https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, September 13, 2023

புறநானூற்றிலிருந்து 34 பாடல்களை

 சாமி. சிதம்பரனார் மதிக்கப்பட்ட தமிழறிஞர். பெரியார் வரலாறு தந்தவரும் கூட. அவரிடம் வேறுபட்டவரும் கூட.

சாமி. சிதம்பரனார் 1958ல் புறநானூற்றிலிருந்து 34 பாடல்களை தேர்ந்து, மிக அழகான கதைச்சொல்லி வகைப்பட்டு விளக்கங்களை தந்த புத்தகம்  ‘புறநானூறு தமிழர் நாகரீகம்’. பழந்தமிழர் சமுதாயத்தின் பண்பாட்டை -அதன் நேர்த்தி மற்றும் இன்றுள்ள நாகரீகப் பார்வையில் குறைகளை எடுத்து இயம்பும் ஆக்கமிது.

தமிழரின் தலை சிறந்த கொள்கையை கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் வைத்து சிதம்பரனார் விளக்கியிருப்பார். குறிப்பிட்ட ஊரை எமது எனச் சொல்லாமல் மக்கள் வாழும் எல்லா ஊர்களையும், எல்லா மக்களையும் சுற்றத்தார் எனப்பேசுதல் ..சிறியவர் என இகழ்தல் இல்லாமல், பெரியோர் என வியந்து போற்றாமல் இருக்கும் மாண்பு பேசுதல்..

நன்றி மறப்பது நன்றன்று எனச் சொல்லித்தரும் ஆலத்தூர் கிழார் பாடல் ( புற 34),  ஒன்று அறங்கருதி விட்டுவிடு இல்லையேல் மறங்கருதி போராட துணிவு கொள் என நம்பிக்கையூட்டும் கோவூர் கிழார் ( நலங்கிள்ளி- நெடுங்கிள்ளி மோதல்)  புற 44 பாடல், தமிழ்ப் புலவர் என்றால் தன்மானம் வேண்டும் எனக்காட்டும் மதுரைக் குமரனார்  “ அரசே நாம் யாருக்கும் அஞ்ச மாட்டோம்- யாரையும் பொய்யாகப் பாராட்டமாட்டோம்- எவ்வளவு துன்பம் அடைந்தாலும் மானமிழக்க மாட்டோம் “ எனப் பேசும் புற 197 பாடல் என பல அருங்குணங்களை புறநானூறு வழிநின்று சாமி. சிதம்பரனார் விவாதித்திருப்பார்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதை வறியோர் வார்த்தை எடுபடாது என்பதாக புரிந்து கொண்டிருப்போம். ஆனால் புலவர்கள் அறிவற்றனை ஏழை எனச் சொன்னராம். அறிவுடையவர் சபையில் அவர் சொல் நிலையாது என்ற பொருளுண்டாம்

கண்ணகி என்றால் கோவலன் சிலம்பு  தமிழ் பொது புத்திக்கு வரலாம்.   வள்ளல் பேகன் துணைவியார் பெயரும் கண்ணகி. மயிலுக்கு போர்வைத் தரும் அளவிற்கு இரக்கமும் கொடை மனதும் கொண்ட தமிழன் தான் பேகன். ஆனாலும்  கண்ணகி விடுத்து வேறொரு மாதின்மேல் வயப்பட்டான். திருத்த முடியா கண்ணகி தனது தாயகம் திரும்பினாள்.  கண்ணகி தாயகம்  என சாமி இதில்  ஏதும் சொல்லவில்லை.

தன்னை அவலட்சமணாமாக்கிக்கொண்டாள் கண்ணகி. இவள் குறைதீர்க்க, பேகனுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்த கபிலர், பரணர், அரிசில் கிழார் முயன்றனராம். பேகன் ஊர் வையாவியாம். அது இன்றைய பழநியம்பதியாம்.

தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் முக்கொள்கை கொண்டவனாம்.

நாட்டில் வளம் சிறக்க இருக்கவேண்டும்- அதை புலவர் பாடவேண்டும்

நாட்டுக்குடி மக்கள் நல்லவராயிருக்கவேண்டும்.

மன்னன் என்றவகையில் வறியோர் துன்பந்தீரசெல்வங்களை வாரி வழங்கவேண்டும்- இரப்பவர்க்கு இல்லை என்பதில்லா நல்லறம்.

புறநானூற்றில் போர்செய்து வீரனாக இருத்தல் என்கிற மறம் பெரும்பாலும் பேசப்பட்டிருந்தாலும், போர் கொடிது தவறு- மக்கள் ஒற்றுமை உடையும்- செல்வம் பாழ்படும் என்பதும் பேசப்பட்டுள்ளதாம்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பதில் பாண்டியன் குடிப்பெயராம்- பல்யாகசாலை பெருமையாம்- பெருவழுதி பட்டமாம். குடுமி தான் பெயராம். குடுமிகளில் முற்பட்டான் என்பதால் முது சேர்ந்ததாம்.

கோப்பெருஞ்சோழன் என்றால் பிசிராந்தையார் என நினைவு கிளம்பிவிடும். உண்மை நட்பிற்கு உதாரணமாக இருவரையும் சொல்வர். பார்த்துக்கொள்ளமலேயே  நட்பு பாராட்டியவர்கள். மன்னர்  தோல்வியுற , வடக்கிருத்தல் செய்யவேண்டியதானது. அது அவரின் அறம். அறிந்த பிசிராந்தை நட்பு தானும் வடக்கிருந்து மாய்ந்தது. சரி பொத்தியார் நட்பு - இதே அளவில் குறைபடாததாம். அவர் ஏன் தமிழ் வெளிச்சத்தில் இல்லை. பொத்தியார் அன்றாட உயிர்த்தோழன். சோழன் வடக்கிருந்தபோது, பொத்தியார் துணைவி கருவுற்றிருந்தாராம். குழந்தை பிறந்து உலகம் அதன் தந்தை நீ என தெளிந்தபின் வடக்கிருக்கலாம் என்றாராம்சோழன். அதேபோல் பொத்தியார் காத்திருந்து வடக்கிருந்து நட்புக்காக தன்னை மாய்த்துக்கொண்டாராம்.

இப்படி தமிழரின் புறநானூறு காட்டும் நாகரிகத்தை சாமி. சிதம்பரம் மிகச் சுவையாக இந்நூலில் விரித்து தருகிறார். இன்றுள்ள நமது வாழ்க்கை முறை வேறு என்பதை ஒத்துப் பார்த்துக்கொள்ள உதவும் நூல்..

தமிழர் நல்லவேளை புறநானூற்று மற வாழ்க்கைதான் சாசுவதம் என அன்றாடம் அனுசரிக்கவில்லை.    கேட்ட பொழுது பெருமிதம் கொள்கிறான். கால மாற்றத்தில் வாழ்வின் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்

No comments:

Post a Comment