Skip to main content

நெ து சுவின் புரட்சியாளர் பெரியார்

 

நெ து சுவின் புரட்சியாளர் பெரியார்

நெ து சுந்தரவடிவேலு அவர்கள் ஏப்ரல் 2-4 ஆகிய நாட்களில் 1979ல் ஓர் புரட்சியாளரின் மறுமலர்ச்சி எனும் சொற்பொழிவை சென்னை பல்கலையில் ஆற்றினார். அது புத்தகமாக புரட்சியாளர் பெரியார் என உருவானது.

செப் 17 - இன்று பெரியார் குறித்து ஏதாவது புதிதாக தெரிந்துகொள்ள வேண்டும் என மனம் நினைத்தது. கார்த்திக் ராம் மனோகரனின் Periyar A study in Political Theism என் கைக்கு வந்திருந்தால் இதுவரை பார்க்காத நூல் என்ற வகையில் அதை எடுத்திருக்கலாம். ஆனால் அமெசானில் அது எங்கேயோ நிற்கிறது. விஸ்வநாதன் புத்தகமா, நெதுசு புத்தகமா என மனம் கேட்டது. ஏதோவொரு வால்யூம் பார்க்கலாம் என்றால் ஆத்தாடி அம்மாம் பெரிசா என மன சோம்பேறித்தனம் அதை விலக்கியது. விஸ்வநாதன் ஆங்கிலத்தை விட இலகுவாக நெதுசு உரையாடல் தமிழில் என மனம் முடிவு செய்துவிட்டது. அதை வாசித்த போது பட்டுத் தெறித்தவை.



ஆண்டு 1899. சென்னை காவக்கவுனி ஒற்றவாடைச் சாலை- லெட்சுமி விலாச நாடக சபையில் இந்து விநோத சபையின் அழைப்பு -மார்ச் 1ல் அபிராம சுந்தரி சரித்திர நாடகம். அழைப்பு அறிக்கையில்பஞ்சமர்க்கு இடமில்லை’ என்று போடப்பட்டிருந்தது. சென்னை அப்போதே பெரு நகரம்தான். ஆங்கிலேயர் ஆட்சிதான்.

பள்ளிகளில் தனிப்பானைகள். பிராமணாள் சிற்றுண்டி சாலையில் காலணா தின்பண்டத்திலும் ஆசாரம். சூத்திராள் என்றோ பின்னர் இதராள் என்றோ தனிப்பிரிவினை. விக்டோரியா மாணவர் விடுதி. அங்கும் பார்ப்பனரல்லாதவர்க்கு தனியாகத்தான் சமையல் கூடம். பிராம்மணர்களுக்கு தனி.

1890ல் சென்னை மாநிலக் கல்லூரிக்கும் பெங்களூர் மையக் கல்லூரிக்கும் இடையில் கிரிக்கெட் மாட்ச். இந்திய பெரிய மனிதர்களும் அழைப்பிதழுடன் போய் அமர்ந்தார்கள். சிம்காணா மண்டபம். ஸ்போர்ட்ஸ் செயலர் சாட்டர்டன் வந்தார். அனைத்து இந்தியர்களையும் வெளியேறச் சொன்னார். பிரிட்டிஷ் பெண்கள் விளையாட்டை பார்க்க வருகிறார்கள் எனவே இந்தியர் எவரும் இருக்கக்கூடாது என்ற ஆணை. மர நிழலில் போய் நின்று பாருங்கள் என தாராள அனுமதி.  இதை இந்து பத்திரிகை குறையாக எழுதியது. இந்த நீதியை இந்தியர் சக இந்தியரான தீண்டப்படாதவர்க்கு தந்தாரா  என நெதுசு மட்டுமல்ல நியாயம் உணர்ந்தவர் எவரும் கேட்கவே செய்வர்.

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையானவர்களை இன்று காண்கிறோம். கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறோம். அன்று பிரிட்டிஷ் ஆட்சி . அக்டோபர் 4, 1893 குண்டக்கல்லில் பிரிட்டிட்டிஷ் இராணுவ வீரர்கள் செகந்திராபாத் செல்கையில் குண்டக்கல்லில் தங்கி இளைப்பாறிக்கொண்டிருந்தனர். இரு கிராம பெண்கள் போவதைப் பார்த்து விட்டனர். பிறகு நாய் துரத்தல்’ நடந்தது. அப்பெண்கள் நடுங்கிப்போய் இரயில்வே வாட்ச்மேன் இடம் போய் ஒண்டிக்கொண்டனர். அவர் அவர்களை காப்பாற்ற அறை ஒன்றில் வைத்து பூட்டினார்.

 காவலாளி அம்பண்ணா. வந்தவன் கார்ப்பரல் ஆஷ்போர்டு. துப்பாக்கியை நீட்டி திற என்றான். மறுத்த அம்பண்ணா அடுத்த நொடிகளில் இரத்த வெள்ளத்தில் குண்டடிப்பட்டு கிடந்தார். அடுத்து என்ன நடந்தது என நெதுசு பதிவிடவில்லை. வழக்கு விசாரணை செய்திக்கு போகிறார். பிப் 9, 1894ல் தீர்ப்பு. ஆஷ்போர்ட் விடுதலை. தற்காப்பிற்கே சுட்டார் - தீர்ப்பு எழுதியாகிவிட்டது. அம்பண்ணா எவர் நினைவிலும் இன்றில்லை. இது தான் நீதிதேவன் மயக்கம் போலும்.

1911 ஜேக்சன் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர். ஐ சி எஸ் அதிகாரி. அவரைப்பார்த்து 7 வயது பையன் தெருவில் வணக்கம் என வேகமாக சொல்லிவிட்டான். துரைக்கு கடும் கோபம். சிறுவன் நீதிமன்றம் செல்ல நேர்ந்தது. அபராதம் ரூ 5- அல்லது ஒரு வார தண்டனை என தீர்ப்பு. அவன் குடும்பம் என்ன செய்தது எப்படி ரூ 5 யை சமாளித்தது தெரியவில்லை. நெதுசு அதில் சொல்லவில்லை. எப்படியான பெரும் அதிகார போதை அந்த அதிகாரிக்கு..

அரசாங்கப் பண்ணை - கிறித்துவர் ஒருவர் ஹாட் அணிந்து வேலைப் பார்த்துள்ளார். துறை இயக்குநர் கெளச்மேன் பார்த்துவிட்டார். கிறித்துவராக இருந்தாலும் இந்தியராயிற்றே. தலைப்பாகை அணிந்து வா. இல்லையேல் பதவியை துற என்றார் அதிகாரி. மானமுள்ள அந்த இந்திய கிறித்துவர் வேலையை விட்டார். தென்னாப்பிரிக்காவில் அங்கு காந்தியை தலைப்பாகை அணியவே அவர்கள் விடாத காட்சி மனதில் நிழலாடியது.

1919 ஜனவரியில் முதல் வகுப்பு பெட்டியில் பிராங்கிளேடன் பீகார் அரசாங்க செயலர் ஏறினார். அங்கு இந்திய முஸ்லீம் இருக்கை ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்தார். ஐ சி எஸ் மனம் பொங்கிவிட்டது. முஸ்லீம் பயணி மீது இவர் ஏறி அமர அப்பயணி விழித்துக்கொண்டார்.  அந்தப்பயணியோ கல்கத்தாவில் உயர்நீதிமன்றத்தில் நடுவராக இருந்து ஓய்வு பெற்ற சையத் ஆசன் இமாம். பயணி யார் என அறிந்தபின் அந்த ஆங்கில அதிகாரி வருத்தம் தெரிவித்தது வேறு கதை.

1912ல் உயர் பதவிகளில் பிராம்மணர் பெருமளவில் சில இடங்களில் முற்றிலும் ஆக்கிரமித்து இருந்ததை நெதுசு விளக்குகிறார். நெல்லூரில் இப்படி ஓர் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக நுழைந்த பார்ப்பனர் ஒருவர் விரைவில் 43 பார்ப்பனர்களை அலுவலகப் பணியில் இழுத்துவிட்டாராம்.

நீதிக் கட்சி தோன்றுவதற்கு முன்பாகவே ஆதி திராவிடர்கள் ஓரளவு விழித்துக்கொண்டதை நெதுசு சொல்வார்.

நீதிக்கட்சி தோற்றம், ஈவெரா அவர்கள் வளர்ந்தவிதம், காங்கிரஸ் பணி, குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், சிறை வாழ்க்கை, சுயமரியாதை இயக்கம், வகுப்புரிமை போராட்டம், கடவுள் மறுப்பு- தன்மானம்- மத விமர்சனம்- தீண்டாமை எதிர்ப்பு, வகுப்புவாரி உரிமை என பெரியாரின் வாழ்க்கைப் பாதைகளை நெதுசு சுவைபட சொல்லியிருப்பார்.

கானாடு காத்தானில் சிவக்கொழுந்துவின் நாயன கச்சேரி. அழகிரியும் பெரும் இசைப்பிரியர் – அங்கு போயிருந்தார். நாயனக்காரர் வழியும் வியர்வையை துடைக்க சிறு துண்டை மேலே போட்டிருந்தார். பெரிய சாதி வாலிபன் ஒருவன் துண்டை இடுப்பில் வை என்றார். சிவக்கொழுந்து வியர்வை துடைக்க என்றதை அந்த பெரிய சாதி ஏற்கவில்லை. அழகிரி பாய்ந்தார். மேலே போட்டுக்கொண்டு வாசியும். கேட்கிறவன் இருக்கட்டும் என்றார். திருமண ஊர்வலத்தில் அல்லோகலம்.

 அழகிரி பெரியார் தொண்டன் என்பதை அக்கூட்டம் உணர்ந்தது. பெரியாரும் புகார் சொன்னவர்களிடம் உங்கள் பணக்கொழுப்பை காட்டி அவமதிக்காதீர். சிவக்கொழுந்து வேண்டாம் எனச் சொல்லி நீங்கள் போகவேண்டியது தானே என்றார். வீட்டு செட்டியார் சிவக்கொழுந்து தொடர்ந்து வாசிக்கட்டும் எனச் சொல்ல மேலே துண்டைப் போட்டுக்கொண்டு சிவக்கொழுந்து தொடர்ந்து வாசித்தார். தன்மானம் காக்க அழகிரி நின்றார். பெரியார் தட்டிக்கொடுத்தார். சிவக்கொழுந்து தன்மானம் சிறக்க நின்றது.

16-9-1927 மாலை தஞ்சையில் காந்தியார் பேசிய பொதுக்கூட்டத்தில் அவரது உரையில் ஒரு பிராமணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும்போது பிராமணரல்லாதவர் அதை எதிர்த்துப் போரிட்டால் அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன் என்றார். அன்று நீதி கட்சி தலைவர்கள் பன்னிர்செல்வம். உமாமகேசுவரம் பிள்ளை, சின்னையா, சையத் தாஜூதீன் காந்தியை சந்தித்து தங்கள் போராட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதை நெதுசு பதிவு செய்துள்ளார்.

1928ல் தாழ்த்தப்பட்டவர் மாநாட்டில் பெரியார் இவ்வாறு பேசினார்

உங்களை கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால், எதிர்த்து நிற்கவேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்கு குடியேறவேண்டும். அங்கு ஜீவன மார்க்கத்திற்கு வழியில்லை என்றால் இந்து மதத்தை விட்டு சமத்துவம் உள்ள மதத்திற்கு போய்விடவேண்டும்.. அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்கு கூலிகளாய் போய் உயிரையாவது விடவேண்டும்

செங்கற்பட்டு பார்ப்பனர் அல்லாத இளைஞர் மாநாடு தீண்டாதாருக்கு சர்க்கார் உத்யோகங்களில் முதல் உரிமை எனத் தீர்மானம் போட்டது.

1931ல் விருதுநகரில் ஆர்.கே சண்முகம் தலைமையில் தீண்டாமை சகல சாதிகளையும் பிடித்த நோய்- தீண்டாமை ஒழிய பிராமணீயம் ஒழியவேண்டும் என தீர்மானம் போட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி முரளீஸ் கபே பிராமணாள் என்பதை எடுக்கவில்லை. அங்கு வாயிலில் தின மறியல் என பெரியார் அறிவித்தார். 600 பேர் இந்தப் போராட்டத்தில் கைதாகினர். பிராமணாள் பெயர் போனது.

பெரியார் நான் சொன்னேன் என்பதற்காக எதையும் ஏற்றுக்கொள்ளாதே என்றவர். சிந்தனைக்கு சரி என்றால் ஏற்றுக்கொள் என்பார். சமுக நலனுக்காக அனைவருக்கும் ஒழுக்க நெறி என்றே அவர் பேசினார். சுயமரியாதையை அலட்சியம் செய்து பேசும் சுதந்திர பேச்சை அவர் கேள்விக்கு உள்ளாக்கினார்- விமர்சித்தார்.

சமதர்ம இலட்சியங்களை அவர் உயர்த்திப்பிடிக்காமல் இல்லை. ஆனால் அதில் சுயமரியாதை என்பதை இணைத்தார். கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ, மார்க்ஸ் குறித்து, மீரத் சதி வழக்கு, பகத்சிங் என அவர் எழுதினார். அவர் சிங்காரவேலர், ஜீவாவுடன் இணைந்து பணியாற்றியவர். சுயமரியாதை சமதர்ம திட்டத்தை 1934 செப்டம்பரில் நீதிக்கட்சிக்கும் ராஜாஜிக்கும் பெரியார் அனுப்பினார்.  நீதிக்கட்சி அதை ஏற்க முன்வந்தது. 1949 கம்யூனிஸ்ட்கள் மீது அடக்குமுறை வந்தபோது பெரியார் கம்யூனிஸ்ட்களுடன் நின்றார்.

1938ல் நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாடு. தேவசகாயம், ரத்தினம், ஆறுமுகம் என்கிற ஆதிதிராவிடர்களும் மாநாட்டு சாப்பாட்டு பந்தலில் சமமாக அமர்ந்தனர். உடையார் பண்ணை எஜெண்ட் பொங்கினார். அவர்கள் விரட்டப்பட்டனர். வயலில் அறுவடை. அந்த மூவரும் பலருடன் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி வருகிறார். அந்த பசங்களை கட்டுங்கடா என்கிறார். மொட்டையடித்து சாணிப்பால் ஊற்றினர். பெரியார் குடி அரசில் இதை வெளிக்கொணர்ந்து நியாயம் கேட்டார்.

பெரியார் நீதி கட்சியின் தலைவராவதற்கு முன்னர் அவர்கள் குடியேற்ற நாட்டு அந்தஸ்து எனப் பேசிவந்தனர். பெரியார் வந்தபின் முழு தன்னாட்சி- திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கம் உருப்பெற்றது.

1940ல் பம்பாயில் ஜின்னா- பெரியார்- அம்பேத்கர் சந்திப்பும்  நடந்தது. தனிநாடு என்கிற முடிவிற்கு அவர்கள் வந்ததை நாம் அறிவோம். சர் சி பி ராமசாமி அய்யரும் ஜின்னாவிற்கு தனிநாடு கோர உரிமையிருந்தால் பெரியாருக்கும் தமிழ் நாட்டின் தனி ஆட்சி கோர உரிமையுண்டு எனச் சொன்னதாக நெதுசு பதிவிட்டுள்ளார். 1940 நீதிக்கட்சி திருவாரூர் மாநாடு தனி திராவிட நாடு என்பதுடன் ஆதி திராவிடர் தனித்தொகுதி என்பதையும் தீர்மானமாக போட்டது.

உலகப்போரில் ஹிட்லர் தோற்கவேண்டும் என்ற கருத்தையே பெரியார் வைத்திருந்தார். 1940-42 காலத்தில் சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை பெரியார் ஏற்கட்டும் என பிரிட்டிஷ் கவர்னர் விரும்பினார். ராஜாஜியும் பெரியாரிடம் ஆட்சிப்பொறுப்பை ஏற்கச் சொன்னார். பெரியார் மறுத்துவிட்டார்.  கிரிப்ஸ் தூதுக்குழுவிடம் பெரியார் தனி திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். கிரிப்ஸ் ஏற்கவில்லை என்பதை நாம் அறிவோம்.

13-2-1944ல் சென்னை நீதிக்கட்சி கூட்டத்திற்கு அண்ணா தலைமை ஏற்றார். வருகிற சேலம் மாநாட்டில் பெயர் மாற்றம் என தீர்மானித்தனர். அதன்படி சேலத்தில் ஆகஸ்ட் 1944ல் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றினர். திக தூத்துக்குடி மாநாடு விடுதலைக்குப் பின்னர் 9-5-1948ல் நடந்தது. அதில் சாதிவாரி பிரதிநிதித்துவம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். திராவிட தனி சுதந்திர நாடு என்றும் தீர்மானம் எழுதப்பட்டது.

சாதி ஆதிக்கம் எதிர்த்துப்போராடியது போலவே மொழி ஆதிக்கம் எதிர்த்தும் பெரியார் போராடினார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களை அவர் முன் எடுத்ததை அனைவரும் அறிவோம். தமிழ் நாடு தமிழருக்கே என்ற முழக்கம் இப்போராட்டத்தின் ஊடாக பிறந்தது. தேசியக்கொடி எதிர்ப்பு போராட்டமாக 1955 என்கிற முடிவும் வந்தது. நேரு காமராஜர் மூலம் பெரியாரை சமதானப்படுத்தி அப்போராட்டத்தை தவிர்க்கவேண்டியதானது.

பெண்ணுரிமைப் போராளி பெரியார் என்பதை விரிவாக நெதுசு பேசியிருப்பார். டாக்டர் முத்து லட்சுமிக்கு ஆதரவாக தேவதாசி ஒழிப்பில் பெரியார் உடன் நின்றார். கற்பு என்பது சுகாதாரம்- சரீரம் - பொது ஒழுக்கம் என்ற வகையில் இருபாலருக்குமானது என்பதை அவர் தெளிவாக்கினார். பெண்களுக்கு ஆண்களால் விடுதலை கிடைக்காது என்பதையும் அவர் கூறிவந்தார். பெண்கள் நகை மாட்டும் ஸ்டேண்டாகாமல் இருக்க கேட்டுக்கொண்டார்.

பெரியார் தனது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 20-6-1932ல் மேக்ஸ்பரோ லேக்கில் உரையாற்றினார்.  அதில் எங்களை பரிகசிக்கும் உங்களை நாங்கள் பரிகசிக்கிறோம் என்பதை உரக்கச் சொன்னார். இந்திய வீரர்கள் நடத்தப்படுவது, இந்திய தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படுவது, 80 ஆயிரம் பேரை சிறையில் அடைத்தல் போன்றவற்றை அவர் பரிகசித்தார். சுரங்கத்தில் பல்லாயிரம் ஆண் பெண் தொழிலாளர் 8 அணா, 4 அணாவிற்கு சுரண்டப்படுவது என்ன நியாயம் எனக் கேட்டார்.. தொழிற்கட்சி இந்த ஆபாசத்தை நிறுத்தாதா என வினவினார்.

1950 கம்யூனல் ஜீ குறித்த வழக்கு- தீர்ப்பு ,பெரியார் முன்னெடுத்த போராட்டம், அரசியல் சட்ட திருத்தம் என அதன் தொடர்ச்சியை நெதுசு விரிவாக இந்நூலில் சொல்லியிருப்பார்.

1953ல் ராஜாஜி ஆட்சியில் கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் வந்த குலக்கல்வி திட்டம் எதிர்த்து பெரியார் கடுமையாக போராடியதை நெதுசு சொல்வார்.

1957 நவம்பரில் சட்ட எரிப்புபோர் போராட்டத்தை பெரியார் கையில் எடுத்தார். 4000 தொண்டர்கள் கைதாகினர். 1953ல் அவர் புத்தர் விழா கொண்டாடினார். மே 27ல் பிள்ளையார் சிலை உடைப்பு என்றார். 144 தடை எனில் வீட்டிலேயே உடையுங்கள் என போராட்ட உத்திகளை பெரியார் மேற்கொண்டார். வர்ணாசிரம முறை ஒழிப்பிற்கு ஏதாவொரு காரியம் செய்யாமல் என் உயிர்போகக் கூடாதென்ற நம்பிகையுடன் தன் போராட்டங்களை அவர் விரிவுபடுத்திக்கொண்டிருந்தார். 1956ல் ராமன் பட எரிப்பு என்ற போராட்டத்தை நடத்தினார்.

அதேபோல் தமிழ்நாடு நீங்கிய இந்திய படத்தை ஊர்தோறும் கொளுத்துக எனும் இயக்கத்தை அவர் 1960ல் கையில் எடுத்தார். 4-6-1965ல் கம்பராமாயண எதிர்ப்பு, 1971ல் சேலத்தில் இராமன் பட எரிப்பு என்கிற இயக்கங்களை அவர் நடத்தினார். 1964ல் உச்சநீதிமன்றம்  நில உச்சவரம்பு சட்டம் செல்லுபடியாகது எனச் சொன்னது பற்றி கண்டனம் எழுப்பினார். பெரியாரின் தொடர் போராட்டங்களை அவர் 24-12-1973ல் மறைகின்றவரை நெதுசு தொட்டாவது காட்டியுள்ளார்.

பெரியாரின் தோற்றம் பற்றி நெதுசு படம் பிடிப்பார்.

”சிவந்தமேனி, தடித்த உடல், பெருத்த தொந்தி, நல்ல உயரம், வெளுத்த தலை மயிர், நரைத்த மீசை, நடுத்தரமான தாடி, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்து மயிரடந்த புருவம், ஆழமான கண்கள், ஒளிவிடும் விழிகள், பொதுவான உதடுகள், செயற்கைப் பற்கள், சாதாரண மூக்குக் கண்ணாடி

என் சிறு வயதில் பள்ளிக்கூடம் அருகில் தஞ்சை கருந்தட்டான்குடி  திருமண மண்டபத்தில் பெரியாரை பார்த்த மனப் பிம்பம் அப்படியே நெதுசு வர்ணிப்பில் உட்கார்ந்துள்ளதை என்னால் சரி பார்த்துக்கொள்ள முடிந்தது. அப்போது அவர் மைக்கில் பேசியது திருமண இரைச்சலாலும் சரியாக என் போன்ற கடைசி வரிசையாளர்கலுக்கு கேட்கவில்லை. அவர் குரலும் சற்று களைப்புடன் தொய்வாக இருந்த மனப்பதிவு என்னிடம். அன்றை ய சிறுவன் இன்று பெரியாரை எழுதுவேன் என நினைத்திருக்க முடியாது.

நெதுசுவின் இந்தப் புத்தகம் பெரியார் குறித்து இதுவரை எதையும் படிக்காதவர்க்கு அவரை நன்கு அறிமுகப்படுத்தும் நூலாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

பெரியார் குறித்து இன்று ஏராள தொகுப்புகள் இருந்தாலும் இப்படிப்பட்ட அவரது வாழ்க்கை குறிப்புகள் கொண்ட புத்தகங்களும் தேவைப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

17-9-2022  12 Noon

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...