https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, February 22, 2017

E M S தோழர் நம்பூதிரிபாட்

E M S Namboodripad            தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாட்
                          -ஆர் பட்டாபிராமன்
நம்பூதிரிபாடும் மினுமசானியும் நாகபுரியிலிருந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் செயற்குழுவை முடித்துவிட்டு ஆந்திரா திரும்பினர். அங்கு காங்கிரஸ் சோசலிஸ்ட்களின் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர் பசவபுன்னையா மசானியை கேள்விக்கணைகளால் துளைத்துக்கொண்டிருந்தார். 1935அக்டோபரில் காங்கிரஸ் கமிட்டி சென்னையில் நடந்தபோது ராயிஸ்ட்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்கள் என அனைவரும் ராடிகல் மாநாடு ஒன்றை நடத்தினர். அதில் கிருஷ்ணன்பிள்ளை, நம்பூதிரி, சுந்தரையா போன்றவர்கள் பங்கேற்றனர். அப்போதுதான் நம்பூதிரி அவர்களுக்கு  கம்யூனிஸ்ட்களுடன் விவாத தொடர்பு ஏற்படுகிறது. இத்தொடர்பு குறித்து அவர் ஜெயபிரகாஷ் அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். ஆனாலும் கட்சி உறுப்பினர் என்பதில் ரகசியம் காக்கப்படவேண்டும் என்பதால் அவ்வாறு ஆனதை அவர் தெரிவிக்கவில்லை  டாக்டர் ஹரிதேவ் சர்மாவிற்கு அளித்த பேட்டியில்  இஎம்எஸ் மேற்கூறிய நினைவை பகிர்ந்துகொள்கிறார்.

 கேரளாவில் செயலாற்றிய தான் காங்கிரசிலிருந்து காங்கிரஸ் சோசலிஸ்ட்டிற்கு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நடைமுறை அனுபவம் விவாதங்கள் வாயிலாகவே பயணப்பட்டேன் என்பார் நம்பூதிரிபாட். 1938ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் மாநாட்டிற்கு சென்றுவந்த கிருஷ்ணன் பிள்ளை அங்கு நடந்த விவாதங்களை எடுத்துரைத்தார். கேரளா காங்கிரஸ் சோசலிஸ்ட்களில் பெரும்பாலோர் 1939 இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வது என முடிவெடுத்தோம் என்கிறார் நம்பூதிரிபாட் .
அன்றைய சோவியத்யூனியன் அனைவரின் ஈர்ப்புக்குரியதாக இருந்தது. சோசலிஸ்ட்களின் பத்ரிக்கை பிரபாதம் என்பதில் உலகம் சோவியத் மாடலை பின்பற்றாவிட்டால் மனித நாகரிகம் அழிந்துவிடும் என நம்பூதிரி அவர்கள் எழுதினார். அறிவியல் சிந்தனையில்  இயக்கவியல் மூலம் மனிதனை, சமுகத்தின் எதிர்காலத்தை கட்டுப்படுத்தலாம் என்றார்.. 1952ல் National question in Kerala என்பதை அவர் எழுதினார். தனது நம்பூதிரி சாதிய சூழல், திராவிடர் என்கிற இனவாதம், மலையாளி என்கிற மொழிசார்ந்த அடையாளம் என அனைத்தையும் அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
இளங்குளம் வேத மரபை சார்ந்த குடும்பமது. மேற்குமலபார் பகுதியில் மிகப்பெரும் நிலச்சுவான்தாரர்களாக அத்யன் நம்பூதிரிகள் இருந்தனர். வேதபாராயணங்களும் சம்ஸ்கிருத கல்வியும் நிறைந்த சூழல். நம்பூதிரி நல கழகத்தில் பணியாற்றியவரில் சிலர் ஆங்கில கல்வி அவசியம் என கருதினர். அங்கிருந்த முற்போக்கானவர்களின் முயற்சியால் ஆங்கில பள்ளி சூழல், கல்லூரி செல்ல வாய்ப்பு நம்பூதிரி அவர்களுக்கு ஏற்படுகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைவேட்கை சிந்தனையாலும், சோவியத் புரட்சி மார்க்ஸ்- லெனின் தாக்கத்தாலும் இந்தியாவில் கம்யூனிச இயக்கம் தனது உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் காணத் துவங்கியது. கேரளாவில் அன்று விடுதலை தாகம் கொண்டவர்கள்  காங்கிரஸ் இயக்கம், காங்கிரஸ் சோசலிச இயக்கம் கம்யூனிச இயக்கம் என தனது அமைப்புரீதியான மாற்றங்களை கண்டனர்.

இளங்குளம் மன சங்கரன் நம்பூதிரிபாட் என்பது அவரது முழுப்பெயர்.  ஜூன் 14, 1909ல்  கேரளா நம்பூதிரி குடும்பம் ஒன்றில்  பெரிந்தலமன்னா தாலுகாவில் பிறந்தார். அவரை வீட்டில் செல்லமாக குஞ்சு என அழைத்தனர் அவர் வாழ்நாளில் மிகவும் நேசித்த தாயார் பெயர் விஷ்ணுதத் அந்தர்ஜனம். சிறுவயதிலேயே காலமான அவரது தந்தை பெயர் பரமேஸ்வரன் நம்பூதிரிபாட். ஆங்கில கல்வி கற்பிக்கும் கூடத்திற்கு இடம் அவரது மாமா ஒருவரால் வழங்கப்பட்டது. மரபில் ஊறிப்போன நம்பூதிரி சமுகத்தினர் இதை எதிர்த்தனர். ஆங்கிலம் ஆபாசம் என்ற பிரச்சாரம் இருந்தது. ஆரம்பத்தில் வீட்டில் தனிஆசிரியர் மூலம் கல்வி, ஆசிரியர் இல்லத்தில் தங்கி  கல்வி- பிறகுதான் முறையான பள்ளிக்கல்விக்கு தான் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கிறார் இ எம் எஸ்.. அங்குதான் பல சாதி மாணவர்களுடன் பழகும் முதல் வாய்ப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.  வள்ளுவநாடு பகுதியில் ஹோம்ரூல்- அன்னிபெசண்ட், திலகர் பற்றிய பேச்சுக்கள் இருந்தன. கேசவமேனன் அவர்கள் எழுதிய கோகலே, திலகர், காந்தி புத்தகங்கள் கிடைக்கப்பெற்றன. காந்தியிடத்தில் இ எம் எஸ் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.  .
சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் சில நம்பூதிரிமார்களும் பங்கேற்றனர். அவர்கள் சாதி பிரஷ்டம் செய்யப்பட்டனர். கிலாபத் இயக்க சூழலில் தமிழகத்தில் ஆசிரியர் நண்பர்களுடன் திருச்சி, பழனி, ராமேஸ்வரம் யாத்திரை வந்தததாக இ எம் எஸ் எழுதியுள்ளார். மாத்ருபூமி, யோகஷேமம், கைராளி இலக்கிய பத்ரிக்கை கிடைக்கிறது. விவேகானந்தர் எழுத்துக்கள் பரிச்சயமாகின்றன. 1923ல் காந்தி திருச்சூர் வந்தபோது ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவராக  தானும் காணச்சென்றதாக இ எம் எஸ் தெரிவிக்கிறார். அதே ஆண்டில் தனது 15 வயதில் நம்பூதிரி நல கழக செயலராகிறார். அவரின் முதல் பொதுப்பணி அங்கு துவங்கியதாக  தெரிவிக்கிறார்.  பள்ளி விடுமுறையில் காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்கிறார். அங்கு நடந்த ஆங்கில விவாதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. முழுவிடுதலை ஏற்புடையதாக இருந்தாலும் , குடும்ப சூழல் காரணமாக குத்தகைதாரர் உரிமை விஷயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அன்று அவரால் ஏற்க இயலவில்லை . சைமன் கமிஷன் போராட்டத்தில் தான் பங்கேற்க முடியாமல் போனது குறித்து வருந்துகிறார்.
1929ல் அவர் திருச்சூர் செயிண்ட் தாமஸ் கல்லூரியில் சேர்கிறார். சி அச்சுதமேனன், அலெக்சாண்டர் போன்றவர்கள் கல்லூரி நண்பர்கள் . கல்லூரி நூலகம் மூலம் பெர்னார்ட்ஷா, எச் ஜி வெல்ஸ், ஹரால்ட் லாங்கே புத்தகங்கள் அறிமுகமாகின்றன. லாங்கேவின் சோசலிசம்- கம்யூனிச உரையாடல் அவருக்கு அறிமுகமாகிறது. நேரிடையாக மார்க்ஸ்- லெனின் புத்தகங்கங்கள் கிடைக்கப் பெறவில்லை. பாசுபதம், யோகசேமம் பத்ரிக்கைகளில் பிரஞ்சு புரட்சி- நம்பூதிரி சமுகம் குறித்து கட்டுரைகள் எழுத துவங்குகிறார். மலபாருக்கு ராஜாஜியும், ஜமன்லால் பஜாஜ் அவர்களும் வந்துள்ளதை அறிந்து கல்லூரியில் பேசவைக்க முயற்சிக்கின்றனர். அது முடியாத நிலையில் அவர்களை நம்பூதிரி உட்பட நண்பர்கள் சந்திக்கின்றனர். இந்தி பயில ராஜாஜி அறிவுரை தந்ததாக இ எம் எஸ் குறிப்பிடுகிறார்.
’சாதியை கேட்காதே- சொல்லாதே’ நாரயணகுரு தாக்கம், அய்யப்பன் அவர்களின் சமபோஜன இயக்கம் போன்றவற்றின் சூழலில் ’உன்னி நம்பூதிரி’ முற்போக்கு மாற்றங்களை விழையும் இதழாக வருகிறது. 1930களில் நம்பூதிரி சமுகத்தில் பெண்கள் விடுதலையை முன்வைக்கும் நாடகங்களில் இ எம் எஸ் பங்கேற்கிறார். வீடுகளில்கூட இந்நாடகங்கள் விவாதமானது. குடுமி களைதல்-கிராப் வைத்தல், பெண்கள் நகை அணிதல் போன்றவைகூட அச்சமுகத்தில் இயக்கமாக பரவின.
1932ல் நேருவின் தாக்கத்தில் அவரது வாழ்க்கை வரலாறு ஒன்றை இ எம் எஸ் எழுதி வெளியிடுகிறார். சட்டமறுப்பு இயக்கத்தில் கைதாகி வேலூர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி,, பட்டாபிசீதாரமைய்யா, ஆந்திர கேசரி பிரகாசம், தொழிற்சங்க தலைவர்கள் முகுந்தலால் சர்க்கார், வி வி கிரியின் நண்பர் ராமலிங்கம் போன்றவர்களின் விவாத தொடர்பு ஏற்படுகிறது. பட்டாபிசீதாரமைய்யாவிடம் உருது கற்க வாய்ப்பு ஏற்படுகிறது. சத்தியமூர்த்தி பூணூல் ஒன்றை கொடுத்து நம்பூதிரியை அணிய சொன்னதாகவும், மரியாதை நிமித்தம் தான் அதை பெற்றுக்கொண்டாலும் அணியவில்லை என்ற பதிவை தருகிறார் இ எம் எஸ். 1934ல் காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் பாட்னாவில் மாநாடு நடத்துகின்றனர் என்பதை அறிந்து இ எம் எஸ் அதற்கு அனுப்பப்படுகிறார். கேரளாகமிட்டிக்கு  கிருஷ்ணன்பிள்ளை செயலராகிறார். கம்யூனிஸ்ட்கட்சி தலைமறைவாக செயல்பட்ட காலத்தில் சுந்தரையா, அமீர்ஹதர்கான் தாக்கத்தில் அவர் கட்சி உறுப்பினராகிறார்... இ எம் எஸ்  காங்கிரஸ் சோசலிச மாநாடுகள் குறித்தும், சோசலிஸ்ட்கள்- கம்யூனிஸ்ட்கள் வேறுபாடுகள் குறித்தும் தனது கட்டுரைகளில் பின்னாட்களில் விளக்கமாக  எழுதியுள்ளார். 1939களில் நம்பூதிரி அவர்களின் குடும்பசொத்தை அரசாங்கம் பறிமுதல் செய்து அவரது துணைவியாரை நடுத்தெருவில் நிறுத்தியது. 1942ல் திரும்ப பெற்ற சொத்தை விற்று கடன் அடைத்ததுபோக கட்சி பத்திரிக்கை தேசாபிமானி துவங்க ரூ 70 ஆயிரம் தந்து தான் சொத்து ஏதுமற்றவராக மாறியதையும் நம்பூதிரி குறிப்பிடுகிறார்.
