அடிகளார் காட்டும் சமயநெறி
சமயம் ஒரு வாழ்க்கை முறை. மனிதனை நெறிப்படுத்த உள்ளத்தை பக்குவமாக்க சாதனம். அது தூய வாழ்க்கை முறையும் கூட. இதயம் விரிய, ஈர அன்பு பெருக, வேறுபாடுகளை புரிந்து ஓருலகம் மலர உதவும் சாதனம் என்பது அடிகளார் சமயம் பற்றி தரும் விளக்கம்.
அடிகளாரைப் பொறுத்தவரை சமயப் பூசல்கள் சமயத்திற்காக நடப்பவையல்ல. சமயப்பூசல் செய்வோருக்கும் சமய நெறிக்கும் தொடர்பே இல்லை. பல்வேறு பகுதி மானிடரின் / ஞானிகளின் உணர்வில் சமய நெறிகள் முகிழ்த்தலால் அவற்றுள் வேறுபாடுகள் இருக்கும். நிலம், காலம் சார்ந்து எழுந்தவை அவை.
சங்க காலத்தில் சமயம் முதன்மைப்பட்டதாக இல்லை எனச் சொல்வது தவறு என்பார் அடிகளார். தமிழர் சமயம் வாழ்க்கையில் முகிழ்த்தது -கற்பனை அதிசயங்கள் இல்லாதது. நம்பிக்கை நல்லெண்ணத்திற்குரியது. தமிழரின் ’சித்தாந்த சமயம்’ அறிவாராய்ச்சிகளுக்கு இடம் கொடுக்கத்தக்கது. வினாக்கள் வழி ’மெய்யுணர்வில் வளர்ந்து செம்பொருள் கண்டார்’ உணர்த்திய நெறி என அடிகளார் இதை விளக்கிச் செல்வார். அறிவார்ந்த உண்மைகளில் மாறுபடாமல் அதே நேரத்தில் அறிவின் எல்லையில் மட்டுமே நின்று ஆராயத்தக்கதன்று தமிழர் சமயம்.
முப்பொருள் உண்மை என ’இறை, உயிர், தளை’ எனக் கொள்ளும் கொள்கை கொண்டது இந்த சமயம். பிற சமயங்கள் கடவுளைப் படைப்பாளியாக ஏற்கும். ஆனால் அதேசமயங்கள் கடவுளைப் படைக்கப்படாத பொருள் எனப் பேசும். தமிழர் சமயத்தில் கடவுளைப்போலவே உயிர்களும் தோன்றுவனவுமல்ல, அழிவனவுமல்ல என்பார் அடிகளார். உயிர்கள் எப்போதும் உள்ளவை, கடவுளின் படைப்பல்ல என்பது அறிவாராய்ச்சிக்கு உகந்தது தானே எனக் கேட்பார் அடிகளார்.
உயிர்கள் அறியாமையினின்றும் விலகி அறிவைப்பேற, ஞானம் பெற துணை செய்யும் ஆசிரியன் கடவுள் என்பது சித்தாந்த செந்நெறியின் முழுநிறைக் கொள்கை. இது கார்ல் மார்க்ஸ் பேசுகிற விவாதத்துடன் ஒத்துப்போகும் தகுதியுடையதாகவும் அடிகளார் பேசுவார்.
தமிழர் வாழ்வியல்முறை இயற்கைக்கு முரண்படுவதன்று. பழமை- புதுமை பிணக்கின்றி இருக்கும் ஒன்று. வாழ்க்கை வாழத்தான் மரணத்திற்கன்று என்று பழந்தமிழர் கொள்கை பேசுவதை அவர் சொல்வார். வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்துடுவோம் என அப்பர் சொல்லிக்கொடுப்பதை அடிகளார் காட்டுவார். குறளும் வாழ்வாங்கு வாழ்க எனச் சொல்லித்தரும்.
வாழ்க்கையை துன்பமானது என ஏற்காமல் துன்பம் வந்தபோதும் அதை இன்பமாக மாற்ற விழைந்த கோட்பாட்டை தமிழர் பெற்றிருந்தனர். இதற்கு துணைசேர்க்க புறநானூறு வரிகளான ’இன்னா தம்ம இவ்வுலகம் இனிய காண்கிதன் இயல்புணர்ந்தோரே’ என்பதை அடிகளார் காட்டுவார்.
