https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, December 11, 2022

கக்கோல்டு என்னும் கனவில் தொலைந்தவன்

 

கக்கோல்டு என்னும் கனவில் தொலைந்தவன்

                                   எஸ். ஹேமலதா

கரண் நகர்க்கரின் சாகித்ய அகாதமி விருது பெற்ற Cuckold ஆங்கில நாவலை திரு அக்களூர் இரவி தமிழில்கனவில் தொலைந்தவன்’ என மொழிபெயர்த்திருக்கிறார். வாசகரை தொய்வில்லாமல் 800 பக்கங்களை படிக்க வைப்பது சற்று சவாலான வேலை தான். சாதித்திருக்கிறார் ரவி என்றே சொல்ல வேண்டும். இணக்கமான மொழிநடை.



மேவாரின் அரச வம்சம் சந்தித்த சவால்கள், போர்கள், சூழ்ச்சிகள், துரோகங்கள் என ஏராள விஷயங்கள் நாவலில் இடம் பெறுகின்றன.

அனைத்து நேரங்களிலும் அனைவருடனும் சமாதானத்தை விரும்பிய  மகராஜ் குமார் எதையும் முன்னெச்சரிக்கையுடன் சிந்தித்த அதே காரணத்திற்காக பலமுறை ஏளனத்திற்கு ஆளாகிறான். ஆனாலும் நிதானம் இழந்து விடாமல் அடுத்து செய்ய வேண்டிய அலுவல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். போர் தந்திரங்கள் பலவற்றை முயற்சித்து பெற்ற வெற்றி கூட இகழப்படுகிறது. அரச குடும்பங்களில், ராஜஸ்தானத்து அந்தப்புரங்களில்  நிகழும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள், துரோகங்கள் விரிவாக போர் முறை விவரிப்புகளுக்கு இணையாக  பேசப்பட்டிருக்கின்றன.

நீதிமன்ற நடவடிக்கைகள் முக்கியமாக இன்றும்கூட நடைமுறையில் உள்ள கீதைப்புத்தகத்தின் மீது சத்தியம் செய்வது போன்ற நுணுக்கமான விவரங்கள்  இடம்பெற்றுள்ளன.

கதை நாயகன் மேவாரின் நலனை பாதுகாப்பவனாக பொது சுகாதாரத்தில் அக்கறையுள்ளவனாக இருக்கிறான். கழிவுநீர் கால்வாய் அமைக்கும் திட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, காலரா போன்ற  நோய்த்தொற்று காலங்களில் மக்கள் மீட்புக்கான நடவடிக்கைகள் போன்றவை அக்கால நல்ல முன்னுதாரணம். போர்க்கால திட்டமிடல்களும் காலத்தின் தேவைக்கு தொழில்நுட்பங்களை போரில் ஈடுபடுத்தும் முனைப்பும் அதற்கான ஆயத்தப் பணிகளும் விரிவாக பேசப்பட்டிருக்கின்றன. மனைவி,  'சியாமளன் மீது காதல் கொண்டேன்' என்று சொன்னாலும் அவளை அவன் வெறுக்க முடியாதவனாக இருக்கிறான். மகராஜ் குமாருக்கு இல்லற வாழ்வு சோபிக்கவில்லை. அவன் சுகத்திற்காக சில பெண்களுடன் உறவு கொண்டாலும் அதேநேரத்தில் கட்டுப்பாடு எனும் எல்லை உடையவனாகவும் இருக்கிறான்.

தந்தையால் எல்லா நேரங்களிலும் அங்கீகரிக்கப்படாத மகனாக இருந்தாலும் அதே தந்தை "நீ காலத்திற்கு முன்னே வந்துவிட்ட  தீர்க்க தரிசி . நள்ளிரவு தாண்டிய உடனேயே விரைந்து விழித்துக் கொண்டு மக்களைத் துயிலெழுப்பும் பறவை நீ " என்றும்  அவன் குறித்த உணர்வைப் பெறுகிறார்.

ஹிஜிரா பிருகன்னடா  தன் ஆண்மையை உணர்வது, பீஷ்மரை தன் ஆதர்சமாக நினைப்பது, போரை தள்ளிப்போட நினைக்கும் போது கீதையை பற்றி லீலாவதி மூலம் நினைவூட்டப்படுவது என மகாபாரத தாக்கங்கள் அங்கங்கே விரவிக்கிடக்கின்றன.

பாபர் நாட்குறிப்பு எழுதும் பழக்கமுடையவனாக சித்தரிக்கப்படுகிறார். "பாபர் முஸ்லீம் அல்லாதோரை காஃபீர்கள் என்றும் உருவ வழிபாடு செய்வோரின் கடவுளர்களை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்கிறார்.. ஹிந்து வழிபாட்டுதலங்களை இஸ்லாமுக்குரியதாக உருமாற்றுகிறார்" போன்ற செய்திகள் நாவலில் இடம்பெற்றுள்ளன.

"ஹிந்துஸ்தான் மீது படையெடுத்த நாளிலிருந்து நம் கோவில்களை முஸ்லீம்கள் என்ன செய்கிறார்களோ, அதைத்தான் நாங்கள் பௌத்தர்களின் புனிதத் தலங்களுக்கு செய்தோம்" என்ற சுய பரிசீலனை செய்யும் நாயகனோ மத சார்பில்லாமல் அனைத்து மத நம்பிக்கைக்கு உரியவர்களையும் படையில் சேர்த்துக் கொள்கிறான். அவர்கள் கடவுள் ஏகலிங்கேஸ்வர் என்னும் சிவன். தங்களை அவரின் பிரதிநிதிகளாகத்தான் அவர்கள் சொல்லிக்கொள்பவர்கள். ஆனாலும்  ராணாசங்காவின் நிதி அமைச்சர் ஆதிநாத் ஒரு ஜைனர்.  தகுந்த மரியாதைகளுடன் நடத்தப்பெற்றவர்.

பாபர் இரண்டு முறை தோற்ற பின்பும் முயற்சியை கைவிடாமல் ஹிந்துஸ்தானத்தை வெல்வதையே குறிக்கோளாக கொண்டிருந்தார். கைப்பற்றிய பிரதேசத்து சாதாரண மக்களையோ கால்நடைகளையோ தொந்தரவு செய்யக்கூடாது. அவர்கள்பின்னல் வேலைகளையோ’ ஏன்உடைந்த ஊசிகளைக்கூட’ தொடக்கூடாது என உத்தரவிட்டதாக குறிப்பு நாவலில் இருக்கிறது.

இந்த நாவலின் கதைக்காலம் 16 ஆம் நூற்றாண்டு. சமஸ்கிருத மொழி குறித்து நாவல் இப்படியான கேள்விகளை எழுப்புகிறது.

"சமஸ்கிருதத்தை கொன்றது யார்? ஒரு மொழி எப்படி இறந்து போகும்? நமக்கு விருப்பம் இல்லை பிடிக்கவில்லை என்று நினைத்தால் தள்ளி வைக்கக்கூடிய அந்தப்புரத்துப் பெண்ணா மொழி?  பிராமணர்களும், நீதிமன்றமும் மட்டும் பேசாமல் அனைத்து சாதியினரும் பேசும்மொழியாக சமஸ்கிருதம் இருந்திருந்தால் ஒருவேளை அது பிழைத்திருக்குமோ?"

அவர்களின் மொழியான மேவாரியின் அழிவு குறித்தும் அவர்கள் கவலையை நாவல் சுமந்துள்ளது.

நாவலாக இருந்தாலும் கதை மாந்தர்கள் வாழ்ந்தவர்கள் என்பதால் வரலாறும்  புனைவும் சேர்ந்திசைக்கின்றன. மீராவை ஒத்த இளந்துறவி, ராணாசங்காவின் இறப்பு, மகராஜ்குமாரின் மறைவு போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களை மீட்டுருவாக்கம் செய்து வாசகர் மனங்களில் உலவ விடுகிறார் ஆசிரியர்.

தொடங்கினால் இடைவிடாமல் படிக்கத்தூண்டும் நாவல். அக்களூர் இரவியின் அசாதாரண அசரா உழைப்பிற்கு  பாராட்டுக்கள்.

சாகித்ய அகாதமி நூல் விலை ரூ 1100

10-12-2022

 

 

No comments:

Post a Comment