Skip to main content

பகத்சிங் வாழ்க்கை - இளம் வாசகர்களுக்காக

மாவீரன் பகத்சிங் வாழ்க்கை
-      ஆர்.பட்டாபிராமன்
பஞ்சாப் மகத்தான தேசபக்த, புரட்சியாளர்களின் பூமியாக விடுதலை காலத்தில் திகழ்ந்தது. .உயிர் தியாக பூமியாகவும் இருந்தது. கல்சா சர்தார்ஸ் என்பவர்கள் மகராஜா ரஞ்சித் சிங் ஆட்சியில் முக்கிய பங்காற்றி வந்தவர்கள். பிரிட்டிஷ்காரர்களை தீரத்துடன் எதிர்த்து போராடியவர்கள். அர்ஜூன்சிங் லியால்பூர் பங்கா கிராம கல்சா சர்தார் வழிவந்தவர். தேசப்பற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்பும் கொண்டவராக இருந்தவர். மனித சமுகம் அன்பினால் சகோதரத்துவத்தால் மட்டுமே தழைத்தோங்கும் என்பதில் உறுதியாக இருந்தவர். அவருக்கும் ஜெய்கவுர் பெண்மணிக்கும்  மகன்களாக சர்தார் கிஷன்சிங், அஜித்சிங், ஸ்வரன்சிங் பிறந்து வளர்ந்தனர். தயானந்த சரஸ்வதியின் ஆர்யசமாஜ கொள்கைகளால் குடும்பம் கவரப்பட்டது. அர்ஜூன்சிங் தயானந்தாவை சந்த்தித்து பெற்ற மனமாற்றம் ஆர்யசாமாஜி என குடும்பத்தை மாற்றியது. புனித நூல் அணிவித்து தயானந்தாவல் அவர்கள் மாற்றப்பட்டனர். தனது குடும்பத்தில் தனது சொந்த சகோதரர்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்பட்டு சிறு சலுகைகளை அனுபவித்தபோதும் அர்ஜூன் தொடர்ந்து எதிர்ப்பாளராகவே செயல்பட்டார்.
பிரிட்டிஷ் எதிர்ப்பை கைவிட்டு குடும்ப வாழக்கையை ஒழுங்காக கவனிக்க உறவுக்காரர்கள் வற்புறுத்தினர். மூத்தமகன் கிஷனுக்கு ஆரம்பத்தில் அரசியலைவிட சமுக பிரச்சனைகளில் ஆர்வம் இருந்தது. விதர்பா வறட்சி  அறிந்து அரசாங்கம் பாராமுகமாக இருப்பதை உணர்ந்து தனது சகாக்களுடன் அங்கு வாழ்ந்த மக்களின் பசித்துயரைப் போக்க செயலில் இறங்கினார் கிஷன். அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட அநாதை குழந்தைகளுக்கு  பெரோஷ்பூரில் கருணை இல்லம் உருவாக்கினார். புரட்சியாளராக இருந்த சசிந்திரநாத் சன்யாலுடன் கிஷனுக்கு பழக்கமிருந்தது. தொடர்ந்த காலத்தில் அரசியல் வழக்குகளாக 40க்கும் மேற்பட்ட. வழக்குகள் கிஷன் மீது போடப்பட்டிருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர் சிறையில் வாட நேர்ந்தது. கிஷன் சிங் துணவியாக வந்த வித்யாவதிக்கு புரட்சிகர முற்போக்கு வீட்டுசூழல் பழக்கமாகத் துவங்கியது. பாம்பின் விஷத்தையும் முறித்த உடல் சக்தி கொண்டவர் என உடன் இருப்பவர்களால் அவர் புகழப்பெற்றார்.
லாலா லஜ்பத்ராய் தலைமையில்  1907ல்  மக்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டங்களில் இறங்கினர். அஜித்சிங் லஜ்பத்ராயுடன் பர்மா மாண்ட்லே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.  சகோதரர்கள் கிஷன் மற்றும் ஸ்வரன்  கூட்டங்களில் பிரிட்டிஷ் எதிர்ப்பு உரையை தந்தனர். இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். வித்யாவதி கருவுற்றிருந்த தருணமது. சகோதரர்கள் உரையாடலின் போது தனக்கு நாடே வியந்து கொண்டாடும் மகன் தேச அர்ப்பணிப்பிற்காக பிறந்தால் மகிழ்ச்சி என்கிறார் கிஷன். செப் 27 2007ல்  பேரன் பகத்சிங் பிறந்த செய்தியை  அர்ஜூன்சிங்கும் பாட்டி ஜெய்கெளரும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் மகன்கள் மூவரும் சிறைக்கொட்டடியில் என்ற துயரம் குடும்பத்தில் இருந்தது. கிஷனும் ஸ்வரனும் பிணையில் வர அனுமதிக்கப்பட்டனர். அஜித் விடுதலை ஆனார்.
1908 ல் திலகரின் கைது போராட்டங்களை தீவிரப்படுத்தியது. கிஷன்சிங் பாரத் மாதா சொசைட்டி நிறுவினார். அஜித்சிங் பல்வேறு பகுதி மக்களிடம் தீவிரமாக இயங்கத் துவங்கினார். கிஷன் அறிவுரையை ஏற்று வெளிநாட்டிலிருந்து தேசபக்த புரட்சிகர கடமையாற்றுவது என அய்ரோப்பா  சென்றார். இரண்டாம் உலகப்போரின் போது ரேடியோ ரோமில் அவர் ஆற்றிய உரை பெரிதும் பாரட்டைப் பெற்றது. 1946ல் இடைக்கால நேரு அரசாங்கம் அமையும்வரை 35 ஆண்டுகளுக்கு மேல் குடும்பம் துறந்து செயல்பட்டவர் அஜித். தனது சிறை வாழ்க்கையிலும் பிற நாட்களிலும் அவர் ஏராளம் படித்தும் எழுதியும் வந்தார். ’முகிபன்னே வாதன்’ பெயரில் அவை வந்தன., அரசாங்கம் எழுத்துக்களை தடை செய்தது. பாரதமாதா சொசைட்டியும் தடை செய்யப்பட்டது. கிஷன்- ஸ்வரன் கைது செய்யப்பட்டனர். லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை உழைப்பு ஸ்வரணை பலகீனமாக்கியது, தனது 23ஆம் வயதில் அவர் மரணமுற்றார். இதே வயதில் தங்கள் குடும்ப வாரிசு பின்னர் வீரமரணம் அடையப்போகிறது என்பதை அப்போது அக்குடும்பம் அறிந்திருக்காது.
கிஷனுக்கு பகத்சிங் மற்றும் அவருடன் 7 பேர் உடன்பிறந்தனர் .ஜகத் ,குல்வீர், ரஜேந்தர், ரண்வீர், அமர்கெளர், பீபிபிரகாஷ் கெளர், சகுந்தலா என அவர்கள் பெயரிடப்பட்டனர்... சிறுவயதில் அறியாப்பருவத்தில் வீட்டிற்கு வரும் கிஷன் நண்பர்களிடம் நான் துப்பாக்கிகளை விதைப்பேன் என பகத்சிங் கூறியதாக பதிவுள்ளது. அறிவார்ந்த போர்க்குணம் வரவழக்கத்தகுந்த குடும்ப சூழல் பகத்திற்கு வாய்த்தது. தனிமை விரும்பியாகவும் அவ்வப்போது சிந்தனை வயப்பட்டவரகவும் பள்ளிக்காலத்தில் பகத் அவரது சகோதரர்களால் உணரப்பட்டுள்ளார். தாய் இதை உணர்ந்து கவலையடைந்ததாகவும் கிஷனிடம் தெரிவித்ததாகவும் பதிவுள்ளது.  புதிய சூழலுக்காக கிஷன் குடும்பம் நவகோட் பகுதிக்கு செல்கிறது. பிரிட்டிஷ் ஆதரவு சீக்கிய குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்க்காமல் லாகூரில் தயானந்தா ஆங்கில வேத பள்ளியில் பகத் சேர்க்கப்படுகிறார். அப்பள்ளியில் ஆங்கிலம், சமஸ்கிருதம், உருது கல்வியை பகத் பெறுகிறார்.
