மினுமசானி எழுதிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு
1954ல் ஸ்டாலின் மறைவிற்கு பின்னர் லண்டனிலிருந்து அச்சிடப்பட்டு வெளியான மினுமசானி அவர்கள் எழுதிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-சுருக்க வரலாறு என்ற புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேரிட்டது. உத்தராகண்ட் மாநில டேராடூன் மாவட்ட மலைவாசஸ்தலம் முஸ்ஸூரி நூலகத்தின் புத்தக காப்பி ஒன்றை ஸ்கேன் செய்துள்ளனர். 306 பக்கங்கங்கள் உள்ள புத்தகத்தை நெட்டில் படிக்க முடிகிறது.
மினு மசானி அக்காலத்தில் கம்யூனிச விரோதி என பெயர்பெற்றவர். பார்சியரான அவர் 90 ஆண்டுகளுக்கு மேல் (1905-98) வாழ்ந்தவர்.குஜராத் ராஜ்கோட்ட் பகுதியிலிருந்து நாடாளுமன்றம் சென்றவர். லண்டன் பாரிஸ்டர். இந்திய தேசிய காங்கிரசில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தபோதும் பின்னர் ராஜாஜியுடன் சுதந்திரா கட்சி துவங்கிய பின்னரும் கம்யூனிஸ்ட்களை தொடர்ந்து விமர்சித்து வந்தவர்.
ஆரம்ப காலத்தில் நேரு, ஜெயபிரகாஷ் உடன் தோழமையாக இருந்தவர். மினு மசானி ஏராள புத்தகங்களை எழுதியவர். அவற்றில் OUR
INDIA, WE INDIANS, SOCIALISM
RECONSIDERED, LIBERALISM, OUR GROWING HUMAN FAMILY போன்றவைகளை குறிப்பிட்டு சொல்லலாம்.
காங்கிரஸ்க்கு மாற்று சுதந்திரா என எழுதிவந்தவர். இந்திரா அம்மையார் வங்கிகள் தேசியமய
நடவடிக்கையின்போது அதை எதிர்த்தவர்.
இன்று பார்க்கும்போது மசானி முன்வைக்கும் எந்த விமர்சனங்களும்
கம்யூனிஸ்ட்களுக்கு புதிதாக தெரியாது. பழக்கமான விமர்சனங்களாகவே தெரியும். ஆனால் இப்புத்தகம்
வந்த 1954ல் கம்யூனிஸ்ட் எதிர்ப்பில் தீவிரம் காட்டிய சுதந்திரா கட்சியினருக்கும்,
லிபரல் சிந்தனையாளர்களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் கருத்து தீனியாக இப்புத்தகம்
அமைந்திருக்கும். அப்புத்தகத்தில் கணப்படும் நாம் அறிந்த / மறுத்தும்
வருகிற சில பகுதிகள்…
கம்யூனிஸ்ட் கட்சி என்பதே மாஸ்கோவின் உருவாக்கம்தான். அனைத்து கட்டளைகளும் அங்கிருந்தே அதற்கு பெறப்பட்டது. நிதி உதவியும் கிடைக்கப்பெற்றது. ஆரம்பத்தில் கட்சி காங்கிரஸ்கள் ஜோஷி, ரணதிவே, ராஜேஸ்வரராவ் என தலைமையை மாற்றி மாற்றி அஜாய்கோஷ் வசம் வந்தது. ஜோஷி- ரணதிவே துருவ கொள்கைகள் உடையவர்கள். கட்சிக்குள் ரஷ்ய பாதை, சீனப்பாதை என விவாதம் தான் இருந்தது. விடுதலை அடைந்து விட்டோம் என்பதைக்கூட கட்சி ஏற்க தயாரில்லாத நிலையில், முதல் பொது தேர்தலை சந்தித்தது. காங்கிரசிற்கு அடுத்து 10 சத அளவிற்கு சோசலிஸ்ட்கள் வாக்கு பெற்றபோதும் 4 சதம் பெற்ற கம்யூனிஸ்ட்கள் 60க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி அங்கீகாரத்தை பெற்றனர்.
தொழிற்சங்கங்களில். காங்கிரசில், காங்கிரஸ் சோசலிச கட்சியில் தொடர்ந்த எதிர்ப்புகளை தரக்கூடியவர்களாக கம்யூனிஸ்ட்கள் செயல்பட்டனர். எந்தவித தியாகமும் செய்திட தயாரான தொண்டர்களை கட்சி பெற்றிருந்தது
1953ல் 50000 உறுப்பினர்களை வைத்திருப்பதாக கட்சி சொன்னது. அஜாய் சென்னை ராஜதானியில் 26 லட்சம் வாக்குகள் பெற்றபோதும் நாம் 1 சதம் கூட உறுப்பினர்களை பெறவில்லையே என ஆதங்கப்பட்டார். மாவோவின் பிறந்தநாள் அன்று மதுரை காங்கிரஸ் 1953 டிசம்பரில் கூடியது. அக்காங்கிரசில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றால் ஆங்கிலேய அமெரிக்கா எதிர்ப்பு என அமெரிக்காவை இணைப்பது தவறு ஆங்கில ஏகாதிபத்தியம் என சரியாக வரையறுக்க வேண்டும் என்பது கூட விவாதமானது. ஒழுங்குபடுத்த அனுப்பட்டிருந்த பிரிட்டிஷ் கட்சியின் பொதுச்செயலர் ஹாரிபொலிட் இருதரப்பாரும் யார் வெல்ல வேண்டும் என்ற முனைப்பிலேயே வக்கீல்கள் போல் விவாதம் நடத்துவதாக கண்டித்தார்.. பல நேரங்களில் ஹாரி பள்ளிக்கூட தலைமையசிரியரைப்போல நடக்க
வேண்டியிருந்தது.
நான் உங்களுக்கு தெலுங்கானா என்ற மாதிரியை காட்டுகிறேன் என சுந்தரையா போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் பேசினர். தெலுங்கானா போராளிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரும் அரசாங்கத்தின் அடக்குமுறை தொடர்வதாக டாங்கே குற்றம் சாட்டினார்,
கம்யூனிஸ்ட்கள் குழப்பத்திலிருப்பதாக தெரிகிறது. அவர்களுக்கு தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும் சட்டமன்ற வேலைகளைவிட தலைமறைவு வாழ்க்கை முறையே பிடிக்கிறது. ஊர்வலம் போராட்டம் தடியடி வாங்குதல் என மக்களை அவர்கள் ஏன்
குழப்புகிறார்கள் என ராஜாஜி கிண்டல் செய்தார். அவர்கள் சட்டமன்ற வேலைகளை விடுவது முட்டாள்தனமானது என்ற கடும் விமர்சனத்தையும் வைத்தார். சட்டரீதியான பகிரங்க வேலைமுறைக்கு வந்தால் நியாயமான கோரிக்கைகளில் வெற்றி பெறுவர் என்றார்,
ஸ்டாலின் இறந்ததை அறிந்தவுடன் அவரது உற்ற துணையாக நின்ற மாலங்கோவிற்கு ஆதரவு தெரிவித்து கட்சி தந்தி அனுப்பியது.-ஒருவாரம் துக்கம் அனுசரித்து வானளாவ
புகழ்ந்து தள்ளியது . இந்திய அரசியலில் காந்தியின் செல்வாக்குத்தான் கம்யூனிசம் பரவுவதை தடுத்தது. கம்யூனிஸ்ட்களுக்கு முடிவுதான் பிரதானமானது ஆனால் காந்திக்கு வழிமுறைகள்தான் முக்கியமானவை.
பசித்த வயிறு மட்டுமல்ல படித்துவிட்டு எனக்கு ஏன் வேலையில்லை என்கிற மனக்கேள்வியும் கம்யூனிசம் வளர உதவுகிறது என்றார் மசானி. கம்யூனிசம் அதன் உச்சம் என்பதை இந்தியாவில் தொட்டுவிட்டது. இனி அதற்கு வீழ்ச்சிதான் .எதிர்காலம் இருக்கப்போவதில்லை என ராஜாஜி கூறிவந்தார்.
ராஜாஜிக்கு முன்னதாக எம் என் ராய் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய அரசியலின் கருப்பு குதிரை ஆகிவிட்டது என விமர்சித்து வந்தார். சட்டமன்றத்தில் ராஜாஜிக்கு கடுமையான பதிலை ராமமூர்த்தி தந்தார், காங்கிரஸ் பஞ்சாயத்துகளில் கூட வீழ்ந்து வருகிறது என்றார் பி ஆர் என்கிற விஷயத்தையும் மசானி பதிவு செய்துள்ளார்.
கம்யூனிஸ்ட்கள் நம் மண்ணில் வேர்களை வைத்துக்கொள்ளவில்லை, தங்களை ருஷ்யர்கள் என்றே நினைத்துக்கொள்கிறார்கள். உடலை இங்கே வைத்துக்கொண்டு உள்ளத்தை எங்கோ வைத்திருக்கிறர்கள். அனைத்திற்கும் அவர்கள் வெளிநாட்டையே நம்புகிறார்கள் என நேரு 1954ல் தாக்கத் துவங்கினார். கொடிகூட ருஷ்யா கொடியாக வைத்திருக்கிறார்கள். அவர்களது கொள்கை பரவினால் இந்தியா உடைந்துவிடும் என்ற அளவிற்கு கீழ் இறங்கி நேரு தாக்கினார் என்ற பதிவையும் மசானி செய்துள்ளார். கம்யூனிஸ்ட்கள்
நேருவை தாக்கி வந்ததற்கு பதிலாகவும் கம்யூனிச எதிர்ப்பின் ஏகபோகத்தை சுதந்திராவிற்கு
கொடுத்துவிடவேண்டாம் என்பதும் நேரு தாக்குதலுக்கு காரணமாகியிருக்கலாம். வரலாற்றின்
பக்கங்கள் எவ்வளவு வினோத வளைவுகளையும் திருப்பங்களையும் அடுத்த தலைமுறையினர் அதனூடாக பயணிக்கும்போது காட்டுகிறது.
Dear Com where can i download this
ReplyDeleteI searched but I could not find will you please give be the link
YOURS fraternally
Semmalamudham
pattabieight.blogspot.com is the blog you can download there
ReplyDelete