Skip to main content

பேரா. தோழர் சுகுமாரனின் நியாயங்கள் காயப்படுவதா?

 

              பேரா. தோழர் சுகுமாரனின் நியாயங்கள் காயப்படுவதா?

(பார்வையற்றவர்களுக்கான மானிபெஸ்டோ)

தோழர் சுகுமாரன் திருவாரூர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் பழக்கமான நற்சிந்தனையாளர். கல்லூரி மூலம் என்பதைவிட வங்கி தொழிற்சங்கத் தலைவர் தோழர் ரகுவுடன் அக்கம்பக்க அறையில் அவர் இருந்த காலத்தில் நட்பு தோய்ந்தது.

எங்கள் மத்தியில் அவரது அறையிலோ ரகுவின் அறையிலோ இடதுசாரிகள், இலக்கியம் குறித்த உரையாடல்கள் இருக்கும். நான் இலக்கியத்தில் தற்குறி. அவர்கள் தோய்ந்தவர்கள். திருவாரூர் தெருப்போராட்டங்களில் ரகுவும், சுகுமாரும்  பளிச்சென தெறிப்புகளைத் தரக்கூடியவர்களாக இருந்தனர்.



இருவிழிகளும் சவால்கள் நிறைந்த பேராசிரியர் சுகுமாரனுக்கு படித்துக்காட்ட இளைஞர்கள் வருவர்.  நியுஏஜ் உட்பட பல இதழ்கள் அவரது அறையில் காணக்கிடைக்கும் படிக்கப்படிக்க விரைவாக கிரகிக்கும் அவரது ஆற்றலை அப்போதே நாங்கள் பார்த்திருக்கிறோம். பிரெயில் எழுத்துக்கள் ஏராளம் இருக்கும். அவரது விரல்கள் அவற்றை வருடி கிரகிக்கும்.

சுகுமாரன் திருவாரூரைத் தொடர்ந்து திருப்பூர், கோவை என கல்லூரிப் பணிகளை நிறைவு செய்து கோவையில் வாழ்ந்து வருகிறார். பார்வையற்றவர்களின் தேசிய இயக்கத்தை வழி நடத்தியவர் சுகுமாரன்.  பெருங்கவிஞரான அவர் தற்போது ஏராளம் எழுதி வருகிறார். சென்ற வாரம் அவரின் நான்கு புத்தகங்கள்-  நியாயங்கள் காயப்படுவதா?,  எங்கிருந்து வந்தான்? , காத்திருப்பு கவிதைத்தொகுதிகள் மற்றும் காட்டுவாத்து அவரின் சீனா நாவல் ( மாவோவின் மறுபக்கம்) மொழிபெயர்ப்பு எனக்கு வந்து சேர்ந்தன.

என் மனம் அதன் பழக்கத்தில் கட்டுரைகளைத்தான் தேர்ந்தெடுத்து முதலில் படிக்க வைத்தது. முன்பு அவர் நெருப்பு நிஜங்கள் எழுதியது நினைவிற்கு வந்தது. நியாயங்கள் காயப்படுவதா? அவரின் கட்டுரைகளின் தொகுப்பு. பார்வையற்றவர்களுக்கு சமூகப் பார்வை வேண்டாமா என உரக்கப்பேசுவதுடன், சமூகத்திற்கு பார்வையற்றவர்கள் குறித்த பார்வையிருக்கிறதா என மனசாட்சியை உலுக்கும் கேள்விகள் கொண்ட தொகுப்பது. கட்டுரைகளை வாசிப்பவர் சுகுமாரனின் விரிவான அறிவுத்தேடலையும், ஞானத் தவிப்பையும் பார்த்து வியக்காமல் இருக்கமுடியாது. பார்வையுள்ளவர்களில் பலர் செய்யமுடியாத சாதனை ஒன்றை தோழர் சுகுமாரன் தனது பெரும் உழைப்பை நல்கி செய்துள்ளார்.

இந்தியாவில் பார்வையற்றவர்கள் குறித்த ஆய்வுகள் ஏன் இல்லை என குற்றப்பத்திரிகை வாசித்து போகவில்லை சுகுமாரன். தன்னால் செய்ய முடிந்ததென்ன- இனி செய்யவேண்டியதென்ன என்கிற விரி கோணத்தில் தனது கட்டுரைகளை பிரதியாக்கியுள்ளார்.

