Skip to main content

Comrade Professor தோழர் ஹிரன்முகர்ஜி 1

தோழர் ஹிரன்முகர்ஜி
                                  -ஆர்.பட்டாபிராமன்
ஹிரன் நவம்பர் 23, 1907ல் கல்கத்தா 24பர்கானா பகுதியில்  பிறந்தவர். சகோதர சகோதரிகள் பத்துபேர்  நிறைந்த பெரிய குடும்பமது.  ஆரம்பகல்வி, உயர்நிலை கல்விக்கு பின்னர் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் ஹிரன் சேர்ந்தார். பின்னர் ஆக்ஸ்போர்ட் கல்வி முடித்தார். அங்கு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பு ஏற்பட்டது. ஹிரன் காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் வழிப்பட்டு கட்சிக்கு வந்த குறிப்பை நாடாளுமன்றம்  தருகிறது.
ஹிரன் பார் அட் லா பாரிஸ்டர் பட்டம்பெற்று 1934ல் இந்தியா திரும்பினார். சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுரை ஏற்று ஆந்திரா பல்கலைகழகத்தில் வரலாறு அரசியல் விரிவுரையாளராக சேர்ந்தார். பிறகு கல்கத்தா சுரேந்திரநாத் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியத்துவங்கினார்.. கல்கத்தா பல்கலைகழக இலாகத்துறை தலைவராக 1940ல் உயர்ந்தார்.. 1936ல் தோழர் பி சி ஜோஷி பிற நண்பர்கள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்கிறார். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சோவியத்நண்பர்கள் அமைப்புகளில் செயல்படுகிறார். கட்சியில் வங்க மாநில கமிட்டியில் ஆரம்பத்தில் செயல்பட்டுவந்தார். பின்னர் 1958-68களில் தேசிய கவுன்சிலில் செயல்பட்டார். அவர் வங்க தொழிற்சங்க காங்கிரசில் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். கல்கத்தா பல்கலைகழக செனட்டில் இருந்துள்ளார். இந்திய திட்டகமிஷன் கல்வி குழு உறுப்பினராகவும்  இருந்தவர் ஹிரன்.

மார்க்சியம் சார்ந்த எழுத்துக்கள் மூலம்  அயராது தோழர்களுக்கு கற்று கொடுத்த மிக முக்கிய தலைவர்களுள் ஹிரனும் ஒருவர். அவர் நடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நேரு உட்பட முக்கிய தலைவர்கள் அவரது உரையை கவனமாக கேட்டனர். அவரது சொற்செறிவும் ஆழமும் மிகுந்த ஆங்கிலம் நேருவை மிக அதிகமாக கவர்ந்தது. அவரது பெங்காலி, உருது மொழியாற்றலும் பிரமிக்க தகுந்தவை என அவரின் உரைகளை கேட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில்  இடதுசாரிகளின் மனசாட்சி என அவர் கருதப்பட்டார். .
மார்க்சிய மூலங்களுடன் உள்ள பயிற்சி போலவே அவர் வேத உபநிடத ஸ்லோகங்களை சொல்லக்கூடியவராகவும் இருந்தார் என அறியமுடிகிறது. அமர்த்யாசென் ஹிரன் படித்த அதே கல்லூரியில் படித்தவர். மாணவர் பருவம் துவங்கி ஹிரன் பற்றி அறிந்தவர்.  “இந்தியாவின் பின்தங்கிய ஒடுக்கப்பட்டவரின் அருகில் நின்று குரல் கொடுத்தவர்  ஹிரன். எதையும் முழுமையாக காரணகாரிய அறிவுடன் பகுத்தறியும் ஆற்றல் கொண்டவர் ஹிரன். சிலநேரங்களில் தனது கட்சியுடன்கூட வேறுபட்டு நிற்கவும் சொல்லவும் தெரிந்தவர். 1947 விடுதலை பொய்யானது என்ற வரையறுப்பில்  அவர் மாறுபட்டார்.  சமஸ்கிருதம் கற்று அதிலும் தேர்ந்தவராக இருந்தார். இந்த மூன்று அமசங்கள் எனக்கு பிடித்தவை” என அமர்த்யா சென் ஹிரன் பற்றி குறிப்பிட்டார். ஆனால் 1959 மே 5 அன்று லோக்சபா விவாதம் ஒன்றில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கல் என்ற கமிஷன் பரிந்துரையை கடுமையாக ஹிரன் எதிர்த்து உரையாற்றினார். அதன் வளம் என்பது வேறு. கல்விக்கூடங்களில் கட்டாய திணிப்பு வேறு என்றார். உயர்கல்வி- ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்துவது போதும் என்றார்.
இன்று பி ஜே பி யின் முன்னணி தலைவராகவும் அமைச்சராகவும் உள்ள வெங்கையா நாயுடு தான் விரும்பி படித்த சில புத்தகங்களில் ஒன்று தோழர் ஹிரன் முகர்ஜியின் நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு என்கிறார். அதை ’ரெபரன்ஸ்’ என்கிற அளவில் குறிப்பிடுகிறார்.  Calcutta North East என்கிற தொகுதியிலிருந்து முதல் நாடாளுமன்ற தேர்தல் துவங்கி  5வது லோக்சபா 1977வரை 25 ஆண்டுகள் ஹிரன் முகர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1990ல் பத்மபூஷனும் 1991ல் பத்மவிபூஷனும் அவருக்கு வழங்கப்பட்டது. தோழர் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகராக இருந்தபோது ஹிரன் நினைவு சொற்பொழிவு  ஆண்டுதோறும் நடந்திட ஏற்பாடு செய்யப்பட்டது.அவரின் நூற்றாண்டுகொண்டாட்டத்தின்போது சீரிய அவரது நாடாளுமன்ற பங்களிப்பிற்காக நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக நடந்த நினைவு சொற்பொழிவாக வ்ரலாற்றில் இடம்பெற்றது . முதல் சொற்பொழிவு அமர்த்யாசென் அவர்களாலும் , தொடர்ந்து வங்கதேசத்தின் முகமது யூனஸ், பூட்டானின் பிரதமர் ஜிக்மி தின்லே ஆகியோராலும் சொற்பொழிவுகள் தரப்பட்டன
Nationalism என்கிற கட்டுரை ஒன்றை விடுதலைக்கு முன்னர் ஹிரன் எழுதினார். தேசியத்தின் 150 ஆண்டுகால வரலாற்று தனமைகளை அதில் அவர் விளக்கினார். பிரஞ்சு தேசிய உருவாக்கம், ஜெர்மன் தேசியம், மாஜினியின் இத்தாலி, அப்போது வந்துகொண்டிருந்த நாசிகளின் புத்தகங்களில் காணப்படுபவை, அய்ரிஷ் பேராசிரியர்கள் ஹோமரை  அய்ரிஷ்காரர் என நிறுவ முயற்சிப்பது, தாந்தே ஜெர்மன்காரர் என்பது, யேசு யூதர் அல்ல என்று பேசுவது போன்ற முயற்சிகளை அவர் எடுத்துரைக்கிறார். நாம் நினக்கிறோம் அதனால் தேசியமாக இருக்கிறோம் என சொல்பவர்களும் உண்டு. தேசியம் என்பதை இயற்கையானதுபோல் கருதவேண்டியதில்லை. அது குறிப்பிட்ட சூழலில் உருவாகிறது எனில் உகந்த சூழல் இல்லயெனில் முறியவும் செய்திடும் என்றார் ஹிரன். தேசியம் குறித்த வடிவங்களும் பண்புகளும் முன்னோர்களால் வரலாற்று தன்மையில் நமக்கு வந்து சேர்கின்றன. சமுக பழக்கத்தால் நாம் அவற்றை கேள்விக்கு உட்படுத்துவதில்லை. அன்று இருந்த சூழலில் சோசலிசம் மற்றும் தேசியத்திற்கான உறவுகளை சொல்லி சோவியத் மாதிரியை  சுட்டிக்காட்டி அக்கட்டுரையை அவர் முடித்திருந்தார்.
அக்காலகட்டத்தில் பல கம்யூனிஸ்ட்கள் செய்தது போலவே காந்தி குறித்த விமர்சன கட்டுரை ஒன்றை ஹிரன் கல்கத்தா ரிவ்யூவில் 1935ல் எழுதினார். அதில் காந்திக்கு பொருளாதார ஆழம் ஏதுமில்லை எனபது அவரது மைய விமர்சனம். பின்னர் 1958ல் காந்திஜி- ஓர் ஆய்வு என்ற புத்தகத்தை அவர் மீது மிகுந்த மரியாதை உணர்வுடனும் அதே போல் வேறுபடும் தன்மையுடனும் தான் எழுதியதாக அவர் குறிப்பிட்டார். இந்திய விடுதலைப் போராட்ட்டத்தில்  காந்திக்கு இணையான பங்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டதாக சொல்லிவிடமுடியாது என்றார் ஹிரன். ஆனால் அடிப்படையான மாற்றங்களை கொண்டுவரமுடியாத அவரது தோல்விக்கு காரணம் ஒருபோதும் வன்முறை கூடாது என்ற நிலையை அவர் எடுத்ததுதான் என்கிறார். அதேபோல் ஒருமுறை 1975ல் அவர் தனது உரையின்போது காந்தியை சோசலிஸ்ட் என கூறமுடியாது. ஆனால் மனித ஏற்றத்தாழவை ஏற்காத திசையில் அவர் பயணித்தவர் என்றார்.
காங்கிரசில் இருந்த மற்ற எவரையும்விட திட்டமிட்ட பொருளதாரம் என்பதில் நேரு உறுதியாக இருந்தார். இந்தியாவில் சோசலிச சமுதாயம் கட்டவேண்டும் என்கிற இலக்கை காங்கிரஸ் தயக்கத்துடனாவது அங்கீகரித்ததில் நேருவிற்கு பெரும்பங்கு இருக்கிறது என்றார் ஹிரன். முதலாளித்துவ சமுகம் அகற்றப்படவேண்டும் என்பது மிகச் சரியே. ஆனால் அதற்கான போராட்டங்கள் சில்க் உறைகளை அணிந்து மென்மையானதாக இராது என்றார் ஹிரன்.  Under Crimson colors of communism , Reflections on Marxism, Gandhi Ambedkar and Extirpation of Untouchability, Bow of Burning Gold, Study on Gandhi, Nehru, Rabindranath Tagore  போன்ற பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்..
கம்யூனிசம் கிரிம்சான் கலர் என்கி புத்தகம் பல கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்தது. அதில் அவர் மார்க்ஸ், லெனின், மாவோ, ஸ்டாலின், அஜாய், ஜோஷி, புபேஷ் போன்றவர்களைப் பற்றியும், இந்தியாவில் சோசலிசம், ஜனநாயகமும் சோசலிசமும், மதம், மாவர் இயக்கம், தலைமையும் தேச கட்டுமானமும் போன்ற கட்டுரைகளை தந்துள்ளார். மார்க்சியமும் மனிதனும் என்கிற கட்டுரை ஒன்றை ஹிரன் எழுதினார். மகிழ்ச்சி உண்மை என்பன யாவை என அதில் விவாதிக்கிறார். மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பன யாவை அவற்றை அகற்றிட மார்க்சியம் என அவர் அதில் தீர்வை முன்வைக்கிறார்.
வேலை என்பது நிர்பந்தம் என்றார் மார்க்ஸ். மார்க்சின் சிந்தனைகளை இளம் மார்க்ஸ், முதிர்ந்த மார்க்ஸ் என பிரித்து பொருள் கொள்வது சரியல்ல என்பது ஹிரன் கருத்து. மாற்றம் என்பது புகழ்வாய்ந்த தனி மனிதர் சிலரால் நடைபெவில்லை என்றும் தலைமுறை தலைமுறையாக மனிதர்களின் கூட்டான முயற்சியின் வெளிப்பாடாகத்தான் அவற்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார் ஹிரன். ஓவியம், சிற்பம், கலை யாவும் மனிதனின் சமுகவயப்பட்ட உறவுகளால் முகிழ்த்தவை . மனிதனுடன் மனிதனுக்கு வரவேண்டிய இணக்கம் ஒத்திசைவு என்கிற பார்வையில்தான் ஹிரன் சோவியத் புரட்சியைக்கூட விளக்குகிறார். இதயத்தில் சுடராக கனன்றும், தெளிவான சித்தத்துடன் பலமாக கைஉயர்த்தி மனிதகுல மேம்பாட்டிற்காக செல்லும் இயக்கத்தில் தவறுகள் நேரலாம். கீழே விழலாம். எதிர்காலம் நோக்கிய அதன் மானுட பயம் அவசியமானது என அறிதல் வேண்டும் என நம்பிக்கை தருகிறார் ஹிரன்.
தோழர் எங்கெல்ஸ் குறித்து ஹிரன் எழுதும்போது அவரின் தனிச்சிறப்புகளையும் அவரது பங்களிப்புகளையும் எடுத்து சொல்கிறார். கம்யூனிஸ்ட்லீக் உருவாக்கம், புரட்சிகர குழுக்களை ஒன்றிணைத்தல், கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதுவதில் அடிப்படையான வேலைகளை செய்தல், மார்க்சின் மறைவிற்கு பின்னர் சோசலிச இயக்கங்களுக்கு சிந்த ஆசானாக தொடர்தல், மூலதனம் கொணர்தல் போன் பங்களிப்புகளை ஹிரன் வெளிப்படுத்துகிறார். ங்கெல்ஸ் தன்னையே தியாகம் செய்திராவிட்டால் மூலதன முதல்பாகம் வந்திருக்காது என மார்க்ஸ் குறிப்பிட்டதையும் அவர் சொல்கிறார்.. பெர்ட்ரண்ட்ரஸ்ஸல் போன்வர்கள் தனது Freedom and Organisation நூலில் மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்பு குறித்து வைத்த விமர்சன பார்வையை  ஏற்கமுடியாது என ஹிரன் வாதிடுகிறார். கார்ல் காட்ஸ்கிக்கு எங்கெல்ஸ் எழுதிய  செப் 12, 1882 கடிதத்தில் இந்தியாவில் புரட்சி வெற்றிபெற்றால் அது நம் எல்லோருக்கும் மிக சிறந்த ஒன்றாக அமையும் என எழுதியதை ஹிரன் குறிப்பிடுகிறார். மார்க்ஸ் மறைந்தபின்பு தனக்கு தரப்படும் முக்கியத்துவம் பெருமைக்குரிய முன்னவர் மறைவிற்கு பின் அடுத்தநிலையில் இருப்பவர்க்கு கிடைப்பது போன்ற ஒன்றே. ஆனால் வரலாறு சரியானதை காட்டிவிடும் என்று மிக அடக்கமாக எங்கெல்ஸ் பேசியதாக ஹிரன் குறிப்பிடுகிறார்.
 மார்க்சியர் அல்லாத புகழ்வாய்ந்த எழுத்தாளர்களை ஹிரன்  கண்டிப்பாக படித்து எதிர்வினையை தரவேண்டும் என கருதுபவராகவே இருந்தார். அதற்காக பலமணிநேரம் ஒதுக்கக்கூடியவராகவும் இருந்தார். லெனின் குறித்து எச் ஜி வெல்ஸ் பேசியது பற்றி குறிப்பிட்டுவிட்டு ஹெகல் மகத்தான மனிதர் குறித்து தந்த விளக்கத்தை ஹிரன் தருகிறார். மகத்தான மனிதன் அவன் வாழும் காலத்திற்கான விருப்ப உறுதியை வெளிப்படுத்துபவன். அதை எட்டிடுவதற்கு செயலாற்றுபவன். அதை நடைமுறையில் எட்டவும் செய்வான் . அவன் செய்வதுதான் அக்காலத்தின் இதயமாகவும் சாரமாகவும் இருக்கும். இந்த ஹெகல் கூறும் வரையறை லெனினுக்கு பொருத்தமாக இருப்பதாக ஹிரன் எடுத்துக்காட்டுகிறார்.


அரசியல் என்பது தவிப்பு பற்று உறுதி என கருதினார் ஹிரன். அவர் அவரது ஆங்கில புலமையில் எழுதிய வரிகள் "Politics"fundamentally speaking, calls for passion in its pursuit. And passion, in Latin and the Romance languages, has for its first as meaning `suffering' which none in true political life should wish to escape." அரசியல் லட்சக்கணக்கான ஆண், பெண்களிடமிருந்து உருவாகிது என்பார் லெனின்.. லெனினுடன் கருத்து மாறுபட்ட ரோசாலக்சம்பர்க் கூட கிளாரா ஜெட்கினுடன் உரையாடியபோது லெனின் சிறப்புகளை மறுக்கவில்லை என்கிறார் ஹிரன். அமெரிக்க எழுத்தாளர் ஹோவர்ட்பார்சன்ஸ் லெனின் மார்க்சியமாகிவிட்டார் என குறிப்பிட்டதை ஹிரன் எடுத்து சொல்கிறார். ஜான்ரீடு லெனின் பார்க்க வசீகரமாக இல்லை. ஆனால் மக்களின் தலைவராக மிளிர்வதில் அவர் அனைவரையும் கவர்ந்துவிட்டார் என குறிப்பிட்டதையும் ஹிரன் சொல்கிறார். மார்டோவ், பிளக்கானோவ், காட்ஸ்கி போன்ற அவர் காலத்தில் தவிர்க்கமுடியாதவர்களாக கருதப்பட்டவர்களுடன் லெனின் மார்க்சியம் காக்கும் போரில் ஈடுபட தயங்கவில்லை என்கிறார் ஹிரன்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...