Skip to main content

சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்

 

                  சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்

ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற தொகுப்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதியசைவ சித்தாந்தமும் மார்க்சியம்எனும் கட்டுரை ஒன்றும் இருக்கிறது. இந்த தொகுப்பு 1987ல் வெளியான ஒன்று.. இந்நூலில் மெய்கண்டர் தேவர் முதல் மார்க்ஸ்வரை தான் பேசியிருப்பதாக அடிகளார் சொல்லியிருப்பார்.

தோழர் கவிஞர் யுகபாரதி இது குறித்து முகநூல் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார். அடிகளார் 40 பக்கத்திற்குள்ளாகத்தான் தன் ஆய்வை நமக்கு தந்திருப்பார். அவரின் எழுத்துக்கள், பேச்சு எல்லாம் பொருள் பொதிந்ததாக சுருக்கமானதாக அதே நேரத்தில் அடர்த்தி நிறைந்ததாக இருக்கும். சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான்

பிற சமயங்களுடன் விவாதித்து அதில் தெரியும் குறைகளை சுட்டி நிராகரிப்பது போல ஒன்றல்ல மார்ச்கியம் என்பதை அடிகளார் முதலிலேயே சொல்லிவிடுவார். மார்க்சியத்தை உலகாயததத்தின் வளர்ச்சியாக அவர் பார்ப்பார். கடவுள் மறுப்பு தத்துவங்கள் தோன்ற காரணம் எவை என கேள்விகளைக் கேட்டு அடிகளார் ஆய்வை நகர்த்துகிறார் . சைவ சித்தாந்தம், மார்க்சியம் இரண்டையையும் கற்கும் மாணவன் தான் என்பதையும் அவர் அடக்கத்துடன் வைத்துவிடுவார்.



 சைவ சித்தாந்தம் 13 ஆம் நூற்றாண்டில் முழுமையடைந்த ஒன்று. உலகாயதம் 19 ஆம் நூற்றாண்டில் மார்க்சியமாக முழுமை பெற்ற ஒன்று. இட - கால வேறுபாடுகள் இருந்தாலும், மானுட சிக்கல்கள்  ஒன்றுபோல இருக்கின்றன. சோவியத், சீனா சுற்றுப்பயணத்தில் அங்கும் சிக்கல்கள் இருப்பதை உணர்ந்ததாக அடிகளார் தெரிவிக்கிறார்.

சைவம் மிகப் பழமையான நெறி. உலகின் சமயங்களுக்கே கூட  மூத்த நெறி என்கிற குரல் அடிகளாரிடம் எதிரொலிக்கும். சிந்துவெளியில் சிவலிங்கம் உண்டு- சங்ககாலத்தில் சைவ சமயம் உண்டு. வைணவமும் கூட சங்க காலத்தில் என்பார் அடிகளார். சங்க இலக்கியங்கள் மறு பிறப்பை ஏற்கின்றன. சைவைத்திலும் அந்த நம்பிக்கை உண்டு.

 சைவ சித்தாந்த சமயம் என்பது அறிவாய்வுடன், வழி வழியான ஆசிரியர்களால் உபதேசம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்ட சமயம். நல்லெண்ணம், நல்வாழ்க்கை நோக்கம் கொண்ட சமயம். பிற சமய சாத்திரங்களைவிட சைவம் எப்படி மேலானது என்பதை நிறுவிடும் நூல்களாக மெய்கண்ட சாத்திரங்கள் இருப்பதை அடிகளார் சொல்வார்.

 சைவ சித்தாந்தத்திற்கும் மார்க்சியத்திற்கும் மாறுபாடுகள் உள்ளன என்பதை அடிகளார் ஏற்றாலும் அவை முரண்பட்டவையோ, முற்றிலும் உடன்பட்டவையோ அல்ல எனச் சொல்வார். முக்கிய வேறுபாடு கடவுள் ஏற்பு, மறுப்பு என்பதில் இருக்கிறது. உலகத்தோற்றம், உயிர் நிலை, உழைப்பின் மேன்மை, உழைப்பாளர் தகுதி ஆகிய அம்சங்களில் இரண்டும் ஒன்றுபடுகின்றன என அடிகளார் விளக்குவார்.

மார்க்சின் ஆய்வுப் புலத்திற்குள் சைவ சித்தாந்தம் கிடைக்கப்பெறாமல் போனது தமிழர்தம் குறையே என ஏற்பார் அடிகளார். மார்க்சியம் வறட்டுத்தன நாத்திகம் என்பதை ஏற்கவில்லை. அங்கு ஆக்கும் தன்மை ஓங்கி நிற்பதை அவர் குறிப்பிட்டு சொல்வார். மார்க்சியத்தை வெறும் பொருளாதார மேம்பாடென சுருக்காமல், அதை வாழ்க்கை முறையாக, நெகிழ்ந்து கொடுக்கும் தத்துவமாக, மனித குல மேம்பாட்டை வரித்துக்கொண்ட தத்துவமாக அடிகளார் புரிதல் செல்லும்.

சைவ சித்தாந்தம், மார்க்சியம் இரண்டிற்குமான ஒத்திசைவை அறிஞர் பெருமக்கள் தேடித்தருவாராயின் இம்மண்ணுலகத்தை விண்ணுலகமாக மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை அடிகளாரிடம் வெளிப்பட்டது. சைவசித்தாந்தத்தால் அயல் வழக்கு கலப்புகளை தவிர்த்து தன் தனித்த்னமை கொண்டு மக்களுடன் இயங்கி, நம்பிக்கை விதைத்து இன்பச் சமுதாய விழிவை உருவாக்க முடிந்தால் அதுவும் அருமையானது என்பார் அடிகளார். அப்படி செய்ய முடிந்தால் அது மார்க்சியத்தால் அமையப்பெறும் சமுதாயத்தைக் காட்டிலும் சிறந்த அகநிலை உணர்வுகள் கொண்ட சமூகமாக இருக்கும் என்ற கருத்தையும் அடிகளார் பிரதிபலித்தார்.

 உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை அல்ல என சைவ சித்தாந்தமும் கருதும். மார்க்சியமும் டார்வினின் பரிணாமக்கொள்கையை உயிர் குறித்த கொள்கையாக ஏற்கிறது. சைவ சித்தாந்தத்திற்கு சிவப்பிரகாசத்தை எடுத்துக்கொண்டு விவாதித்தால், மார்க்சியத்திற்கு எங்கெல்சின் நூல்களை எடுத்துக்கொண்டு விளக்குவார் அடிகளார். உயிர்கள் தோன்றியவையுமல்ல அழியக்கூடியவையுமல்ல என்பது அறிவியல் பார்வைக்கு ஏற்ற ஒன்று என்பார் குன்றக்குடி அடிகளார்.

அறியாமையிலிருந்து உயிர் அறிவை நோக்கி தொடர்ந்து வளரவேண்டும் என சைவசித்தாந்தம் விளக்குகிறது. அந்த அறியமைதான் நான் - எனது என்பதற்கு காரணமாகி பொதுமைக்கு விரோதமாக நிற்கிறது. இதிலும் மார்க்சியம் ஒத்துப்போகும். நான் எனது அற்ற நிலை சீவன் சிவத்தன்மை அடியும் நிலை என சைவம் ஏற்கும்.

 மார்க்சியம் அறியாமையை இயற்கையானது என எண்ணாமல்,  அறிவதற்கு வாய்ப்பற்ற காரணத்தின் வெளிப்பாடாக பார்க்கும். அடிகளார் எப்போதும் அறியாமைக்கு ஒன்றும் தெரியாமை என்ற விளக்கம் தரமாட்டார். பதிலாக ஒன்றை பிறிதொன்றாக முறை பிறழ அறிதலே அறியாமை எனச்சொல்வார். சைவ சித்தாந்தம் உயிர்களின் அறிவை சிற்றறிவு என எல்லைப்படுத்திக்கொண்டால் மார்க்சியம் அப்படியொரு எல்லையை வைத்துக்கொள்ளாது.