அரசியல், சமூக, பொருளாதார உலகில், ஆய்வுலகில் பார்வையற்றவர்களை மற்றவர்களுடன் கண்ணியமாக உறவு படுத்துவதெப்படி என்பதே சுகுமாரன் தேடலின் சரடாக இருக்கிறது. அவரது கட்டுரை வழியாக சில அம்சங்களை மட்டும் தொட்டுக்காட்டவிழைகிறேன். இடதுசாரி, பகுத்தறிவு, சமூக நீதி   கருவிகள் வழியே தான் தனது சிந்தனைச் சாலையில் சுகுமாரன் பயணித்துள்ளார். கண்ணியம் மரியாதை குறையாத பதங்களையேன் அவர் தனது எண்ணங்களில் பயன்படுத்தியுள்ளார். வசைமொழியில் அவருக்கு உவப்பில்லாமல் இருப்பதைக்காணும் போது வாசகர்களுக்கு அவர் மீதான மரியாதைக் கூடும்.

இரு பெரும் அதிர்வுகளுடன் நூல் துவங்குகிறது. திரு மோடி அவர்களின் பணமதிப்பு நீக்கம் என்கிற பெரும் அதிர்வுத்தாக்குதல்- அதன் காரணமான சாவுகள், துயர்கள் என்பதைத் வேதனையுடன் சுகுமார் பதிவிடுகிறார். இந்தியா டிஜிட்டல் பண வர்த்தகம் எனும் உலகில் வேகமாக பயணிப்பதைச் சொல்லி, வர்ச்சுவல் உலகமறியா ஏழைகள் என்ன ஆவார்கள்- இனி நிஜ உலகம் ஏதாவது இருக்குமா   என்ற நூதன சிந்தனையை எழுப்புகிறார்.

அடுத்து ஜெயலலிதா அம்மையாரின் மரணம். அவரின்  நெகிழ்ச்சிக்குரிய சாதனைகள், அவர் கொடுத்த வேதனைகளை பாரபட்சமின்றி விவாதிக்கிறார். ஆன்மீகவாதியாக இருந்தாலும் திராவிட இயக்கத்தை  தலைமைதாங்கிய சாதுர்யத்தைச் சொல்கிறார். அவரது வாழ்வின் மர்மமுடிச்சு என்றாவது திரை விலகலாம் எனவும் சுகுமார் தனது எதிர்பார்ப்பை வைக்கிறார்.

மாவோயிசம் குறித்த கட்டுரை ஒன்றில், அதன் இந்திய பிறப்பு வளர்ச்சிக்கான பின்புலத்தைச் சொல்கிறார். அதை வெறும் பயங்கரவாதமாக சித்தரித்து அணுக முடியுமா? அதன் வழிமுறைகளில் ஒருவர் மாறுபட்டாலும் அது கோரும் நியாயங்களை செவிமடுக்க வேண்டாமா என்பதுதான் இந்தக் கட்டுரைவழி சுகுமாரன் முன்வைக்கும் எதிர்பார்ப்பு.

மொழி குறித்த கட்டுரை ஒன்றில் உலகில் பெண்களுக்கான மொழியிருக்கிறதா என்ற அதிரடியான யோசிக்க வேண்டிய கேள்வியைக் கேட்கிறார். இதில் தாய்மொழி என்ற பேச்சு வேறு என ஏகடியம் வெளிப்படுகிறது.

அருண் ஜேட்லி போட்ட பட்ஜெட் பற்றிய உரையாடலை சுகுமாரன் செய்துள்ளார். நேருவின் பொருளாதார கட்டமைப்பிற்கும், அருண்ஜேட்லி மோடி சர்க்கார் கட்டவிழையும் மாடலுக்குமான வேறுபாட்டை மில்டன் பிரீட்மென் துணையுடன் முன்வைக்கிறார். எவருக்கான பட்ஜெட் என்ற கேள்வியுடன், பெரும்பான்மை மக்களுக்கானவற்றில் ஒதுக்கீடு வேண்டாமா என்ற உணர்வை வெளிப்படுத்துகிறார். பிரஞ்சு புரட்சியின் நியாயக் குரல் சூழலை அவர் நினைவு படுத்துகிறார்.  Nobles did not pay, the clergy did not pay, the commoners had to pay  என்கிற வரியைச் சொல்லி மறைமுக வரியின் தாக்குதலை அவர் புலப்படுத்துகிறார்.

வார்த்தைகளில்லை எனும் கட்டுரை சொற்செட்டுடன் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்டுரை. பிரெயிலில் புதிய தலைமுறை இதழ் வந்த 2011ன் மகிழ்ச்சியை அவர் பகிர்ந்துகொள்வார். இந்திய பார்வையற்றவர்களின் அறிவுத்தேடல் கடினமான மலையேற்ற முயற்சி என்ற தெறிப்பு சுகுமாரனின் உழைப்பு வலியை நமக்கு உணர்த்தும். அந்த உழைப்பின் மூச்சு வாங்கலை இவ்வரி படிக்கும்போது கேட்கமுடியும்.

பிரெயில் ஸ்டாலினிஸ்ட்கள் என்ற பதத்தை  சுகுமார் நமக்கு அறிமுகப்படுத்துவார். லெனின் படி படி என்று சொன்னதை பிரெயில் வழிப்படி படி என பார்வையற்றவர்களை வலியுறுத்தக் கூடியவர்களை பிரெயில் ஸ்டாலினிஸ்ட்கள் என்பார்களாம். வளர்ந்து வரும் டெக்னாலஜி பார்வையற்றவர்களுக்கு நூலகத்தையும் கற்றல் வசதியையும் மேம்படுத்த வேண்டாமா- அரசாங்கம் இதை கவனிக்க வேண்டாமா- சமூகத்தின் குரல் இதில் தங்களுடன் சேர வேண்டாமா என்ற கேள்விகள் உணர்வு பிரவாகமாக சுகுமாரனிடம் ஓடுவதைக் காணலாம். இங்கிலாந்தின், அமெரிக்காவின் அனுபவம் அளவிலாவது இந்தியனுக்கு, பார்வையற்ற தமிழனுக்கு வாய்க்க வேண்டாமா என்ற நியாய உணர்வு காயப்படலாமா? பிரெயில் வழி நூலகம் தமிழகத்தில் சில முக்கிய நகரங்களில் அஞ்சல் வழி சேவையுடன் நடந்தால் தங்கள் கற்றல் மேம்பாடுதுளிர்த்து நடைபோடும் என்ற நம்பிக்கையை சுகுமார் வைக்கிறார்.

பார்வையற்றவர்கள் தங்கள் சொந்த உழைப்பில் சமூகத்தின் ஆதரவுடன் ஒட்டுண்ணி என குற்றவுணர்வின்றி வாழ வகைதான் என்ன என்ற கேள்விதான் நூல் நீளச் செல்கிறது. பார்வையுள்ளவர்கள் செய்யும் எதையும் பார்வையற்றவர் செய்ய இயலும் என்ற நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் திட்டங்களை சுகுமார் முன்வைக்கிறார். கவனிப்பார்களா என்பதே படிப்போருக்கு வரும் கேள்வியாகலாம். கவனிக்க வைக்கவேண்டும் என்ற உணர்வையும்  இந்த நூல் வாசிப்பவர்களுக்கு தரும்.

பார்வையற்றவர் பணிநிலைகளில் உளவியல் தாக்கம் என்பது ஒரு கட்டுரை. அகக்கண் கொண்டு பார்க்கும் ஆனந்த நிலையிலுள்ளவர்க்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றிப் பேசும் கட்டுரை.  உலகில் எத்தனையோ சாதனையாளர்களின் பட்டியலில் இடம்பெற்ற இப்படிப்பட்ட அகக்கண் கொண்டோரை சுகுமாரன் அறிமுகப்படுத்துகிறார். பணியிடங்களில் இந்தச் சமூகம் அவர்களை எப்படி மதிப்பிடுகிறது. இது மாற பார்வையற்றவர் செய்யவேண்டியதென்ன என்பதை சுகுமாரன் பரிந்துரைக்கிறார். அதிக நண்பர்களை அடையுங்கள். சமூக பங்கேற்பை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். தங்களின் தற்சார்பை உறுதிப் படுத்த உழையுங்கள் என்கிறார்.

நியாயங்கள் காயப்படுவதா என்பது ஒரு கட்டுரையின் தலைப்பும் கூட. அது காயப்படாமல் காக்கப்படுமா? பெரிய கேள்விதான். காயப்படக்கூடாது எனச் சொல்வது எளிது. நல்விழைவு. நடைமுறை அப்படி இல்லையே எனப் பேசும் கட்டுரை. 1981 அய் நா அறிவித்த ஊனமுற்றோர் ஆண்டு துவங்கி என்ன பெரும் மாறுதல்களை அரசாங்கம் உருவாக்கியது.  நியாயமான இயக்கங்களாவது நீதியைக் கண்டதா? கற்பித்தல் முறையிலாவது முன்னேற்றம் வந்ததா? என பலகேள்விகள் இந்த சமூகத்தை திரும்ப வைக்க, கேட்க வைக்க சுகுமாரன் எழுப்புகிறார். அதிகாரம் என்பது பலசாலிகளின் பாதுகாப்பு என்பதுடன் நின்று போய்விடுமா என்ற உரத்த சிந்தனையை இதில் காண்கிறோம்.

பொதுப்பிரச்சனையில் ஒன்றித்து நின்று போராடினால் நம்ம்மிடமும் ஹெலன் கெல்லர்கள் உருவாகமுடியும் என்ற நம்பிக்கையை சுகுமாரன் தருகிறார். ஊனமுற்றவர்க்கு சொத்தில் உரிமையில்லை என்பதை மனுவை எதிர்ப்பவர்கள் கூட பேசுகிறார்களா என்ற கேள்வியையும் சுகுமாரன் எழுப்புகிறார்.

கட்சி சாரா அரசியல் பார்வையற்றவர்களுக்கு பலன் தரும் பாதையா என்ற சந்தேகத்தை சுகுமாரன் விவாதக் களத்தில் முன் வைக்கிறார். நீங்கள் தைரியமாக நம்பி இளைப்பாற இடமுண்டெனில் அது இடது அரசியலாகவே இருக்கும் என்ற தன் அனுபவத்தை கைமாற்றித் தருகிறார்.

சாதியப்பார்வையும் பார்வையற்றவர்களும் என்கிற கட்டுரை சாட்டை சொடுக்கு. சாதிய நோயாலும் பார்வையற்றவர் பீடிக்க வேண்டுமா என்கிற குமுறலை வெளிப்படுத்துகிறார்.

மாற்றுத் திறனாளிகளும் பொருளாதாரமும் என்ற கட்டுரையில் பார்வையற்றவர்களே நீங்கள் உற்பத்தி சக்தியின் பகுதியாக இருங்கள். ஒட்டுண்ணி வாழ்க்கை வேண்டாம் என்கிற குரலை எதிரொலிக்கிறார். உங்கள் உழைப்பால் உங்கள் கெளரவத்தை உயர்த்திக்கொள்ளுங்கள் என்கிறார். இரண்டாம் உலகப்போர் காலத்திலும், சோவியத் பொருளாதாரத்திலும் மாற்றுத்திறனாளிகள் உற்பத்தியின் பங்காளர்களாக இருந்ததை அவர் விவரிக்கிறார். கவி மனம் சுகுமாரனுக்கு இங்கு எழுந்துவிடுகிறது.

கண்ணிலா ஜெர்மானியன் நீதிபதியாவான்

இந்நாட்டிலோ அவன் நீதிதேடி சாவான்

சோவியத்தில் அவன் கியர் சுவிட்சை செய்தான்

பாரதத்தில் உயிர் பிச்சை கேட்பான்

இந்நாட்டில் பிறந்த பார்வையற்றவன் மீதான பேரன்பில் பெருக்கால் இந்த ஒப்பீட்டை அவர் செய்திருக்கலாம். அவனின் கெளரவ மீட்சிக்கான மானிபெஸ்டோ போல  சுகுமாரனின் இந்தப் புத்தகம் எனக்குப் படுகிறது. பார்வையற்றவர்களுக்கு இந்த சமூகத்தையும், சமூகத்திற்கு பார்வையற்றவர்களின் போராட்டங்களையும் ஒருசேர அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை உருவாக்க முடியுமா என்ற தவிப்பில் எழுத்துப்போரை சுகுமாரன் செய்துள்ளார். அவரது கனவு நினைவானால் இந்தப் புத்தகம் அதன் வாகனமாக நிற்கும்.

15 hrs     5-3-2023                                                                   -   ஆர். பட்டாபிராமன்

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா