https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, July 23, 2022

மாநில கட்சிகள் பற்றி சிபிஎம்

 

                    மாநில கட்சிகள் பற்றி சிபிஎம்

(2002- 2022 ஆண்டுகளின் 7 கட்சி காங்கிரஸ் அரசியல் தீர்மானங்களை முன்வைத்து)

CPM கட்சி தனது கட்சி காங்கிரசை அதன் அமைப்பு விதிகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வரக்கூடிய கட்சி. இடதுசாரி இயக்கங்களில் பெரிய கட்சியாகவும் உள்ளது. மூன்று மாநிலங்களில் பல ஆண்டுகள் ஆண்ட கட்சி. எனவே  இந்தியாவில் ஆட்சி செய்வது என்றால் எப்படி- எவ்வளவு சிக்கல்கள் என்பதை நிச்சயமாக அறிந்த கட்சியாக இருக்கும்/ இருக்கவேண்டும்.

அக்கட்சி  21 ஆம் நூற்றாண்டின் இந்த 22 ஆண்டுகளில் 2002ல் 17வது காங்கிரசையும், 2022ல் தனது 23வது காங்கிரசையும் நடத்தி முடித்துள்ளது. 17,18,19,20,21,22,23 என 7 காங்கிரஸ் அகில இந்திய மாநாடுகளை இந்த 22 ஆண்டுகளில் நடத்தியுள்ளது. ஒவ்வொரு காங்கிரசிலும் அடுத்து தான் செயல்படப்போகிற மூன்று ஆண்டுகளுக்கான திசைவழியைக் காட்டிட அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்கிறது. அதைத்தவிர கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்பட்டதை ரிவ்யூ செய்வது, ஸ்தாபன நிலைமைகளை சீர்தூக்கி பார்க்கும் தீர்மானங்களையும் அக்கட்சி வடித்தெடுக்கிறது. சிபிஅய் கட்சியிலும் இந்த நடைமுறைதான் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. 1964ல் சிபிஎம் துவக்கப்பட்டதை அறிவோம்.



சிபிஎம் வடித்தெடுத்த இந்த 7 மாநாடுகளின் அரசியல் தீர்மானத்தை மட்டும் ஒருசேர ஒருவர் பார்க்கவேண்டுமெனில் சுமார் 300 பக்கங்களை அவர் படிக்க வேண்டியிருக்கும். சர்வதேச அரசியல் நிலைமைகள்- ஏகாதிபத்திய அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள், சோசலிச சீனா, வியத்நாம், கியூபா, வடகொரியா குறித்து, மேற்காசியா, தெற்காசிய நாடுகள் குறித்தவை இதில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு அறிக்கையிலும் பிரதியில் சுமார் 40 சத பகுதி  சர்வதேச அரசியலுக்காக ஒதுக்கப்படுகிறது.

மத்தியில் ஆட்சிக்கு இடதுசாரிகள் வரும்போது இந்த அரசியல் தீர்மானங்களில் சர்வதேச நிலமைகள் பேசப்படுவது போன்று அரசாங்கமாக நடந்துகொள்ள முடியுமா என்பது பதில் காணவேண்டிய ஒன்றாக இருக்கிறது.  நாடுகளுக்கான டிப்ளமசி- ஐ எஃப் எஸ் அதிகாரிகள் அறிவுரைகள் போன்ற பல அம்சங்கள் கட்சியின் wisdom  தாண்டிய அம்சங்களாக நிற்கும் என்பதை புரிந்துகொண்டு பார்த்தால் மேற்கூறிய கேள்வியின் முக்கியத்துவம் தெரியவரலாம்.

அடுத்து தேசிய நிலைமைகள் பற்றிய மதிப்பீட்டில் அரசியல், பொருளாதார, சமூக பிரச்னைகள் அலசப்படுகின்றன. கட்சிகள் பற்றிய மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. பிஜேபி  காங்கிரஸ் இரண்டுமே பூர்ஷ்வா-நிலபிரபுத்துவ கட்சிகள்- பெருமுதலாளிகளின் தலைமையிலான வர்க்க நலன்களை கொண்டவை என்ற வரையறையிருந்தாலும், பிஜேபியின் ஆபத்தை அது வழக்கமான பூர்ஷ்வா கட்சிஅல்ல- பாசிச சக்திகளால் வழிகாட்டப்படும் கட்சி என்ற வரையறையும் கூடுதலாக செய்யப்பட்டிருக்கும். இவையெல்லாம் விரிவாக இந்த 7 காங்கிரசின் ஒவ்வொரு அறிக்கையிலும் பேசப்பட்டிருக்கும். பிரதியில் தேச அரசியல் பகுதி சுமார் 50 சதத்தை எடுத்துக்கொள்ளும்.

பிரதியின் மீதியுள்ள 10 சதம் இடதுசாரி ஒற்றுமை, இடதுசாரி ஜனநாயக முன்னணி- அதன் வேலைத்திட்டம், சிபிஎம் தன் சொந்த கட்சி பலத்தை வலுப்படுத்திக்கொள்ள செய்யவேண்டியதென்ன என்பது பேசப்பட்டிருக்கும். இது குறித்து தனி கட்டுரை எழுதும் உத்தேசம் உள்ளது.

இந்த 20 ஆண்டுகளில் இந்த pattern  அறிக்கைகளில் பொதுவாக மாறாமல் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு தலைப்பிலும் 7 மாநாட்டின் 300 பக்க அறிக்கையை ஒப்பிட்டு காட்டுவது ஆய்வு மாணவரின் பணிதான் என்றாலும் எனது பார்வையில் மூன்று அம்சங்களை எடுத்துக்கொள்ள முயற்சித்தேன். அவை சிபிஎம் ஒரு தேசிய/ சர்வதேசிய  கட்சி என்ற வகையில் எப்படி மாநில கட்சிகளை  மதிப்பிட்டுள்ளது. 7 அறிக்கைகளிலும் ஏதாவது அதில் இந்த 20 ஆண்டுகளில் மாறுதலை செய்துகொண்டுள்ளதா எனப் பார்ப்பது.

அடுத்து இடதுசாரி ஜனநாயக மாற்று வேலைத்திட்டத்தை இந்த 20 ஆண்டு இடைவெளியில் அறிக்கைதோறும் ஒரே மாதிரியே வைத்துள்ளதா- ஏதாவது மாற்றத்துடன் வைக்கிறதா. அதனையடுத்து கட்சி தன்னை பலப்படுத்திக்கொள்ள இந்த 7அறிக்கைகளில் 20 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என சொல்லிக்கொண்டது. இந்த மூன்று அம்சங்களே விரிந்து போவதால் முதலில் மாநிலகட்சிகள் குறித்து சிபிஎம் பார்வை என்ன என்பதை மட்டும்  அவர்கள் அரசியல் தீர்மானங்களிலிருந்து இக்கட்டுரை பேசுகிறது.

                                                                                         II

17வது காங்கிரசில் மாநில கட்சிகளின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதை சிபிஎம் பேசியது. மத்தியில் ஒரு கட்சி ஆட்சிதான் என்ற நிலைமை மாற்றப்பட்ட சூழலில் இந்த முக்கியத்துவம் வந்துள்ளது. இந்த கட்சிகளில் சிலரீஜினல் பூர்ஷ்வா- நிலப்பிரபுக்களின் பிரதிநிதிகளாக செயல்படுகின்றன. வேறு கட்சிகளோ சாதி வகைப்பட்டு  caste based   ஆக செயல்படுகின்றன. முதலாளித்துவ வளர்ச்சியில் இந்த கட்சிகள் வட்டார பூர்ஷ்வா- நிலபிரபுக்களின் நலன்களை பிரதிபலித்தாலும் தங்கள் பார்வையை மாற்றிக்கொண்டுள்ளன. தாராளமய கொள்கையில் தாங்கள் வளர வாய்ய்புள்ளதாக கருதுகின்றன.

தங்களது குறுகிய மாநில நலன்களுக்காக அடிக்கடி அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கின்றன. வகுப்புவாதம் எதிர்த்த போராட்டத்தில் அவைகளுக்கு  inconsistency  இருக்கிறது.  தங்கள் சொந்த நலனைக் கருத்தில்கொண்டு தேசிய அரசியலிலும் பெருவிருப்பத்தைக் காட்டுகின்றன. சில கட்சிகள் பிஜேபியுடன் சேர்ந்தும் சந்தர்ப்பவாதத்தைக் காட்டியுள்ளனர்.

மக்கள் பிரச்னைகளிலும் வகுப்புவாத எதிர்ப்பிலும் நிற்கும் கட்சிகளுடன் சிபிஎம் ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டும். தேர்தல் உடன்பாடுகளை செய்யும். பிஜேபியுடன் சேர்பவர்களை எதிர்க்கும். ரீஜினல் இனவாதம் / குறுகிய இனவேறி எதிர்த்து ( reginal Chauvinism)போராடும்.

இந்த பூர்ஷ்வா கட்சிகளுடன் நாம் கொள்ளும் கூட்டு அதன் செல்வாக்கு மக்களிடம் நம்மை அழைத்துச் செல்ல உதவும். இந்த தேர்தல் கூட்டு என்பது நீண்டகால அணிசேர்க்கையோ அல்லது அய்க்கிய முன்னணியோ அல்ல   (not meant for prolonged alliances or UF). இந்த பூர்ஷ்வா கட்சியின் வாலாக இருக்கக்கூடாது. கட்சியின் தனித்தன்மை மங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

17வது காங்கிரஸ் வரையறை அடிப்படையான அம்சங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். தொடர்ந்த காங்கிரசில் சிற்சில அம்சங்கள் கூடுதலாக இருப்பதையும் காணலாம்.

18வது காங்கிரசில் தாராளமய கொள்கைகளில் தேசிய பூர்ஷ்வா கட்சிகளுடன் இவர்களுக்கு எந்த முரணும் இல்லை என்பதை சிபிஎம் சொல்லியது. இந்த கட்சிகள் பூர்ஷ்வா- நிலபிரபுத்துவ ஊசலாட்டத்தில் இருப்பவை. மாநில நலன்கள் என்ற பெயரில் இந்த ஊசலாட்டத்தை அனுசரிக்கின்றன. திமுக போன்ற மாநில கட்சிகள் செக்யூலர் சக்திகளுடன் நிற்பது பிஜேபி அணியை பலவீனப்படுத்துகிறது என்ற ஏற்பையும் சிபிஎம் தந்தது. தாராளமய கொள்கைகள், வர்க்க ஊசலாட்டம், திமுக போன்ற சில கட்சிகள் பிஜேபியை பலவீனப்படுத்த உதவின என்ற ஏற்பு இக்காங்கிரசில் செய்யப்பட்டன. காங்கிரஸ் உடன் இக்கட்சிகள் கூட்டு என்பது பற்றி தனியாக பேசப்படவில்லை.

19வது காங்கிரஸ் 2008 பிஜேபியுடன் அணிசேரும் எந்த மாநில கட்சியுடனும் உறவில்லை. பிஜேபியை எதிர்க்கும் கட்சிகளுடன் ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என்பதை அழுத்தமாக தெரிவித்தது.

 20வது கட்சி காங்கிரசில் 2012 தனி தெலங்கானா கோரிக்கையை சிபிஎம் ஏற்கவில்லை. மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களை பிரிப்பது என்பதை ஏற்கமுடியாது என்ற நிலைப்பாட்ட்டை தொடர்ந்து சிபி எம் எடுத்துள்ளது. சிபிஅய் கூட தெலங்கானா உருவாக்கத்தில் ஆதரவாக நின்றது என்பதை இக்காங்கிரஸ் தீர்மானத்தில் சிபிஎம் பதிவு செய்தது. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கமே பல போராட்டங்களுக்கு பின்னர் நடந்தவை. எனவே அதை பிரிப்பது தேவையற்றது என்பதி சிபிஎம் நிலைப்பாடு.

 சிறு மாநிலங்கள் பொருளாதாரரீதியாக நிலைக்க முடியாதவை. ஃபெடரல் தன்மையை சிறு மாநிலங்கள் உருவாக்கம் என்பது நீர்த்து போகச் செய்து மத்திய அரசை நம்பி நிற்கும் பகுதிகளாக்கிவிடும்.. எங்காவது தன்னாட்சி தேவை என்றால் அதற்கு புரவிஷன் இருந்தால் போதும் என தீர்மானம் பேசியது.

 இந்த காங்கிரசில் அணிசேர்க்கை என்ற வகையில் மாநில கட்சிகளின் சந்தர்ப்பவாதமும் சொல்லப்படுகிறது. மாநில கட்சிகள் காங்கிரசை அல்லது பிஜேபியை சார்ந்து என்கிற சந்தர்ப்பாத நிலைப்பாட்டை எடுக்கின்றன. அவர்களின் நவீன தாராளமயக் கொள்கைகளையே ஆட்சியில் இருக்கும்போது அனுசரிக்கின்றன. மத்தியில் கூட்டணி ஆட்சி என்பதன் மூலம் மத்திய அரசாங்கத்தில் காங்கிரசுடனோ அல்லது பிஜேபியுடனோ பங்கேற்கின்றன. மத்தியில் தங்கள் ஆட்சியை உருவாக்க காங்கிரசும், பிஜேபியும் மாநில கட்சிகளை நம்பி இருக்கின்றன.

 ஆளும் வர்க்கங்கள் இந்த இரு கட்சி முறையை அவர்கள் விழைகின்றனர். இதன் மூலம் தங்கள் பெரு முதலாளித்துவ வர்க்க நலனை காத்துக்கொள்ள முடியும் என கருதுகின்றனர். இந்த இரு சேர்மானங்கள் என்பதை நாம் தடுக்க வேண்டும். காங்கிரசுடனும், பாஜக வுடனும் இல்லாத மாநில கட்சிகளுடன் நல்லுறவை நாம் வளர்க்கவேண்டும். தேச இறையாண்மை, மத்திய- மாநில உறவுகள், மக்கள் பிரச்னைகள் வழியான இணைந்த போராட்டங்களில் இந்த ஒத்துழைப்பு சாத்தியமாகும்.

 2015ன் 21வது காங்கிரஸ் கடந்த 15 ஆண்டுகளில்  ரீஜினல் கட்சிகளால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கட்சி குறித்துக்கொள்கிறது எனப்பேசிவிட்டு அந்த வட்டார பூர்ஷ்வாக்களின் நலன்களையே அவை பிரதிபலிக்கின்றன என்பதை திரும்ப மதிப்பிட்டுக்கொண்டது. தாராளமய பொருளாதார கொள்கைகளில் இதைக் காணலாம் என ஆதாரமாக்கியது. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் உயர் தலைமை ஊழல் வழக்குகளால் பீடிக்கப்பட்டுள்ளன என்கிற பதிவையும் செய்தது.

மாநில கட்சிகள் ஆட்சியில் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து போராடவேண்டும். அந்தப் பகுதியின் பெரும்பான்மை பலம் கொண்ட மாநில கட்சியின் பூர்ஷ்வா  சித்தாந்தத்தை  எதிர்த்து அரசியல் பிரச்சாரம் செய்யவேண்டும். அப்போதுதான் அக்கட்சியின் செல்வாக்கில் உள்ள மக்களை நாம் வென்றெடுக்க முடியும் என தன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தலை தந்தது.

இந்த காங்கிரசில் முஸ்லீம் கம்யூனிட்டி குறித்தும் தீர்மானம் பேசுகிறது. அவர்களின் சில இயக்கங்கள் பேசும் தீவிர வாயடிப்புகளால் இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர். தெற்கு பகுதியில் தீவிரவாத பாபுலர் ஃப்ரண்ட்டின் எஸ்டிபிஅய் விரிவாக்கிக்கொள்ள முயற்சிக்கிறது. செக்யூலர் பூர்ஷ்வா கட்சியினர் மீதான அதிருப்தியை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

 நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் என்பது அவற்றை பின்பற்றும் ரீஜினல் கட்சிகளை எதிர்த்தும் தான். இடதுசாரி ஜனநாயக மேடைக்கு உழைக்கும் மக்களை திரட்டும் போராட்டத்தில் பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ கொள்கைகளை கொண்ட ரீஜினல் கட்சிக்கு எதிரான அரசியல் எதிர்ப்பும் இருக்கிறது என்ற புரிதலை தீர்மானம் தந்தது.

2018ல் நடந்த 22வது காங்கிரஸ்  21ஆவது காங்கிரசில் சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறது. கூடுதலாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய தன்மையில் மாநில கட்சிகளின் அரசியலை பங்கு பாத்திரத்தைக் காணவேண்டும். இடதுசாரி ஜனநாயக சக்திகளின் வளர்ச்சிக்கு, கட்சியின் நலன்களை முன்னெடுக்கும் வகையில் இந்த கட்சிகளின்பாற் அணுகுமுறை இருக்கவேண்டும்.. எனினும் தேசிய அளவில் இந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி என்பதற்கு வாய்ப்புகள் இல்லை.

 23வது காங்கிரஸ் 2022ல் ரீஜினல் கட்சிகளின் வர்க்க குணம், தாராள பொருளாதாரவாதம் சொல்லப்பட்டாலும், ஃபெடரலிசம் என்ற அம்சத்தில் பல கட்சிகள் பிஜேபியுடன் மோதலை கொண்டுள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில கட்சிகள் பிஜேபியின் மிரட்டல்களுக்கு அஞ்சி நாடாளுமன்றத்தில் பிஜேபிக்கு ஆதரவாக நிற்கின்றன.

மத்தியில் ஆளும் பிஜேபி எதிர்த்து மக்கள் விரோத, செக்யூலரசித்திற்கான போராட்டத்தில் இந்த கட்சிகளுடன் சிபிஎம் ஒத்துழைப்பை தேடுகிறது. அந்த மாநிலங்களில் அக்கட்சிகள் எடுக்கும் அரசியல் நிலைப்பாட்டை வைத்து அக்கட்சிகளுடன் அணுகுமுறையை கட்சி மேற்கொள்ளவேண்டும்.

மாநில கட்சிகள் ஆளும் இடங்களில் அவர்களது கொள்கைகளை எதிர்த்து கட்சி போராடும் என்றாலும் இந்த மாநில கட்சிகளை பிஜேபிக்கு நிகராக வைத்து பார்க்கக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வையும் தீர்மானம் தந்தது.

 இந்த காங்கிரசிலும் முஸ்லீம் கட்சிகள் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஜமாத் இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற அடிப்ப்டைவாத தீவிரவாத இயக்கங்கள் உள்ளன. இந்துத்துவா சக்திகளின் விஷச் சூழலில் சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற அம்சத்தை இவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் நடவடிக்கைகள் இந்துத்துவா சக்திகளுக்கே உதவும். செக்யூலர் ஜனநாயக சக்திகள் சிறுபான்மையினரின் உரிமைக்கான பாதுகாப்பில் நிற்கவேண்டும். அதாவது இஸ்லாமிய தீவிரவாதம் இந்துத்துவாவிற்கு மாற்றாக முடியாது என்ற புரிதலை இத்தீர்மானம் வைப்பதாக புரிந்துகொள்ளலாம்.

சிபிஎம் பார்வையை சுருக்கமாக சாராம்சமாக பட்டியலிட்டால் :

மாநில கட்சிகளும் காங்கிரஸ், பிஜேபி போல் வர்க்க நலன்களை பிரதிபலிக்கும் கட்சிகள்தான். அவை வட்டார முதலாளிகளின் நிலபிரபுக்களின் கட்சிகள்தான். நவீன தாராளமய கொள்கைகளை கடைபிடிப்பவைதான். ஆனாலும் இவற்றை பிஜேபி போல் நினைத்துவிடக்கூடாது. பிஜேபி மற்றுமொரு பூர்ஷ்வா கட்சியல்ல. பாசிச சக்திகளால் தலைமை தாங்கப்படுகிறது.

மாநில கட்சிகள் இரு பெரிய காங்கிரஸ்- பிஜேபிகளை சார்ந்தே பொதுவாக இருக்கின்றன. அக்கட்சிகளுக்கும் இந்த கட்சிகள் அவசிய தேவையாக இருக்கின்றன

பிஜேபியுடன் நிற்கிற கட்சிகளுடன் எந்த உறவும் இல்லை.

பிஜேபியை, காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளுடன் உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும். அது போராட்டங்கள் வழியான உறவாக கட்டப்படவேண்டும்.

மாநில கட்சிகளுடன் தேர்தல் உறவுண்டு. அது சிபிம் கட்சியின் நலன்களுக்கு, இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு உதவுவதாக இருக்கவேண்டும். அக்கட்சியின் வாலாக சிபி எம் இருக்கக்கூடாது. சொந்த கட்சிக்கு  வெளிச்சமில்லாத மங்கல் வந்துவிடக்கூடாது.

மாநில கட்சிகளுடன் நிரந்தரமான அய்க்கிய முன்னணி என ஏதும் இல்லை. தேசிய அளவில் இவர்களுடன் அணி என்பது சாத்தியமில்லை.

மாநிலத்தில் ஆளக்கூடிய இந்த கட்சிகள் கொள்கைகள் எதிர்த்த போராட்டம் அவசியம். கட்சியின் தனித்தன்மையை காத்துக்கொள்ளவேண்டும்.

இத்தீர்மானங்களைப் படித்த பிறகு சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சியின் வர்க்க குணாம்சம் என்ன? காங்கிரஸ், பிஜேபி மற்றும் பிற மாநில கட்சிகளை முதலாளித்துவ- நிலபிரபுத்துவ கட்சிகள் என வரையறுக்கும்போது , அந்த பெருமுதலாளிகளால் தலைமை தாங்கப்படும் இந்திய அரசின் மாநில உறுப்பாக செயல்படும் கேரளா அரசாங்கம்  சார்ந்த வர்க்க வரையறுப்பு என்ன? அதனால் முதலாளித்துவ- நிலபிரபுத்துவ நலன்களை முறியடித்து மாற்றான வர்க்க நலன்களை பிரதிபலிக்க முடிந்துள்ளதா?

2002-2022 இந்த 20 ஆண்டுகளில் தேர்தல் அணிசேர்க்கை மூலம் dominant மாநிலகட்சியின் செல்வாக்கில் இருக்கும் மக்கள் திரளை ஈர்ப்பது என்கிற வரையறையில் கிடைத்துள்ள டிவிடெண்ட் என்ன? அவர்கள் மக்கள் திரள் வந்துள்ளனரா அல்லது சொந்த மக்கள் திரள் அவர்கள் செல்வாக்கில் விழுந்துள்ளனரா?

மாநில கட்சிகளின் சித்தாந்த செல்வாக்கிலிருந்து மக்கள் திரளை விடுவிக்க முடிந்ததா?

இதை படிப்பவர்கள் எந்தவொரு தனி விளக்கமும் இன்றி அவர்களது நிலைப்பாட்டை , மதிப்பீட்டை பெறமுடியும். தீர்மானங்களில் எழுதப்பட்டது சரியா தவறா- அல்லது எழுதியது போல் நடைமுறையில் அம்மதிப்பீடுகள் படியே நடந்துகொள்ள முடிகிறதா என்பது உள் மற்றும் பொது விவாதத்திற்குரிய கேள்விகள். ஆரோக்கியமான விவாதச் சூழலில் அவை நடைபெறவும் வேண்டும்.

23-7-22

No comments:

Post a Comment