ஜெயபிரகாஷ் நாரயண் எழுதி வெளிவந்த ’Why Socialism’  கேரளாவில் நம்பூதிரி போன்றவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதை பாடபுத்தகம் போல கொண்டாடினோம் என எம் எஸ் பதிவு செய்கிறார். அதேபோல் ஜேபியின் கேரளா வருகை,  கலந்துரையாடல் போன்றவை இத்தோழர்களை தொழிற்சங்கம், விவசாய அரங்கங்களின்பாற் வேலை செய்ய வைத்தது. வலதுசாரி படேல் போன்றவர்கள் பர்தோலியை உருவாக்கும்போது, நாம் ஏன் சோசலிச பர்தோலிகளை உருவாக்கக்கூடாது என ஜேபி வினவினார் என்ற பதிவையும் நம்பூதிரி தருகிறார். விவசாயிகள் இணையான அரசாங்கங்களை உருவாக்கவேண்டும் என்றார் ஜேபி. ஜேபி மசானியால் மட்டுமே நாங்கள் சோசலிஸ்ட்களாக இல்லை. ஏகேஜி, கிருஷ்ணபிள்ளை, இ எம் எஸ் அவரவர் அளவிலேயே சோசலிஸ்ட்களாக மாற முடிந்தது என்ற கருத்தையும் இ எம் எஸ் வெளிப்படுத்தியிருந்தார்...
1931ல் திருவனந்தபுரத்தில் பொன்னாரா ஸ்ரீதர், குருக்கல், திருவட்டார் தானுபிள்ளை, சிவசங்கரபிள்ளை, ஆர்.பி.அய்யர், பாஸ்கரன். சேகர் போன்றவ்ர்கள் கம்யூனிஸ்ட் லீக் ஒன்றை அமைத்தனர். தோழர்கள் பி கிருஷ்ணபிள்ளை, எம் எஸ், கே தாமோதரன் , என் சி சேகர் உதவியுடன் S V காட்டே கேரளாவில் கம்யூனிஸ்ட் குழு ஒன்றை அமைத்தார். 1937 முதல் இக்குழு இரகசியமாக செயல்படதுவங்கியதுவெளியில் காங்கிரசினராக, காங்கிரஸ் சோசலிஸ்ட்களாக கம்யூனிஸ்ட்கள் செயல்படும் சூழல் இருந்தது. 1939 டிசம்பரில் பினராயி, தெல்லிசேரியில் 90 தோழர்கள் கூடி கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள்.  ஜனவரி 1940ல் சுவர் விளம்பரங்கள் மூலம் கட்சி உதயம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
  இத்தலைவர்களில் பலர் கேரளா காங்கிரஸ் கமிட்டியில் ஆங்காங்கே முன்னணி தலைவர்களாக இருந்தனர். 1940ன் இறுதியில் மலபார் பகுதியில் விவசாய கிளர்ச்சிகள் எழுந்தன. போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவரும், பீடித்தொழிலாளி ஒருவரும் சுடப்பட்டனர். கம்யூனிசத்தின் பெயரால் நடந்த முதல் களப்பலியாக கேரளாவில் இது பார்க்கப்படுகிறது. பின்னர் 1943ல் கையூர் தோழர்களின் தியாகத்தை கேரளா கண்டது. பொதுச்செயலராக இருந்த தோழர் ஜோஷி நேரிடையாக தூக்குமேடை தியாகிகளை காணவந்து பெருமிதமாக அவர்கள் உரையாடிய  நிகழ்வும் நடந்தேறியது. சாதாரண அடித்தட்டு தொழிலாளர்கள், விவசாயதொழிலாளர்கள், விவசாயிகளுடன் கட்சி இயக்கம் வளர்ந்தது. மலபார் பகுதியில் விவசாயிகள் இயக்கத்தை வழிகாட்டும் செயலில் எம் எஸ் இறங்கினார். அனைத்திந்திய கிசான் இயக்கத்தில் அவருக்கு பொறுப்பு வந்தது.  1954ல் கட்சியின் விவசாய அரங்கில் கட்சி கடமைகள் என்ற ஆவண தயாரிப்பில் எம் எஸ் பெரும்பங்கை வகித்தார்.


மலையாளிகள்- கேரளா தேசிய இனம் என்பது குறித்து தொடர்ந்த ஆய்வுகளை தந்தவர் நம்பூதிரிபாட். 1952ல் The National Question In Kerla என்பதை எழுதினார் . அய்க்கிய கேரளம் என்கிற  இ எம் எஸ் முன்வைப்பு, விசால் ஆந்திரா பற்றி சுந்தரையா, பவானிசென் அவர்கள் வங்காளம் குறித்த ஆய்வுகள் குறித்து தனது கட்டுரை ஒன்றில் பிரகாஷ் காரத் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment