https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, July 21, 2022

காந்தியின் ஹிந்த் சுயராஜ் – சில மூலக்கூறுகள்

 

காந்தியின் ஹிந்த் சுயராஜ் –  சில மூலக்கூறுகள்

காந்தியடிகளின்  1909 லண்டன் பயணம் சரியான முடிவுகளை தீர்வுகளை எட்ட அவருக்கு உதவாமல் போனது. நவம்பர் 1909ல் தென்னாப்பிரிக்கா திரும்புவதற்கான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கப்பல் பயணத்தில் இன்றும் புகழ் வாய்ந்ததாக விரிவான விவாத திறப்புகளை தன்னளவில் வைத்துக்கொண்டிருக்கும் அவரது ஆக்கமான ஹிந்த் ஸ்வராஜ்- இந்திய சுயராஜ்யம் எழுதப்பட்டதை அனைவரும் அறிவோம்.

கப்பல் பயணம் என்றாலும் தனது வேலைகளை விடாது செய்பவர் காந்தி. டால்ஸ்டாயின் ’Letter to The Hindu’ வை அவர் குஜராத்தியில் மொழிபெயர்க்கிறார். டால்ய்டாய் அவர்களால் தார குவட்ட தாஸ் எனும் இளைஞருக்கு எழுதப்பட்ட பதில் தான் அக்கடிதம். தார குவட்ட தாஸ் வான்கூவரில் வசித்தவர். ஃப்ரி ஹிந்துஸ்தான் என்கிற புரட்சிகர பத்திரிகை ஒன்றை அப்போது நடத்தி வந்தார் தாரகுவட்டா.

பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எறியும் உரிமை இந்தியர்களுக்கு இருக்கிறது என்பதையும் அதற்காக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி அவசியமாகிறது என்கிற வாதத்தை முன்வைத்து தாஸ் எழுதிய கடிதத்திற்கு டால்ஸ்டாய் பதில் எழுதியிருந்தார். ஒயின் வியாபாரி விற்கிறார் என்பதற்காக அதை வாங்கி குடித்துவிட்டு வியாபாரியை மட்டும் குறை சொல்வது ஏற்கத்தகுந்ததா? தங்களை அடிமையாக்கும் சூழலை இந்தியர்களே உருவாக்கிக்கொண்டனர். ஆயுதங்களைவிட சிறந்த கருவி ஒத்துழையாமையே என அந்த இந்துவிற்கு டால்ஸ்டாய் எழுதியிருந்தார்.



இதைப்படித்த காந்தியால் எப்படி ஏற்காமல் அதைக்கொண்டாடாமல் இருக்கமுடியும். அதை வெளியிடுவதற்கான அனுமதியுடன் ’அவதாரம்’ குறித்த டால்ஸ்டாயின் வரிகளை விலக்கிவிட்டு பிரசுரம் செய்வதற்கான ஒப்புதலையும் காந்தி கடிதம் மூலம் டால்ஸ்டாயிடம் கேட்டிருந்தார். டால்ஸ்டாய்க்கு அந்தப்பதமான reincarnation அப்படியே இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும் காந்தியின் விருப்பத்தை மறுக்காமல் ஒப்புதல் அளித்திருந்தார்.

கப்பலில் குஜராத்தி மொழி பெயர்ப்பு என்ற வேலையுடன் மேலே குறிப்பிட்ட இந்திய சுயராஜ்யம் எனும் புத்தகம் எழுதும் வேலையையும் காந்தி செய்தார். ஒன்பதே நாட்களில் தனது கையெழுத்தில் 271 பக்க அளவில் – அச்சு எனில் 70 -80 பக்க அளவிலான புத்தகமாக- வலது கை வலித்தால் இடதுகையால் என காந்தி எழுதிமுடித்தார். சுமார் 50 பக்கங்களாவது இடதுகை வேலைப்பாட்டுக்குரியதாக இருந்தன.

இந்திய சுயராஜ்யத்தை விறுவிறுவென அவர் தங்கு தடையின்றி எழுதிமுடித்தார் என்பதும் பரவலாக பலர் அறிந்த செய்தி. அவர் மனதில் அலைமோதிய பல விவாதங்கள் அடங்கி தெளிவை அவருக்கு வழங்கிய நிலையில் அந்த ஆக்கம் ’டயலாக்’ எனும் வகைப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது. வன்முறைவழி உகந்ததா? மேற்கு நாகரீகம் என்பது கிழக்குடன் சந்திக்காதா? அப்படி ஒரு சந்திப்பு புள்ளி வரலாறு நெடுக இருந்ததேயில்லையா? இந்தியா போன்ற கிழக்கு நாடுகள் உய்த்தேற மேற்கின் பொருளாயத முன்வைப்பு நாகரீகம் மட்டும் தான் உகந்த வழியா ? மேற்கின் உருவாக்கம் தீமைகளை தரவில்லையா? அப்படியாயின் எவை அவை? வாருங்கள் விவாதிப்போம் என்றே காந்தி அதில் அழைத்திருப்பார்.

காந்திக்கு இந்திய மூலங்களிலிலும், மேற்கின் பொருளயதவாத மறுப்பை முன்வைத்து மாற்று உரையாடல்களை எழுப்பிய மரபின் மூலங்களிலும் நாட்டம் இருந்தது. தன் சிந்தனைக்கான முன் தேவைகளாக அவற்றையே அவர் எடுத்துக்கொண்டார். எனவே மேற்கின் ஏதோவொருவகையை அதை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எடுத்துக்கொள்ளும் இந்தியர்களிடம் அவர் உரையாட வேண்டியிருந்தது. மேற்கே உலகின் நாகரீக திறப்பிற்கான வழி என அதிகாரங்களை எடுத்துக்கொண்டு பிறரை நாகரீகப்படுத்தும் இறை கடமை தங்களுக்கானது என சுய நியமனம் செய்துகொண்ட மேற்குலக அதிகாரம் குறித்தும் அவர் உரையாட வேண்டியிருந்தது.

லண்டன் ’இந்தியா இல்லம்’ வாழ் மாணவர்கள் ஷ்யாம்ஜி கிருஷ்ணவர்மா  பொருளாதார ஆதரவில், சாவர்க்கரின் தேசபக்த உணர்ச்சி ஊட்டலில் இருந்தனர். அப்படி இரையானவர்களில் ஒருவரான மதன்லால் திங்க்ரா பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் சார்ந்த சர் கர்சான் வைலியை காந்தி லண்டன் வரும் அந்த ஜூலை 1909 சூழலில் படுகொலை செய்திருந்தார். கைது, வழக்கு முடிந்து ஒரேமாதத்தில் திங்க்ரா தூக்க்கில் ஏற்றப்பட்டு இந்திய விடுதலைக்கான தியாகியாகிறார்.

காந்தியைப் பொறுத்தவரை திங்க்ரா அப்பாவி. செய்வதின் தன்மையை அறியாமல் தவறான செயலுக்கு தன் உடலை அர்ப்பணித்தவர். அவரை அந்த வெறித்தன மயக்கத்தில் ஆழ்த்தியது எது என்பதே காந்திக்கு முக்கியமானதாகப்பட்டது. இப்படிப்பட்ட எண்ணங்கள் விதைக்கப்பட்டு அவர்களை intoxicationக்கு அழைத்துச் சென்ற சிந்தனையுடன் அவர் உரையாட முயற்சித்தார். காந்தியும் சாவர்க்கரும் இணந்து கூட்டம் பேசவேண்டிய தசரா விழாச் சூழல் அக்டோபர் 24, 1909ல் உருவானது. காந்தி ராமனின் கல்யாண குணங்களை வர்ணித்து ராவண வீழ்ச்சி சாத்தியமானதை உயர்த்திப்பிடிக்கிறார். கடமை, நிதானம், பொறுமை, அஞ்சாமை, அமைதியும் கனிவும் எனும் ராமனின் குணங்களை வரித்துக்கொண்டு பிரிட்டிஷ் வீழ்ச்சியை உருவாக்க முயற்சிப்போம் என்கிறார். சாவர்க்கரோ ராமனுக்கு முன்னரான தசரா நாட்கள் பத்து கரங்களிலும் ஆயுதம் ஏந்திய துர்க்கைக்கானது. மீட்சி துர்க்கா வழியில் என்கிறார். வன்முறை ஆயுத வழியா - துன்பங்களை அஞ்சாமல் ஏற்று அமைதிவழியில் உறுதியாக நின்று தீர்வா? எது வழி எனும் உரையாடல் பெருக்கப்பட வேண்டிய அவசியத்தை காந்தி உணர்கிறார்.

அடுத்து அவருக்கு ஏற்பட்ட மற்றொரு வாய்ப்பில் தனது confession of faith 1909 என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். நண்பர்கள் சந்திப்பு இல்லத்தில் கூட்டம் ஒன்றிற்காக காந்தி லண்டனில் அழைக்கப்படுகிறார். அழைப்பை தந்தவர்கள் Hampstead Peace and Arbitration Society பொறுப்பாளர்கள். தலைப்பு கிழக்கும் மேற்கும் எனத் தரப்பட்டிருந்தது.

காந்தியிடம் டால்ஸ்டாயின் இந்துக்கு கடிதம் மனதில் படிந்திருந்தது. தவிரவும்  ஜி.கே செஸ்டர்டன் அவர்களின் பதிவொன்றும் அவரிடம் செல்வாக்குடன் நிலைத்தது. இந்தியன் சோசியாலஜி பத்திரிகையை  ஹெர்பர்ட் ஸ்பென்சர் செல்வாக்கில் ஷ்யாம்ஜி நடத்திக்கொண்டிருந்தார். அந்தப்பத்திரிகை எழுத்துக்களைப் பார்த்து அந்த இந்தியர்களின் புரிதலுக்கு எதிர்வினையைத்தான் செஸ்டர்டன் தன் கட்டுரை ஒன்றில் தந்திருந்தார்.

செஸ்டர்டன் கட்டுரை இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி லண்டன் இதழில் 1909 செப்டம்பரில் வந்திருந்தது. காந்தி அதை முழுமையாகப் படித்தார். செஸ்டர்டன் இந்தியர்கள் தங்களுக்கு விடுதலை வேண்டும் எனக்கோரி வருகிறார்கள். ஆனால் சுதந்திரம் என்றால் என்னவென்று அறியாமலேயே கேட்கிறார்கள். இந்தியர் தேசியம் பேசுவதில் இந்தியனும் இல்லை தேசியமும் இல்லை. அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரிடம் அவர்கள் என்ன கோருகிறார்கள். நீங்கள் ஏற்படுத்திய நிறுவனங்களை எங்களிடம் தாருங்கள். நாங்கள் மந்திரியாகிறோம்- பிரதமர் ஆகிறோம். ஓட்டுப்பெட்டியை வைப்பீர் என்கிறார்கள். எங்கள் பட்ஜெட்டை நாங்கள் போடும் சுவர்க்க உரிமை வேண்டும் என்கிறார்கள். அந்த இங்கிலீஷ் பேப்பரை நாங்கள் நடத்திக்கொள்கிறோம் எனவும் அவர்கள் பேசுவதைக் காண்கிறோம்.

இந்தியர் இப்படி பேசினால் அது உகந்ததாக இருக்கும்: வெள்ளையர்களிடமிருந்து அவர்கள் செயலிலிருந்து எங்களுக்கு தேவை ஏதுமில்லை. எங்கள் தவறுகளுடன் எங்களுக்கானதில் நாங்கள் வேலை செய்யமுடியும். நூறு ராஜாக்களில் எங்கள் குழந்தைகளைப் பற்றி, எங்கள் அன்றாட உணவைப் பற்றி கவலைப்பட ஒரு ராஜா இருந்தாலும் அவர்தான் எங்களுக்கு முக்கியமானவர். எங்களுக்கு மதம் முக்கியனானது. எங்கள் வழியில் நாங்கள் செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்பது சரியானதல்ல. எங்களை விட்டு விலகுங்கள்- இப்படி இந்தியர் யோசிக்கலாமே என்பதை செஸ்டர்டன் எழுதியிருந்தார்.

மேற்சொன்ன ’நண்பர்கள் சந்திப்பு’ கூட்டத்தில் தான் காந்தி confession of faith என்பதை விநியோகிக்கிறார்.  கிழக்கும் மேற்கும் சந்திக்க முடியாத இறுக்கம் என ஏதுமில்லை. இன்றைய தொழில்நுட்ப சமூகத்திற்கு முன்பிருந்த மேற்கு  கிழக்கைப்போல்தான் இருந்தது. இன்று இந்தியாவில் நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி என்பதைவிட modern civilization rules என்றே சொல்லவேண்டும். விடுதலை இந்தியாவில் இதே போன்ற ஆட்சிதான் என்றால் பிரிட்டனுக்கு ஓடும் பணத்தை தடுப்பது என்பதை தவிர வேறு ஏதுமில்லை என்றே பொருள். மேற்கு தான் நினைத்துகொண்டிருக்கும் பொருளாயத முன்வைப்பு நாகரீகத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டால் அதன் கிழக்குடன் ஆன கைகுலுக்கல் சாத்தியமே. உங்களது material comforts ஆல் moral growthயை உருவாக்க இயலாது.

இந்தியாவின் மீட்சிக்கு பிரிட்டிஷாரிடம் கடந்த 50 ஆண்டுகளாக கற்ற சிலவற்றை unlearn  செய்யவேண்டியது அவசியமாகிறது. பொருளாயத நலன்களை சுருக்க கற்கும் சமூகம் உய்யும் என்பதை மேற்கு உணரட்டும். இவைதான் அந்த  confession of faithன் சாரம்.

சாவர்க்கர் விவாதம், அனார்க்கிஸ்ட்கள் உரையாடல், டால்ஸ்டாயின் இந்து கடிதம், செஸ்டர்டன் கட்டுரை போன்ற சில நிகழ்வுகள் காந்தியை அவரின் ’நம்பிக்கை ஒப்புதல் வாக்குமூலம்’ நோக்கி அவரை அழைத்துச் சென்றது.  இந்திய சுயராஜ்யம் எழுத அவர் மனம் தயாரானது . ஏற்பட்ட சிந்தை தெளிவால் எழுத்தும் தடங்கலின்றி வெளிப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பலரிடத்தும் 110 ஆண்டுகளைக் கடந்தும் செல்வாக்கு செலுத்தும் ஆக்கமாக இந்திய சுயராஜ்யம் இருக்கிறதென சொன்னால் அது மிகையாகாது.

13-6-2022

No comments:

Post a Comment