https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, April 21, 2017

May Day Martyrs Of Chicago சிகாகோ மேதின தியாகிகள்

சிகாகோ  மேதின தியாகிகள்
                         -ஆர்.பட்டாபிராமன்

 மேற்கு சிகாகோவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4, 1886 இரவு கூடியிருந்த தொழிலாளர்களை போலீசார் அச்சுறுத்தி கலைத்துக்கொண்டிருந்தனர். அங்கு டைனமிட் குண்டு வெடித்ததில் போலீஸ்காரர்கள் உயிர்ப்பலியும் காயமும் ஏற்பட்டது. கோபமடைந்த போலீசார் கண்மூடித்தனமாக சுட்டனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து, சிலர் உயிர் இழப்பும் நேர்ந்து அத்துப்பாக்கி சூடு  முடிந்தது.
ஹேமார்க்கெட் சம்பவத்திற்கு வழக்கு  போடப்பட்டது. கண்துடைப்பு விசாரணை அமைக்கப்பட்டு அதில் ஆல்பர்ட் பார்சன்ஸ், அகஸ்ட் ஸ்பீஸ், சாமுவேல் பீல்டன், மிஷேல் ஸ்க்வாப். அடால்ப் ஃபிஷர், ஜார்ஜ் எங்கெல், லூயி லிங் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், ஆஸ்கர் நீபேவிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. இரு அம்சங்கள் அப்போது அப்பகுதியில் கவ்வி பிடித்திருந்தன. உழைப்பவர்களுக்கு 8 மணிநேரம் மட்டுமே சட்டபூர்வ வேலை இருக்கவேண்டும். மற்ற ஒன்று  புரட்சிகர சோசலிச சிந்தனை. அதிலும் குறிப்பாக அனார்க்கிச செல்வாக்கில் -என்பவை அந்த குறிப்பிடத்தக்க இரண்டு அம்சங்கள்.
8 மணி நேரவேலை இயக்கங்கள் அதற்கு முன்பாக 10 ஆண்டுகளாக பெரும் தாக்கங்களை ஆங்காங்கே உருவாக்கி அமெரிக்காவின் 6 மாநிலங்கள் அதை அங்கீகரித்திருந்தன. ஜூன் 1868ல் பெடரல் சட்டம் என அரசாங்க ஊழியர்களுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டும்விட்டது. ஆனால்   முதலாளிகளால் அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத சூழலே நிலவியது. அனைத்திற்கும் மேலாக 1876ல் அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் இச்சட்டத்தை இரத்து செய்துவிட்டது. அரசாங்கம் ஆங்காங்கே தொழிலாளர் இயக்கங்களுடன் இது குறித்து உடன்பாடு போட்டுக்கொண்டால் போதும் என்றது.
AFL American Federation of Labour முன்னோடிகள்  கருத்தரங்கு ஒன்றைகூட்டி இனி மே 1 1886 முதல் சட்டரீதியான உழைப்பு எனில் 8 மணி நேரம்தான் என்கிற புகழ்வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். அனைத்து தொழிலாளரையும் இதை நோக்கி அறைகூவல் விடுத்தனர். அமெரிக்காவின் பல்வேறு உழைக்கும் பிரிவினர், பெண்கள், நீக்ரோக்கள்பல நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் உட்பட ஒரே மேடையில் Federation of Labour,  Knights of Labour சார்பில் தொடர் இயக்கங்கள் கட்டினர்தொழிலாளர் பிரசுரங்கள், பத்ரிகைகள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த இயக்கங்களில் சிகோகாவில் 4 லட்சம் தொழிலாளர் பங்கேற்றனர். இதில் 10 சத தொழிலாளர்கள் குறைந்த வேலைநேர உரிமையை பெற்றுவிட்டனர்.
