https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, September 13, 2023

‘ ரிக் வேதகால ஆரியர்கள்

 ராகுல் சாங்கிருத்தியாயனின் ‘ ரிக் வேதகால ஆரியர்கள் ‘ என்கிற அவரது ஆய்வு நூல் தமிழில் இருக்கிறது. அலைகள் திரு எத்திராஜூலு மொழிபெயர்ப்பில் கொணர்ந்த நூல். தோழர் சாங்கிருத்தியாயன் விசால வாசிப்பில் சில முக்கிய வரலாற்று செய்திகளை ரிக் வேத 10 மண்டலங்களையும் சார்ந்த பாடல்கள் வழி சேகரித்து தன் perceptionயை இந்த புத்தகத்தில் தந்துள்ளார்.

இன்று நாம்  பொது புத்தியில் புரிந்தது மாதிரி வைத்திருக்கும் அம்சங்கள் ஆரியர்- திராவிடர் வரலாற்று வெளிச்சத்தில் சரியானவையா என்ற கேள்வி இந்த ஆக்கத்தை படிக்கும்போது வரலாம். சில பொது ஏற்புகளையும் பார்க்கலாம். இனி ராகுல் ஆய்வில் கிடைக்கும் சில வரலாற்று துணிபுகள்..

ஆரியர் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதை ஏற்காவிட்டால் வரலாற்று குழப்பம் ஏற்படும்.

சிந்து வெளி மக்கள் ஆரியருக்கு முன்பே நகர நாகரிகங்களில் வியாபார உலகில் சிறந்து வாழ்ந்தவர். அவர்களுடன் ஏற்பட்ட மோதலில் இம்மக்களை தஸ்யூக்கள் கறுப்பர்கள் என அடிமைப்படுத்தினர் ஆரியர். தாசன் என்கிற பதம் இதிலிருந்து தான் வந்தது. இவர்கள் திராவிடர்கள் எனவும் வரலாற்றில் அறியப்பட்டுள்ளனர். இந்த தஸ்யூக்கள்  ‘கிருஷ்ணர்கள்’ என்கிற கறுப்பு அடையாளத்தாலும் பார்க்கப்பட்டனர். 

(சிவன் தான் திராவிட ஆதி கடவுள் என்கிற பேச்சுடன், கிருஷ்ணன் என்பதும் தஸ்யூக்கள் என்கிற உரையாடலை சாங்கிருத்தியாயன் இங்கு தந்துள்ளார்)

ஆரியர் பல இனக்குழுக்களாக தங்களுக்குள் போரிட்டுள்ளனர். எங்க ஏரியா உள்ளே வராதே என்கிற போராட்டம் ரிக் வேத மண்டலங்களில் புகழ் வாய்ந்த 10 மன்னர் யுத்தம் என போற்றப்படுகிறது.

ஆரிய முக்கிய பெரும் இன குழுக்கள் 5. 

புரு- இதன் புகழ் வாய்ந்தவர்களாக வத்ர யஷ்வன், திவோதாஸ், சுதாஷ் போன்றவர். இவர்கள்தான் பரதர்கள் என புகழ் அடைந்தனராம். (இதிலிருந்துதான் பரத் பாரத் என்கிற name game அலகிலாவிளையாட்டு). இவர்கள் பிருஷ்ணி ராவி நதிக்கரையில் வாழ்ந்தனராம். இந்த புருக்களிடமிருந்து உருவான ஒன்று பின்னர் குரு வம்சம். பரதர்களுக்கு முக்கியமானவர் பரத்வாஜர்.

யதுக்கள் இனக்குழு- இவர்கள் இன்று அறியப்படும் யாதவர்களின் முன்னோர்கள். (தமிழகத்தில் முன்பு கோனார்கள்.) . சப்த சிந்து பகுதியில் இவர்கள் புரு குழுவினரோடு மோதி தோற்றனராம். புரு திவோதாஸ்- சுதாஷ் யாதவர் மற்றும் துர்வசுக்களுடன் அடிக்கடி போரிட்ட காட்சிகள் ரிக் பாடல்களில் வருகின்றனவாம். எல்லா வெற்றிகளும் இந்திரனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன. யதுக்கள் கிருஷ்ணன் மதுராவுடன் இணைத்து பேசப்படுகின்றனர். (யதுகுல கிருஷ்ணா) 

துர்வசுக்கள் குழு- கண்வர் வத்சர் வழியினராம். இவர்கள் யதுக்களுடன் துணை நின்றாலும் புருக்களிடம் தோற்றனர். இவர்கள் பரதர்களின் பகைவர்களாக இருந்துள்ளனர். ஆரிய சண்டை அவர்களுக்குள் முற்றுகிறது.

திருஹ்யுக்கள் குழு- பிருகு இவர்களின் வழிகாட்டியாம். இவர்களுடன் அணு என்ற குழுவும் இருந்ததாம்.  10 மன்னர் போரிலே வசிஸ்ட்டர் வழியில் சுதாஸ் புருக்கள் இவர்களை வீழ்த்தினராம். இவர்களும் இந்திரன் அக்னியைத்தான் கொண்டாடினர். பசு கவர்தல், செல்வ சண்டை என ரிக் பாடல் சொல்கிறதாம்.  புரு சுதாஷ் இந்திரனின் உற்ற நண்பனாம்.  யுத்தம் முடிவில் ஆயிரக்கானவர் நதிகளில் மூழ்கடிக்கப்பட்டனராம். திருஹ்யக்கள் ராவி நதிக்கு மேற்கே இருந்தவர்களாம்.

அணு என்கிற 5 வது குழு- இவர்களை வசிஸ்ட்டர் பொய்யர்கள் என அழைத்தாராம். இந்திரன் ரதம் அமைக்கும் அளவு skilled ஆன அணு குழுவினரை புருக்கள் தோற்கடித்தனராம்.

இதைத்தவிர பக்தூண் ( பட்டாணியரா) , பலான், சிவி ( சிவ) , விஷாணி, ஷிம்யு, க்ரிவி, கவஷ், உசத், மன்யு,  போன்ற 24 கிளைகள் கூட ரிக் வேதகால பாடல்களில் வருகின்றனவாம்.

சுதாஷ் 10 மன்னர்களை வென்ற கதைதான் ( தாஸராக்ஞ யுத்த) புகழ்வாய்ந்த 10 மன்னர் யுத்தமாம். புருவில் திரிஸீக்கள் என்ற பிரிவினரான திரிவோதாசும் சுதாசும் பரதர் கிளைகளை உயர்த்தினராம்.

ரிக் வேதகாலம்  என சாங்கிருத்தியான் ஏற்பது கிமு 1200- 1000. அப்போது மொகஞ்சதாரா ஹரப்பா திராவிடர், காஷ்மீர்- அசாம் பகுதியில் கிர் என்கிறகிராத் மக்களுடன் ஆரிய இனக்குழுக்கள் மோதியுள்ளன. திராவிடர் கறுப்பர் எனில் கிராதர் மஞ்சள் நிறத்து மங்கோலியர் - இப்போதான திபேத்தியர்..

மிக முக்கிய செய்தி ஒன்றை சாங்கிருத்தியாயன் தருகிறார். ரிக் முதல் 9 மண்டலங்களில் நான்கு வர்ணங்கள் பற்றி இல்லை. பத்தாவதில் 10-10-12 பாடலில் முகம், கை, தொடை , கால்  வழி பிறப்பு சொல்லப்பட்டுள்ளதாக ராகுல் தெரிவிக்கிறார்.

ஆரியர் தம் வேற்றுமைகளை மறந்து ஒன்றாக, ஒரு மனத்துடன், மந்திரத்திலும் ஒன்றாக , சம பணி கொண்டதாக இருங்கள் என அறிவுரையை 10வது மண்டலம் 191வது ஷூக்தம் சொல்கிறதாம்.

பணி என்ற பிரிவுடன் ஆரியர் உறவுடன் இருந்தனராம். இவர்கள் பன்யா வியாபாரி  வைஸ்யர் என அழைக்கப்பட்டனர்.

