எங்கெல்ஸ் சில குறிப்புகள்
-ஆர். பட்டாபிராமன்
ஜெர்மனியின் ரைன்லாந்த் தாதுப்பொருட்கள்
நிறைந்த பூமி. 1795.ல் பிரஞ்சு ஆதிக்கப்பகுதியாக மாற்றப்பட்டது. விவசாயத்தை காவுகொடுத்து
முதலாளித்துவம் வளர்வதற்கான முயற்சிகள் அங்கு நடக்கத் துவங்கின. உப்பர்டால் எனும் பகுதி ஜெர்மனியின்
மான்செஸ்டர் என கருதப்பட்டது. எங்கெல்ஸ் குடும்பம் பர்மெனில் வாழ்ந்து வந்தது. தந்தை
பஞ்சாலை தொழிலில் ஈடுபட்டிருந்தவர். மகனும் தொழிலை கவனித்து முன்னேற வேண்டும் என்கிற
விருப்பத்தை மகன்மீது திணித்துவந்தவர்.
எங்கெல்ஸ் 1820 28 ஆம் நாள் செவ்வாய் இரவு 9 மணிக்கு பிறந்தார்.
அவரின் தந்தை ப்ரெடெரிக் எங்கெல்ஸ். தாய் எலிசி. எங்கெல்ஸ் உடன் பிறந்தவர்கள்
4 சகோதரர்கள், 4 சகோதரிகள். அக்குடும்பம் பர்மன், ரைன்லாந்து பகுதியில் இரண்டு தலைமுறையாக வர்த்தக குடும்பமாக
செழித்து வந்தது . கொள்ளுதாத்தா ஜோகன் காஸ்பர் (1717-87) விவசாயத்திலிருந்து சாயத்தொழிலுக்கு
மாறினார். தாத்தா காஸ்பர் 1808ல் அப்பகுதியில்
முனிசிபல் கவுன்சிலராக இருந்தார். அங்கு பிராடெஸ்டண்ட் சர்ச் வருவதற்கு காரணமாக இருந்தார்.
தந்தை எங்கெல்ஸ் உறவுக்காரர் எர்மனுடன் சேர்ந்து டெக்ஸ்டைல் வர்த்தகத்தை உள்ளூரிலும்
மான்செஸ்டரிலும் செய்துவந்தார். 1810ல் 16000 மக்கள் தொகையுடன் இருந்த பர்மன் 30 ஆண்டுகளில்
பெரிய நகரமாக 40ஆயிரம் மக்கள் வாழும் பகுதியாக விரிந்தது..
தந்தை கண்டிப்பானவர் என்பதால்
பொதுவாக அனைவரும் பணிந்து செல்லும் பழக்கம் இருந்தது. வீட்டில் ஆங்கிலம், டச்சு, பிரஞ்சு
மொழிகளில் பத்ரிக்கைகளை படிக்க துவங்கினார் எங்கெல்ஸ். படிக்கும் காலத்தில் வரலாறு,
மொழி ஆய்வுகள், இலக்கியம், இசை குறித்த நாட்டம் அவரிடத்தில் வளர்ந்தது. தனது நண்பர்களுக்கு
அவர் எழுதிய கடிதத்தில் தன்னால் லத்தீன், கிரேக்கம், இத்தாலி, ஸ்பானிஷ், போர்த்துகீசியம்
போன்ற மொழிகளிலும் படிக்க முடிவதாக தெரிவித்தார். தடை செய்யப்பட்ட பல புத்தகங்களை தேடி
அவற்றை படிக்கலானார். வர்த்தக நாட்டத்தைவிட படிப்பதில், மொழிகளை அறிவதில் விருப்பம்
அதிகம் இருப்பதாகவும் தான் ஏறக்குறைய 25 மொழிகளை கற்றிருப்பதாகவும் தனது சகோதரிக்கு
எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்தார் எங்கெல்ஸ். நண்பர்களுக்கு பல மொழிகளில் கடிதம்
எழுதலானார். தியேட்டர்களுக்கு செல்வது, இசை நிகழ்வுகளுக்கு செல்வது என்பதில் ஆர்வம்
காட்டினார்.
அம்மாவழி முன்னவர்கள் வர்த்த்கம் என்பதைவிட இலக்கியத்தில்
ஆர்வமாக இருந்தனர். தாத்தா மாணவன் எங்கெல்ஸ்க்கு கதேயை படி என அறிமுகப்படுத்தினார்.
கிரேக்க தொன்மக்கதைகளை அறிமுகப்படுத்தினார். சாகச கதைகளை சொல்லித்தந்தார். தந்தையோ
கதே கடவுள் மறுப்பாளன், எனவே வீட்டிற்குள் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தினார். படிப்பில்
கவனம் செலுத்தி மகன் தன்னைப்போல் பெரிய முதலாளியாக வரவேண்டும் என்பதில் கறாராக இருந்தார்.
1837ல் அவரின் 17 ஆம் வயதில் அவர் கல்விக்கூடத்திலிருந்து நிறுத்தப்பட்டு டெக்ஸ்டைல்ஸ்
வர்த்தக வெளிக்கு அனுப்பப்படுகிறார். தந்தையுடன் 1838ல் மான்செஸ்டர் செல்கிறார்.. சில
மாதங்கள் ஊர் அருகில் தொழில் கல்விக்கு அப்பரண்டிஸ் ஆக அனுப்பப்படுகிறார்.
1800களின் துவக்கத்தில் ஷெல்லிங், பிச்டே தாக்கத்தில் இல்லாத
மாணவர்கள் பிரஷ்யாவில்- பெர்லினில் இல்லையென்ற நிலை இருந்தது. நெப்போலியன் தோல்விக்கு
பின்னர் ஜெனாவில் ’அரசியல் அமைப்பு சட்டப்படி ஆட்சி’ முழக்கம் மாணவர்களால் முன் எடுக்கப்பட்டது. பிரெமனில்
இருந்த காலத்தில் நாட்டிய பள்ளியில் சேர்தல், பீர் குடிப்பது, புத்தக கடைகளை மேய்வது- வாங்குவது, படிப்பது என நேரம் செல்வதாக தன் சகோதரிக்கு எங்கெல்ஸ் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
எங்கெல்ஸ் பி பி ஷெல்லி, பைரன், கோல்ரிட்ஜ் ஆகியவர்களின்
கவிதையை விரும்பி படித்தார். ஷெல்லியின் கலகக்குரல் அவரை வசிகரித்தது. ராணி மாப் போன்ற
’குடியரசை, மதத்தன்மையற்ற, லிபரல் சமுகத்தை’ கட்டியமைக்கும் குரலில் ஈர்ப்பு ஏற்பட்டது. ஷெல்லியின் விடுதலை பாடல்
போன்று எழுதிப்பார்த்தார். என்னால் தூங்க முடியவில்லை. விடுதலை குறித்த குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
என்று சகோதரிக்கு எழுதினார் எங்கெல்ஸ். அந்நிய கலாச்சார ஊடுருவலால் தடுமாறிப்போன பெடோயின் மக்கள்
பற்றிய கவிதை தொகுப்பை அவர் முதலில் வெளியிட்டார். இதிகாச வகைப்பட்ட நாடகம் ஒன்றை ஜெர்மனியின் பழமையான நாட்டுப்புற
கதாநாயகனை வைத்து எழுத முயற்சித்து பாதியிலேயே கைவிட்டார்.
Parents
ஹெகலின் டயலக்டிக்ஸ் எங்கெல்சிடம் வேர்பிடிக்க துவங்கியது.
நிரந்தரமான நீடித்த காலாகாலத்திற்குமான உண்மை- புனிதம் என்பதெல்லாம் இல்லை. அனைத்தும்
மாறக்கூடிய கட்டங்களைக்கொண்டுதான் இருக்கின்றன என்பது அவரது உள்ளத்தில் ஆழப்பதிந்தது. கிறிஸ்துவம் அல்லது மதம்
என்பது இனி காரணகாரிய விமர்சனத்திற்கு அப்பால் வைக்கப்படமுடியாதது என்கிற கருத்தும்
அவரை தொட்டது. பெர்லினில் நேரடி மாணவனாக இல்லாதபோதும் கல்லூரி வளாகத்தில், படிப்புக்கூடங்களில்
கிளப்களில் நடக்கும் அறிவு விவாதங்களில் எங்கெல்ஸ் ஈடுபடுத்திக்கொண்டார். 1840ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் பிரடெரிக் லெஸ்ஸனர் எங்கெல்சை பற்றி ஆரடி உயரம். ஒல்லியான திரேகம். உடனடியாக எதையும் செய்யும் ஆற்றல், சுருக்கமாக அழுத்தமாக பேசும் பாணி, நிமிர்ந்து நின்று பார்த்து பேசும் பழக்கம் கொண்டவர் என வர்ணிக்கிறார்
‘பீர் இலக்கியக்குழு’ என்கிற பெயரில் புருனோ பாயர், மாக்ஸ்
ஸ்டிர்னர், புத்த அறிஞர் கார்ல்கோப்பன், கார்ல் நெளரிக், எட்வெர்ட் மேயன் என்கிற குழாமுடன்
அவரும் இணைந்தார், செக்ஸ், ஒழுக்கம் என்பது குறித்தெல்லாம் இளைஞன் எங்கெல்சிடம் தாராளவாத
சிந்தனைகள் இருந்தன. 1842 நவம்பரில் அவர் ரெயினிஷ் ஜெய்டுங் பத்ரிக்கை அலுவலகத்தில் முதன்முதலில் மார்க்சை சந்திக்கிறார். மார்க்ஸ்
பாயர் சகோதரர்களுக்க்கு எதிரான நிலை எடுத்த நேரமது. பாயர்களுடன் தொடர்பில் இருந்த எங்கெல்ஸ்க்கு
மார்க்ஸ் குறித்த சந்தேகங்களை அவர்கள் ஏற்படுத்தி இருந்ததாக அப்போதைய சூழலில் எங்கெல்ஸ்
தெரிவித்திருந்தார். ஆனால் அச்சந்திப்பும், தொடர் உரையாடல்களும் இருவருக்கும் வாழ்நாள்
தோழமை எனும் பந்தத்தை தந்தன.