சிகாகோ சோசலிஸ்ட் கிளப் என்கிற ஆய்வு மற்றும் போராட்ட மையம் ஒன்றை ஜெர்மனியிலிருந்து குடியேறிய தோழர்கள் நடத்தி வந்தனர். அவர்கள் ஆயுதம் ஏந்தி தொழிலாளர்களை போலிஸ் தாக்குதல் போது காத்தும் வந்தனர். சோசலிஸ்ட் லேபர் கட்சி என்ற பெயரில் குழுவும் அதில் கருத்து மாறுபட்டவர்கள் நியுயார்க்கில் சோசலிஸ்ட் புரட்சிகர கிளப் என்றும் இயங்கிவந்தனர். சிகாகோ கிளப்பில் ஆல்பர்ட் பார்சன்ஸ். ஆகஸ்ட் ஸ்பைஸ் ஆகியோர் வழிகாட்டிவந்தனர்போலீஸ் தாக்குதலை சமாளிப்பது என்பதே பெரும் சவாலாக அவர்களுக்கு இருந்தது.
1883ல் பிட்ஸ்பர்க்கில் அமெரிக்க அனார்க்கிஸ்ட்களின் மாநாடு நடைபெற்றது. மார்க்சின் அகிலம் கலைந்த பின்னர் பிளாக் இண்டெர்னேஷனல் நிறுவப்பட்டது. மாநாட்டிற்கு இங்கிலாந்து சேர்ந்த ஜோகன் மோஸ்ட் வழிகாட்டினார். Internationl Working People's Association IWPA  தனது மானிபெஸ்டோ ஒன்றை வெளியிட்டதுFORCE  is the remedy for the evils of Capitalism என மோஸ்ட் பேசினார். Force என்பதில் பார்சன்ஸ், ஸ்பீஸ்க்கு உடன்பாடு இருந்தாலும் மோஸ்ட் தெரிவித்த தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள் என்பதற்கு பதிலாக போர்க்குணமிக்க தொழிற்சங்கம்  என்ற  மாற்று கருத்தை முன்வைத்தனர்.
IWPA செல்வாக்கு பெறத்துவங்கியது. சிகாகோவில் 6000 பேர் அதில் உறுப்பினர்களாயினர். அலார்ம் எனும் ஆங்கில பத்ரிகையை பார்சன்ஸ், அர்பெய்டெர் ஜெய்டுங் பத்ரிக்கை ஸ்பீஸ் பொறுப்பில் வெளிவந்தன. அவை 5000 அளவில் சர்க்குலேஷன் பெற்றன. ஜார்ஜ் எங்கெல் மாதப்பத்ரிக்கை டெர் அனார்க்க்கிஸ்ட்  கொணர்ந்தார். Wage system கூலிஅடிமை ஒழிப்பு என்கிற சித்தாந்த பிரச்சனைக்காக நிற்பவர்கள் அனார்க்கிஸ்ட்கள். இப்படி 8 மணி வேலை கேட்டு கூலிமுறையை முட்டுக்கொடுக்கலாமா என்கிற சித்தாந்தம் சார்ந்த கேள்வியும் தயக்கமும்  அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தது. முதலாளிகள் காட்டிய கடுமையான எதிர்ப்பும் அடக்குமுறைகளும் அவர்களை தொழிலாளர்களுடன் சேர்த்தது.. வர்க்க இயக்கம் என்பது மெதுவாக முன்னேறும், இதில் தனித்து ஒதுங்கிவிடுவது சரியல்ல என்பதாலேயே  8 மணி இயக்கத்தில் எங்களை இணைத்துக் கொள்கிறோம் என்றார் பார்சன்ஸ். சிகாகோ தொழிலாளர் மத்திய அமைப்பு என்கிற 22 சங்க கூட்டம் ஒன்றில் (1885 அக்டோபர்) ஸ்பீஸ்வன்முறைதான் பதில்’ என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தார்."We urgently call upon the wage earning class to arm itself inorder to be able to putforth against their exploiters such an arrangement which alone can be effective: VIOLENCE"
பிப் 16 1886ல் மெக்கார்மிக் அறுவை எந்திர தொழிலாளர் வேலைநிறுத்தம் நடந்தது. 1886 மே 3 அன்று மரம் அறுக்கும் தொழிலாளர் சங்கம் (Lumber Shovers' Union) 6000 தோழர்களை கூட்டியது. இதில் மெக்கார்மிக் மரம் அறுக்கும் தொழிலாளர்களும் கூடினர். அகஸ்ட் ஸ்பீஸ் பேசினார். வேலைநிறுத்தத்தில் பங்கேற்காதவர் வெளிவந்தபோது அவர்களை முழக்கமிட்டு போராட்டக்காரர்கள் உள்ளே துரத்தினர். உடன் 200 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அறிவிப்பு ஏதும் தராமல் அனைவரையும் தாக்கத்துவங்கினர். வேலைநிறுத்த போராளி ஒருவர் மரணித்தார். பலருக்கு இரத்தம் வழிந்தது. பத்திரிக்கை அலுவலகம் விரைந்த ஸ்பீஸ் தொழிலாளர்களே தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்துங்கள் என்கிற அறிக்கையை விடுத்தார். அறிக்கை Revenge Circular என பெயரிடப்பட்டு இருந்தது. Working Men! To Arms என்றுதான் ஸ்பீஸ் எழுதி கொடுத்து இருந்தார். பிரஸ்ஸில் இருந்த ஒருவர் ஆர்வ மிகுதியால் ரிவென்ஜ் என  அதை மாற்றிவிட்டார்.

