தேசிய புகழ்வாய்ந்த நூலகங்களில் சென்னை கன்னிமாரா பொது நூலகமும் ஒன்று. ஏறத்தாழ 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த நூலகமது.. இணைய வசதி இல்லாத அக்காலத்தில் புகழ் வாய்ந்தவர்கள் அனைவருக்கும் அறிவைத் தேடும் பெரும் சுரங்கமாக திகழ்ந்திருக்கும். புதிய கட்டிடம் இணைக்கப்பட்டே 40 ஆண்டுகள் ஆகியிருக்கும். லட்சக்கணக்கான நூல்களின் இல்லமது. IAS தேர்விற்கு தயாராகும் சென்னை இளைஞர்கள் ஏராளம் அங்கு மணிக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை வந்தவுடன் அதில் உறுப்பினர் ஆனேன். நான் முன்பு வசித்த திருவாரூர் மாவட்ட நூலகத்தில் பல அரிய நூல்கள் கிடைக்கப்பெற்றன. ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்ட தரமான ஆய்வு நூல்கள் (அப்போதே ரூ 500-1100வரை) பலவற்றை அங்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த்ரேபெடலி போன்றவர் எழுத்துக்கள் எனக்கு அங்குதான்அறிமுகமானது. ஒரு கட்டத்தில் அந்த நூலகத்தின் ஆரம்பகாலபுரவலர்கள் பட்டியலில் பேரா அறிவழகனும் நானும் இருந்தோம். இப்போது நிறைய பேர் இடம் பெற்றிருக்கலாம். பழைய பேட்ரான் போர்டு இருக்கிறதா என தெரியவில்லை.
லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள கன்னிமாரா ( 1890களில் இருந்த சென்னை கவர்னர் கன்னிமாரா பெயரால்) நூலகத்திற்கு நான் அறிந்த சில நண்பர்கள் வந்து போவதை பார்த்திருக்கிறேன். தந்தி இளங்கோ( தமிழ் புலமை, மார்க்சிய அறிவு,தொழிற்சங்கவாதி), ஜெய்சங்கர்
(கணிப்பொறி ஆளுமை, இலக்கியம், பக்தி இலக்கியம்), விஜயகுமார்
(கவிஞர்/ எழுத்தாளர்-தொழிற்சங்க வாதி- உடல் நிலைபாதிப்புக்குள்ளாகி தற்போது தேறி வருகிறார்), ரெங்கநாதன்( பக்திஇலக்கியம்- வைணவ இலக்கியம்) ஆகியோர் கன்னிமாரா உறுப்பினர்களாக தொடர்கின்றனர். வீரபாண்டியன்( மார்க்சியம்-பெரியாரியம்-தமிழ்பற்று-இதழனுபவம்-தொழிற்சங்க தலைவர்) சென்னையில் இருந்தபோது கன்னிமாரா செல்லும் வழக்கம் வைத்திருந்தார்.
கன்னிமாராவில் மார்க்சிய நூல்களை தேடும் போதெல்லாம் 150க்கும் குறைவாகவே இருக்கிறதே என்ற எண்ணம் எனக்கு உருவாகும். இம்முறை சென்றபோது மூன்று புத்தகங்களை எடுத்து வந்தேன். ருஷ்ய சோவியத் புரட்சியின் 100 ஆண்டுகள் என்பதால் அது குறித்த விவாதங்கள் பெருக இருக்கின்றன. தேடல்களும் பெருகும். நானும் என்னளவில் தேடுகிறேன். கன்னிமாராவில் எடுத்த புத்தகத்தில் ஒன்று மார்க்சிய புலமை மிக்க பாராளுமன்றத்தில் தனது வாத திறமை மிகுந்த பேரா ஹிரன்முகர்ஜி அவர்களின் " Marx -Great
October-India and the Future" என்ற சிறந்த புத்தகம். 1983ல் அவர் எழுதி 1984ல் அல்லய்டு பப்ளிஷர் வெளியிட்டு உள்ளனர் Marx- Lenin Legacy and their
Intellectual Kinship, அக்டோபர்/நவம்பர் புரட்சி சூழல், மார்க்ஸ் இந்தியா பற்றி, இந்திய விடுதலை போன்ற பல்வேறு அம்சங்களை ஹிரன் விவாதிக்கிறார். அவரின் மூலங்கள் சார்ந்த படிப்பறிவு மூலம்
சோவியத் புரட்சி குறித்த பல பெரும் மார்க்சிய அறிஞர்களால் எழுப்பப்பட்ட சந்தேகங்கங்கள், 1980கள்வரை சோவியத் குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் இந்நூலை அவர் எழுதியுள்ளார். இந்த அறிய புத்தகத்தை இதுவரை 4 பேர் மட்டுமே எடுத்துள்ளனர். 1984ல் ஒருவர், 1985ல் இருவர் அதற்கு 30 ஆண்டுகளுக்கு பின்னர் 2016ல் அடியேன்.. இப்புத்தகத்தின் அலமாரி வரிசை எண் 335.43 MUK. 1980களில் நியுஏஜ், பார்ட்டி லைப் ஆகியவற்றில் அவர் எழுதும் கட்டுரைகளை அகராதி கொண்டுதான் புரிந்துகொள்ள முடிந்தது. இப்புத்தகத்தை கூட மார்க்சிய பயிற்சி
இல்லாமல் புரிந்து கொள்வது கடினம். ஹிரன்(1907-2004) போன்ற மார்க்சிய பேரறிஞர்கள் இடதுசாரி இயக்கங்களில் குறைந்துவருவதும் கவலைக்குரிய ஒன்றே.
Comments
Post a Comment