இங்கிலாந்தில் வளர்ந்துவரும் முதலாளித்துவம்
தொழிலாளர்களை வஞ்சிக்கிறது என்கிற உணர்வில் சார்ட்டிஸ்ட் இயக்கம் உருவாகி வளரத்துவங்கியது.
1835-45 ஆண்டுகளில் பெரும் எதிர்ப்பு இயக்கங்கள் கட்டப்பட்டன. ஹெகலிய இடதுசாரிகள் தத்துவ
உலகில் முன்னுக்கு இருந்தனர். அனைத்தும் மாறக்கூடியவை என்பது போராடுபவர்களுக்கு நம்பிக்கை
தந்தது. இருக்கிற அரசாங்கம் இலட்சிய அரசாங்கம் என்கிற ஹெகலின் குரலை ஏற்க முடியாவிட்டாலும்
அவரின் இயக்கவியல் ஈர்ப்பை ஏற்படுத்தியது. 1840 களின் துவக்கத்தில் தான் தினம் மாலை
ஹெகல் புத்தகங்களுடனேயே இருந்ததாக எங்கெல்ஸ் கூறினார். ஹெகல் சாலையில் நான் பயணித்துவருகிறேன்
என தன் நண்பர்களுக்கு எழுதினார். கிறிஸ்துவ மதம் குறித்து விமர்சனபூர்வமாக வெளிவந்த
எழுத்துக்கள் அவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தின. பைபிள் முரண்பாடுகளின் தொகுப்பு என்று
நண்பர்களிடம் பேசலானார். தந்தைக்கு கவலை அதிகரித்தது.
ஹம்பர்க் டெலிகிராப் என்கிற முற்போக்கு
இலக்கிய பத்ரிக்கை ஒன்றில் எங்கெல்ஸ் எழுத துவங்குகிறார்.. சில ஜெர்மானிய கவிஞர்களை
அவர் விமர்சித்து எழுதினார். இரவின் கொடுமை எவ்வளவு நாட்களுக்கு.. குருட்டு மனிதர்களாக
இருட்டில் உழல்கிறோம் போன்ற கவிதை வரிகளையும் அவர் தந்தார். தனக்கு கவித்துவ நடை வாய்க்கவில்லை
எனவும் அவர் சொல்லிவந்தார். உப்பர்டால் கடிதங்கள் என்கிற பதிவை அவர் புனைபெயரில் எழுதினார்.
பிரடெரிக் ஆஸ்பால்ட் என்கிற பெயரிலும் சில எழுதியதாக அறியமுடிகிறது. பிரஷ்யா அரசர்
குறித்து கடும் விமர்சன பார்வை அவரிடம் வரத்துவங்கியது இளவரசர் என சொல்லிவரும் எவனுக்கும்
மரணதண்டனை தரவேண்டும் என்கிற கோப வெளிப்பாட்டை அவர் கொண்டிருந்தார்.
சொந்த வரலாறை சுலபமாக எழுதிவிடலாம். வரலாற்றில் நிலைப் பெற்றவர்களின் வரலாறை எழுதுவதற்கு நிச்சயம் கடுமையான உழைப்பு தேவைப்படும்.
ReplyDeleteஉங்கள் எழுத்தில் அதை உணர்கின்றேன்.
அடுத்தப் பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கும்
- ஜெய்.
Thank You All parts of this essay at www.pattabiwrites.in
ReplyDelete