அந்த அறிக்கை  2500 எண்ணிக்கை அளவில் விநியோகிக்கப்பட்டுவிட்டது. மறுநாள் போலீசாரின் தாக்க்குதலை கண்டித்து கூட்டம் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. Arm Yourself Appear Full Force  என்கிற அறிவிப்பு போனால்தான் தான் பேச வரமுடியும் என் ஸ்பீஸ் உறுதிபட தெரிவித்துவிட்டார். 20000 துண்டறிக்கைகள் கூட்ட அழைப்பாக கொடுக்கப்பட்டுவிட்டது. அதில் 200-300 அறிக்கைகளில் மேல்கூறிய வரி சேர்க்கப்பட்டிருந்தது. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் திரண்டனர்நேரம் ஆகஆக கலையவும் துவங்கினர். இரவு 8.30க்கு ஸ்பீஸ் பேசத்துவங்கினார். அவருக்கு பின்னர் பார்சன்ஸ் பேசினார். சிகாகோ மேயர் கார்டர் ஹாரிசன் இருவர் உரைகளையும் முழுமையாக கேட்டார். நிலைமைகள் மோசமாக இல்லை என உணர்ந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஜான் போன்ஃபீல்ட் என்பாரிடம் குவிக்கப்பட்ட போலீஸ்களை போக சொல்லிவிடலாம் என அறிவுரை தந்தார்.

. சாமுவேல் பீல்டன் பேச அழைக்கப்பட்டார். மணி இரவு 10யை நெருங்கியது இடியுடன் மழை துவங்கியது. பலரும் நனையாமல் இருக்க ஒதுங்க ஆரம்பித்தனர். கூட்டம் 200 அளவிற்கு குறைந்துவிட்டது. போலீஸ் அதிகாரிகள் போன்பீல்ட் மற்றும் வில்லியம் வார்டு இருவரும் மேடை நோக்கி செல்கின்றனர். அனைவரும் கலைய உத்தரவிடுகின்றனர். பீல்டன் நாங்கள் அமைதியாக கூட்டம் நடத்துகிறோம் என மறுமொழி தருகிறார். திடிரென வீசப்பட்ட குண்டால் மதியாஸ்டீகன் எனும் போலீஸ் மரணம் அடைகிறார். 70 போலிசார் காயமுறுகின்றனர். போலீஸ் சரமாரியாக சுடுகிறது. எவ்வளவுபேர் இறந்தனர்.-காயமுற்றனர் என்ற கணக்கில்லாமல் இது நடந்தேறியது.
மறுநாள் பரவலாக பத்திரிக்கைகள் அனார்க்கிஸ்ட், சோசலிஸ்ட், கம்யுனிஸ்ட்கள் சதி என முத்திரை குத்தி எழுதின. தொழிலாளர் குடியிருப்புகளை போலீசார் சூழ்ந்தனர். சோசலிஸ்ட் என அறியப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். கூட்ட அறைகள், பத்திரிக்கை அலுவலகங்கள் சூறையாடப்படுகின்றன, சிகாகோ நகர் முழுதும் போலீசாரின் வேட்டை பெரும் பேயாட்டமாக நடந்தேறுகிறது. State Attorney கிரின்னெல் என்பவர்  Make the raids first and lookup the law afterwards என பகிரங்க அறிக்கை தருகிறார். மே 27 1886அன்று 31 பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படுகின்றன,.   ஆனால் இந்த 8 பேர் மீது விசாரணை வருகிறது.
வழக்கு ஜோசப் காரி என்கிற கிரிமினல் நீதிமன்ற நீதிபதி முன் வருகிறது. கிரின்னெல்தான் தலைமை பிராசிக்யூட்டர். ஆரம்பத்தில் ஆல்பர்ட் பார்சன்ஸ் ஆஜாராகவில்லை. பின்னர் சேர்ந்துகொண்டார். அவர்கள் நேரிடையாக குற்றம் சாட்டப்பட்ட செயல்களுக்காக விசாரிக்கப்படவில்லை தண்டனை பெறப்போவதில்லை மாறாக கொண்டிருந்த கொள்கைக்காக என்பது வழக்கு விசாரணையில் வெளிப்படையாக தெரியவந்தது.
வழக்கு நாட்களில் மூன்று நாட்கள் போராளிகள் தங்கள்  சித்தாந்த உரைதனை தந்தனர். தாங்கள் உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாக பேசுவதாகவும், எங்கள் வாயை அடைப்பதன்மூலம் பெருகிவரும் தொழிலாளர் இயக்கங்களை தடுத்துவிட முடியாது என்றனர். ஜூவாலை எங்கும் பரவும் என்றனர். 7 பேருக்கு மரணதண்டனை, ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை என்ற தீர்ப்பை சொல்லினர். இலியினாயிஸ் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் சென்றதுஅங்கு ஆப்ரகாம் லிங்கனுடன் பணியாற்றிய லியொனார்ட் ஸ்வெட் என்பார் வாதாடினார். கீழ்கோர்ட் தீர்ப்பு செப் 14 1887ல் உறுதி செய்யப்பட்டது. அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அப்பீல் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.
AFLO தொழிற்சங்கம் அவர்களுக்கு கிளமென்சி கருணை வழங்கவேண்டும் என தீர்மானம் போட்டது. அதன் தலைவர் சாமுவேல் கோம்பர்ஸ் மற்றும் அமெரிக்காவின் புகழ்வாய்ந்த  ராபர்ட் இங்கெர்சால், செனட்டர் மற்றும் நீதிமான் லைமன் ட்ரம்பெல் அமெரிக்கன் பார் அசோசியேஷன் சார்ந்த ஸ்டிபன் கிரிகாரி, முர்ரே துலே, இலியனாயிஸ் தலைமை நீதிபதியாக இருந்த சர்க்யுட் கோர்ட், நிதி செயலராக இருந்த லைமேன் காஜெ, சிறந்த நாவலாசிரியர்  வில்லியம் டீன் ஹாவல்ஸ் போன்றவர்களும் தண்டனைகளை நிறைவேற்றவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். லண்டனில் சோசலிஸ்ட் தலைவர்கள் பெர்னாட் ஷா, வில்லியம் மோரீஸ் ’போராளிகள் பாதுகாப்பு’ கூட்டங்களை நடத்தினர். பிரான்ஸ், ஹாலந்து, ருஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கூட்டங்கள் நடைபெற்று பாதுகாப்பு நிதியை தொழிலாளர்களிடம் திரட்டினர்.
கவர்னர் ரிச்சர்ட் ஓகில்ஸ்பிக்கு ஏராள பெட்டிஷன்கள் குவிந்தன. பீல்டன், ஸ்க்வாப் கருணை மனுக்களை போட்டனர். ஸ்பீஸ் மற்றவர்களை விடுவித்து விடுங்கள், என்னை தூக்கில் ஏற்றுங்கள் என விண்ணப்பித்தார். நவம்பர் 11, 1887 தூக்குதண்டனை நாள் குறித்தனர். முதல்நாள் தனது வாயில் குண்டு ஒன்றை வெடிக்க செய்து லிங்  தற்கொலை செய்துகொண்டார். பீல்டன், ஸ்க்வாப் தண்டனை மாற்றப்பட்டு ஆயுள்தண்டனையானது. தோழர்கள் பார்சன்ஸ், ஸ்பீஸ், எங்கெல், பிஷர் தூக்கிலிடப்பட்டனர். நண்பர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சிகாகோ கண்டிராத பெரும் ஊர்வலம் 5 லட்சம் தொழிலாளர் மற்றும் மக்கள் திரண்டு 5 கலசங்களுக்கும் (Lingg casket சேர்த்து) அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகளை 25000 மக்கள் நின்று பார்வையிட்டனர். அவர்களுக்கு நினவு சின்னம் ஒன்றை ஜூன் 25, 1893ல் வால்டேகிம் கல்லறைஅருகில் அமைத்தனர்.
இலியனாயிஸ் கவர்னராக ஜான் பீட்டர் அல்ட்ஜெல்ட் என்பார் 1892ல் வெற்றி பெற்றார். அவர் ஜூன் 26 1893ல்  சிறையில் இருந்த தோழர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். அன்று இந்த இளைஞர்கள் செய்யாத தவறுக்கு நீதிமன்றம், நிர்வாகத்தின் காழ்ப்புணர்வால் பழிவாங்கப்பட்டுவிட்டனர் என்று தெரிவித்தார். சிகாகோ நிர்வாகமோ மறைந்த போலிஸ்காரர்களுக்கு ஆண்டுதோறும் நினவாஞ்சலி செய்து வந்தது. 1968ல் சிகாகோ தினசரி இதை கண்டித்து எழுதியது. எவர் குண்டெறிந்தவர் என நிரூபிக்கப்படாதபோது அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து தண்டனை தந்தது சரியல்ல என்ற கருத்தை வெளியிட்டது. காலம் கடந்த ஞானம்.
அக்டோபர் 16 1886 துவங்கி தொடர்ந்து Knights of Labour(தொழிலாளர் காவலர்) அவர்களது போராளிகளின் வாழ்க்கை பக்கங்களை வெளியிடதுவங்கியதுஅவை சுயசரிதைகள் என அறிவிப்பு வெளியிட்டது. இத்தோழர்கள் பொறுப்பில் வந்த பத்ரிக்கைகள்  மார்க்சியம் லெனினியம் நூலகம் பெர்லினிலும், அமெரிக்காவில் சில இதழ்களும் ஆய்வாளர்களுக்கு கிடைத்தன. பார்சன்ஸ், பீல்டன் தவிர மற்றவர்கள் ஜெர்மனியை சார்ந்தவர்கள். கொடுமையான முதலாளித்துவ சமூகத்தை அப்புறப்படுத்தி அங்கு அரசாங்கம் என்பதில்லாமல் மக்கள் தங்கள் தேவைகளைசுய விருப்பத்துடன் கூட்டாக பொதுநலம் சார்ந்து தீர்த்துக்கொள்ளும் கனவை கொண்டிருந்தனர். மக்கள் பிரதிநிதி என்கிற சிறுபான்மை என்பது ஏமாற்று என்ற அனார்க்கிச கருத்தை அவர்கள் , Anarchism is ORDER without Government என்பது அவர்களது விளக்கம்.முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து சோசலிசம் நோக்கிய கட்டுமானத்தில் ஆரம்பத்தில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் அரசு தேவை என்கிற கருத்தை பகுனின் போன்ற  அனார்க்கிஸ்ட்கள் ஏற்கவில்லை. மார்க்ஸ் சொன்ன அரசு உதிரும் அதுவரை பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு என்பதை  அனார்க்கிஸ்ட்கள் விமர்சித்தனர்.
ஜூலை 14, 1889ல் பாரிசில் சோசலிஸ்ட் ஒர்க்கர்ஸ் சர்வதேச மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அதில் மார்க்ஸ்- எங்கெல்ஸ் மீது பற்றுக்கொண்டவர்கள் என கருதப்படும் பல தலைவர்கள் பங்கேற்றனர். மார்க்சின் புதல்வி எலியனார் மார்க்ஸ், வில்லியம் லீப்னெக்ட், ரஷ்யாவின் பிளக்கானோவ், மகளிர் தினத்தின் காரணகர்த்தா கிளாரா ஜெட்கின் போன்றவர்கள் பாங்கேற்றனர். எங்கெல்ஸ் வரமுடியவில்லை. கூட்டம் துவங்கியவுடனேயே 8 மணிநேர வேலை குறித்து கவனஈர்ப்பை லீப்னெக்ட் கொணர்ந்தார். கூட்டமுடிவு தினமான ஜூலை 20ல் பிரான்ஸ் தொழிற்சங்கத்தலைவர் ரேமண்ட் லவீ (Raymond Lavigne) அடுத்து வருகிற மே1 1890 சர்வதேச தொழிலாளர் ஆர்ப்பாட்ட நாளாக வேண்டும் என்பதை முன்மொழிந்தார். வேலைநிறுத்தமாக வேண்டும் என அனார்க்கிஸ்ட் தோழர்கள் பேசினர். அந்தந்த நாட்டின் சூழலுக்கேற்ப என கருத்தொற்றுமை ஏற்பட்டு தொடர்ந்து மேதினம் தொழிலாளர் ஆர்பாட்ட நாளாக  ஆண்டுதோறும் கோடிக்கணக்கான தொழிலாளர்களால் மே முதல் நாள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு சிங்காரவேலர் மேதின ஊர்வலத்தை அறிமுகப்படுத்தினார்.
சிகாகோ போராளிகள் விசாரணையின்போது  ஆவேசமான  கொள்கைசார்ந்த உரைகளை நல்கினர். முதலாளித்துவ முறையின் கோரமுகத்தை அம்பலப்படுத்தினர். சோசலிச முறையின் அவசியத்தை வலியுறுத்தினர். மக்கள் கிளர்ந்து எழுந்து போராடி நியாயம் கேட்டுகொண்டேயிருப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அவர்களது உரை நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்டவை. இன்றும் அவை நியாயம் கேட்டு போராடும் குரல்களின் பிரதிகளாகளாகவே இருக்கின்றன.
அப்போராளிகள் தூக்கில்தொங்கவிடப்பட்டு 130 ஆண்டுகள் முடிகின்றன. ஆனாலும்   சிற்றூர் துவங்கி சிகாகோ எனும் பெரும் நகர்வரை உலகம் முழுதும் மேதின முழக்கங்கள் ஆண்டுதோறும் எழுந்து கொண்டேயிருக்கின்றன.தொழிற்சங்க தலைவர்கள் அமெரிக்கா சென்றால் தங்களின் புனித கடமையாக சிகாகோ மண்மிதித்து வருகின்றனர்.மேதின இயக்கம் தொழிலாளர்களின் போராட்டதினமாக அய்க்கிய தினமாக மாறியுள்ளது. ஆனால் போராளிகள் நின்ற அரசியல் மார்க்கமான அனார்க்கிசம் என்னவானது… தொழிலாளிவர்க்கத்திடம் அரசியல் கட்சிகளிடம் ஆங்காங்கே சிறு சிறு வடிவங்களை எடுத்தாலும் பெருமளவு மார்க்சியம் போல் ஒட்டாமல் ஈர்ப்பை கொடுக்காமல் போய்விட்டது. அவ்ர்களை 8 மணிநேர போராட்ட தியாகிகள் என தொழிற்சங்க எல்லைக்குள் சுருக்குவது வரலாற்று திரிபுவாதம் என அனார்க்கிஸ்ட்கள் இன்றும் பேசிவருகின்றனர். அவர்களது இறுதி நிமிடம் இவ்வாறு சித்தரிக்கப்படுகிறது
Their heads hooded their legs bound with leather straps and ropes around their necks they spoke for the last time. Spies called out "The time will come when our silence will be more powerful than the voices you strangle today." "Hurrah for anarchy!" cried Fischer. "Hurrah for anarchy!" shouted Engel even louder. "This is the happiest moment of my life!" exclaimed Fischer. Then Parsons spoke, "Will I be allowed to speak, O men of America? Let me speak, Sheriff Matson! Let the voice of the people be heard! O---." The trap doors opened and four of America's greatest labor martyrs passed into history.

சிகாகோவின் இத்தியாகிகள் வாழ்க்கை பற்றியும் மரணத்திற்கு முன்பும்கூட அவர்களது எண்ண ஓட்டங்கள் எவ்வாறு இருந்தன என்பதையும் நாம் அறியவேண்டும்..  அவர்கள் தங்களைப்பற்றியும் தாங்கள் நின்ற கொள்கைக்காக மரணம் பரிசாக வந்தபோதிலும் அது குறித்த பெருமிதங்களையும் சுருக்கமாக தந்து போய் உள்ளனர். அதில் வலியும் வேதனையும் மட்டும் தெரியவில்லை. உயர் கனவும் அதற்கான தவிப்பும் தெரிகிறது.

No comments:

Post a Comment