Skip to main content

தமிழ் நெறியும் லெனினியமும்

 

தமிழ் நெறியும் லெனினியமும்

 

குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை 12ல்தமிழ் நெறியும் லெனினியமும்எனும் சிறு பகுதியுண்டு. குன்றக்குடி அடிகளார் லெனினியம் என்பதை எதையும் அறிவின் அடிப்படையில் எதார்த்த உணர்வுடன் ஆராய்ந்து முடிவெடுப்பது என்கிறார். எந்த ஒன்றையும் அறிவில் ஆராய்ந்து அனுபவரீதியாக முடிவெடுக்க வேண்டுமென்பது லெனினிய அடிப்படை. விரிந்தும் பரந்தும் கிடக்கிற உலகத்தை இயற்கையானதாக லெனினியம் பார்க்கிறது. இந்த உலகத்தைப் படைத்த இன்னொரு சக்தி என்பதை அது நம்பவில்லை.



இந்த உலகம் ஒரே மாதிரியாகவும் இல்லை. முழுமைபெற்றுப் பக்குவமாக இல்லை. மாறி வருகிறது. இன்ப துன்ப கலப்பு இருக்கிறது என லெனினியம் புரிந்துகொள்கிறது என்கிற தன் புரிதலை தருவார் அடிகளார்.

தமிழ் இலக்கிய மரபு பல குரல் கொண்டது. உலகத்தைப்பற்றிய கருத்தில் ஒருமைப்பாடில்லை. ஆனாலும் உயிர் வர்க்கங்கள் கடவுளால் படைக்கப்பட்டவையல்ல என்று தமிழ்ச் சமய மரபு அறுதியிட்டுக் கூறுகிறது என்கிறார் அடிகளார். இதற்கு துணையாக ஐங்குறுநூறு, புறப்பொருள் வெண்பா பாடலைக் காட்டுகிறார். அதாவது இறைவனின் தண்ணளியின் நிழலில் தானே தோன்றிய உலகம். கல்தோன்றி, மண் தோன்றி என பரிணாம வளர்ச்சியில்நானே தோன்றிற்று’ எனும் புரிதலை அடிகளார் விளக்குகிறார். அப்பரிடமிருந்தும் உலகமே இறைவன் என்பதை எடுத்துக்கொண்டுஇறைவன் படைக்கப்பட்டதில்லை எனில் உலகம் படைக்கப்பட்டதில்லை’ எனப் பொருள் சொல்வார் அடிகளார்.

உலகம் படைக்கப்பட்டதன்று இயற்கையானது என்கிற தமிழ் மரபுக்கும் லெனினியத்திற்கும் முரண்பாடின்மையை அவர் சுட்டிக்காட்டுவார்.

 தமிழ் மரபுடன் லெனினியம் எங்கு முரண்படுமென்றால் உயிர் பற்றிப் பேசும்போது என்கிறார் அடிகளார். உடலுக்கு அப்பாற்பட்டு உயிர் என்பதை லெனினியம் ஏற்காது. ஆனால் தமிழ் மரபில் உயிர் எனும் தனிப்பொருள் ஏற்பு இருக்கிறது. உடம்பும் உயிரும் வெவ்வேறாக காட்டும் பார்வை தமிழ் மரபில் உள்ளது. இதை நிறுவுவதாக அடிகளாரின் இக்கட்டுரை அமைந்துள்ளது.

 அடிகளார் இந்த வேறுபாட்டை மேலும் சொல்வார். உடம்பே உயிரல்ல உடம்பின் இயங்கு சக்தியும் உயிரல்ல. உடம்பில் தங்கியிருந்து பணிகளைச் செய்வது உயிர். உயிர்கள் நிலைப்பெற்றவை. பிறப்பும் இறப்பும் இல்லை. நிலைபேறான தன்மையுடையன. உயிர் உடம்பினைக் கொண்டு தன்னுடைய மேம்பாட்டுக்குரிய கடமைகளைச் செய்கின்றது என்பதே தமிழ்க் கருத்து என அடிகளார் இதை உறுதிப்படுத்துவார்.

 உயிர் என்றும்உள்பொருள்’ என்பது தெளிவு. உடலுக்குஉயிர்த்தன்மை’ உண்டெனக்கூறும் நெறி தமிழ் நெறியல்ல என்பார்.

 உயிர் உண்டென்ற கொள்கை பெளத்தத்திற்கு இல்லை. அது அறிவை ஒத்துக்கொண்டது. உயிரெனத் தனியே வேறொரு பொருளில்லை என்றது பெளத்தம். புலனறிவில் பொறிகள் தமக்கு ஒதுக்கப்பட்ட களங்களிலும் ஒரு வழிப்பட்ட குறையுடைய அறிவையே பெற்றுள்ளன. செவி ஒலியைக் கேட்கும் . கண் கேட்காது. பூரணத்துவம் இல்லை. உயிர் ஒன்றே இந்த பொறிகளால் பெறும் இன்பத்தை முற்றிலும் முழுவதுமாக ஈடுபட்டு அனுபவிக்கிறது என பொறிகள் ஒவ்வொன்றின் குறைத்தனமையை அடிகளார் பேசுவார்.

 ஏகான்ம வாதிகள் அதாவது ஓருயிர் நெறியினர் ‘அறிவுடைய உயிர் ஒன்றே, அது உடம்புகள் தோறும் வேறு வேறாய்க் காணப்படுகிறது”’ எனும் கொள்கையாளர். ஆனால் அடிகளாரைப் பொறுத்து ‘உயிர் ஒன்றே என்கிற இக்கொள்கை  சிறிதும் பொருந்தாது எனக் கருதுகிறார்.

உயிரின் சேர்க்கையின்றி உடம்பு ஒரு வினை செய்ய இயலாது என்கிறார் அடிகளார். அதேபோல்உயிர்’ உடம்பின் சேர்க்கையின்றி என்ன வினையை செய்யும் என்பதும் கேள்வியாக வரவில்லையா. அடிகளார் இந்த எதிர் கேள்வியை எழுப்பாமல் போகிறார் .

நமது உலகாயுதவாதம் இந்த உயிர் கொள்கையில் லெனினியத்தின் கொள்கைகளுடன் உடன்பாடு உடையன என்பதை அடிகளார் சொல்வார். அதாவது உடலின் வேறாய் உயிர் ஒன்று இல்லை என்பதில் அவர்கள் உடன்படுவர். கண்ணால் காண்பதே மெய் என்பதை அவை ஏற்றுள்ளன. அனைத்துலகத்தையும் பொறியால் கண்டு உணர்தல் இயலாததாகும். பல்வேறு இயல்புடைய உலகிடை பொருள்களை அனுபவித்தலும் இயலாது என்பது அடிகளார் தரும் மறுப்பு.

அடிகளார் உயிர்களின் உயிர்ப்பாற்றல் என்பதில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டுவார். உயிர்வர்க்கத்திடையில் இந்த உயிர்ப்பாற்றல் அளவில் கூடியும் குறைந்தும் இருப்பதைச் சொல்வார். இந்த உயிர்ப்பாற்றல் வேறுபாடுகளை எல்லாம் வெறும் சுபாவம் என்று கூறமுடியுமா எனக் கேட்பதுடன் அவர் இந்த ஆய்வை நிறுத்துகிறார்.

அடிகளார் போலவே சில சிந்தனையாளர்கள் இயக்கவியல், வரலாற்று பொருள்வாதத்திற்கு அப்பால் எனும் சிந்தனையை பேசாமல் இல்லை. இங்கு  அடிகளார் அந்த பதங்கள் எதையும் பயன்படுத்தாமல் விவாதித்து செல்வதைப் பார்க்கிறோம். அதேபோல் ஆன்மா எனும் பதத்தை அவர் எங்கும் பயன்படுத்தவில்லை. ஆன்மா எனும் தத்துவத்திலிருந்து இந்த தமிழ்நெறி எப்படி மாறுபடுகிறது என்பதையும் அடிகளார் இதில் விவாதிக்கவில்லை.

உடலைச் சாராத சுதந்திரமான சுயேட்சையான ஒன்று உயிர் என்பதை மார்க்சியர் ஏற்கமாட்டார்கள். பருப்பொருளைச் சாராமல் அந்த உயிர் எனும் சாரம்சத்திற்கு தனியான சுதந்திர வாழ்நிலை இருப்பதை மார்க்சியர் ஏற்பதில்லை. ஷெல்லிங் போன்றவர்கள் தனிமுதலான ஆன்மாவின் சுயதியானத்தை எப்பவோ பேசிவிட்டனர். பாயர்பாஹ் இருப்பது என்பதை சிந்தனையில் மட்டுமே அல்லாமல் இருக்கிறது என்று நிரூபித்தலில்தான் இருக்கிறது என பேசிவிட்டார்.

இயக்கவியலில் இறுதியானது- நிரந்தரமானது- அழிவே இல்லாதது என ஏதுமில்லை என்பர் மார்க்சியர். எப்போதும் உள்பொருள் என இயக்கவியல் எதையும் ஏற்பதில்லை. உயிர்கள் வாழ்ந்திட உதவும் சூழலும் இல்லாமல் போகும் நிலை வரலாம் என்றும் அது கருதும்.

உடலும் உயிரும் வெவ்வேறு என்கிற நம்பிக்கை தமிழ்நெறி தத்துவம் என  நிறுவுவதுடன் அடிகளார் நிறுத்திக்கொள்கிறார். வெவ்வேறு உயிர்ப்பாற்றல் கொண்ட வெவ்வேறு உயிர்கள் ஏதோவொரு உடலை தரிக்காமல்/ உடல்மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் எங்கு தனித்து தன் உயிர்ப்பாற்றலைக் தனது பணிகளைக் காட்டும் என்ற கேள்விக்கு என்னால் அடிகளாரிடம் இந்த கட்டுரையில் பதிலைக் காணமுடியவில்லை.  

அடிகளார் நிறுவுவதை ’என்றும் உள்பொருளாகிய உயிர்’ தனக்கான பணிக்கான உடல்களை பல வடிவங்களில் தேடிக்கொள்கிறது என தமிழ்நெறியாக முன்வைக்கிறார் என புரிந்துகொள்ளலாம்.

 

 




Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு