https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, September 11, 2020

தேசியக் கல்வி குறித்து பாரதியார்

                                     தேசியக் கல்வி  பாரதியார்தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது 'தேசீயம்' என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை; இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்கவேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்கவேண்டும்.இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேசவிரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்யபாஷை விரோதம் பூண்டு பேசுகிறேன் என்றுநினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரததேச முழுதிலும் எப்போதும்போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரததேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ் மொழிதலைமை பெற்றுத் தழைத்திடுக.

ஆரம்பப் பள்ளிக்கூடம்

உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாகஎத்தனை பள்ளிக்கூடங்கள் ஸாத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள். ஆரம்பத்தில், மூன்று உபாத்தியாயர்கள் வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் போதும். இவர்களுக்குச் சம்பளம் தலைக்கு மாஸம் ஒன்றுக்கு 30 ரூபாய்க்குக் குறையாமல் ஏற்படுத்தவேண்டும். இந்த உபாத்தியாயர்கள் பி.ஏ., எம்.ஏ. பட்டதாரிகளாகஇருக்கவேண்டிய அவசியமில்லை. மெட்றிகுலேஷன் பரீஷை தேறினவர்களாக இருந்தால் போதும். மெட்றிகுலேஷன் பரீஷைக்குப் போய் தவறினவர்கள்கிடைத்தால் மிகவும் நல்லது. இந்த உபாத்தியாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்கவேண்டும். திருஷ்டாந்தமாக, இங்ஙனம் தமிழ் நாட்டில் ஏற்படும்தேசீயப் பாடசாலைகளில் உபாத்தியாயராக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்கவேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்மாபிமானமும், எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று. அங்ஙனம் தேசபக்தி முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைத்த போதிலும், பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஆரோக்கியமும் திடசரீரமுமுடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுப்பது நன்று.

(அ) எழுத்து, படிப்பு, கணக்கு(ஆ) இலேசான சரித்திரப் பாடங்கள்


வேதகால சரித்திரம், புராணகால சரித்திரங்கள், பௌத்த காலத்துச்சரித்திரம், ராஜபுதனத்தின் சரித்திரம் இவை மிகவும் சிரத்தையுடன் கற்பிக்கப்படவேண்டும். பள்ளிக்கூடம் ஏற்படுத்தப்போகிற கிராமம் அல்லது பட்டணம் எந்த மாகாணத்தில் அல்லது எந்த ராஷ்ட்ரத்தில் இருக்கிறதோ, அந்த மாகாணத்தின் சரித்திரம் விசேஷமாகப் பயிற்றுவிக்கப்படவேண்டும். (இங்கு நான் மாகாணம் அல்லது ராஷ்ட்ரம் என வகுத்திருப்பது சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகளைக் குறிப்பதன்று, பாஷைப்பிரிவுகளுக்கு இசைந்தவாறு வகுக்கப்படும் தமிழ் நாடு, தெலுங்கு நாடு, மலையாள நாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது.)  இந்தச்சரித்திரங்களில் மஹா கீர்த்தி"பெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும்உத்ஸாகத்துடனும்,ஆவேசத்துடனும், பக்தி சிரத்தைகளுடனும்கற்பிக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டும். அதிபால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன. ஆதலால்,பள்ளிப்பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தில் அற்புதமான பகுதிகளை யூட்டி, அசோகன், விக்ரமாதித்யன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜூனன் இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும் அவற்றால் அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகளின் மனதில் பதியும்படி செய்வது அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்திமேன்மைப்படுத்துவதற்கு நல்லஸாதனமாகும்.


தேச பாஷையின் மூலமாகவே இந்தச் சரித்திரப்"படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப்படவேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாஷையின்மூலமாகப் பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக் கல்வி என்ற பெயர்சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ?  இது நிற்க.

        ஹிந்து தேச சரித்திரம் மாத்திரமே யல்லாது ஸௌகர்யப்பட்டால் இயன்றவரை அராபிய, பாரஸீக, ஐரிஷ்,போலிஷ், ருஷிய, எகிப்திய, இங்கிலீஷ், ப்ரெஞ்சு, அமெரிக்கா, இத்தாலிய, கிரேக்க, ஜப்பானிய, துருக்க தேசங்கள் முதலியவற்றின் சரித்திரங்களிலும் சில முக்கியமான கதைகளும் திருஷ்டாந்தங்களும் பயிற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் நல்லது.

இ) பூமி சாஸ்திரம்


ஆரம்ப பூகோளமும், அண்ட சாஸ்த்ரமும், ஜகத்தைப் பற்றியும், ஸூரிய மண்டலத்தைப் பற்றியும், அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும், நக்ஷத்திரங்களைப் பற்றியும், இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். பூமிப் படங்கள், கோளங்கள், வர்ணப் படங்கள் முதலிய கருவிகளை ஏராளமாக உபயோகப்படுத்தவேண்டும். ஐந்து கண்டங்கள், அவற்றிலுள்ள முக்கிய தேசங்கள், அந்த தேசங்களின் ஜனத்தொகை, மதம், ராஜ்ய நிலை, வியாபாரப் பயிற்சி, முக்கியமான விளைபொருள்கள், முக்கியமான கைத்தொழில்கள் இவற்றைக் குறித்து பிள்ளைகளுக்குத் தெளிந்தஞானம் ஏற்படுத்த வேண்டும். முக்கியமான துறைமுகப் பட்டணங்களைப் பற்றியும், அவற்றில் நடைபெறும் "வியாபாரங்களைக் குறித்தும் தெளிந்த விவரங்கள் தெரியவேண்டும். மேலும், இந்தியர்களாகிய நம்மவர் வெளித்தேசங்களில்எங்கெங்கே அதிகமாகச் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்றவிஷயம் பிள்ளைகளுக்குத் தெரிவதுடன் அங்கு நம்மவர்படிப்பு, தொழில், அந்தஸ்து முதலிய அம்சங்களில் எந்தநிலையிலே இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிய வேண்டும். மேலும் உலகத்திலுள்ள பல தேசங்களின்நாகரிக வளர்ச்சியைக் குறித்து பிள்ளைகள் தக்க ஞானம்பெறவேண்டும்.


பாரத பூமி சாஸ்த்ரம், இந்தியாவிலுள்ள மாகாணங்கள், அவற்றுள், அங்குள்ள தேச பாஷைகளின் வேற்றுமைக்குத் தகுந்தபடி இயற்கையைத் தழுவி ஏற்படுத்தக்கூடிய பகுதிகள்-இவைவிசேஷ சிரத்தையுடன் கற்பிக்கப் படவேண்டும். வெளிமாகாணங்களைக் குறித்துப் பின் வரும் அம்சங்களில் இயன்றவரை விஸ்தாரமான ஞான முண்டாக்க வேண்டும்; அதாவது பாரதபூமி சாஸ்த்ரத்தில், மற்ற மாகாணங்களில் வசிக்கும்ஜனங்கள், அங்கு வழங்கும் முக்கிய பாஷைகள், முக்கியமான ஜாதிப் பிரிவுகள், தேச முழுமையும் வகுப்புகள் ஒன்றுபோலிருக்கும் தன்மை, மத ஒற்றுமை, பாஷைகளின் நெருக்கம், வேதபுராண இதிஹாஸங்கள் முதலிய நூல்கள் பொதுமைப்பட வழங்குதல், இவற்றிலுள்ள புராதன ஒழுக்க ஆசாரங்களின் பொதுமை, புண்ணிய க்ஷேத்திரங்கள், அவற்றின் தற்கால நிலை,


இந்தியாவிலுள்ள பெரிய மலைகள், நதிகள், இந்தியாவின் விளைபொருள்கள், அளவற்ற செல்வம், ஆஹார பேதங்கள், தற்காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறியிருக்கும் பஞ்சம், தொத்து நோய்கள், இவற்றின் காரணங்கள், ஜல வஸதிக் குறைவு, வெளிநாடுகளுக்கு ஜனங்கள் குடியேறிப் போதல் - இந்த அம்சங்களைக் குறித்து மாணாக்கருக்குத் தெளிவான ஞானம் ஏற்படுத்தப்பட வேண்டும்.


பாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள், கோயில்கள், இவற்றைப்பற்றி மாணாக்கருக்குத் தெரிவிக்க வேண்டும்.


உங்கள் சொந்த ராஷ்ட்ரம் அல்லது மாகாணத்தின் பூமி சாஸ்திரம்.


இது கற்றுக் கொடுப்பதில், ஜனப்பாகுபாடுகளைப் பற்றிப் பேசுமிடத்து, ஹிந்துக்கள், மகம்மதியர் என்ற இரண்டு பிரிவுகளே பிரதானம் என்பதையும், இவர்களில் மகம்மதியர்களிலே பெரும்பாலார் ஹிந்துக்களின் சந்ததியில் தோன்றியவர்கள் என்பதையும், அங்ஙனமன்றி வெளி நாட்டோரின் சந்ததியாரும் இப்போது முற்றிலும் ஸ்வதேசிகளாக மாறி விட்டனர்.

(ஈ) மதப் படிப்பு


நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள்.உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிஹாஸங்கள், பகவத்கீதை,பக்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் - இவற்றை ஆதாரமாகக்கொண்டது ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் கிளைகள்இருந்தபோதிலும், அக் கிளைகள் சில சமயங்களில்அறியாமையால் ஒன்றை யொன்று தூஷணை செய்துகொண்ட போதிலும், ஹிந்து மதம் ஒன்றுதான். பிரிக்கமுடியாது. வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. தற்காலத்தில்சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள்முதலியவற்றிலே கலந்துவிட்டன. மத த்வேஷங்கள், "அனாவசிய மூட பக்திகள் முதலியனவே அந்தக் குப்பைகளாம். ஆதலால் தேசீயப் பள்ளிக்கூடத்துமாணாக்கர்களுக்கு உபாத்தியாயர் தத்தம் இஷ்டதெய்வங்களினிடம் பரம பக்தி செலுத்தி வழிபாடு செய்து வர வேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப்பழித்தல், பகைத்தல் என்ற மூடச் செயல்களை கட்டோடுவிட்டுவிடும்படி போதிக்க வேண்டும். 'ஏகம் ஸத் விப்ரா:பஹூதா வதந்தி' (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) என்ற ரிக் வேதஉண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப் பதியுமாறுசெய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான் 'எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்' என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர் - எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மன மொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையே செய்து வர வேண்டும்' என்பது ஹிந்துமதத்தின் மூல தர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். மாம்ஸ போஜனம் மனிதன் உடல் இறைச்சியைத் "தின்பதுபோலாகும் என்றும், மற்றவர்களைப் பகைத்தலும்அவர்களைக் கொல்வதுபோலேயாகும் என்றும் ஹிந்து மதம்கற்பிக்கிறது. 'எல்லாம் பிரம்மமயம்,' 'ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்ற வசனங்களால் உலக முழுதும் கடவுளின் வடிவமேஎன்று ஹிந்து மதம் போதிக்கிறது. 'இங்ஙனம் எல்லாம் கடவுள் மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்படமாட்டான்,எங்கும் பயப்படமாட்டான்; எக்காலத்திலும் மாறாத ஆனந்தத்துடன் தேவர்களைப்போல் இவ்வுலகில் நீடூழி வாழ்வான்' என்பது ஹிந்து மதத்தின் கொள்கை. இந்த விஷயங்களெல்லாம் மாணாக்கருக்குத் தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தியாயர்களின் கடமை. மத விஷயமான போராட்டங்கள் எல்லாம் சாஸ்தர விரோதம்; ஆதலால், பரம மூடத்தனத்துக்கு லக்ஷணம். ஆசாரங்களை எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால்,ஸமயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம்கிடையாது. ஸமயக் கொள்கை எக்காலத்திலும் மாறாதது.ஆசாரங்கள் காலத்துக்கு காலம் மாறுபடும் இயல்புடையன.


ஸ்ரீீராமாயண மஹாபாரதங்களைப் பற்றி பிரஸ்தாபம் நடத்துகையிலே, நான் ஏற்கெனவே சரித்திரப் பகுதியிற் கூறியபடி, இதிஹாஸ புராணங்களில் உள்ள வீரர், ஞானிகள் முதலியோரின் குணங்களை நாம் பின்பற்றி நடக்க முயலவேண்டும். உண்மை,நேர்மை, வீர்யம், பக்தி முதலிய வேதரிஷிகளின் குணங்களையும்,ஸர்வதேச பக்தி, ஸ்வஜனாபிமானம், ஸர்வ ஜீவ தயை முதலியபுராதன வீரர்கள் குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்றாகஉணர்த்தவேண்டும். சிபி சக்கரவர்த்தி புறாவைக் காப்பாற்றும்பொருட்டாக தன் சதையை அறுத்துக்கொடுத்த கதை முதலியவற்றின் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டி மாணாக்கர்களுக்கு ஜீவகாருண்ணியமே எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்கவேண்டும். ஏழைகளுக்கு உதவி புரிதல், கீழ் ஜாதியரை உயர்த்தி விடுதல் முதலியனவே ஜனஸமூஹக் கடமைகளில் மேம்பட்டன என்பதைக் கற்பிக்க வேண்டும்.

(உ) ராஜ்ய சாஸ்திரம்


ஜனங்களுக்குள்ளே ஸமாதானத்தைப்பாதுகாப்பதும், வெளி நாடுகளிலிருந்து படை எடுத்துவருவோரைத் தடுப்பதும் மாத்திரமே ராஜாங்கத்தின்காரியங்கள் என்று நினைத்துவிடக்கூடாது.ஜனங்களுக்குள்ளே செல்வமும், உணவு, வாஸம்முதலிய ஸௌகர்யங்களும், கல்வியும், தெய்வ பக்தியும்,ஆரோக்கியமும், நல்லொழுக்கமும், பொது சந்தோஷமும் மேன்மேலும் விருத்தியடைவதற்குரிய உபாயங்களைஇடைவிடாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதேராஜாங்கத்தின் கடமையாவது.


குடிகள் ராஜாங்கத்தைத் தம்முடையநன்மைக்காகவே சமைக்கப்பட்ட கருவியென்று நன்றாகத்தெரிந்துகொள்ள வேண்டும். குடிகளுடைய இஷ்டப்படியேராஜ்யம் நடத்தப் படவேண்டும். தீர்வை விதித்தல், தீர்வைப் பணத்தை பல துறைகளிலே வினியோகித்தல், புதுச்சட்டங்கள் சமைத்தல், பழைய சட்டங்களை அழித்தல்முதலிய ராஜாங்கக் காரியங்களெல்லாம் குடிகளால்நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் இஷ்டப்படியே நடத்தவேண்டும்.


குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால், அந்த அரசியலைச் சீர்திருத்தும் விஷயத்தில் குடிகளெல்லாரும் தத்தமக்கு இஷ்டமானஅபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை இவர்களுக்கு உண்டு.இந்த விஷயங்களை யெல்லாம் உபாத்தியாயர்கள்மாணாக்கர்களுக்குக் கற்பிக்குமிடத்தே, இப்போதுபூமண்டலத்தில் இயல்பெறும் முக்கியமான ராஜாங்கங்கள் "எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றனஎன்பதையும் எடுத்துரைக்க வேண்டும். மேலும், உலகத்துராஜாங்கங்களில் சுவேச்சா ராஜ்யம், ஜனப்பிரதிநிதியாட்சி,குடியரசு முதலியன எவையென்பதையும், எந்த நாடுகளில் மேற்படி முறைகள் எங்ஙனம் மிசிரமாகி நடைபெறுகின்றன என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டும்.


கிராம பரிபாலனம், கிராம சுத்தி, வைத்தியம் முதலியவற்றில் குடிகளனைவரும் மிகுந்த சிரத்தை காட்டவேண்டுமாதலால், மாணாக்கர்களுக்கு இவற்றின் விவரங்கள் நன்றாக போதிக்கப்பட வேண்டும்.


கோயிற் பரிபாலனமும் அங்ஙனமே. ஏழைகளுக்குவீடு கட்டிக் கொடுப்பதும், தொழில் ஏற்படுத்திக்கொடுத்து உணவுதருவதும், ராஜாங்கத்தாரின் கடமை என்பது மட்டுமன்றி, கிராமத்துஜனங்கள் அத்தனை பேருக்கும் பொதுக்கடமையாகும்.

(ஊ) பொருள் நூல்


பொருள் நூலைப்பற்றிய ஆரம்பக் கருத்துக்களைமாணாக்கர்களுக்கு போதிக்குமிடையே, தீர்வை விஷயத்தைமுக்கியமாகக் கவனிக்கவேண்டும். ஜனங்களிடம் தீர்வைஎத்தனைக் கெத்தனை குறைவாக வசூல் செய்யப்படுகிறதோ,அங்ஙனம் குறைவாக வாங்கும் தீர்வையிலிருந்து பொதுநன்மைக்குரிய காரியங்கள் எத்தனைக் கெத்தனை மிகுதியாக நடைபெறுகின்றனவோ, அத்தனைக் கத்தனைஅந்த ராஜாங்கம் நீடித்து நிற்கும்; அந்த ஜனங்கள் க்ஷேமமாகவாழ்ந்திருப்பார்கள். வியாபார விஷயத்தில், கூட்டுவியாபாரத்தால் விளையும் நன்மைகளை மாணாக்கர்களுக்குஎடுத்துக்காட்டவேண்டும். மிகவும் ஸரஸமான இடத்தில்விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொண்டுபோய் விற்கவேண்டும் என்ற பழைய வியாபாரக் கொள்கையைஎப்போதும் பிராமணமாகக் கொள்ளக்கூடாது. விளைபொருளும்,செய் பொருளும் மிஞ்சிக் கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கிஅவை வேண்டியிருக்கு மிடத்தில் கொண்டு போய் விற்கவேண்டும் என்பதே வியாபாரத்தில் பிரமாணமான கொள்கையாகும்.


வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம்சிறந்ததோ, அதுபோலவே கைத்தொழிலிலும் கூட்டுத் தொழிலேசிறப்பு வாய்ந்ததாம். முதலாளி யொருவன் கீழே பல தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும்தொழிலாளிகள் பலர் கூடிச்செய்யும் தொழிலே அதிகநன்மையைத் தருவதாகும்.


செல்வம் ஒரு நாட்டில் சிலருக்கு வசப்பட்டதாய்பலர் ஏழைகளாக இருக்கும்படி செய்யும் வியாபார முறைகளைக்காட்டிலும், சாத்தியப்பட்டவரை அநேகரிடம் பொருள்பரவியிருக்கும்படி செய்யும் வியாபார முறைகள் மேன்மையாகபாராட்டத்தக்கனவா

(எ) ஸயன்ஸ் அல்லது பௌதிக சாஸ்திரம்


ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத்தக்க கருவிகள் மூலமாகவும் பரீக்ஷைகள் மூலமாகவும்பிள்ளைகளுக்குக் கற்பித்துக் கொடுத்தல் மிகவும்அவசியமாகும். பிள்ளைகளுக்குத் தாங்களே 'ஸயன்ஸ்'சோதனைகள் செய்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். வியாபார விஷயங்களுக்கு ரஸாயனசாஸ்திரம் மிகவும் பிரதானமாகையால் ரஸாயன பயிற்சியிலேஅதிக சிரத்தை காண்பிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாதநுட்பமான பூச்சிகள் தண்ணீர் மூலமாகவும், காற்று மூலமாகவும்,மண் மூலமாகவும் பரவி நோய்களைப் பரப்புகின்றன என்றவிஷயம் ஐரோப்பிய 'ஸயன்ஸ்' மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதில் ஒரு சிறிது உண்மை இருப்பதுமெய்யே யாயினும், மனம் சந்தோஷமாகவும் ரத்தம்சுத்தமாகவும் இருப்பவனை அந்தப் பூச்சிகள் ஒன்றும்செய்யமாட்டா என்பதை ஐரோப்பியப் பாடசாலைகளில்அழுத்திச் சொல்லவில்லை. அதனால், மேற்படி சாஸ்திரத்தைநம்புவோர் வாழ்நாள் முழுவதும் ஸந்தோஷமாய் இராமல் தீராதநரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆதலால், நமது தேசீய ஆரம்பப்பாடசாலையில் மேற்படி பூச்சிகளைப்பற்றின பயம் மாணாக்கருக்குச்சிறிதேனும் இல்லாமல் செய்துவிட வேண்டும்.


உலகமே காற்றாலும், மண்ணாலும், நீராலும்சமைந்திருக்கிறது. இந்த மூன்று பூதங்களை விட்டு விலகி வாழயாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்துவிடக்கூடும் என்றமஹா நாஸ்திகக் கொள்கையை நவீன ஐரோப்பிய சாஸ்திரிகள்தாம் நம்பி ஓயாமல் பயந்து பயந்து மடிவது போதாதென்றுஅந்த மூடக்கொள்கையை நமது தேசத்தில் இளஞ் சிறுவர்மனதில் அழுத்தமாகப் பதியும்படி செய்து விட்டார்கள். சிறுபிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன, அசைக்க முடியாதன, மறக்கமுடியாதன. எனவே,நமது நாட்டிலும் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்தபிள்ளைகள் சாகுமட்டும் இந்தப் பெரும் பயத்துக்குஆளாய் தீராத கவலைகொண்டு மடிகிறார்கள்; பூச்சிகளால்மனிதர் சாவதில்லை; நோய்களாலும் சாவதில்லை; கவலையாலும்பயத்தாலும் சாகிறார்கள். இந்த உண்மை நமது தேசீயப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படிசெய்யவேண்டும்.


பௌதிக சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும்தெளியான எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும்ஸுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்கவேண்டும். இயன்றஇடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையேஉபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக, "ஆக்ஸிஜன்","ஹைட்ரஜன்", முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராண வாயு, ஜலவாயு என்றநாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள அகப்படாவிட்டால் ஸம்ஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்குமட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல்பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாதஇடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம்.ஆனால், குணங்கள், செயல்கள், நிலைமைகள்இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம்.ஆனால், குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றுக்குஇங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது.பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரமே இங்கிலீஷில்சொல்லலாம், வேறு வகையால் உணர்த்த இயலாவிடின்.

ஏ) கைத்தொழில், விவஸாயம், தோட்டப் பயிற்சி, வியாபாரம்.


இயன்றவரை மாணாக்கர்கள் எல்லாருக்கும், " விசேஷமாகத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு, நெசவு முதலிய முக்யமான கைத்தொழில்களிலும், நன்செய்ப்புன்செய்ப் பயிர்த்தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்குகள்விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும், சிறு வியாபாரங்களிலும் தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படிசெய்தல் நன்று. இதற்கு மேற்கூறிய மூன்று உபாத்தியாயர்களைத்தவிர, தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப்படிப்புத் தெரிந்தவர்களும் தக்க லௌகிகப் பயிற்சி யடையவர்களுமான அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆரம்பப் பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும்.


(ஐ) சரீரப் பயிற்சி


தோட்டத் தொழிகள், கிணறுகளில் ஜலமிறைத்தல்முதலியவற்றால் ஏற்படும் சரீரப் பயிற்சியே மிகவும் விசேஷமாகும்.பிள்ளைகளுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து ஸ்நானம் செய்தல், தத்தம் வேஷ்டி துணிகளைத் தோய்த்தல் முதலியஅவசியமான கார்யங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றேயாம். இவற்றைத் தவிர, ஓட்டம், கிளித்தட்டு, சடுகுடு "முதலிய நாட்டு விளையாட்டுகளும், காற்பந்து  (Foot ball)முதலிய ஐரோப்பிய விளையாட்டுகளும், பிள்ளைகளுடையபடிப்பில் பிரதான அம்சங்களாகக் கருதப் படவேண்டும்; குஸ்தி,கஸரத், கரேலா முதலிய தேசீயப் பயிற்சிகளும் இயன்றவரை அனுஷ்டிக்கப் படலாம். கபாத்து (ட்ரில்) பழக்குவித்தல் இன்றியமையாத அம்சமாகும். ஸௌகர்யப்பட்டால் இங்கிலீஷ்பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கும் மரக்குதிரை. ஸமக்கட்டைகள் (parallelbars), ஒற்றைக் கட்டை  (horizontal bar)  முதலிய பழக்கங்களும் செய்விக்கலாம்.படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிகசிரத்தை எடுக்கும்படி செய்யவேண்டும். 'சுவரில்லாமல்சித்திரமெழுத முடியாது.' பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்குநாள் ஆரோக்கியம் குறைந்து அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராததுக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்.


(ஒ) யாத்திரை (எக்ஸ்கர்ஷன்)


பிள்ளைகளை உபாத்தியாயர்கள் பக்கத்தூர்களிலும்தமதூரிலும் நடக்கும் உற்சவங்கள், திருவிழாக்கள்முதலியவற்றுக்கு அழைத்துச் சென்று, மேற்படி விழாக்களின்உட்பொருளைக் கற்பித்துக்கொடுத்தல் நன்று. திருவிழாவுக்குவந்திருக்கும் பலவகை ஜனங்களின் நடையுடைபாவனைகளைப் பற்றிய ஞானம் உண்டாகும்படி செய்யவேண்டும். வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும்.அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும், அன்பும் பரஸ்பரஸம்பாஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி ஏற்பாடு செய்யவேண்டும். மலைகள் கடலோரங்களுக்கு அழைத்துச் சென்றுஇயற்கையின் அழகுகளையும், அற்புதங்களையும், பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்யவேண்டும். பல விதமான செடி, கொடிகள், மரங்கள், லோஹங்கள், கல்வகைகள் முதலியவற்றின்இயல்பைத் தெரிவிக்க வேண்டும்.

