Skip to main content

பகுதி 1 திராவிட மாயை சுப்பு

 அறிஞர் அண்ணாவின் ஆரியமாயை, வர்ணாஸ்ரமம், பணத்தோட்டம், இன்பத் திராவிடம் போன்ற புத்தகங்களை அடுத்தடுத்து முன்னர் படித்த நினைவுண்டு.

பணத்தோட்டத்தை  எடுத்துக்கொண்டு தோழர் பி ராமமூர்த்தி அவர்கள் தனது ஆரிய மாயையா திராவிட மாயையாவில் விரிவாக விமர்சனத்துடன் விவாதித்திருந்தார். 

அண்ணாவின் ஆரிய மாயையை மீண்டும் கிண்டில் வழி சென்ற வாரம் வாசித்தேன். ஏனெனில் சுப்புவின் மூன்று வால்யூம் ‘திராவிட மாயை ஒரு பார்வை’யை படிப்பதற்கு முன்னால் அண்ணாவின் பார்வையை நினைவூட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காக. அண்ணா அதில் மேற்கு - குறிப்பாக ஆங்கில பிரஞ்சு ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி  வந்தேறி ஆரியர்களின் சூது நயவஞ்சகம் அவர்களை வெளியேற்றி திராவிடம் கொணரவேண்டிய அவசியத்தின் கருத்துப் போராட்டத்தை அதில் முன்னெடுத்திருப்பார். 

சுப்புவின் திராவிட மாயை புத்தகத்தை நான்காவது பதிப்பாக கடந்த 2022ல் மூன்று பகுதிகளாக rare books என்கிற பதிப்பகத்தார் கொணர்ந்துள்ளனர். ஆர் எஸ் எஸ்  சங்க் குடும்பம் சார்ந்த தமிழக அறிவுஜீவிகள் அரவிந்தன் நீலகண்டன், வெங்கடேசன் போன்றவர்கள் ஒத்துழைப்பில் எழுதியதை சுப்பு ஏற்றுள்ளார். தான் எழுதும் விவரங்களுக்கு முதல் பாகத்தில் 51 துணை நூல்களை தந்து ஆதாரங்களை சொல்லியுள்ளார். அண்ணா நூலில் ஆங்காங்கே எந்த ஆய்வாளர் என்ன எழுதினார் என்பது தரப்பட்டிருக்கும். சுப்புவும் இந்த முறையை கையாண்டுள்ளார். ஆர் எஸ் எஸ் நண்பர்களின் உதவி என்றாலே அதில் அவர்களுக்கான அரசியல் தேவை அமராமல் இருக்காது. வரலாறு என்பது அவரவர் தேவைக்கான கட்டுமானமாகவே இருப்பதைத்தான் நான் படித்த இந்த புத்தகங்கள் எனக்கு உணர்த்தின. எவர் எழுதியதையும் அதுவே முற்றானது என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிற பாலபாடம் மீண்டும் என்னுள்.. இனி சுப்புவின் எழுத்தை பார்க்கலாம்…

அண்ணாவின் ஆரிய மாயை பற்றி சுப்பு எழுதியது ..

“ திராவிட நாடு இதழில் சி என் அண்ணாதுரை எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 1943ல் ‘ஆரிய மாயை’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. கிறித்துவ பாதிரிமார்கள் ஹிந்து மதம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை அண்ணாதுரையின் அடுக்கு மொழியால் ஜோடித்ததுதான் இந்நூல். பிராமணர்கள் ஆரியர்கள் என்று அண்ணாதுரை எழுதியிருந்தார். 1949ல் பி எஸ் குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்தார். காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் இருந்தது. ஆரிய மாயை தடை செய்யப்பட்டது. பின்னர் 1967ல் அண்ணாதுரை தமிழக முதல்வரானார். அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்தத் தடை நீக்கப்படவில்லை…அண்ணாதுரை அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, அரசியல் நெறிகளுக்கும் உட்பட்டே செயல்பட்டார் என்பதற்கான சான்று இது”

நீதிக்கட்சியின் தலைவர்கள் ராஜாக்களும் ஜமீன்களுமாக இருந்த நீண்ட பட்டியல் ஒன்றை சுப்பு இதில் தந்திருப்பார். 1937 தேர்தல் குறித்த வேறு ஒரு தகவலைத் தருகிறார்.

 இராமநாதபுர தொகுதிக்கு நீதிக்கட்சி சார்பில் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களும், காங்கிரஸ் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களும் போட்டியிட்டனர். பிரிட்டிஷ் அரசாங்கம் தேவருக்கு வாய்ப்பூட்டு போட்டது. தேவர் பேசமுடியாது போய் இருகரம் கூப்பி சென்றதுடன் வெற்றியும் பெற்றார்

மலையாள கவிஞர் கே சச்சிதானந்தன் எழுதினாராம்

“ தென்னிந்தியர்கள் முழுவதும் ஒரே இனத்தவரோ, வம்சத்தவரோ அல்ல. தமிழர்களும் அப்படித்தான். இன்று ஆரியர் குடியேற்றம் என்ற கருதுகோள் கூட மறுவிசாரணை செய்யப்பட்டு வருகிறது..”

திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வில் தோழர் அருணன் எழுதியதை சுப்பு காட்டுகிறார். அருணன் எழுதியதாவது

“ சொல்லளவில் மட்டுமல்ல, செயலளவிலும் ஏகாதிபத்திய தாசனாகவே இயங்கி வந்தது நீதிக்கட்சி..அதுவும் எந்த அளவிற்கு என்றால் ஜாலியன்வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கைவிடும் அளவிற்கு..அதிலும் அறிக்கைவிட்டவர்கள் யார் தெரியுமா? இன்றைக்கும் திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்கள் என்று எவரை திராவிட இயக்கத்தவர்கள் புகழ்ந்துரைத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த தியாகராசச் செட்டியாரும், டி எம் நாயரும்தான்”

தோழர் பி ஆர் எழுதியதை சுப்பு காட்டுகிறார்

“ நீதிக்கட்சி அது தோன்றிய காலத்திலிருந்து அதன் அந்திம காலம்வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை ஆதரித்து நின்றது. அது ஜமீந்தார்கள் மற்றும் தரகு வியாபாரிகளின் கட்சியாக இருந்தது”

1918ல் பெரியார் எப்படி பேசினார் என்ற மேற்கோள் ஒன்றையும் சுப்பு தந்துள்ளார்

“ நாம் பிராமணன் மீது எவ்வெக் குற்றங்களைச் சுமத்துகிறோமோ அவ்வக் குற்றங்களைப் பஞ்சமர் முதலியோர் நம்மீது சுமத்துகின்றனர்”

கோவை அய்யாமுத்துவின் ‘எனது நினைவுகள்’ புத்தகத்திலிருந்து சுப்பு காட்டுவது

“ வைக்கத்துப் போர்க் காலத்தில் நாயக்கரும் நானும் மோட்டாரிலும் படகுகளில் திருவாங்கூர் முழுவதும் பிரயாணம் செய்தோம். நாயக்கர் கையில் எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும். மோட்டாரில் போய்க்கொண்டே வந்தே மாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவைகளை அவர் உரக்கப்பாடுவார்”

இந்தச் செய்தியை இவர்கள்  ஏன் தரவில்லை என சுப்பு வினவுவார்

“ நெடுஞ்செழியன் திராவிட வரலாறில் பாரதி பாடல்கள் என்கிற செய்தியில்லை

வீரமணியின் புத்தகத்தில் இந்த செய்தியில்லை

சாமி சிதம்பரனார் தமிழர் தலைவரில் இல்லை

கவிஞர் கருணாநந்தம் எழுதிய தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு என்ற நூலிலும் இந்தச் செய்தி இல்லை.

சின்னக் குத்தூசி எழுதிய காந்தியடிகள் கட்டளைப்படி நடந்ததா வைக்கம் என்பதிலும் இந்தச் செய்தி இல்லை

சுப வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் என்ற நூலிலும் இந்தச் செய்தி இல்லை

ஞாநி எழுதிய அவர்தாம் பெரியார் என்பதிலும் இல்லை

மங்கள முருகேசன் என்ற ஆய்வாளர்  மட்டும் இந்தச் செய்தியை பதிவு செய்தியைப் பதிவு செய்துள்ளார்

 ⁃ சுப்பு எழுதியவை குறித்து இங்கு தரப்பட்டவை அனைத்தும் முதல் 90 பக்கங்களுக்குள் பகுதி 1 திராவிட மாயை ஒரு பார்வையில் கிடைக்கிறது


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...