https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, July 13, 2022

சீனா வாசிப்பில்.. மதம்

 

சீனா வாசிப்பில்.. மதம்

ராபர்ட் லாரன்ஸ் குன் சீனாவியலாளர். முதலீட்டுவங்கியாளர். சீன அரசுடன் நெருக்கமாக ஆலோசகராக இருந்தவர். சீனா சீர்திருத்த நட்பு மெடல் எனும் விருதை பெற்றவர். சீனா டெய்லியில் எழுதக்கூடியவர் . மேற்கில் சீனாவின் பிரச்சாரகர் என அறியப்படுபவர். அவர் எழுதிய புத்தகம் How China's Leaders Think.  அதில் அத்தியாயம் 28 டெலிகாம் குறித்து அவர் தந்ததை எழுதியுள்ளேன்.

இப்போது அவர் எழுதியதில் என்னை ஈர்த்த அத்தியாயம் 31  Why Religion Became Important  குறித்து எழுதியதை சுருக்கமாக இங்கு தந்துள்ளேன். சோசலிசத்தை கட்டியமைப்பதாக சொல்லும் சமூகம் ஒன்றில்- கம்யூனிஸ்ட் கட்சி 73 ஆண்டுகளாக ஆளும் பெரும் கலாச்சார பின்னணிகொண்ட சமூகத்தில் ’மதம் அதன் பிடியில் மக்கள்’ என்கிற ஒன்றை அவர்கள் எப்படி சந்தித்து வருகிறார்கள்- என்ன சோதனைகளை எல்லை வகுத்து செய்து பார்க்கிறார்கள் என்பதை இக்கட்டுரை பேசுவதாக எடுத்துக்கொள்ளலாம்.சீனாவில் மதம்

சீனாவில் சாரா எனும் அமைச்சுத்துறை அதாவது  State Administration of religious Affairs  மத விவகாரங்களை கவனித்துக்கொள்கிறது. அவர்களின்சீனா தினசரியில்கடவுள் உண்டா என்பதற்கான நவீன முறைப்பட்ட விவாதங்கள் நடந்தன. சர்வதேச புத்தமத மாநாட்டை சீனா முன்வந்து நடத்தியுள்ளது. Daodejing  என்பது தாவோயிச மதப் பிரதிகளாம். ஆழ்ந்த ஞானம் கொண்ட சுருக்கமாக சொல்லத்தெரிந்த , மறைபொருள் கொண்ட பிரதியாம். அங்கு கருத்தரங்குகளில் மதம்- அறிவியல் தொடர்புகள் விவாதிக்கப்படுகிறது.

ராபர்ட் லாரன்ஸ் விவாதிக்கும் காலத்தில் அதிபராக இருந்த ஹூ ஜிண்டோ மதத்தின் பாற்பட்டு non hostility- tolerance வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். மானுட உறவுகளில் சமயம் அழிக்க முடியாத இடத்தை பெற்றுள்ளது என சீனத் தலைவர்கள் கருதியதாக ராபர்ட் லாரன்ஸ் எழுதுகிறார். தாவோயிசமும் அதன் பிரதிகளும் கண்டிப்பாக சீன சமூகத்தின் இசைவு குலையாமல் காப்பாற்றியதாகவும் அதிபர் கருத்துக்கொண்டிருந்தார்.

 பொலிட்ப்யூரோவில் மதம் குறித்து எப்படிப்பட்ட அணுகுமுறை இருக்கவேண்டும் என்பது பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. தோழர் ஹூ The Party and the Government shall reach out to religious believers in difficulties and help them through their problems"  என அறிவுறுத்தியுள்ளார். கடமைகளாக ’Support self governance for religious groups - ofcourse law abiding while managing religious affairs- encourage believers to keep their patriotic tradition and help develop Chinese society என்பனவும் அவரால் உணர்த்தப்பட்டுள்ளது.

 சமய விற்பன்னர்களுக்கான தனி பயிற்சிக்கூடங்களை அமைக்க சீன அரசு முன்வந்தது. அதில் உலக மதங்கள், நெறிகள், நடைமுறை மேலாண்மை, உளவியல், சட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன .

கட்சியினர்  சமய சுதந்திரம் காப்பவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கவேண்டும் என்பதில் கருத்தொற்றுமையை எட்டியுள்ளனர். கட்சி உறுப்பினர்களின் கொள்கை நிலை நாத்திகம்தான் என்பதை அவர்கள் விடவில்லை. அதேநேரத்தில் சீனக்கலாச்சாரம் சமூக நல்லிணக்கத்திற்கு உதவும் வகையில் - கன்பூசியன் சிந்தனைகள், புத்தம், தாவோயிசம் ஆகியவற்றை தாராளமாக சமூகம் பயன்படுத்திக்கொள்ளவேண்டிய யதார்த்தம் உணரப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனா போன்ற பண்டைய சமூகம் சமயப்பற்றோடுதான் இருந்ததா- அல்லது பொருளாயத - நாத்திக சமய மறுப்பு கொள்கைகள் கொண்டதா என்ற அம்சம் சீனா அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்த விவாதமாக இருக்கிறது. உலக மதங்கள் குறித்த ஆய்வுக்கூடத்தின் பொறுப்பாளாரக இருந்த ஜுவோ இது குறித்து விவரித்துள்ளார்.

ஹான் போன்ற மன்னர் இராஜ்யங்களில் சமயம் முக்கியமாக இருந்துள்ளது. ஆனால் நீண்ட சீன வரலாற்றில் மேற்கு போல மதமும் அரசியலும் தொட்டுக்கொள்ளவே கூடாது என்ற நிரந்தர பிரிவினையோ அல்லது இஸ்லாமிய நாடுகளைப்போல அரசியலும் மதமும் ஒன்றாக கலந்து நிற்பது போலவோ சீனாவில் இல்லை. அதேநேரத்தில் அரசியல்தான் மதத்தைவிட உயர்ந்ததாக ஏற்கப்பட்ட சமூகத்தினர் நாங்கள்  என்ற விளக்கம் ஜூவோவிடம் கிடைக்கிறது.

கிறிஸ்துவம் என்பதற்கு அங்கு 1000 ஆண்டுகள் வரலாறு இருந்தாலும் 14 ஆம் நூற்றாண்டில்தான் அம்மத தாக்கம் சமூகத்தில் நுழையத்துவங்கியதாகவும், சிலர் மன்னர்களின் நட்பை பெற்று அம்மதம் கால் ஊன்றியதாகவும் அறிகிறோம். 17 ஆம் நூற்றாண்டில் சீனா கத்தோலிக்கர்கள் கன்பூசியன் செல்வாக்கில் இருப்பதை கிறிஸ்துவ மதபோதகர்கள் பிரச்னையாக பார்த்தனர். பிரச்னை ரோம் போப்பாண்டவர்வரை சென்றது. அங்குள்ள நிலைமைகளுக்கேற்ப கத்தோலிக்கர் கன்பூசியன் சிந்தனைகள ஏற்றால் அதை பெரிதாக்கவேண்டாம் என வாடிகனால் அறிவுறுத்தப்பட்டது.

காங்ஜி  மாமன்னர் இங்குள்ள ஆட்சிக்கு கத்தோலிக்கர்கள் விசுவாசமாக இருக்கவேண்டுமே தவிர போப்பிற்கு இருக்கக்கூடாது என்ற தடையைப் போட்டார். மிஷனரிகளுக்கு தடை என்றார். பேராசிரியர் ஜீவோ இது குறித்து விளக்கும்போது 19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துவத்தை அந்நிய மதம் என சீனர்கள் கருதும் நிலை ஏற்பட்டதென்கிறார். அதுவும் இந்த வாசகம் மக்களிடம் பற்றியிருந்ததாம். ” One more Christian means one less Chinese". பண்டைய கலாச்சார பின்னணிகொண்ட சமூகங்களில்  கிறிஸ்துவத்தின் வளர்ச்சியும் போராட்டமாகவே இருந்துள்ளது போலும்.

 சியாங்காய் ஷேக் சில தளர்வுகளை செய்தார். தன்னை கிறிஸ்துவர் என்று அவர் அழைத்துக்கொள்ள தயங்கவில்லை. சீனா கம்யூனிஸ்ட் கட்சி அவருடன் போராட்டம் நடத்திக்கொண்டிருந்ததை நாம் அறிவோம். அக்கட்சி 1945ல் தனது விதிகளில் மத சுதந்திரம் குடிமக்களுக்கு  தரப்படும் என்றது. இது மாவோ தலைமையில் இருந்த காலம் என்பதை அறிவோம். சீனா புரட்சிக்கு பின்னரும் இந்த விவாதம் தொடர்ந்தது. கிறிஸ்துவ மிஷனரிகளை என்ன செய்வது..  self supporting- self governing- self propagating  என்று  இருக்கும்வரை சீனா மக்கள் குடியரசு அனுமதித்தது. அமெரிக்க நிதி சீனாசர்ச்களுக்கு நிறுத்தப்பட்டதாகவும் அறிகிறோம்.

சீனா கத்தோலிக்கர் எவரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தரக்கூடாது என்ற தாக்கீது ரோமிலிருந்து 1947-49வரை போய்க்கொண்டிருந்தது. 1950ல் சீனா கத்தோலிக்க மன்றம் பிஷப்பிற்காக பெயர்களை அனுப்பியபோது போப்பின் விமர்சனத்திற்கு அச்சபை ஆளானது. நீங்கள் எவரும் கத்தோலிக்கர்கள் இல்லை என்ற செய்தி வந்ததாம். 1957க்குப்பின் போப் அனுமதி என்பதையெல்லாம் பெறாமல் தங்கள் மத நடவடிக்கைகளை சீனா கத்தோலிக்க சபை சொந்த நிர்வாகம் மூலம் தகவமைத்துக்கொண்டதாம்.

 கலாச்சார புரட்சி காலத்தில் எந்தவித மத சுதந்திரமும் இல்லாமல் போனது. பின்னர் வந்த சீனத்தலைமை நிலைமைகளில் மாற்றத்தை உருவாக்கினர்-  religious renaissance- religious revival  என்பன பேசுபொருளாக்கப்பட்டன. 1983ல் போப்பாண்டாவர் முன்முயற்சியாலும் சீன அரசாங்க ஒத்துழைப்பாலும் வாடிகன் தொடர்புகள் மீண்டும் உருவானது. அவ்வப்போது வேறுபாடுகள் வருவதையும் ராபர்ட் லாரன்ஸ் சொல்கிறார்.

2006ல் அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டருடன் சீனாசாரா மத விவகார அமைச்சக டைரக்டர் யி ஷியாவென் சீனா பைபிள் கண்காட்சியில் கலந்துகொண்டதைப் பார்க்கிறோம். யி கம்யூனிஸ்ட் யூத் லீகில் பணியாற்றியவர். 1990களில் பல இடங்களில் கட்சி விசுவாசத்தைவிட மதப்பற்றுடன் ஏராள இளைஞர்கள் இருந்து வருவதை அவர் கண்ணுற்றார். அதிர்ச்சியுடன் அவர் இதை கட்சிக்கு எடுத்துரைத்தார் என்கிறார் ராபர்ட்.

இளம்வயதில் அவர்கள் சமயத்தை சரியாக புரிந்துகொள்ளமுடியுமா- புரிந்துகொண்டார்களா என்ற கேள்வியை யீ எழுப்பினார். தொடர்ந்து மதம் குறித்த சிறு கட்டுரைகளை அவர் எழுதிசிறுகட்டுரைக்காரர் என்ற கேலிப் பெயரையும் பெற்றாராம். மிக முக்கிய கேள்விக்கு நாம் கூட்டாக பதிலைக் காணவேண்டும் என்றார் யி.  How Religion is compatible with socialist society, and how to cultivate a correct view of  religion-  இது பெரிய சவாலாகியிருக்கிறதென்றார் தோழர் யி.

 கட்சியில் வரலாறு நெடுக நமது மூத்தவர்கள் மதம் என்றால் பிற்போக்கு என ஒதுக்கி சென்றுள்ளனர். அது சோசலிசம் வந்தால் போய்விடுமென நினைத்துள்ளனர். சோசலிசத்தில் மதத்திற்கு என்ன வேலை- அனைவரும் நாத்திகராகிவிடுவோம் என புரிந்திருந்தனர். மார்க்ஸ் பேசிய அபின் என்பதிலிருந்து அவர்கள் தங்கள் புரிதலை வெளிப்படுத்தினர்.

