https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, October 10, 2022

சோழர் சரித்திரம்

 

நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய (1928) சோழர் சரித்திரம் குறிப்பிலிருந்து.. (பிஷப் ஹீபர் தலைமை தமிழாசிரியராக இருந்தபோது)



பழங்குடி என்பதற்கு பரிமேலழகர் தந்த உரை :

சேர சோழ பாண்டியா என்றாற்போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டுவருங்குடிஎன்பதாம்.

சூரிய சந்திர குலக் கற்பனை வடநாட்டரசரிடமும், தமிழ் நாட்டரசரிடமும் ஒரு பெறறைய காணப்படுகிறது. இது முதலில் எங்கே தோன்றியது என்பது அய்யப்பாடே. வடமொழிப் புராண இதிகாசங்களிற் சில, வடவரசரையும் தமிழ் மன்னரையும் சேர்த்து பிணைப்பனவாகவுள்ளன.

பாரத அரி வமிசம் பின்வருவாறு கூறுகிறது:

திருமால் உந்தியில் பிரமன், பிரமன் மகன் அத்திரி, அத்திரிக்கு சந்திரன், சந்திரனுக்கு புதன், புதனுக்கு புரூரவன், புரூரவனுக்கு ஆயு முதலானவர், ஆயுவிற்கு நகுடன் முதலானவர், நகுடன் மக்கள் யதி, யயாதி, சமயாதி, ஆயாதி, உத்தமன் ஆகிய ஐவர். யயாதிக்கு யது, துருவசு, துருகியன, அணு, பூரு என ஐவர், துருவசுக்கு வன்னி, வன்னிக்கு கோபாநு, கோபாநுக்கு திரைசாநு, திரைசாநுக்கு காந்தமன், காந்தமனுக்கு மருத்தன், மருத்தனுக்கு தத்தாக பூருமரபில் வந்த துட்டியநதன், துட்டிய நதனுக்கு கருத்தாமன், கருத்தாமனுக்கு ஆக்கிரீடன், ஆக்கீரிடனுக்கு பாண்டியன், கேரளன், சேரன், சோழன் மக்கள்.

அரி வம்சத்தில் கேரளன் வேறு, சேரன் வேறு கூறப்படுவதென்னையோ என  மு வே வினவுவார். இந்நூல்படி தமிழரசர் சந்திரகுலத்தவராதல் வேண்டும். ஆனால் கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழனுலா, மணிமேகலை சூரியகுலத்தவராக பேசுகிறது. எனவே அரிவமிச கதை சொல்லும் சந்திர வம்சம் பிற்கால கற்பிதமாகிறது.

கலிங்கத்துப்பரணி பேசிய வழிமுறை:

திருமால், பிரமன், மரீசி, காசிபன், குரியன், மனு, இக்குவாகு, புரந்தர வாகன ககுஸ்தன், முசுகுந்தன், சிபி, சோழமண்டலம் அமைத்த சுராதிராசன், இராசகேசரி, பரகேசரி, காந்தன், வாதராசன், செங்கணான், கரிகாலன், அபயன் எனப் போகிறது. விக்கிரம சோழவுலாவும் இது போன்றே சிற்சில வேறுபாடுகளுடன் கூறுகிறது.

கோபிநாதராவ் எழுதியதில் சூரியவம்சம், பெளராணிக வழி சொல்லப்பட்டுள்ளது. வைச்சுதமனு, இஷ்வாகு, முசுகுந்தன், வல்லபன், சிபி, சோளன், இராசகேசரி, பரகேசரி, இராஜேந்திரமிருதஜித், வியாக்கிரகேது, என அடுக்குவார்.

பாகவதப்படி முசுகுந்தன் மாநதாதாவின் மகன். அந்த வழியில் அரிச்சந்திரன், பகீரதன், ரகு, தசரதன், இராமன் , அம்பரீடன் தோன்றினர் என்கிறது பாகவதம்.

முசுகுந்தன் பற்றி பலரும் சொல்வதால் முசுகுந்தன் வழி வந்தவர் சோழர் என கொள்ளலாம் என்கிறார் நாட்டார். இன்றும் திருவாரூர் பெரிய கோயிலில் முசுகுந்த அர்ச்சனை அங்கு வாழ் மக்களை ஈர்க்கக்கூடிய ஒன்றாகவுள்ளது.

மனு திருவாரூரில் அரசு புரிந்தவன். மனு நீதிசோழன் அனைவரும் அறிவர். கன்றையிழந்த பசுவின் துயரை மகனை தேர்க்காலில் வைத்து நியாயம் செய்தவனாக கருதப்படுபவன். பெரியபுராணம் இதைப் பாடுகிறது.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரத்தில் மனுநீதி, மனுநூல் என யாண்டும் காணப்படவில்லை. 12ஆம் நூற்றாண்டு கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம் முதலியனவே மனுநீதியென்னும் ஒன்றைக்குறித்துப் பேசுகின்றன. அது வடமொழியில் எழுந்தது எக்காலத்தாயினும், ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளின் பின்பே தமிழ் மக்களுள்ளும் பயிலப்படுவதாயிற்றென்று கருதலாகும். மகனை முரை செய்த மன்னவன் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை பேசுகின்றன.

முசுகுந்தன் பற்றி கந்த புராணங்கள் போன்றவை எப்படிப் பேசுகின்றன என்பதை வேங்கடசாமி நாட்டார் விவரித்து செல்வார். முசுகுந்தன் தென்னாட்டு மன்னன் என்பதை நாட்டார் ஏற்பார். நாளங்காடி பூதம், சதுக்கப்பூதம் பற்றி சொல்வார். மகாபாரதத்தில் சிபி புறாவைக்காக்க தன் சதையை கொடுத்த கதை பேசப்படுவதாகவும் நாட்டார் சொல்கிறார். சோழர்கள் சிபி வழி வந்ததால் செம்பியர் எனப்பட்டனராம். சிபியே செம்பியன் என்பார் நாட்டார். ஒருவகையில் கலிங்கத்துப்பரணியிலும், சிலப்பதிகாரத்திலும் சிபி செய்தி வருவதையும் சொல்கிறார்.

 காந்தன் எனும் மன்னன் காவிரிப்பூம்பட்டினத்தை ஆண்டவர். அகத்தியர் மீது பக்தி கொண்டவராம். காந்தன் வேண்டுகோளை ஏற்றே கமண்டல காவிரியை நதியாக்கி சோழநாட்டை அகத்தியர் வளமுற செய்த கதையை சொல்கிறார் நாட்டார். இதை கந்தபுராணமும் காக்கையாக விநாயகர் வந்து கமண்டலத்தை கவிழ்த்துக் காவிரியை பெருகச் செய்த கதையாக சொல்கிறது.

தோட்செம்பியன் மன்னன் காவிரிபூம்பட்டினத்தில் அகத்தியர் சொல்படி இந்திரவிழா எடுத்தவராம். கரிகாலன் பற்றி பொருநற்றாறுப்படை, பட்டினப்பாலை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பழமொழி பேசுகின்றன.

கரிகாலன் இளஞ்சேட்சென்னியின் புதல்வன். மாமன் இரும்பிடதலையர். அவர் வழக்குரைக்கும் மாண்பு பேசப்பட்டது. வெண்ணிறப்பறந்தலை சொல்லப்படுகிறது. இமயமலைவரை சென்று புலிக்கொடி நாட்டியவர். நீர்நிலை பெருக்கி நாட்டை வளப்படுத்தியவர். பகைவர் வைத்த தீயினை அஞ்சாது அதனால் கால் கரிந்தமையால் அப்பெயர் பெற்றார் என்ற செய்தியும் சொல்லப்படுகிறது. இவருக்கு கரிகாற் பெருவளத்தான், திருமாவளவன் என்கிற பெயர்களும் உண்டு. கரிகாலனின் இலங்கை படையெடுப்பை மகா வமிசம் சொல்கிறதாம். உருத்திரங் கண்ணனாருக்கு பதினாறு நூறாயிரம்பொன் பரிசளித்த வள்ளல். அரிசிலாறு, வெட்டாறு இவர் காலத்தில் வெட்டப்பட்டவையாம். நகர நிர்மாணங்கள் நடந்தன. உறையூர் புதுப்பிக்கப்பட்டதாம். காஞ்சியும் திருத்தி அமைக்கப்பட்டதாம். தொண்டைநாட்டை சீர்படுத்திய சிறப்பையும் பேசுகிறார் நாட்டார். இளவேனிற் காலத்தில் 28 நாட்கள் இந்திரவிழாவாம்.

கரிகாலன் மறைவு கிபி முதல் நூற்றாண்டாய் இருக்கலாம் என்பார் நாட்டார்.

கிள்ளிவளவன் நெடுங்கிள்ளி மோதல், நலங்கிள்ளி நெடுங்கிள்ளியை கொன்றதும் சொல்லப்படுகிறது. கிள்ளி காலத்தில்தான் காவிரிபூம்பட்டினம் கடலாற் கொள்ளப்பட்டதாம். அரசன் உறையூரோ காஞ்சியோ சென்றதாக மணிமேகலை மூலம் அறியலாம் என்கிறார் நாட்டார்.

அடுத்து தித்தன் எனும் அரசனைப்பற்றி சொல்கிறார். அகநானுறு பேசிய அரசன். பெருங்கிள்ளி சேரன் செங்குட்டுவனுக்கு அம்மான் மகனாம். நெடுங்கிள்ளி மைந்தனாம். பின்னர் கோப்பெருஞ்சோழன் பற்றிய குறிப்புகளைத் தருகிறார். அறவழி நின்றவராம். பிசிர் எனும் பாண்டி நாட்டில் பிசிராந்தையார் புலவர் இருந்தார். நேரிற்காணாமலே பெரு நட்பு. உழுவலன்பாம். கோப்பெரு வடக்கிருக்கவே பிசிராந்தையார் அங்கு வந்து சேர்ந்தனராம். அவரும் வடக்கிருந்தனராம்.

செங்கட் சோழன், கணைக்கால் இரும்பொறை சேரன் தொடர்பிலிருந்த புலவர் பொய்கையார் பற்றிய செய்திகளை நாட்டார் சொல்வார். களவழி நாற்பது பாடி சேரனை மீட்டதைச் சொல்வார்.

சோழர்கள் அரசியலுக்காக அமைச்சர் குழு, புரோகிதர் குழு, தானைத்தலைவர் குழு, தூதுவர் குழு, ஒற்றர் குழு வைத்திருந்தனர். இது ஐம்பெருங்குழு என்றால், கனகசுற்றம், வாயில் காவலர், நகர மாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரைவீரர், கரணத்திலயர், கருமவிதிகள் என்கிற எண்பேராயம் இருந்ததாம். உயர் நீதிமன்றம் அறங்கூறவை என்றும் நீதிபதிகள் தருமாசனத்தார் என்றும் அழைக்கப்பட்டராம்.

சேனைத்தலைவர்க்கு பட்டம் ஏனாதி, அமைச்சர்- கணக்கர்- வேளாளர் எனில் பட்டம் காவிதி, வணிகர் எனில் எட்டி என பட்டம் கொடுத்து பொன் பூவைத் தந்தனராம். அரசர் பிறந்த நாளில் அறச்செயல்கள், புலவர்க்கு வேண்டுவன தருதல், சிறையிலிருந்து விடுவிப்பு போன்றவை நடக்குமாம். அவை பெருமங்கலம், வெள்ளணி என சொல்லப்படும்.

தமிழ் ஆய்வு,  தமிழ் கல்வி, இயல், இசை, நாடகம் மேம்பட்டன.

ஐம்பூதம் குறித்த அறிவு, உயிர்கள் வினைக்கட்டுடையன, கடவுள் வினைக்கட்டில்லாதவர் என்ற கருத்து இருந்தது. குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்கு திருமால், மருதம் இந்திரன், நெய்தல் வருணன் என தெய்வங்களாக இருந்தன. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே இவை ஏற்கப்பட்டிருக்கலாம் என்பார் நாட்டார்.

 எங்கும் சிவபெருமான் முதலில் வைத்துக் கூறப்படுதலும் காண்கிறோம். சோழர்கள் சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொண்டு வழிபட்டதும், திருமால் மீதும் பேரன்பு காட்டியதாகவும் நாட்டார் சொல்கிறார். சிவாலயப்பணிகள் செய்தமையை சொல்கிறார்.

கிபி முதல் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே சமண, பெளத்த மதங்கள் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி, காஞ்சியில் வலுவாக இருந்ததாகவும் சொல்கிறார். மன்னர்கள் நடுவுநிலையுடன் அவர்களுக்கும் இடம் தந்ததாக சொல்கிறார். வேறுபட்ட மதத்தார் உணர்ச்சியை மதித்து இகழாது இருந்தனர் என்கிறார்.

130 பக்கங்களின் சாரத்தை இப்படி மிகச் சுருக்கி தருவது நியாயமல்ல என்றாலும் இதுவரை படிக்காதவர் நூலைப் படிக்க இச்சிறு குறிப்புகள் உதவலாம் என்ற எண்ணத்தில் இங்கு தரப்பட்டுள்ளது. நூலை படிப்பவர் மேலும் பல செய்திகளைக் காணலாம்.

 

No comments:

Post a Comment