’தீண்டாமை’ தமிழ் சமுதாயத்தில் இடையில் வந்த ஒன்று. அதை அகற்ற முயற்சிகள் நடந்தாலும் இன்னும் கறையாக நீடிக்கிறது. சமயம் இதில் வெற்றி பெறவில்லை என்பதை அடிகளார் ஏற்பார். நாடாளுமன்ற ஆணைகள் செய்ததைக்கூட ’கடவுளின் ஆணைகள்’ சமய உலகத்தில் செயற்படுத்தப்படாமல் போனதை சுட்டிக்காட்டுகிறார் அடிகளார். புகைவண்டி வந்து செய்த அளவிற்கு கூட சமயம் செய்யவில்லை. சமயம் தன் கடமை தவறிய செயலாகவே அடிகளார் இதைப் பார்க்கிறார்.
வள்ளுவர்
சாதி என்ற சொல்லை கையாளவில்லை.
ஆனால் குலம் என்றார். குல
அமைப்பு முறைகள் பழங்காலத்தில் இருந்துள்ளன.
ஆனால் இன்று சாதிதான் சமுதாயத்தை
ஆள்கிறது. சமயவழிப்பட்ட நமது சமுதாயத்தில் சாதி
வேற்றுமை அகன்றால்தான் அதற்கு எதிர்காலம். அப்பொழுதுதான்
இந்து சமுதாயம் கடலெனச் சூழந்து வாழும்
என்கிறார் அடிகளார். சாதி கடந்த இந்து ஒற்றுமை எனும் பொருளில்
பாஜக இதைப் பயன்படுத்த எண்ணலாம். அடிகளாரை இன்னும் அவர்கள் உள்ளிழுத்துக்கொள்ளவில்லை
போலும்.
செல்வத்தின் பலன் ஈதல் என்பது தமிழ் வழக்கு. தானே துய்த்தல் வழக்கன்று. சைவத்தில் ஆனாலும் வைணவத்தில் ஆனாலும் உண்பித்து உண்பவன்தான் வாழ்பவன் . உழைப்பை மதிப்பதால்தான் எருது இறைவன் வாகனமாகிறது. எருதுவின் உழைப்பில் செந்நெல் விளைந்த பூமியில், அவை உண்பது வைக்கோல் மட்டுமே. உழைப்பு, செல்வத் துய்ப்பு பற்றிய கருத்துக்களுக்கு இந்தச் செய்தியை அடிகளார் தருவார்.
காந்தியடிகள் பேசிய தர்மகர்த்தா கொள்கையை அப்பர் பரிந்துரைத்தாக அடிகளார் விளக்குகிறார். ஏரிகள் தன்னிடத்தில் உள்ள தண்ணீரைக் காத்து கழனிகளுக்கு வழங்கும் உரிமையை மட்டுமே கொண்டன என எடுத்துக்காட்டி ஏரி நிறைந்தனைய செல்வ என இறைவன் விளங்குவதாக அடிகளார் பேசுவார்.
வறுமைப் பிணிக்கு செல்வம் மருந்து. எனவே நோய் உடையவர்க்குத்தான் தேவை மருந்து. தீவினையால் அல்லற்படுவது ஏழ்மை என்றால் , அந்த அல்லலை மாற்ற முனையும் நல்லெண்ணம் பெறாமையும் தீயூழே என்கிற பார்வை அடிகளாரிடம் கிட்டும். சமயவழிப்பட்ட சமுதாய அமைப்பு ஒப்புரவை ஒழுக்க நெறியாக கொண்டது என்பார்.
வலிந்து மேற்கொள்ளும் துறவிற்கு தமிழர் நெறியில் இடமில்லை. துறவின் மூலம்தான் ’திருவருள்’ என்பதில்லை. ஆனால் தன்னலமின்றி நெறி நிற்கும் தூய்மை அவசியம். இங்கு வாழ்க்கையை வாழ்தல் தான் தவம். வாழ்வே மாயம் என்பது இங்கில்லை.
கடவுள் உண்டு என்று சொல்லும் சமயநெறி இங்குண்டு. அறிவை நாம் மறுப்பதில்லை. கடவுளுண்மை காட்சிக்கு வர காலம் ஆகலாம். மிக உயர்ந்த சார்பற்ற அறிவு நிலை அதற்கு தேவைப்படலாம். ‘கடவுளைப் போற்று, மனிதனை நினை’ என்கிற முழக்கத்தை அடிகளார் அடிக்கடி தந்ததை கேட்கிறோம்.
வறுமை
நீக்கம்- வாழ்க்கை வசதிகள் பெருக பெருக- அறிவுப்பெருக்கம் சமூகத்தில் நிறைந்து தன்னம்பிக்கை
வளர்ந்து அச்சம் அகலும் போது கடவுள் என ஒருவர் தேவைப்படமாட்டார் என மார்க்சியர் கருதுவர்.
அடிகளாரிடத்தில்
கல்வி அறிவு, விஞ்ஞான தொழில்நுட்ப அறிவே இறுதியான வாயில் என்கிற கருத்தில்லை. கடவுளை
நம்பி எட்டும் ஞானநிலை எனும் அறிவுப் படிகள் பற்றி அவர் பேசுவார். குற்றங்களினின்று
விடுபட்டு நிறைநிலை அடிதல் என்பது கடவுள் வழிபாட்டின் நோக்கம். பக்தியை சடங்காக பார்க்காமல்
அருளின் ஆற்றுப் பெருக்காக பார்க்க வேண்டுவார் அடிகளார்.
பக்தி
என்பது திருத்தொண்டு என்பார். இறை பணி என்றால் இறைவனுக்கு செய்வதன்று. கற்பது என்பது
அறிவிற்கு செய்யும் பணியில்லை. உண்பது உணவுக்குச் செய்யும் பணியில்லை. இறைநலத்தை உயிர்கள்
பெறுவதற்குதான் திருத்தொண்டு தவிரே வேறில்லை. திருக்கோயில்களில் செல்வம் தேங்கி உடைமையாயின்,
துய்ப்புக்கும் எல்லை வந்து தீங்கு நேரும். வரும் செல்வம் தேங்காமல் மக்கள் மன்றத்து
சென்று சேரவேண்டும் என கோயிலுக்கும் மக்கள் தொண்டிற்குமான உறவை அடிகளார் காட்டுவார்.
இறைவனுக்கு உருவம் ஏன் என்ற கேள்வியை எழுப்பி விளக்கம்
தருவார் அடிகளார். உருவம் பெறாத ஒன்று அனுபவத்திற்கு வருவதில்லை. ஒலி சொல் வடிவம் பெற்று
செவியில் உறவு கொள்வதில்லையா என்பார். நுண்ணிய கலையாக வழிபாடு வளர்ந்தால் அறச்சாலை
வளரும்- சிறைச்சாலைகள் குறையும் என்கிற நம்பிக்கைதனை அடிகளார் வெளிப்படுத்துவார்.
சைவ நாயன்மார் சமணத்தை எதிர்த்து போராடியது தமிழ்
நாகரிகத்தை காப்பாற்றவே என்பது அடிகளார் வாதம். சைவம் நின்று நிலவ வேண்டிய சமய நெறியையே
அடிகளார் போதித்தார். நம் சமுகத்தில் இன்று பல மூர்த்திகள் வழிபாடு இருக்கிறது. புறச்
சமய நெருக்கடிகளிலிருந்து மீட்டுக்கொள்ள சிவ, திருமால் நெறி போன்றவற்றை இணைத்து ஒரு
சமயம் ஏற்பட்டது. அடிகளார் ஒரு கடவுள் வழிபாடு-
அதுவும் தொன்மைக்கால சமய நெறியாம் சிவ நெறி பற்றியே பரிந்துரைப்பார்.
இந்து சமயம் என்றால் பச்சை பார்ப்பனியம் என்ற கருத்து
வளர்ந்திருக்கிறது என்பதை அடிகளார் ஏற்பார். ஆனால் களர் நீக்கம் என்பதற்கு பதில் ’கழனி
விடுதல்’ தவறென்பார். இந்து சமயம் என்ற பெயரை அதன்
பொதுத்தன்மையை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்ற முடிவிற்கே அடிகளார் வந்தார். ஆனால்
அதன் பெயரில் பல கடவுள் வழிபாடு வளரவேண்டாம். சிறு தெய்வ வழிபாடு அறவே கூடாதென்பார்.
மார்க்சிய
வரலாற்றாசிரியர்களான ரொமிலா தாப்பர் போன்றவர் இதை ஏற்கமாட்டார்கள். பல கலாச்சார சிறு
வழிபாட்டை ஊக்குவிக்கவேண்டும். பெரும் கலாச்சாரம் ஒன்றை காட்டி அதை ஏக கலாச்சாரமாக
மாற்றுதல் பன்மை சமூகத்திற்கு பேராபத்து என ரொமிலா சொல்வார்.
வரலாற்றின்
போக்கில் மேட்டுக்குடி சிலரின் உரிமையாக கடவுள் ஆக்கப்பட்டதை அடிகளார் சொல்வார். பக்தி
நெறி வளர்ந்து பாதுகாப்பு என்ற பெயரில் தத்துவ சாத்திர சூழல் உருவாதல், ஆகமங்கள் தோன்றுதல்,
அன்பிற்கு தடை நேர்ந்து அறிவின் ஆட்சி உருவாகி பொதுமை மறைதல் என அடிகளார் மாற்றம் நேர்ந்ததை
சொல்வார். எளியோரை இந்த வழிபாட்டில் எட்ட நிறுத்தியதால், பெரும்பான்மை சமூகத்தார் விலக்கப்பட்டு
ஆசாரம், ஆகமம் பெயரில் சமயம் அனுபவத்திலிருந்து தொலைதூரம் போன கதையை அடிகளார் விளக்குவார்.
இந்த
திரிபு கலையப்படவேண்டும். திருக்கோயிலில் உள்ள இறைவனை எல்லோரும் சென்று வழிபடுவதுதான்
சிறந்த சமய நெறி. ஆதியில் நாட்பூசனைக்கு இருந்தவர்கள் சிவாசாரியார் தான். இது திரிந்து
அர்ச்சகர் ஆனதை அடிகளார் எடுத்துச் சொல்கிறார்.
வேறு ஒரு முக்கிய முரணையும் அடிகளார் காட்டுவார்.
வடபுலத்தில் பொதுமக்களுக்கான வழிபாட்டுரிமை இருக்கிறது. ஆனால் நாயன்மார், ஆழ்வார்கள்
மண்ணில் பக்தர்களுக்கு திருக்கோயில் வழிபாட்டுரிமையை மறுப்பது என்ன நியாயம் என வினா
எழுப்பினார். கருவறைக்குள் சென்று ’புனலும் பூவுமிட்டு’
வழிபாடு செய்யும் உரிமை அவசியம் என அவர் கோரினார். பிறப்பின்வழி தடையில்லாது சீலத்தின்படி
அமைக்கலாமே என்றார்.
திருமறைகளில் தற்கால அர்ச்சனை முறையில்லை என்பார்
அடிகளார். சேக்கிழார் அர்ச்சனை என்பதை பாட்டு எனும் பொருளில் வழங்கினாராம். சுந்தரர்க்கு
சொன்னதாக ’அருச்சனை பாட்டே ஆகும்..சொற்றமிழ் பாடுக’
என்பதை அடிகளார் துணையாக அழைத்துக்காட்டுவார்.
இசுலாமியர்
அரபு மொழியில் சமயம் அறிகிறார்களே என்ற கேள்வியை வைத்தவர்களிடம், இங்கு நமது சமயம்
தமிழ்வழியில் வந்தது என்ற பதிலை வைப்பார். சேக்கிழாரும் சமயத்தை தமிழ் வழக்கு எனச்
சொன்னதை அடிகளார் சுட்டிக்காட்டுவார். வந்த சமஸ்கிருத ஆதிக்கமும், சாதி ஆதிக்கமுமே
தமிழ் சமயம் உலகச் சமயமாவதை தடுத்துவிட்டதான முடிவிற்கு அடிகளார் வந்தார்.
சமய நிறுவனங்களும், திருக்கோயில்களும் சமய சமுதாயப்பணிக்கான
மன்றங்களாகவே நடந்ததையும் அடிகளார் சொல்வார். மக்கள் இல்லாதபோது ஏது சமயம் என வினவிய
அடிகளார் தொண்டு இல்லாவிடில் பக்திக்கு பாதுகாப்பு இல்லை என்றார். மக்களை அறியாமைக்
குழியில் வறுமையில் வைத்துக்கொண்டு திருமடங்கள் வாழமுடியுமா என்பதும் அடிகளார் எழுப்பிய
வினா. மக்களை தழுவி நின்று பேணிப் பாதுகாக்கும் பணியையே சமய நிறுவங்கள் மேற்கொள்ளவேண்டும்.
அறநிலைய
அமைச்சர் சமய நிறுவனங்களின் உடைமைகளைப் பாதுகாக்கலாம். உணர்வுகளை பாதுகாக்கமுடியாது.
சமய நிறுவனங்களை கண்காணிக்கலாம். ஆனால் சமயத்தை வளர்க்கமுடியாது. திருக்கோயில்களில்
சாதி, குல ,இன, அரசியலுக்கு அப்பாற்பட்ட ஊர்ச் சபைகள் வேண்டும். வழிபடுவோர் பட்டியல்வேண்டும்.
ஊர்ச்சபை தொண்டின் மூலம் கோயிலுக்கும் குடிகளுக்குமிடையே இருக்கிற இடைவெளி குறையவேண்டும்.
நல்லுறவு வேண்டும். ஊர்ச்சபை ஊர் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தும். வழக்குகளை தவிர்த்து
வளர்ச்சிக்கு நிற்கும். எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்றால் எந்த இந்துவையையும் அநாதைகளாக,
ஏழையாக இருக்கவிடக்கூடதென்ற மறுமலர்ச்சி சமயத்தில் உருவாக வேண்டும் என்றார் அடிகளார்.
அடுத்து நமது சமயத்திற்கு எது மறை? இந்து சமயத்திற்கு
எது மறை எனக் கேள்வி எழுப்பி விடைதேடினார் அடிகளார். மறைநூல் சமுதாயத்தை ஒருமைப்பாடு
உடையதாக்க உதவும். அடிகளார் திருக்குறள் நமது சமுதாயத்தின் தனிமறை- பொதுமறை என்கிறார்.
கார்ல் மார்க்சின் சிந்தனைகளில் திருக்குறளின் மூலங்கள் பதிந்துள்ளதாகவும் அடிகளார்
சொல்கிறார். தமிழகத்தில் நலஞ்செய்யா அரசுகள் இருந்திருக்கலாம். ஆனால் ஜாரைப் போன்ற
கொடுங்கோல் அரசுகள் இல்லாமையால் இங்கு திருக்குறள் சார்ந்து புரட்சிகள் வெடிக்காமல்
போனதாக அடிகளார் கருதுவார்.
வள்ளுவர்
சிந்தனைக்கு காலமும் இடமும் துணையாக இல்லை என்ற முடிவிற்கு வந்தார் அடிகளார். மேலும்
அரசியல் சிந்தனையாளர்கள் மாணவர்களாக வள்ளுவருக்கு அமையாமல், சமய மற்றும் இலக்கிய மாணவர்கள்
மட்டுமே அமைந்த குறையையும் அவர் தெரிவிப்பார். திருவள்ளுவர் ஏற்ற நினைத்த புரட்சியை
இலக்கிய சிந்தனை என்ற பெயரில் அணைத்துவிட்டு அவரை வழிபட்டும், பட்டிமன்றமாக்கியதையும்
அடிகளார் வருத்தம் தோயச் சொல்வார்.
’கற்க கசடற..நிற்க அதற்குத் தக’
என்பதைச் சொல்லி மனிதன் தன் மனக்குற்றங்களை அறிந்து அவை நீக்க உதவும் நூல்களை தேர்ந்தெடுத்து
கற்று நின்று ஒழுக வேண்டும். பேசுதலும் எழுத்துதலும் கூட அறிவுடையாகாது. அவை அறிவின்
வாயில்கள். அறிவுடைமை என்பது துன்பத்தை மாற்றுங்கருவியாகவேண்டும். துன்பத்தை இன்பமாக்க
வேண்டுவது அறிவு என்கிற வரையறையை அடிகளார் செய்கிறார்.
நாளையப்
பற்றி கவலைக்கொள்ள சொல்வதுதான் நமது சமயம். ’உள்ளம் உடைமை உடைமை’
என்பதைச் சொல்லி ஊக்கத்தை விடாதே என அறிவுரை நல்குவார் அடிகளார். ’என்
கடன் பணிசெய்து கிடப்பதே’ என்கிற அப்பர் வாக்கியம் கொண்டு துவளாமல் செயற்படுக என்பார்.
மனிதன் தன் வரையறுக்கப்பட்ட வாழ் நாள் எல்லைக்குள் முழுமையுறல் வேண்டும் என்பதே அடிகளார்
காட்டும் சமயத்தின் விழைவாக உணரமுடிகிறது.
29-7-2022
ஆதாரம் அடிகளார் சென்னைப் பல்கலைக்கழக சொர்ணம்மாள் அறக்கட்டளைச்
சொற்பொழிவு 1975 “ நமது நிலையில் சமயம் சமுதாயம்”
Comments
Post a Comment