https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, January 23, 2020

மு வ பேசிய கட்சி அரசியல்


அறமும் அரசியலும்

டாக்டர்.மு.வரதராசன்

 கட்சி அரசியல் என்பது குறித்து பலர் பேசியுள்ளனர். அப்படி ஒரு எழுத்தை தமிழறிஞர் மு. வ அவர்களும் தந்துள்ளார். அவர் எழுதிய அறமும் அரசியலும் புத்தகத்தில் நான்காம் அத்தியாயமாக கட்சி அரசியல் என்பது (பக்94-115களில்) விவாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. இது பொதுவாக கட்சி என்பது குறித்த விவாதம். எந்த தனிப்பட்ட கட்சி குறித்தோ அதன் நடைமுறைகுறித்தோ  அதில் மு. வா விவாதிக்கவில்லை. அரசியலில் அறம் வாழப் பாடுபடாமல் தனிவாழ்க்கையில் திணறித் திண்டாடிவிட்டு, “அறமாவது, நடப்பதாவது, எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்என்று ஏங்குவதால் பயன் என்ன? என முன்னுரையில் மு.வா வினவுகிறார்..
  இனி  மு .வ


” கட்சி என்பது என்ன? செல்வாக்கு என்பதன் கூட்டுப்பண்ணை; தனித்தனியே தம் செல்வாக்கைப் பயன்படுத்துவதில் இடையூறும் தோல்வியும் கண்டபோது, செல்வாக்குக் குன்றாமல் காக்கும் வகையில் அமைத்த கூட்டுப் பண்ணை,..

ஒரு கட்சியில் நல்லவர்களும் சேர்வார்கள்; கெட்டவர்களும் சேர்வார்கள். நல்லவர்கள் சேர்ந்து ஆக்க வேலை செய்வார்கள் கெட்டவர்கள் சேர்ந்து அழிவு வேலை செய்வார்கள். எந்தக் கட்சியிலும் நன்மை தீமை கலந்திருப்பது இதனால்தான். இதைத் தடுக்க முடியாது. கெட்டவர்கள் செய்யும் வேலையும் கட்சியின் பெயராலேயே செய்யப்படுகின்றது. அதனால் அந்தப் பகுதியை ஒழிக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்யத் தொடங்குகின்றார்கள்.

கெட்டவர்களின் செல்வாக்கு அசைக்க முடியாததாக இருக்கும்போது, வேறு வழி இல்லை என்று இவர்கள் வெளியேறி எதிர்கட்சி அமைக்கின்றார்கள். எதிர்கட்சி அமைத்தவுடன், நடுநிலைமையில் நின்றால் மக்கள் திரள மாட்டார்கள் என்பதை உணர்ந்து, மற்றக் கட்சியைப் பழிப்பதும் தம் கட்சியைப் புகழ்வதுமே கடமையாகக் கொள்கின்றார்கள்.

 பொதுமக்கள் பொய்க்கும் பித்தலாட்டத்திற்கும் எளிதில் ஆளாகக் கூடியவர்கள் என்பதை உணர்ந்து தேர்தல் காலத்திற்கு வேண்டிய முறையில் நெறி தவறி மனச்சான்றையும் கொன்று எதிர்ப்பு வேலையைச் செய்கின்றார்கள். மற்ற கட்சியாரும் இவர்களை எதிர்த்து அடக்குவதே முதல்கடமை என்று கட்சிப் போர்க்களத்தில் இறங்குகின்றார்கள். அழிவு வேலை செய்வதிலும், அறத்தை மறந்து செல்வாக்கைத் தேடுவதிலும் போட்டியிடுகின்றார்கள். இந்தப் போட்டி வேலைக்குத் துணையாகச் செல்வரை நாடுகின்றார்கள். 'இதுவும் நல்லதே , கட்சிச் சார்பு இருந்தால் நாமும் கவலை இல்லாமல் இருக்கலாம்' என்று செல்வந்தர்களும் நுழைகின்றார்கள்; நாளடைவில் கட்சியைத் தம் கையின் கீழ்க் கொண்டு வருகின்றார்கள்.

அரசியலை அமைக்கப் புகுந்தவர்கள் கட்சிகளை அமைக்கத் தொடங்குகின்றார்கள் ..நாடே பெரியது என்று நல்லெண்ணம் கொண்டு தேர்தலுக்கு வந்தவர்கள் கட்சியே பெரியது என்று கங்கணம் கட்டுகின்றார்கள். நாட்டில் அறத்தையும் அமைதியையும் நிலைநிறுத்த விழைந்து தொடங்கியவர்களும் நாளடைவில் கட்சியை நிலைநிறுத்த முனைகின்றார்கள்..

தேர்தலில் தோற்ற எதிர் கட்சியார் பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டுத் தம் கட்சியை வலுப்படுத்துகின்றார்கள். யானை பூனை ஆகலாம் என்றும், பூனை யானை ஆகலாம் என்றும் பொது மக்கள் காத்திருக்கின்றார்கள்.

     லட்சக்கணக்கான மக்கள் முன்பின் தெரியாத ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இருந்தால்தான் கட்சிவாழும். இதனாலேயே அரசியல் தலைவர்கள் இந்தக் கட்சித் தேர்தலை மாற்ற இடம் தராமல் போற்றி வருகின்றார்கள்.

இன்று கட்சியின் பெயரால் தனிமனிதர் உரிமையைப் பறித்துப் பெரும்பாலோரைக் கைகாட்டி மரங்களாக்கி, அவர்களுடைய  மனச்சான்றைக் கொல்வதால் வல்லவர்கள் மேல்நிலை பெறலாம். ஆனால் மக்களின் பொது வாழ்க்கை குலைகின்றது. நாடுகள் வாழவில்லை; கட்சிகளே வாழ முடிகின்றது.

பகையிலும் குழப்பத்திலும் தோன்றி வளர்ந்த தேர்தல் எவ்வாறு முடிகின்றது? ஒரு கட்சியின் வெற்றியாக மலர்கின்றது. பிறகு கட்சியின் செல்வாக்காகக் காய்க்கின்றது. பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக  நடக்க வேண்டி ஏற்படும்போது அடக்குமுறை ஆட்சியாகக் கனிகின்றது. அதன் பயனாக எதிர்ப்பு உணர்ச்சி வலுத்தபோது, எதிர் கட்சியின் வாழ்வுக்கு வித்தாகின்றது. பகையும் குழப்பமும் தொடக்கத்தை விடப் பன்மடங்கு மிகுதியாகின்றன. இந்த மன்றத்தை அமைக்கும்படி வாக்குரிமை கொடுத்ததே தவறு என்று பலருடைய மனமும் எண்ண இடம் ஏற்படுகின்றது. விரைவில் மாற்றியமைக்க வேண்டும், வேறு அமைச்சர் குழு அமைக்க வேண்டும். மறு தேர்தல் நடத்த வேண்டும், என்றெல்லாம் பலவகை எண்ணங்கள் எழுகின்றன

..கட்சி அமைப்பில் நல்லவர்கள் சேர்ந்து தொண்டாற்றும்போது சில நெருக்கடியான காலங்களில் நன்மை விளைவது உண்டு. நாட்டின் பொதுப் பகைவராக உள்ள வெளிநாட்டாரை முறியடிப்பதற்கு இந்தக் கட்சி அமைப்பு உறுதியும் ஊக்கமும் தருவது உண்டு. ஆனால் அந்தக் கடமை முடிந்த பிறகு நன்மையே தரும் என்று சொல்வதற்கு இல்லை. நல்லவர்களுக்கே இடம் தருவது போய், தீயவர்களுக்குச் செல்வாக்குத் தருவது உண்டு. எப்படியும் கட்சி அமைப்பினால் விளையும் நன்மை குறைவே..

ஒரு கட்சியின் அமைப்பு முதலில் தான் வலுவடைகின்றது; பிறகு மற்றொரு கட்சி அமைப்புக்கு இடம் தருகின்றது; தான் உயர, உயர, தன்னை அறியாமல் அதையும் உயர்த்திவிடுகின்றது. அறம் மறைவதுபோல் இருந்து, இரண்டு கட்சியும் தாக்குண்டு அழியச் செய்கின்றது. இவ்வளவுக்கும் கட்சி வளர்த்த பகையுணர்ச்சி காரணமாக இருக்கின்றது என்பதை உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் காணலாம்.

மக்களிடம் மந்தையுணர்ச்சியை வளர்த்துப் போருக்குப் பலியிடும் கட்சித் தேர்தல் ஒழிந்து மனச்சான்றை வளர்த்து ஆக்க வேலையை வளர்க்கும் தகுதித் தேர்தல் உலகமெல்லாம் ஓங்க வேண்டும். இவ்வாறு மந்தையுணர்ச்சியைப் போக்கி மனச்சான்றை வாழ வைத்தால்தான் உரிமைப் பஞ்சம் தீரும். அறம் ஓங்கும். அரசியலும் திருந்தும்.

No comments:

Post a Comment