. விடுதலைக்கு முந்திய இந்தியாவில் லெனின்
-ஆர்.பட்டாபிராமன்
சோவியத் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை உலகம் காண
இருக்கிறது 1917 நவம்பர் புரட்சியும் அதை தொடர்ந்த படிப்பினைகளும் பெரும் விவாதங்களையும்
உரையாடல்களையும் உருவாக்கியுள்ளன. அப்புரட்சி இந்தியாவில் விடுதலைக்கு போராடிக்கொண்டிருந்த
புகழ் வாய்ந்த இந்திய தலைவர்கள் மத்தியிலும்,
இன்று பெயர்கூட அறியாத அன்று பிரிட்டிஷ் எதிர்ப்பில் ஆங்காங்கே உத்வேகமாக எழுதி செயல்பட்டவர்கள்
மத்தியிலும் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியது என்பது இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது.
இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் அப்புரட்சி நடந்த காலத்தில் லெனின்
எவ்வாறு மகத்தான வகையில் நம்நாட்டில் கொண்டாடப்பட்டுள்ளார் என்பதை நாம் உணரமுடிகிறது.
இந்திய தேசிய விடுதலை இயக்க தலைவர்கள் மத்தியில் லெனினது தாக்கம் குறித்து பல்வேறு மொழிகளில் வந்துள்ளவற்றை தொகுத்து ஆய்விற்கு உட்படுத்தமுடிந்தால் மேலும் பல்வேறு செய்திகளை
அறியமுடியும். பிரிட்டிஷாரின் கெடுபிடிகள் இருந்தபோதும் கூட பல்வேறு இந்திய இதழ்கள், புத்தகங்கள் பிரிட்டிஷ் ஆதரவு
பத்திரிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோவியத் புரட்சி- லெனின் அரசாங்கம் குறித்து
ஏராள செய்திகளை இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டக்கூடிய வகையில் கொண்டு சேர்த்தன.
சோவியத் புரட்சி நடந்த மறுமாதமே புனைபெயரில் டெல்லியிலிருந்து அப்துல் சத்தார் கயரி, அப்துல் ஜாபர் கயரி இருவரும் இந்திய மக்களின் வாழ்த்தை லெனினை சந்தித்து தெரிவித்தனர். அவருக்கு பரிசும் அளித்துள்ளனர். இந்தியப் புரட்சியாளர்கள் ராஜ மகேந்திர பிரதாப், பரகத்துல்லா ஆகியோரையும் 1919ல் லெனின் சந்தித்துள்ளர். பின்னர் அப்துல்ராப், எம் பி டி ஆச்சார்யா, எம் என் ராய், விரேந்திரநாத் சட்டோபாத்யாய், புபேந்திரநாத் தத்தா போன்றோர் லெனினை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. போல்ஷ்விசம் என்றால் என்ன என்பதை பத்திரிகை தணிக்கை சட்டங்கள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக அறிய முடியாமல் போய்விட்டதாக மாடர்ன் ரிவ்யூ 1919ல்
கூறியது. லெனின் என்ற மனிதரும் அவரது நோக்கங்களும் என்ற கட்டுரையை 1918லேயே அலகபாத் லீடர், பம்பாய் கிரானிக்கிள் வெளியிட்டன. திலகர் தனது கேசரியில் ஜனவரி 29, 1918ல் ருஷ்யத்தலைவர் லெனின்
என்ற தலையங்கம் தந்திருந்தார், லெனினை சமாதானவாதி என புகழ்ந்தார் திலகர். எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகைகளாக பயானீர், சிவில் மிலிட்டரி கெசட், ஸ்டேட்ஸ்மேன் இருந்தன. இப்பத்திரிக்கைகளின் கபடத்தை லாலாலஜ்பத்ராய் வந்தே மாதரம் இதழில் ஜூலை18, 1920ல் கண்டித்து எழுதினார்.
லெனின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் இந்தியாவில் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தி, பெங்காலி, உருது, மராத்தி மொழிகளிலும் வெளியானது. சோவியத்தில்கூட அப்போது அந்த அளவிற்கு வெளியாகவில்லை . இந்தியாவில் அவை சில குறைகளுடன் போதுமான விவரங்கள் இல்லாமல் வந்திருக்கலாம். வெளியிட்டதில் பலர் மார்க்சியவாதிகளும் அல்லர். சோவியத்
புரட்சியை ஏழை மற்றும்
ஒடுக்கப்பட்டவர்களுக்கான புதிய சகாப்தம் என அவர்கள் புரிந்துகொண்டனர். சமத்துவ கொள்கைகளை
கொண்டாடினர்.
இருமகாத்மாக்கள் என லெனினையும் காந்தியையும் ஒருசேர கொண்டாடியவர்கள்
இந்தியாவில் இருந்தனர். அவர்களது வழிமுறைகள் வேறானாலும் நோக்கம் உன்னதமானது என அவர்கள்
விளக்கம் அளித்தனர். விடுதலைக்கு முந்திய இந்தியாவில்
லெனின் குறித்த உரையாடலை நாம் காந்தியிடமிருந்தே துவங்கலாம். தனியார் உடைமை ஒழிப்பு என்கிற போல்ஷ்விக்கின் லட்சியவாதத்தை அமைதியான முறையில் எந்த வற்புறுத்தலும் இல்லாமல் அனுசரிக்க வாய்ப்பிருந்தால் அது குறித்து என்ன கேள்வி இருக்கமுடியும் என்ற கருத்தை காந்தி தனது யங் இந்தியாவில் நவ 1928ல் பிரதிபலித்தார். இத்தகைய லட்சியத்தை உருவாக்கி வளர்த்த லெனினின் மகத்தான தியாகம் அப்போது வீனாகாது. துறப்பின் மேன்மையது என்றார் காந்தி.