பிரிட்டிஷாரின் 1919 ஆள்தூக்கி கொடும் ரெளலட் சட்டம்  போராட்டக்கனலை ஏற்படுத்துகிறது. அரசியல் கைதிகளுக்காவது இச்சட்டம் பாயக்கூடாது என்கிற காந்தியின் வேண்டுகோள்  ஏற்கப்படவில்லை. சென்னையில் ராஜாஜியை சந்தித்த பின்னர் ஹர்த்தால் போராட்ட அறிவிப்பை காந்தி மார்ச் இறுதியில் வெளியிடுகிறார். பள்ளி கல்லூரியிலிருந்து மாணவர்கள் வெளியேறுகிறார்கள். காந்தி கைது செய்யப்படுகிறார். வன்முறைகள் எழுகின்றன என்பதறிந்த  அவர் சத்தியாக்கிரகத்தை கைவிடுகிறார். பஞ்சாபில் சைபுதின் கிச்லு கைது செய்யப்பட்டு இருக்குமிடம் அறியாமல் வைக்கப்படுகிறார். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு ஏப்ரல் 10, 1919ல் நடத்தப்பட்டு தெருவில் பிணமாகி போகின்றனர். பஞ்சாப் வைசாகி நாளான ஏப் 13  குரு கோவிந்த சிங் மக்களை திரட்டிய நாள். அமிரத்சரஸ் நகரில் 6000 மக்கள் ஜாலியன்வாலாபாக்கில் திரண்டனர். லெப்டிணண்ட் கவர்னராக இருந்த மைக்கேல் டயர் , ஜெனரல் டயரை 90 ஆயுத வீரர்களுடன் அனுப்பினான். நாய்களை சுடுங்கள் என உத்தரவு வந்ததும் குண்டுகள் பொழியப்பட்டன. எந்த முன்னறிவிப்பும் இல்லாததால் மிருகத்தன தாக்குதலில்  மக்கள் பிணக்குவியலாயினர். மதன் மோஹன் மாளவிய 1400பேர்  சுடப்பட்டு இறந்ததாக தெரிவித்தார். சிவில் சர்ஜன் ஸ்மித் கணக்கு 1800 என்றது. ரவீந்திரநாத் தாகூர் தனது பட்டத்தை துறந்தார். பின்னால் உத்தம் சிங் ஜெனரல் டயரை சுட்டு வீழ்த்தினார்.
 பகத்சிங் ஜாலியன்வாலாபாக் அறிந்து அங்கிருந்த பிணக்குவியலை  இரத்த கசிவுகளை பார்த்து மனம் நசுங்கிப் போனார். 12வயது பள்ளி மாணவன் மத்தியில் மாபெரும் பாதிப்பை இந்நிகழ்வு உருவாக்கியது. தனது சகோதரி அமரிடம் தான் ஒரு பாட்டிலில் எடுத்து வந்த இரத்தம் தோய்ந்த  மண்ணைக்காட்டி இருவரும் அதன்மீது செடியை நடுகின்றனர். நமது  சிறியதந்தை அஜித் இருந்தால் பிரிடிஷ்ரை விரட்டியிருப்பார் என சிறார் இருவரும் பேசிக் கொள்கின்றனர். நான் அவரை போலவே பழிவாங்குவேன் என பகத் சொல்கிறார்.
1920ல் ஒத்துழையாமை-பகிஷ்கரிப்பு போராட்டத்தை காந்தி அறிவிக்கிறார். காந்தி கூட்டம் லாகூரில் என அறிந்து தனது நண்பர்களுடன் பகத் செல்கிறார். காந்தியின் உரை கேட்டு 9வது படித்துக்கொண்டிருந்த பகத் பள்ளியிலிருந்து வெளியேறி ஓத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்கிறார். ஒடுக்குமுறைகளை அரசாங்கம் அதிகப்படுத்துகிறது தலைவர்கள் கைது படலம் நடந்தேறுகிறது. 25000 மக்கள் கைதாகியிருப்பர்..  ஜனவரி 4, 1922 உத்தரபிரதேசம் செளரி செளரா  பகுதியில் போலீஸ்காரர்களின் ரசனை குறைவான சங்கேதங்களால் போராளிகள் கோபமூட்டப்பட்டனர். காவல் நிலயம் தீக்கிரையானது. போலீஸ்காரர்கள் மாண்டனர்.. அகிம்சை அறவழிப் போராட்டத்திற்கு நாடு தயாராகவில்லை என காந்தி  போராட்டத்தை திரும்ப பெற்றார். ஆறு ஆண்டுகள் கடும் தண்டனை என அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்நிய துணிகள் தீக்கிரையாக்கும் போராட்டத்தில் பகத் நண்பர்கள் தீவிரமாக பங்கேற்றனர். பள்ளிப்படிப்பை காந்தி அறைகூவலை கேட்டு விட்டது, காந்தி போராட்டத்தை கைவிட்டது போன்றவை பகத்சிங்கின் மனப்போராட்டத்தை அதிகப்படுத்தின. நண்பர்கள் மத்தியில் விவாதம் எழுந்தது. ஓரிரு நிகழ்வுகளை காரணம் காட்டி போராட்டத்தை நிறுத்தியது தவறு என பகத் பேசத்தொடங்கினார்.. பத்தொன்பது வயது சர்தார் கர்த்தார்சிங் தனது ஆயுத கலகத்தால் கைதாகி மரணதண்டனை பெற்று உயிர்த்தியாகம் செய்ததும் அவரது உரையும் பகத்சிங்கை கவர்ந்தன. அகிம்சை வழியில் பிரிட்டிஷாரை தூக்கி எறிய முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஒத்துழையாமையில் பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்கள் படிப்பை தொடர ஆங்காங்கே கல்லூரிகளை தேசியத்தலைவர்கள் நிறுவத்துவங்கினர். லாலா லஜ்பத்ராய் துவங்கிய தேசிய கல்லூரியில் அங்கிருந்த ஆசிரியர் பரமானந்த் மூலம் பகத்தை கல்லூரியில் சேர்த்தார் கிஷன். பரமானந்த் அவர்கள் கர்த்தார் சிங் ,லாலா ஹர்தயால் போன்றவர்களூடன் புரட்சிகர பணியாற்றியவர். சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர்.  புரட்சியாளர்களுடன் தொடர்பிலிருந்த பேராசிரியர் ஜெயசந்தர் பகத்சிங்கிற்கு அரசியல் வகுப்பாசிரியர். கல்லூரியில் சுகதேவ் வகுப்புத் தோழனாகிறார். தேசபக்தி, புரட்சிகர போராட்டங்கள் குறித்த கருத்தொற்றுமை உருவாகிறது. மகராணாபிரதாப், சந்திரகுப்தர் நாடகங்களை அவர்கள் அரங்கேற்றுகின்றனர்.
லாலா லஜ்பத்ராய் துவரகாதாஸ் நூலகம் ஒன்றை அமைக்கிறார். நூலக பொறுப்பாளர் ராஜாராம் சாஸ்திரிக்கும் பகத்திற்கும் ஏற்பட்ட நல்லுறவால்  அவர் பரிந்துரைத்த புத்தகங்களை படிக்கிறார் பகத்.  மார்க்ஸ், பகுனின் புத்தகங்கள் அறிமுமாயின, பகுனின் அவரை கவர்கிறார். சோசலிச கோட்பாடுகள் அதற்கான புரட்சிப்போராட்டங்கள் ஆதரிக்கப்பட வேண்டியவை என்ற கருத்திற்கு பகத்சிங் வந்து சேர்கிறார். நூலகத்திற்கு வந்த புதிய புத்தகம் அனார்க்கிசம் கட்டுரைகள் அவருக்கு தரப்படுகிறது.  அதில் இடம் பெற்ற வன்முறையும் உளவியலும் பிரஞ்சு அனார்க்கிசவாதி வேலன் அறிக்கையும் அவரை கவர்கின்றன. தொழிலாளி வர்க்கம், தொழிற்சங்கங்கள் குறித்த பதிவையும் பிரஞ்சு சட்டமன்றத்தில் அவரால் வீசப்பட்ட குண்டுகுறித்த பதிவையும் பகத் அறிகிறார்.. சாஸ்திரியிடம் நாமும் இவ்வாறு செயல்படவேண்டும் என்கிறார் பகத். பொது இடங்களில் இப்படிப்பட்ட கருத்துப்பகிர்வு கூடாது என சாஸ்திரி எச்சரிக்கை உணர்வை தருகிறார்.. இப்புத்தகம் 60க்கும் மேற்பட்ட முறை நூலகத்திலிருந்து பகத் பெயரால் பெறப்பட்ட செய்தியை நாம் அறிய முடிகிறது. 1923ல் தனது எப்,ஏ முடிக்கிறார். பின் BA சேர்கிறார்.
வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாகிறது. மறுத்து விவாதிக்கிறார். பெண் படிக்கவில்லை என சொல்லி தட்டிக்கழிக்க பார்க்கிறார். இறுதியில் தனது தேசபக்த கடமை குறித்து எடுத்து சொல்கிறார். பெற்றோரை ஏற்க செய்ய முடியாமையால்  வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள் கடிதம் ஒன்றை வைத்துவிட்டு வெளியேறுகிறார். அக்கடிதத்தில் எனது புனித நூல் நிகழ்வன்று காந்தி நான் நாட்டுக்கு சேவையாற்றுவேன் என சொன்னார். அதை நிறவேற்ற உறுதி எடுத்துள்ளேன் என குறிப்பிட்டிருந்தார். பெற்றோர்களின் தேடல் முயற்சி பலனளிக்கவில்லை.  பண்டிட் யோசியர் ஒருவர் திரும்ப பகத் வருவார்  ஆனாலும் தொடர்ந்து உங்களுடன் இருக்க மாட்டார் . வித்தியாசமான இவர் ஒன்று நாட்டை ஆள்வார்- இல்லையேல் தூக்கு ஏறுவார் என தன் கணிப்பை சொல்கிறார். தாய் வித்யார்த்தி பெரும் துயர் அடைகிறார்.
பகத்சிங் கான்பூர் சென்று பல்வந்த் சிங் என்ற பெயரில் பத்திரிக்கை பணிகளில் ஈடுபடுகிறார். புரட்சியாளர்களின் வழிகாட்டியாக இருந்த சந்திர சட்டர்ஜி மற்றும் பதுகேஷ்வர் தத், அஜாய் கோஷ், விஜயகுமார் சின்ஹா போன்றவர்களின் தொடர்பு கிடைக்கிறது. பதுகேஷ்வர் வங்க மொழி கற்றுத்தருகிறார். அங்கு பிரதாப் எனும் புகழ் வாய்ந்த பத்திரிக்கையை நடத்தி வந்த கணேஷ் சங்கர் வித்யார்த்தி பல்வந்த் சிங் (பகத்) அழைத்து கட்டுரைகள் எழுத வைக்கிறார். நிருபராக டெல்லி சென்று கலவரங்கள் குறித்து எழுத வைக்கிறார்.. போலீஸ் கண்காணிப்பு தீவிரமாகிறது .கணேஷ் சங்கர்  பல்வந்தை அலிகார் பக்கமுள்ள ஷாதிபூர் கிராம  தேசிய பள்ளி ஒன்றிற்கு தலைமை ஆசிரியராக அனுப்புகிறார். பகத் அங்கிருப்பதை அறிந்து ஊர் நண்பர்கள் தேடி வருகின்றனர். மாணவர்களை விட்டு பகத் சமாளித்து தான் இல்லை என அவர்களை உணரவைத்து திரும்ப செய்து விடுகிறார். பின்னர் தந்தையிடமிருந்து தொடர்ந்து வந்த  உறுதி மொழிகளால் 6 மாதம் கழித்து வீடு திரும்புகிறார்.
ஊர் திரும்பியதும் அகலி இயக்க புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மத நடவடிக்கைகளில்  நடக்கும் ஊழல் தடுப்பதற்கு போராடுகிறார். பிரிட்டிஷாரின் இந்த தாக்குதலில் 200 சீக்கியர்கள் பலியாகின்றனர். கர்த்தார் சிங், ஜ்வாலா சிங் தலைமையில் கிராமந்தோறும் இயக்கங்கள் எழுகின்றன. கிஷன்  தனது பகுதியில் அவர்களை வரவேற்கமுடியாத சூழலை உறவினர் உருவாக்குகின்றனர். பகத் அனைத்து உதவிகளும் செய்ய முன் வருகிறார் அப்பகுதியினரை ஆதரவுக்கு திரட்டுகிறார். இதனால் கைது செய்யப்படலாம்  என அறிந்த பகத் டெல்லி செல்கிறார். தைனிக் அர்ஜுன் பத்திரிகை பணிகளில் ஈடுபடுகிறார். அங்கும் பல்வந்த் சிங் என்றே அறியப்படுகிறார்.
கான்பூரில் வெள்ளம் என அறிந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட செல்கிறார். அப்போதுதான் சந்திரசேகர் ஆசாத்தை சந்திக்க உரையாட வாய்ப்பு கிட்டுகிறது. அவரிடம் வசீகரிக்கப்படுகிறார். பின்னர் லாகூர் திரும்பி ஒத்த புரட்சிகர சிந்தனையுள்ள இளைஞர்களை சேர்க்கிறார். பகவதிசரண் வோரா, அவர் துணவியார் துர்கா துணையுடன் பாரத் இளைஞர் மன்றம் 1926ல் துவக்கப்படுகிறது. லெனின் புத்தகங்களை படித்த பின்புலத்தில் அவரின் கொள்கைகளை அடியொற்றி மன்றத்தின் நோக்கம் வெளிப்படுத்தப்படுகிறது. விவசாயி- தொழிலாளரை திரட்டுவது என்பது பேசப்படுகிறது. சாதி மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட தேசபக்தி முன் வைக்கப்படுகிறது. புரட்சியாளர் கர்த்தார்சிங்  சிலை நிறுவப்படுகிறது. இன்குலாப் ஜிந்தாபாத் மாபெரும் முழக்கமாகிறது.
