https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, September 25, 2022

BSNLல் தொழிற்சங்க தேர்தல்

 

BSNLல் தொழிற்சங்க தேர்தல்

பொதுத்துறைகளில் அங்கீகாரம் பெறவேண்டிய தொழிற்சங்கங்கள் காலக்கெடுவில் தேர்தலை சந்திக்கவேண்டியுள்ளன. பி எஸ் என் எல் துறையிலும் வருகிற அக்டோபர் 12ல் அதன் 9வது தொழிற்சங்க தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது.


வழக்கம்போல் பல சங்கங்கள் நிற்கின்ற தேர்தல்தான். இம்முறை 14 சங்கங்கள் நின்றாலும் பலப்பரிட்சை எப்போதும்போல் முதல் இரண்டு சங்கங்களாக வருகின்ற BSNLEU- NFTE BSNL க்கு இடையில்தான்.   FNTo ,BTEU போன்ற சங்கங்கள் மத்தியில் அவர்களில் எவர் எனப் போட்டியிருக்கலாம்.  மற்ற சங்கங்கள் தங்கள் இருப்பை காட்டக்கூடிய வகையிலும் , ஜனநாயக Exerciseல் பங்கேற்கவேண்டியும் போட்டியிடவேண்டியுள்ளது.   

பல்லாயிரக்கணக்கானவர்கள் வி ஆர் எஸ் திட்டத்தால் வெளியேறிய பின்னர், வாக்காளராக உள்ள தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.  நாடு முழுதும் 500க்கும் குறைவாக உறுப்பினர் எண்ணிக்கைக் கொண்ட சங்கங்கள் கூட இந்த போட்டியில் இருக்கலாம். அவர்களில் பலரை  serious players  ஆக தொழிலாளர்கள் தங்கள் அனுபவத்தில் எடுத்துக்கொள்வதில்லை.

பி எஸ் என் எல் தேர்தலில் ஒரே சங்க அங்கீகாரம் என்ற நிலைமை மாறி இரண்டு சங்க அங்கீகாரம் என்ற நடைமுறை வந்துள்ளது.   ஒருவர் மட்டுமே தனித்த Bargainning Agent என்ற நிலையை கடந்த தேர்தல்களில் அத்தொழிலாளர்கள் அனுமதிக்கவில்லை. பொதுவாக நீடிக்கும் சங்க உறுப்பினர்கள் அதன் வாக்காளர் வங்கியாகவும் இருப்பார்கள். சில உறுப்பினர்கள் தங்கள் வாக்கு உரிமையை வெளிப்படுத்துவார்கள். இரண்டு சங்கமாவது தங்களுக்கான பிரதிநிதியாக இருக்க ஊழியர்கள் பொதுவாக விழைகிறார்கள் .

தேர்தல் என்றால் பிரச்சாரங்களில் சற்று கசப்பு கூடும். ஆனாலும் தேர்தலுக்கு முந்திய கூட்டு செயல்பாடுகள், பின்னர் தேவைப்படுகிற இணைந்த செயல்பாடுகள் இயக்கங்கள் என்பதையும் மனதில் வைத்தே முக்கிய தலைவர்கள் ஆங்காங்கே செயல்படும் பக்குவம் பெற்றுள்ளனர். இரவு பகலாக பொதுவாக அங்கு பாடுபடும் பெரும் சங்கங்களின் தலைவர்கள் தேர்தல் காலங்களில் இன்னும் அதிகமாக தங்கள் உழைப்பை தரத்துவங்கியுள்ளனர். பங்கேற்கும் சங்கங்களுக்கும், வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யப்போகும் தொழிலாளர்களுக்கும் நல்வாழ்த்துகள்.



கடந்த பல ஆண்டுகளில் இத்தேர்தல்களில், தொழிற்சங்க வாழ்வில் பல மணிநேரம் செலவு செய்தவன் என்ற வகையில் என் போன்றவர் பணியாற்றிய மாபெரும் பாரம்பரிய இயக்கம்- ஓ பி குப்தா, ஜெகன் போன்ற பெருந்தலைவர்கள் பங்காற்றிய சங்கம்- தங்கள் பணி ஓய்விற்கு பின்னரும் இன்றும்  பெருந்தலைவர்களாக தொழிலாளர்களின் துயர் துடைக்க நிற்கும் ஆர்.கே, முத்தியாலு, மாலி, தமிழ்மணி, சி கே மதிவாணன் போன்றவர்கள் உயர்த்திப் பிடிக்கும் சங்கம்- அகில இந்திய பொறுப்பாளர்களாக இருந்த தோழர்கள் எஸ் எஸ் ஜி, ஜெயராமன், காமராஜ் போன்றவர்கள் அகில இந்திய செயலராக பணியாற்றிய இயக்கமான  NFTE BSNL முதன்மை சங்கமாக வரவேண்டும் என்ற விழைவை என் நல்வாழ்த்துகளை  தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று NFTE BSNL அகில இந்திய பொறுப்பில் இருக்கும் மூத்த தலைவர் இஸ்லாம், பொதுச்செயலர் சந்தேஷ்வர் ஆகியோர் மற்றவர்களுடன் நாடு சுற்றி தொழிலாளர்- தொழிலக பிரச்னைகளை- தீர்வுக்குரிய வழிகளை சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் மாநில தலைவர் தோழர் முரளி, செயலர் நடராஜன், பொருளர் பழநியப்பன், அகில இந்திய செயலர் ஸ்ரீதர் ஆகியோர் பிற மாநில மாவட்ட கிளைப் பொறுப்பாளர்களுடன் பம்பரமாக சுழன்று களப்பணி ஆற்றிவருகின்றனர். அவர்கள் உழைப்பிற்கெல்லாம் என் வணக்கம்- வாழ்த்துகள்.

NFTEக்கு துணையாக தோள்கொடுக்க  SEWA TEPU, ATM தலைவர்களும் உறுப்பினர்களும் முன்வந்துள்ளனர். அவர்களுக்கு மிக்க அன்பும் நன்றியும்.

பி எஸ் என் எல் என்கிற டெலிகாம் பொதுத்துறை தொடர்ந்து மக்கள் ஆதரவை பெறத்தக்க வகையில் செயலாற்றி தன் இருப்பை தக்கவைக்கவேண்டிய போராட்டம் தலையானதாக மாறியுள்ளது. திரு மோடி அவர்களது அரசாங்கம் இத்துறை சார்ந்து அதிரடி முடிவுகளை எடுப்பதைக் காண்கிறோம். பெரும் கார்ப்பரேட்  Giant களாக நிற்கும் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகியவற்றின் போட்டிகளை சமாளிக்கவேண்டிய பெருந்திறன் தேவையாகவுள்ளது – அதற்கான போராட்டங்களை விட்டுக்கொடுக்காமல் நடத்தவேண்டியுள்ளது.

இம்முறை 1.64 லட்சம் கோடி என்ற அறிவிப்பை செய்து மக்களிடம் பி எஸ் என் எல் தழைப்பிற்கு இதற்கு மேல் தங்களால் ஏதும் செய்யமுடியாது என்ற பிம்பத்தை அரசாங்கம் உருவாக்கப்பார்க்கிறது.

மோடி அரசாங்கம் கடந்த டிசம்பர் 13, 2021ல் பொதுத்துறை கொள்கை ஒன்றை அறிவித்தது. அதில் Strategic sector எனும் பிரிவில் டெலிகாமை வைத்துள்ளனர். அதேநேரத்தில் Privatisation, Merger, subsidiarisation  நடைபெறும். ஆனால்  a bare minimum presence of CPSEs in the said strategic sector is to be maintained  என்பதையும் அறிவித்துள்ளனர். எனவே bare minimum  என்பதில் (எம் டி என் எல் மெர்ஜரில் வந்தாலும்) பி எஸ் என் எல்யை வைத்திருக்கவேண்டிய அவசியத்தை மோடி அரசாங்கமும் உணரவேண்டியுள்ளது என்பதை அந்த வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பங்கு விற்பனை என்பதற்கான சூசகபேச்சுக்கள் இருந்தாலும் பி எஸ் என் எல் அரசாங்க பொதுத்துறையாகவே நீடிக்கும் என்ற நம்பிக்கை தொழிலாளர்களுக்கு தேவைப்படும் ஒன்று என்பதற்காக இதைக் குறிப்பிட்டுள்ளேன்.

அடுத்து மார்க்கெட் சந்தையை 10 சதத்திலிருந்து 15 சதமாக விரிவடைய செய்தல் என்ற பெரும் முயற்சியில் பி எஸ் என் எல்லில் உள்ள அனைவரும் ஓர்முகம் ஆக நிற்கவேண்டிய அவசியமுள்ளது. ஓரிரு ஆண்டுகளில்  EBITDA positive  என்பதிலிருந்து இலாபம்  PBT  என்பதற்கு பி எஸ் என் எல் நுழைவதற்கான நம்பிக்கையும் பலமாக வேண்டியுள்ளது.  Making Every Business Area A ProfiT Area  என்பதற்கான முனைப்புகள் பலமாகிவருகின்றன. விவரமான தொழிலாளர்கள் தங்களின் எதிர்கால தேவைக்காகவும் இதில் உறுதியாக நிற்கின்றனர். 

State of Art Technology  என நாட்டு மக்களுக்கு பி எஸ் என் எல் அளித்துவரும் வாக்குறுதிக்கேற்ப உடன் 4 G-   பிற தனியார்கள் 5 G  துவங்கும்போதே- அந்த வாய்ப்பை  level playing field  என்ற வகையில் பெறுவதற்கான போராட்டங்கள் தேவைப்படலாம். அனைத்து வசதிகளும் அதிகாரங்களும் நிறைந்த மத்திய அரசாங்கம், தன் மூலதனத்தில் நடைபெறும் சேவையை பின் தங்கிய தொழில்நுட்ப சேவையாக மக்களுக்கு வழங்குவது சரியாகுமா- தகுமா?. தனியார் துறைக்கு இணையான கெளரவமான வாடிக்கையாளர்களாக தன் மூலதனம் மூலம் சேவை பெறும் பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களை வைப்பதும் அவசியமான ஒன்று என்ற புரிதல் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது.

என் வாழ்த்து செய்தி நீண்டுவிடக்கூடாது. தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பள மாற்றம் பெற்றனர். அதாவது 15 ஆண்டுகளாக பி எஸ் என் எல் தொழிலாளர் 2007ல் வந்த சம்பள விகிதத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு அந்த சம்பளம் நிர்ணயித்த காலத்தைவிட ஏறக்குறைய 200 சதம் பணவீக்கம் 2022ல் அதிகரித்து ஊதிய அரிப்பு எனும் அவலத்தில் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஊதிய மாற்றம் பெறாத நிலையில் ஏராள  பொறியியல் பட்டதாரி இளம் தோழர்கள், பிற தொழிலாளர்களுடன் சோர்விற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் உற்சாகம் அவர்களது வேலைத்திறனை கூட்டும் என்ற புரிதலும் தேவைப்படுகிறது.

களத்தில் நிற்கும் தலைவர்கள் தங்கள் தொழிற்சங்கத்தின் மரபு-பாரம்பரியம்- கோரிக்கைகள் தீர்வு- இன்னும் நிற்கும் கடமைகள் என பலவற்றை எடுத்து சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அதிலிருந்து பெற்ற ஓரிரு அம்சங்களை மட்டுமே நான் எனக்கு தெரிந்த அளவில் தொட்டுக்காட்டியுள்ளேன்.   

NFTE BSNL கூடுதலாக பெறும் வாக்குகள் பொறுப்பான தொழிற்சங்க மேடைக்கான- ஒற்றுமை மேடைக்கான நல் வாய்ப்பாக அமையும் எனக் கருதுகிறேன். எனவே வாக்களியுங்கள்..உழைக்கின்ற அனைவருக்கும் என் நல் வாழ்த்துகள்..

24-9-2022  -  தோழன் பட்டாபி

No comments:

Post a Comment