சோவியத்தில் தூதராக இருந்த சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் - சோவியத் தலைவர் ஜெனரலிசிமோ ஸ்டாலின் சந்திப்பு
டாக்டர் இராதாகிருஷ்ணனும் தோழர் ஸ்டாலினும் ஏப்ரல் 5, 1952ல் சந்தித்து அளவளாவியது அப்போது Top Secret என வகைப்பட்டு இருந்தது. இப்போது டிஜிட்டல் கிடங்கு ஆவணமாக கிடைக்கிறது.
ஸ்டாலின் தன்னை சந்திக்க அனுமதியளித்தற்கு இராதகிருஷ்ணன் நன்றி சொல்கிறார். அவர் விடைபெறும் தருணத்தில் குறுகிய கால அவகாசத்திலேயே இந்த சந்திப்பிற்கான வாய்ப்பு அமைந்தது. ஸ்டாலின் எப்போது கிளம்புகிறீர்கள் எனக் கேட்கிறார்.
வருகிற ஏப்ரல் 8 செவ்வாய் அன்று கிளம்புகிறேன் என இராதாகிருஷ்ணன் பதில் தருகிறார். தூதராக 21/2 ஆண்டுகள் மாஸ்கோவில் இருந்தது பயனுள்ளதாக அமைந்தது. வெளியுறவு அமைச்சர் அவரது துறையினர் உதவிகரமாக இருந்தனர். கடந்த ஆண்டு கோதுமை எங்களுக்கு அனுப்பி சோவியத் உதவியதற்கு மிக்க நன்றி என தெரிவித்தார். அப்போது ஸ்டாலின் எங்கள் கடமையை செய்தோம் என்றார். பலநாடுகளுக்கு அந்த கடமை தெரியாமல் இருந்ததைப்பற்றி தூதர் குறிப்பிட்டார்.
சோவியத்தின் சாதனைகள் குறித்து இந்தியர்கள் அறிந்துகொண்டு வருகின்றனர். பல சோவியத் பிரதிநிதிகள் வந்து போயுள்ளனர். எங்கள் நாடு பல நெருக்கடிகளை சந்தித்து போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் சுரண்டல் நிலவுகிறது. அந்நிய மேலாதிக்கம் இன்னும் இருக்கிறது. மன்னர் ஆட்சி பிரச்னையுள்ளது. நிலப்பிரபுக்கள் பிரச்னையை சமாளிப்போம் என நம்புகிறோம் என்றார் தூதர் இராதாகிருஷ்ணன்.
நீங்கள் வெற்றியடைந்தால் மிகவும் நல்லது என்றார் ஸ்டாலின்.
இராதாகிருஷ்ணன் இந்தியாவில் நடந்த தேர்தல்பற்றி கூறினார். வரலாற்றில் முதல் முறையாக 175 மில்லியன் மக்கள் வாக்குரிமை பெற்றனர். 105 மில்லியன் வாக்களித்துள்ளனர். ஸ்டாலின் பெண்கள் வாக்களிக்கவில்லையா என்ற சந்தேகத்தை தெரிவித்தார். இங்கு அந்த பதிவு சொல்வதை அப்படியே ஆங்கிலத்தில் தந்துள்ளேன்.
The Ambassador corrected the Generalissimo by stressing that not only did women actually vote in elections, but the women voters had, if anything, shown a more progressive spirit. Dr Radhakrishnan pointed out that we had a lady governor, cabinet minister and his own predecessor in Moscow, the Generalissimo would doubtless recall, had been a lady. The elections, Dr Radhakrishnan said, had been free and fair. There was no official interference of any sort, and many ministers were defeated."
இங்கு ஸ்டாலினுக்கு இருந்த தவறான எண்ணத்தை டாக்டர் இராதாகிருஷ்ணன் சரி செய்ததைக் காணலாம். பெண்கள் வாக்களித்தது மட்டுமின்றி அவர்கள் கவர்னர், அமைச்சர் என்கிற பதவிகளில் இருப்பதையும் சொல்கிறார். தனக்கு முன்னர் சோவியத் தூதராக இருந்தவரே பெண் என்பதையும் நினைவூட்டுகிறார். அவர் வேறு யாருமல்ல, நேருவின் சகோதரி விஜயலஷ்மி பண்டிட்தான். ஸ்டாலின் அவரை சந்திக்கவில்லை என்பது வேறு செய்தி.
இந்தியாவும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவே இருக்கிறது. ஆனால் அமைதி வழியில் பாராளுமன்ற வழிகளில் அதை செய்ய விரும்புகிறோம் என்றார் இராதகிருஷ்ணன்.
ஸ்டாலின் இதற்கு அளித்த பதிலை அந்த ஆவணம் இப்படி சொல்கிறது.
To this Generalissimo said: But the exploiters will never quit- they will seriously object to quitting.
இதற்கு இராதாகிருஷ்ணன் நாங்கள் எங்கள் வழியில் கடுமையாக முயற்சிப்போம். அதில் வெற்றிபெற்றால் பிற நாடுகளுக்கு அது நல்ல பாடமாக அமையும் என்றார்.
வெளியுறவு கொள்கை என்ற வகையில் பெரும் அதிகார நாடுகளுடன் நாங்கள் நிற்கவில்லை. அமெரிக்காவுடன் இல்லை. எது சரியென நினைக்கிறோமோ அதை செய்ய விழைகிறோம் என்றார் தூதர்.
ஸ்டாலின் ஒருமுறை வெளிப்படுத்திய கருத்தை சொல்லி அதில் இன்னும் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாரா என இராகிருஷ்ணன் கேட்டார். அதாவது முதலாளித்துவம் தன் உற்பத்தி முறைகளில் இலாபம் மட்டுமே என கொள்ளாவிட்டால் மக்கள் வாழ்க்கை அங்கு முன்னேறலாம். ஆனால் அது தொடர்ந்து முதலாளித்துவமாக இருக்காது என ஸ்டாலின் தன் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஸ்டாலின் இதற்கு பதிலாக அப்படி ஒருமுறை சொன்னேன். ஆனால் இலாபம் இல்லாமல் முதலாளித்துவம் இருக்காதே. இலாபம் இல்லாமல் பாவம் முதலாளிகள் எப்படி இருப்பர். இலாபத்தை இழப்பார்கள் என்றால் அவர்கள் தங்களையே இழக்கிறார்கள் எனப்பொருள் என்றார் ஸ்டாலின்.
கோமிண்டர்னை விட்டதுபோல் சோவியத் கோமின்பர்ம் என்பதையும் விட்டுவிடுமென்றால் அது மிகப்பெரிய செயலை செய்வதாக இருக்கும் என்றார் இராதாகிருஷ்ணன்.
சோவியத் மட்டுமே கோமின்பார்ம் உருவாக்கவில்லை. பலநாடுகள் அதில் ஈடுபட்டன என்றார் ஸ்டாலின். அதுமட்டுமல்ல, இரு முறைகள் அதாவது முதலாளித்துவம், சோசலிசம் இருப்பதற்கு அது அவ்வளவு அவசியமான ஒன்றல்ல எனவும் கூறினார்.
அய்நா கமிஷன் குறித்த கேள்விக்கு நான்கு நாடுகள் தான் அதிகாரம் கொண்டவையாக இருக்கின்றன என ஸ்டாலின் சொன்னார். கொரியா குறித்த கேள்விக்கு நியூட்ரல் கமிஷன் என்பதை தான் இன்னும் நிராகரிக்கவில்லை என்றார்.
அடுத்து இந்திய அரசாங்கம் , நேரு குறித்து சோவியத் பிரதிநிதி போர்சென்கோ எழுதியது பற்றி விவாதம் சென்றது. அருகில் இருந்த வைஷின்ஸ்கியிடம் என்ன குற்றசாட்டு என ஸ்டாலின் கேட்டார். நேருவும் இது குறித்து வருத்தத்தைச் சொன்னார் என வைஷின்ஸ்கி தெரிவித்தார். பிறகு அவரை திரும்ப அழைத்துவிடுங்கள் என்றார் ஸ்டாலின். இராதாகிருஷ்ணனிடம் அவர் கண்டிப்பாக அகற்றப்படுவார் என்றார் ஸ்டாலின். இராதாகிருஷ்ணனிடம் சரியில்லை- பிடிக்கவில்லை என்றால் வெளிப்படையாக சொல்லுங்கள், நடவடிக்கை எடுப்போம் என்றார்.
சோவியத்துடன் நாங்கள் கட்டவிரும்பும் தோழமையை இந்த மாதிரி பிரதிநிதிகள் கெடுத்துவிடக்கூடாதென்றார் இராதாகிருஷ்ணன். அப்படி இருக்கிறார்களா என ஸ்டாலின் வினா எழுப்பினார். போர்சென்கோ மற்றும் மாஸ்கோ வானொலியில் இருக்கிறார்கள் என்றார் இராதாகிருஷ்ணன். வைஷின்ஸ்கி அவரை உடன் திரும்ப அழையுங்கள் என மறுபடியும் ஸ்டாலின் சொன்னார்.
மேலும் ஜெனரலிசமோ ஸ்டாலின் தொடர்ந்து பேசினார். அமெரிக்கா பிரிட்டிஷ்காரர்கள் போல் அல்ல நாங்கள். ஆசியர்களை சமமாக பாவிக்கிறோம். அதன் அடிப்படையிலேயே எங்கள் கொள்கைகளை அமைக்கிறோம். நீங்களும், நேருவும் எங்களுக்கு எதிரிகள் என நாங்கள் கருதவில்லை. இந்த கருத்துக்களை ஜெனரலிசமோ மிக நிறுத்தி நிதானமாக சொன்னார்.
இருவரும்
வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். நாடு திரும்புவதற்கான நல்வாழ்த்துகளை ஸ்டாலின் தெரிவித்தபின்
சந்திப்பு முடிந்தது.
ஆதாரம்:
டிஜிட்டல் ஆர்கைவ் வில்சன் செண்டர்..ஆவணம்
119265
16-10-2022
Comments
Post a Comment