சைவத்தில் சிவப்பற்று துணைநின்று ஞானநிலை எய்தலாம். மார்க்சியம் அப்படி எந்த சிவனையும் அல்லது வேறு இறைத்துணை வழி நின்று ஞானம் என்பதை ஏற்பதில்லை. உழைப்பு- உற்பத்தி- அதன் வகைப்பட்டு சமதையான வாய்ப்புகள்- அறிவு விரிவாக்கம் என அது தன்னை தகவமைத்துக்கொள்ளும். மார்க்சிய அறிவுலகம் பெறும் வெற்றி சைவம் காட்டும் வழியான அன்பு வழியில் வந்து தன்னை தகவமைத்துக்கொண்டால் மானிட வரலாறு சிறக்கும் என்பது அடிகளார் வந்தடையும் முடிவு.

மார்க்ஸ், லெனின் போன்றவர்களை மார்க்சியர் தங்கள் வழிகாட்டும் விளக்காக ஏந்துவர். சைவ சித்தாந்தம் கடவுளை அப்படி விளக்காக கொள்ளும் என்பார் அடிகளார். அங்கு ஞானம் என்பது இறை துணையால் கிடைக்கப்பெறுவது. பிறவெல்லாம் சிற்றறிவு எனும் எல்லைக்குள்ளானது. மார்க்சியம் இப்படி பார்ப்பதில்லை.

உழைப்பு, அதன்வழி தொழில் முன்னேற்றம், அறிவு பெற்று அதை விரிவாக்கிக்கொண்டேயிருத்தல் என்பதில் சைவ சித்தாந்தமும்  மார்க்சியமும் முரண்படுவதில்லை.

மார்க்சியத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று அதன் சர்வதேச மானுட பார்வை. நாடு, மொழி, இனம் என்பதைக் கடந்து அது உலகத்தொழிலாளர்களே என விளித்தது. இயற்கை - மனிதரின் உழைப்பாற்றல்- மானுடத்துவம் என மார்க்சியம் விரியும். சிவஞான போதம் நாடு, மொழி, சாதி, இனம் என்பதை பயிலவில்லை என கூர்ந்தறிய அடிகளார் வேண்டுவார். அங்கு உயிர்களின் தலைவனான இறைவனும் தொழில் தலைவனாக பார்க்கப்படுவதாகவும் அவர் விளக்குவார். உலகுக்கு அம்மையப்பர் என விளித்தலையும் சொல்வார்.

 திருக்கோயில் வழிபாட்டுரிமையை கோடானுகோடி மக்களுக்கு தராத தவறை- தீண்டாமை எனும் தவறை சமயம் வழி அமைந்த  சமூகம் செய்துவிட்டதை அடிகளார் விமர்சனத்துடன் முன்வைப்பார். மனித குலத்தை ஒருமையுடையதாக காணவேண்டும் என்ற விழைவு இரு சித்தாந்தங்களிலும் இருக்கிறது.

 சைவ சித்தாந்த ஆய்வாளர்கள் காலத்தில் முதலாளித்துவம் என்பது இருந்ததில்லை. ஆனால் வறுமை இல்லாமலா இருந்திருக்கும். நுகர்வு குறித்த எல்லைச் சுருக்கம் காரணமாக இத்துறையில் அவர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என அடிகளார் தனது ஏற்பைத்தருவார்.

வினை, விதி, ஊழ் என்பதை சைவம் பேசும். வினை என்பது செயல். மனதினால் ஆனதும் கூட. செயல் பயன் அனுபவிப்பை அதாவது துய்ப்பிற்கு வந்தடைய செய்யும் நியதியை விதி என்பர். பயன்கள் அந்த நியதிகளின்படி வினையாற்றியவர்க்கு வந்து சேர்வது ஊழ். இது இம்மை, மறுமை என இருப்பைக்கொள்ளும்.

ஏழை பணக்காரன் எனும் ஏற்பாடு சுயநல மனிதர்களின் ஏற்பாடே. சமய நூல்களில் இதற்கு மறுப்பு காணப்படாமல் இருக்கலாம். ஆனால் இந்த முறையில் புனிதமில்லை என்பதை அடிகளார் ஏற்பார். உழைப்பின் வழி ஊழ் எனச் சொல்லி உபரியை சிலர் எடுத்துச் செல்வதை சைவ சித்தாந்தம் ஏற்கவில்லை. அங்க்கீகரிக்காது என்கிறார் அடிகளார். ஏழை பணக்காரன் வேறுபாட்டை ஊழ் வழி சொல்வதை அடிகளார் ஏற்கவில்லை.

உழைப்பாளியின் சுரண்டலை வெளிக்கொணர்ந்து அதை மாற்றும் வழியையும் தெளிவாக விளக்கிய முதல் மேதை மார்க்ஸ்தான் என்பார் அடிகளார். பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பிற்குரிய அடிப்படைக் கொள்கைகள் பொறுத்தவரை சைவ சித்தாந்தச் சமயத்திற்கும் மார்க்சியத்திற்கும் வேறுபாடில்லை என்பதையும் அடிகளார் விளக்குவார்.

உலகத்தை உணமையானதாக இயற்கையானதாக உள்பொருளானதாக இரு தத்துவங்களும் பார்க்கின்றன. அதேபோல் உயிர்கள் துய்ப்பிற்கு தேவையானவற்றை இவ்வுலகிலேயே பெற வாய்ப்புண்டு என்பதையும் அவை ஏற்கின்றன. இவற்றில் ஒத்து நிற்பதை ஓர்ந்தறிக என வேண்டுவார் அடிகளார்.

 மானிடரின் தரம் உயர்த்தி ஆன்மாவை செழிப்புறச் செய்தல் என்பதை சைவம் ஏற்று நிற்கும். மானுட வாழ்க்கை செறிவான அர்த்தம் கொண்டதாக மாற- மாற்றிட மார்க்சியம் விழையும். இதிலும் ஏற்பு என்பார் அடிகளார்.

 அம்மையப்பர், சக்தியும் சிவனும், ஆதிபகவன் போன்றவற்றைக் காட்டி தமிழ் சமய நெறியில் பெண்ணிற்கு இணையான பங்கு என்பதை அடிகளார் சொல்வார். நியாயம் நீதிகேட்ட மரபாகவும் சைவம் இருப்பதை அப்பரின் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் வரிகளைச் சொல்லி அடிகளார் பேசுவார். மார்க்சியம் நீதியான சமூக அமைப்பை, பெண்களை இணையாக நடத்தவேண்டிய சமூக அமைப்பையே பேசும்.

சிந்தனை பொருள்களிலிருந்து என்பதை பொருள்முதல்வாதமாக மார்க்சியம் பேசுவதற்கு உகந்ததாகவே சைவ சித்தாந்தம் இருப்பதாக அடிகளார் காட்டுவார். ஆன்மா அல்லது உயிர் சார்ந்ததன் வண்ணமாகும். உடனுறைவின் பயன் பெற்றார் என்பது சமூக விஞ்ஞான தொடர் என்பார் அடிகளார்.

 கடவுள் இருப்பு, மறுபிறப்பு, அறிவின் செயல்பாட்டின் எல்லை போன்ற அம்சங்களில் மார்க்சியம் சைவ சித்தாந்தம் சொல்வதை ஏற்காது. மார்க்சியம் எப்படி செயல் தத்துவமோ அப்படியே சைவ சித்தாந்தமும் செயல் மூலம் தன்னை புதுப்பித்துக்கொள்ள விழையும் ஒன்றே. அதில் மானுடம் தழைக்க வேறுபாடுகள், சமூகத்தீமைகள் நீங்கிய சைவ நெறி மேலான சமூகத்தையே விழையும்.

