பாஜக
வளர்ந்த கதை
இக்கட்டுரை இரு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதியில் பருந்துப் பார்வையில் தனது உத்திகள் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி
எவ்வாறு உருவானது என்பதைப் பேசுகிறது. பாஜக பிறந்து 40 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதில்
ஏறத்தாழ 14 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை கைக்குள் கொண்ட கட்சியாக அது மாறியுள்ளது. தொடர்ந்த
காலமும் தனக்கானதே என்கிற நம்பிக்கையை அது திடமாக்கிக் கொண்டு வருகிறது.
அதன் கொள்கைகள் குறித்த விரிவான
விசாரனையல்ல இந்த கட்டுரை. அவை பலரால் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து செய்யப்படவும் வேண்டும்.
வாஜ்பாய் ஆட்சி குறித்தும், மோடியின் 2014-2022 8 ஆண்டுகள் ஆட்சி குறித்தும் செய்யப்படவேண்டும்..
இன்னும் சொல்லப்போனால் மன்மோகன் சிங்கின் ஆண்டுகள் – மோடியின் ஆண்டுகள் என்கிற ஒப்பீட்டு
ஆய்வும் கூட தேவைதான்.
பாஜக ரத யாத்திரை அரசியல் என்பதை கையில் எடுத்துக்கொண்டதை இக்கட்டுரை
சொல்கிறது. இந்திய மரபில் யாத்திரயை தனிநபர்கள் தனித்தோ கூட்டாகவோ மேற்கொண்டுள்ளனர்.
யாத்திரை என்பதன் மூலம் நாடறிதல்- தான் அதுவரை பார்த்தறியா பிற மக்களை அறிதல்- ஞானம்
பெறுதல்- ஞானம் வழங்குதல்- விவாதபரிமாற்றம் என நடந்துள்ளன. கால்களை நம்பியே அறியா பாதைகளில்
ஆபத்துக்களை எதிர்கொண்டு வழித்துணை இருந்தாலும் இல்லாவிடினும் இறையையோ- இயற்கையையோ நம்பி யாத்திரைகள் நடந்துள்ளன,
கிடைத்ததை உண்டு எங்கு வேண்டுமானாலும் உறங்கி உடல் துன்பங்களை பொருட்படுத்தாது நடந்தவை
அந்த யாத்திரைகள்.
ஆனால் ரதயாத்திரைகள் முடியாட்சியின்-
சக்ரவர்த்திகளின் வலிமையை காட்டும் அடையாளங்கள். அவை ஆடம்பரத்தை- மன்னரின் சொகுசு பயணத்தைக்
காட்டும். ரதம் கிளம்பும்போதும் வழிநெடுகவும் அதற்கான தடபுடல்கள் எதிரொலிக்கும். சாமான்யர்கள்
தரிசனங்களுக்காக நிற்க வேண்டியிருக்கும். எப்போதும் போர் மனநிலையை அது பிரதிபலிக்கும்.
ரத யாத்திரை சாதாரண மக்களுடன் அவர்களை சமமாக பாவித்து இருபக்க உரையாடலை செய்திடும்
வடிவமல்ல. யாத்திரையின் உளவியல் என்பதிலிருந்து
ரத புறப்பாடு உளவியல் வேறானது. இரட்சகர்- கோ வருகிறார் என்பதை அது சொல்லும். அரசியல்
உரிமைப் பெற்ற குடிமக்களை- ராஜவிசுவாசம் கொண்ட பிரஜைகளாக அது கண்ணுறும். இந்த வடிவத்தை பாரம்பரியம் என்ற பெயரில் பாஜக கைக்கொண்டது.
இரண்டாவது பகுதி பாஜகவின் அமைப்புவிதிகள்
குறித்த பகுதி. ஜனசங்கத்தின் விதிகளிலிருந்து அது ஏதாவது காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டுள்ளதா-
எவற்றை அப்படியே வைத்துக்கொண்டுள்ளது என்பதைப் பற்றிப் பேசும் பகுதியது. ஜனசங்கத்தை
political
repair செய்து பாஜக என வடிவமாகியுள்ளது
என என் வாசிப்பில் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அரசியல் சரிசெய்தல் அதற்கு பலனைத்
தந்துள்ளதையும் பார்க்கிறோம்.
இக்கட்டுரையில் பாஜக வளர்ந்த விதத்தை
பேசும்போது திரு மோடியோ- அக்கட்சியோ வீழத்தவே முடியாத சக்தி என்ற எண்ணம் தேவையில்லை.
பல மாநிலத் தேர்தல்களில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பாஜகவை தேசிய அளவில்
வீழ்த்த சக்தி இருக்கிறதெனில் அது முதன்மையாக
காங்கிரசை சார்ந்தே இருக்கிறது- தவிர்த்துவிட்டு என்பதாக முடியாது என்பதை இக்கட்டுரை
உணர்த்தும். பாஜகவை வீழத்தவேண்டும் எனில் காங்கிரசை சாராமல் முடியுமா என்ற கேள்வி ஆழமாக
பரிசீலிக்கப்படவேண்டிய ஒன்று என்ற புரிதல் தேவைப்படுகிறது.
பகுதி 1 வளர்ச்சியின் பாதையில்
பாஜக
ஒருவகையில் ஜனதா சோதனை பாரதிய ஜனதா கட்சியின் பிறப்பிற்கு
காரணமானது எனலாம். ஏப்ரல் 1980ல் கூடிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு ஆர் எஸ் எஸ்
உறுப்பினர்களாக இருந்தால் அவர்கள் ஜனதாவில் இருக்கமுடியாது என தீர்மானித்தது. அடுத்த
இருநாட்களில்- ஏப்ரல் 6, 1980ல் கோட்லா மைதானம் டெல்லியில் கூடி ’பாரதிய
ஜனதா கட்சியை’ ஆர் எஸ் எஸ் காரணமாக வெளியேறிய தலைவர்கள் அமைத்தனர்.
ஜனசங்கத்தின் புதிய அவதாரமாக பாஜக பிறந்தது.
ஜனதா எடுக்கப்போகும் தீர்மானம் குறித்து முன்பே அறிந்த
ஜனசங்கத்தினர் தங்கள் தொண்டர்களை டெல்லிக்கு வரவழைத்து புதிய பெயரில் கட்சியைத்துவக்கினர்.
வாஜ்பாய், அத்வானி, நானாஜி தேஷ்முக், முரளி மனோகர் ஜோஷி, பண்டாரி, மல்கானி, குஷாபாவ்
தாக்ரே, ஜனா கிருஷ்ணமூர்த்தி, பைரன் சிங் ஷெகாவத், சுந்தர்லால் பட்வா, சாந்த குமார்
போன்ற பெருந்தலைகள் கூடித்தான் இந்த முடிவை எடுத்தனர். ராம் ஜேத்மலானி, சாந்தி பூஷன்,
சிக்கந்தர் பக்த் உடன் நின்றனர். வாஜ்பாய் தலைவராகவும் அத்வானி பொதுச் செயலராகவும்
தேர்வாயினர். ஆர் எஸ் எஸ் வழிகாட்டாமல் இது
நடைபெறவில்லை.
டிசம்பர் 1980ல் பிளீனம் பம்பாயில்
நடத்தும்போது 25 லட்சம் கட்சி உறுப்பினர்கள் என அவர்கள் அறிவித்தனர். இன்று உலகிலேயே பெரிய கட்சி என சொல்கின்றனர். பம்பாய் மாநாட்டில் 44000 பேர் பங்கேற்றனர். ’ஜனசங்கத்தின்
செக்டேரியனிசத்திலிருந்து’ விலகுவோம் என்ற குரல்கள் வந்தன.
காந்தியன் சோசலிசம்- பாசிட்டிவ் செக்யூலரிசம் என்றனர். மக்கள் மத்தியில் right of centre என்ற முகம் கூட தெரியக்கூடாது - centrist கட்சி என்கிற முகம் பதியவேண்டும் என்பதை
வாஜ்பாய் விழைந்தார்.
அந்த மாநாட்டில் அத்வானி அவர்கள்
BJP not based an ideology but idealism என்ற
சொல்லாடலை நிகழ்த்தியதையும் காண்கிறோம். ஆனால் அப்படி இலட்சியம் கொண்ட கட்சியாக அதனால்
நடந்துகொள்ளமுடியாது- கோட்பாட்டு கட்சியாகவே செயல்பட முடியும் என்பதை அங்குள்ளவர் அறிந்தேயிருந்தனர்.
1985ல் 5 ஆண்டுகள் கட்சி சோதனைக்குப் பிறகு ஜனதாவை
விட்டு வந்தது சரியா என்ற விவாதம் எழுந்தது. வாதம்- பிரதிவாதம், ஜனசங்க அனுபவங்கள்
எல்லாம் பேசி ’ வெளியே வந்தது சரிதான்’ என்ற
தீர்மானத்திற்கு வந்தனர். அக்டோபரில் நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் தீனதயாள் உபாத்யாவின் (ஜனசங் முக்கிய தலைவர்) ’ஒருங்கிணைந்த
மனிதம்’ கட்சியின்
தத்துவம் என்ற அறிவிப்பை செய்தனர். அத்துடன் கட்சி துவங்கும்போது பேசிய ’காந்தியன்
சோசலிசம்- பாசிட்டிவ் செக்யூலரிசம்’ ஆகியவற்றை
அதன் கீழிறிக்கி வைத்துக்கொண்டனர்.
ராஜிவ் ஆட்சியில் போபர்ஸ் உட்பட
50 குற்றப்பத்திரிகைகளை பாஜகவினர் வெளியிட்டனர். மகிளா, யுவ, எஸ் சி, எஸ் டி, கிசான்,
மைனாரிட்டி என 6 முக்கிய மோர்ச்சாக்காளை அமைத்தனர்.
ஏராள செல்களை உருவாக்கினர். தொழிலாளர், டாக்டர்,
மீனவர், வெளிநாட்டவர், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், முன்னாள் இராணுவத்தினர் என பிரிவிற்கு ஒரு செல் உருவாக்கப்பட்டது.
இளம் தலைவர்கள் பட்டாளம் ஒன்றை முன்னுக்கு கொணர்ந்தனர்.
வெங்கையா நாயுடு, சுஷ்மா, முக்தர் அப்பாஸ், சுசில்குமார், மகாஜன், அனந்த் குமார், ரவிசங்கர்
பிரசாத், பாபுலால், ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, உமா பாரதி என்று பலர் வளர்ந்தனர்.
1984ல் 442 தொகுதிகளில் வென்ற
காங்கிரசை, ராஜிவால் 1989ல் 197 ல்தான் வெற்றி பெற வைக்க முடிந்தது. ஜனதா 143, சிபிஎம்
33, சிபிஅய் 12 வந்தனர். 1989ல் பாஜக 85 தொகுதிகளை 11.36 சத வாக்குகளை பெற்றது. விபி
சிங் அரசிற்கு கம்யூனிஸ்ட், பாஜக இருவரும் வெளியிலிருந்து ஆதரவு என்ற முடிவை எடுத்தனர்.
1989 பாலம்பூர் தீர்மானம் என ராமஜென்மபூமியை
கையில் எடுத்தனர். அத்வானி தனது 10 ஆயிரம் கிமீ- சோம்நாத்- அயோத்யா ரத யாத்திரையை செப்
25, 1990ல் அறிவித்து சுற்றலானார். பெரும் விவாதம் கிளம்பியது. கரசேவகர்கள் உற்சாகம்
பெற்றனர். ஒவ்வொரு ஊரிலும் செங்கல் பூஜைகள் நடந்தன. அகமதாபாதில் பெரிய ஊர்வலம் ஒன்றில்
அத்வானி பேசினார். விபி சிங், முலாயம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டனர். அயோத்தியா யாத்திரை
இந்திய அரசியலின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பாஜக தரும் பதிலாக அமைந்தது.
ராமர் எதிர் பாபர், தேசியம் எதிர்
சாதி - பிற பிரிவினை பேச்சு, போலி மதசார்பின்மை எதிர் பாசிட்டிவ் செக்யூலரிசம் என எதிர்மைகளைக்
கட்டி இந்துக்களின் ஏகப்பிரதிநிதி உரிமையை அத்வானி செய்துகொண்டார். பிறர் என முஸ்லீம்கள்
அடையாளம் ஆக்கப்பட்டனர். சில இடங்களில் முஸ்லீம்கள் தன்னை எதிர்க்கவில்லை என்றும் முலாயம்
தான் எதிர்க்கிறார் என்கிற உரையாடலையும் அத்வானி செய்தார். அக்டோபர் 23, 1990ல் அத்வானி
கைது செய்யப்படவே யாத்திரை நின்றது. விபி சிங் அரசிற்கு கொடுத்த ஆதரவை பாஜக திரும்பப்
பெற்றது. ராஜேந்திர சிங், டால்மியா, மகந்த் அவைத்யநாத், சின்மயனானந்த், வாஜ்பாய் என
முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாஜகவில் சிலர் இந்த யாத்திரையை
தண்டி யாத்திரைக்கு அடுத்த வரலாற்று பதிவு எனக் கொண்டாடினர். ராமராஜ்யம் எனச் சொல்வது
இலட்சிய அரசாங்கமே என தாங்கள் மக்களிடம் கொண்டுசென்றுவிட்டதாக மதிப்பிட்டுக்கொண்டனர்.
விபி சிங் போய் சந்திரசேகர் பிரதமராக டிசம்பர்
1990ல் பொறுப்பேற்றார். காங்கிரஸ் ஆதரவுடன் இந்த ஆட்சி அமைய குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன்
ஏற்பைத் தந்தார். சந்திரசேகர் ஆட்சியும் நிலைக்காமல் 10வது நாடாளுமன்றத்தேர்தல் வந்தது.
தேர்தல் சூழலில் ராஜிவ் படுகொலை நிகழ்வும் கோரமாக நடந்தேறியது. காங்கிரஸ் 232 இடங்களைப்பெற்று
1991ல் நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றார். பாஜகவில் முரளி மனோகர் ஜோஷி தலைவரானார்.
ஜோஷி தன் பங்கிற்கு ’ஏக்தா
யாத்ரா’ என்பதை
டிசம்பர் 11, 1991 கன்னியாகுமரியில் துவங்கி
ஜனவரி 26 1992ல் ஸ்ரீநகரில் முடித்தார். அங்கு தேசியக்கொடியை பரபரப்பு சூழலில் ஏற்றினார்.
தேச ஒற்றுமை யாத்திரையை பாஜக செய்தால் - காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை ஒரே இந்தியா
என்றால் அதற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன் என வாஜ்பாய் கேள்வி எழுப்பினார். யாத்திரையின்
நாட்களில் இம்முறை காஷ்மீரை மய்யப்பொருளாக்கினர். இந்த விவாதத்தின்போது அரசியல் மதம்
உறவும் பேசப்பட்டது. ’தர்மா’ என்பதையும்
மதத்தையும் தனியாக பார்க்கவேண்டும். அவரவர் மதம் அவருக்கு. ஆனால் அரசியலில் ’நேர்மை-
நாட்டின் ஒற்றுமை’ என்பதை விரட்டாமல் ’இலஞ்சத்தை,
குற்றச்செயல்களை’ விரட்டப்பாருங்கள் என அத்வானி
அரசாங்கத்திற்கு பதில் அளித்தார்.
1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பு
எனும் கொந்தளிப்பான சூழல் நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. ஆனால் பாஜக ஓயவில்லை. மீண்டும்
1993செப்டம்பரில் நான்கு முனைகளிலிருந்து யாத்திரைகள் என்றனர். மைசூரிலிருந்து அத்வானி,
ஜம்முவிலிருந்து பைரன் சிங் ஷெகாவத், போர்பந்தரிலிருந்து ஜோஷி, கல்கத்தாவிலிருந்து
கல்யாண்சிங் புறப்பட்டனர். பல்வேறு மாநிலங்கள் வழியே அனைவரும் போபால் அடைவது என செப்டம்பர் 25, 1993ல் கிளம்பினர். இதற்கு ’ஜனதேஷ்
யாத்திரை’ எனப்
பெயர் சூட்டினர். கல்கத்தாவில் கூடிய கூட்டத்தைப் பார்த்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ’சிவப்பு
கல்கத்தாவில் காவிக்கொடி’ என எழுதியது.
இந்தியா பிரிட்டிஷாராலோ அல்லது இந்திய அரசமைப்பு
வந்ததாலோ உருவான ஒன்றல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அதற்கான உயிர்ப்பு இருந்து வருகிறது
என பாஜகவினர் இந்த யாத்திரையில் பேசினர். அதாவது the oneness is an account of
India's age old culture and heritage என்றனர்.
இந்துத்துவா என்பதால்தான் இந்துக்கள்
பெரும்பான்மையாக இருப்பதால்தான் இங்கு மதச்சார்பின்மை சாத்தியமாகிறது என புரிந்துகொள்ளுங்கள்
என்றனர் பாஜகவினர். இந்தியாவிற்கு theocracy
is alien என்பதை தாங்கள் ஏற்றே இருப்பதாகவும்
பறைசாற்றினர். 1995ல் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பும் அவர்களுக்கு கைகொடுத்தது. இந்துத்துவாவை
கலாச்சார கருத்தாக்கம் என நீதிமன்றமும் சொன்னது.
அதை குறுகிய மத அடையாளமாக புரிதல் வேண்டாம் என்றது. பாஜகவும் தனது செக்யூலர் கருத்தமைவில்
அனைவருக்கும் நீதி- ஆனால் எவரையும் தாஜா செய்வதில்லை என்றது.
இன்று பாஜக மீது என்ன குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதோ
அதை மூன்று முக்கிய அம்சங்களில் காங்கிரசிற்கு எதிராக அன்று பாஜக வைத்தது.
அ. தேசிய நலன்களை தேர்தல் ஆதாயத்திற்காக
சமரசம் செய்கிறது காங்கிரஸ்
ஆ. உடனடி அரசியல் ஆதாயத்தை முன்வைத்து
சமுக நலன்களை காவுகொடுத்து சாதியத்தில்- வகுப்புவாத உணர்வுகளில் குளிர் காய்கிறது காங்கிரஸ்
இ. ஒரு சில முதலாளிகளுக்காக நாட்டின்
பொருளாதார நலன்களை சமரசம் செய்துகொண்டு இலஞ்ச ராஜ்யத்திற்கு வழிவகுக்கிறது காங்கிரஸ்.
1996ல் நேரு இடைக்கால சர்க்கார்
அமைந்ததன் 50 ஆண்டுகளை மனதில் வைத்து நேதாஜியின் முழக்கத்துடன் டெல்லி சலோ என அத்வானி
திட்டமிட்டார். ’Swaraj
to Suraj’ என்பதை காந்தியிடமிருந்து எடுத்துக்கொண்டு கிளம்பினர்.
சுராஜ் யாத்திராவில் பாதுகாப்பு, நேர்மை, நல்லிணக்கம் சுதேசி Suraksha, Shucita,
samarasta and Swadeshi என 4 அம்சங்களை வைத்தனர்.
இப்படி அரசியல் பெயரிடல் சுருக்கங்களை பார்க்குமிடத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியினரிடமிருந்து
அவர்கள் கற்றுக்கொண்டனரா என எனக்குத் தோன்றும். யாத்திரையை இரு கட்டங்களாக மார்ச்
1996, ஏப்ரல் 1996களில் நடத்தினர்.
11வது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக
161 இடங்களைப் பெற்று முதல் பெரிய கட்சியாக எழுந்தது. காங்கிரஸ் 140, ஜனதாதளம் 46,
சிபிஎம் 32, சிபிஅய் 9 இடங்களைப் பெற்றன. நரசிம்மராவிற்கு மாற்று வாஜ்பாய் என மக்கள்
தீர்ப்பிட்டுள்ளதாக பாஜக உற்சாகம் அடைந்தது.
வாஜ்பாய் 13 நாட்கள் சோதனையாக
தன் ஆட்சியை நடத்தி வெளியேறினார். தேவகெளடா, குஜ்ரால் என United Front சோதனைகள் நடந்தன. மீண்டும் யாத்திரை அரசியலை பாஜக அரங்கேற்றியது.
இம்முறை 15000 கிமீ மும்பாயிலிருந்து மே 1997ல் துவங்கினர். ’ஸ்வர்ண
யாத்திரை’ என்றனர்.
19 மாநிலங்களில் தங்கள் அரசியல் முழக்கங்களை எடுத்துச் சென்றனர். political education and mobilisation என்றார் அத்வானி. காங்கிரசின் 50 ஆண்டுகளுக்கான
குற்றப்பத்திரிகையாக்கினார். சுயராஜ்யத்தை நல்ராஜ்யமாக்கவே யாத்திரை என்றார். 1942 ஆகஸ்டில் காந்தி பிரிட்டிஷாரே வெளியேறு முழக்கம்
எங்கு தந்தாரோ அங்கிருந்து யாத்திரை என சிம்பாலிக் ஆக்கினர். விடுதலையின் பொன்விழா
நேரத்தில் நாட்டில் honest
introspection நடக்கட்டும் என வாஜ்பாய் கனல்
மூட்டினார்.
பசி, பயம்,
இலஞ்சத்திலிருந்து விடுபட (From the bondage of bhookh ( hunger), bhay (fear),
bhrashtachar( corruption)) என்கிற முழக்கத்துடன்
ஸ்வர்ண யாத்திரை நடந்தது. ஆங்காங்கே கூட்டங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இலஞ்சம்
வாங்கவோ கொடுக்கவோ மாட்டோம் என்றனர். இந்திய விடுதலை பொன்விழா உறுதிமொழியாக எங்கு நான்
வேலை பார்த்தாலும் நேர்மையாக, ஒழுக்கமாக, கடப்பாட்டு உணர்வுடன் மக்களுக்கு பணியாற்றுவேன்
என்றனர். எந்த முடிவிலும் கொள்கை, சாதி என பிரித்துப் பார்த்து எவரிடத்தும் பாரபட்சம்
காட்டமாட்டேன் என அவர்கள் மூன்று உறுதிமொழிகளை செல்லும் வழிகளில் எடுத்துக்கொண்டனர்.
குஜ்ரால் அரசு கவிழ்ந்த நிலையில்
1998ல் 12வது லோக்சபா தேர்தல் வந்தது. பாஜக 182ல் வென்று வாஜ்பாய் பிரதமரானார். இந்த
அரசாங்கமும் நம்பிக்கை வாக்கெடுப்பு சோதனைக்குள்ளாகி 1999ல் மீண்டும் தேர்தல் வந்தது.
13வது நாடாளுமன்ற முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாகி வாஜ்பாய் பிரதமரானார். வாஜ்பாய் சர்க்கார்
பொருளாதார சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியது. பங்குவிற்பனை, மான்யங்கள் குறைத்தல்,
ஏழை எளியவர்களுக்கான சமூக திட்டங்களில் மட்டும் கவனம் போதும் என முடிவு எடுத்தனர்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, விவசாயத்திலும் தனியார் பெரு முதலீடுகளை வரவேற்பது என்ற
கொள்கைகளை வைத்தனர்.
விவசாய பொருட்களுக்கான ஏற்றுமதி
இறக்குமதி தடைகளை அகற்றுதல், வங்கிகளில் சீர்திருத்தம், மின்சார சட்டத் திருத்தம்,
’பவர்
செக்டாருக்கு’ சலுகைகள், தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தல்-
தங்க நாற்கர சாலை, ஏர்போர்ட் டெலிகாம் கார்ப்பரேஷன் போன்றவற்றை செய்தனர். பென்சன் மாற்றத்தை
தீவிர நிகழ்ச்சி நிரலாக்கினர். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மாற்றினர். அரசு ஊழியர்க்கு
விஆர் எஸ் என்றனர்.
சுய உதவிக் குழுக்கள் நெட் ஒர்க்
என்பதை வங்கியுடன் இணைத்து மிக முக்கிய micro finance திட்டம் சோதித்தனர். ஏறத்தாழ 1.7 கோடி ஊரக ஏழை குடும்பங்கள்
வங்கியுடன் கடன் பரிவர்த்தனை ஏற்பாட்டை இத்திட்டம் மூலம் கொணர்ந்தனர். நபார்ட் உதவியுடன்
வங்கிகள் 1999-2004 வாஜ்பாய் காலத்தில் 3900 கோடி கடன் கொடுத்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
விவசாய இன்ஸ்யூரன்ஸ் என்பது UPA காலத்தில்
வந்தாலும் அதை விரிவு படுத்தினர். 6 கோடி விவசாயிகள் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் வந்தனர்.
தன் வழக்கமான சித்தாந்த பிரச்னைகளை
சற்று மூடிவைத்து பொருளாதார, சமூக திட்டங்களில் வாஜ்பாய் அரசாங்கம் ஆட்சி பொதுவாக நடந்தது. ஒளிரும் இந்தியா என்கிற முழக்கத்துடன்
2004 தேர்தலைச் சந்தித்தது. 2004 தேர்தலில் பாஜக 138 இடங்களையே பெற்று தோல்வியடைந்தது.
காங்கிரஸ் இடதுசாரிகளின் ஆதரவுடன் மன்மோகன் அரசாங்கத்தை அமைத்தது. மக்கள் நலத்திட்டங்களில்
காங்கிரஸ் கவனம் செலுத்தியது. தகவல் பெறும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு
உரிமை போன்றவை சிறப்பானவையாக அனைவராலும் ஏற்கப்பட்டன.
2009 தேர்தலிலும் காங்கிரஸ் மன்மோகன்சிங்
ஆட்சியே ஏற்பட்டது. பாஜக 116 இடங்களாக வீழ்ந்தது. சிபிஎம் 16 இடங்களையும், சிபிஅய்
4 இடங்களையும் பெற்றன. ஆனால் இந்திப் பகுதிகளிலும்,
மேற்கிந்தியாவிலும் பாஜக தன் செல்வாக்கை நிலைநிறுத்தியிருந்தது.
2007-2011 காலத்தில் ஏற்பட்ட வகுப்புவாதக்
கலவரம் பற்றி நாடாளுமன்ற பதில் ஒன்றை பார்க்க நேர்ந்தது. 2007ல் நாடு முழுதும் 761
கவரங்கள் நடந்திருந்தால் உயிர் இழப்பு 99 பேர்களும், ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டு
வாழ்க்கை இழந்தோர் 2300 ஆகவும் இருந்தனர். இதில் ம.பி உச்சமாக இருந்தது. அடுத்து மகராஷ்ட்ரா,
உபி என இருந்தன. 2011ல் பார்த்தால் கலவரம் 580 ஆக சற்று மட்டுப்பட்டது. உயிர் இழப்பு
91 ஆகவும் பாதிப்புக்குள்ளானவர் 1900 ஆகவும் இருந்தனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
கலவரங்களின் மூலம் அரசியல் கவனம் என்பதை வகுப்புவாத
சக்திகள் குறியாக இருப்பதைக் காணலாம்.
மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த
2014 லிருந்து 2017 வரை கிடைக்கப்பெற்ற தகவல்களும் இதையே உறுதி செய்கின்றன. 2014ல்
கலவரம் 644 ஆக உயர்ந்தது. சாவு 95, பாதிப்பு 1921என்றால் - இதுவே 2017ல் கலவரம்
822, சாவு 111, பாதிப்பு 2384 என உயர்ந்ததைக் காண்கிறோம்.
பஜ்ரங்க்தல் போன்ற அமைப்புகளில் மோடி பெரும் வீரராக
– இந்தியாவிற்கு மாற்றான தலைவராக புகழப்பட்டுவந்தார். ஆர் எஸ் எஸ் தனது பிரதமர் தேர்வில்
பல உறுப்பு அமைப்புகளின் செல்வாக்கு எவர் பக்கம் சாய்ந்துள்ளது என்பதை சீர்தூக்கி பார்த்து
அத்வானியைவிட , ராஜ்நாத் சிங், கட்கரியைவிட மோடி என்ற முடிவிற்கு வந்தது. பாஜக இதற்கான
அறிகுறிகளை 2013லேயே அத்வானி குமுறலையும் மீறி காட்டத்துவங்கியது. பாரளுமன்ற போர்டிற்கு
மோடியைக் கொணர்ந்தது. தேர்தல் பரப்புரையின்
தலைமையை மோடியிடம் நல்கியது. அத்வானி அனைத்திலிருந்தும் விலகிவிடுவதாக அறிவித்தார்.
வேறுபாடுகள் வெளியே அதிகம் தெரியாமல் கட்சியும்
ஆர் எஸ் எஸ் தலைமையும் ஒட்டுவேலைகளைச் செய்தன.
மோடியின் தேர்தல் பரப்புரை பெரும்
வீச்சாக சென்றது. Modi one Man Band and
Orchestra conductor என்று ஆய்வாளர் கிறிஸ்டோபி
ஜாப்ரிலே போன்றோரே கருத்து தெரிவித்தனர். வளர்ச்சிக்கான மனிதன் ’விகாஷ்
புருஷ்’- வேலைவாய்ப்புகள்,
கருப்பு பணம் கொணர்தல், குஜ்ராத் மாடல், இனி காங்கிரஸ் எனும் இலஞ்சம் பீடித்த குடும்ப ஆட்சி முறை கூடாது, அனைவருக்குமான வளர்ச்சி
போன்ற கவர்ச்சிகரமான முழக்கங்களுடன் நாடு சுற்றினார் மோடி.
Rurban போன்ற வார்த்தை சித்துக்கள் நடந்தன. அதாவது கிராமத்தில்
நகர வாய்ப்புகள் என்கிற வாயளப்பு நடந்தது. டிசம்பர் 22, 2013ல் மோடி பம்பாயில் குவிட்
இந்தியா பேசப்பட்ட இடத்தில் நின்றுகொண்டு மகாத்மா அன்று சொன்னதை சுட்டிக்காட்டி இன்று
அது காங்கிரஸ் rejection என மாற்றுங்கள்
என்றார்.
நான் வாக்கு கேட்பது எந்த தனியான
தலைவருக்குமல்ல- பாஜகவிற்கான வாக்கு இந்தியாவிற்கான வாக்கு என மகுடி வாசித்தார் மோடி.
நான் எப்போதும் மக்கள் மன்றத்திற்கு தலைவணங்கி நிற்பேன் என்ற உறுதிமொழியையும் அவர்
தந்தார். ராகுலை ’mr golden spoon’ எனக் கிண்டலடித்தார். வரலாற்று பழியை கத்தி வாள்
முனையில் மோடி செய்யமாட்டார். வரலாற்றில் முஸ்லீம்கள் அப்படி செய்தனர். மக்கள் செய்யவேண்டியதெல்லாம்
சரியான பட்டனை வாக்கு எந்திரத்தில் அழுத்த வேண்டியதுதான் என அமித்ஷா உரையாற்றினார்.
1971ல் இந்திரா 252 பேரணிகளில்
உரையாற்றினார் என்றால் மோடி 2014 தேர்தலுக்காக 475 பேரணிகளில் உரையாற்றினார். ஏறத்தாழ
1.85 லட்சம் மைல் பயணித்திருப்பார் என கட்சி
வட்டாரம் தெரிவித்தது. அவர் பேசுவதை பெரும் புரஜக்டர்களில் ஆங்காங்கே கொண்டு சென்றனர்.
மோடிக்கு ஏதோ அமானுஷ்ய சக்தியிருப்பதான ’பில்டப்’ பெரிதாக
செய்யப்பட்டிருந்தது. விளம்பரங்களுக்கான ’புரொபஷனல்ஸ்’ இருந்தனர். அவரது உடை நடை பாவம் எல்லாம் ஒத்திகை
பார்க்கப்பட்டடு பெரும் நாயகன் அந்தஸ்து உருவாக்கப்பட்டது. உபியில் மட்டும் 200 வேன்களில்
19000 கிராமங்களுக்கு நமோரதம் சென்றன. அங்கு
மோடி பேசுவது போன்ற வீடியோக்கள் பரப்பப்பட்டன.
chai pe Charcha - தேநீர் உரையாடல்
என சாதாரண மக்களுடன் மோடி பேசுவது என்ற ஏற்பாடுகள் நடந்தன. 4000 டீக்கடைகள் இதற்கு
மய்யமாயின.
கோவிந்தசார்யா எனும் புகழ்வாய்ந்த
ஆர் எஸ் எஸ் வலது சிந்தனையாளர் மோடி தேர்ந்த அரசியல் மார்க்கெட்டாளர் என்றார். அரசியலுக்கு
அதிகாரம் – அதிகாரம் பெற தேர்தல் - தேர்தல் என்றால் பிம்ப சண்டைகள்- எனவே அதைச் சுற்றி
வர மோடி அறிந்துகொண்டுள்ளார் என்றார் கோவிந்தாசார்யா.
மோடியின் தேர்தல் பிரச்சாரம்
presidential type - modeல் அமைந்தது. மன்மோகன் சிங்கின் accidental Prime Minister எதிர் சொல்லாடலை மோடி வைத்தார், ’அச்சா
தின்’ என்பதுடன்
மஸ்பூட் நேதா- வலிமையான தலைவர் என்பதை வைத்தார்.
பிரசாந்த் கிஷோர் போன்ற திறமைவாய்ந்த ’ஐடி’ நிபுணத்துவம்
கொண்டோர் தங்களின் தொழிலை பெருக்க மோடிக்கான வேலையை செய்தனர். ’Modi
for PM Mission 272 ’ என்பதை கிஷோர் அவரது குழாமுடன்
இலக்காக்கினார். ’Abki
bar Modi sarkar- this time Modi Govt ’ என்பது
எங்கும் கேட்க வைக்கப்பட்டன.
1952 முதல் தேர்தலின் போது தேசிய
கட்சிகள் அந்தஸ்தில் 14 கட்சிகளும், மாநில கட்சிகளாக 60ம் சேர்த்து 74 கட்சிகள் இருந்தன.
2014ல் தேசிய கட்சிகள் 6 ஆகவும், மாநில கட்சிகள் 39 ஆகவும் ஆக 45 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட
நிலையில் இருந்தன. வழக்கமான காங்கிரஸ், பாஜக, சிபிஅய், சிபிஎம் தவிர என்சிபி, பகுஜன்
சமாஜ் ஆகியவை தேசிய அந்தஸ்தில் இருந்தன.
2014 தேர்தலில் மிஷன் 272ல் பாஜக வெற்றி பெற்றது. பாஜக 282 ( வாக்கு சதம்
31 %), காங்கிரஸ் 44 (19.3%), சிபிஅய் 1 (0.8 %) சிபிஎம் 9 (3.2%), என்சிபி 6 பெற்றன.
அண்ணாதிமுக 37யை பெற்றது. சிவசேனா 18, தெலுங்கு தேசம் 16 பிடித்தன. திரிணமுல் 34 இடங்களைப்பிடித்தது.
2014 தேர்தலுக்கு பின்னர் எப்போதும்
தேர்தல் முகத்துடன்தான் மோடியும் பாஜகவும் காட்சியளித்தனர். யோகேந்திர யாதவ் மிகச்
சரியாக குறிப்பிட்டார்- always ready party
என்ற உணர்வை பாஜக ஏற்படுத்தியுள்ளனர் என்று. 2019லும் மஸ்குலர், முஸ்லீம் எதிர் பெரும்பான்மை
உரையாடல், மத்தியதரவர்க்கம், எப்போதும் தன்னை மொபைலாக வைத்துக்கொள்தல், தேசியம், வலுவான
உறுதியான தலைவர் எனக் காட்டுதல், சமூக வலைதளங்களை மீடியாவை கட்டுக்குள் கொணர்தல், ஏழைகளுக்கான
நலன் என்கிற உரையாடல் போன்றவற்றை அவர் விடாமல் செய்தார்.
அமித்ஷா பாஜக தேர்தல் மெஷின் என
கருதப்படலானார். ABM- Association of
Billion Minds என்ற வாயளப்பும் நடந்தது. ஜோடி
நம்பர் 1 என்று மோடி ஷா இணை பார்க்கப்படலானது. மீடியா புகழ் இந்தியா டுடே சர்தேசாய்
தனது கணக்கொன்றில் 2019 தேர்தல் செலவு 27000 கோடி என்றால் இதில் 45 சதம் பாஜக செலவு
செய்திருக்கலாம் என்றார். உண்மையில் எவ்வளவு கோடிகள் வாரி இரைக்கப்பட்டன என எவராலும்
ஊகிக்க முடியாத அளவு பணம் தேர்தலில் பங்காற்றியது. இந்திய ஜனநாயகம் தேர்தல் மூலம் வெளிப்படுகிறது
என்ற உண்மையுடன் தேர்தல் என்றால் கிரைம்-பணம் என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.
தங்கள் திட்டங்களால் 22 கோடி குடும்பங்கள் பயன் அடைந்த உரிமை கோரலுடன் 2019 தேர்தலுக்கு
பாஜக சென்றது.
2014ல் பாஜக 17.1 கோடி வாக்குகளை நிரப்பிக்கொண்டால்
2019ல் அதனால் 22.6 கோடி வாக்குகளை எட்ட முடிந்துள்ளது. 5 ஆண்டுகளில் 5.5 கோடி வாக்குகளை
கூட்ட முடிந்துள்ளதை கவனிக்காமல் கடந்து போகமுடியாது. மன்மோகன் சிங் காலத்தில் 27 கோடி
இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே உயர்த்தப்பட்டார்கள் என்பதை அய்நா அறிக்கையே ஏற்றிருந்தது.
ஆனாலும் காங்கிரசால் 2014, 2019ல் மீளமுடியாமல் போனது.
2019ன் போது புதிய வாக்காளர் பகுதி
மட்டுமே மொத்த வாக்காளர்களில் 10 சதம் இருந்தனர். 2014ல் எடுக்கப்பட்ட சர்வேயில் புதிய
வாக்காளர்களில் 43 சதம் மோடி என்றால், 2019ல் எடுக்கப்பட்டதில் 51 சதம் மோடி எனச் சொன்னது
வியப்பை ஏற்படுத்தியது. இளைஞர் ராகுலால் இதை செய்யமுடியாமல் 70 வயதான மோடியால் எப்படி
ஈர்க்க முடிந்தது என்ற கேள்வி தேர்தல் ஆய்வாளர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சர்ஜிகல்
ஸ்டிரைக்- பாகிஸ்தானை உறுதியாக கையாளத் தெரிந்தவர் என்பதும் மோடிக்கு பெரிதும் உதவியது.
2019ல் பாஜக 303 இடங்களைப் பெற்றது.
2014யைவிட 21 இடங்கள் கூடியிருந்தது. 37.36 சத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் 52 இடங்களை
மட்டுமே பெற்றது. 8 இடங்கள் அதற்கு கூடின.. வாக்கு சதம் எனப்பார்த்தால் 19.49 காங்கிரஸ்
பெற்றது. கிராமப்புற வாக்குகளில் பாஜக 38 சதம் பெற்றால் காங்கிரசால் 18 சதமே பெற முடிந்தது.
நகர்ப்புறத்தில் பாஜக 42 சதம் பெற்றால் காங்கிரஸ் 6 சதம் மட்டுமே பெற்றதைக் காண்கிறோம். எஸ்சி எஸ்டி தொகுதிகளிலும் பாஜக 35 %, 42.6 % வாங்கினால்
காங்கிரஸ் 16.7 %, 28.7 % வாங்கியது. பொது தொகுதிகளில் பாஜக 37 சதம் பெற்றால் காங்கிரஸ்
19 சதம் பெற்றது. முஸ்லீம்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளிலும் பாஜக வாக்கு சதம் காங்கிரசை
விடக்கூடுதலாக இருந்தது. காங்கிரஸ் 19 சதம் என்றால் பாஜக 37 சதம் பெற்றதைக் காணலாம்.
நேரு தனது ஆட்சியை 398, 403,
394 எம்பிக்கள் செல்வாக்குடன் நடத்தினார் என்றால், சாஸ்திரிக்கு நேருவின் 394 இருந்தது.
இந்திராவின் ஆட்சியில் 303, 372, 377 என எம்பிக்கள் செல்வாக்கு இருந்தது. மொரார்ஜிக்கு
302, ராஜிவ்காந்திக்கு 426, விபி சிங் 142
எம்பிக்களுடன், நரசிம்மராவ் 252, தேவகெளடாவிற்கு 46, குஜ்ராலோ 36 எம்பிக்கள்
உடன் ஆட்சியில் இருந்தனர். வாஜ்பாய் 183, 189 எம்பிக்களுடன் ஆட்சி புரிந்தார். மன்மோகன்
அவர்களுக்கு 159, 211 கிடைத்தால், மோடிக்கு
282 , 303 கிடைத்தது.
இந்த புள்ளி விவரங்கள் எவருக்கும்
சோர்வைத் தர வேண்டியதில்லை. பாஜக தோற்கடிக்கமுடியாத சக்தி என்கிற சோர்விற்காகவும் அல்ல.
இன்றும் இவ்வளவு வீழ்ச்சியிலும் 10 கோடி வாக்குகளை தேச அளவில் திரட்டக்குடிய சக்தி
காங்கிரசிற்கு மட்டுமே இருக்கிறது. அவை வெற்றித் தொகுதிகளாக மாறவேண்டுமெனில் காங்கிரஸ் தனது தோழமையை எப்படி
பாஜகவை வீழத்தும் சக்திகளிடம் படரவிடவேண்டும் என்கிற கேள்வி- ஆய்வு முக்கியமானது. அதேபோல்
இவ்வளவு பரந்த வாக்குவங்கியை இன்றும் கொண்டிருக்கும் காங்கிரசை முன் நிறுத்தாமல் பாஜக
வீழுமா என்ற கேள்வியும் முக்கியமானது. எதிர்கட்சிகள் ’வியூகமும்’ ’விஸ்டமும்’ அமைவதைப்
பொறுத்தே 2024 தேர்தல் முடிவுகள் அமையலாம்.
பகுதி 2 பாஜக அமைப்பு விதிகள்
பாஜக தனது அமைப்பு விதிகளில் முகப்புரை என ஏதும் எழுதிக்கொள்ளவில்லை. ஷரத்து 2ல் நோக்கம் என எழுதிக்கொண்டுள்ளது. இந்தியாவை வலிமையான வளமான நாடாக மாற்றிட உறுதி ஏற்கிறது. நாடு தனது நவீன, முற்போக்கான விழிப்படைந்த பார்வைத் தீர்க்கத்தையும், அதேநேரத்தில் பண்டைய கலாச்சார விழுமியங்களில் பெருமிதமும் கொண்டு உலகில் அமைதி நியாயத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது என்பதில் பாஜக நம்பிக்கை கொள்கிறது.
கட்சி ஜனநாயக அரசில் நம்பிக்கை வைக்கிறது. சாதி, மதம், பால், கொள்கை என வேறுபடுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் அரசியல், சமூக, பொருளாதார நியாயம், சம வாய்ப்பு, நம்பிக்கை மற்றும் கருத்திற்கான சுதந்திரம் என்பதற்கு உறுதியளிக்கிறது. கட்சி இந்திய அரசமைப்பு மீது உண்மையான விசுவாசம் பற்று வைத்து சட்டப்படியான வகையில் சோசலிசம், மதசார்பின்மை, ஜனநாயகம் உருவாக்கிட, இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை ஒருமைப்பாட்டை உயர்த்திப்பிடிக்கும்.
ஷரத்து 4ல் தேசிய ஒருமைப்பாடு, தேசியம், ஜனநாயகம், காந்தியன் சோசலிசம், பாசிடிவ் செக்யூலரிசம் அதாவது சர்வ தர்ம சமபாவ என்பதை உறுதிப்பாடாக கொண்டுள்ளது.
சோசலிசம் என்கிற பதத்தை பாஜக பயன்படுத்துவதைக்
காணலாம். ஷரத்து மூன்றில் அதன் தத்துவம் Integral humanism எனச் சொல்கிறது. ஆனால் அது பொதுவாக காபிடலிசம்-
சோசலிசத்திற்கான மாற்றாகவே அங்கு சொல்லித்தரப்படும்.
ஷரத்து 9 உறுப்பினர் பற்றி பேசுகிறது. வழக்கம்போல 18 வயதானவர் உறுப்பினராகலாம். பொதுவாக உறுப்பினர் காலம் term
6 ஆண்டுகள் என வைத்துள்ளனர். அதாவது ஆயுள் உறுப்பினர் என எவரும்
முடியாது.
உறுப்பினர் சந்தாவில் மண்டல் 50 சதம், மாவட்டம் 25 சதம், மாநிலம் 15 சதம், தேச மய்யம் 10 சதம் என பிரித்துக்கொள்கின்றனர். மாவட்ட செயற்குழு ஏற்றுக்கொண்ட மண்டல் வாரியான உறுப்பினர் ரிஜிஸ்டர் இருக்கவேண்டும்.
தவிர ஷரத்து 12ல்
’active member’ தீவிர உறுப்பினர் என தனியாக வைத்துள்ளனர். மூன்று வருடங்கள் முடிந்தவர் இதற்கு தகுதியாவர். இவர்கள்தான் போராட்டங்களில் பங்கேற்பர். இவர்கள்தான் தேர்தல்களில் பங்கேற்கமுடியும். தீவிர உறுப்பினர்களின் பட்டியல் மாவட்ட கமிட்டியால் மாநில , தேசிய மய்யத்திற்கு அனுப்பப்படும்.
ஷரத்து 12 ஏ சிறிய பெரிய கேடகரிகள் பற்றிப் பேசுகிறது. மூன்று கேடகரிகளாக மாநிலங்கள் அமையும். 5 நாடாளுமன்ற உறுப்பினர்க்கு கீழ், 5-20கொண்டவை, 21லிருந்து என்பன வைத்துள்ளனர்.
ஷரத்து 13 லோகல் கமிட்டி பற்றி பேசுகிறது. 1000 மக்கள் இருந்து 25 உறுப்பினர் சேர்ந்தால் அங்கு லோகல் கமிட்டி. பொதுவாக 50 பேர் இருந்தால் லோகல் கமிட்டி அமைக்கலாம். 4 கேடகரிகளில் லோகல் கமிட்டிகள் இருக்கும். 25-49, 50-149,150-299, 300க்கு மேல். கமிட்டி பொறுப்பாளர்களில் ஒரு பெண்ணாவது கண்டிப்பாக இருக்கவேண்டும்.
ஷரத்து 14 மண்டல் கமிட்டி. இதில் 3 பெண்கள் இருக்கவேண்டும். இருவர் எஸ்சி, எஸ்டி யிலிருந்து இருக்கவேண்டும். இது மாவட்ட கமிட்டிக்கும் பொருந்தும். அமைப்புவிதிகளிலேயே
தலித் பிரதிநிதித்துவம் என வைத்துள்ளனர்.
ஷரத்து 16மாநில கவுன்சில் பற்றிச் சொல்கிறது. இதில் பல தரப்பினர் வருவதற்கு இடம் கொடுப்பதுபோல் அமைத்துள்ளனர். எம் எல் ஏக்களில் 10 சதமாவது- 10 பேராவது வரவேண்டும். 10க்கு குறைவெனில் அனைவரும் மாநிலகவுன்சிலில் இருப்பர். மாவட்டங்கள் தேர்ந்து எடுத்து அனுப்புவோர், எம்பிக்களில் 10 சதம். அதாவது 3 பேராவது- மூன்றுக்கு குறைவெனில் அனைவரும் இருப்பர். மாநிலத்திலிருந்து தேசியக்கவுன்சிலில் இடம் பெற்றுள்ளவர் மாநில கவுன்சிலில்,, முன்னாள் மாநிலத் தலைவர்கள் அனைவரும் மாநில கவுன்சிலில், முனிசிபல், மாவட்ட பஞ்சாயத்து போன்ற தலைவர்கள், மாவட்ட தலைவர்- பொதுச் செயலர்கள் என மாநிலகவுன்சிலை விரிவான ஒன்றாக வைத்துக்கொண்டுள்ளனர்.
ஷரத்து 17 மாநில செயற்குழு எண்ணிக்கை
50- 70 வரை இருக்கலாம் என்கிறது. எண்ணிக்கையில்
பெண்கள் எஸ்சி எஸ்டி 10-16 வரை இருக்கவேண்டும்.
ஷரத்து 18 தேசிய கவுன்சில் பற்றிப் பேசுகிறது.
எம்பிக்களில் 10 சதம், முன்னாள் தேசியத் தலைவர்கள், மாநில தலைவர்கள், லோக்சபா- ராஜ்யசபா லீடர்கள், தேசிய தலைவர் நியமனத்தில் 40 பேர் வரை, பிற தொடர்புடைய இயக்கங்களின் அனைத்திந்திய தலைவர்கள் ஆகியோர் இடம் பெறத்தக்கவகையில்
வைத்துள்ளனர்.
ஷரத்து 21 படி தலைவர் பொறுப்பில் 3 ஆண்டுகள் இருக்கலாம்.
பிளினரி, ஸ்பெஷல் செசன்ஸ் பற்றி விதிகள் உள்ளன. பாராளுமன்ற போர்டு விதியுள்ளது. கட்சி தேர்தல்கள் தொடர்பாக மத்திய செயற்குழு
central Election Committee ஒன்றை அமைக்கின்றது. அதேபோல் மாநிலத்திலும் தேர்தல் கமிட்டி
உண்டு.
ஷரத்து 25 படி
5 பேர் நிதிகமிட்டியில் இருப்பர். அதில் ஒருவர் பொருளராக இருப்பார்.
உறுப்பினராக ஒருவர் உறுதிமொழி எடுக்கவேண்டும். கட்சி சித்தாந்தம், தேசியம், ஒருமைப்பாடு, ஜனநாயகம், காந்தியன் சோசலிசம், பாசிடிவ் செக்யூலரிசம், நெறி சார்ந்த அரசியல் படி நடப்பேன் என்றும்- ’மதம் சார்ந்த தேசம்’ என்கிற கருத்து ஏற்பில்லை, தீண்டாமை அனுசரிக்கமாட்டேன், அமைதியான வழியில் கடமையாற்றுவேன், வேறு கட்சியில் உறுப்பினர் இல்லை போன்றவை உறுதிமொழி வாசகங்களாக போடப்பட்டுள்ளது.
1951 அக்டோபர் 21ல் ’பாரதிய ஜனசங்கம்’ பிறக்கும்போது மும்முனை அணுகுமுறைகள் என்றனர். உற்பத்தி பெருக்கம்- சமதையான பகிர்வு- நுகர்தல் கட்டுப்பாடு. தாங்களும் உழுபவனுக்கே நிலம் என்றுதான் சொல்கிறோம் என்றனர். தரித்திரர்களின் முன்னேற்றம் அவர்களின் மகிழ்ச்சி என்பதே தங்களின் பொருளாதார வழிபாடு- நாரயணன் என்றனர். ஜனசங்கமும் தங்களை
centrist party என அழைத்துக்கொண்டனர். தங்களை முற்போக்கு எனக் கருதிக்கொள்பவர்கள்தான் ஜனசங்கை பிற்போக்கு கட்சி என முத்திரை குத்துவதாகவும் தெரிவித்தனர்.
1972ல் திருத்தப்பட்ட பதிப்பிற்குரிய ஜனசங்கத்தின் அமைப்பு விதிகளை பார்க்க முடிந்தது.
அதில் உள்ள சில குறிப்பிட்ட ஷரத்துக்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளன.
இன்று பாஜக அமைப்புவிதிகளில் ஷரத்து 2ல் உள்ள நோக்கம் எனும் பகுதி அன்று ஜனசங்க விதியில் ஷரத்து 3ல் உள்ளது.
ஜனசங்கம் அந்த ஷரத்தில் இந்தியாவை அரசியல், சமூக, பொருளாதார ஜனநாயகமாக மாற்றுவது என்பது இலக்கு எனக் குறித்துக்கொண்டது. இதை ’பாரதிய சன்ஸ்கிருதி- மர்யாதா’ அடிப்படையில் செய்வது. இந்த ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்பும் சுதந்திரமும் இருக்கும் என்றனர்.
இந்தியாவை வளமான, வலுவான சக்திகொண்ட, திரட்டப்பட்ட, முற்போக்கான, நவீன, விழிப்புடன் கூடிய ஜனநாயகமாக மாற்றுதல்- தாக்குதல் எண்ணம் கொண்ட நாடுகளிலிருந்து தற்காத்துக்கொண்டு உலகின் அமைதி தழைக்கச் செய்ய தன் பங்கை நாடு
செலுத்தும் வகையில் கட்டமைப்பது. பாஜக இதன் சாரத்தை எடுத்துக்கொண்டிருக்கும். ஆனால்
Bharathiya sanskriti and Maryada என்பதை
அது எழுதிக்கொள்ளவில்லை
என்பதைக் காண்கிறோம்.
பாஜக தனது அமைப்புக் கட்டை அன்று ஜனசங்கம் செய்த லோகல் கமிட்டி, மண்டல், மாவட்டம், பிரதேசம் (மாநிலம்), அனைத்திந்திய பொது கவுன்சில் என்றே
எடுத்துக்கொண்டுள்ளது. இன்று பாஜக தேசிய கவுன்சில் எனச் சொல்கிறது.
உறுப்பினர் தகுதி ஜனசங்கத்திலும் வயது 18 என்றே இருந்தது. இப்போது பாஜகவில் உள்ளதுபோல் உறுப்பினர் கால எல்லை 6 ஆண்டுகள் போல ஜனசங்கத்தில் ஏதுமில்லை.
அவர் விலகும்வரை- நீக்கப்படும்வரை இருக்கலாம் என்றே அன்று இருந்தது.
அப்போது தீவிர உறுப்பினர் எனும் ஷரத்தில்லை. ஆனால் 11 உறுப்பினர்களை எவர் சேர்க்கிறாரோ அவர் தீவிர உறுப்பினராக கருதப்பட்டு கட்சி தேர்தல்களில் நிற்க தகுதி பெறுவதாக சொல்லப்பட்டிருந்தது. தீவிர உறுப்பினர் ஆக வேண்டுமெனில்
பாஜகவில் மூன்று ஆண்டுகள் இருந்தால்தான் என இப்போது விதிவைத்துள்ளனர்.
அப்போதே ஜனசங்க அமைப்பு விதியில் கமிட்டிகளில் பெண்களுக்கு இடம்
என எண்ணிக்கை அமைப்பு விதிகளின்படி தரப்பட்டுள்ளதை பார்க்க முடிந்தது. அதேபோல அவர்கள் எஸ்சி எஸ்டி பகுதியினர்க்கும் கமிட்டிகளில் இடம் என எண்ணிக்கையை தெரிவித்திருந்தனர். அந்த விதிதனை இப்போது பாஜக அப்படியே எடுத்து தனது விதிகளாக வைத்துக்கொண்டுள்ளது. 1951 முதலே பெண்கள், தலித் ஒதுக்கீடு
என்பதை அமைப்புகளில் வைத்துக்கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் விதிகளில் காணமுடிகிறது.
மிக முக்கியமாக ஜனசங்கத்தின் அமைப்பு விதிகளின் பிரசுரத்தில் பார்க்கவேண்டிய ஒன்று தனியாக அவர்கள் கொடுத்துள்ள
Aims and Objectives in Brief பகுதியாகும். அதில் அவர்கள்
establishment of Unitary
government and decentralisation of political and economic power எனச் சொல்லியிருப்பர். இதை பாஜக தனது விதிகளில் இன்று எழுதிக்கொள்ளவில்லை. அதேபோல் அகண்ட பாரதம் என ஜனசங்கத்தினர் அன்று அமைப்பு
விதியில் சொல்லியுள்ளனர். முழுமையான காஷ்மீர் இணைப்பு என்றும் பேசப்பட்டிருக்கும்.
அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம். இராணுவத்தை நவீனமாக்குதல், உழுபவனுக்கு நிலம் உரிமை, அடிப்படை தொழில்களை தேசியமயமாக்குதல், பொருளாதாரத்தில் ஏகபோகம் தடுத்தல், நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்பு, பசு பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, இலஞ்சம் ஒழிப்பு, நடுத்தரப்பள்ளிவரை இலவச கல்வி, சமூகப் பாதுகாப்பு, மருத்துவ வசதி, நீதித்துறையில் இந்தியத்தன்மைகேற்ற சீர்திருத்தங்கள், ஹிந்தி, வட்டார மொழிகளை அலுவல் மொழியாக மாநிலங்களில் ஆக்குதல். இதில் ஆங்கிலம் என்பது பேசப்படாமல் இருப்பதைக் காணலாம். ஜனசங்கம் இந்தப் பகுதியில் தனது இலக்குகளை தெரிவாக அறிவித்திருக்கும்.
பாஜக உறுதிமொழி எனும் பகுதியை வைத்துக்கொண்டுள்ளது. அதில் தனது சித்தாந்தம் என்பதுடன் தேசிய ஒருமைப்பாடு, காந்தியன் சோசலிசம், பாசிட்டிவ் செக்யூலரிசம் போன்றவற்றை இணைத்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.
பாஜக இந்தியாவில் அதற்கேற்பட்ட அனுபவங்களை ஜனசங்க காலத்திலிருந்து சில அம்சங்களில் மாறுபட்டு எடுத்துள்ளதாக எழுத்து வடிவில் காட்டியுள்ளது. இதை political
repair என
ஊகிக்கலாம். அதேநேரத்தில்
தனது சில உளவியலில் படிந்துள்ள அடிப்படைகளை இந்தியமக்கள்- சமூகத்தின் மீது படரவிட முயற்சிக்காமல் இல்லை. அவற்றில் சில ஜனசங்க கால கனவுகளாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
4-7-2022
ஆதாரங்கள்
Evolution of BJP
How Modi won by Sardesai
Election
Commission Results
Comments
Post a Comment