https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, February 27, 2017

விவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்

விவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்
                                        -ஆர் பட்டாபிராமன்
State, Society and Socialism என்கிற தலைப்பில் விவேகானந்தரின் கருத்துக்கள் அவரது நூல் தொகையிலிருந்து சேகரிக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. கல்கத்தா அத்வைத ஆசிரமம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதை வெளியிட்டனர். இப்புத்தகம் கேள்வி பதில் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அவரது நூல்தொகை ஆதாரம் உள்ள பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அதே நேரத்தில் சகோதரி நிவேதிதா கருத்துக்களும், சுவாமி அவர்களின் மறைவிற்கு 15 ஆண்டுகள் பின்னர் உருவான சோவியத் லெனின் ஆட்சி குறித்தும் இதில் கருத்துக்கள் ஓரிரு இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே வாசகர்கள் அவர் நேரிடையாக தெரிவித்ததாக ஆதாரம் தரக்கூடிய எழுத்துக்களை எடுத்து புரிந்து கொள்ளவேண்டும். அவரது சிந்தனைகளை பின்பற்றி சொல்பவர்கள் எழுத்துக்களை பிரித்து அறிய வேண்டியுள்ளது. இப்புத்தகம் சமூகம்-அதன் அம்சங்கங்கள், வரலாறும் முன்னேற்றமும், அரசும் வர்க்க ஆட்சியும், சுரண்டல் வடிவங்கள், ஜனநாயகமும் சோசலிசமும், புரட்சியும் சமூக மாற்றமும் என 7 பகுதிகளில் விவாதவடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. விவாதத்தின் சில முக்கிய அம்சங்கங்கள் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.

பல்வேறுநாடுகளில் சமுகம் உருவாகி மாறி வருகிது. கடலை நம்பி வாழ்ந்தவர், காடுகளில் வேட்டையாடி வாழ்ந்தவர், கால்நடை வளர்த்தோர், பயிர்த்தொழில் செய்தோர் என பல்வேறு பகுதியினர்- அவர்களிடம் ஏற்பட்ட பூசல்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த சிறு ராஜ்யங்கங்கள் தோன்றின. அசுரர்- தேவர் பண்புகளுடன் உருவான மோதல்கள் பின்னர் அரசாங்கத்திற்கு வழிவகுத்தன இவர்கள் மத்தியில் கலப்பும்  உருவாகி இந்த fusionலிருந்து நவீனகால இனங்கள், சமூகங்கள், பழக்கவழக்கங்கள் உருவாகின. அறிவியல் கருத்துக்கள் தோன்றலாயின என விவேகானந்தர் சமுகம்- சிற்றரசு- அரசு உருவாக்கம் பற்றி விவரிக்கிறார்..
ஒருவர் வயலில் உழைத்தார். விளைபொருட்களை விற்க வைஸ்யர் வந்தார். மற்றவர்கள் அதை பாதுகாப்பதாக சொல்லி அபகரித்தனர்.  உழைப்பவர் காயத்துவங்கினர். நான்கு வர்ண முடிச்சுகள் சமுகத்தில் இறுகின. நாம் பார்க்கும் நவீன சிக்கலான சமுகம் வந்துவிட்டது என்கிறார்.
கிழக்கு மேற்கு சமுக உருவாக்கங்கள் – வேறுபாடுகள் குறித்தும் சுவாமி விவாதிக்கிறார். ஆசியவகைப்பட்ட நாகரீகம் கங்கை, ஈப்ரடிஸ், யாக்டிசியாங் போன்ற ஆற்றங்கரையில் வளர்ந்தன.  அய்ரோப்பிய சமுகமோ கடல் கொள்ளையில், குன்றுப் பகுதிகளில் வளர்ந்தது. இதை தேவ அசுர தன்மை என  அவர் விவரிக்கிறார். அய்ரோப்பாவில் அரசியல் கருத்துக்களை கொண்ட தேசிய ஒற்றுமை உருவானது.  ஆசிய சமூகங்களில் சமய கருத்துக்கள் வடிவில் தேச ஒற்றுமை உருவானது. Introspective   என்பது கிழக்கிலும்   Scientific/ out seeing என்பது மேற்கிலும் இருந்தன. இந்தியாவில் அத்வைத ஒளியில் சோசியல் கம்யூனிசம் என சகோதரி நிவேதிதா பேசுகிறார். மற்றொரு அம்சத்தை விவேகானந்தர் பளிச்சென விளக்குகிறார். மேற்கில் மனிதன் தனிமனிதனாகவே (as individual) பிறக்கிறான். இந்தியாவிலோ அவன் சமூக மனிதனாக தனது சாதியில் பிறக்கிறான். அதன் கட்டுக்குள்ளேயே வளர்கிறான்.
பண்டைய இந்தியாவில் நிலங்கள் பொதுவானது  அரசனுக்கு/ அரசிற்கு சொந்தம். கிராமத்திற்கு பொதுவாக அவை சாகுபடிக்கு கொடுக்கப்படும். விளைச்சலில் ஒருபகுதியை அரசாங்கத்திற்கு தரவேண்டும். கிராம  மருத்துவர், பள்ளி வேறு பொது அம்சங்களை நிர்வகித்துக் கொள்ளவேண்டும். அய்ரோப்பிய சமூகம் போர் சமுகம். வாள் கொண்டு ஆளும் சமுகம். வாள் அங்கு நாகரீகம். ஆசியா மைனர் வழியே  ஆசிய இனங்கள் சில அங்கே முன்னேறி சென்றிருக்கக்கூடும். இதன்மூலம் கலப்பு நிகழ்ந்தது. ருஷ்யாவின் மொழி கூட்டத்தில் தென்னிந்திய மொழிகூட்ட சாயல் தெரிகிறது என தன் ஆய்வை முன்னெடுக்கிறார் . கிரேக்கத்தில் யவன நாகரீகம் இவ்வாறு ஏற்பட்டது. பலரை வென்றுதான் ரோமராஜ்யம் உருவாக்கப்பட்டது. யூதர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல நேர்ந்தது. அய்ரோப்பாவின் காட்டுமிராண்டி இனம் வாளால் தன்னை உருவாக்கி கொண்டது என்கிறார். பின்னர் கிறிஸ்துமதம்,  ராணிக்களின் அதிகார ஆட்சி என வளர்ந்தது. அரேபியர் பாலைவனப்பகுதியிலிருந்து இஸ்லாம் புறப்பட்டது. அது எல்லாவற்றையும் தூக்கி சென்றது. இந்தியாவில் அய்ரோப்பாவில் இஸ்லாம் நுழைந்தது.
ரோமசாம்ராஜ்ய அழிவிற்கு பின்னர் Franks  செல்வாக்கு அய்ரோப்பாவில் பரவியது. இப்போது நாம் பரங்கியர் என இச்சொல் மூலம் தான் அவர்களை குறிக்கிறோம். வாள் மூலம் பெர்ஷிய நாகரிகம் பரவியது. கிரிசின் அறிவுத்தாகம், கலை உணர்வுகள் பின்னர் இத்தாலியில் பிளாரன்ஸ் மறுமலர்ச்சியாக வெளிப்பட்டது. நாம் இன்று உணரும் அய்ரோப்பா 16 ஆம் நூற்றாண்டின் உருவாக்க தொடர்ச்சி. இந்தியாவில் அப்போது அக்பர், ஜஹாங்கிர்,ஷாஜஹான் முகல் ஆட்சி நடந்திருக்கும். பின்னர் வந்த நூற்றாண்டுகள் பிரஞ்சு புரட்சியின் சுதந்திரம்- சகோதரத்துவம், சமத்துவம் முழக்கங்களை கண்டன. பிரான்சில் அது பேசப்படுகிறதோ இல்லையோ, உலக நாடுகளை அம்முழக்கம் கவ்வி பிடித்தது என்கிறார்.

வடக்கில் இமயம், தெற்கில் சமவெளி, இடையில் காடுகளின் பகுதியாக இந்தியா  என்பது உணரப்பட்டது. திராவிடர், பூர்வீக குடிகள் அவர்களது வழக்கம்- சமயம் இருந்தன். ஆரியர் என்ற பெருமித இனம் பல்வேறு அம்சங்களை அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டாலும் இவர்களை தனித்தே வைத்திருந்தது. வாளின் வலிமையிலாது மதிநுட்ப புரோகித வர்க்கம் செல்வாக்கு பெற்றது. உயர்தட்டாக மாறியது. குலத்தொழிலாக தொடர்ந்த குடும்பங்கள் சாதிகளாக இறுகின. எல்லைகளை வகுத்துக்கொண்டன. சாதியை எவரும் தாண்டமுடியாது. பிரிவினையாக சாதிகள் எனவும், சாதிக்குள் உதவிக்கொள்ளும் சமுகம் என்ற ஏற்பாடாக இருந்தது. சாதி என்கிற கட்டுமானம் ஆரோக்கிய போட்டி என்பதை மட்டுப்படுத்திவிட்டது. இதுவே இந்திய அரசியலின் வீழ்ச்சிக்கும் காரணமாகியது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகின் பெரும் வர்த்தக மையம் இந்தியா. பருத்தி, சணல் சாயப்பொருட்கள், அரிசி, முத்து, பவளம், உயர்தர பட்டு, கம்பளி என ஏற்றுமதி செய்த நாடு இந்தியா. ஆப்கான், பெர்சியா வழியாக வர்த்தகம் செழித்தது.
 ஆன்மீக வழியை அனைவருக்கும் திறக்க கிருஷ்ணன், சமூக சமத்துவத்திற்காக  புத்தம்- வைஷ்ணவம் என போராட்டங்கள் நடந்தது ஆன்மீக சமத்துவம் பேசிய நாடு சமூக வேறுபாடுகளை கொண்டே நகர்ந்தது. வடக்கில் குமரிலர், தெற்கில் ஆதிசங்கரர்  ராமானுஜர் செக்ட் வகைப்பட்ட கோட்பாடுகள், சடங்குமுறையிலான இந்துயிசம் உருவாயின. சங்கரரின் இயக்கம் மக்கள் தொண்டு இயக்கமாகாமல் அறிவு இயக்கமானது. சமஸ்கிருத வாகனத்தையும், சாதிய சட்டங்களுடனும் அது பயணித்தது. ராமானுஜர் உணர்வுகளின் எழுச்சியாய் நடைமுறைத் தத்துவங்களுடன் சாதாரண மக்களை ஈர்த்து பயணித்தார். ராமானந்தர், கபீர், சைதன்யர், நானக் மனிதர்களின் சமத்துவம் என பேசினர். அதே நேரத்தில் பல்வேறு தத்துவதிசைகளில் அவர்களது பயணம் சென்றது.
முகலாயர்கள், பிரஞ்சுகார்ர்கள், ஆங்கிலேயர்கள் என நுழைவை கண்டோம். ஆங்கிலேயர் வெற்றி பைபிளின் வெர்றி என பேசப்பட்டது. ஆனால் அவர்களின் உணமையான யுத்தக்கொடி ஆலை சிம்னிகளில் பறந்தது. ஒவ்வொருநாடும் தனக்கென செயல்முறைகளை கொண்டிருந்தன. சில அரசியல் வழி- சில சமூக சீர்திருத்த வழி என அடையாம் பெற்றன. இங்கிலாந்து அரசியல் மூலம் சமயம் என அறியப்பட்டால் அமெரிக்காவை சமய சீர்திருத்தங்கள் மூலம் சமயம் என புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. உலக பாதுகாப்பு என்பது தேசங்களின் கருத்தாக இல்லாமல் போனால் அழிவுதான். நமது நாடு பல துயர்களையும் தாண்டி நிற்கிறது எனில் இந்த உலக பாதுகாப்பு எனும் எண்ணத்தால்தான். அய்ரோப்பியர்களுக்கு தாங்கள் இல்லாவிட்டால் உலகம் நகராது என்ற எண்ணம் உள்ளது. இந்த எண்ணம் அவர்களை வலிமைப்படுத்தியும் உள்ளது.
பிரஞ்சு மக்கள் அரசியல் சுதந்திரம் என்பதில் ஊறுதி பூண்டவர்கள். அரசாங்கத்தின் தாக்குதல்களை கொடுமைகளை கூட அவர்கள் சகித்துக் கொள்வர். ஆங்கிலேயர் give and take  என்பர். இந்தியர் சிந்தனை முக்தியாகும்- ஆன்மீக சுதந்திரம்- விடுதலை என்கிறோம். இதை தொடாமல் யார் எதை செய்தாலும் இந்தியர்கள் சகித்துக் கொள்கின்றனர். ஒன்று மட்டும் உறுதி. சமுக, அரசியல், ஆன்மீகம் என்பதில் நானும் என் சகோதரனும் சமம்தான் என்ற பேருண்மை அனைத்து நாடுகளுக்கும் அனைத்து மக்களுக்கும் தேவைப்படுகிற ஒன்று. இந்தியாவின் சீரழிவிற்கு இங்கு நிலவிய பண்டைய பழக்கங்களோ சட்டங்களோ காரணமல்ல. அவற்றை சரியாக பின்பற்றாமைதான் என சொல்லும்போது சுவாமி எந்த சட்டம்- பழக்கத்தை சொல்கிறார் என ஊகிக்க முடியவில்லை. மனுவாக இருந்தால் அது இன்றைக்கு விவாதத்திற்குரியதாக மாறும்.
இந்திய சீன நாகரிகங்கள் உறைந்து போனதற்கு அங்கு நிலவிய வறுமைதான் காரணம் என்கிறார் சுவாமி. அன்றாட வாழ்விற்கே போராடும் மனிதனால் சிந்தனை புரட்சியை எவ்வாறு மேல் நக்ர்த்த இயலும் -. புதியன காண நேரமேது என்கிறார். தர்மம், துறவு, மோட்சம் என்கிறோம். முதலில் மனிதன் அனைத்து மகிழ்ச்சியையும் பெறட்டும். பின் அவன் அவற்றை துறக்கட்டும் தேசம் முழுதும் ஒரே நேரத்தில் சந்நியாசம் எடுத்திடமுடியாது என்கிறார். புத்த மதத்தில் இந்த தவறுதான் நடந்தது. அனைவருக்கும் சீருடை என்பதை புகுத்திடமுடியாது என  கேலி செய்கிறார். சுயதர்ம்ம் என்கிறோம். மோட்சம் பெரிய விஷயம்தான். ஓரடிகூட எடுத்து வைக்க முடியாதவனை இலங்கைக்கு பாய வைக்கமுடியாது என்கிற எதார்த்தம் உணர்த்துகிறார்.

தர்மம் என்பது செயல் சார்ந்தவை. செயலுக்காகவே வேதம் என்றார் ஜைமினி. அவரவர் கடமை அவசியமாகிது. மனிதனுக்கு தைரியம் தேவை. நிலைமைகளுக்கேற்ப அவரவர் ஹீரோ ஆகவேண்டும். யாரையும் வதைக்காமல்  காரியமற்றிடவேண்டும். ஆயிரம் முறை ஓம் உச்சரித்துவிட்டோம் ஒன்றும் நடக்கவில்லை. பாவம் போகும் என்றார்கள். பல ஆண்டுகள் உச்சரித்தும் பலனில்லை. நாம் சரியாக புரிந்துகொள்ளாததின் விளைவு இது. சித்த சுத்தி என்கிற செயலில் பரிசுத்தமாகும் புத்தி அவசியம். மோட்ச காரியங்கள் வேறு. தர்ம காரியங்கள் வேறு என கீதையில் கிருஷ்ணன் வகைப்படுத்துகிறார். செயல்படும்போது நன்மை தீமைகள் உருவாகும். சும்மாயிருப்பதைவிட அது மேலானதல்லாவா என வினவுகிறார் சுவாமி.
கீதையில் விவேகானந்தர் சாரப்படுத்துவது அதன் அத்தியாயம் 2ல் களைப்படையாதே பார்த்தா என்கிற பாடல். எழு செயல்படு என்கிற உற்சாகப்படுத்தும் - செயலுக்கு உந்தித் தள்ளும் முழக்கம் அப்பாடலில் தொழிற்படுவதால் விவேகானந்தர் அதை திரும்ப திரும்ப எடுத்து பேசுகிறார். Arise Acquire Fame என்பார். சமூகம் வலிமை பெற அனைவருக்கும் கல்வி தான் வழி என்கிறார். மக்கள் கற்பிக்கப்படுவதன் மூலம் நமது தேசம் எழட்டும் என்கிறார். நல்லதின் சக்தியை உணர்தல், பொறாமை விட்டொழித்தல், அனைவருக்கும் நன்மை செய்தல் என் மூன்று அம்சங்கள் நம் எல்லாருக்கும் வலிமையை தரும் என்கிறார்.

நாம் விதவை திருமணம் என பேசினோம் ஆனால் உண்மையில் ஒரு பெண்ணிற்கு எத்தனை கணவன் கிடைக்கிறான் என்பது அல்ல முன்னேற்றம் – அங்குள்ள வெகுஜன மக்களின் வாழ்வில் என்ன மாற்றம் என்பதுதான் முன்னேற்றம் என சீர்திருத்தம் என்பதை redefine செய்கிறார். இந்த உதாரணத்தை அவர் ஏன் எடுத்துக் கொண்டார் என புரிந்துகொள்ள முடியவில்லை. மறைமுகமாக வங்க சீர்திருத்தவாதிகள் எவரையாவது விமர்சனம் செய்கிறாரா? அவரது லட்சிய சமுகம் உடல் மற்றும் ன்மீக விடுதலையில் இருப்பதாக சொல்கிறார். எந்திரங்கள் மட்டும் வறுமையை ஒழித்துவிடாது- மாறாக அவை நம் போராட்ட்த்தை அதிகப்படுத்திவிட்டன என்ற விமர்சனம் அவரிடம் இருக்கிறது. மனிதனின் தெய்வீகத்தன்மையை உணர்த்தாத எதுவும் நாகரீகமாகாது என்கிறார்.

No comments:

Post a Comment