https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, September 13, 2023

திராவிட அரசியலின் எதிர்காலம் சுகுணா திவாகரின்

 திராவிட அரசியலின் எதிர்காலம் என்கிற ஆக்கம் 2020ல் எதிர் வெளியீடாக வந்தது. சுகுணா திவாகரின் 10 கட்டுரைகள் அடங்கிய 80 பக்கங்கள் கொண்ட சிறு வெளியீடு.  இதில் இவ்வாசிரியர் வந்தடைந்த சில முக்கிய கருத்தாக்க புள்ளிகளாவன..

பெரியார்  அதிகார மய்யங்களிலிருந்து விலகியிருக்கக் காரணம் அதிகார மய்யங்கள் கறைபடிந்ததாக இருந்ததால் மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் அதிகாரமே அதிகார மய்யங்களில் நிலவுவதால், அதிகார மய்யங்களை நோக்கி நகர்வதால்- வலுவான சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியாது என்று நம்பியதாலும்..

பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் ஆதிக்கச்சக்தியாய் முக்குலத்தோர் சாதி வளர்ந்து வருகிறது.

எம்ஜிஆர் காலம்வரை கருத்தியல் அடிப்படைகளற்ற ஜனரஞ்சக இயக்கமாக இருந்த அதிமுக , ஜெயலலிதா என்கிற பார்ப்பனப் பெண்மணி தலைமை தாங்கிய காலத்திற்குப்பின் படிப்படியான வலதுசாரி இயக்கமாக மாறிப்போனது. பார்ப்பன - தேவர் ஆதிக்கசாதிக்கூட்டே அக்கட்சியின் அரசியல் நிகழ்ச்சிநிரலை கருத்தியல் கட்டுமானங்களை தீர்மானிப்பதாக மாறிப்போனது

தமிழுக்காக பாடாற்றியதிலும், மார்க்சியம் உட்பட முற்போக்கு கருத்துகளை இம்மண்ணில் விதைத்ததிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்த பிராமண சமூகத்தைச் சார்ந்த பலரை குறிப்பிட முடியும். அந்த மரபை மீட்டெடுக்க பிராமண சமூக படிப்பாளிகள் முன்வரவேண்டும்.

இப்போது பிராமணர் அல்லாதார் அரசியல் மங்கிப்போய் வெவ்வேறு இடைநிலை சாதிகளின் அரசியல்தான் இருக்கிறது…அய்ம்பதாண்டு காலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பார்ப்பனர் ஆதிக்கம் குறைந்திருக்கிறது. அச்சமூட்டும் அளவிற்கு இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் வளர்ந்திருக்கிறது. அவர்களே நடைமுறையில் தலித் எதிர்ப்பு சக்திகளாகவும் ஆணவக்கொலைகளை நிகழ்த்துபவராகவும் இருக்கிறார்கள்

ஒருவர் ‘பார்ப்பனரல்லாதவர்’ என்பதாலேயே அவர் எவ்வளவு நேர்மையற்றவராக இருந்தாலும், அதிகாரமய்யமாக இருந்தாலும் , பிற்போக்கு சக்தியாக இருந்தாலும், அவரை ஆதரிப்பது என்பது பகுத்தறிவு ஆகாது

சமகாலச் சூழலுக்கேற்ப பெரியாரியத்தை வளர்த்தெடுப்பதுதான் பெரியாரிஸ்ட்களின் பணியாக இருக்கவேண்டும். பெரியாரியத்தை மதமாக்குவது கூடாது.

கடவுள் இடத்தில் எதை வைப்பது என்ற கேள்வி காலந்தோறும் தொடரக்கூடிய ஒன்று. புத்தரும் பெரியாரும் அறவுணர்வை சமத்துவத்தை கடவுளின் இடத்தில் வைத்தனர். அண்ணாவும் கலைஞரும் கடவுளின் இடத்தில் தமிழை வைத்தனர். தமிழுணர்வு என்பதை கிட்டத்தட்ட மதவுணர்வாக மாற்றினர்.

அண்ணாவும் கலைஞரும் பெரியாரிடமிருந்து மாறுபட்டு கற்பின் அடையாளமாக கண்ணகியை உயர்த்திப்பிடித்தனர். ..திமுக வினர் மேடைபேச்சுகள் ஆணாதிக்கத்துக்கான அவல உதாரணங்கள்

அண்ணாவும் கலைஞரும் முன்வைத்த இந்தி எதிர்ப்பு மாநில சுயாட்சி கருத்தாக்கங்களை இன்று மமதா முதல் பினராயி வரை உயர்த்திப்பிடிக்கின்றனர்…பன்மைத்துவ இந்தியாவைக் காப்பாற்றவும் உள்ளடக்கும் தேசியத்தை வளர்த்தெடுக்கவும் இந்தியாவுக்கு காந்தியும் நேருவும் மட்டுமல்ல, கலைஞரும் அண்ணாவும் தேவை. 

பெரியார் உருவாக்கியது ‘திராவிடர் இயக்கம். திமுக வந்தபோது  ‘ர்’ போய் திராவிட வந்தது. பெரியார் கூறுகள் கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, பெண்ணியம். திமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றது.ஆணாதிக்க கட்சியாகவும் ஆனது. தேர்தல் பாதை ஏற்று இந்திய தேச அமைப்பை ஏற்று ஆட்சிக்கு வந்தது. பார்ப்பனல்லாதார் உரிமைகளை உறுதி செய்தல், இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு, தமிழ் பற்றை முன்வைத்தல், சிறுபான்மையினர் பக்கம் நிற்றல், வடவர் ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றை திமுக  உறுதியாக செய்தது

திராவிட அரசியல் ஊழல், வாரிசு அரசியல், குடும்ப அரசியல், தனிநபர் வழிபாடு போன்ற தீங்குகளை செய்திருந்தாலும், பார்ப்பன எதிர்ப்பு- சிறுபான்மை ஆதரவு, இந்துத்துவா எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்றவை அதன் கொடைகள்

சமகாலச் சூழலில் சமூகநீதி கருத்தாக்கம் மறுவரையறை செய்யப்படவேண்டும்..தலித்துகளுக்கான அதிகாரத்தை உறுதி செய்வது, இடைநிலை சாதி ஆதிக்க எதிர்ப்பு என்று நகரவேண்டும்…மாநில சுயாட்சி என்பது மாநிலத்தில் ஒற்றைக் கட்சி ஆட்சி என்பதாகச் சுருங்கிவிடக்கூடாது.

No comments:

Post a Comment