ஆரியர் குழுக்களுக்கான முக்கிய ரிஷிகளாக வாமதேவர், பரத்வாஜர், வசிஷ்டர், விசுவாமித்திரர், அஷ்டகர், கஸ்யபர்,வாமகர், அங்கிரா, ஜமதக்னி, பிரிகு என 10 பேர்களை சொல்கின்றனர். ( இன்றும் இவர்கள் கோத்திரங்களாக நிலவுகின்றனர்) . ரிக் ஷூக்தங்களை அதிகம் படைத்தவர் பரத்வாஜராம். விசுவாமித்திரர் காலம் என்பதே 15 தலைமுறைக்கு பிந்திய காலமாம். கிரத்ஸமத், கஷூவான், அகஸ்தியர் ( வசிஷ்டர் சகோதரர்) , கோதமர், மேதாத்தி, சியாவாஷ்வ, குத்ஸா, மதுச்சந்தா, பிரஸ்கண்வர், அஜிகர்த என சில பாடல்களை தந்த ரிஷிகளும் உள்ளனராம்.

சிந்து இனத்தவரை கிருஷ்ணர்கள், தஸ்யூக்கள்,தபிஸ்கள் என ஆரிய குழுவினர் அழைத்துள்ளனர். பரத்வாஜர் அக்னி மற்றும் பணி குழுக்களின் செல்வத்தை எடுத்துச் சென்றாராம். மலைவாசிகள் தஸ்யு சம்ரன் தலைமையில் கிராதர்களுடன் சேர்ந்து ஆரியரை எதிர்த்து பெரும் போர்களை 40 ஆண்டுகள் நடத்தியதாக சாங்கிருத்தியாயன் சொல்கிறார். கிழக்கு நேபாளம் கிராத தேசமாம். ( கிருஷ்ணன் திராவிடரா) 

ரிக் வேதகாலத்திற்கு முந்திய மன்னர்களாக மனு, புருரவா, நஹிஷ், யயாதி, மந்தாத என் 5 பேர் புகழுடன் இருந்தனராம். மனு பற்றி ரிக் 31 இடங்களில் சொல்கிறதாம். மனு தஸ்யூக்களை வென்றுதான் புகழ் பெற்றதாகவும் சாங்கிருத்தியாயன் சொல்கிறார். அக்னி மனுவிற்காகவே த்யெள என்கிற சுவர்க்கம் உருவாக்கினாராம். புரூரவா ஊர்வசி காதல் பாடல்கள் ரிக்கில் வருகிறதாம்.

வாமதேவர் பாடல்படி 50 ஆயிரம் - கிருஷ்ணர் என்கிற கறுப்பு அசுரர்கள் கொல்லப்பட்ட தகவலையும் ராகுல் தருகிறார்.

பருச்சேப் மலைப்பகுதி தஸ்யூக்களின் வீரமன்னன் சம்பரனாம். திவோதாசின் மகன் இவனை வெற்றிகொண்டான்.  சம்ப்ரான் தஸ்யூக்கள் ‘சிஷ்னதேவர் ‘ ( ஆண்குறி பூஜை செய்பவர்)  என வசிஷ்டர் சொன்னாராம். (லிங்க வழிபாட்டை சொல்கிறார்களா) . இவர்கள் மனுவின் புத்திரர்கள் என ஏற்கப்படாமல் அமானுஷ்யர்கள் என குறிக்கப்பட்டனராம். தஸ்யூக்களில் பெண்கள் வீரமாக போராடியது சொல்லப்பட்டுள்ளதாம். 

வசிஷ்டர் பேரன் கவுரவீதி மனுவை மன்னர் என்றும் ரிஷியென்றும் புகழ்கிறார். சம்பரனுக்கு முந்திய மலையரசன் நமுசியை இந்திரன் மனுவின் பொருட்டு கொன்றாராம். தலையை தூளாக்கியதாக பாடல் சொல்கிறதாம்.

பரத்வாஜர் எதிர்கொண்ட தஸ்யு வீரர்கள் சுமரி, துனி, சம்பர், சுஷ்ண

வசிஸ்ட்டர்- தாசன் விருஷஷிப்ரன்

குத்ஸ- சுஷ்ண, பிப்ரு, விருத்ர, சம்யம்

இன்னும் ஆரிய குழுக்கள் உணவு, சோமபானம் என ஏராள செய்திகள் இதில் தரப்பட்டுள்ளன. தஸ்யுக்கள், ஆரிய இனக்குழுக்கள் எப்படி கலந்தன - pure blood theory செல்லுபடியாகுமா என்கிற பல கேள்விகளையும் இந்த புத்தகம் எழுப்புகிறது.. ஆர்வம் உள்ளவர் படித்து பார்க்கலாம்


No comments:

Post a Comment