ஜி வி கிருஷ்ணாராவ் 1921ல் ஆங்கிலத்தில் லெனின் சரிதை எழுதினார். லெனின் வன்முறையை வழிபட்டார் என்பதை அவர் அதில் மறுத்திருந்தார். வன்முறை ஏவப்பட்டால் அதற்கு பதிலடியாக வன்முறை அமையும் என்றே லெனின் கருதியாக ராவ் எழுதினார். கிருஷ்ணாராவ் தனது முன்னுரையில் லெனின் மாபெரும் ஞானி- கடும் போராட்டங்கள் சோதனைகளுக்கு பின்னர் ஜாரின் கொடுங்கொன்மையை வீழ்த்தியவர் என புகழாரம் சூட்டுகிறார். சோவியத் புரட்சி மனிதகுல முன்னேற்றத்தில் புதிய மைல்கல் என்றார். கணேஷ் அண்ட் கோ என்ற நிறுவனம் சென்னையில் இப்புத்தகத்தை வெளியிட்டது.. இதேகாலத்தில் இந்தியில் ரமாசங்கர் அவஸ்தி கல்காத்தாவிலிருந்தும், பிடே மராத்தியில் பம்பாயிலிருந்தும், அஜீஸ் போபாலி அவர்களால் லாகூரிலிருந்து உருதுவிலும், ஹூப்ளியிலிருந்து கோரக் என்பவரால் கன்னடத்திலும் லெனின் வாழ்க்கை வரலாறு வந்திருந்தது
1918 கேசரி தலையங்கம் லெனினை சமாதானத்தின் தூதுவனாக சித்தரித்து எழுதியது. உலகம் உண்மையை அறிய வேண்டும் என்றார் திலகர். திலகரின் கேசரி ஆக21, 1920.செய்தியில் லெனினுக்கு ’மாரல் விக்டரி’ என்ற பதிவை செய்தது. லெனினை மண்டைஓடுகளுடன் காட்சியளிக்கும் இரத்தம் குடிக்கும் ராட்சஷனாக சித்தரிக்கிறார்கள். அவர் தூய மனமும், மனிதகுலத்தின் மீது அளவற்ற அன்பும் நிறைந்தவர் , கைகளில் ஆயுதம் தரிக்காத மாபெரும் தத்துவவாதி என்றது. அவரின் கம்யூனிச கொள்கை புதிய வகையிலானது. ருஷ்யாவில் அமுல் படுத்த முயற்சிக்கிறார் என ஆதரவு குரலை தந்தது .கம்யூனிச வரலாற்றில் லெனின் பெயர் இனி நீடித்து நிலைக்கும். அனைத்து புதிய சிந்தனைகளுக்கும் உருவப்படுத்த்மனிதர்கள் தேவை என்றது. ருஷ்யா நாடு முழுதும் சுற்றி உழைக்கும் மக்களின் உணர்வுகளை புரிந்தவர் லெனின். தனது பேச்சு துண்டறிக்கைகள் மூலம் மக்களை தட்டி எழுப்பியவர். சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டு வறுமை மற்றும் போராட்டங்களை சந்தித்தவர். போல்ஷ்விக் கட்சியின் மூலம் தொடர் போராட்டங்களை நடத்தி இறுதியாக ஜாருக்கு எதிரான புரட்சியில் வெற்றியடைந்து தொழிலாளர் அரசாங்கத்தை அமைத்தவர் என நீண்ட கட்டுரை ஒன்றை கேசரி 29, 1924 இதழில் துந்திராஜ் த்ரிம்பக் காத்ரே என்பவர் எழுதினார்
1929ல் நேரு பெரிய கட்டுரை ஒன்றை எழுதினார். லெனினது 30 ஆண்டுகால கடும் உழைப்பு, தியாகம், போராட்டங்கள் குறித்து அதில் பதிவு செய்கிறார். மகத்தான செயல்வீரன் என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளியானது. மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் அமைதியாக ஆழ்ந்துறங்கும் அவரது உடலில் ருஷ்ய மன்ணின் மணம் வீசுகிறது. மாக்சிம் கார்க்கி கூறியது போல பூமிப்பந்தில் மனித நியாயத்தை நிலைநாட்டமுடியும் என்பதற்காக வாழ்க்கையின் அனைத்து
சொகுசுகளையும் அவர் துறந்தார். லெனினை வெறியன் என்கிறார்கள் புரட்சிகர கடமை எவ்வளவு கடுமையானது- பெரும் பயிற்சிக்குரியது என்பதை அவர் வெளிப்படுத்தினார். அவர் ஒற்றுமை என்பதற்கு நம் நாட்டில் நடப்பது போல எந்த ஒட்டுவேலையிலும் இறங்கவில்லை. செயல் வீரர்களையும் அனுதாபிகளையும் அவர் பிரித்தறிந்தார். நடப்பு யதார்த்தங்களின் அடிப்படையில் காரியமாற்றுவது என அவர் பேசினார். டூமா நாடளுமன்றத்தையும் அதே நேரத்தில் ஆயுத போராட்டத்தையும் அவர் பயன்படுத்தினார். நமது லட்சியம் நடைமுறைப்படுத்தப்பட அனைத்து வழிகளையும் கையாளுதல் என்பதை அவர் உணர்த்தினார். ரொமைன் ரோலந்த் கூறியபடி
இந்த நூற்றாண்டின் தன்னலமற்ற மகத்தான செயல்வீரர் லெனின். லெனின் ருஷ்யாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வலிமைக்கான மரபாகியுள்ளார் என ஜவஹர் எழுதினார் .
இந்திராவிற்கு எழுதிய கடிதத்தில் நீ பிறந்த 1917 மகத்தான ஆண்டு. துன்பத்தில் உழலும் மக்களுக்கு விடிவிற்காக மகத்தான தலைவர் லெனின் பணியாற்றி ருஷ்யாவின் சைபீரியாவின் முகத்தையே புரட்சி மூலம் மாற்றியுள்ளார் என்று குறிப்பிடுகிறார். மார்க்சியத்தின் நவீன சோதனையாளர் லெனின். அதை விளக்குவதையும் வறட்டுத்தனமற்று அமுல்படுத்துவதையும் நமக்கு அளித்தவர் அவர். மார்க்க்சிய கோட்பாடுகளை உனக்கு கடிதம் மூலம் சொல்ல விரும்புகிறேன். மக்கள்திரளை கவ்வி பிடித்து அது இயக்குவதால் நமது நாட்டிற்கு கூட அது தேவைப்படலாம். புரட்சிகரமான நடவடிக்கைகளுக்கு வெறும் ஆர்வலர்கள் மட்டும் போதாது- திறமை வாய்ந்த பயிற்சியாளர்கள் தேவை என்பார் லெனின் என்பதை நேரு இக்கடிதங்களில் தெரிவிக்கிறார். சில நேரங்களில் நாம் மைனாரிட்டி ஆகக்கூட செயலாற்ற வேண்டியிருக்கும் என்றும் லெனின் உணர்த்துகிறார் என்றார் நேரு. போல்ஷ்விக் புரட்சி குறித்தும் அதன் முழக்கங்கள் குறித்தும் லெனினது மகத்தான பங்களிப்புகள் குறித்தும் தனது மகளுக்கு விரிவாக கடிதங்களை எழுதுகிறார். . தேசிய இன உரிமை, விடுதலைக்கு போராடும் நாடுகளின் மகத்தான தூதுவன் என்றும் புகழ்கிறார். 1918 கொலை முயற்சிக்கு உள்ளான பிறகும் ஓய்வின்றி உழைத்தார் லெனின். அவரை எந்திரமாக பார்த்துவிடாதே- மக்த்தான மனிதாபிமானி- உரக்க சிரிக்க தெரிந்தவர். நிதானமாக இருப்பவர். பெரும் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாமல் எளிய நேரிடையான விவாதங்களை முன்வைப்பவர் என்றார் நேரு.
