BSNL IDA Pension Revision II
பென்ஷன் ரிவிஷன் எனும் பிரச்சனையில் எவரையும் எந்த அமைப்பையும் புண்படுத்துவதோ கோபப்படுத்துவதோ நோக்கமல்ல. எனக்கு தெரிந்தது என நினைப்பவற்றை வெளிச்சொல்லும்போது அக்கருத்தும் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களால் பரீசிலிக்கப்படும். நான் சொல்வதில் தவறு இருக்குமெனில் எனக்கு ஏதோவொருவகையில் பொறுப்பாக மறுமொழி கிடைக்கும். என்னை சரி செய்துகொள்ள அப்பதில் உதவும் என்கிற அடிப்படையிலேயே எழுதுகிறேன். எவரின் உழைப்பையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. எவரின் Honesty மீதும் மதிப்பீட்டு சரிவு ஏதும் என்னிடம் இல்லை.
தற்போது இரண்டாவது ஊதியக் கமிட்டி அடிப்படையில் பென்ஷன் ரிவிஷன் பெற்று வருபவர்கள் அனைவருக்கும் பென்ஷன் ரிவிஷன் கேட்கிறோமா- இல்லை குறிப்பிட்ட ( ஜனவரி 2016/ 2017க்கு முன்னர்) தேதிக்கு முன்னால் இரண்டாவது ஊதியக்கமிட்டி அடிப்படையில் பென்ஷன் பெறுவபவர்களுக்கு மட்டும் கேட்கிறோமா? பிப்ரவரி 2020ல் ஒரு லட்சம் புதிய பென்ஷனர்கள் இருப்பார்கள். அவர்களும் இரண்டாவது ஊதியக்கமிட்டி அடிப்படையில் மட்டுமே பென்ஷன் நிர்ணயம் பெற்றவர்களாக இருப்பர் .இவர்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள பென்ஷனில் மாற்றம் ( Refixation) வரவேண்டுமெனில் அவர்களின் ஊதியத்தில் மாற்றம் பின் தேதியிட்டு வந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஊதிய மாற்றம் இல்லையெனில் அவர்களுக்கு பின்னரும் தொடர்ந்து ’2026வரை ஓய்வு பெறப்போகிறவ்ர்கள் அனைவரும்’ இரண்டாவது ஊதியக்கமிட்டி அடிப்படையிலேயே பென்ஷன் நிர்ணயம் பெறுவார்கள். இது மாறும்வரை 2026க்கு பின்னரும் இதே நிலைதான் நீடிக்கும்.
தனியாக முந்திய பென்ஷனர்களுக்கு மட்டும் 7 வது ஊதியக்குழு அல்லது 3வது ஊதியக் கமிட்டி அடிப்படையில் பென்ஷன் ரிவிஷன் 1-1-16/ 1-1-17 லிருந்து பெற்றால் புதிய பென்ஷனர்களுக்கு இப்பலன் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு உள்ள வாய்ப்பு ஊதிய மாற்றம் மட்டுமே. இருவேறு BSNL IDA பென்ஷனர்கள் இருக்க முடியாது. முந்திய பென்ஷனர் பகுதி 3வது ஊதியக்கமிட்டி என்றும் புதிய பென்ஷனர் பகுதி இரண்டாவது ஊதியக்கமிட்டியில் பென்ஷன் நிர்ணயம் பெறுவது என்றும் இருக்க முடியாது. அதேபோல் ஒருபகுதி 7வது ஊதியக்குழு என்றும் புதிய பகுதி இரண்டாவது ஊதியக்கமிட்டிப்படி பென்ஷன் நிர்ணயம் என இருக்கமுடியாது. இது அனாமலி என்ற முறையில் தீர்க்கப்படக்கூடியதல்ல.
ஊழியர்களுக்கு கிடைத்த ஒன்று முந்திய ஊழியர்களான பென்ஷனர்களுக்கு நீட்டிக்கப்படுதல் என்பது வேறு. முதலில் பென்ஷனர்களுக்கு கொடுத்துவிட்டு அதே அளவு உயர்வின்பலனை ஊழியர்களுக்கு நீட்டிப்பது என்பது ஊதிய மாற்றம் வந்தால்தான் சாத்தியமாகும். அதிலும் IDAப்படி வந்தால்தான் சாத்தியமாகும். ஏனெனில் ஊழியர் சங்கங்கள் CDA வில் ஊதிய மாற்றம் கோரவில்லை. IDAவில்தான் மாற்றம் கோரி போராடிவருகிறார்க்ள்.