அடிகளார் 40 பக்க அளவில் பேசியதை மேலே முடிந்தவரை மிகச் சுருக்கமாக  என் புரிதலுக்கேற்ப பதிவிட்டுள்ளேன். பேரா கா. சிவத்தம்பி அவர்களின் கருத்துக்களையும் சேர்த்து பார்த்தல் நலம் எனத் தோன்றியதால் அவரின் மதம் குறித்த பார்வையையும் மிகச் சுருக்கமாக வைத்துள்ளேன்.

                                         2

தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும் என்கிற பேரா சிவத்தம்பி அவர்கள் 1981ல் எழுதி 1983ல் வந்த ஒன்று. இந்த கட்டுரை தொகுப்பில் சைவ சித்தாந்தம் ஒரு வரலாற்று நோக்கு என்ற கட்டுரை ஒன்றும் உண்டு.

மதம்- இலக்கியம் எனும் உறவுப்பாட்டை சிவத்தம்பி பேசுவார். மதத்திற்கு இலக்கிய அவசியமும், இலக்கியங்களில் அன்று ஆத்ம உயிர்ப்புகள் மதமில்லாது இருக்கவில்லை என்பதையும் அதில் அவர் சொல்வார்.

மதம் என்பது நம்பிக்கைகளின் தொகுப்பன்று, சமூக உறவு- உற்பத்தி உறவுடன் சம்பந்தம் கொண்டது. அது நிலவுடைமை அமைப்பில் சமூக உற்பத்தி உறவின் முக்கிய அங்கமாகும். மதமோ இலக்கியமோ தமக்கென முற்றிலும் தனியான இயங்குதளம் கொண்டவையல்ல. மனிதக் குழும முழுமையின் பல்வேறு பரிமாணங்களில் அவையும் உள்ளவை. சமூக வாழ்க்கைதான் அடிப்படை.

மதத்திற்கான 6 பொது பரிமாணங்களையும் சிவத்தம்பி தருவார். கோட்பாடுகள், ஐதீகங்கள், ஒழுக்கநெறி போதனைகள், சடங்குகள், சமூக நிருவனங்கள், மத அனுபவ உந்துதல். Faith  Rituals Myths  அதாவது நம்பிக்கை, சடங்கு, ஐதீகம் அதற்கு அவசியமானவை.

மொழிநிலைப் பண்பாடு என்பது மதத்தை ஓர் உப பண்பாடாக வைத்திருக்கும். மொழி எனும் பொதுக் களஞ்சியத்திலிருந்தே மதத்தினர் கருத்துக்களை எடுத்துக்கூற வேண்டியிருக்கும். அதேநேரத்தில் இந்த உப பண்பாடு முழு பண்பாட்டையும் தன் மேலாதிக்கத்திற்கு கொணர முயற்சிக்கும்.

மதத்துக்கும் ஆட்சிமுறைக்கும் நெருங்கிய உறவு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததாகும். பெரும்பாலும் இவ்வுறவு சுமுகமாக இருக்கும். சிலநேரம் முரண் உருவாகலாம். சமூக மாற்றம் நிகழும் சூழலை தன்மையை கொண்டு இந்நிலை தீர்மானிக்கப்படும். சோழர்களுக்கும் சைவ சித்தாந்தத்திற்குமான உறவை சிவத்தம்பி சொல்வார்.

தெய்வத்தை தன்னிலைப்படுத்தி, மனித உறவுப் படிம அடிப்படையில் அத்தெய்வத்துடன் உறவு கற்பித்துக்கொண்டு அந்த உறவின் அடிப்படையில் தோன்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே பக்தி அனுபவத்தின் அச்சாணியாகும். இந்த தமிழ் பக்தியின் சாரம் வடக்கு நோக்கியும் பரவியது.

இதில் கார்ல் மார்க்ஸ் சொன்ன பிரக்ஞை பற்றிய மறுதலை உணர்வை சிவத்தம்பி சொல்வார். மறுதலை உணர்வின் மூலம் பக்தி ரசத்தில் அவர்கள் மனிதநிலை சாரத்தையே காண்பதாகவும் சொல்வார்.

ஐரோப்பிய செல்வாக்கிற்கு முற்பட்ட தமிழர் சிந்தனை முற்றிலும் சமய சார்பற்றதாக இருக்கவில்லை. ஒழுக்க நெறிகள் பாரம்பரிய மதங்கள் சுட்டும் அற அடிப்படை வழியாகவே வருவன என்பார் சிவத்தம்பி.

 மெய்யியல் என்பது சமூக சிந்தனையின் உன்னதமான கருத்துப் பிரமாண நிலை.  சைவ சித்தாந்தம் என்பது மெய்யியற் கோட்பாடு. அது தமிழர் சமூக வரலாற்றை அறிய உதவும்.  ஆரிய பிராம்மண வழிப்பட்டதல்ல என்பதை நிறுவவும், தமிழ்- தமிழக தனித்துவம் பற்றிய அறிவுவாதமாக சைவ சித்தாந்தம் தெரியும்.

சோழர் காலத்து நிலவுடைமை அமைப்பின் மேற்கட்டுமானமாக சைவ சித்தாந்தத்தை கைலாசபதி போன்றவர்கள் 1960 களில் பார்த்தனர். கர்நாடகத்தில் பசவரின் வீரசைவம் மூடப்பழக்க வழக்கங்கள், பிராமண தர்மம் எதிர்த்தும் நின்றதை சிவத்தம்பி காட்டுவார். அதேநேரத்தில் இராமனுசர் நிலைநிறுத்திய அளவு சமூக நெகிழ்ச்சி சைவ சித்தாந்தத்தில் காணப்ப்டவில்லை என்பதும் உண்மை என்பார் சிவத்தம்பி.

சோழர் ஆட்சியின் சிதைவில் பிராம்மணர் அல்லாத மடங்கள் முக்கியத்துவம் பெற்றதையும் சிவத்தம்பி பார்க்கக்கோருவார். அதன் முக்கிய சமூகப் பண்பு வேளாளச் சார்பு- அது பிராமண எதிர்ப்பு தொனிகளைக் கொண்டதாக வளர்ந்தது. சிவஞானபோதம் பிராமணரல்லாத  மெய்கண்டார் எழுதியதுதான். சித்தாந்த அஷ்டகம் எழுதிய உமாபதி சிவாசாரியார் பிராமணரானாலும் வருணாசிரமத்தை போற்றவில்லை.

 சைவ சித்தாந்த விருத்தியை தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய பிராமண சார்பற்ற மடங்கள் செய்தன. சைவ சித்தாந்தம் சங்கரரின் மாயவாதத்தை எதிர்த்த ஒன்று. உமாபதி சிவாசாரியார் தொன்மை என்பதால் நன்மை நன்று என்பதில்லை. இன்று தோன்றிய நூலானாலும் தீதாகா என்பதை எடுத்து சொல்லியிருப்பதை சிவத்தம்பி காட்டுவார். அதாவது 13 ஆம் நூற்றாண்டில்தான்  நிலைபெற்றது என்பதால் தீதாகாது எனச் சொல்லியதைக்  சிவத்தம்பி காட்டுவார்.

 பிராமணியத்தின் வலிமை குன்றிய நிலைமையில் பக்தி இயக்க வழியில் சைவ நெரிமுறைகள் மெய்யியற்கோட்பாடாக வளர முடிந்ததையும் சிவத்தம்பி காட்டுவார்.

இனி மார்க்சியர் பொதுவாக மதம் குறித்து எத்தகைய பார்வையை வெளிப்படுத்தி வருகின்றனர் என சுருங்க சொல்லலாம். மார்க்சின் கீழ்கண்ட வரிகள்தான் அதிகமாக மேற்கோளாக காட்டப்படும்.

Religious suffering is, at one and the same time, the expression of real suffering and a protest against real suffering. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people.

மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஜீவனற்ற நிலைகளின் ஜீவனாகவும் இருக்கிறது. அது மக்களுக்கு அபினியாக இருக்கிறது.

மேலும் மார்க்ஸ் இந்த மயக்கு நிலை மகிழ்ச்சியிலிருந்து மனிதனை உண்மையான மகிழ்ச்சிக்கு அழைத்து செல்வதில்தான் மத ஒழிப்பு கடமை இருக்கிறது எனப் பேசுவார்.

The abolition of religion as the illusory happiness of the people is the demand for their real happiness. To call on them to give up their illusions about their condition is to call on them to give up a condition that requires illusions. The criticism of religion is, therefore, in embryo, the criticism of that vale of tears of which religion is the halo.

மனிதன் தன்னிடமிருந்து விலக்கப்பட்ட அல்லது பறிக்கப்பட்ட இந்த உலகை- அப்படி நடப்பதற்கான காரணகாரிய அறிவை பிறழ்வாக புரிந்து அறியாமையில் இருப்பதையே அவனின் சமய உணர்வாக/ பற்றாக மார்க்சியம் காணும். அவன் தற்காலிக அமைதியை ஆறுதலை அதன் மூலம் பெறலாமே தவிர அதனால் நியாயத்தை நிலைநிறுத்த முடியாது. ஏனெனில் அது அரசுடன் கொள்ளும் ஏதோவொரு உறவாலும் பாதுகாக்கப்பட்டுவருகிறது என்ற புரிதல் மார்க்சியர்களிடம் உண்டு.

எனவே ஒருவரின் மதம் தேவைப்பட்டு இறையை இறைஞ்சும் சூழலிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். அப்படியொரு சமூக அமைப்பை சாத்தியப்படுத்தினால் அங்கு மதம் எனும் அபின் போன்றவை தேவைப்படாமல் போகலாம் என்பது மார்க்சியர்களின் புரிதலாக இருக்கிறது.

நாத்திகர்கள் கருத்துமுதல்வாத பார்வையில்தான் மதம் குறித்து பேசிவருகின்றனர். ஆனால் அதை பொருள்முத பார்வையில் அணுகவேண்டும் என்பர் மார்க்சியர். நாத்திக கடவுள் மத மறுப்பு பிரச்சாரத்தை வர்க்கப்போராட்டத்திலிருந்து தனித்த ஒன்றாக பார்ப்பதை மார்க்சியர் ஏற்பதில்லை. மதம் கடவுள் குறித்த விமர்சனத்தை சமூகத்தின் வர்க்க நிலைகள் குறித்த விமர்சனமாக அதனுடன் இணைந்த போராட்டமாகவே மார்க்சியர் பார்ப்பர்.

லெனினும் ஒருவரை மதப்பற்றுள்ளவர் என்று பார்ப்பதைவிட அவர் கட்சியின் கொள்கை திட்டத்தை ஏற்பவராக இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டையும் எடுத்தார். அதேநேரத்தில் கட்சியில் மதபோதனைகள் செய்ய அனுமதிக்க முடியாதென்றார்.

1949 மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்கு பின்னர் அமைந்த 75 ஆண்டுகளை நெருங்கப்போகும் சீன சமுதாயத்தில் மதம் இன்றும் அவர்களால் ஒழிக்கப்படமுடியாத ஒன்றாகவே, மக்களின் நம்பிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் மதிப்பளிக்கவேண்டிய நிலையிலேயே இருப்பதைக் காண்கிறோம். அங்கு மத சுதந்திரம் குறித்த அரசியல் அமைப்பு ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம்.

இந்தப் புரிதல்களை உள்வாங்கியவராகத்தான் அடிகளார் சைவ சித்தாந்தம் மார்க்சியம் என்கிற இரண்டு தத்துவங்களையும் சமதையான சமூக நல்வாழ்விற்காக, மானுட மேம்பாட்டை நோக்கிய நகர்தலுக்காக இணக்கப்படுத்தி பார்த்துள்ளார் என புரிந்து கொள்ளலாம்.

30-7-2022

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா