HIND SWARAJ -GANDHI
காந்தியடிகளின் எழுத்துக்கள் 90 வால்யூம்கள் உள்ளன. வாழ்நாளில் நாம் ஒருவரை எவ்வளவு நேசித்தாலும் பின்பற்ற முயற்சித்தாலும் - மார்கஸ் ஆனாலும் காந்தி
நேருவானாலும், பெரியார் அம்பேத்கர் ஆனாலும் (இவர்கள் எல்லாம் ஏராளம் பேசியவர்கள்- எழுதியவர்கள்- மக்களை திரட்டி
தங்கள் லட்சியத்திற்காக போராடியவர்கள் என்ற வகையில்) அவர்களுடன் ஒருவர் முரண்படும் தருணங்கள் அமையலாம். ஒருவரின் வாழ்வியல் அனுபவங்கள் மற்றும்
சுய சிந்தனைகளால் இப்படிப்பட்ட தருணங்கள் நேர்கிறது. காந்தியடிகள் போல் நேசிக்கப்பட்ட நேசிக்கப்படும் அதே அளவில் விமர்சிக்கப்படும் தலைவர்களை காண்பது அரிது.
அவரின் எழுத்துமுறையில் தான் மாபெரும் அறிவுஜீவி என்கிற தெரிவித்தல் ஏதும் இராது. உறுதியாக தான் ஆத்மார்த்தமாக கண்டுணர்ந்த வந்தடைந்த ஒன்றை வலியுறுத்தும் தன்மை இருக்கும். அவரின் இந்து சுயராஜ்யம் என்கிற ’விசாரணை தன்மையிலான ஆக்கம்’ 1909ல் எழுதப்பட்டது. குஜராத்தியில் எழுதப்பட்டு 1910ல் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்ற ஒன்று. 90 பக்கங்களே உள்ள ஆக்கம்.
டால்ஸ்டாய், ஷெரார்ட், டெய்லர். தோரோ, ரஸ்கின், பிளாட்டோ, மாஜினி, மாக்ஸ் நொர்டாவ், தாதாபாய் நெளரோஜி, ஆர் சி தத், மெய்ன், கார்பெண்டர் ஆகியோர் நூல்களின் தாக்கம் - அவர்கள் எழுத்துக்களிலிருந்து அவர் உள்வாங்கி கொண்டு தனது இந்து சுயராஜ்யம் ஆக்கத்தை வளப்படுத்தி காந்தி தந்துள்ளார். இன்றுள்ள இந்துத்துவாதிகளின் அரசியல் சூழலில் இப்புத்தகம் பெரும் கவனத்தை விவாதத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றதாக உள்ளது.
20 அத்தியாயங்களில் கேள்வி- பதில் முறையிலான விளக்க ஆக்கமிது. சுயராஜ்யம் என்றால் என்ன? மக்களுக்கு பொறுப்பாகவரும் பிரதம அமைச்சர் , அமைச்சர்கள் எவ்வாறு பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள், இந்திய நிலை, இந்து- முஸ்லீம் உறவுகள், மேம்பட்டவர்கள் என கருதப்படும் டாக்டர்கள் , வக்கீல்கள் நடந்து கொள்ளும் முறை, நாகரிகம் என்றால் என்ன, இத்தாலி- இந்திய நிலைகள் ஒப்பீடு, கல்வி என்றால் என்ன எவ்வாறு அமைய வேண்டும், எந்திரங்கள், வன்முறை- அகிம்சை போராட்டங்கள், இந்தியா எப்படி விடுதலை பெறமுடியும் போன்ற பல்வேறு அம்சங்கள் இவ்வாக்கத்தில் விவாதிக்கப்படுகின்றன.
இப்புத்தகத்தில் பல
சிந்தனை தெறிப்புகளை நாம் பார்க்க முடிகிறது. சிலவற்றை கீழே காணமுடியும். ஆனாலும் . புத்தகம் முழுமையும்
ஒருவர் படித்து புரிந்து கொள்வது நல்லது.
மரம் ஒரு நாளில் வளர்வதில்லை.
நாம் உயர உதவியவற்றை உதாசீனம் செய்யாமை வேண்டும்
மனதின் குரலை கேள்
எனது சிந்தனை மட்டுமே மேலானது பிறர் சிந்தனை மோசமானது என்ற எண்ணம் சரியல்ல.
முளைக்கும் விதைகள் வெளித்தெரிவதில்லை
தேசங்கள் உருவாக்கம் பல்லாண்டு தன்மையுடைத்து
மாபெரும் நிகழ்வுகள் மாபெரும் விளைவுகளையும் உருவாக்குகின்றன
அதிருப்திகளே பதட்டங்களை உருவாக்குகின்றன
பாராளுமன்றம் மலடி வேசி (sterile woman and prostitute) போல் உள்ளது. இன்று ஒருவர் கையில், நாளை வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் என.. (பாராளுமன்றம் குறித்து பேசும் போது இப்படியான கடுமையான
பெண்ணை ஒப்பிட்ட பதப்பிரயோகம் ஒன்றை காந்தி பயன்படுத்துகிறார். அவ்வாறு அவர் அதை பயன்படுத்தியிருக்க
வேண்டாம் என எனக்குப்படுகிறது.)
பிரதம அமைச்சர் என்பார் நாடாளுமன்றம் என்பதைவிட தனது அதிகாரம் குறித்தே அதிகம் கவலைபடுபவராக இருக்கிறார். அவர்களிடத்தில் மனசாட்சி வாழவில்லை.
இங்கிலாந்தை இந்தியா காப்பி அடித்தால் அழிவுதான்
நாகரீகம் என்பது உடல்தேவைகளை பூர்த்தி செய்தல் என்ற புரிதல் உள்ளது. அறநெறி தெய்வீகமென ஏதுமில்லை என கருதுகிறோம். நபிமுகம்மது மொழியில் இது சாத்தானின் நாகரீகம்.
இந்துப்படி கருப்புயுகம்
இங்கிலாந்து நம்மை எடுத்துக்கொள்ளவில்லை. நாம்தான் நம்மை
கொடுத்துவிட்டோம். இந்துக்களும் முஸ்லீம்களும் பகைத்துக்கொண்டொம். இங்கிலாந்து கம்பெனிக்கு
வாய்ப்பானது
எங்கு ஒளி இருக்கிறதோ அங்கு நிழலும் படர்கிறது.
வலிமை என்பது பயமற்று இருப்பதில் உள்ளது. உடல் கட்டுமானத்தில் அல்ல.
இரயில்வேக்கள் பஞ்சத்தை அதிகரித்துவிட்டன (இன்று காந்தியின் இக்கருத்து பொருத்தமுள்ளதா என தெரியவில்லை-)
இந்தியாவின் புனித இடங்கள் புனிதமிழந்துள்ளன. உண்மையான பக்தர்கள் சென்ற ஸ்தலங்கள் முரடர்களை காண்கின்றன.
நமது துன்பங்கள் நாமே தேடிக்கொண்டவை
தேசம் எனில் நிலவும் வேறுபாடுகளை தன்வயப்படுத்திக்கொள்ளும் தன்மை பெறத்தக்கதாக இருக்க வேண்டும்
மதங்களின் பெயரால் மோதிக்கொள்வது தற்கொலைக்கு ஒப்பானது. இந்துக்கள் முஸ்லீம்கள் பார்சிகள் கிறிஸ்துவர்கள் என அனைவராலும் உருவாக்கப்பட்ட நாடு அனைவருக்குமானது
இந்தியா விவசாய நாடு என்பதால் பசு பலவகைகளில் பயன் தரும் மிருகம். பசுவை நாம் கொண்டாடுவதுபோல் சகமனிதர்களையும் நாம் மதிக்கவேண்டும். முஸ்லீம் சகோதரரிடம் நாம் நீங்களும் காக்க வாருங்கள் என வேண்டுகோள் விடுக்கலாம். ஏற்காதபோது நம் சக்திக்கு அப்பாற்பட்டது என்று விட்டுவிடலாம். பசு மீது கூடுதலாக இரக்கமிருந்தால் . தன்னை தியாகம் செய்துகொள்ளவேண்டுமே தவிர
சகோதரர் உயிரை பறிக்கக்கூடாது.
குரானில் நூற்றுக்கணக்கான பகுதிகள் இந்துக்கள் ஏற்க தகுந்தவையாகவும், பகவத்கீதையில் சில முஸ்லீம்கள் ஏற்க முடிந்தவையாகவுமே உள்ளன.
டாக்டர்கள் தங்களது அறிவை முன்வைத்து ஏராள கட்டணம் வசூலிக்கிறார்கள். மக்கள் அதிகமாக ஏமாறுகிறார்கள்
அறநெறி என்பது நன்னடத்தைதான்
மனம் அலைப்பாயும் பறவையைப்போல... பெறப்பெற அதிகம் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
நாடுகள் ஒரே தன்மை கொண்டவையல்ல. நமது நிலை தனித்துவமானது. பிற நாட்டு வரலாற்றை சுட்டி பேசுவது பொருந்தாது.
கொலைகள் மூலமாக ஆட்சி அதிகாரம் பெறுபவர்களால் நாட்டில் மகிழ்ச்சியை தரமுடியாது.
கடமை ஆற்றல்கள் மூலம் உண்மையான உரிமையை பெறமுடிகிறது
ஆயுத சக்தியைவிட அன்பின் பரிவின் சக்தி மகத்தானது
வாளை எடுப்பவன் வாளால் வீழ்கிறான்
வரலாறு யுத்தங்களின் வன்முறைகளின் வரலாறல்ல. அதனிடை காலங்களில் அன்பின் ஆத்மாவின் சக்தி செயல்பட்டதே வரலாறு
PASSIVE
RESISTANCE என்கிற செயலற்ற எதிர்ப்பு என்பது ஆயுதங்கள் மூலம் எதிர்ப்பு என்பதற்கு நேர்மாறானது. சுயதுன்பங்களை பொறுத்துக் கொண்டு உரிமைகளை பெறும் முறையது
விவசாயிகள் வாளின் முன்னர் பணிந்ததில்லை.
செயலற்ற எதிர்ப்பு பயம் அற்று இருந்தால் மட்டுமே நகரும்
ஒழுக்க நெறிகளை நன்னடத்தையை கட்டுவதே கல்வியின் ஆரம்ப படி
இந்தியா தெய்வமற்று போகாது. நாத்திகம் இங்கு வளராது
ஆர் சி தத் எழுதிய இந்திய பொருளாதார வரலாறு படித்தபோது நான் அழுதேன். இந்தியாவின் கைத்தொழில்கள் மான்செஸ்டரால் அழிந்தது.
இங்கிலாந்தின் கொடுங்கோன்மையோ இந்தியாவின் கொடுங்கோன்மையோ தேவையில்லை என்பதை நாம் கற்க வேண்டும்
Comments
Post a Comment