யி இதை இப்படி விளக்கினார். அதாவது கலாச்சார புரட்சிக்கு பின்னர் மெதுவாக ஏற்பட்ட மாற்றம் பற்றிய விளக்கமது.  To bring order out of Chaos- a gradual revision of traditional Marxist attitudes- if we still acted on what Marx said, we would encounter great difficulties. If we still consider religion to be opium, then all  believers would be drug addicts and all clergy drug traffickers”

மேற்கண்ட யி அவர்களின் விமர்சனம் சற்று கடுமையாகவும் கேலி தொனியிலும் அமைந்துள்ளதைப் பார்க்கிறோம்.

டெங்ஷியோபிங் தன் காலத்தில் மதங்களை ஒழுங்குபடுத்த நிர்வாக சக்தியை பயன்படுத்த வேண்டாம். அதேபோல் மதங்கள் தங்கள் மாயா விநோதங்களை பரப்புவதை அனுமதிக்கவும் வேண்டாம் என்றார். ஜிம்மி கார்ட்டரும் டெங்கும் சந்தித்த போது கார்ட்டர் மூன்று முக்கிய கேள்விகளை டெங்கிடம் வைத்தார். டெங் உடனே பதிலளிக்காமல் மறுநாள் பதிலைத் தந்தார். சீனாவில் மக்களுக்கு மதச் சுதந்திரம் உண்டா- கண்டிப்பாக  என்பது டெங் பதில். கிறிஸ்துவர்கள் பைபிளை அச்சடிக்க விநியோகிக்க சுதந்திரம் இருக்கிறதா- ஆமாம் இருக்கிறது டெங் பதில். மதமாற்றம் செய்திட மிஷனரிகளை அனுமதிப்பீர்களா- அது முடியாது என்பது டெங் சொன்ன பதில். இதை கட்சி அதிகாரபூர்வமாக எடுத்துக்கொண்டதோ இல்லையோ டெங் பதில் மூலம் கிறிஸ்துவம் தொடர்பான பிரச்னைகளுக்கு உயர் மட்ட பதில் கிடைத்ததாக யீ இதை விளக்கினார்.

கட்சியின் பொதுவான மார்க்சிய புரிதலான சோசலிசம் வளர வளர- அதாவது மக்களின் பொருளாதார தேவைகளின் நிறைவேற்றம் அதிகரிக்க மதத்தின் அவசியம் குறையலாம் என்பதை சீனகட்சியும் சமூகமும் முதல் 25 ஆண்டுகளில் சோதித்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியான புள்ளிவிவரங்கள் கிடைத்தன. பொருளாதார தேவைகளின் பூர்த்தியால் மதப் பிடிமானம் குறையவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

1995ல்சீனா முஸ்லீம்கள் தொடர்பான பிரச்னை ஒன்றை எதிர்கொண்டது. சீன நாவல் ’மங்கி கிங்’ என்பதில் ஷு பா ஜியி என்பது பன்றி உருவ பாத்திரமாம். முஸ்லீம்களை தொடர்புபடுத்தி  சில ஜோக்குகள் உலாவியதால் பிரச்னை உருவானது. பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் முஸ்லீம்கள் இறங்கினர். அவர்கள் உணர்விற்கு மதிப்பளித்து சீன பத்திரிகை எடிட்டர்கள் சிலர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து நிலைமைகளை சீராக்கியது. அதேபோல் தொலை காட்சி நிகழ்வு ஒன்றில் 100 குழந்தைகள் பன்றித் தலைகளுடன் நடனம் என்ற போது அந்தக் காட்சியை  long shot களில் காட்டி முஸ்லீம் மக்கள் உணர்வு பாதிக்காமல் பார்த்துக்கொண்டனர்.

இமாம் ஒருவர் சீனாவுடன் யுத்தம் எனப் பேசியபோது சீனா இஸ்லாமியர் அமைப்புகளை அழைத்து தோழர் யி பேசி குரான் குறித்த விளக்கமான புத்தகம் ஒன்றை இமாம்கள் கூடி எழுத வேண்டிக்கொண்டார். அந்த புத்தகப்படி அடுத்து வருகிற ஆயிரக்கணக்கானவர்கள் குரான் பயிற்சி எடுக்க வழிவகுக்கப்பட்டது. அந்த புத்தகத்தில் தேர்ச்சி பெற முடியாதவர் இமாம் ஆகமுடியாது என்று கூட நிலைமை உருவானது.

சின் சியாங் பகுதியில் UYGHAR Muslims  மீது மனித உரிமை மீறல்களை சீனா செய்கிறது என்பதை மேற்கு பத்திரிகைகள் எழுதிவருகின்றன. 2015களில்தான் நிலைமைகள் மோசமாயின என்றாலும் 2000லேயே இந்தப்பிரிவு முஸ்லீம்கள் கட்டாய உழைப்பு முகாம்களில் மோசமாக நடத்தப்படுவதாக தகவல்கள் கசிந்தன. ராபர்ட் புத்தகம் இது குறித்து ஏதும் பேசவில்லை.

மதம் என்ற பெயரில் எந்த மதத்தினருக்கும்  underground activities நடத்த உரிமையில்லை என்பதை சீன நிர்வாகம் தெளிவு படுத்தியது. குறிப்பாக சர்ச் தொடர்பான பிரச்னையில் இது சொல்லப்பட்டது. அனைத்து மத நிறுவனங்களும் அங்கு ரிஜிஸ்டர் செய்யப்படவேண்டும் என்பதை நிபந்தனையாக்கினர்.

1999ல் சீனா அரசாங்கம் வேறு ஒரு அனுபவத்தையும் பெற்றது.  Falun Gong    எனும் சமயப் பிரிவினர் 10 ஆயிரம் போதகர்கள் பீகிங்கில் கூடி அமைதியான தியானத்தில் ஈடுபட்டனர். அது ஒருவகை போராட்டமாக அமைந்தது. அவர்கள் பிரிவின் பொருள் தர்ம சக்கரப்படி வாழ்வு நடக்கட்டும் என்பதாகும். அந்நிய பத்திரிகைகள் இந்த ஃபாலன் பிரிவில் 70 மில்லியன் உறுப்பினர்கள் என்கிற தகவலை வெளியிட்டனர். அமைச்சகத்தின் அதிகாரபூர்வ  சமரசக்காரர்கள் தியானத்தில் அமர்ந்தவர்களிடம் குறை கேட்டு ஆவண செய்ய வாக்குறுதி தர நேர்ந்தது.

அப்போது அதிபர் ஜியாங் ஜெமின். எப்படி நமக்கு அவர்கள் ஆயிரக்கணக்கில் கூடும் தகவல் தெரியாமல் போனது என்பதை ஆச்சர்யமாக சக அதிகாரிகளிடம் அதிபர் வினவ வேண்டிய நிலை ஏற்பட்டது. எப்படி அறிவு ஜீவிகள் என நாம் கருதும் பலர் அந்த மதப் பிரிவில் சேரமுடிந்துள்ளது என்பதும் ஜியாங் கேள்வியாக இருந்தது. கட்சியின் சித்தாந்த வேலைகளில் தொய்வு என கட்சி இதைக் குறித்துக்கொண்டது.

பின்னர் பொதுபாதுகாப்பு அமைச்சரகம் இந்த மதப்பிரிவை சட்டவிரோத ஸ்தாபனம் என அறிவித்தது. அதன் தலைவராக இருந்த லி ஹோங்ஷிக்கு கைது உத்தரவும் பிறப்பித்தனர். மூட நம்பிக்கைகளை விதைத்து மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டிற்கு அவர் உள்ளானார். அந்த பிரிவின் பல முக்கியஸ்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த மதப்பிரிவினர் அநேகமாக ஒடுக்கப்பட்டுவிட்ட நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் ஜியாங் மதப்பிரச்னையை தீவிரமாக எடுத்துக்கொண்டார். 2001ல் மதப்பிரச்னைகள் குறித்த மூன்று நாட்கள் தேசிய மாநாடு ஒன்றைக் கூட்டச் செய்தார்.

 1997ல் அவர்கள் சொன்ன புள்ளிவிவரப்படி புத்தம், தாவோயிசம், இஸ்லாம், கத்தோலிக்கர், பிராட்டஸ்டெண்ட் என முக்கிய 5 மதங்களில் 10 கோடிபேர் பின்பற்றுபவர்களென இருக்கலாம் என்றனர். அரசு சாராத அமைப்புகள் புத்தம் சார்ந்தவர் மட்டுமே 10 கோடி, தாவோ 5 கோடி, 2 கோடி இஸ்லாமியர்,  80 மில்லியன் கிறிஸ்துவர்கள் இதில் 10 மில்லியன் கத்தோலிக்கர்கள் என்றனர்.

தோழர் ஜியாங்கிடம் சில உண்மைகளை உணரவேண்டும் என்ற கருத்து உருவானது. மதப்பற்றாளர்கள் தேசபக்தர்களாகத்தானே இருக்கிறார்கள்- மதம் என்பதை அதன் சக்தியை நாம் அங்கீகரிக்கவேண்டும்,  அதை நேர்மறையாக பார்க்கவேண்டும். ஆனால் கட்டுப்பாடு என்பதை விட்டுவிடமுடியாது என்ற கருத்து பலமானது.

  Ruling the Country by Virute  என ஜியாங் பேசத்துவங்கினார். இந்த மாற்றம் அவரிடம் ஏற்பட்டதாக ராபர்ட் லாரன்ஸ் சொல்கிறார். 2001ல் அதிபர் புத்த கோயிலுக்கு சென்று அங்கு பிக்குகளுடன் உரையாடினார். ஆனால் அவையெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டால்தான் ஆட்சி நிலைக்கும் என்ற நிலை அங்கில்லை. இளைஞர்களிடம் மதம் குறித்த அம்சத்தை ஒழுங்காற்று செய்யுமாறு பிக்குகளிடம் அவர் வேண்டிக்கொண்டார். சமூக ஒழுங்கிற்கு எப்பக்க ஆதரவையும் இழக்கக்கூடாது என அவர் கருதினார்.

1950களில் உழைத்து களைக்கும்போதெல்லாம் தன் உடலை சீராக்கிக்கொள்ள தியானம் செய்ததை அவர்களிடம் அதிபர் நினைவு கூர்ந்தார்.  Meditation can lead one to serenity என அவர் சொன்னதாக ராபர்ட் பதிவு இருக்கிறது. மதங்கள் குறித்த மாநாட்டிலும் நம்பிக்கைகொண்டவர்கள் சோசலிசத்திற்கும் மதத்திற்குமான நல்லுறவை வளர்க்க வேண்டிக்கொண்டார் ஜியாங்.

வேறு ஒன்றையும் அவர் மாநாட்டில் தெளிவாக்கினார்  Asking religions to adapt to socialism does not mean we want religious believers to give up their faith"- No one will be allowed to abuse religion   to sabotage Party, socialism or national security  என்ற எச்சரிக்கையையும் அவர் தந்தார்.

ஜியாங் மதம் குறித்த தன் பார்வைக்காக இடது தாக்குதல்களை சந்திக்க நேர்ந்தது.  accommodation with religion yet another Jiang's anti Marxist revisionism  என்ற தாக்குதல் வந்தது. தோழர் யி ஷியாவன் இந்த நிகழ்வுகளை யெல்லாம் சொல்லும்போது பெருமூச்சுடன்  socialism must tackle religion  என்றார்.

யி ஷியாவன் வேறு ஒரு உரையாடலையும் தந்தார். மார்க்ஸ் மதம் குறித்து அதிகம் பேசவில்லை என்றால் நாம் பேசுவோம் என ஜியாங் சொன்னராம்-  see how to leverage the positive roles  என்பது ஜியாங் வாதமாக இருந்தது.  Religion should Coexist with Communism  என கட்சியின் ஆக உயர் பொதுச் செயலர் சொன்னதை பொலிட்ப்யூரோ ஏற்கவேண்டுமே- அவர்களில் சிலர் ஜியாங் தனது உரையில் அப்படி குறிப்பிட்டிருக்கக்கூடாதென்றனர். ஏங்கெல்ஸ் பேசியதை நினைவு கூர்ந்து யீ சொன்னார்.  As long as there are problems, there will be religion.   அப்படியானால் ஜியாங் சொன்னதில் தவறில்லை என்ற வாதமும் இருந்தது.

 சீனக் கட்சி சில முடிவுகளுக்கு வந்தது. சீனாவில் மதநம்பிக்கை கொண்டவர்கள் சுதந்திரமாக செயல்படலாம். ஆனால் அந்நிய ஒத்துழைப்பு பெறக்கூடாது. சோசலிசத்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு, நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக மதம் பயன்படுத்தப்படக்கூடாது. அந்நிய நாடுகளுடன் பரஸ்பர பரிமாற்றங்கள் நடக்கலாம். சோசலிச கட்டுமானத்திற்கு உதவியாக மதம் இருந்திடல் வேண்டும். இவையெல்லாம் சீனா அரசியலமைப்பு விதிகளில் இடம்பெற்ற கருத்துக்கள்தான்.

 சந்தைப் பொருளாதாரத்தில் நம்பகத்தன்மை காசு சம்பாதிப்பதற்காக போய்விடக்கூடாது. ’நன்னெறி’ சந்தைப் பொருளாதாரத்தில் செயல்படவேண்டும். எனவே அடுத்து எழுந்த கேள்வி  How do we combine business sense and trustworthiness in one person?  வியாபார திறமையுடன் நன்னடத்தை நம்பிக்கைத்தன்மையை எப்படி இணக்கப்படுத்துவது? நல்ல கிறிஸ்துவ வியாபாரி நினைப்பதுபோல என்னை கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பன போன்ற ஒன்று உதவுமா?

 சீன சமூகம் அடுத்த 20 ஆண்டுகளில்    religion will be integrated into society and positively affect its cultural and moral functioning.. Obey the country , the country will treat you well and Mix with the culture and culture will comfirt you என்பதை தோழர் யி விழைந்தார்.

  யி ஷியாவன்  அமெரிக்க சென்றபோது உங்கள் மதம் என்ன என்ற கேள்விக்கு  ’Mr Director of Religious Affairs’  என்ற பதிலைத் தந்தார். அது விமர்சிக்கப்பட்டபோது விளையாட்டு டைரக்டர் போடுகிறோம்- அவர் விளையாடுகிறாரா- புகையிலை கட்டுப்பாட்டு டைரக்டர் போடுகிறோம் அவர் புகையே பிடிக்கக் கூடாது என எதிர்பார்க்கிறோமா என எதிர் கேள்விகளை யி எழுப்பினார். எனது வேலை மதங்கள் பல உள்ள சமூகத்தில் பதட்டம் இல்லாமல் அமைதியை உருவாக்குவது- நான் ஏதாவது ஒரு மதம் சார்ந்தவன் என்றால் மற்ற மதக்காரர்கள் எனது பாரபட்சம் பற்றி யோசிப்பார்களே என கேள்வி எழுப்பினார் யி.

சீனாவில் புரட்சிக்குப் பின்னரிலிருந்து  50 ஆண்டுகளில் கட்சி நிலைப்பாடு மூன்று மாற்றம் பெற்றதாம். ஆரம்பத்தில் மதம் என்பதன் மீது சந்தேகப்பார்வை. சோசலிசம் வந்து முன்னேற்றம் வந்தால் அது பிரச்னையாக இருக்காது என்ற பார்வை. இரண்டாவதாக மதம் என்பதை கலாச்சார அம்சமாக பார்க்கும் பார்வை. அதனால் சமூகத்திற்கு விரோதமாக மதம் போவது என்பதை அவர்களால்  தடுக்கமுடிந்ததாம். அடுத்து வந்த மூன்றாவது பார்வை மதத்தை மதமாக பார்க்கும் பார்வை-  Religion as Religion. Recognising spiritual potential of common people  என்றனர். அவசியமானால் மதத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கலாம் என்றளவு தளர்வைத் தந்தனர்.

லெனின் மதம் குறித்து பேசியதையும் அவர்கள் கணக்கில் கொண்டதாக தெரிவித்தனர். சீன சமூகம் ’கம்யூனிசம் என்பதையும்’  ’மதம் என்பதையும்’ இருவேறு நம்பிக்கைகளாக எடுத்துக்கொண்டு  முடிந்தவரை முரண் இல்லாமல் தகவமைத்துக்கொள்ள விழைகிறது என  பேசினர்.

 இந்த புத்தகத்தில் 2009 வரை நடந்த விவாதங்கள்தான் நமக்கு கிடைத்துள்ளன. அதிலும் கிறிஸ்துவ,முஸ்லீம் சில முரண் அனுபவங்கள் தொட்டுக்காட்டப்பட்டுள்ளன. சீனாவில் அரசாங்கம் பெரு மதங்களான புத்தம் அதன்  பிரிவுகள்- தாவோயிசம் ஆகியவற்றிற்கும், பிற மதங்களான கிறிஸ்துவம், இஸ்லாமிற்கும் வேறுபாடுகளை காட்டவேண்டிய கலாச்சார நிர்பந்தங்களுக்கு ஆளாகியிருக்கிறதா- மத சடங்குகள்- பண்டிகைகள்- வழிபாட்டுமுறைகளை எப்படி அனுசரிக்கின்றனர் போன்ற விவரங்களை ராபர்ட் ஆய்வில் நம்மால் பெறமுடியவில்லை.

இந்து மதம் குறித்து ராபர்ட் எந்த தகவலையும் எழுதவில்லை.மத்தியகால சீனாவில் இந்து மதம் சீனாவில் இருந்துள்ளது என அறிகிறோம். சீன மொழியில் ஓம் என்பது எழுதப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.  அங்கு யோகிக் முறை இந்துயிசம் சென்றதாகவும் சொல்கின்றனர். சிவா விஷ்ணு, காளி  போன்ற தெய்வங்களை சீனர் அறிந்துள்ளனர். அங்கு சிலரிடத்தில் இங்கிருந்து போன தமிழ் வணிகர்கள் மூலம் அவை சென்றிருக்கலாம். ஹாங்காங் பகுதியில் தமிழ் உழைப்பாளர்கள் பல்லாண்டுகளாக இருந்த நிலையில் அங்கு ஏதோவொருவகையில் இந்து கடவுள்கள் சென்றிருக்கலாம். குவாங்சு மியுசியத்தில் நரசிம்மர் சிலை இருக்கிறதாம். அப்பகுதியில் சற்று இந்துமதம் காணப்படுகிறது என அறிகிறோம். சீனாவின் mythological Sun Wokong  கிட்டத்தட்ட அனுமான் போன்ற ஒன்றென்கின்றனர். இந்திய யோகா மற்றும் ரிஷி மரபுகளை சீனர்கள் அறிந்த செய்தியை ஆர்தர் வாலி சீனாவின் தாவோ டே சிங் மொழிபெயர்ப்பில் எழுதியுள்ளாராம். 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று குவாங்சு பகுதியில் சிவன் குறித்த தமிழ் சீன  இருமொழி வாசகங்களுடன் இருக்கிறதாம்.

 அடுத்து கடந்து போகியுள்ள 12 ஆண்டுகளில் புதிய அனுபவங்கள் அடிப்படையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி பேசியிருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் அடிப்படைகளை விடாமல் சோசலிசம்- கட்சி- பாதுகாப்பு என்ற அம்சங்களில் சமரசம் இல்லாமல் சில தளர்வுகளை செய்து மதம் சார்ந்த விவகாரங்களை கையாண்டு வருகின்றனர் என்ற புரிதலை இக்கட்டுரை நமக்கு தரலாம்.

 

பிற்சேர்க்கை:

1982ல் எழுதப்பட்ட சீனா அரசியலமைப்பின் பிரிவு 36 மத சுதந்திரம் பற்றிப் பேசுகிறது. அதன் ஷரத்து

Article 36 Citizens of the People’s Republic of China enjoy freedom of religious belief.

No state organ, public organization or individual may compel citizens to believe in, or not to believe in, any religion; nor may they discriminate against citizens who believe in, or do not believe in, any religion.

The state protects normal religious activities. No one may make use of religion to engage in activities that disrupt public order, impair the health of citizens or interfere with the educational system of the state.

Religious bodies and religious affairs are not subject to any foreign domination

கீழே தரப்பட்டுள்ள வடிவம் 2018 மார்ச்சில்  National People's Congress   ஏற்கப்பட்ட சீனா அரசியல் அமைப்பு சட்டத்திலிருந்து.. compel- coerce, protects- shall protect , are not subject to – shall not subject to , foreign domination – foreign forces என வார்த்தைகள் மாறியுள்ளன.

Article 36 Citizens of the People’s Republic of China shallenjoy freedom of religious belief.

No state organ, social organization or individual shall coerce citizens to believe in or not to believe in any religion, nor shall they discriminate against citizens who believe in or do not believe in any religion.

The state shall protect normal religious activities. No one shall use religion to engage in activities that disrupt public order, impair the health of citizens or interfere with the state’s education system.

Religious groups and religious affairs shall not be subject to control by foreign forces.

 

12-7-2022

No comments:

Post a Comment