எல்லைகாந்தி என அழைக்கப்படும் அப்துல் காபர்கான் நான் படித்தறிந்த புரட்சிகர வரலாற்று தலைமையிலேயே லெனின்தான் மகத்தானவராக தன்னை மேலானவன் என நிறுவிக்கொள்ளாதவராக படுகிறார் என்றார். நெப்போலியன், ரேஸா ஷா, நாடிர்ஷா போன்றவர்கள் கூட தடுமாறியிருக்கிறார்கள். லெனின் மேன்மைமிக்கவர் என பதிவு செய்கிறார்.
நேதாஜி சுபாஷ் அவர்கள் பிரிட்டன் ஜார் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்- பிரிட்டிஷ் மக்கள் தங்கள் தாயகத்தில் சோசலிச விடுதலையை பெறவேண்டும்- ஆளும் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும் காலனி ஆட்சி முறைக்கும் தொடர்பு இருக்கிறது- காலனி சுரண்டல் மூலம் அவர்கள் வாழ்கிறார்கள் போன்ற லெனின் கருத்தாக்கங்களை மேற்கோள்காட்டி சுபாஷ் 1938 ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் தலைமை உரையாற்றினார். காலனியாதிக்க மக்களின் விடுதலையும் பிரிட்டிஷ் மக்களின் சோசலிச போராட்டமும் இரண்டற கலந்தவை என்பதாக அவரது உரை அமைந்தது. முன்னதாக 1938 ஜனவரியில் சுபாஷ் ஆர்.பி தத் அவர்களுக்கு டெய்லிஒர்க்கர் இதழுக்கு தந்த பேட்டியிலும் கம்யூனிச கருத்துக்கள் தொடர்பாக மார்க்ஸ்-லெனின் எழுத்துக்களில் தனக்கு புரிதல் இருப்பதையும் அவ்வெழுத்துக்களில் தான் திருப்தி அடைவதாகவும் குறிப்பிட்டார். தேச விடுதலை போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் அகிலம் தரும் ஆதரவையும் உலகளாவிய பார்வைக்கு அவற்றின் அவசியத்தையும் ஏற்கவேண்டும் எனவும் பேட்டி அளித்தார். அதேபோல்
1940 மார்ச்சில் சமரசமற்றோர் மாநாட்டில் லெனினது புத்திக்கூர்மையை வியந்து பேசுகிறார். அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற முழக்கம் மூலம் அவர் எவ்வாறு நிலைமைகளை மாற்றினார் என்பதை விளக்கினார். இத்தாலியில் சாதகமான சூழல் 1922ல் இருந்தபோதும் இத்தாலி லெனின் என ஒருவர் இல்லாமல் போனதால் அந்நாடு திசை தப்பி முசோலினிக்கு வாய்ப்பாகி பாசிசபோக்கில் போனதை பேசுகிறார்.
லாலாலஜ்பத்ராய் தனது வந்தே மாதரம் (1918-20) இதழில் போல்ஷ்விசம் குறித்து காழ்ப்புணர்வில் கபடமாக வரும் எழுத்துக்களை அவற்றை பிரசுரிக்கும் பத்ரிகைகளை- பயானீர், சிவில் மிலிட்டரி கெசட் போன்றவைகளை தாக்கி எழுதினார். போல்ஷ்விக் அரசாங்கத்தின்
மற்றும் லெனின் குறித்த நடவடிக்கைகளை அறிய
நியூஸ்டேட்ஸ்மேன், டெய்லி ஹெரால்ட், லேபர் லேடர் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளையும் ஒருவர் படித்து உண்மையை உணர வேண்டும். இதற்கு பொருள் நாம் முற்றிலுமாக அவ்வரசாங்கத்தின் போல்ஷ்விக்கின் அனைத்து கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டோம் என்பதில்லை. அவர்களின் சில கொள்கைகள் மிக ஆரோக்கியமானவை என லஜ்பத்ராய் பதிவு செய்கிறார். நாடு பிடிக்கும் ஆசை ஏதுமின்றி அனைத்து நாடுகளின் சுதந்திரத்தையும் மனிதகுலத்தையும் மதிக்கின்ற நாடாக மலர்ந்திருக்கிறது என லாகூரிலிருந்து வந்த சுயராஜ்ய ஜூலை
8 1921ல் எழுதியது
பகத்சிங் மே 1931ல் அலகாபாத் இந்தி வாரப்பத்திரிகையில் புரட்சிகர அரசியல் போராட்டங்களில் சமரசமும் ஒரு பகுதிதான் என்பதற்கு ருஷ்யாவின் 1905 புரட்சி, தொடர்ந்து டூமா நாடுளுமன்ற பங்கேற்பு- புறக்கணிப்பு போராட்டங்களை லெனின் நடத்தியது பற்றி குறிப்பிடுகிறார். அதேபோல 1917 புரட்சிக்குப்பின்னர் உடனடியாக சமாதானம் என்பதை லெனின் உயர்த்திப் பிடித்தார்- சமரசம் எந்த நோக்கிற்காக - நோக்கம் நிறைவேறியதற்கு பின்னர் தொடர்ந்த இயக்கங்கள் என்பதை புரிந்து அரசியல் இயக்கங்கள் நடைபோடவேண்டும் - நமது சாத்வீக தலைவர்களுக்கு இப்படிப்பட்ட பார்வை இல்லாமல் இருப்பது வெறுப்பிற்குரியதாக உள்ளது என எழுதினார்.
மார்க்சின் மூலதன ஆக்கத்திற்கு லெனினது ஏகாதிபத்தியம் குறித்த புத்தகம் நிரப்பியாகவுள்ளது என அப்புத்தகத்தை ஆச்சார்யா நரேந்திரதேவ் ஆய்ந்து எழுதுகிறார். லெனினது ‘ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்’ இந்தியில் காசிவித்யாபீடம் ராம்சாஸ்திரி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1934ல் வெளியானதற்கு ஆச்சார்யா நரேந்திரதேவ் அறிமுகவுரை எழுதியிருந்தார். லெனினது நடையில் உள்ள கடினத்தன்மையை மொழிபெயர்ப்பாளர் எளிய உருது பதங்கள் மூலம் புரிய வைத்துள்ளார் என நரேந்திரதேவ் பாராட்டுகிறார்.
