https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, July 12, 2022

சீனா வாசிப்பில்…

 

                             சீனா வாசிப்பில்…

How China's Leaders Think- The Inside Story of China's Past , Current and future Leaders  என்ற புத்தகம் பெரிய புத்தகம்தான். 700 பக்கங்களைத் தொடும்.  Robert Lawrence Kuhn  என்பார் எழுதியுள்ளார். 4 பிரிவுகளில் 41 சாப்டர்ஸ் என புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 28வது அத்தியாயமாக  How Telecom and Internet Changed China என்பதும்- அத்தியாயம் 30 Why Religion Became Important என்பதாகவும் இருக்கிறது. அந்த இரு அத்தியாயங்களையும் உடன் படிக்க என் மனது சென்றது. ஒன்று 40 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் என் போன்றவர்களுக்கு சோறிடும் டெலிகாம்துறை பற்றியதானது. மற்றொன்று இன்றும் இந்தியாவின் அரசியல் தலைவலியை தரும் பிரச்னை என்பதால் இந்த இரண்டு குறித்தும் உடனடி ஆர்வம் மேலிட்டது.



                               சீனத் தொலைத்தொடர்பு

இந்த கட்டுரை வெறும் புள்ளிவிவரங்களுடன் நிற்கவில்லை. தொலைத்தொடர்பின் பெரும் வளர்ச்சி சமூகம் ஒன்றில்- அது சோசலிசம் கட்டப்படும் சமூகம் என சொல்லப்பட்டாலும்- எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் பேசுகிற கட்டுரையாக புரிந்துகொள்ளலாம்.

1980வரை தொலைபேசி என்பது இந்தியாவைப்போலவே அங்கும் ஒரு சிலரின் சிறப்பு சலுகை என்ற நிலைதான் இருந்தது. தொலைத்தொடர்பு அமைச்சர் வு ஜிசுவான் சொன்னபடி பார்த்தால் நாட்டின் மொத்த தொலைபேசிகள் அன்று  2009ல் ஹாங்காங்கில் இருந்த அளவுதான் இருந்தது. சீரமைப்பால் 2009ல் 100 கோடி தொலைபேசிகள் என்ற இலக்கை எட்டிவிட்டனர். இதை பெருமிதமாக ஜிசுவான் சொல்லியுள்ளார். சீன தொலைத்தொடர்பில் பெரும் மாற்றம் கொணர பங்களித்தவர் ஜீசுவான். குவாங்சு, சாங்காய் பகுதிகளில் தொலைபேசிக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது.

ஒரே டெலிகாம் எனும் ஏகபோகத்தை உடைத்து சீனா டெலிகாம் என்பதிலிருந்து சீனா யுனிகாம் என்பதை தனித்து வு  உருவாக்கினார். இந்த சீரமைப்பு 1994ல் நடந்தது என்றால் அவர் தொழில் அமைச்சர் ஆவதற்கு முன்பாக 1997ல்சீனா மொபல்’ எனும் கம்பெனியையும்  உருவாக்கினார். மார்க்கெட் மூலதனம் என்ற சோதனைக்கு அதனை உட்படுத்தினார். வெளிநாட்டவரா  அவர்கள் முதலீடா எனக் கேட்டு அஞ்சியவர்களை சமாதானப்படுத்தினார். சீனா மொபைல் சில ஆண்டுகளிலேயே 190 பில்லியன் டாலர்   market capitalisation யை பார்த்தது. மேலும் உயர்ந்து 400 பில்லியன் டாலர் என்றாகி உலகின் முதல் எனும் நிலையைத் தொட்டது. இவையெல்லாம் 2009ன் கணக்குத்தான்.

சீனா மொபைலென்பதிலிருந்து பிராட்பாண்ட் சேவைகளுக்குசீனா நெட்காம்’ என்பதை 2000ல் உருவாக்கினர். இங்கு இந்தியாவில் அப்போது மிக முக்கிய சீரமைப்பு நடந்தது. இன்று பெரும் போராட்டத்துடன் சந்தையில் நிற்கும் பி எஸ் என் எல் உருவாக்கப்பட்டது. சற்று கருத்து வேறுபாடுகளுடன் விவாதித்து சீனா  Fixed services  சேவையை வடக்கு- தெற்கு சீனா பகுதிகளில் தனியே பிரித்தனர். சீனா ரயில்வே தனக்கென தனியாக டெலிகாம் கம்பெனி வைத்துக்கொள்ள அனுமதித்தனர்.

இதெல்லாம் பற்றி கருத்துக்கள் வந்தபோது வு சொன்னது “ Telecom is a dynamic industry. If changes are needed, changes will happen. The Market will decide"    மாற்றம் அவசியமெனில் அதை சந்தைதான் தீர்மானிக்கவேண்டும் என்ற நிலைக்கு 2011ல் அவர்கள் டெலிகாமில் வந்ததைக் காண்கிறோம்.

 இந்தியாவைப் போல் அல்லாமல் 3G  ஏலத்தின்போது வு மிக முக்கிய கருதுகோளை வைத்தார். மக்களின் வாங்கும் சக்திக்கு மேல் விலை வைக்கப்படுவதற்கு ஏலத்தொகை காரணமாகிவிடக்கூடாது. குறிப்பாக அந்நிய கம்பெனிகள் விஷயத்தில் இதில் கவனம் வேண்டும் என்றார். இந்தியாவில் நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இந்த விஷயத்தில் கடுமையாக நடந்துகொண்டதன் விளைவாக பி எஸ் என் எல் தனது வங்கியிருப்பை பெருமளவு இழந்து சரிவின் துவக்கத்தைக் கண்டது.

சீன அதிபராக இருந்த ஹு ஜிண்டோ ஒரு சர்வே தேவை என்றார். 300 கேள்விகளுடன் டெலிகாம் குறித்த கேள்விகள் அனுப்பப்பட்டன. இண்டெர்நெட் பயனளிக்கிறதா- எதற்கெல்லாம் பயன்படுத்துகிறீர்கள். நெட்டிசன்களின் கமெண்ட்கள் உரியவர்களால் பார்க்கப்படுகிறதா? ஹூ சொன்னது  We must listen to the people and rely on their wisdom.  அதிபரே நமது கருத்துக்களை செவிமடுக்க தயாராக உள்ளார் என்பதில் நெட்டிசன்கள் உற்சாகம் பெற்றனர்.. 

Freedom of speech- less internet policing  என்ற கருத்து இளம் சீனர்களிடமிருந்து வராமலா போய்விடும். தலைவர்களுக்கு தேசிய பெருமிதத்தையும் (வளர்ச்சி)- சமூக நிலைத்தன்மையையும் (பதட்டமின்றி) எப்படி சமன் படுத்துவது- இரு கேள்விகள் வந்தன தகவலை கட்டுப்படுத்திமுன்னேற்ற சமூகம்’ என்பதை தடுத்திடுவதா? எந்த கட்டுப்பாடும் இல்லாமல் திறந்துவிட்டு சமூக ஒழுங்கில் நிலையின்மையை தேடிக்கொள்வதா- சங்கடம்தான்.

முதலில் அந்நிய இண்டெர்நெட் கம்பெனி எனில் ஓனர்ஷிப் என்பது முதலீட்டில் 50 சதம்தான் அதிகப்படியாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை உருவாக்கினர். அடுத்து இணைய தளங்கள் சமூக ஆரோக்கியத்தை கெடுக்கும் ஆபாச உணர்வுத்தூண்டலை செய்வதாக ((போர்னோகிராபி), அரசியல் ஸ்திரத்தனமையை சீர்குலைப்பதாக இருந்தால் தடை விதித்தனர். சீனாவின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டால் இணையங்கள் இருக்கும்- இல்லையெனில் தாட்சண்யம் ஏதுமின்றி அவை தடைக்குள்ளாகும். 80 மில்லியன் blogs , 5 million websites  எனில் அவற்றை கண்காணிப்பது சீனா அரசிற்கு பெரும் சவாலானது. இதுவும் 2009 கணக்குப்படிதான்.

முதல் IPO 100 மில்லியன் டாலருக்கு சீனா இண்டெர்நெட் கம்பெனி  NASDAQ  மூலம் திரட்டியது. Xinhua  ஏஜென்சி அனுபவம் ஒன்றை தகவல் மந்திரி பகிர்ந்துகொண்டார். 7000 ஊழியர்களில் 2000 பேருக்கு சொந்த வீடில்லாமல் இருந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என சிந்தித்தனர். சில பங்குகளை விற்றனர். அதன் மூலம் அனைவருக்கும் வீடு திட்டம் என்பதில் அந்த ஊழியர்கள் பலன் பெற்றனர்.  பிசினஸ் டு பிசினஸ் B2B  என்பதில் அலிபாபா வெற்றி குறித்த சோதனை ஒன்றையும் சீனா நடத்திக்கொண்டது. அலிபாபாவிடன் சீனாவின் சிறு குறு நடுத்தர தொழில்கள் 24 மில்லியன் கம்பெனிகள் இணைந்துகொண்டன.

 இண்டெர்நெட் விழிப்புணர்வால் சீன சிறைகளில் கொடுமைகள் நடக்கும்போது அவை வெளியாகும் நிலை ஏற்பட்டது. வன்புணர்ச்சிகள் நெட்டிசன் கண்டனங்களிலிருந்து தப்பமுடியாமல் போகும் நிலை ஏற்பட்டது. சோசலிசம் கட்டப்படுவதாக நம்பப்படும் நாட்டிலும் இந்த குற்றங்கள் நடக்கின்றன என நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல் குற்றச் செயல்களை எவரும் தொடர்ந்து மூடிவைக்கமுடியாத நிலையும் உருவானது. உள்நாட்டிலாவது சில குரல்கள் எழ  சமூக வலைதளங்கள் உதவின.

நிலைமைகளை சீன சமாளிக்க சிறிது கஷ்டப்பட்ட நிலையை அமைச்சர் ’காய் என்பவரின் கூற்று நமக்கு வெளிப்படுத்தும்.

Cai states that “when the Internet came into China, China wasn’t ready for large-scale information for the masses. The Internet pushed China into an information society while it was still undergoing industrialization,” he adds- “Therefore we encountered some problems that Western countries had not encountered. There is simply no one-model-fits-all.”

திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து சோசலிச சந்தைப் பொருளாதாரத்திற்கு போகும்போது சில ’சென்சார்ஷிப் அவசியம் என அவர்கள் முடிவெடுத்தனர்.. 99 சதம் எங்கள் தடைக்கு உள்ளாகும் இணையதளங்கள் ஆபாசங்களை தந்தவையே என்றார் காய். 2004ல் கொடுத்த கணக்கு ஒன்றின்படி ஆண்டுக்கு 2 லட்சம் ஆபாச படங்கள் குறிப்புகள் செய்திகளை இணையத்தில் இடம்பெற முயற்சிக்கப்பட்டதாகவும் , அதனால் பெருமளவு அவை தடுக்கப்பட்டாதாகவும் சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எந்த சமூகமும் இந்த நோயிலிருந்து தப்பமுடியாது போலும்.

 அரசாங்கத்தின் மீது ஆக்கபூர்வமாக செய்யப்படும் விமர்சனங்களைக் கொண்ட இணையங்களை நாங்கள் முடக்குவதில்லை என்கிறார்கள்.  அந்நிய நாட்டினர் செய்வதைவிட அதீதமாக ஆபத்தானதாக விமர்சனங்கள் அரசின் மீது செய்யப்பட்டால் அதை தடை செய்கிறோம் என விளக்கம் தருகிறார்கள். அந்நிய மீடியா நிறுவனங்களான வாய்ஸ் ஆப் அமெரிக்கா, பிபிசி, நியுயார்க் டைம்ஸ் போன்றவை சீன மொழியில் இணைய தளங்களை நடத்த முயற்சித்தபோது அவை தடைக்கு உள்ளாயின.

 இந்த புத்தகம் 2011ல் ராபர்ட் லாரன்சால் கொணரப்பட்ட ஒன்று. அதனால் இதில் 2009வரை நடந்தவைகளே நமக்கு கிடைத்துள்ளன. அடுத்த 13 ஆண்டுகளில் சீனா பெரும் வளர்ச்சியைத்தான் டெலிகாமில் நிறைவேற்றிக்கொண்டுள்ளது. உலகின் முதல் பெரும் தொலைத்தொடர்பு நெட் ஒர்க் என்ற பெருமையை வைத்துக்கொண்டுள்ளது. சீனா அரசாங்கத்தின் விவரப்படி சீனா தொலைத்தொடர்பு 5ஜி பாய்ச்சலில் சென்றுகொண்டிருக்கிறது. 5ஜிக்கான பேஸ் ஸ்டேஷன் மட்டும் 14.3 லட்சம் சீனா நிர்மாணித்துவிட்டது. ஆண்டு வளர்ச்சி என்பது 8 சதம் எனும் பிரமிப்பை தொடர்ந்து தருகிறது. தொலைத்தொடர்பு வர்த்தகம் 235 பில்லியன் டாலர்களாம்.  2021ன் படி இந்திய டெலிகாம் 40 பில்லியன் டாலர்களைக்கூட இன்னும் எட்டவில்லை எனும்போது சீனாவின் அசுர வியாபாரம் நமக்கு புரிபடலாம்.

சீனாவில் டெலிகாமில் சீர்திருத்தங்கள் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் மத்தியில் என்ன தாக்கங்களைத் தந்தன என இந்த புத்தகம் பேசவில்லை. வேலையிழப்ப்பிற்கு உள்ளாயினரா- புதிய தொழில்நுட்ப பயிற்சி பெற்றனரா- ஆட்குறைப்பு நடந்ததா- இடப்பெயர்விற்கு உள்ளாயினரா என்பதெல்லாம் அறியப்படவேண்டியவைகளாக இருக்கின்றன.

 இங்கு பேசப்பட்டுள்ளது போல் அந்த சமூகம் இப்படி தகவல் தொடர்பு வளர்ச்சி வழியாக மூச்சுத்திணறாமல் சில சுதந்திர வெளியைக் கண்டுள்ளது. ஆனால் கட்டுப்பாடுகள் இல்லாமல் இல்லை. கட்டற்ற சுதந்திரம் என்பதை அவர்கள் இன்றுள்ள நிலையில் கனவாகக் கூட காணமுடியாது. வாழ்க்கை வசதிகள் முன்னேறியிருக்க்கலாம்.  Moral Growth   நெறி சார்ந்த வளர்ச்சியில் அதன் குறியீடு- மக்கள் மகிழ்ச்சி குறியீடு- கடின உழைப்பு நேரத்திலிருந்து மாறி சுதந்திரமாக இருக்கும் நேரம் பற்றிய குறியீடு- அரசாங்கத்தை எதிர்க்க போராட இருக்கும் உரிமைகளின் குறியீடு என்பதெல்லாம் போதுமானதாக இல்லை என்கிற விமர்சனத்தை புறக்கணிக்கமுடியுமா எனத்தெரியவில்லை.

11-7-2022

ஆதாரம் :  அத்தியாயம் 28 How China's Leaders Think- The Inside Story of China's Past , Current and future Leaders 

No comments:

Post a Comment