https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, February 27, 2017

விவேகானந்தர் பார்வையில் 3

III
 தனிநபர்- சமூக உறவுகள் குறித்து சுவாமி விவாதிக்கிறார். தனிநபரை வியஸ்தி (vyashti) என்கிறோம். கூட்டாக எனும்போது சமஸ்டி (samashti) என அறிகிறோம். வியஸ்திக்கு எந்த அளவு உரிமை, சமஸ்டிக்காக எந்த அளவிற்கு தியாகம் என்பது ஒவ்வொரு சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகள். நவீன மேற்கு சமூகம் இந்த அலைகளில் அல்லாடுகிறது. சமூக மேலாண்மைக்காக தனிநபர்களின் தியாகத்தை சோசலிசம் என பேசுகிறோம். மேற்கு நாடுகளில் ’லிபர்ட்டி’ வளர்ச்சிக்கான முன் நிபந்தனையாக இருக்கிறது. அதே நேரத்தில் வலுத்தவர் வாழவும் இளைத்தவர் வீழவும் மேற்கு ஜனநாயகம் வழிவகுத்துள்ளது- அரசின் பெயரில் மக்கள் சுரண்டப்பட்டு சிலர் செல்வந்தர் ஆகின்றனர் என்கிற பார்வையை விவேகானந்தர் வைக்கிறார். இதை அவர்கள் ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்ட ஆட்சி, நாடாளுமன்றம் என்றெல்லாம் அழைக்கின்றனர் என கேலி செய்கிறார். அனார்க்கிச தாக்கம் அவரிடம் இருந்திருக்கலாம்.
சோசலிசத்தில் நன்மை- தீமைகள் என அவர் விவாதிக்கிறார். (இப்பகுதிக்கு நூல்தொகை காட்டப்பட்டுள்ளது) அனைவருக்கும் கல்வி, சில வசதிகள் கிடைக்கும். ஆனால் மக்கள் எந்திரங்களாக்கப்பட்டுள்ளனர். சுய அறிவுத்திறனற்று இரயிவே என்ஜின்கள் போல் ஓடுகிறார்கள், திரும்புகிறார்கள். உயிர்த்துடிப்பு இல்லை. சுயவிருப்பம் சார்ந்த துள்ளல் இல்லை. புதுமை விழைவில்லை. No Stir of Inventive Genius என கடுமையான விமர்சனங்களையும் அவர் அடுக்குகிறார்.  எந்த நாட்டின் அனுபவம் கொண்டு அவர் இதை தெரிவிக்கிறார் என தெரியவில்லை.

சுவாமியை சோசலிஸ்ட் என அழைக்கலாமா என கேள்வி அவரிடம் எழுப்பப்படுகிறது. அதற்கு அவர் தயக்கமின்றி தனது பதிலை தருகிறார்.  I am a Socialist not because I think it is a perfect system, but half a loaf is better than no bread. அனைத்து மக்களுக்கும் பட்டினியைவிட அரைத்துண்டு ரொட்டி கிடைப்பது மேலானது என்கிற சமூக முறைக்காக நான் சோசலிஸ்ட் ஆக இருக்கிறேன். அந்த முறை மிக நேர்த்தியானது என்பதற்காக அல்ல என தனது நிலையை அவர் தெளிவுபடுத்துகிறார். அவரின் வெளிப்படையான விமர்சனம், குறிப்பிட்ட கட்டத்தில் சரியான ஒன்றுடன் தன்னையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் நேர்மை கொண்டாடப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.
அவர் காணவிரும்பும் இலட்சிய அரசு என்பது குறித்த வினாவிற்கு அவரின் கற்பனை சித்திரத்தை அவர் வழங்குகிறார். மார்க்சிய வகைப்படுத்தலில் சமூக மாற்றத்தை அவர் விளக்கவில்லை. இந்திய வருண முறையில் அவர் எடுத்துரைக்கிறார். அதை வர்க்கம் என்ற சொல்லாக்கி அவர் விளக்குகிறார். நால்வகை வர்க்கத்தாரின் தீமைகள் ஏதுமற்ற  அவர்களின் உயர் அடையாளங்களை இணைத்துக்கொண்ட- புரோகித அடையாளமான அறிவு- சத்ரிய போர்க்குண பலம்- வைஸ்யர் வணிக நியாயம்- சூத்திரர்களின் சமத்துவ உணர்வு என கட்டப்படும் அரசுதான் லட்சிய அரசாக அமையும் என அவர் பேசுகிறார். அரசின் தலைமைபாத்திர வர்க்கம் என்கிற  மார்க்சிய சொல்லாடலை அவரிடம் நாம் எதிர்பார்க்க முடியாது.
அரசு பாதுகாப்பில் என எப்போதும் இயங்கும் சமுகத்தில் அரசில் வளர்ச்சி நின்றுபோய்விடும். வலிமையான மனிதனை குழந்தைபோல் பாவித்தால் என்ன ஆகும்? அந்நாடுகள் அழிந்து கூட போகும் என தெரிவித்த  அவரின் பார்வைதீர்க்கம் ஆச்சர்யமானது. தேர்தல், பொறுப்பேற்றல், விவாதம்  அச்சமுகத்தில் தேவை என்கிறார். பரவலாக  வேலையை பொறுப்பாக்கிக் கொள்ளும் பழக்கம் தேவை என்கிறார். உழைப்பில், சொத்தில் மட்டுமில்லாது நிர்வாகத்திலும் பங்கிருந்தால்தான் நல்ல வளர்ச்சி ஏற்படும் என்கிறார்.
நமது நாட்டில் நாம் செய்ய வேண்டிய கடமையாது என்ற விவாதத்தை  தொடர்ந்து செய்தவர் விவேகானந்தர். நமது பெரும்பான்மை மக்களுக்கு கல்வி, உணவு, பராமரிப்பு உடனடி கடமை. வளம் நிறைந்த நாட்டில் பட்டினி என்ற முரணை ஏற்பதற்கில்லை . மக்களுக்கு கற்று கொடுத்தால், பொருளாதாரம் உட்பட பிரச்சனைகளை அவர்கள் தீர்த்துக்கொள்வர். நாடாளுமன்றத்தில் நல்ல சட்டங்கள் வருவதால் மட்டுமே நாடு சிறந்துவிடாது. ஆன்மிகத்தன்மையும் வேண்டும். இதன் பொருள் மூடநம்பிக்கைகளை சுமக்கவேண்டும் என்பதல்ல என நேர்படுத்துகிறார். அவரின் பரிந்துரை வேதாந்தம். பிராமணர் அல்லாதவர்கள் சம்ஸ்கிருதத்தை கைவிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தவர் அவர். புரோகித வர்க்கத்தின் ஏகபோகத்திலிருந்து அதை மீட்க அவர் விழைந்திருக்கலாம்.

 இளைஞர்கள் ஆற்றல்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவர்களை செயலுக்கு உந்தி தள்ளியவர் விவேகனந்தர். புரட்சியின் சக்தி என அவர்களை கருதினார். அவர்களுக்கான சமூக கடமையை வலியுறுத்தி நிறைவேற்ற அறைகூவல் விடுக்கிறார். நம்பிக்கையற்ற நிலையில் உள்ள நம் மக்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். பணம் உள்ளவர்களை நிமிர்ந்து பார்த்திருக்க வேண்டாம். அனைத்து வேலைகளையும் செய்துவரும் ஏழைகளை நிமிர செய்வீர். அவர்களுக்கு தீர்வை கொணருங்கள். அவர்களுக்கு விஞ்ஞானம, இலக்கியம் கற்பியுங்கள். அவர்கள் இல்லாமல் பணக்காரர்களுக்கு வாழ்வேது? அவர்கள் எழவேண்டும் . எழுவார்கள். உங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள். இதில் காலதாமதம் வேண்டாம். இளைஞர்களே ! இதுதான் உங்கள் mission என செயலுக்கு அழைக்கிறார்.
தேசபக்தி எனும் நம்பிக்கை குறித்து பேசுகிறார். இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அந்த உணர்வு பெருகவேண்டும். அன்பு திறக்காத கதவு என ஏதுமில்லை. அவர் மேற்கோள் ஒன்றை காட்டுகிறார். ”துறவிகள் தூற்றட்டும் அல்லது போற்றட்டும். அதிர்ஷ்ட தேவதை வரட்டும்- வராமல் போகட்டும். சாவு இன்று வந்தாலும் சரி- நூறு ஆண்டுகள் தள்ளிபோனாலும் சரி. நான் ஒருபோதும் உண்மையிலிருந்து அங்குலம் கூட விலகமாட்டேன் என்ற உறுதிப்பாடு கொண்ட புரட்சிகர மனிதன் எழுந்து வரட்டும்” பார்திஹரி என்கிற மன்னனின் உண்மைக்காக நிற்கும் வைராக்கிய வரிகள் அவை.


No comments:

Post a Comment