A Fact Sheet on Communist movement
இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் அனுபவம் என்பது மகத்தானது. பொருட்படுத்த தக்கது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே ‘ விடுதலையுடன் சோசலிச இந்தியா’ என்பதற்கான கனவுடன் அவர்கள் கட்சி அமைத்துக்கொண்டனர்.
ஆங்காங்கே சிறு குழுக்களாக இருந்தபோதிலும் சோவியத் பிரிட்டிஷ் தோழர்கள் உதவியுடன், சில நேரம் மேற்பார்வையுடனும் அவர்கள் தங்கள் சக்திகேற்ப மக்களை திரட்டினர். கம்யூனிசம், சோசலிசம், வர்க்கப்போராட்டம், பூர்ஷ்வா, ஏகாதிபத்தியம், புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், இயக்கவியல், உபரிமதிப்பு , சோவியத் அக்டோபர் புரட்சி போன்ற இந்தியர்களுக்கு அதுவரை பழக்கமாகாத சில புதிய சொல்லாடல்களை அதற்கான விவரிப்புகளை அவர்கள் தரலாயினர். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் என்கிற பெயர்களையும் அவர்கள் விஸ்தாரமாக்கினர்.
மக்களிடம் செல்வாக்குப் பெற்ற மகத்தான காந்தி, மேற்கின் பெருமைகளை சோசலிச சிந்தனையை அறிந்த நேரு , இவர்களுடன் ஆங்காங்கே புகழ்வாய்ந்த இன்ன பிற காங்கிரஸ் தலைமையை இவர்கள் இளைஞர்களாக எதிர்கொண்டனர். ரஷ்யாவைப் போல் தொழிலாளர் விவாசாயிகள் இன்ன பிற சக்திகளை திரட்டி சோசலிச புரட்சி இந்தியாவில் சாத்தியம் என்கிற நம்பிக்கை அவர்களை ஊக்குவித்து செயல்படவைத்தது. சதி வழக்குகளில் தண்டனைகள் பெற்றனர். உயிர் பலிகளும் கொடுத்தனர். பெரும் படிப்புடன் வந்த சில இளைஞர்கள் சொத்துக்களை இழப்பதைப் பற்றி கவலை கொள்ளாமல் , வேலை சம்பாதித்யம் என்கிற சுயநலம் ஏதுமின்றி சர்வ அர்ப்பணிப்பிற்கும் தங்களை முன் வைத்துக்கொண்டனர்.
தொழிற்சங்கம், விவசாய சங்கம், இளைஞர் மாணவர் அமைப்புகள், கலை இலக்கிய அமைப்புகள், பெண் அமைப்புகள் என வெகுஜன ஸ்தாபன முறைகளை கையாண்டனர். கட்சிக்குள் ஓயாத விவாதங்களை மேற்கொண்டு , தலைமறைவு வாழ்க்கை உட்பட சோதனைகளை செய்துகொண்டனர். பொலிட்ப்யுரோ , மத்திய கமிட்டி அமைத்து புதிய புதிய தலைமை சோதனைகளை party of new type என்கிற லெனினிச வழியில் செய்து பார்த்தனர். பூர்ஷ்வா பெரும்பான்மை ஜனநாயகம் என்பது போலி என நிராகரித்து வந்தனர். ஜனநாயக மத்தியத்துவம், மேலிருந்து கீழ் கட்டுவது, விமர்சனம் சுய விமர்சனம் என்கிற அமைப்பு குறித்த சோதனைகளை செய்தனர்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், காந்தியம் , காங்கிரஸ் நிலைப்பாடுகள் குறித்து தங்களது எதிர் உரையாடல்களையும், கடும் விமர்சன விவாதங்களையும் தங்கள் அணிகள் மத்தியில் கொண்டு சென்றனர். சென்னை ராஜதானியில் குறிப்பாக தமிழகப் பகுதியில் காங்கிரசை மட்டுமல்லாது, நீதி கட்சி-சுயமரியாதை இயக்கம் - திக குறிப்பாக பெரியார் உடன் விவாதங்களை மேற்கொண்டனர்.
வர்க்கம் என்கிற அவர்களது புதிய சொல்லாடலை மக்கள் அறிவதற்கு முன்னர் இந்திய சமூகத்தில் ஆழமாக புரையோடிருந்த சாதி, மதம் சார்ந்த பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொண்டாலும், சோசலிச சமுதாயம் அவைகளை மூடிவிடும் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தனர்.
சாதி மதம் குறித்த உரையாடல்களை வைத்து இயக்கமாக மக்களைத் திரட்டிய முஸ்லிம் லீக், இந்து மகாசபா, ஆர் எஸ் எஸ், அம்பேத்கர், நீதிகட்சி பெரியார் என இவர்கள் எல்லோரும் , அவரவர் அறிந்த தங்களின் நியாயங்களின்படி விடுதலை போராட்டத்தின் தீவிரத்திலிருந்து தள்ளியும், பிரிட்டிஷ் ஆட்சி குறித்த தீவிர விமர்சனங்களின்றியும் இருந்ததை கம்யூனிஸ்ட்கள் விமர்சித்து வந்தனர். காங்கிரசின் எதிர்ப்பும் தீவிரமில்லாமல் சமரச வழியில் இருப்பதாக கம்யூனிஸ்ட்கள் விமர்சித்தனர். ஆயுத வழி போராட்டம் என்பதில் நம்பிக்கை இருந்ததால் பகத்சிங் போன்றவர்களை உயர்த்திப்பிடித்தனர்.
சோவியத்தும் பங்கேற்ற இரண்டாம் உலகப்போர் கால ‘1942 குவிட் இந்தியா ‘ போராட்டத்தில் மேற்கூறிய சக்திகள் எவையும் பங்கேற்கவில்லை. இதில் ராஜாஜியும் இருந்தார். மக்கள் யுத்தம் என்கிற பெயரில் கம்யூனிஸ்ட்களாலும் அப்போராட்டத்திற்கு ஆதரவான நிலை எடுக்கமுடியவில்லை.
இந்தியா பாகிஸ்தான் என்கிற பிரிவினையுடன் பிரிட்டிஷ் ஆட்சி விலகியது. வந்தது விடுதலை தானா என்கிற சந்தேகம் கம்யூனிஸ்ட்களிடம் இருந்தது. ஆட்சி மாற்றம்தான் என்றனர். மாபெரும் காங்கிரஸ் இயக்கம் அதன் தலைவர்கள், காந்தி என உரையாடலை மேற்கொண்ட ஜோஷியின் தலைமை மாற்றப்பட்டு, விடுதலை இந்திய நுழைவுக்காலத்தில் ரணதிவே தலைமை சோதிக்கப்பட்டது. பின்னர் அது ஆந்திர ராஜேஸ்வரராவ் தலைமையாகி, அஜாய்கோஷ் என தன்னை சற்று ஸ்திரப்படுத்திக்கொண்டது.
தேர்தல் பங்கேற்பு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கைவிடுதல், பல கட்சி ஆட்சி முறை ஏற்பு என்கிற நிலைப்பாட்டிற்கு கம்யூனிஸ்ட்கள் நகர்ந்தனர். நேருவின் ஆட்சி, காங்கிரஸ் குறித்த நிலைப்பாட்டில் உட்கட்சி விவாதங்கள் பெருகலாயின. பாராளுமன்ற செயல்பாட்டின் அவசியம்- parliamentarism ஆகியவை குறித்த விவாதங்கள் எழுந்தன.
ஸ்டாலினுக்கு பின்னரான சோவியத் - மாவோ தலைமையிலான சீன வேறுபாடுகள் கம்யூனிஸ்ட்களிடம் மாபெரும் விவாதங்களை கிளப்பின. சீன படையெடுப்பு , நேரு பலவீனமாதல் என்கிற அரசியல் காட்சிகளின்போது , கட்சிக்குள் சூடான விவாதங்கள் நடந்தேறி, தோழமை இற்றுப்போய், கட்சி உடைவை சந்தித்தது.
கம்யூனிஸ்ட்கள் நாளடைவில் சிபிஅய், சிபிஎம் என்கிற இரு பெரும் பிரிவுகளுடன், எம் எல் நக்சல் என்கிற குழுக்களுடன் அவரவர் செல்வாக்கு பகுதியில் செயல்படத் துவங்கினர். புரட்சி குறித்து தனித்தனி திட்ட ஆவணங்களை எழுதிக்கொண்டு, அவரவர் புரிதலே மார்க்சியம், மார்க்சிய லெனினியம் என்றனர். மார்க்சிய லெனினிய மாவோயியம் சரி என்கிற குழுக்கள் தீவிரமாயினர்.
காங்கிரஸ் எதிர்ப்பு, காங்கிரசுடன் இணக்கமாக இந்திய வளர்ச்சியை கட்டுதல் என்ற தேர்தல் வழி சோதனைகள், எமர்ஜென்சி சோதனைகள் நடந்தன. பேயுடன் சேர்ந்தாவது காங்கிரஸை வீழ்த்துவது என்கிற ஜனதா ( ஜனசங் உட்பட) சோதனையின் தோல்வியும் உணரப்பட்டது. பதிந்தா, ஜலந்தர் எனக்கூடி இடதுசாரி ஜனநாயக மாற்று என இடதுசாரியை முன்வைத்து, பூர்ஷ்வா கட்சிகள் நிராகரிப்பு என்கிற முழக்கங்கள் எழும்பின.
சோவியத் வீழ்ச்சி நம்பிக்கையிழப்பை தந்தாலும், இந்திய கம்யூனிஸ்ட்கள் சுதாரித்து எழுந்தனர். பல நாடுகளில் கம்யூனிஸ்ட் என்கிற கட்சிப் பெயர் நீக்கம் நடந்தாலும், இங்கு உறுதியாக அந்த வீழ்ச்சியின் எதிர்மறைகளை தைரியமாக கம்யூனிஸ்ட்கள் சந்தித்தனர். சோவியத் வீழ்ச்சி சோசலிச மாடல் ஒன்றின் தோல்வி என்கிற புரிதலை எடுத்துச் சென்றனர்.
இந்திய அரசியல் மண்டல்- கமண்டல் என்கிற சாதிய மதம் சார்ந்த தீவிர சொல்லாடல்கள் பக்கம் நகர்ந்தது. மார்க்ஸ் லெனின் காந்தி நேரு என்கிற பெயர்கள் பின்னுக்கு போகலாயின. அம்பேத்கர் பெரியார் பெயர்கள் தவிர்க்கமுடியாதவையாயின. கமண்டல் அரசியலின் ஆபத்தை கம்யூனிஸ்ட்கள் தீவிரமாக உணர்ந்தனர். மே.வ, கேரளா, திரிபுரா மாநில ஆட்சி அனுபவங்களை தந்தது. ‘ஏக தேசிய அரசியல் எதிர் வட்டார அரசியல் ‘ என்பது தீவிரமானது. இதில் திமுக தலையாய பங்கையாற்றியது. ஜெயலலிதாவின் அதிமுக வட்டார அரசியலும் தன் சுயமரியாதைக்காக நின்றது.
இந்திரா படுகொலை, ராஜிவ் படுகொலை, coalition politics, குறைந்தபட்ச செயல்திட்டம் என்கிற சோதனைகள் நடந்தன. கம்யூனிஸ்ட்களுக்கும் இந்த சோதனைகளில் dignified role இருந்தன. மத்திய ஆட்சியில் வட்டார கட்சிகளின் பங்கேற்பு நடக்கலாயின. இதில் காங்கிரஸ்- பாஜக என்கிற சோதனைகளை வட்டார கட்சிகள் நடத்திப்பார்த்தன.
வலதுசாரிகள் இந்திய அரசியலில் முதன்முறையாக மத்திய ஆட்சியை வாஜ்பாய் மூலம் சோதித்து தங்களால் முடியும் எனக் காட்டலாயினர். மன்மோகன் சிங் என்கிற soft Govt சோதனைக்குப் பின்னர் ‘மஸ்குலின் பாடிபில்டர்’ ஆட்சி என்கிற குறியீடுகள் ‘வளர்ச்சி’ என்கிற பதத்துடன் பாஜக மோடி ஆட்சியை உருவாக்கின.
விடுதலை இந்திய அரசியல் ‘ராட்சச காங்கிரசை ‘ வீழ்த்துவது என்பதில் துவங்கி ‘அதிராட்சச பாஜகவை ‘ வீழ்த்துவது என்கிற சோதனையில் நுழைந்துள்ளது. காங்கிரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்கிற பேச்சுக்கள் நின்றுபோயுள்ளன. கேரளா விதிவிலக்கு.
கமண்டலுக்கு எதிரானது மண்டல்தான் என காங்கிரசும் வட்டார அரசியலின் வெற்றிச் சோதனைகளை அங்கீகரிக்க் வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. கம்யூனிஸ்ட்களுக்கும் அதுவே பாதை என்கிற தீவிரம் உணரப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு என்கிற முழக்கம் இந்துத்துவாவிற்கு மாற்றாகியுள்ளது. அதன் விளவுகள் புதிய அனுபவங்களை நாட்டிற்கும், அமைப்புகளுக்கும் தரலாம். பலன் எனில் சாதி சென்சஸ் படி என்பது தீவிரமாகலாம்.
இந்திராவே இந்தியா என்கிற overdoing இன்று மோடி காரண்டி- மோடி மோடி என்கிற பெரும் இரைச்சலாகியுள்ளது. இனியும் மோடி எனில் நாடு தாங்காது என்கிற வேகம் கூடியுள்ளது. கம்யூனிஸ்ட்கள் இந்த பெரும்கூட்டணியில் தங்களுக்கான சிறிய spaceயை வைத்துக்கொண்டு செயலாற்றி வருகின்றனர். வட்டார அரசியல் பின்புலத்தில், தேசிய அடையாளங்களைக் கொண்ட சற்று பலம் மிகுந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் புதிய சோதனைகளுக்காக காத்து நிற்கிறார்கள்.
இந்த 2024 தேர்தலில் பாஜக வீழ வேண்டுமெனில் ‘காங்கிரஸ் எவ்வளவு ‘ என்பது மிக முக்கியமானதாக இருக்கும். ‘வட்டார கட்சிகளின் நெருக்குதல் எவ்வளவு கண்ணியமாக இருக்கும்’ என்பதும் பேசுபொருளாக இருக்கும். மாற்று சோதனை என்பதில் கம்யூனிஸ்ட்கள் பெறப்போகும் அனுபவமும் அவர்களுக்கும், தேசிய அரசியலுக்கும் முக்கியமானவையாக இருக்கும். பார்க்கலாம்… மார்க்ஸ் காந்தி நேரு மீட்சி பெறுவார்களா - அவர்களுக்கான rehabilitation காலத்திற்காக இந்தியா காத்திருக்க வேண்டுமா ? தேர்தல் அரசியலுக்கு அவர்கள் தேறமாட்டார்களா?
29-4-2024 07.30 hrs
Comments
Post a Comment