களை இடைக்கால சர்க்கார் ஒன்றை வைத்திட அழைப்பு விடுத்தார்.
நேருவின் அழைப்பிற்கு ஜின்னா செவிசாய்க்கவில்லை. இடைக்கால சர்க்காரில் அமைச்சர் பொறுப்புகளை
அளிப்பது குறித்த உரையாடலில் காந்தி பங்கேற்று இருந்தாலும் நிர்வாக நடைமுரை பற்றி அவர்
அதிகம் தெரிந்தவர் இல்லை என்ற பதிவை ராஜாஜி தருகிறார். படேல் உள்துறை கேட்டதால் ஏதும்
செய்யமுடியவில்லை. நியாயமாக விவரமான ஜான் மதாய் என்கிற நண்பருக்கு நிதி போய் இருக்க வேண்டும். நேரு லியாகத்
என சொல்லியதால் மதாய்க்கு போகவில்ல. அவருக்கு தொழில் கொடுக்கப்பட்டது. ராஜ்குமாரி கெளரோ
தனக்கு ஹெல்த்- சுகாதாரம் என்றார். யாரும் எடுக்க முன்வராத கல்வியை நான் எடுத்துக்
கொண்டேன் என்கிறார் ராஜாஜி. இதில் உடன்பாடு கொணர்வதில் ராஜாஜி பெருமளவில் பங்களித்தார்.
காபினட் கூட்டங்களில் லீக்- காங்கிரஸ் சச்சரவுகள் அதிகமாக
இருந்தன. ஒன்றுபட்ட இந்தியாவிற்கான ஒரே கான்ஸ்டிட்யூஷன் வருவதற்கு வாய்ப்பில்லை என்ற
எதார்த்தம் நிலவியது. மெளண்ட்பாட்டன் பொறுப்பிற்கு
வந்தார். நாடு பிரிவினைக்கு உள்ளானதை காந்தி துயரத்துடன் கண்ணுற்றார். விடுதலைக்கு
பின்னர் ராஜாஜி மேற்குவங்க கவர்னராக அனுப்பப்படுகிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.
ராஜாஜியால் வங்கத்திற்கு ஆகப்போவது ஏதுமில்லை என வெளிப்படையாக எதிர்ப்பாளர்கள் பேசினர்.
அவருக்கு கருப்புகொடி வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னை எதிர்த்து முன்னணியில் இருந்த
சரத் சந்திர போஸ் இல்லம் தேடி சென்றார் ராஜாஜி. விடுதலைப் போராளிகள் கண்கள் பனித்தன.
காந்தி கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தி அவரது உதவியாளர்
மூலம் ராஜாஜிக்கு வருகிறது. அவர் உடன் மெளண்ட்பாட்டனை அழைக்கிறார். நேருவிற்கு சரியான
ஆலோசனை தேவை என ராஜாஜி கருதுகிறார். நாட்டின் பாதுகாப்பை நேரு உறுதி செய்யட்டும். அவரை
நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
காந்தியின் அஸ்தி கலயம் ஏந்தி மிக்க துயருடன் கல்கத்தா திரும்புகிறார் ராஜாஜி. அஸ்தி
கரைத்துவிட்டு திரும்பும் போது அவர் உடைகிறார். அஸ்தி என்னை இழுக்கிறது என உணர்வு மேலிடுகிறார்.
மெளண்ட்பாட்டன் கவர்னர் ஜெனரலிருந்து விடுபடும்போது நேருவும்
படேலும் இணைந்து ராஜாஜியை கொணர்கின்றனர். தான்
எந்த அளவிற்கு பயன்படுவேன் என ராஜாஜி கேட்டபோது பட்டேல் காந்தி மறைவிற்கு பின்னர் எங்களுக்கு
நல் ஆலோசகராக நீங்கள் இருப்பீர்கள் என்றார். கல்கத்தா ராஜ்பவனிலிருந்து அவர் வெளியேறியபோது பரிசுபொருட்கள்
எதையும் உடன் எடுத்துசெல்ல மறுத்துவிட்டார். அங்குள்ளோர் பிரித்து எடுத்துக்கொள்ளட்டும்
என்றார். ஊன்று கோலாவது எடுத்து செல்லுங்கள் என்ற போது நான் நடை பயிற்சியில் இருக்கும்போது
அதை வாங்கியே என்னை யாராவது தாக்கிவிடலாம் என கிண்டல் செய்தார். கவர்னர்ஜென்ரல் பதவியின்
பாரம் தன்னை அதிகம் தாக்காமல் அவர் பார்த்துக்கொண்டார் என்ற பதிவை கே பி எஸ் மேனன் தருகிறார். வழக்கமாக அவர் காணப்படும்
உடையையே அணிந்தார். அவர் பங்கேற்ற நிகழ்வுகளில் புரோட்டகால் என்பவையெல்லாம் பார்க்க்காமல்
அனைவருடனும் கலந்து பேசினார்- நடந்துகொண்டார் என்கிற பதிவும் இருக்கிறது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வந்தவுடன் நாட்டின் கவர்னர்
ஜெரலாக இருந்த ராஜாஜியை முதல் குடியரசு தலைவராக
ஆக்கிடவேண்டும் என நேரு விரும்பினார். எதிர்ப்பு கிளம்பியதால் ராஜேந்திர பிரசாத்
முதல் குடியரசு தலைவரானார். ராஜாஜி சென்னை
திரும்பினார் . சென்னை திரும்பியவுடன் கண்பார்வை பிரச்சனையால் அவதிப்பட்டார்.
கடிதங்களை படிக்கக்கூட உதவி தேவைப்பட்டது. படேல், நேரு தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர்.
பார்க்கமுடிகிறது என்ற நிலை வந்தவுடன் நேரு தனது அமைச்சரவைக்கு அழைத்தார். திட்ட கமிஷன்
தலைவராக முடியுமா எனக்கூட கேட்டார். நேரு பட்டேல் முரண்களை தீர்த்திடவும் ஆலோசனைக்காகவும்
ராஜாஜி டெல்லியில் இருந்தால் நல்லது என்ற கருத்து நிலவியது.
ராஜாஜி டெல்லி வந்தார். இருவருக்கும் இணக்கம் உருவாக்க முயன்றார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புருஷோத்தம் டாண்டனை பட்டேலும், ஆச்சார்யா கிருபளானியை நேருவும்
விழைந்தனர். புருஷோத்தம் என முடிவானால் தன்னால் காங்கிரஸ் செயற்குழுவிலோ, பிரதமராகவோ
தொடர முடியாது என நேரு தெரிவித்தார். நிலைமைகள் மோசமடையாமல் தடுக்கப்பட இருவரும் தேர்தலில்
சுதந்திரமாக வாக்களிக்கவேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட வைத்தார் ராஜாஜி. அறிக்கையை அவரே
தயார் செய்திருந்தார். புருஷோத்தம் வெற்றி நேருவிற்கு விழுந்த அடியானது.
ராஜாஜி இருவரின் நம்பிக்கைக்கும் உரியவராக அப்போதிருந்தார்.
படேல் 1950 டிசம்பரில் மறைந்தவுடன் உள்துறைக்கு ராஜாஜி அமைச்சரானார். நிஜாமின் ராசாக்கர்
உருவாக்கிய பிரச்சனைகள், தெலங்கான கம்யூனிஸ்ட்கள் போராட்டம் ஆகியவற்றை அவர் சந்திக்க
வேண்டியிருந்தது. தடுப்பு காவல் சட்டம் கொணர்ந்தது எதேச்சதிகாரம் என்ற விமர்சனத்திற்கு
உள்ளானது. நேருவுடன் ஏற்பட்ட கொள்கை மோதல் காரணமாக அவர் 1951 டிசம்பரில் பதவி விலகினார். சென்னை திரும்பி இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
Comments
Post a Comment