M N ராய் தனது நினைவு குறிப்புகளில் முதலில் லெனினை சந்தித்தபோது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். கட்சிக்குள் அவரது ஆளுமை எப்போதுமே நீடித்தது. விவாதங்களின் கூர்மை, தோழர்களுடன் ஜனநாயக உரையாடல், ஏற்பின்மை எனத் தெரிந்தால் பிரச்ச்னையை அடிமட்டம்வரை எடுத்து சென்று தீர்வு காண முயற்சிக்கும் பாங்கு குறித்து லெனினை அதில் ராய் பாராட்டுகிறார். லெனின் இரும்பு இதயம் படைத்தவர் என சொல்லப்படுவது எவ்வளவு தவறு என்பதை
நிறுவுகிறார். வெளிப்படையாகவும் நட்புடனும் உரையாடத் தெரிந்தவர் லெனின் என்கிறார். காந்தியின் ஏகாதிபத்திய எதிர்ப்பை- ஒத்துழையாமையை புரட்சிகரமானது என்று தெரிவித்த
லெனின் கருத்தை ராய் ஏற்க மறுத்துவந்தார். லெனின் விரிவாக இது குறித்து அறிக்கை கேட்க பின்னால் ராயின் India In Transition புத்தகமாக அது வந்தது.
ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் 1936ல் சோசலிசம் எதற்காக என்ற ஆக்கத்தில் லெனினது செய்ய வேண்டியதென்ன குறித்து விவாதித்தார். புரட்சிகர மாற்றத்திற்கு தொழிலாளர்களை- வெகுமக்களை புரட்சிகர அறிவுத்துறை நபர்கள் தயார்படுத்திட வேண்டிய கடமை குறித்து பேசுகிறார் ஜே பி.
சகோதரர் லெனினது அழைப்பை கவனியுங்கள் என மெளல்வி பரகத்துல்லா வேண்டுகோள் விடுத்தார். இன்று மானுட சந்தோசத்திற்கு லெனின்தான் சூரிய வெளிச்சம் என்றார் பரகத்துல்லா. முகமதியர்களும் ஆசிய நாடுகளும் ருஷ்யா சோசலிசத்தின் உன்னதங்களை உணர்ந்து ஆர்வத்துடன் அக்கொள்கைதனை தழுவ வேண்டும் என தாஷ்கண்ட்டில் 1919ல் வெளியிட்ட பிரசுரத்தில் தெரிவித்தார் பரகத்துல்லா. தோழர் டாங்கே 1921ல் காந்தியும் லெனினும் பிரசுரத்தில் லெனின் காலனி நாடுகள் பிரச்சனை குறித்த லெனின் ஆய்வுகளை குறிப்பிட்டு எழுதுகிறார். விஞ்ஞானி
மக்நாத் ஷகா பிற அரசியல் தலைவர்களை போல் அல்லாமல் லெனின் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த ஞானமுடையவராக இருந்தார் என குறிப்பிடுகிறார். லெனின் என்ற மனிதரும் அவர்தம் குறிக்கோளும் என தலைப்பிட்டு லீடர் அலகபாத் ஜனவரி 10, 1918 இதழில் பெரிய கட்டுரை எழுதியது. அதை பம்பாய் கிரானிக்கிள் மறுபிரசுரம் செய்தது. இந்தியன் ரிவ்யூ ஜூன் 1918ல் இளைஞர்களை கவ்வி பிடிக்கும் காந்த சக்தி லெனின் என எழுதியது. புரட்சியின் பெயரில் ரொட்டியும் நிலமும் என அவர் வாக்களித்துள்ளார் என சுட்டிக்காட்டியது.
1919 ல் தாஷ்கண்ட் சென்ற கர்பக்ஷ்சிங் போல்ஷ்விகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை அறியமுடிகிறது. ஆனால் கார்ல்மார்க்ஸ், லெனினை அவர்கள் நம்பினார்கள். அவர்களது படங்களை எல்லா இடங்களிலும் மக்கள் வைத்திருந்தனர். லெனினுடன் டெலிபோனில் பேசமுடிகிறது என்றனர். சாதரண போல்ஷ்விக் ஆடையைவிட மோசமான ஆடையையே அவர் உடுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர். இந்திய ரூபாயில் ரூ 3க்கு சமமான ஊதியம் மட்டுமே அவர் பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் என்ற பதிவை செய்துள்ளார். கல்கத்தா மாடர்ன்ரிவ்யூ லெனின் சொல்லும் சுயநிர்ணய உரிமை குறித்து பிப் 1919ல் எழுதியது. அமிர்தபஜார் பத்ரிகா பெட்ரண்ட் ரஸ்ஸல் ருஷ்யா சென்று லெனின், கார்க்கி, டிராட்ஸ்கியை பேட்டிக் கண்டு நேஷன் இதழில் எழுதியதை குறிப்பிட்டு அவர்களின் மேதாவிலாசத்தை புகழ்ந்தது, லெனினை மாபெரும் அறிவுஜீவி என்றது. லெனின் சுய முக்கியத்துவம் இல்லாமல் செயல்படுகிறார். அச்சமற்றவராக, நிதானமானவராக, கொள்கையின் உருவமாக இருக்கிறார். அவர் பேராசிரியரைபோல் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார் என்றும் அவரின் மின்மயமாக்கல் தொழிற்துறைகளில் அமுலாகி வருகிறது எனவும் ரஸ்ஸல் எழுதியுள்ளதாக அமிர்தபஜார் 1920 ஆகஸ்ட்17ல் பதிவு செய்தது. லெனின் மறைவை அடுத்து ஜூன் 25 1924ல் அவர் தூவிய புரட்சியின் விதைகள் உலகம் முழுதும் செல்லும்.. யாரும் அழித்துவிடமுடியாது என எழுதியது
பனாரஸ்ஸிலிருந்து வெளியான இந்தி தினசரி ஆஜ் அக் 5 1920ல் இந்திய வரலாற்று தன்மையுடன் ருஷ்யபுரட்சியை விளக்கியது. மனிதகுல மீட்சி ஒரே காரணியை சார்ந்திருப்பதல்ல. பல்வேறு காரணிகளை சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. எதிர்ப்பும் சேர்ந்தே இயங்குகிறது. ஒருகாலத்தில் மதகுருமார்கள் ஆளுமையில் மனிதகுலம் இருந்தது. பின்னர் மன்னர்களின் அதிகாரத்திற்குட்பட்டே அனைத்தும் நடந்தன. தற்போது பணமுள்ள வைஸ்யர்கள் எனும் முதலாளிகளின் வசம் அதிகாரமுள்ளது. அவர்கள் முடிவெல்லைக்கு வந்துவிட்டார்கள். எதிர்ப்பு எழத்துவங்கிவிட்டது. சூத்திரர்கள் எனும் உழைக்கும் மக்கள் தலைஎடுக்கத் துவங்கிவிட்டனர். ருஷ்யாவில் இது தெளிவாகிவிட்டது. சூத்திரர்கள் எனும் உழைக்கும் மக்களின் தலைமை புரட்சியின் மூலம்
வைஸ்யர்கள் எனும் முதலாளித்துவ தலைமையை வீழ்த்தும் என கருகிறோம்.. லெனினது கடமை முடிந்ததாக தெரியவில்லை. ஒரு லெனின் போனாலும்
10 லெனின்கள் வருவார்கள். லெனினை தனிமனிதனாக நம்மால் பார்க்க முடியவில்லை,. அவர் ஒரு காரணி என அற்புத வரலாற்று பார்வையில் அப்பத்திரிகை எழுதியிருந்தது. .
டாக்டர் லக்ஷ்மன் நாராயண் ஜோஷி தனது போல்ஷ்விஸம் (1921) மராத்தி புத்தகத்தில் லெனினுக்கு வெற்றி எளிதாக கிட்டிவிடவில்லை. அவரது சுயநிர்ணய உரிமை கருத்துக்கள் அமெரிக்க தலைமை வில்சனையும் பாதித்தது என பதிவு செய்துள்ளார். அந்த மராத்தி புத்தகத்தில் ஜப்பனிய நிருபர் நகாஹிரா லெனினை பார்த்து எடுத்த பேட்டி பற்றிய குறிப்பும் இடம் பெற்றது. அவ்வுரையாடலில் லெனின் பேட்டி எடுக்க வந்தவரிடம் ஜப்பனிய உழைக்கும் மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் அவற்றின் மையமான பிரச்சனைகள்- விவசாய இயக்க போராட்டங்கள்- உணவில் தன்னிறைவு உள்ள நாடாக ஜப்பான் இருக்கிறதா- ஆள்பவர்களின் தாக்குதல்கள் எவ்வாறு அமைகின்றன போன்றவற்றை கேட்டறிவதில் ஆர்வம் காட்டினார். தங்கள் நாட்டில் தம்மக்களை அறியாமையிலிருந்து வெளியேற்றிட அவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். அவரது அலுவலகம் அவரைப்போலவே மிக எளிமையாக இருந்தது என அப்பத்திரிகையாளர் செய்த பதிவையும் மராத்தி புத்தகம் எடுத்து சொல்கிறது.
லெனின் உலகின் அனைத்து ஆண்- பெண் ஒற்றுமையை வலியுறுத்தியவர். உண்மையான சகோதரத்துவம் சமத்துவம் விடுதலைக்கு உழைத்தவர்- அவருக்கு நீண்ட ஆயுள் தேவை.
இறை ராஜ்யமே நிறுவப்பட்டதுபோல் உள்ளது என லாகூரில் வெளியான லெனின் வாழ்க்கை வரலாறு உருது புத்தகத்தில் அசிஸ்போபாலி எழுதுகிறார். விவசாயிகளை விடுவிக்கவேண்டும் எனில் அவர்களை நகர்ப்புற சுரண்டலிருந்தும் விடுவிக்கவேண்டும் என்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தார் லெனின். நகர்ப்புறங்களிலும் தொழிலாளர்கள் நிர்வாக கட்டுப்பாடுகளுடன் சோவியத் என நிறுவ முயற்சித்தார். உலக பாட்டளிகளின் உதவி இல்லாமல் சோசலிச மரம்
மானுடம் முழுமைக்குமான நிழலைத் தராது என கருதினார் லெனின். ஆப்ரிக்க, இந்தியா போன்ற நாடுகளின் விடுதலையையும் அவர் உயர்த்திப் பிடித்தார் என 1923 இந்தி ஆக்கத்தில் ப்ரான் நாத் வித்யலங்கார் எழுதியுள்ளார்.
யுவ வார்தா பத்திரிகை பிப்12 1923ல் லெனின் உடல் நிலை குறித்து அவ்வப்போது பரப்பப்படும் வதந்திகள் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்து எழுதியது. அவர் ஆகஸ்ட் 1918ல் படுகொலை செய்யப்பட்டார் எனவும் , செப் 3
அன்று ஆக 31 அன்றே இறந்துவிட்டர் எனவும் செய்திகளை பத்திரிகைகள் பரப்புவதை சுட்டிக்காட்டியது வார்தா. நமது நாட்டவர்கள் இதுபோன்ற செய்திகளை விழிப்புடன் சரி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என எச்சரித்தது அப்பத்திரிக்கை. வங்கமொழி புத்தகம் ஒன்றில் அதுல் சந்திர சென் என்பார் பிப் 1924ல் கார்ல்மார்க்சின் கனவு குழந்தை லெனின் உருவாக்கிய சோவியத் யூனியன் என்ற பதிவை செய்கிறார். ஏகாதிபத்திய போர்களை பூமிப்பந்திலிருந்து அகற்ற வேண்டும் என லெனின் போராடினார் எனவும் குறித்துள்ளார். தேச கட்டுமானத்தலைவர் லெனின் மறைவு என பம்பாய் கிரானிக்கிள் எழுதியது. நியுயார்க ஹெரால்டில் மாக்சிம் கார்க்கி லெனின் குறித்து எழுதிய குறிப்புகளையும் அப்பத்திரிகை மேற்கோளாக காட்டியது. லெனினது வாழ்வின் அடிப்படை
மனிதகுல மேம்பாடுதான். மனித இயல்பின் அனைத்து சக்திகளின் திரள் உருவமாக அவர் இருந்தார் என்ற கார்க்கியின் பதிவை ஜன் 23, 1924ல் பம்பாய் கிரானிக்கிள் வெளியிட்டது.
லாகூரிலிருந்து வெளிவந்த ட்ரிப்யூன் ஜன் 29, 1924 உலக ஆளுமை மறைந்தது என்ற செய்தியை வெளியிட்டது. அய்ரோப்பாவின் கைப்பாவையாகாமல் புரட்சிகர ருஷ்யாவை உருவாக்கிய லெனின் மறைவால் உலகம் இன்று ஏழையாகிவிட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது, பல நூற்றாண்டுகளில் காணமுடியாதிருந்த மாபெரும் தாக்கத்தை உலகமுழுதும் ஏற்படுத்திய அம்மனிதன் இல்லாமல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனவும் அப்பத்திரிக்கை எழுதியது. மேலும் ட்ரிப்யூன் ஜன் 31 1924ல் லெனின் இறுதி நிகழ்ச்சி காட்சிகள் என்ற செய்தியையும் வெளியிட்ட்டது.. உறைய வைக்கும் குளிரிலும் ஏராள மக்கள் பார்வையிட வந்திருந்தனர். அந்நாட்டின் வீரர்கள் கண்ணீர்மல்க வைத்திடும் அஞ்சலி கீதம் இசைத்தனர். அவரது உடலை சோவியத் தலைவர்களும் தொழிலாளர்களும் சுமந்து வந்தனர் என அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டது
டாங்கே நடத்திய சோசலிஸ்ட் பத்திரிக்கை அவருக்கு இறக்க உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பி வாழும் உரிமை போலவே இறக்கும் உரிமையும் உண்டு. கோடானுகோடி உழைக்கும் மக்கள் அவர்
நூறாண்டுகள் வாழவேண்டும் என்கின்றனர். ஒடுக்குபவர்கள் அவர் உடன் மரணிக்கவேண்டும் என்றனர். இரண்டையும் அவர் செவிமடுக்கவில்லை போலும். புரட்சி குறித்து
எழுதி புரட்சிக்காக வாழ்ந்து புரட்சியை நடத்திய மாபெரும் உலக மனிதர் லெனின், அவர் மரணமடைவதற்கு முழு உரிமை படைத்தவர் என்று தனது ஜன 30, 1924 இதழில் பதிவு செய்தது.
உருது வாரப்பத்திரிக்கை யாத் வாதன் நியுயார்க்கிலிருந்து மே 1924 இதழில் லெனினது பல்லாண்டு போராட்டம்- புரட்சி- அரசாங்க ஆட்சி குறித்த
நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டு புகழ் அஞ்சலி செய்தது. உலகில் வாழ்ந்த ஒரிரு மகத்தான மனிதர்களுள் லெனின் ஒருவர் என்பதை எதிரிகள் கூட மறுக்கமுடியாது. அவரது இரங்கல் ஊர்வலம் போன்ற ஒன்றை ருஷ்யா இதுவரை பார்த்ததில்லை. நாட்டின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் விவசாயிகளும் தொழிலாளர்களும் மாஸ்கோ நோக்கி குவிந்தனர் என பதிவு செய்தது. மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக 3000க்கும் அதிகமானோர் மருத்துவ சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியை தந்தது யாத் வாதன்.
அபுத்யா
எனும் இந்தி வார இதழ் கிருஷ்ண காந்த் மாளவியாவால் நடத்தப்பட்டு வந்தது. லெனின் புரட்சியின் பேனரை உயர்த்திப்பிடித்தார் . ஏழே நாட்களில் ருஷ்யாவை மட்டுமல்ல உலகையே குலுக்கியது அப்புரட்சி. வறியவர்களாலும் உழைக்கும் மக்களாலும் நடத்தப்படும் இராஜ்யம் நடைமுறையில் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பார்க்கிறோம் என தனது ஜன் 29 1924 இதழில் எழுதியது. .அவ்விதழ் அலகாபத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. லேபர்கிசான் கெசட்டில் சிங்கார வேலர் தொழிலாளர்கள் சார்பில் துக்கம் அனுசரிப்போம் என்ற கட்டுரையை லெனின் மறைவை ஒட்டி எழுதினார். மனிதகுலத்தை மீட்க வேண்டும் என பலர் போராடியிருக்கிறார்கள் ஆனால் லெனின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் துயரங்களை போக்கிட சரியான பாதையை போடுவதற்கான வாய்ப்பை பெற்றவராக விளங்குகிறார். உலகில் ஒருசிலரின் சுயநலத்திற்கு பெரும்பான்மை பலியாவதை அறிவியல் பூர்வமாக கார்ல்மார்க்ஸ் விளக்கினார். அது நடைமுறை படுத்தப்பட்டது என
புகழஞ்சலி செய்திருந்தார். லெனின் உருவாக்கிய புரட்சி சில சுயநலமிகளால் அழிக்கப்படலாம் ஆனால் அது திரும்ப திரும்ப எழும் என இதழ் ஜன 31 1924ல் எழுதினார்.
1923 ஹூப்லியிலிருந்து வெளியிடப்பட்ட கன்னட புத்தகம்
லெனின் எவ்வாறு மாணவர்களையும் இளைஞர்களையும் தனது பேச்சின் மூலம் பெரும் செயலுக்கு உந்தி தள்ளுகிறார் என்பதை
அவரது உரைகளை மேற்கோள் காட்டி பதிவு செய்திருந்தது. கோரக் என்பவர் அதை எழுதியுள்ளார். எடுத்த காரியத்தை தொடுத்து முடியுங்கள் நடுவில் விட்டுவிடாதீர்கள். முடிக்கமுடியாத ஒன்றை துவங்காதீர்கள் என அவர்களை செயலுக்கு தள்ளியவர் லெனின் என கோரக் பாராட்டுகிறார். லெனின் முட்டாள் என்றும் ஜனநாயகத்தை அழித்துவிட்டார் என்றும் பண உலகம் கூப்பாடு போடுகிறது .சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன. நாய் நரிகளுக்கு அஞ்சாது நடைபோடும் சிம்மம் லெனின். பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு இடமளிக்கும் சோவியத் சோசலிச குடியரசு அது. கம்யூனிச அரசாங்கமது என பெருமிதம் பொங்கிட கோரக் எழுதுகிறார். மனிதர்களின் எவரெஸ்ட் சிகரம் அவர், பார்த்தவர்களும் பேசியவர்களும் பரவசப்ப்ட்டுள்ளனர். ஏழைகளின் புன்சிரிப்பு அவர். எத்தனை குழப்பங்களை உருவாக்கினாலும் விடைகாணக்கூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அவர் பயமற்றவர்களின் அடையாளம் என கோரக் எழுதினார். தன்னுடைய செயல்களில் மகத்துவம் உருவாக்கும் பவபூதி அவர். லெனினை காந்தியுடன் ஒப்பிட்டு இருபெரும் ஆளுமைகள் என கோரக் அப்புத்தகத்தில் பதிவை தருகிறார். இருவரின் நடைமுறை உத்திதான் மாறுவதாகவும் நோக்கம் மானுட விடுதலையே என்றும் குறிப்பிடுகிறார் கோரக்.
