2
தத்துவ படிப்பு எழுதுவது எல்லாம் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான். கணிதமேதை இராமனுஜம் ஸ்ரீனிவாசன் அப்படி ஒரு இரவில் வந்து தான் ஆக்ஸ்போர்ட் செல்கிறேன், ஆசிர்வதிக்கவேண்டும் என கேட்டு நின்றுள்ளார். கல்லூரி காலத்தில் பெரும் நண்பர்களை அவர் பெறவில்லை. அல்லாடி கிருஷ்ணசாமி சீனியராக படித்தார். 1920களில்தான் அவர்கள் நட்பு உருவாகி வளர்ந்தது. பின்நாட்களில் புகழ்வாய்ந்தவர்களாக உயர்ந்த சத்யமூர்த்தி, சுப்பிரமண்யஅய்யர்,மொகமது உஸ்மான் ( சென்னை தற்காலிக கவர்னராக வந்தவர்) பழக்கம் தோழமை ஏற்பட்டது. உஸ்மான் ராதாகிருஷ்ணானிடம் பயின்று பின்னர் பல்கலை துணவேந்தரானவர்- கவர்னர் ஆனவர்.
டி.கே துரைசாமி என்கிற பொருளாதார வல்லுனர் 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர் நட்பில் இருந்தவர். காஸ்மோபாலிட்டன் கிளப் சேரும் அளவிற்கு நிதிநிலைமை பலப்பட்டதாக கோபால் தெரிவிக்கிறார். அநாவசிய செலவு செய்யத்துவங்கினார் எனவும் மதிப்பிடுகிறார். சரோஜினி நாயுடு குடும்பத்துடனும் பழக்கம் ஏற்பட்டது. நேருவின் நண்பராக இருந்த எம் ஏ காண்டத் காம்பிரிட்ஜ்லிருந்து கல்லூரிக்கு வந்தார். இருவரும் மிகச்சிறந்த அறிவு விவாத நட்பை உருவாக்கிக்கொண்டனர்.
மேற்கத்திய தத்துவத்தில் ஆங்கிலம் மூலம் அவர் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும், இந்திய தத்துவம் கற்க சமஸ்கிருத உதவி அவசியப்பட்டது. பல பண்டிதர்களின் துணைக்கொண்டு உபநிடதங்களை அவர் கற்றார். புத்தம் தெரிந்து கொள்ள பாலிமொழி ஆக்கங்களை ஆங்கில வழி பயின்றார். மேற்கிலிருந்து வந்த தத்துவப் பத்ரிக்கைகளில் கட்டுரைகள் எழுத துவங்கினார். ஆரம்பத்தில் Mind, Hibbert Journal அவர் கட்டுரைகளை திருப்பி அனுப்பிவிட்டன. 1911ல்
International Journal of Ethics என்கிற இதழ்
The Ethics of Gita and Kant என்கிற ஒப்பீட்டு ஆய்வை வெளியிட்டது. வேதாந்தம் குறித்த கட்டுரைகளையும் அவ்விதழ் வெளியிட்டது.
விவேகானந்தர், சுரேந்திரநாத் பானர்ஜி, லஜ்பத்ராய், கோகலே, ராஷ்பிகாரிபோஸ் குறித்து ராதாகிருஷ்ணன் அறியலானர். அன்னிபெசண்ட் உரைகளால் கவரப்பட்டார். இந்தியா குறித்த பெருமிதம், அய்ரோப்பாவின் பொருளாசை எண்ணம் குறித்து அவர் உலகப்போர் சூழலில் 1915ல் ஏசியாட்டிக் ரிவ்யூவிற்கு கட்டுரைகள் எழுதினார். அவை தணிக்கைத் தடைக்கு உள்ளானதாக அறிகிறோம்.
காந்தியுடன் ஆன முதல் சந்திப்பு நிறைவாக இல்லை. பின் நாட்களில் அவர் காந்தியை திலகர், அன்னிபெசண்ட்டைவிட கூடுதல் மதிப்புக்குரியவராக கருத ஆரம்பித்தார். முதல் சந்திப்பில் காந்தி மத்தியகால அணுகுமுறை பார்வையுடன் இருப்பதாக ராதாகிருஷ்ணன் நினைத்தார். பால் அருந்தாதே அதுவும் பீப்
beef என சொல்ல ராதாகிருஷ்ணன் அனைவரும் நரமாம்சம் குடித்துதான் வளர்கிறோம் (தாய்ப்பால்) என்ற பதிலை தந்துள்ளார். அருகில் இருந்த ஜி ஏ நடேசன் அவர் தர்க்கவியல் பேராசியர் என காந்தியிடம் தெரிவித்தார். அதேபோல் டாக்டர்களே தேவையில்லை- வனாந்தரங்களில் அவர்கள் இல்லாமல் ஆயிரம்பேர் பிறக்கிறர்கள் என காந்தி சொல்ல ஆயிரம் பேர் இறக்கவும் செய்கிறார்கள் என ராதாகிருஷ்ணன் பதில் தந்தார். எப்படி தெரியும் என காந்தி கேட்க , உங்களுக்கு எப்படித்தெரியும் என பதில்கேள்வி எழும்ப விவாதம் நின்றுபோய்விட்டது.
திலகர் மாண்டலே சிறையில் இருந்தபோது ராதாகிருஷ்ணன் கீதை கட்டுரையை கேட்டுப்பெற்று தனது அணுகுமுறைக்கு ஏற்ப உளது என்ற கருத்தை தெரிவித்தார். அதற்கு மிக்க நன்றி தெரிவித்து திலகருக்கு கடிதம் எழுதினார் ராதாகிருஷ்ணன். தாகூரின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் கொணர 1912ல் அவர் தாகூரை படிக்க துவங்கினார். தாகூருக்கு 1913ல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவர் கிறிஸ்து சாரத்தில் எழுதுகிறார் என்ற குற்றசாட்டு வந்தது. அதை மறுத்து தாகூரின் எழுத்துக்களில் இந்து வேதாந்தி தெரிகிறார் என ராதாகிருஷ்ணன் எழுதினார். 1918ல் தாகூரின் தத்துவம் என்கிற அருமையான புத்தகத்தை ராதாகிருஷ்ணன் சென்னையிலிருந்து வெளியிடுகிறார். இது குறித்து விரிவாக தாகூரின் தத்துவப் பார்வை எனும் கட்டுரையில்
இக்கட்டுரை ஆசிரியர் எடுத்துக்கூறியுள்ளார்.
தாகூர், ராதகிருஷ்ணன் இருவரும் தேசபக்த இயக்க நடவடிக்கைகளில்
தீவிரமாக இல்லை. காந்தி இன்னும் வெளிப்படுத்தப்படாதவராக இருந்தார். திலகர் மீது மரியாதை
இருந்தது. அவரது அரசியல் பார்வையுடன் இராதாகிருஷ்ணன் நிற்கவில்லை. தாகூரின் தத்துவம்
குறித்த ராதாகிருஷ்ணன் புத்தகம் நல்ல மதிப்புரைகளை கண்டது. வரவேற்பு பெற்றது. சென்னை பச்சையப்பா தனியார் நிர்வாகம் அதிக சம்பளம் தருவதாக
சொன்னாலும் பிரசிடென்சியில் இருப்பதை ராதாகிருஷ்ணன் விரும்பினார். சென்னை பல்கலைகழகத்தில்
அப்போது தத்துவத்துறை இல்லை. 1916ல் அவர் ஆந்திரா அனந்தப்பூர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால் மூன்றே மாதத்தில் அவர் சென்னை பிரசிடென்சி வந்தார். பிறகு பேராசிரியராக அவர்
ராஜமுந்திரி செல்கிறார். அங்கு ஆனந்த குமாரசாமியின் நண்பரும் எடின்பர்க் மாணவருமான
கோபாலகிருஷ்ணய்ய நண்பராகிறார். அவருக்கு வந்த மைசூர் வாய்ப்பை மைசூர் அரசாங்கம் ஏற்காத
சூழல் இருந்தது. வங்கத்திலிருந்து வரவேண்டியவர்கள் வராதால் ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி
கொடுத்தனர். ஆனால் அப்போது மைசூரில் பிராம்மண எதிர்ப்பு இயக்கம் வலுப்பட்டது நிலவியது.
விஸ்வேஸ்வரய்யா கூட சாதி இயக்கங்களில் உடன் நின்றார்.
ஜூலை 1918 முதல் 5 ஆண்டுகளுக்கு நிலையான மாத ஊதியம் ரூ
500 என்பது ஒப்பந்தம். அங்கு தனது நேரத்தில் பெரும்பான்மையை சமஸ்கிருத இலக்கிய ஆய்வுகளில்
செலவிட்டார் ராதாகிருஷ்ணன். 1920ல் Reign of religion in Contemporary philosophy என்கிற
ஆய்வு புத்தகம் எழுதினார். கிறிஸ்துவ மத தாக்கத்தை அவர் அதில் விமர்சித்தார். வேதாந்தா
உயர்த்திப் பிடிக்கப்பட்டிருந்தது. ராதாகிருஷ்ணன் மேற்கு சிந்தனைகளைவிட உபநிடத சிந்தனைகள்
மேலானவை என ராதாகிருஷ்ணன் பேசத்துவங்கினார். தான் கண்டடைந்த ஆதாரங்களை அவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஜேம்ஸ்வார்ட், எஃப் சி
எஸ் ஸ்கில்லர், வில்டன் கார் போன்றவர்களுக்கு அனுப்பினார். வெளித்தெரியாத மைசூர் பேராசியருடன்
தாங்கள் வேறுபட்டாலும் அவருக்கு தன் கருத்துக்களை நிலைநாட்டும் முழு உரிமையை ஏற்பதாக
அவர்கள் பதில் எழுதினார். ராதாகிருஷ்ணனுக்கு நீட்சே, ரேனன், ஹார்டி, பிரெளனிங், இப்சென்,
பெர்னார்ட் ஷா, காளிதாசர், தாகூர் என பலதரப்பட்ட எழுத்துக்களில் ஆழம் இருந்தது.
ராதாகிருஷ்ணனுக்கு உண்மையான தத்துவம் எனில் அது உண்மையான
மத விளைவுகளை தரும். அப்படி ஒன்று இருக்கிறது எனில் வேதாந்தா என அவர் கருத துவங்கினார். அவரின் ஆங்கில புலமை அமெரிக்க அய்ரோப்பிய சிந்தனையாளர்களால்
வியந்து பாராட்டைப்பெற்றது. மேற்கு நாடுகளுக்கு வராமலேயே ஹெகலிய சிந்தனை உள்ளிட்ட பலவற்றை
அவர் உள்வாங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ராதாகிருஷ்ணனுக்கு உண்மையான மதம்
என்பது துறவை பேசுவதல்ல. அன்பையும், சேவையும் நடைமுறையில் கொண்டது. கடவுளை அடைய ஒரே
வழிதான் உள்ளது என்பதில் உண்மையில்லை என்ற கருத்தும் அவரிடம் இருந்தது.
Comments
Post a Comment