பென்ஷன் ரிவிஷன் பிரச்சனையில் ஊதிய மாற்றம் வந்த பின்னர் காலதாமதம் கூடாது என சொல்வதில் மிகு நியாயம் இருக்கும். எனவேதான் Simultaneous Pay Revision- Pension Revision என்பது எப்பகுதிக்கும் இடையூறு காத்திருப்பு இல்லாமல் ஒரே நேரத்தில் பலனைக் கொண்டுவந்து சேர்க்கும். ஒரே வகைப்பட்ட முறையிலும் அது அமையும். இக்கோரிக்கை அனைவரையும் ஒன்றுபடுத்தும்.
BSNL ல் ஊதிய மாற்றம் சாத்தியமா - வராது என்கிற உறுதியான நம்பிக்கை கொண்டவர்களே தனியாக தங்களுக்கு பென்ஷன் மாற்றம்- அரசாங்கம் தானே தரப்போகிறது என வாதாடிவருகிறார்கள். ஊழியர் சங்கங்கள் இப்படிப்பட்ட அவநம்பிக்கையில் செயல்படமுடியாது. தங்களின் தொடர்ந்த போராட்டங்கள்- நியாயங்கள் வழியே ஊதிய மாற்றம் என்கிற நம்பிக்கை சாலையில் அவர்கள் பயணித்தே ஆக வேண்டும். மத்திய அரசாங்க பென்ஷனர்கள் மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றம் பெறுகிறவரை காத்திருந்தே பென்ஷன் மாற்றம் கிடைக்கப்பெற்றார்கள் என்பதை வசதியாக நாம் மறக்கமுடியாது. அரசாங்கம் தானே மத்திய பென்ஷனர்களுக்கு தருவது போல் எங்களுக்கும் பென்ஷன் தருகிறது என வாதாடும் நாம் நமக்கு பின்னர் வந்திருக்கிற லட்சம் பென்ஷனர்களுக்கும் இன்னும் வரப்போகிற ஆயிரக்கணக்கான பென்ஷர்களுக்கும் அரசாங்கம் தான் பென்ஷன் தரப்போகிறது என்பதை மறக்க முடியாது.
இன்று வித்தியாசத்துடன் இருக்கின்ற CG பென்ஷனர்களுக்கும் BSNL IDA பென்ஷனர்களுக்கும் 7வது ஊதியக்குழு காரணமாக வேறுபாடு கூடாது என்பது முக்கியமெனில் அதைவிட முக்கியமானது இரண்டாவது ஊதியக்கமிட்டி அடிப்படையில் ஒன்றாக வித்தியாசம் ஏதுமின்றி இருக்கின்ற BSNL IDA பென்ஷனர்கள் மத்தியில் வேறுபாடு வந்துவிடக்கூடாது என்பது.
உழைப்பவர்களை விட உழைத்துக் களைத்தவர்களுக்கு சமூகம் கூடுதல் முன்னுரிமை தரவேண்டும் என எதிர்பார்ப்பது சற்று அதீதமானது. உழைப்பவர்க்கு கிடைக்கும் பலன் உழைத்து களைத்த பென்ஷனர்களுக்கும் என்பது ஏற்கப்பட்ட நீதியாக இருக்கிறது. அரசாங்க பென்ஷன்தாரர்கள் என ஓய்வு பெற வாய்ப்பு இருந்த DOT ஊழியர்களுக்கு BSNLல் நுழைந்து அதன் ஊழியர்கள் ஆனாலும் அரசாங்கமே ( டிரஸ்ட் என ஏதுமில்லாமல்) பென்ஷன் தரவேண்டும் என தோழர் குப்தா மாற்றியது ஊழியர்களுக்கான விஷயம்தான். பென்ஷனர்களுக்கான ஒன்றல்ல. பென்ஷனர்களாக ஆகப்போகிறவர்களுக்குத்தான். 1-10-2000க்கு முன்னர் இருந்த பென்ஷனர்க்குமானது என ஏதும் அதில் இல்லை. அங்கு இருட்டு வெளிச்சம் கண்டதெல்லாம் ஊழியர்களுக்குத்தான்- எதிர்கால பென்ஷனர்களுக்குத்தான். அதேபோல் இப்போது இருட்டு எனில் அது ஊதிய மாற்றம் எனும் ஊழியர் பிரச்சனையில்தான் உள்ளது. அதில் வெளிச்சம் பாய்ச்சத்தான் சங்கங்கள் போராடிக்கொண்டிருக்கின்றன.
Comments
Post a Comment