மேலே காட்டிய முறைமைப்படி தேசீயப் பள்ளிக் கூடம் நடத்துவதற்கு அதிகப் பணம் செலவாகாது.மாஸம் நூறு ரூபாய் இருந்தால் போதும். இந்தத்தொகையை ஒவ்வொரு கிராமத்திலுள்ள ஜனங்களும்தமக்குள்ளே சந்தா வசூலித்துச் சேர்க்கவேண்டும். செல்வர்கள்அதிகத் தொகையும் மற்றவர்கள் தத்தமக்கு இயன்றளவு சிறு தொகைகளும் கொடுக்கும்படி செய்யலாம். 100 ரூபாய் கூடவசூல் செய்ய முடியாத கிராமங்களில் 50 ரூபாய் வசூலித்து.உபாத்தியாயர் மூவருக்கும் தலைக்கு மாஸச் சம்பளம் 12ரூபாய் கொடுத்து, மிச்சத் தொகையை பூகோளக் கருவிகள்,"ஸயன்ஸ்" கருவிகள், விவசாயக் கருவிகள் முதலியனவாங்குவதில் உபயோகப்படுத்தலாம். 100 ரூபாய்வசூலிக்கக்கூடிய கிராமங்களில் உபாத்தியாயர் மூவருக்கும், தலைக்கு 20 ரூபாய் வீதம் சம்பளம் ரூபாய் அறுபதுபோக மிச்சத் தொகையை மேற்படி கருவிகள் முதலியனவாங்குவதில் உபயோகப்படுத்தலாம். மேற்படி கருவிகள்எப்போதும் வாங்கும்படி நேரிடாது. முதல் இரண்து வருஷங்களுக்கு மாத்திரம் மாஸந்தோறும் மிஞ்சுந் தொகையை இங்ஙனம் கருவிகள் வாங்குவதிலும் புஸ்தகங்கள் வாங்குவதிலும் செலவிட்டால் போதும். அப்பால் மாஸந்தோறும் மிஞ்சுகிற பணத்தைப்பள்ளிக்கூடத்துக்கு க்ஷேமநிதியாக ஒரு யோக்கியமானஸ்ரீமானிடம் வட்டிக்குப் போட்டுவர ஏற்பாடு செய்யவேண்டும்.இவ்வாறன்றி ஆரம்பத்திலேயே கருவிகள் முதலியனவாங்குவதற்குப் பிரத்யேகமான நிதி சேகரித்து அவற்றைவாங்கிக்கொண்டு விட்டால் பிறகு தொடக்க முதலாகவே மிச்சப் பணங்களை வட்டிக்குக் கொடுத்துவிடலாம்.

மாசம் நாற்பது ரூபாய் வீதம் மிச்சப் பணங்களைக்ஷேமநிதியாகச் சேர்த்து வந்தால் பதினைந்து "வருஷங்களுக்குள்ளே தகுந்த தொகையாய்விடும். பிறகு,மாஸவசூலை நிறுத்திவிட்டுப் பள்ளிக்கூடத்தை அதன் சொந்தநிதியைக்கொண்டே நடத்தி வரலாம். தவிரவும், அப்போதப்போது அரிசித் தண்டல், கலியாண காலங்களில் ஸம்பாவனை, விசேஷ நன்கொடைகள் முதலியவற்றாலும் பள்ளிக்கூடத்து நிதியைப் போஷணை செய்து வரலாம்.


எல்லாவிதமான தானங்களைக் காட்டிலும் வித்யாதானமே மிகவும் உயர்ந்தது என்று ஹிந்து சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன. மற்ற மத நூல்களும் இதனையே வற்புறுத்துகின்றன. ஆதலால் ஈகையிலும் பரோபகாரத்திலும் கீர்த்தி பெற்றதாகிய நமது நாட்டில், இத்தகைய பள்ளிக்கூட மொன்றை மாஸ வசூல்களாலும், நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் அல்லது சிறு சிறு தொகைகளாகவும் சேகரிக்கப்படும் விசேஷ நன்கொடைகளாலும் போஷித்தல் சிரமமான காரியம் அன்று. இது மிகவும் எளிதான காரியம்.


இந்தப் பள்ளிக்கூடங்களை ஒரு சில மனிதரின் ப்ரத்யேகஉடைமையாகக் கருதாமல், கோயில், மடம், ஊருணி முதலியன போல்கிராமத்தாரனைவருக்கும் பொது உடைமையாகக் கருதி நடத்தவேண்டும். பொது ஜனங்களால் சீட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப் படுவோரும் ஐந்து வருஷங்களுக்கு ஒருமுறைமாற்றப்பட வேண்டியவருமாகிய பத்து கனவான்களை ஒரு நிர்வாக ஸபையாகச் சமைத்து அந்த ஸபையின் மூலமாகப்பாடசாலையின் விவகாரங்கள் நடத்தப்படவேண்டும். இந்த நிர்வாகஸபையாரைத் தெரிந்தெடுப்பதில் கிராமத்து ஜனங்களில் ஒருவர்தவறாமல் அத்தனை பேருக்கும் சீட்டுப்போடும் அதிகாரம் ஏற்படுத்த வேண்டும்.

தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசீயக்கல்வி இன்றியமையாதது. தேசீயக் கல்வி கற்றுக்கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம். இந்த விஷயத்தைரவீந்திரநாத் தாகூர், ஆனி பெஸண்ட், நீதிபதி மணி அய்யர் முதலிய ஞானிகள் அங்கீகரித்து, நம்நாட்டில் தேசீயக் கல்வியைப் பரப்புவதற்குரிய தீவிரமான முயற்சிகள் செய்கின்றனர். ஆதலால் இதில் சிறிதேனும் அசிரத்தை பாராட்டாமல், நமது தேச முழுதும், ஒவ்வொரு கிராமத்திலும் மேற்கூறியபடி பாடசாலைகள் வைக்க முயலுதல் நம்முடைய ஜனங்களின் முதற்கடமையாகும்.


தேசீயக் கல்வி (2)

தமிழ் நாட்டில் தேசீயக்கல்வி கற்பிக்க வேண்டுமானால், அதற்குத் தமிழே தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

...தேசீயக் கல்வியின் தமிழ் நாட்டுக் "கிளையென ஒரு கிளை ஏற்படவேண்டும். அதன் ஆட்சி மண்டலத்தில் பாதித் தொகைக்குக் குறையாமல் தமிழ் ஸ்திரீகள் கலந்திருக்க வேண்டும். ஒரு பெரிய சர்வ கலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் கலந்து தொழில் செய்யத்தக்க கல்விப் பயிற்சியும் லௌகிகஞானமும் உடைய ஸ்திரீகள் இப்போது தமிழ் நாட்டில் பலர் இலர் என ஆக்ஷேபங் கூறுதல் பொருந்தாது. தமிழ் நாடு முழுதும் தேடிப் பார்த்தால் ஸ்ரீமதி மங்களாம்பாளைப்போல இன்னும் பத்து ஸ்திரீகள்அகப்படமாட்டார்கள் என்று நினைக்க ஹேதுவில்லை. எதற்கும் மேற்படி ஆட்சி மண்டலம் சமைத்து, அதில் பத்துப் பெண்களைக் கூட்டி நடத்தவேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவனிடம் கூறினால். அதினின்றும் அவர்கள் பயன்படத்தக்க பல உதவி யோசனைகளையும் ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புது ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் ஸந்தேகமில்லை. முன் தமிழ் நாட்டை மங்கம்மா ஆளவில்லையோ? ஓளவையார் உலக முழுதும் கண்டு வியக்கத்தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையோ?

முன்பு மகம்மதிய ஸர்வ கலா சங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்த முயற்சியில் தலைவர்களில் ஒருவராக உழைத்த மீர்ஜா ஸமி உல்லா பேக், "ஜாதி மத பேதங்களால் சிதைந்து போயிருப்பதால், பாரத தேசத்தார் மேலேஎழமாட்டார்களென்று பிறர் கூறும் அவச்சொல்லை நீங்கள் கேட்காதிருக்க வேண்டினால், மேலும் ஸ்வராஜ்யத்துக்குத் தகுதியுடையோராக உங்களைக் காட்டிக்கொள்ள விரும்பினால், தேசீயக் கல்விக்குத் துணை செய்யுங்கள். இந்தத் தருணம் தவறினால், இனி வேறு தருணம் இப்படி வாய்க்காது' என்கிறார்.தேசீயக் கல்வியும் ஸ்வராஜ்யமும் தம்முள்ளே பிரிவு செய்யத் தகாதன என்றும், இவ்விரண்டினுள் ஒன்றன் அவசியத்தை அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அரவிந்த கோஷ் சொல்லியதும் மேற்படி ஸமி உல்லா சொல்வதும் பொருத்தமாகவே காணப்படுகின்றன. எந்த வினைக்கும் காலம் ஒத்து நின்றாலொழிய அதனை நிறைவேற்றுதல் மனிதனுக்கு ஸாத்யமில்லை. விதியின் வலிமை சாலவும் பெரிது. ஆனால் "விதி இப்போது தேசீயக்கல்வி முயற்சிக்கு அநுகூலமானகாலத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்ற செய்தியை மீர்ஜா ஸமி உல்லா நம் நாட்டாருக்கு நினைப்பூட்டுகிறார்.

தேசீயக் கல்வியில் முஹம்மதியர் எத்தனைக் கெத்தனை சேர்ந்துழைக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை அம் முயற்சி அதிகப் பயன் அடையும். மத பேதங்களை


வ்யாஜமாகக் காட்டி ஹிந்து முஹம்மதியர் ராஜரீக முதலிய பொது விஷயங்களிலும் கூடியுழைக்காமல் தடுக்கவேண்டும் என்று ஆங்கிலோ-இந்தியப் பத்திராதிபர் முதலிய பொதுச் சத்துருக்கள் செய்த தீய முயற்சிகளெல்லாம் விழலாய் விட்டன. மஹான் முஹம்மது "அலி, அவர் அண்ணன் ஷௌகத் அலி, ஸேட்யாகுப் ஹுஸேன், பெரிய ஜின்னா, மஹமதா பாத்ராஜா முதலிய மேலோர்களின் ப்ரத்யதனத்தால் ஹிந்து முஹம்மதியர் அண்ணன் தம்பிகளென்பது தென் அமெரிக்காக் கண்டத்தாருக்குக்கூட சம்சயம் ஏற்பட இடமில்லாமல் பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணிபோல் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது.


மேலும் இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து ஸந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் ஹிந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙன மில்லாமல் வெறும்பட்டாணிய அராபிய பாரஸீக மொகலாய ஸந்ததியாக இருப்போரும் இந்த தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால், ஹிந்து ஜாதியாராகவே கருதத்தக்கவர்ஆவர். எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன்; சீனத்தில் பிறந்தவன் சீனன்; ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து; இதர தேசங்களில் தேச எல்லையே ஜாதி எல்லையாகக் காணப்படுகிறது. இந்த நாட்டிலும் அதே மாதிரி ஏன் செய்யக் கூடாது?


இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி.

(2) கிறிஸ்தவர்


தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில மூடப் பாதிரிகள் சொல்லக்கூடும். அதை ஹிந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக்கூடாது. தேசீயக் கல்வியில் ரிக்வேதமும், குரானும், பைபிலும் ஸமானம். கிறிஸ்து,கிருஷ்ணன் என்பன பர்யாய நாமங்கள். வங்காளத்தில் ஹிந்துக்கள் கிருஷ்ண தாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள்.

(3) மனுஷ்யத்தன்மை


ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில் முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட புதர்ச்சாதியார் (Bushmen)  - எல்லாரும் பொதுவில் 'மனிதர், 'ஆதாம் ஏவா வழியில் பிறந்தவர்கள்' என்று கூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள் 'மனிதர் எல்லோரும் ஒன்று' என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரதத்தில் மனிதர், தேவர், புட்கள், பாம்புகள் எல்லோருமே காச்யப ப்ரஜாபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


வேதாந்த சாஸ்த்ரமோ பிராமணர், நாயர், முதலை, கரடி, வெங்காயப்பூண்டு முதலிய ஸகல ஜீவன்களும் பரமாத்மாவின் அம்சங்களே யன்றி வேறல்ல என்று பல "நூற்றாண்டுகளாகப் பறையறைந்து கொண்டு வருகிறது.


ஆதலால், தேசீயக்கல்வி முயற்சியில் ஜாதிமத வர்ண பேதங்களைக் கவனிக்கக் கூடாதென்று அரவிந்த கோஷ், திலக், அனி பெஸண்ட் முதலியவர்கள் சொல்லுவதை இந்த நாட்டில் எந்த ஜாதியாரும், எந்த மதஸ்தரும், எந்த நிறத்தையுடையவரும் மறுக்க மாட்டார்களென்று நம்புகிறேன்.


கிராமப் பள்ளிக்கூடங்கள்


அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். 'கான்பரென்ஸ்' என்றும், 'மீட்டிங்' என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும், நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒரு வழி பிறக்கவில்லையே! ஏன்?  எதனாலே? காரணந்தான் என்ன?


ஜாதி என்ற சொல் இரண்டு அர்த்தமுடையது. முதலாவது, ஒரு தேசத்தார் தமக்குள் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளும் பிரிவு; வேளாள ஜாதி, பிராமண ஜாதி, கைக்கோளஜாதி என்பது போல. இரண்டாவது, தேசப் பிரிவுகளைத் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி, பாரஸிக ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி, ருமானிய ஜாதி என்பதுபோல. இவ்விரண்டிலும் அதிக அநுகூல மில்லையென்பது ஸ்ரீமான் ரவீந்திரநாத தாகூருடைய கக்ஷி....எல்லா தேசத்தாரும் சகோதரர் என்றும், மனுஷ்ய ஜாதி முழுதும் ஒன்றே யென்றும். ஆதலால் தேச வேற்றுமை காரணமாக ஒருவரை ஒருவர் அவமதிப்பதும் அழிக்க முயல்வதும் பிழையென்றும் ஸ்ரீீ தாகூர் சொல்கிறார்.

வெளி தேசத்தாருக்கு தர்மோபதேசம் செய்கையில், நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கலாமா? இங்கே, அனாவசியமான ஜாதி விரோதங்களும் அன்புக் குறைவுகளும் அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன்பிறப்பையும் நிலைநாட்டுவது நம்முடைய கடமையன்றோ?


எது எப்படியானாலும், இந்த தினத்தில் இந்த க்ஷணத்தில் நாமெல்லோரும் பறையர், பார்ப்பார் எல்லோரும், ராஜாங்க விஷயத்தில் ஒரே ஜாதி. இப்போது எங்களுக்குஅதிகாரிகள் தயவு செய்யவேண்டிய விஷயம் என்ன வென்றால்:-  எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டு பிரதி நிதிகள் குறிக்கவேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்த தொரு மகாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு செலவு உட்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மகாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேய ஸாம்ராஜ்யத்தை விட்டு விலகவேண்டும் என்ற யோஜனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் விண்ணப்பம் செய்கிறோம். விடுதலை விண்ணப்பத்துக்கு நல்ல உத்தரவு கொடுக்கவேண்டும்.

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாவ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பதுபொருள்.........


ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும்.பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்; "ஸ்லேட்""பென்சில்" என்று சொல்லக் கூடாது.

No comments:

Post a Comment