பேரா. தோழர் அ.மார்க்ஸ் எழுதிய கார்ல் மார்க்ஸ்
பேரா. தோழர் அ.மார்க்ஸ் எழுதிய கார்ல் மார்க்ஸ் புத்தகம் ஜனவரி 2023ல் வெளியானது. நேற்று கையில் கிடைத்தவுடன் ஒரே நாளில் சில மணிகளில் 198 பக்கங்களையும் படிக்க முடிந்தது. ஆர்வமும் நேரமும் உதவின.
மார்க்ஸ் மற்றும் மார்க்சிற்கு பிந்திய மார்க்ஸியம் குறித்த அம்சங்களை அறிமுகப்படுத்தி விளக்கும் ஆக்கமிது. இளைஞர்களுக்கு நல்ல கையேடாக இந்த புத்தகம் அமையும் என்றே வாசித்தவுடன் எனக்குத் தோன்றியது. இடதுசாரி இளம் தோழர்கள் கூட்டாக வாசித்து புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய புத்தகம். கடினமாக இருக்காது.
தோழர் அ.மார்க்ஸ் அவர்கள் மார்க்ஸின் 200 ஆம் ஆண்டில் ’மக்கள் களம்’ ஆசிரியரின் வேண்டுகோளுக்கேற்ப எழுதிய தொடர்கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளன. 17 கட்டுரைகள் அதைத் தொடர்ந்த பின் இணைப்புகளின் தொகுப்பு இந்த ஆக்கம். 17 கட்டுரைகளின் சாரமாக பின் இணைப்புகளை கொள்ளமுடியும்.
இந்நூல் அட்டையில் சொல்லப்பட்டுள்ளபடி மார்க்ஸ் அவரது ஆக்கங்கள் அறிமுகம் குறிப்பாக அவரது கம்யூனிஸ்ட் அறிக்கை, அந்நியமாதல், மதம், உபரிமதிப்பு, இந்தியா குறித்து மார்க்சின் கட்டுரைகள் என்பதுடன், அல்தூசரின் அமைப்பியல் சார்ந்த பார்வை, ஹார்ட் நெக்ரி இரட்டையரின் பேரரசு மற்றும் பெருந்திரள் குறிப்புகள் மற்றும் ஓரளவு மேலை மார்க்சியம் இதில் பேசுபொருளாக்கப்பட்டுள்ளன.
மார்க்சியமும் இலக்கியமும் தனித்து பேசப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு வெளிப்படையானதாக ஜனநாயகம் நிறைந்ததாக இருக்க மார்க்சே வலியுறுத்தியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மார்க்சின் எழுத்துக்கள் ஏன் வாசிக்க கடினமாக இருக்கின்றன என்பதை பல இடங்களில் எழுப்பி தோழர் அ.மா பதில் தருகிறார். அதேபோல் அவரது உபரி மதிப்பு கோட்பாட்டின் பொருத்தப்பாட்டை இன்றும் எவரும் மறுக்க முடியாது என்பதைப் பேசுகிறார்.
மார்க்சியம் என்பதை வளர்ந்து வரும் அறிவியலாக, அது மார்க்ஸ் உடன் நின்று போகவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் எனச் சொல்கிறார்.
மார்க்சியம் தோற்றுப்போனதா என்ற கேள்விக்கான பதிலை அவர் தேடுகிறார். உலகம் முதலாளித்துவ நெருக்கடிகளிலிருந்து விடுபடவில்லை என்பதையும், இன்றுள்ள தொழில் நுட்ப வளர்ச்சி அதற்கான முழு தீர்வுகளையும் தரவில்லை எனப் பார்க்கும்போது , மாற்று சிந்தனைக்காக மார்க்சியம் நோக்கி பலரும் வருவதை தோழர் அ.மா சொல்கிறார். மார்க்ஸ் முதலாளித்துவம் மீதான விமர்சனம் என்பது பொருளாதாரம் தாண்டி அறவியல் தாக்கங்களையும் கொண்டது என அ.மார்க்ஸ் எழுதுகிறார்.
அது போலவே சோசலிசம் தோற்றுவிட்டது என்று வருகிற உரையாடலுக்குமான பதிலை அ.மா தேடுகிறார். புரட்சிக்கு பிந்திய சமுதாய கட்டுமானங்கள் அதன் சோதனைகள் தோற்றிருக்கலாம் என்பதை தாண்டி அதை சோசலிசத்தின் தோல்வியாக யார் நிறுவியுள்ளனர் என்ற கேள்வியை தோழர் அ.மா விடம் பார்க்கிறோம். அதே நேரத்தில் சோசலிச கட்டுமானங்கள் குறித்த உரையாடல் பெருகட்டும் என்கிறார்.
இந்த அறிமுகத்தை தோழர் அ.மார்க்சின் வரிகளுடன் நிறைவு செய்கிறேன்
“ கார்ல் மார்க்சை வெறும் தத்துவ ஆசிரியராக, பொருளாதார மேதையாக, களப்போராளியாக சுருக்கி பார்த்துவிட இயலாது..அவர் எல்லாமுவாக இருந்தவர்.. அப்படியாக ஒருவரை வரலாறு அவருக்கு முன்னோ பின்னோ யாரையும் அடையாளம் காட்டியதில்லை. மார்க்சிற்கு பிந்திய மாற்றங்களை அவர் வழி நின்று ஆய்வு செய்வோம்…மார்க்சிற்கு பிந்திய சிந்தனை வளர்ச்சிகளை ஏற்று அறிந்து நம்மையும் மார்க்சியத்தையும் மேம்படுத்திக்கொள்வது மட்டுமல்ல; மார்க்சியத்தை வளப்படுத்த வேண்டிய கடமையும் நமக்குண்டு.
புதிய சிந்தனைகளை திறந்த மனத்துடன் எதிர்கொள்வோம். தோழர்களே! நமக்குத் தேவை திறந்த மனது, தெளிந்த அறிவு, கடின உழைப்பு! “
என் ஆர்வம் காரணமாக நான் விரைந்து இந்த ஆக்கத்தை படித்திருக்கலாம். ஆனால் அதில் பேசப்பட்டுள்ள கருத்தாங்களை தேட , படித்து புரிந்து கொள்ள பல நாட்கள் கடின உழைப்பு பேரா
அ.மார்க்ஸ் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்கக்கூடும்.
28-3-2023
Comments
Post a Comment