சில தினங்களுக்கு முன்பு வின்சென்ட் ஷீன் எனும் அமெரிக்க பத்திரிக்கையாளர் எழுதிய புகழ் வாய்ந்த காந்தி வாழ்க்கை புத்தகத்தையும், பிரஞ்சு சிந்தனையாளர் ரொமய்ன் ரோலந்த் எழுதிய காந்தி குறித்த புத்தகத்தையும் படிக்க முடிந்தது. ரொமெய்ன் ரோலந்த் எழுதி ஜெயகாந்தன் மொழிபெயர்த்த வாழ்விக்க வந்த காந்தியை சில ஆண்டுகளுக்கு முன்னர் படிக்க வாய்ப்பு கிடைத்து. வின்சென்ட்
ஷீன் புத்தக மொழிபெயர்ப்பும் வந்துள்ளது. தோழர்கள் பால்சாமி, மோகன் போன்றவர்கள் இம்முறை சென்னை புத்தக கண்காட்சியில் அவற்றை வாங்கி சென்றனர்.
காந்தி குறித்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் தமிழ் வாசகர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக இப்புத்தகங்கள் அதிகம் சென்றிருப்பது பாராட்டிற்குரியது. இம்முறை தரம்பால் எழுதிய காந்தியின் தமிழ் பதிப்பும் அதிகம் போயுள்ளது. வேறு முக்கிய இருவர் எனில் ஆண்ட்ருஸ் எழுதியது, லூயி பிஷர் எழுதியதையும் சொல்லலாம்.
இந்தியாவில் இன்று சுதந்திரமாக வாழும் ஒவ்வொருவரும் காந்தி குறித்த நேரடியான சுய வாசிப்பு சிலவற்றையாவது மேற்கொள்ளவேண்டும். அவர் குறித்த விமர்சன புத்தகங்களும் ஏராளம். மார்க்சியர்கள், அம்பேத்கரியர்கள்
புத்தகங்கள் மூலம் அவற்றை பெறமுடியும்.
கடந்த வாரம் காந்தியின் கடித முறையில் அமைந்த GITA DISCOURSES படித்தேன்.இந்த சிறிய புத்தகத்தை (80 பக்க அளவிலான சிறு வடிவ புத்தகம்) தொலைதொடர்பு
தொழிற்சங்க தலைவர் தோழர் வள்ளிநாயகம் எனக்கு கொடுத்திருந்தார். குஜாராத்தி மொழியில் கீதை குறித்து காந்தி எழுதியது புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என சபர்மதி ஆசிரம நண்பர்கள் தெரிவிக்க , காந்தியடிகள் அவற்றை எளிமைபடுத்தும் முயற்சியில் சிறையிலிருந்து கடிதம் வாயிலாக 18 அத்தியாயங்களையும் விளக்கினார். அவை குஜராத்தியிலிருந்து ஆங்கில வழியில் வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் தோழர் வள்ளியால் எனக்கு கிடைக்கப்பெற்றது. அவருக்கு எனது நன்றி.
இதற்கு முன்னரே தேவ்தத் எழுதிய நவீன கீதை விளக்கம், பங்கிம் சட்டர்ஜி எழுதிய கீதை கட்டுரைகள் சில, பாரதியார் தமிழில் எழுதிய கீதை விளக்கம் போன்றவற்றை படிக்க முடிந்தது. தோழர்கள் திலிப் போஸ் ( ரஜினி பாமிதத் சீடர்)
சர்தேசாய் இணைந்து எழுதிய மார்க்சியமும் கீதையும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த நினைவு. அப்புத்தகம் எங்கு உள்ளது என தெரியவில்லை. சென்னையில் வீட்டில் தென்படவில்லை. இதே போல் டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, திலகர், விவேகானந்தர், அரவிந்தர்,
கோசாம்பி போன்றவர்களும்- வீரமணி போன்றவர்களும் கீதையை மிக புகழ்ந்தும்- விமர்சித்தும் எழுதியுள்ளனர். கீதை குறித்து 2000 பக்கங்கள் படிப்பதற்கு என்னிடமே இருக்கிறது. இந்திய சமுகம் மீது அதன் தாக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவேண்டிய தேவையும் உள்ளது. இஸ்லாமிய சிந்தனையாளர் ஒருவரின் புத்தகம் ஒன்றையும் கீதை குறித்து பார்த்தேன். நாத்திக சிந்தனையாளர்கள் சிலர் எழுதிய விமர்சனங்களும் கட்டுரைகளாக பார்க்கமுடிகிறது. நேரம் - தாகம் உள்ளவர்கள் தொடர்ந்து காலத்திற்கேற்ப சில ஆய்வுகளை கூடுதலாக செய்ய இயலும் என கருதுகிறேன்.
Comments
Post a Comment