மகாத்மா காந்திக்கு அடுத்த மாபெரும் மனிதர் லெனின்தான் என அஜ் பிப் 2 1924ல் எழுதியது. வங்கப்பத்திரிகைகள் இந்துஸ்தான், ஆன்ந்த்பஜார் பத்ரிகா, சசித்ரசிசிர் ,பங்கவாசி, ஜோதி, சொல்தன், பசுமதி ,பெங்காலி போன்ற பத்திரிகைகள் லெனின் மறைவு செய்தியை புகழஞ்சலியுடன் வெளியிட்டன. ஜாரின் கொடுமைகளிலிருந்து வெளிவர போராடிய மக்கள் திருப்தியடையக்கூடிய அரசாங்கம் அங்கு நடைபெறுகிறது. பிரிட்டிஷ், பிரான்ஸ் முயற்சிகள் தோல்வியுற்றன என்ற குறிப்புடன் லெனின் மறைவை சுதேசமுத்திரன் ஜன 25 1924 இதழ் வெளியிட்டது. மெட்ராஸிலிருந்து வெளியான ஆந்திர பத்ரிகா ஜன 23 1924ல் லெனின் கருத்துக்களுடன் ஒருவர் வேறுபடலாம்.. ஆனால் புத்தியுள்ள எவரும் அவர் உலகப்புகழ் வாய்ந்தவர் என்பதை மறுக்க முடியாது என்றெழுதியது. சேலத்திலிருந்து வெளியான தமிழ்நாடு எனும் இதழ் ஜன் 27 1924ல் லெனினுக்கு எதிராக பல
முதலாளித்துவ நாடுகள் பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி தாக்குதலை தந்தன. போல்ஷ்விசம் அழிக்கப்படவேண்டும் என கருதின. எதிரிகளின் தாக்குதலில் நிலை குலையாமல் புரட்சிகர ருஷ்யா அரசாங்கத்தை அவர் உருவாக்கினார். அவர் மறைந்தாலும் அவரது லட்சியம் நீடித்து நிலைக்கும் என்ற பதிவை செய்தது. பாண்டிச்சேரியிலிருந்து தேசசேவகன் இதுவரை இல்லாத புதியவகை ஆட்சியை உருவாக்கிய லெனின் மறைந்துவிட்டார். அவரை கேலி செய்தவர்கள் தொடர்ந்தும் கூட செய்யலாம். இணையற்ற கொள்கையை அவர் நிறுவியுள்ளார். அவை உறுதிப்பட்டு நிலைக்கும் என எழுதியது. விஜயவாடாவிலிருந்து வந்த சுயராஜ்ய பத்ரிகா லெனினை பலர் கேலிக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கினர். ஆனால் அவர் மறைவின்போது அவர்தம்
இழப்பை உணராதவர் என எவருமில்லை என்றது
மெளலானா ஆசாத் அவர்களை ஆசிரியராக கொண்டு அல் ஹிலால் பத்திரிகை டிசம்பர் 9 1927ல் சோவியத்தின் 10 ஆண்டு கொண்டாட்டத்திற்கு இந்திய பிரதிநிதிகள் அழைக்கப்பட்டும் அரசாங்க அனுமதி பிற சூழல்களால் யாரும் செல்லமுடியவில்லை என்ற பதிவை தந்திருந்தது. கொண்டாட்டத்திற்கு இருநாட்கள் தாமதமாக மோதிலாலும் ஜவஹரும் சென்ற செய்தி பின்னர்தான் கிடைக்கப் பெற்றது. கொண்டாட்ட ஊர்வலத்தில் மக்கள் இரவும் பகலுமாக வந்து கொண்டேயிருந்தனர் என்ற செய்தியை அவ்விதழ் பதிவு செய்துள்ளது. கம்பீரமான லெனின் சிலை கம்யூனிசத்தின் அடையாளமாக எழுப்பப்பட்டுள்ளது என்றும் எழுதியது..
செளகத் உஸ்மானி’ கிரம்ளினில்’ என்ற நினவுப்பதிவை 1927ல்செய்திட்டார். எங்களது மொழிபெயர்ப்பாளர்களுடன் லெனின் அறைக்கு சென்றோம். சரியான இருக்கைகள்கூட அங்கு இல்லை. சுவர் முழுக்க உலக நாடுகளின் வரைபடங்கள்- புத்தகங்கள் நிறைந்த அல்மிரா - கார்ல் மார்க்சின் போட்டோ இருந்தன. அறையில் ஆடம்பர வசதிகள் ஏதுமில்லை. லெனினை நாங்கள் தொந்திரவு செய்யவிரும்பவில்லை. விவசாயிகளின் அன்பிற்கு பாத்திரமானவராக அவர் விளங்கினார். தொழிற்சங்க கூட்டத்தில் அவர் ஆற்றிக்கொண்டிருந்த மிக முக்கிய உரைகளை
கேட்க முடிந்தது, உணவுக்கூடத்தில் கிரெம்பிளினில் தொழிலாளர்களுடன் அவர் உணவு எடுத்துக்கொண்டார் போன்ற அவரது எளிமையை நேரில் பார்த்த உஸ்மானி எழுத்துக்களால் தெரிந்து கொள்ள முடிகிறது.
அமிர்த்சரஸிலிருந்து வெளியான கிர்தி பஞ்சாபி மாத இதழ் பிப் 1927ல் லெனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவீர் என்ற வேண்டுகோளை விடுத்தது. விவசாயிகளுக்கு துயர்துடைக்கும் தோழன், ஏழைகளின் நண்பன், தொழிலாளர் வாழ்க்கையை உயர்த்தும் மனிதன் லெனின் என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. லெனினது கொள்கைகள் உழைக்கும் மக்களை விடுவிக்கும் மகத்தான சக்தி கொண்டது. தவறாமல் உழைக்கும் மக்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தது கிர்தி.
மாதுரி என்ற இந்தி மாத இதழ் ஜன 1928ல் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. குட் என்ற மான்செஸ்டர் கார்டியன் நிருபர் லெனின் அரசாங்கம் எவ்வாறு நடைமுறையில் உள்ளது என பார்வையிட 1919ல் வந்திருந்தார். இதுவரை பரப்பப்பட்ட தவறான தகவல்களை தான் உணர முடிந்ததாக அவர் எழுதியதை மாதுரி பதிவு செய்தது. லெனினை சுற்றி சீனா வீரர்கள் இருப்பார்கள் என்பது பெரும் கட்டுக்கதை - யாருமில்லை. அமைச்சர்கள் அவரவர் அலுவலகத்தில் இருந்தனர்- லெனின் எளிமையாக அவரது அலுவலத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக உழைப்பதை பார்க்க முடிந்தது.. அரசாங்க செலவில் கம்யூனிச பிரச்சாரங்களை பிற நாடுகளுக்கு நாங்கள் செய்வதில்லை என்றார் லெனின். ஆனால் பிரிட்டன், பிரான்ஸ் சோவியத் கம்யூனிச எதிர்ப்பை அரசாங்கம் மூலமே
சட்டமியற்றி செய்கிறார்கள் என்பதை திருவாளர் குட் அவர்களிடம் லெனின் சுட்டிக்காட்டினார். நாங்கள் கருத்து சுதந்திரத்திற்காக நிற்போம் என்றார் லெனின் போன்ற அந்நிருபரின் பதிவை மாதுரி வெளியிட்டது. குறுகிய 10 ஆண்டுகளுக்குள் சோவியத் ஜனநாயகம் உலகின் புரட்சிகர சிந்தனையை கூர்மைபடுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலை- மக்களின் விடுதலைவரை சோவியத்யூனியன் ஓயாது என்ற வேட்கையையும் கனவையும்
மாதுரி பதிவு செய்தது.
லெனினின் எளிமை அய்ரோப்பிய ஆட்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. நாட்டின் ஆட்சித்தலைவர் சாதரண குடிமகனைப்போல இருக்கிறார் என்பதை அவர்களால் நினத்துப் பார்க்க முடியவில்லை. உழைக்கும் மக்கள் எடுத்து கொள்ளும் அதே உணவு அவருக்கு வழங்கப்படுகிறது. நண்பர்கள் கொணர்ந்து தரும் மிக உயர்ந்த பழவகைகளை பிற பொருட்களை அவர் தொடுவதில்லை. அவருக்கு வருகின்ற அப்பொருட்களை குழந்தைகள் பள்ளிக்கும், மருத்துவமனைக்கும், அநாதை இல்லங்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்- அரசாங்க வேலையில் அவர் பெரும் ஊதியம் கூட ஏழைகளின் அமைப்புகளுக்கு அனுப்பப்படுவதாக அறிகிறோம். அவரது துணைவி க்ருப்ஸ்காயா இந்த லட்சிய தவ வாழ்விற்கு துணை நிற்கிறார் போன்ற அவரின் அன்றாட வாழ்வின் உன்னத நடைமுறைகளை தேவ் விரட் என்பார் 1930ல் தனது புத்தகம் ஒன்றில் லெனினின் மேன்மை என தலைப்பிட்டு பதிவு செய்கிறார். லக்னோவிலிருந்து பார்கவா என்பாரும் 1932ல் லெனின் குறித்து பெருமையுடன் பேசுகிறார். இதேபோல கான்பூரிலிருந்து போல்ஷ்விக் ருஷ்யா என்ற இந்தி புத்தகத்தில் 1932ல் சிவ நாரயண் டாண்டன் லெனினது அரசாங்க சிறப்புக்களையும் அவரது தனிப்பட்ட அருங்குணங்களையும் பதிவு செய்கிறார்.
சத்ய நாராயன சாஸ்த்ரி என்பாரும் ஆசிய மக்களுக்கு லெனினின் செய்தி என்ற தலைப்பில் எழுதியுள்ளார். உலக இஸ்லாமிய சகோதரர்களின் விடுதலை குறித்து லெனின் பேசுகிறார். நமது 32 கோடி மக்களின் விடுதலைக்கு சோவியத் கொள்கைகள் துணை நிற்கிறது. புரட்சிகர எண்ணங்களை வளர்ப்போம்- சோவியத்துடன் தோழமை கொள்வோம். தங்களது விடுதலைக்கான போராட்டத்தில் துணை நிற்பவர்கள் சோவியத் என்பது ஆசிய மக்களுக்கு புரியத்துவங்கிவிட்டது என்ற பதிவை அவர் செய்கிறார். ஆசியாவின் புரட்சி என்ற இந்தி நூலில் இக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன..
காசியிலிருந்து மகாத்மா லெனின் என்ற புத்தகத்தை சதானந்த பாரதி என்பார் 1934ல் இந்தியில் எழுதியுள்ளார். மக்களின் கல்வி அறியாமையை நீக்காமல் கம்யூனிசத்தை வளர்த்தெடுக்கமுடியாது என்ற லெனினின் உறுதிப்பாட்டை ஆசிரியர் பாராட்டுகிறார். கம்யூனிச பத்திரிகைகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் விஷயங்களை எழுதவேண்டும் என லெனின் அறிவுறுத்தியதையும் அவர் பதிவு செய்கிறார். லெனின் எதையும் நேர்பட பேசிவிடுவார். லெனின் மறைந்தாலும் அவரது பாதுகாக்கப்படும் உடல் தனது நிர்வாகம் தொடர்ந்து சரியாக இயங்குகிறதா என்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கும். மக்களின் நலன் குறித்த தீர்விற்காக தவிக்கும் என எழுதினார் சதானந்த பாரதி. அற்புத அரசியல் மேதைமை என்ற தலைப்பிட்டு சையக் முஷிர் ஹுசைன் கித்வாய் எழுதுகிறார். ட்ராட்ஸ்கி போன்றவர்கள் கணிக்க தவறிய நிலையிலும் புரட்சி குறித்து மிகச் சரியான நேரக்கணிப்பை உருவாக்கி அதை நடத்த லெனினால் முடிந்தது. சரியான நேரத்தில் சமாதானம் என பேசியதையும் அவர் பலவீனமாக கருதவில்லை என அவரின் உத்திகளை பெருமையுடன் கித்வாய் தனது புத்தகமான இஸ்லாமியமும் போல்ஷ்விசமும் என்பதில் 1937ல் பதிவாக்குகிறர். இஸ்லாமியர்கள் போல்ஷ்விசத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற தனது விழைவையும் அதில் தெரிவித்தார் கித்வாய்.
நாடுகடத்தப்பட்டு அந்தமான் சிறைகூடங்களில் வாடிவந்த கைதிகளையும் லெனின்
கவர்ந்திழுத்துள்ளார் . லெனினது சைபீரிய கொடும் அவதிகள் மத்தியிலும் அவரின் புரட்சிகர பணிகள், புத்தகங்கள் எழுதியது போன்றவற்றை சுட்டிக் காட்டி பிஜய் குமார் சின்ஹா 1939ல் கான்பூரிலிருந்த வெளியான பதிப்பில் கூறுகிறார். மகத்தான
இக்பால், வள்ளத்தோள், விஷ்ணுதே, பாரதி, ஹரிந்திரநாத் சட்டொபாத்யாய், புட்டப்பா என புகழ்வாய்ந்த் கவிபெருமகனார்கள் லெனின் குறித்தும் சோவியத் புரட்சியை வரவேற்றும் எழுதினர்.
மனிதகுல விடுதலைக்காகவும் நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் தங்கள் ஆயுளை அர்ப்பணித்த மகத்தான மனிதர்கள் ஆயிரம் விமர்சனங்கள் ஊடாகவும் தொடர்ந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வும் பணியும் கலங்கரை விளக்காக ஒளிக்காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் லெனின் உலகில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஈர்ப்பு விசையாகவும் இருக்கிறார்.
Ph: 9443865366
pattabieight@gmail.com
கட்டுரையின் செய்திகளுக்கு ஆதாரம்:
1. Lenin His
Image in India: edited by Debendra Kaushik, Leonid Mitrokhin, Vikas publication
1970
2. Lenin In
contemporary Indian Press edited by P C Joshi,Chattopadyaay, Kaushik PPH 1970
Comments
Post a Comment