லாகூர் ரகசிய புரட்சிகரகுழுவில் முக்கிய தோழர்களாக சந்திரசேகர் ஆசாத், பகத் ராம்பிரசாத் பிஸ்மில், ரஜிந்தர் லாஹிரி, அஷ்வகுல்லாகான், பதுகேஸ்வர் தத் செயல்பட்டுவந்தனர். தங்களது நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பதில் உள்ள சிரமங்களை தீர்த்திடும் வகையில் அரசாங்க நிதியை கொள்ளையிடுவது என முடிவெடுத்தனர். ஆக 9 1925  லக்னோவிற்கு மிக அருகாமை ககோரியில் தங்கள் இடுப்பு துப்பாக்கிகளுடன் அரசாங்க நிதி ரூ8600யை கொள்ளயிட முடிந்தது. ஆனால் அதற்கு அவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியதானது. பல புரட்சியாளர்களுடன் பிஸ்மில்லும் கைதானார். ராம்பிரசாத் பிஸ்மில், ரஜேந்திரலாஹிரி, அஷ்வகுல்லா, ரோஷன்சிங் ஆகிய தோழர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.. அவர்களை தப்பவைத்து மீட்டிட பகத், ஆசாத், சுகதேவ், ராஜகுரு, பதுகேஷ்வர் முயற்சிகள் பலனளிக்கவில்லை. நான்கு புரட்சியாளர்களும் தூக்கு கயிற்றில் வீரமரணம் அடைந்தனர்.
1927ல் தசரா விழாவின் போது பொது இடத்தில் எவரோ குண்டு வீச மக்கள் மரணித்தனர். பகத்சிங்கிற்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அமிர்தசரஸ் சர்தோல் சிங் வீட்டில் பகத் மறைகிறார். தனது கைத்துப்பாக்கியை அங்கு விட்டு திரும்ப எடுக்க வருகையில் கைதாகி லாகூர் சிறையில் அடைக்கப்படுகிறார். காக்கோரி குறித்த விசாரணை சித்திரவதை நடந்தேறுகிறது அவரை பிணையில் விடுவிக்க ரூ 60000 என்கிறது பிரிட்டிஷ்  நீதிமன்றம். மிகக்கடுமையான முயற்சிக்கு பின்னர் ரூ 60000 கட்டி ஜாமீனில் பகத் அவரது தந்தையால் பிணையில் எடுக்கப்படுகிறார். உடனடியாக புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத சூழல் பகத்திற்கு ஏற்படுகிறது. குடும்பம் கறவை மாடுகளை வாங்கி பால்பண்ண ஒன்றை நிறுவுகிறது. பகத் அதன் மேலாண்மை பொறுப்பேற்கிறார். கடும் உழைப்பை நல்குகிறார். ஆனால் விரைவில் பால்பண்ணை இரவில் புரட்சியாளர்களின் சந்திப்பு கூடமாகிறது. பஞ்சாப் சட்டமன்றத்தில் திரு கோபி சந்த் பார்கவா என்பார் மூலம் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு, பகத் மீதான பிணை நிதி நியாயமற்றது என நிறுவப்பட்டது. ரூ 60000 அவரது குடும்பத்தாரிடம் திரும்பத் தரப்பட்டது. பகத்சிங் தான் இனி சுதந்திர பறவை என கருதலானார்.
செப்8, 1928ல் ஃபெரோஷா கோட்லாவில் பகத், சுகதேவ், குந்தன்லால், சிவ வர்மா,  ஜெயதேவ் குப்தா, விஜய் குமார் சின்ஹா போன்ற புரட்சியாளர்கள் கூடினர். பகத்சிங் அக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதேசங்களிலுள்ள புரட்சிகர குழுக்கள் இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்பதை தெரிவித்தார். நாம் ஹிந்துஸ்தான் சோசலிச  குடியரசு அசோசியேசன் என்ற அமைப்பின் பெயரால் இயங்கலாம் என அறிவித்தார். ஆசாத் பங்கேற்க முடியாவிட்டாலும் அவர் சேர்மன் என்றும், பஞ்சாப் பிரிவு பொறுப்பில் சுகதேவ், ராஜஸ்தான் பிரிவு குந்தன், உத்தர பிரதேச பிரிவிற்கு சிவ வர்மா, பீகார் ஃபனிந்திர நாத் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக்கப்பட்டனர். அனைத்து பிரதேச ஒருங்கிணப்பு பொறுப்பிற்கு பகத், விஜயகுமார் நியமிக்கப்பட்டனர். அரசு வங்கி கொள்ளை என்பதும் முடிவானது.
நவம்பர் 8, 1927ல் அமைக்கப்பட்ட சைமன் கமிஷன் எதிர்த்து பெரும் போராட்டங்கள் எழுந்தன. சைமன் சென்ற எல்லா பெரு நகரங்களிலும் ’திரும்பி போ’ என்கிற வீச்சான போராட்டங்கள் நடந்தன. சென்னை துப்பாக்கி சூட்டில் மூவர் பலியாயினர் லாகூருக்கு வரும்போது குண்டெறிய வேண்டும் என்கிற பகத் ஆலோசனையை அசோசியேஷன் ஏற்கவில்லை. லாலா லஜ்பத்ராயுடன் போராட்டத்தில் .பகத்சிங் பங்கேற்கிறார். லாலா லஜ்பத்ராயை பாதுகாக்கும் வகையில் புரட்சியாளர்கள் சுற்றி நின்றனர். போலீஸ் கமிஷனர் ஸ்காட் குண்டாந்தடி தாக்குதலுக்கு ஆணையிடுகிறார். சூப்பரிடெண்ட் சாண்டர்ஸ் தலைமையில் தாக்குதல் நடக்கிறது லாலா லஜ்பத்ராய் தோள்பட்டையிலும் தலையிலும் தாக்கப்படுகிறார். போலீசாரின் மிருகத்தனமான தாக்குதலையடுத்து இரத்தம் சொட்டும் நிலையில் லஜ்பத்ராய் போராட்ட நிறுத்தம் என அறிவிக்கிறார். பகத் தன் மீதான தாக்குதலை பொறுத்து சகித்து.  கொள்கிறார். 144 தடை போடப்படுகிறது. மீறி திரண்ட மக்களிடையில் என் மீதான அடி பிரிட்டிஷாருக்கு விழ இருக்கும் சாவு மணி என லஜ்பத்ராய் உரையாற்றுகிறார்.. உடல்நலம் பாதிக்கப்பட்டு நவம்பர் 17, 1928ல் அவர் மறைகிறார்.
டிசம்பர் 10, 1928ல் அசோசியேஷன் கூடி ஸ்காட் போலீஸ் அதிகாரியை கொன்று பழி தீர்ப்பது என முடிவெடுக்கிறது. ராஜகுரு போலீஸ் நிலையத்திற்குள்ளேயே அவனை கொல்ல அனுமதி வேண்டும் என்கிறார். ஆசாத் அறிவுரைக்குப் பின்னர் பொருத்தமான நேரத்திற்காக புரட்சியாளர்கள் காத்திருந்தனர். டிசம்பர் 17 அன்று காவல்நிலயத்திலிருந்து வெளிவந்த போலிஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸை ராஜகுரு தலையில் சுடுகிறார். பகத் தொடர்ந்து சுடுகிறார். ஆசாத் உள்ளிட்ட அனவரும் தயானந்தா கால்லூரி நோக்கி ஓடி தப்புகின்றனர். பகத்தை பிடிக்கவந்த சந்தன் சிங் என்கிற போலீஸ்காரர் ஆசாத்தால் சுடப்படுகிறார். அருகாமையில் இருந்த சைக்கிளில் ஏறி தப்புகின்றனர். சாண்டர்ஸை ஜேம்ஸ் ஸ்காட் என நினைத்து கொன்றாலும் தோழர்கள் கடமையை செய்ததாக கருதினர். ’மனசாட்சியற்ற அடக்குமுறை அரசே ஜாக்கிரதை’ என துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. நாங்கள் ஒரு மனிதரை கொன்றுவிட்டோமே என வருந்தினாலும் இக்கொடும் அரசாங்கத்தின் பிரதிநிதி அவர் என அறிக்கை போராளிகளின் செயலை நியாயப்படுத்தியது.. என்ன செய்வது புரட்சி இரத்தம் சிந்துதலை கோருகிறது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
போலீசாரிடமிருந்து தப்பிக்க சுகதேவுடன் திட்டமிட்டார் பகத். பகவதி சரண் துணைவியார் துர்கா மற்றும் மகன் சசீந்திரன்   பகத் குடும்பம் ஆகவும் ராஜகுரு வேலையாள் எனவும் வேடமிட்டு 40 மணி ரயில் பயணத்தில் கல்கத்தா தப்பினர். கைச்செலவிற்கு துர்கா குடும்ப பணத்தை தந்து உதவினார். காங்கிரஸ் மாநாட்டில் பகத் பங்கேற்றார் எனவும் அவர் பகல் பொழுதில் வெளியிலேயே செல்லவில்லை  எனவும் முரண்பட்ட இருவித தகவல்கள் நிலவுகின்றன..  அனுசீலன் சமிதி தலைவர்  பிரதுல் சந்திர கங்குலியுடன் பகத் சந்தித்து இரு ரிவல்வார்களை பெறுகிறார். பின்னர் வெடிகுண்டு செய்வதில் தேர்ச்சியானவர் என அறியப்பட்ட யதிந்திர நாத் அவர்களை இரகசியமாக பகத் சந்திக்கிறார். அதன் பின்னர் ஆக்ரா செல்கிறார் பகத்.
ஆக்ராவிலும், லாகூரிலும் வெடிகுண்டு தயாரிக்கும் நடவடிக்கைகளில் புரட்சியின் தோழர்கள் இறங்கினர். பொது பாதுகாப்பு மசோதா, தொழிற் தகராறு மசோதாக்களை கொண்டுவர பிரிட்டிஷ் தீவிரமாக இருந்தது. மசோதா மத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரும் நாளில் குண்டெறிவது என்கிற பகத்சிங் ஆலோசனை ஏற்கப்பட்டது. பகத்சிங் வெளியே இருப்பது  அமைப்பிற்கு தேவை என்றும் பதுகேஷ்வரும், விஜய் சின்ஹாவும் சட்டமன்றத்திற்குள் குண்டெறிவது என்றும் அமைப்பு முடிவெடுத்தது. துண்டறிக்கைகள் மூலமல்ல நமது வாழ்வை தியாகம் செய்வதே பெரும் பிரச்சாரமாகவும் விழிப்புணர்வை உருவாக்குவதாகவும் அமையும் என பகத் கருதினார். அசெம்பிளிக்கு நுழைவு அனுமதி பெறுவதற்கான ஏற்பாட்டை ஜெயதேவ் கபூர் செய்தார். ஜெயதேவ் ஆராய்ச்சி மாணவராக நடித்து இதை வெற்றிகரமாக்கினார்.
1929 ஏப்ரல் 8 அன்று சட்டமன்றம் கூடியது. மோதிலால் உட்பட தலைவர்கள் இருந்தனர். மசோதாக்கள் அறிமுகம் துவங்கியவுடன் பதுகேஷ், பகத் இருவரும் குண்டுகளை யாருக்கும் காயம் ஏற்படாதவாறு எறிந்தனர். பதட்டம் பரவியது. அனைவரும் ஓடத்துவங்கினர். மசோதா தாக்கல் செய்த ஜான் ஷீஸ்டர் மேசைக்கு கீழே பதுங்கி கொண்டார். தோழர்கள் இன்குலாப் முழக்கமிட்டனர். துண்டறிக்கைகள் மசோதாக்கள் கொடும் அடக்குமுறைக்கானவை என்பதை சுட்டிக் காட்டி வெளியிடப்பட்டது. புரட்சிகர சிந்தனைகளை உலகில் யாராலும் அழிக்க முடிந்ததில்லை. சிலர் இரத்தம் சிந்தி புரட்சியை அரங்கேற்றுவதன் மூலம் மனித குலம் சுரண்டலை ஒழிக்க முடியும் என்றது அறிக்கை. இருந்த இடத்தில் அமைதியாக மோதிலால், ஜின்னா, மாளவியா, விதல்பாய் படேல் அமர்ந்திருந்தனர். சில போலிசார் முன்னேறி வந்தனர். பகத் துப்பாக்கிகளை கீழே வைத்துவிட்டு கைதாக தயார் என்பதற்கான செய்கைகளை காட்டினார். இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தனது தந்தை தன்னைக் காண முயற்சி செய்கிறார் என்பதறிந்து ஏப்ரல் 26, 1929ல் பகத் டெல்லி சிறையிலிருந்து கடிதம் எழுதுகிறார். கவலைப்படவேண்டாம். மரியாதையாக நடத்துகிறார்கள். பார்க்க வரும்போது கீதா ரகஸ்யம், நெப்போலியன் புத்தகம், நாவல்கள் எடுத்து வருமாறு எழுதுகிறார். அதே நேரத்தில் தன்னை வெளிக்கொணர காட்டும் முயற்சிகள் அவசியமற்றது என தெளிவுபடுத்துகிறார். கொலை முயற்சி , குண்டு வெடிப்பு செக்‌ஷன்கள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தது. குண்டெறிந்தது உண்மை.. சாட்சிகள் தவறாக ஜோடிக்கப்பட்டவை என பகத் வாதாடினார். மனிதகுலத்தை தாங்கள் அளவு கடந்து நேசிப்பதாகவும்,  உழைக்கும் மக்களை அரசின் தாக்குதலிருந்து காப்பாற்றவேண்டியே இந்நடவடிக்கை. நாங்கள் எவரையும் கொல்ல நினக்கவில்லை என்றார் பகத்.. வாணவேடிக்கை விட்டீர்களா என அரசு தரப்பு கேலி பேசியது. ஆம் வாணவேடிக்கை எங்கள் வாழ்க்கையுடன்தான் என சீற்றத்துடன் பகத் பதில் அளித்தார் என அறியமுடிகிறது. எங்களது புரட்சிகர நம்பிக்கை அற்பமானதல்ல என அனைவரும் அறியவேண்டும் என்றார். புரட்சி என்பதை அழிவாக நாங்கள் கருதுவது இல்லை. மறுகட்டுமானம் என்றே பார்க்கிறோம் என்றார் பகத்.. நீதிமன்ற வாதங்கள் முடிந்து ஜூன் 12, 1929ல் 140 பக்க தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பில் ஆயுள்தண்டனை என்றனர். பகத், பதுகேஷ்வர் இன்குலாப் முழக்கமிட்டனர்.
சிறைக்கைதிகளுக்கு நேரும் அவலங்களை, கொடுமைகளை கண்டித்து லாகூர்  சிறையில் ஜூன்14, 1929 முதல் பட்டினிப் போரை தோழர்கள் மேற்கொள்கின்றனர்...  சுகதேவ், ராஜகுரு, யதிந்திரர், ஜெயதேவ், அஜாய்கோஷ், சிவ வர்மா அச்சிறையில் பகத்துடன் பட்டினிப்போரில் ஈடுபடுகின்றனர். மூத்த போராளி பாபா சோகன் சிங் சிறையில் 1915 முதலே இருந்து வந்தார்.  சாண்டர்ஸ் கொலை வழக்கும் நடக்க துவங்கியது. மருத்துவ படுக்கையிலேயே பட்டினி பலவீனத்துடன் பகத், பதுகேஷ்வர் இருவரையும் நீதிமன்றம் அழைத்து செல்கின்றனர். தேசபக்தர்களுக்கு கைவிலங்கு போடப்படுவதை எதிர்க்கிறார் பகத். பட்டினியால் யதிந்திரர் இரத்த ஓட்டம் நின்றது. கை கால் விளங்காமல் போனது. போராட்டத்தை நிறுத்தினால் யதிந்திரரை விடுதலை செய்யலாம் என்றது சிறை நிர்வாகம். பகத் போராட்டத்தை நிறுத்தி யதிந்திரரை காக்க விரும்பினார். சிறை நிர்வாகம் ஏமாற்றுவதாக உணர்ந்த பகத்சிங் தனது பட்டினிப்போரை நீட்டிக்கிறார். செப் 13 அன்று  யதிந்திரரை மரணம் கவ்வியது. இந்திய விடுதலைபோரின் மகத்தான தியாக வரலாற்று  நாளாக அந்நாள் மாறியது.
யதிந்திரர் தியாகம் சிறை சீர்திருத்த பரிந்துரைகளை அரசாங்கும் ஏற்கும் சூழலை உருவாக்கியது. 114 நாட்களுக்கு பின்னர் அக் 5,1929ல் பகத் தனது பட்டினிப்போரை முடித்துக் கொண்டாதாக நாம் அறிய முடிகிறது. சாண்டர்ஸ் வழக்கில் 24 பேர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டனர்.. பகத், சுகதேவ், ராஜகுரு, பதுகேஷ்வர், கமல்நாத் திவாரி, கிஷோர்லால், சிவ வர்மா, அஜாய்கோஷ், குந்தன்லால் போன்றவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆசாத், பகவான் தாஸ், பகவதி வோரா போன்றோர் தலைமறைவாய் இருந்தனர். ஜெய்கோபால், மன்மோகன் பானர்ஜி, லலித் முகர்ஜி போன்றவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறிப்போயினர். செப் 12 1929ல் நீதிபதிகளுக்கு கட்டற்ற அதிகாரம் தரக்கூடிய மசோதா ஒன்றை- குற்றம் சாட்டப்பட்டவர்களை பார்க்காமல் கூட வழக்கு நடத்திட அதிகாரம் தரும் மோசமான மசோதா ஒன்றை கொணர்ந்தனர். மோதிலால்நேரு இதைக் கடுமையாக எதிர்த்தார்.
இர்வின் பிரபு மூவர் விசாரண கமிட்டி ஒன்றை லாகூர் சதி வழக்கிற்காக மே 1. 1930ல் அமைத்தார். இதை சட்ட விரோதமானது என பகிஷ்கரிக்க பகத்சிங் முடிவெடுத்தார். பின்னல் தோழர்கள் அறிவுரைப்படி லாலா துனிசந்த் என்பவர் வாதாட ஒப்புதல் தருகிறார்.  மே 12, 1930ல் இன்குலாப் முழக்கத்துடன் விசாரணக்கூடத்திற்கு புரட்சிகர தோழர்கள் வருகின்றனர்.. அவர்கள் போலீஸ்காரர்களால் அங்கு தாக்கப்படுவதை கண்டிக்கும் வகையில் மூவர் கமிட்டியில் ஒருவரான அகாஹைதர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுகிறார். தனது மாறுபட்ட கருத்தையும் பதிவு செய்கிறார். ஆகஸ்ட் 26, 1930ல் வழக்கு முடிவிற்கு வருகிறது. செப்டம்பர் 25ல் பகத் தாயார் பார்க்க விரும்பி சிறைச்சாலை வருகிறார். ஆனால் விதிகளின்படி சந்திப்பு மறுக்கப்படுகிறது. தீர்ப்பிற்கு பிறகு பார்க்க வாய்ப்பிருக்கலாம் கவலை வேண்டாம் என ஆறுதல் கடிதம் எழுதுகிறார் பகத்சிங். மரணதண்டனை விதிக்கப்படலாம் என்பதால் தந்தை கிஷன் வைஸ்ராய்க்கு சாண்டர்ஸ் கொலை நடந்த அன்று பகத் லாகூரில் இல்லை, கல்கத்தாவில் இருந்தார் என கடிதம் எழுதுகிறார். இதை அறிந்து கடுமையான வருத்தமடைந்த பகத்சிங் கோபத்துடன் தந்தைக்கு  கடிதம் எழுதுகிறார். அரசியல் போராளிகள் சுயநலமற்றவர்களாக இருக்கவேண்டும். அரசியல் தன்மையில் மட்டுமே தற்காப்புகள் கூட அமைய வேண்டும் .இதை வேறு எவராவது செய்திருந்தால் அவரை நான் துரோகி என் சொல்லியிருப்பேன் .இதுபோன்ற பலவீனங்கள் கூடாது என எழுதுகிறார். இக்கடிதம் பத்திரிகைகளுக்கு அவர் வேண்டுகோள்படி தரப்படுகிறது.
அக்டோபர் 7, 1930 அன்று தீர்ப்பாய பிரதிநிதி சிறைச்சாலை வந்து தீர்ப்பின்  68பக்க நகலை வாசிக்கிறார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் மரணதண்டனை என்பது படிக்கப்படுகிறது. அதிர்ச்சி நிலவுகிறது. மூவரும் புன்முறுவல் செய்கின்றனர். இன்குலாப் முழக்கம் இடுகின்றனர். மற்றவர்களுக்கு கால வரையுடன் கூடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன. பின்னாளில் சி பி அய் பொதுச்செயலராக வந்த பகத்சிங் புரட்சிகர குழுவில் அன்றிருந்த அஜாய் கோஷ் அவர்களுக்கு  3 ஆண்டுகள் என அறிவிக்கப்படுகிறது. நாடு முழுதும் இளைஞர்களின் போராட்டங்கள் எழுகின்றன. தீர்ப்பை கண்டித்து பொது கூட்டங்கள் சென்னை உட்பட பெரு நகரங்களில் நடக்கின்றன. ஆயுள் தண்டனை பெற்ற பதுகேஷ்வர் தீர்ப்பறிந்து மனநிலை பாதிக்கப்படுகிறார். ஆயுள் தண்டனை ’குறைவான தியாகம்’ என கருத வேண்டியதில்லை. சாவிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ள புரட்சியாளர்கள் சகல துயர்களையும் சந்தித்து கொள்கைக்காக நிற்பவர்கள் என மக்களிடம் காட்ட வாய்ப்பு என புரிந்து கொள் என அவருக்கு பகத்சிங் கடிதம் எழுதுகிறார்.
பிரைவி கவுன்சிலுக்கு அப்பீல் என்பதில் பகத்திற்கு மனம் ஒப்பவில்லை. தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனை என ஆக்கிவிட்டால்  என்ன செய்வது என்பதற்காக வேறுவகை வேண்டுகோள் ஒன்றை முன்வைத்து கடிதம் தந்தனர். நாங்கள்  போராடுகிறோம். தொடர்ந்து போராட்டங்கள் இருக்கும். இன்றுள்ள சமுக அமைப்பு இற்று வீழும்வரை உக்கிரமான போராட்டங்கள் எழும். எங்களுக்கு எந்த சலுகையும் தேவையில்லை. யுத்த கைதிகள் எனில் ராணுவத்தை கொணர்ந்து சுட்டு வீழ்த்துங்கள என மூவரும் எழுதினர். கவுன்சில் இதை நிராகரித்தது. மார்ச்4 1931ல் காந்தி –இர்வின் ஒப்பந்தம் வருகிறது. ஒத்துழையாமை போராட்டக்காரர்கள் விடுதலை விவாதிக்கப்படுகிறது. வன்முறையில் ஈடுபடாதவர் விடுதலை பேசப்படுகிறது. மார்ச் 5 1931 பத்திரிகை செய்தி வருகிறது. அதில் காந்தி வன்முறையில் ஈடுபட்டவர்களையும் அரசாங்கம் சிறைக்கொட்டடியில் வதைப்பது என்பதை தனிப்பட்ட முறையில்  ஏற்கவில்லை என்றாலும் சட்டத்திற்கு புறம்பாக தன்னால் ஏதும் செய்வதற்கில்லை என்றார்.
கிஷன் குடும்பத்தார் பகத்தை இறுதியாக பார்ப்பதற்கு மார்ச் 3, 1931ல் வந்தனர். பாட்டனார் சர்தார் அர்ஜுன், பாட்டி ஜெய் கெளர் உடன் வந்தனர். தனது உடலை சுமந்து பகத் அடக்கம் செய்யவேண்டும் என்ற விழைவு தாத்தாவிற்கு இருந்தது. வாழ்வின் இன்பம் எதையும் துய்க்காமல் பேரன் மரணிக்கப்போவது மூத்தவருக்கு பெரும் துக்கமாகியது. பகத் ஆறுதல் கூறினார். எனது வாழ்வு பயனுள்ளதாக இருந்திடவேண்டும் என நீங்கள் அனைவரும் சொன்னபடிதானே நடந்துள்ளது, உண்மையின் பக்கம் நாம் நிற்போம் என்றார் பகத். வித்யாவதி உன்னை மகனாக அடைந்தது பெரும் பேறு என்றார். நீ அடையும் மரணம் மேலான ஒன்று. தூக்கு மேடையிலும் இன்குலாப் முழக்கமிட்டு நாட்டு மக்களை தட்டி எழுப்பு என்றார் தாயார். மிகுந்த மன உறுதியுடன் மரணத்தை நான் எதிர்கொள்வேன் என்றார் பகத். எனது மரணம் பல பகத்சிங்குகளை உருவாக்கும் என்றார். தந்தையிடம் நான் தங்களை காயப்படுத்திவிட்டேன் மன்னிக்கவேண்டும் என்றார். உன்னை எண்ணி பெருமிதம் அடைகிறேன் என்றார் தந்தை. நான் வாழ்வது என்பதைவிட எனது மரணம் அதிகம் பேசும். ஹிந்துஸ்தான் புரட்சிகர கட்சி என்பதுடன் நான் இறண்டற கலந்துவிடுவேன். என்னைவிட அதிர்ஷ்டசாலி யாராக இருக்கமுடியும். என் குறித்து எனக்கு பெருமிதமே என்றார் பகத்.
மார்ச் 24 1931ல் தணடனை நிறைவேற்றம் என இருந்தது. கடுமையான போராட்டங்கள் எழலாம் என அரசாங்கம் அறிந்து முதல் நாள் மார்ச் 23 அன்றே தூக்கை நிறைவேற்றும் வகையில் கடைசி விருப்பம் கேட்கப்பட்டது. அம்மா சமைத்த உணவு என்றார் பகத். விழித்த வார்டனிடம் கவலை வேண்டாம் இங்குள்ள போகா என்கிற கழிப்பறை சுத்தம் செய்யும் தொழிலாளியைத்தான் அவர் அம்மா என குறிப்பிடுவதாக தெரிவித்தார். கண்ணீர் மல்க தயங்கிய அத்தொழிலாளியை தனக்கு உணவு சமைக்க சம்மதிக்க வைத்தார் பகத்.
மார்ச் 23 அன்றுதான் லெனின் புத்தகத்தை பகத் படித்துக்கொண்டிருந்தார். முடிக்க விரும்பினார். இன்குலாப் முழக்கம் கேட்க துவங்கியது. தலைமை வார்டன் சர்தார் சத்தார் சிங் முடிவு வந்துவிட்டது மகனே என்றார். எப்போது அந்த அதிர்ஷ்ட நிமிடம் என்றார் பகத். இன்று மாலை என்றனர். என்னை படைத்தவனை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது என்றார். பிரார்த்தனை செய் மகனே என்றார் வார்டன். உங்கள் உணர்வை மதிக்க்கிறேன். நீங்கள் முன்னதாக தெரிவித்திருக்க வேண்டாமா என்றார் பகத். மாலை 3 மணிக்கு தான் உறுதி செய்தனர் என்றார் வார்டன். கடைசி நேரத்தில் நான் இறைவனை பிரார்த்தித்தால் அவர் என்னை கோழை என நினைத்து விடுவார் என்றார் பகத்.
 எங்களை சங்கிலியால் பிணைக்காமல் முகத்தை மூடாமல் தூக்கிலிடுங்கள் என்றனர் போராளிகள். சங்கிலிகள் விடுவிக்கப்பட்டன. மூவரும் கைகளை பற்றிக்கொண்டனர். சேர்ந்து பாடினர். இன்குலாப் முழக்கம் எதிரொலித்தது. சிறைச்சாலையில் மற்றவர் இத்துயர் கண்டு கண்ணீர் விட்டனர். முகமது அக்பர் என்கிற வார்டன் சங்கிலி இல்லாததால் ஆபத்து ஏதுமில்லை என  துணை கமிஷனரிடம் கூறினார்.. மாஜிஸ்ட்ரேட் அவர்களே இந்திய புரட்சிகாரர்கள் எவ்வாறு இருக்கிறோம் என பார்க்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது என்றார் பகத்சிங். இன்குலாப் ஜிந்தாபாத்- ஏகாதிபத்தியம் வீழட்டும் என ஒருசேர மூவரும் முழக்கமிட்டனர். இரவு 7.33க்கு கயிறு இறுக்கப்பட்டது. முன்னதாக எனது கயிறை சரியாக பொருத்துவீர் என்றார் பகத்.
மோரி சிறைச்சாலைக்கு மூவர் குடும்பமும் வந்திருந்தது. மக்கள் திரளாக கூடியிருந்தனர். ஆனால் முதல் நாள் இரவே முடிந்து விட்டது என்பதை அறிந்தனர். தந்தை கிஷன் அதை கூட்டத்தாரிடம் தெரிவித்தார். அவர்களால் உடல்களை பெறமுடியவில்லை. இறுதி சடங்கு முடிந்துவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். குழப்பம் நிலவியது. சாக்குப் பைகளில் மாவீரர்கள் கிடத்தப்பட்டு எடுத்து செல்லப்பட்டனர் என்ற செய்தி துக்கப்படுத்தியது. லாகூரிலிருந்து 70 மைல்கள் தாண்டி ஃபெரொஷ்பூர் என அறிந்து குடும்பத்தார் விரைந்தனர். அங்கு செய்தி அறிந்து மக்கள் கூடினர். சட்லஜ் நதிக்கரை ஓரம்  நெருப்பு எரிவதை பார்த்து மக்கள் கூடினர். மக்கள் வருவதை அறிந்து நெருப்பை அணத்துவிட்டு போலீசார் மறைந்தனர். வந்தவர்களால்மண்ணெண்ணை நெடியை நுகர முடிந்தது.  அரசாங்கம் சீக்கிய, இந்து மதப்படி சடங்குகள் நடந்து சாம்பல் கரைக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. ராம்பிரசாத் பிஸ்மில் நாங்கள் சுதந்திரம் பெறுவோம் .புரட்சியாளர்கள் சிதையுண்ட பூமிக்கு மக்கள் குவிந்து வருவார்கள் தியாகம் போற்றுவார்கள் என்றார். மார்ச் 24 1931 துக்க நாளாக போராட்டக்காரர்களால் அறிவிக்கப்பட்டது. 23 கோடி இந்தியர்கள் இன்னும் இருக்கிறோம். போராடுவோம் என பத்திரிக்கை செய்திகள் வெளியாயின..
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதில் அன்றிருந்த கம்யூனிஸ்ட்களைப் போலவே பகத்தும் நம்பிக்கை வைத்திருந்தார். சோசலிச புரட்சி என பேசிவந்தார். கம்யூனிஸ்ட் அகிலம் வாழ்க எனக் கூட முழங்கினார். ஆனாலும் அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்குழுக்களில் சேர்ந்து ஏன் செயலாற்றவில்லை என்பது குறித்து ஏராள விவாதங்கள் நடந்து வருகின்றன. தான் தனிநபர் பயங்கரவாதி அல்ல என தெளிவு படுத்த முயன்றார். தங்களை விடுதலைப் போரின் இராணுவப்பிரிவாக புரிந்து கொள்ளவேண்டும் என்றார். புத்தக வாசிப்பையும் அறிவு பெருக்கத்தையும் நேசித்தவர் அவர். அவரும் தோழர்களும் படித்த நூற்றுக்கணக்கான புத்தக பட்டியல் கூட வெளியாகியுள்ளது. நான் ஏன் நாத்திகன் ஆனேன் உட்பட ஏராள கட்டுரைகளை எழுதியவர் பகத். பகுனின், மார்க்ஸ், லெனின், ட்ராட்ஸ்கி எழுத்துக்களுடன் தொடர்பு இருந்தது அனார்க்கிசம் குறித்து கட்டுரைகள் எழுதினார், அனார்க்கிசம் என்றால் அலர்ஜி ஆகவேண்டாம் நமது வசுதேவ குடும்பகம்தான் அது எனக்கூட எழுதியுள்ளார்.. அவரது சிறை குறிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் ஏங்கெல்ஸ் குடும்பம், தனிசொத்து அரசு நூலிருந்தும் ஏகாதிபத்தியம் முதலாளித்துவ உச்சகட்டம் குறிப்புகள் ட்ராட்ஸ்கி புரட்சி பற்றிய குறிப்புகள், கம்யூனிஸ்ட் அறிக்கை குறிப்புகள் காணப்படுகின்றன. ,
பிரிட்டிஷார் போனபின்னர் இந்தியர்களே ஆள வந்தாலும் சுரண்டல் தொடர்ந்தால் தங்கள் போர் ஓயாது என்ற கருத்தை பகத் எழுத்துபூர்வமாக வெளிப்படுத்தினார். இர்வின் பிரபுவிற்கு பதிலாக புருஷோத்தம் டாக்கூரோ, தேஜ் பகதூர் சாப்ருவோ வருவதால் சுரண்டல் பிரச்சனை தீர்ந்துவிடப்போவதில்லை என வெளிப்படையாக எழுதியவர் பகத். காந்தியின் அகிம்சை மற்றும் சமரசம் குறித்த விமர்சனங்களையும் தனது எழுத்துக்களில் அவர் வெளிப்படுத்தினார். பகத் தனது கட்டுரைகளை வித்ரோகி (கலகக்காரன்), அக்யாட் (அறியப்படாதவன்) சைனிக் (இராணுவவீரன்) என்ற பெயர்களில் எழுதி உள்ளதாக  அறிய முடிகிறது. பகத்சிங்கின் ஆவணங்கள் என 100க்கும் மேற்பட்டவைகள் பட்டியிலப்படுகின்றன. அவர் 11 வயது துவங்கி எழுதியவையாக அவை உள்ளன. குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு புரட்சிகரத் தோழர்களுக்கு எழுதிய கடிதங்கள் என்ற வகையில் பல அமைந்துள்ளன. அரசியல் கடிதங்கள் அவரின் இறுதி 4 ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ளன.
பகத்சிங் எங்கு குண்டெறிந்தாரோ அதே இடத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் 2008 சுதந்திர தினத்தன்று பகத் சிலை நிறுவப்பட்டது.. பகத்சிங் தாயார் வித்யாவதி பஞ்சாபின் தாயார் என புகழப்பட்டார். அவர் மறைவின் போது அரசு மரியாதை செய்யப்பட்டது.
மாளிகை கட்டுபவர்கள் மண்குடிசையில் வாழும் நாடு அழகான பொருட்களை செய்பவர் வாடும் நாடு. இதை மாற்றத்தான் போராடுகிறோம் என்றார் பகத்சிங். பயபக்தி நிறைந்த மக்கள் வாழும் நமது நாட்டில் மனிதாபிமானமில்லாமல் நாம் மற்றவரை நடத்துவது சரியா என கேள்வி எழுப்பியவர் பகத். தீண்டத்தகாதவர் என்பவர் நாட்டின் கட்டுமானமாக உழைத்தும் அடித்தட்டில் வாடுகிறார்கள். உறங்கும் புலிகளான அவர்கள்  எழவேண்டும் என்றார்.. மதம் தனிப்பட்ட விவகாரம். அரசியல் கலப்பது ஆபத்தானது என்றார். நாம் எவ்வளவு மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கலாம். கடமை அழைத்தால் அனைத்தையும் துறக்க சித்தமாக வேண்டும். தியாகம் என்பது அதுதான் என வரையறுத்தார். நாட்டில் இளைஞர்கள் யுவதிகளுக்கு காதல் இருக்க வேண்டும் என்றார்.  அடுத்த 15 ஆண்டுகளில் பிரிட்டிஷ்காரர்கள் நாட்டைவிட்டு ஓடுவர் என கருதினார். அவ்வாறே நடந்தது. ஆனால் அவரின் பிற கனவுகள் இன்றும் பெரும் போராட்டத் தேவைகளை சுமந்த வண்ணமே இருக்கின்றன.
Reference Materials: 1. The life and times of Bhagat Singh  by Mahesh Sharama 
2.Political Correspondence of Bhagat Singh

3.Articles of Mainstream Weekly    4.The History of Legend by  Kama Maclean

Comments

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...