https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, October 5, 2022

வாழ்வை நேசித்த பகத்சிங்

 சிறு வெளியீடு மின்புத்தகம்  வாழ்வை நேசித்த பகத்சிங்


முன்னீடு

இந்த சிறு வெளியீட்டில் பகத்சிங் குறித்து வெவ்வேறு தருணங்களில் எழுதிய மூன்று கட்டுரைகளை இணைத்துக் கொடுத்துள்ளேன்.  ’பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி’ எனது காந்தியைக் கண்டுணர்தல் புத்தகத்தில் இடம் பெற்ற கட்டுரை. எனது இணையதளத்தில் செப்டம்பர் 20, 2018ல் வெளியிட்டும் இருந்தேன். இங்கு மூன்றாவது கட்டுரையாக அது வைக்கப்பட்டுள்ளது. பகத்சிங் இளம் வாசகர்களுக்காக என்ற முன்வைப்பில் ’மாவீரன் பகத்சிங் வாழ்க்கை’ என்கிற கட்டுரை இணையதளத்தில் டிசம்பர் 4, 2016ல் வெளியிடப்பட்ட ஒன்று. இரண்டாவது கட்டுரையான பகத்சிங் வாசிப்பு என்பது 2022 துவக்க நாட்களில் முகநூலில் அவ்வப்போது வெளியிட்ட இடுகைகளின் தொகுப்பு எனலாம். சமன்லால் தொகுத்த பகத்சிங் ரீடரை வாசித்தபோது தோன்றிய இடுகைகள் அவை.

பகத்சிங் பொறுத்தவரை காலச்சூழல் அவரை சிறைக்குத் தள்ளி தூக்குமேடைக்கு அழைத்துச் சென்றது. அவர் மிகுந்த சுயமரியாதையுடன் விடுதலை மனிதராக சமத்துவ இந்தியாவில் வாழ விழைந்தவர். அதனால்தான் இவ்வெளியீட்டிற்கு 'வாழ்வை நேசித்த பகத்சிங்' எனத் தலைப்பிட்டேன். அதேநேரத்தில் தனது வாழ்க்கை என்பது தங்களை அடிமைப்படுத்தி நிற்கும் அதிகாரம் மிகுந்த ஏகாதிபத்தியத்தின் காருண்யம்- பிச்சை என இருந்துவிடக்கூடாது எனக் கருதி உயிர் துறந்தவர் பகத்சிங்.

தன் தண்டனை குறைப்பிற்காக போராடிய தந்தையின் அப்பீலை கடுமையாக விமர்சித்தவராக அவர் இருந்ததைக் காண்கிறோம்.  தாங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவத்தில், அது வழியில்லை என சக இளைஞர்களுக்கு அறிவுரை சொன்னதையும் காண்கிறோம். மார்க்சியத்துடன் நெருக்கமாக வந்தாலும் அனார்க்கிச போராளிகளையும் அவர் தேடியிருக்கிறார். அனார்க்கிசம் குறித்து கட்டுரைகள் எழுதினார், அனார்க்கிசம் என்றால் அலர்ஜி ஆகவேண்டாம் நமது வசுதேவ குடும்பகம்தான் அது எனக்கூட எழுதியுள்ளார். சோசலிசம் என பேசினாலும், அப்போது இருந்த கம்யூனிஸ்ட் குழு அல்லது கட்சியில் நேரிடையாக அவர் உறுப்பினராகாமல் இருந்துள்ளது ஏன் எனத் தெரியவில்லை.

தேசபக்த தலைவர்களைப் போற்றியிருந்தாலும், அவர்களை தன் பார்வையில் அவர் விமர்சிக்கவும்  செய்துள்ளார். லாலாஜியை தாக்கியவர்களுக்கு மரணம் தான் பதிலடி என நினைத்து செயல்பட்டிருந்தாலும், லாலாஜியை அவர் நேரிடையாக விமர்சிக்காமல் இல்லை. நேரு, நேதாஜி குறித்தும் அவர் பேசியதைக் காண்கிறோம்.

தான் காதலித்தது குறித்து வெளிச்சொல்லாமல், அதனை மனதில் பெருமிதம் பொங்க நினைத்திருந்ததை அறிகிறோம். கோழையாக தற்கொலை எண்ணத்தில் தன் தோழன் போய்விடக்கூடாது என்பது குறித்தும் அவர் பேசியதைக் காண்கிறோம். 

பகத்சிங் வாழ்க்கை மீது  கரிசனம் கொண்ட பலர் அவரை தண்டனையிலிருந்து மீட்க முயற்சித்தாலும், அதன் முழு விமர்சனம் காந்தி மீதே இன்றும் இருக்கிறது. அது சரியா என்பதை முழுமையாக ஒரு கட்டுரை விசாரிக்கிறது. மற்றொன்று பகத்சிங் வாழ்க்கையின் பல நிகழ்வுகளை தொட்டுச் செல்கிறது. 

பகத்சிங் பெருமிதம் இன்றும் இந்தியாவின் ஏராள இளைஞர்களை கவ்வி பிடித்துள்ளதைக் காண்கிறோம். செகுவாராவை மார்க்சிய உலகம் கொண்டாடுவது போல் பகத்சிங் உலக மொழிகளில் போயிருந்தால் அவரும் உலக இளைஞர்களின்  icon  ஆக இருந்திருப்பார் என்பதில் அய்யமில்லை.

செகுவாரா ஆனாலும் பகத்சிங் ஆனாலும் அவர்களின் தியாகம்- உடலை பெரும் இலட்சியத்திற்காக ஒப்புக்கொடுத்தது என்ற வகையில் போற்றுதலுக்குரியவர்கள். ஆனால் வாழவேண்டிய வயதில் அப்படி அவர்கள் போயிருக்கவேண்டுமா என்ற கேள்வி என்னுள் தொடர்ந்து பதிலைத்தேடிக்கொண்டேயிருக்கிறது. மற்றவர்க்கு மரண தண்டனை அளிக்க அவர்கள் எடுத்த அதே அதிகார துப்பாக்கிகள் தான் எதிர் அதிகாரங்களால் அவர்களின் உடல்களை வாரிக்கொண்டு போயின என்பது சோகமல்லவா? 

வன்முறை மார்க்கமா என்ற பெருங்கேள்வியை இந்திய அனுபவம் உலகின் முன் காந்திய  உரையாடல் மூலம் வைத்ததை பொருட்படுத்தாமல் செல்ல முடியாது. இந்த அம்சம் பகத்சிங் குறித்த உரையாடலில் எனக்கு முக்கியமாக தோன்றுகிறது. இதில் இடம் பெரும் கட்டுரைகளை படிப்பவர் எவரும் அவை எனது critical Appreciation of Bhagat Singh  என்பதை உணரமுடியும்.

27-9-2022                           -ஆர்.பட்டாபிராமன்


 வெளியீட்டை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.


https://ia801400.us.archive.org/14/items/1_20221004/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%201.pdf

No comments:

Post a Comment